உருத்திரா ❤️16

“முத்து யார் இந்த லேடி? காலையிலேயே ஏன் இப்படிச் சண்டை போட்டுட்டு இருக்காங்க?” என்று சரபன் கேட்டான்.

அவனைப் பார்த்ததும் அந்தப் பெண் வேகமாகத் திரும்பினாள்.

“அண்ணே இவரைக் கொஞ்சம் என்னனு கேளுங்க! திடீர்னு வேலைக்கு வரவேண்டாம்னு சொல்றாரு. ஒரு மாசம் வேலை இல்லைன்னா நாங்க எப்படி ஜீவனம் நடத்துறது?” 

அவள் சொன்னதைக் கேட்ட சரபன் ஒரு நொடி அதிர்ந்து நின்றான்.

‘அண்ணனா?’

அவளை மேலிருந்து கீழ்வரை பார்த்தவன் “நான் உனக்கு அண்ணனா?” என்று வாய்விட்டே கேட்டுவிட்டான்.

அவனுக்குப் பின்னால் நின்றிருந்த சந்துருவும் ரிஷியும் சிரிப்பை அடக்க முடியாமல் வாயைப் பொத்திக்கொண்டனர்.

அவர்களை முறைத்த சரபன், மீண்டும் அந்தப் பெண்ணிடம் திரும்பினான்.

“இந்தாங்க ஆன்ட்டி! உங்களை விட எனக்கு வயசு கம்மிதான், பார்த்தா தெரியலையா?”

“ஆன்ட்டியா? அண்ணே எனக்கு பதினாறு வயசுதான் ஆகுது!”

அவ்வளவுதான்! சரபனுக்கு தலைசுற்றாத குறைதான். “அட பதினாறு வயசு பாப்பாவா நீ? பீப்பா மாதிரி இருக்கியே!”

சரபன் சொன்னதைக் கேட்டு அவள் முகத்தை சுருக்கினாள்.

“அண்ணே இப்படிக் கிண்டல் பண்ணாதிங்க!”

“சரி, சரி அழுதுடாத பாப்பா! உன் பேரு என்ன?”

“ஆரலி”

“சரி ஆரலி. இவ்வளவு வெயிட்டா இருக்கியே, வேலை செய்வியா இல்ல, சும்மா வந்துட்டுப் போவியா?”

“அதெல்லாம் வேலைன்னு வந்துட்டா சுறுசுறுப்பு தானா வந்திடும் அண்ணே! எனக்குச் சாப்பிடப் பிடிக்கும். அம்மாச்சி கிழங்கும் தேனும் நிறையத் தருவாங்க, அதான் கொஞ்சம் உப்பியிருக்கேன் அதுக்காக இப்படிக் கிண்டல் பண்ணாதிங்க!”

அவள் முகத்தைச் சுருக்கிக்கொண்டு சொன்ன விதத்தில் ரிஷிக்கு சிரிப்பு வந்துவிட்டது.

“இங்க பாரு பாப்பா நீ உப்பியிருக்கல, உப்பு மூட்டை மாதிரி இருக்க!” என்று சந்துரு வேறு தன் பங்குக்கு சேர்ந்துகொண்டான்.

“ உன் படிப்பு என்னாச்சு? ஏன் வேலைக்கு வர்ற?”

“பத்தாப்பு போன வருஷம்தான் முடிச்சேன். அம்மா, அப்பான்னு எனக்கு யாரும் இல்லை. நான் மலைக்கிராமத்துப் பொண்ணு. அம்மாச்சி மட்டும்தான் எனக்குத் துணை. அவங்களோடதான் மலைவிட்டுக் கீழே இறங்கி வந்து தங்கியிருக்கேன். அம்மாச்சி இங்கே சமையல் வேலைக்கு வருவாங்க. நான் தோட்ட வேலைக்குப் போவேன் இப்போ ஒரு மாசம் வேலை இல்லைனா நாங்க என்ன பண்ணுவோம்?”

அவளுடைய குரலில் இருந்த ஆதங்கம், சில நொடிகளுக்கு முன்பு அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தவர்களையும் அமைதியாக்கியது.

