43
மறுநாள் விடிந்த காலைப் பொழுது, துறைமுகத்தின் வரலாற்றிலேயே மிக இருண்ட ஒரு நாளின் தொடக்கமாக அமைந்தது. முந்தைய நாள் பெய்த மழையின் ஈரம் இன்னும் காயாத அந்தச் சாலையில், பாபியின் கறுப்பு நிற சொகுசு கார் டயர்கள் அலற விறுவிறுவென வந்து நின்றது.
காரின் கதவை ஆக்ரோஷமாகத் திறந்து கொண்டு இறங்கிய பாபியின் முகம், ஏதோ ஒரு விபரீதத்தை உணர்ந்தவனைப் போல வெளுத்துப் போயிருந்தது. அவனுக்குப் பின்னால், எப்போதும் போல எந்தவித சலனமும் இல்லாத முகத்தோடு, தன் இடுப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிறத் துப்பாக்கியின் தடியைத் தொட்டபடி ரோலக்ஸ் நடந்து வந்தான். அவனது நிழலாகப் பைரவனும் அமைதியாகப் பின்தொடர்ந்தான்.
கிழக்கு எல்லை நிலத்தடி சுரங்கக் கிடங்கின் இரும்புக் கதவு அரைகுறையாகத் திறந்திருந்தது. உள்ளே நுழைந்த பாபிக்கு, அங்கிருந்த இருள் அவனது வாழ்நாளின் மிகப்பெரிய அதிர்ச்சியைப் பரிசளித்தது.
“டேய்! என்னடா இது?! எங்கேடா… எங்கேடா போச்சு எல்லாம்?!”
பாபியின் தொண்டை நரம்புகள் புடைக்க, அவன் போட்ட அலறல் அந்த நிலத்தடிச் சுரங்கத்தின் சுவர்களில் முட்டி மோதி எதிரொலித்தது. நேற்று வரை பல நூறு கிலோ தங்கக் கட்டிகளாலும், பெட்டி பெட்டியாக அடுக்கப்பட்டிருந்த நவீன ரகசிய ஆயுதங்களாலும் நிரம்பி வழிந்த அந்த இடம், இன்று வெறும் ஒட்டடை படிந்த வெற்றுச் சுவர்களாகவும், உடைந்த சில மரப்பெட்டிகளின் துண்டுகளாகவும் மட்டுமே காட்சியளித்தது. எலி நடமாடும் வெறிச்சோடிய மயானம் போலக் கிடந்தது அந்தக் கிடங்கு.
“என் தங்கம்! என் துப்பாக்கிங்க! எல்லாம் எங்கேடா?! காவலுக்கு நின்ன அந்த ரெண்டு நாய்ங்க எங்கே?!” என்று பைத்தியம் பிடித்தவனைப் போலக் கத்தினான் பாபி.
அவன் கத்திக் கொண்டே தன் தலையைப் பிடித்துக் கொண்டு தரையில் மண்டியிட்ட அந்த நொடில், அவனுக்குப் பின்னால் இருளில் நின்றிருந்த ரோலக்ஸின் உதடுகளில் ஒரு மெல்லிய, மிக மெல்லிய குரூரப் புன்னகை அரும்பியது. அந்தப் புன்னகை பாபியின் ஒட்டுமொத்த சாம்ராஜ்யத்தின் அழிவையும் கொண்டாடும் ஒரு மரணப் புன்னகை. ஆனால், அடுத்த கணமே தன் முகபாவனையை மாற்றி, ஒன்றும் தெரியாதவனைப் போல பாபியின் அருகில் சென்று அவனது தோளைத் தட்டினான் ரோலக்ஸ். அவனது கண்கள் பாபியைப் பார்த்துப் பரிதாபப்படுவது போல நடித்தாலும், அவனது உள்ளுக்குள் ஒரு வேட்டைக்காரனின் திருப்தி இருந்தது.
அன்றைய நாள் முழுவதும் பாபிக்கு நரகமாக மாறியது. பங்களாவுக்குத் திரும்பிய பிறகும் அவனது புலம்பல் ஓயவில்லை. அறையின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் சிறுத்தைப் போலப் பாய்ந்து பாய்ந்து நடந்து கொண்டிருந்தான்.