“ஏன் சிட்டிக்குள்ள போய் வேலை பார்க்கலாமே?” என்று ரிஷி கேட்டான்.

“அது முடியாது அண்ணே. எனக்குச் சிட்டியெல்லாம் தெரியாது, எங்க ஊரைவிட்டுத் தனியா போகவும் பயமா இருக்கும். அம்மாச்சியை விட்டுட்டு என்னால இருக்க முடியாது”

“இங்க என்ன நடக்குது?” என்ற ருத்ரா குரல் அந்த இடத்தையே அதிரச் செய்தது.

அவனுடைய முகத்தில் தெரிந்த கடுமையைக் கண்டதும் சந்துருவும் ரிஷியும் தங்களுடைய சிரிப்பை அடக்கிக்கொண்டு நேராக நின்றனர். 

ருத்ராவின் பார்வை முதலில் முத்துவின் மீது விழுந்தது.  அவருக்கு முன்னால் நின்றிருந்த ஆரலியை பார்த்ததும் அவனுடைய முகம் சுளித்தவன்,

“ஏய் நீ ஆரலி தானே? காலையிலேயே இங்க என்ன பிரச்சனை பண்ணிட்டு இருக்க?”

அவனுடைய குரலைக் கேட்டதும் ஆரலியின் முகம் சட்டென்று மலர்ந்தது.

“ஏகரா சார்! என்னை ஞாபகம் இருக்கா, நான் கூட நீங்க என்னை மறந்திருப்பிங்கன்னு நினைச்சேன். பரவாயில்ல உங்களுக்கு இன்னும் நினைவு இருக்கு!” என்று ஆரலி ஆச்சரியத்துடன் கேட்டாள்.

ருத்ரா எதுவும் பேசாமல் இருக்கவும், அவளே தொடர்ந்து பேசினாள்.

“நான் படிச்சு முடிச்சிட்டு இங்க தான் தோட்ட வேலை பார்க்கிறேன் சார். அதான் வேலைக்கு வந்தேன். திடீர்னு முத்து ஐயா ஒரு மாசம் வேலைக்கு வரவேண்டாம்னு சொல்றாரு அதைத்தான் கேட்டுட்டு இருந்தேன்”

 

முத்து பதற்றத்துடன் ருத்ராவிடம் பேசினார் “சார் நீங்க சொன்னதுனால மற்ற ஆட்களை ஒரு மாசம் வரவேண்டாம்னு சொல்லியிருந்தேன், அதான்…”

தன் நெற்றியை தேய்த்துக்கொண்ட ருத்ரா, முத்துவிடம். “இனிமேல் இவள் வேலைக்கு வரட்டும். தோட்டத்துல என்ன வேலை கொடுக்க முடியுமோ கொடுங்க சம்பளத்தைக் குறைக்க வேண்டாம்” என்று சொல்லிவிட்டு திரும்பினான்.

ஆரலியின் முகம் உடனே பிரகாசித்தது “ரொம்ப நன்றி ஏகரா சார்!”

“ஸ்கூல் போகாம வேலைக்கு வந்திருக்க? ஆமா இன்னும் நீ சாப்பிடுறதை குறைக்கலையா! போன தடவை பார்த்ததைவிட வெயிட் போட்டிருக்க” என்று கேள்வி கேட்டவனை கண்டு திருதிருவென விழித்தாள் ஆரலி.

“இந்த உப்பு மூட்டையை உனக்குத் தெரியுமா ருத்ரா?” என்று சரபன் கேட்க,

“தெரியும்! போன வருஷம் வரும்போது பார்த்திருக்கேன். அப்போ ஸ்கூல் போயிட்டு இருந்தா”

“நான் என்ன பண்றது ஏகரா சார்? எப்படியோ பத்தாவது ஜஸ்ட் பாஸ் ஆகிட்டேன். இனிமேல் படிக்கிறது கஷ்டம் சும்மா இருக்கிறதுக்கு, பாட்டிக்கு பாரத்தைக் குறைக்கலாம்னு வேலைக்கு வந்தேன்” என்றவள் அடுத்த நொடியே ருத்ராவின் முன்னால் வந்து நின்றாள்.

“அதைவிடுங்க ஏகரா சார்! இந்த தடவையாவது என்னை காட்டுக்குள்ள கூட்டிட்டுப் போங்களேன்!”

“எதுக்கு?”

“அதான்… காடு, மலை மேல ஏறுறதை என்னமோ சொல்லுவாங்களே!”

“ட்ரெக்கிங்!” என்று அவளுக்கு பதிலளித்தான் சரபன்.

“ஆமா அதேதான்! என்னையும் கூட்டிட்டுப் போங்களேன் அண்ணே…”

என கெஞ்சும் குரலில் கேட்டவளை முறைத்துப்பார்த்தான் ருத்ரா.

“எங்களை விட உனக்கு இந்த மலைகளை நல்லா தெரியுமே! நீயே போக வேண்டியதுதான”

“எங்க போக? அம்மாச்சியோட சின்னப் பிள்ளையா இந்த ஊருக்கு வந்துட்டேன் இப்போ மலை மேல ஏறுற வழியெல்லாம் எனக்குத் தெரியாது. அதுவுமில்லாம, அம்மாச்சியும் மலைக்கிராமத்துப் பக்கம் போகக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. எனக்கு நிறைய காட்டுச் செடி, பூவெல்லாம் பார்க்க ஆசை! முடிஞ்சா கூட்டிட்டுப் போங்களேன்” என கெஞ்சும் குரலில் கேட்டாள்.

“முதல்ல திங்கிறதை குறை இடியட்! அப்புறம் மலை ஏறுறதை யோசிக்கலாம். போய் வேலையைப் பாரு!” என்று அதட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் ருத்ரா.

‘இவன் என்னடா, இந்த பொண்ணை சின்ன விஷயத்துக்கு திட்டிட்டுப் போறான்!’ என்று முணுமுணுத்த சரபன், ஆரலியைத் திரும்பிப் பார்த்தான்.

அவளோ, தன் கூடையிலிருந்து ஒரு பொரி உருண்டையை எடுத்து வாயில் திணித்துக்கொண்டிருந்தாள்.

“ஏய் இந்தாம்மா! உன்னை இவ்வளவு கேவலமா திட்டிட்டு போறான். நீ என்னடான்னா கவலைப்படாம சாப்பிட்டுட்டு இருக்க?” ஆச்சரியமாக கேட்டான் சரபன்.

“ஏகரா சார் என்னைப் பார்த்தாலே திட்டுவாரு அண்ணே! அதுக்காக சாப்பிடாம இருக்க முடியுமா? விடுங்க அவரு அப்படித்தான்…”

அவளுடைய பதிலைக் கேட்டு சரபனுக்கு சிரிப்பு வந்தாலும், அடுத்த நொடியே அவளைப் பார்த்து அறிவுரை சொல்ல ஆரம்பித்தான்.

“அவன் திட்டுறதுலையும் ஒரு விஷயம் இருக்கு பாப்பா. உடம்பைக் கவனிக்க வேண்டிய வயசுல இப்படி அலட்சியமா இருந்தா பின்னாடி கஷ்டப்பட வேண்டியிருக்கும். சரி போய் வேலையைப் பாரு!” என சொல்லிவிட்டு சென்றதும், ஆரலி தன்னுடைய வேலையை தொடர்ந்தாள்.

போன வருடம் ருத்ரா தனியாக எஸ்டேட் கணக்குகளைப் பார்ப்பதற்காக வந்திருந்தபோதுதான் ஆரலியை முதன்முதலாகச் சந்தித்தான்.

அன்றிலிருந்து இன்றுவரை அவளிடம் மாறாத ஒரே விஷயம் அவளுடைய வாய்தான்!

ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பாள். எதைப் பார்த்தாலும் கேள்வி கேட்பாள். அவன் ஒரு வார்த்தை பேசினால், அதற்கு எதிராகப் பத்து வார்த்தைகள் பேசிவிடுவாள்.

‘ஏகதச ருத்ரா’ என்ற அவனுடைய பெயரைச் சுருக்கி அவள் வைத்த பெயர் ‘ஏகரா’! 

அந்த பெயரை கேட்டாலே கோவப்பட்டு திட்டுவான், “அப்படிக் கூப்பிடாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?”