“இவ்வளவு பாதுகாப்பான இடம்… என்னைத் தவிர என் நாலு அடியாட்களுக்கு மட்டும்தான் இந்த இடம் தெரியும். வேற எவனுக்கும் தெரிய வாய்ப்பே இல்லை! அப்போ… அப்போ எனக்குள்ளேயே ஒரு துரோகி இருக்கான்!” என்று கத்தினான்.
சட்டென்று அவனது பார்வை அங்கே நின்றிருந்த குணாவின் மீது விழுந்தது. குணா ஏற்கனவே பயத்தில் வியர்த்து விறுவிறுத்துப் போய் நின்றிருந்தான்.
“டேய் குணா! நீதானடா அது?! உன்னைத் தவிர வேற எவனுக்குடா என் அக்கவுண்ட் விபரம் தெரியும்? மலேசியா கப்பல் வர்ற வழியை மாத்துனதும் நீதான், இப்போ என் தங்கத்தை அள்ளிக்கிட்டுப் போனதும் நீதானடா!” என்று கத்திக்கொண்டே பாபி பாய்ந்து போய் குணாவின் சட்டையைப் பிடித்தான்.
“அண்ணே… சத்தியமா இல்லைண்ணே! எனக்கு எதுவுமே தெரியாதுண்ணே!” என்று குணா அலறினான்.
ஆனால், பாபியின் காதுகளில் அந்த வார்த்தைகள் விழவில்லை. ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற பாபி, மேஜை மீது இருந்த கனமான மரத்தாலான மதுக் கோப்பையை எடுத்து குணாவின் முகத்திலேயே ஓங்கி அடித்தான்.
குணாவின் மூக்கிலிருந்து ரத்தம் பீறிட்டுக் கொட்டியது. அவன் தரையில் விழுந்து அலறினான். பாபி அங்கிருந்த இரும்புத் தடியை எடுத்து குணாவை மிருகத்தனமாகப் போட்டுத் தாக்கத் தொடங்கினான். அவனது ஒவ்வொரு அடியும் குணாவின் எலும்புகளை உடைக்கும் சத்தத்தைக் கேட்டுக் கொண்டே, சோபாவின் ஓரத்தில் காலின் மேல் கால் போட்டு அமைதியாக அமர்ந்திருந்தான் ரோலக்ஸ். குணா தான் இதைச் செய்திருப்பான் என்று பாபி முழுமையாக நம்புவதை நினைத்து ரோலக்ஸ் மனதிற்குள் சிரித்துக் கொண்டான். பைரவன் அருகில் நின்று அந்த வன்முறையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
அன்றைய இரவு, பாபியின் சொகுசு பங்களா ஒருவித அமானுஷ்ய அமைதியில் மூழ்கியிருந்தது. ஜன்னலுக்கு வெளியே கடல் காற்று பலமாக வீசிக்கொண்டிருக்க, உள்ளே ஹாலில் அமர்ந்து கொண்டு பாபி தொடர்ந்து மதுவைக் குடித்துக் கொண்டிருந்தான். அவனது கண்ணெதிரே அவனது சாம்ராஜ்யத்தின் பாதி பலம் அழிந்துவிட்டதால், அவனது உடல் வலியும், மனப் புலம்பலும் உச்சத்தில் இருந்தன.
போதையின் உச்சத்திற்குச் சென்ற பாபி, பாட்டில் பாட்டிலாக மதுவை காலி செய்து கொண்டே புலம்பினான். அவனது அருகில் நின்றிருந்த ரோலக்ஸின் உதடுகளில் அந்தச் சிறு புன்னகை இன்னும் மறையாமல் அப்படியே இருந்தது. பைரவன் ரோலக்ஸிற்குப் பின்னால் ஒரு தூணில் சாய்ந்து கொண்டு, பாபியின் ஒவ்வொரு வார்த்தையையும் தன் மூளையில் பதிவு செய்து கொண்டிருந்தான்.
குடிபோதையில் தள்ளாடிய பாபி, மெதுவாகத் தன் தலையை நிமிர்த்தி ரோலக்ஸைப் பார்த்தான். அவனது கண்கள் செருகியிருந்தன.