“சரி, ஏகரா சார்!”

“ஆரலி!”

“என்ன சார்?”

“உன்னை…” அதற்கு மேல் அவனால் பேச முடியாது. அவளோ சிரிப்பை அடக்கிக்கொண்டு வேலையைப் பார்க்கப் போய்விடுவாள்.

அவளை பார்த்துப் பத்து நாட்கள் மட்டுமே ஆகியிருந்த நிலையில், ருத்ரா ஊருக்குக் கிளம்பிவிட்டான். அதற்குப் பிறகு சரியாக ஒரு வருடம் கழித்து இப்போது அவளை மீண்டும் பார்க்கிறான்.

வழக்கம்போல அவளை திட்டிவிட்டுச் செல்லும் ருத்ராவை, அவனுடைய நண்பர்கள் வித்தியாசமாகத்தான் பார்த்தார்கள்.

ஆனால், ஆரலிக்கோ அதெல்லாம் பழகிப்போன விஷயம்!

“ஏத்தா கொடிச்சி!” என்ற குரல் கேட்டு வேலையை நிறுத்திவிட்டுத் திரும்பினாள் ஆரலி. அவளுடைய அம்மாச்சி மூச்சுவாங்கியபடி வேகமாக வந்துகொண்டிருந்தார்.

“என்ன அம்மாச்சி! எதுக்கு இம்புட்டு வேகமா வர்ற?” என அவசரமாக அவரிடம் ஓடினாள்.

“இந்தா ஆத்தா சாப்பாடை மறந்து வச்சுட்டு வந்துட்ட!” என்று சொன்னவரை அருகிலிருந்த நாற்காலியில் அமரவைத்து, தண்ணீர் கொடுத்தாள்.

“ஒரு நாள் மதியத்துக்கு சாப்பிடலைனா என்ன ஆவப்போகுது? உனக்கு ஏற்கெனவே உடம்பு சரியில்ல. வெளியில பனியும் அதிகமா இருக்கு. நீ எதுக்கு இவ்வளவு தூரம் நடந்து வர்ற? மேலுக்கு முடியாமப் போச்சுன்னா நான் என்ன பண்றது?” என பாட்டியைக் கடிந்துகொண்டாலும், சாப்பாடை எடுத்து அருகிலேயே அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.

அப்போது அங்கே வந்த ருத்ராவை கண்டு, “வணக்கம் சார்!” என்று ஆரலியின் அம்மாச்சி எழுந்து நின்றார்.

“ம்… வேலை முடிஞ்சதும் கிளம்புங்க. முழுநேரமும் இங்கே இருக்க வேண்டாம்”

“இருக்கட்டும் ஏகரா சார், வெளிவேலை முடிஞ்சதும் வீட்டுவேலைய பார்த்துட்டு போறேன்” என சிரித்தபடியே பதிலளித்தவளை முறைத்துவிட்டு உள்ளே சென்றான் ருத்ரா.

அவன் போனதும் சரபன் ஆரலியின் அம்மாச்சியிடம் திரும்பினான்.

“பாட்டி அதென்ன கொடிச்சி? இவ பேரு ஆரலி தானே”

“எங்க மலைக்கிராமத்துல கூப்பிடுற பேரு தம்பி. சின்னப் பிள்ளையா இருந்தப்போ என் பேத்தி கொடிமாதிரி இருப்பா அதான் அப்படிக் கூப்பிடுவோம்”

“சின்னப் பிள்ளையா இருக்கும்போது கூப்பிட்டது சரி. இப்போ சைஸ் மாறிடுச்சு வேற பேரு வைங்க!” என்று கிண்டலடித்துவிட்டுச் சென்றான் சரபன்.

அம்மாச்சியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, பாத்திரங்களைக் கழுவ ஆரம்பித்தாள் ஆரலி.

ருத்ராவைத் தவிர மற்ற மூவரும் அவளை எப்போதும் கிண்டல் செய்வார்களே தவிர, ஒருபோதும் அவளைக் காயப்படுத்தியதில்லை. வெளியே சென்றுவிட்டு வந்தால் அவளுக்காக ஸ்னாக்ஸ் வாங்கிவந்து கொடுப்பார்கள். அவளை ஒரு தங்கையை போலவே பார்த்தனர்.

நாட்கள் இப்படியே நகர்ந்தன, நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து மலைப்பாதைகளில்  ட்ரெக்கிங் போவதற்கு ரெடியாகிக்கொண்டிருக்க, அவர்களுடன் தானும் வருவதாக பிடிவாதம் பிடித்து ஆரலி கிளம்பினாள்.

இவ வரவேண்டாம் என ருத்ரா எவ்வளவோ சொல்லியும், யாஉம் கேட்கவில்லை… அவன் சொன்னது போல மலை ஏற்றத்தின் பாதி தூரம் கூட அவளால் நடக்க முடியவில்லை.

மூச்சுவாங்கி, கால்கள் வலிக்க, ஒரு பாறையின் மீது அமர்ந்துகொண்டாள்.

“உன்னை வரவேண்டாம்னு எத்தனை தடவை சொன்னேன்? நடக்க முடியலைன்னு இப்போ அழுதுட்டு இருக்க!” என்று கோபமாகக் கேட்டான் ருத்ரா.

அவனுடைய குரலில் இருந்த கடுமையில் ஆரலியின் கண்கள் கலங்கின.

“ருத்ரா விடுடா பாவம்! பாதித் தூரம்தான வந்திருக்கோம், திரும்பிப் போகலாம்” என்றான் சரபன்.

“ இதுக்குத்தான் இவளைப் பார்த்தாலே எரிச்சலா இருக்கு, ச்சை!” என்றவன் வார்த்தைகள் ஆரலியின் மனதை காயப்படுத்தியது.

கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எழுந்தவள் “நான் கீழே போயிடுறேன் அண்ணே, நீங்க மேலே போங்க எனக்கு இது தெரிஞ்ச பாதைதான், பத்தரமா வீட்டுக்கு போய்டுவேன்” என சரபனிடம் சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தாள்.

“மனுஷன் மாதிரி நடந்துக்கோ ருத்ரா! அவ சின்னப் பொண்ணு. உனக்குப் பொறுமையே இல்ல. நான் ஆரலியை வீட்டுக்கு அனுப்பிட்டு கெஸ்ட் ஹவுஸுக்கு வர்றேன்” என சரபன் கோபமாகச் சொல்லிவிட்டு சென்றான்.

“நாங்களும் கீழே போறோம் ருத்ரா. எங்களாலயும் இனிமேல் நடக்க முடியாது, டயர்டா இருக்கு” என்று ரிஷியும் சந்துருவும் பின்வாங்கினார்கள்.

நண்பர்களை முறைத்துப் பார்த்த ருத்ரா, யாருடைய துணையுமின்றித் தனியாக மலை ஏறத் தொடங்கினான்.

அவனுக்குள் அப்படி என்ன கோபம் இருந்தது என்று யாருக்கும் புரியவில்லை. அதன்பின் இரண்டு நாட்கள் ஆரலி வேலைக்கு வரவில்லை.

ருத்ரா திட்டியதால்தான் அவள் வரவில்லை என்று மூவரும் நினைத்தார்கள். ஆனால், அடுத்து யாருமே எதிர்பாராத விஷயங்கள் நடக்க ஆரம்பித்தது.

ட்ரெக்கிங் சம்பவம் நடந்த மூன்றாம் நாள், கோவமாக கெஸ்ட் ஹவுஸுக்குள் நுழைந்த ருத்ரா, எதுவும் பேசாமல் அறையிலிருந்த பொருட்களைத் தூக்கி வீசி உடைக்கத் தொடங்கினான்.

“மச்சான், என்னடா ஆச்சு?” என்ற சரபன் கேட்டதற்குப் பதிலே இல்லை.

அவன் முகத்தில் தெரிந்த ஆத்திரத்தைக் கண்டு ரிஷியும் சந்துருவும் விலகி நின்றார்கள்.

ருத்ராவின் கோபத்தை அடக்க யாராலும் முடியவில்லை. அன்று முழுவதும் அறைக்குள் சிங்கமாக கர்ஜித்துக்கொண்டிருந்தான் ருத்ரா.

மறுநாள் காலை, அழுது வீங்கிய முகத்துடன் ஆரலி அங்கே வந்தாள்.

“ஓய் பாப்பா! என்னம்மா ஒரு மாதிரி இருக்க?” என்று கேட்டபடி வந்த சரபனைக் கண்டதும் அவளுடைய கண்கள் மீண்டும் கலங்கின.

“அண்ணே ஏகரா சார் இருக்காரா? அவர்கிட்ட ஒரு உதவி கேட்கணும்”

“அவன் நேத்துலருந்து பயங்கர கோபத்துல இருக்கான் ஆரலி. ரொம்ப அவசரமா? பணம் எதுவும் வேணுமா?” பாவம் ஏழைப்பெண் அல்லவா! உடனே பண உதவி தேவைப்பட்டால் செய்யலாம் என்ற நல்ல எண்ணத்தில் கேட்டான்.

“இல்லைண்ணே பணம் வேண்டாம்! அவர்கிட்டதான் பேசணும்”

அவளுடைய தயக்கத்தைக் கண்ட சரபன், மேலும் எதுவும் கேட்காமல் ருத்ராவை அழைத்து வரச் சென்றான்.

சில நிமிடங்களில் அறையிலிருந்து வெளியே வந்த ருத்ராவின் முகத்தில் அப்படி ஒரு இறுக்கம் இருந்தது.

ஆரலியைப் பார்த்ததும் அவனுடைய முகம் இன்னும் இறுகி நெருப்பாக கொதிக்க ஆரம்பிக்க அடுத்த நொடியே அவளருகில் சென்று, ஆரலி கையைப் பிடித்து முறுக்கினான்.

“எதுக்குடி இங்கே வந்த? நீயும் உன் அம்மாச்சியும் பண்ணது போதாதா? என்ன இழவுக்கு உன் முகரையை காட்டிட்டு வந்து நிக்கிற?” என்று கடுமையாக பேச ஆரம்பித்தான். தெரிந்தே வார்த்தைகளால் அவளை கொலை செய்தான்.

“சார்… நான் சொல்றதை மட்டும் கேளுங்க…” அவள் வார்த்தைகளை முடிப்பதற்குள் கன்னத்தில் அறைந்தான்.

“டேய் என்னடா பண்ற? விடுடா சின்னப் பொண்ணு, அடிக்காத!” என்று சரபன் அவனைத் தடுக்க முயன்றான்.

ஆனால், அந்த நொடியில் ருத்ராவின் கண்களில் தெரிந்த வெறி அவனையே ஒரு கணம் திகைக்க வைத்தது.

“சனியனே! எங்கேயாவது போய்ச் செத்துத் தொலையாம இங்கே ஏன் வந்த? என் முகத்துலையே முழுக்காத இனிமேல் ஒரு நிமிஷம்கூட இங்கே இருக்கக்கூடாது வெளியே போ!”

என்று ஆரலியின் கையைப் பிடித்து இழுத்துச் சென்று வாசலில் தள்ளிவிட்டான்.

அவன் தள்ளியதில் தடுமாறி விழுந்தவள், அடிபட்ட கைகளைத் தேய்த்துக்கொண்டு எழுந்தாள். கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.

“சார்… நான்…” என்ற வார்த்தைகள் தொண்டைக்குள்ளேயே சிக்கிக்கொண்டன.

அவளைப் பார்க்கக்கூட விரும்பாதவன்போல உள்ளே சென்றுவிட்டான் ருத்ரா.

சரபன் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றான். இவன் மனிதன்தானா? இல்லை, உண்மையிலேயே பேய் எதுவும் பிடித்துவிட்டதா?

ஆரலி அழுதுகொண்டே அங்கிருந்து செல்வதைப் பார்க்கும்போது அவனுடைய மனம் கனத்தது.

ஆரலி என்ன சொல்லவந்தாள்? ருத்ரா ஏன் அத்தனை கோவமாக அவளை அடித்து துரத்தினான்? என யாருக்கும் இந்த இரண்டு கேள்விகளுக்கான பதில் தெரியவில்லை.

“இதுதான் அந்தக் காதல் கதை!” என்று கதையை முடித்த சரபனை நால்வரும் கொலைவெறியுடன் பார்த்தார்கள்.

“என்ன அப்படி பார்க்கிறீங்க?”

“சார் இந்தக் கதையில காதல்ன்ற வார்த்தையில் ‘கா’ கூட வரல, இதைப்போய் காதல் கதைனு சொல்றிங்க” என்று விமலே கோவமாக பொங்கிவிட்டான்.

“கதை கேட்ட உனக்கே கோபம் வருதுன்னா, எனக்கு எவ்வளவு கோபம் வந்திருக்கும்? இதே கேள்வியை நான் ஏழு வருஷமா எனக்குள்ளேயே கேட்டுட்டு இருக்கேன்!” 

சரபனின் குரலில் இத்தனை வருடக் குழப்பமும் ஆதங்கமும் கலந்திருந்தன.

“அப்புறம் ஆரலிக்கு என்னாச்சு?” என்று திகள்விழி ஆர்வமாகக் கேட்டாள்.

சரபனின் முகம் சட்டென்று மாறியது.

“அது மழைக்காலம்மா. ஆரலியோட வீடு எஸ்டேட் இருக்கிற இடத்துக்குப் பக்கத்து மலையில இருந்தது. வீட்டுல சொல்லாம வேலைக்கு வந்த ஆரலியைத் தேடி அவ அம்மாச்சி வந்திருக்காங்க” சில நொடிகள் அமைதியாக இருந்தவன் மீண்டும் தொடர்ந்தான்.

“ருத்ரா அவளை அடிச்சு வெளியே தள்ளினதுக்குப் பிறகு, அழுதுகிட்டே போன பொண்ணும், அவளை தேடி வந்த அவ அம்மாச்சியும் மலைச்சரிவுல சிக்கி இறந்துட்டாங்கன்னு அடுத்த நாள் முத்து வந்து சொன்னான்”

“ஐயோ என்ன சார் சொல்றீங்க?” என்று பதறினான் விமல்.

பத்ரனின் மனம் மட்டும் அந்தக் கதையில் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணல என்பது மட்டும் தெளிவாக புரிந்தது! 

ஆரலி, ருத்ரா இரண்டு பேருக்குள்ள லவ் இருந்ததான்றது தேவையில்லாதது, அவள் என்ன சொல்ல வந்தாள்? ஆரலியை பார்த்து ருத்ரா ஏன் ஆத்திரப்பட்டான்?

சரபனுக்கே தெரியாமல் சில பக்கங்கள் அந்த சம்பவத்துக்குப் பின்னால் இருக்கிறது என்று அவனுடைய உள்ளுணர்வு சொல்லியது.

“முத்து நடந்ததைச் சொன்னதும் எனக்கு ரொம்பக் கோபம் வந்துடுச்சு, ருத்ராகிட்ட போய் சண்டை போட்டேன். 

ஆனால் அவன் ஆரலி இறந்ததை நம்பவே இல்லை. அவனே காரை எடுத்துட்டுப் போய், அவங்க இறந்த இடமான அந்த மலைச்சரிவு நடந்த இடத்தை பார்த்துட்டு வந்தான்”

சரபன் தன் முகத்தைக் கைகளால் அழுத்தித் தேய்த்துக்கொண்டான்.

“அன்னைக்கு அவன் திரும்பி வந்த கோலம் இன்னும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கு. எதுவுமே பேசலை, யாரையும் பார்க்கலை.

ஆரலியோட சாவுக்கு தான் ஒரு வகையில காரணம்னு அவனுக்குள்ள குற்றவுணர்வு இருந்திருக்கலாம். அடுத்த இரண்டு நாள் ரூம்க்குள்ள அடைஞ்சு கிடந்தான்”

“மூணாவது நாள் காரை எடுத்துட்டுப் போனவன் ஆக்ஸிடென்ட்ல சிக்கிட்டான். ஏற்கெனவே ரொம்ப டிப்ரஸன்ல, மனசளவுல மோசமா இருந்தவன் அந்த விபத்துக்குப் பிறகு இன்னும் மோசமாகிட்டான்”

 

 

❤️ Loading reactions...
1 Comment

You cannot copy content of this page

error: Content copy warning!!