“ரோலக்ஸ்… உனக்குத் தெரியுமா? அந்த அன்னைக்கு ராத்திரி… அந்த அலெக்ஸ் பயலோட கப்பல் வந்துச்சு பாரு… அதுல வந்த பொருட்களைப் பார்த்ததும் எனக்குப் பைத்தியமே புடிச்சிடுச்சுடா. அவன் கொண்டு வந்ததே இவ்வளவு இருக்குன்னா, கடலுக்கு அங்கிட்டு அவன் இருப்பிடத்தில் இன்னும் எவ்வளவு வச்சிருப்பான்? அவன்கிட்ட இன்னும் எவ்வளவு தங்கம் பதுங்கி இருக்கும்னு தெரிஞ்சுக்கத்தான், அவனை அந்த நாற்காலியில கட்டிப்போட்டு வச்சிருந்த இடத்துக்குப் போனேன்டா…” என்று பாபி தன் கைகளை காற்றில் அசைத்துப் பேசினான்.
அலெக்ஸின் பெயரைக் கேட்டதும், ரோலக்ஸின் நரம்புகள் சட்டென்று புடைத்தன. அவனது இடுப்பில் இருந்த வெள்ளை துப்பாக்கியைத் தொட்டுக் கொண்டிருந்த விரல்கள் இறுக்கமடைந்தன. அவனது ரத்தம் கொதிக்கத் தொடங்கியது. ஆனால், அவன் அதைத் தன் முகத்தில் காட்டிக் கொள்ளாமல், பாபியின் பேச்சை உற்றுக் கவனித்தான்.
“அவன்கிட்ட போயி… டேய், இன்னும் தங்கம் எல்லாம் எங்கடா இருக்கு? இன்னும் எவ்வளவு பதுக்கி வச்சிருக்கீங்க? உன் ரகசியத் தளம் எதுன்னு விபரம் கேட்டேன்டா. ஆனா அந்த ஊமைப் பயல்… ஒரு வார்த்தை கூடச் சொல்லலடா! வெறும் ஊமை சிரிப்பு தான் சிரித்தான். எனக்கு வந்த ஆத்திரத்துல… என் கையில இருந்த இரும்புத் தடியை எடுத்து அவனைக் கொடூரமா… கொடூரமா அடிச்சேன்டா! அவனோட மண்டை ஓடு உடையுற சத்தம் எனக்கு இன்னும் கேக்குது. அவனோட உடம்புல இருந்து ரத்தம் பீறிட்டு என் முகத்துல அடிச்சப்பவும் நான் நிறுத்தலடா… அடிச்சு… அடிச்சே அவனைக் கொன்னுட்டேன்டா!” என்று பாபி பற்களைக் காட்டி மிருகத்தனமாகச் சிரித்தான்.
பாபி அலெக்ஸை எப்படிக் கொடூரமாக அடித்தான் என்பதை விவரிக்கும் போது, ரோலக்ஸின் உள்ளுக்குள் ஒரு மாபெரும் எரிமலை வெடித்தது. அவனது கண்கள் சிவப்பாக மாறின. தன் முன்னால் அமர்ந்திருக்கும் இந்த மிருகத்தின் தலையை இப்போதே இந்த நொடியே வெட்டி எறிந்துவிட வேண்டும் என்ற வெறி அவனது குருதியில் பாய்ந்தது. அவனது கை துப்பாக்கியை நோக்கி நகர்ந்தது. ஆனால், பைரவன் பின்னால் இருந்து மெதுவாக ரோலக்ஸின் தோளை அழுத்தினான்.
‘அவசரம் வேண்டாம், இன்னும் ரகசியங்கள் வர வேண்டும்’ என்று பைரவனின் தொடுதல் அவனுக்கு உணர்த்தியது. ரோலக்ஸ் தன் கோபத்தைக் கஷ்டப்பட்டுத் தடுத்துக் கொண்டு, ஒரு ஆழமான மூச்சை இழுத்துவிட்டான்.
பாபி மேலும் போதையில் தள்ளாடி, சோபாவிலிருந்து கீழே விழப் போனான். அவன் ரோலக்ஸின் கையைப் பிடித்து இழுத்து, தன் அருகிலேயே அமர வைத்தான். ரோலக்ஸின் மீது அவனுக்கு இருந்த அசாத்தியமான நம்பிக்கையால், அவனைக் கட்டிப்பிடிப்பது போல வந்து அமர்ந்தான்.
“ரோலக்ஸ்… நீ மட்டும்தான்டா என் உண்மையான விசுவாசி. இந்த குணா பயல் துரோகம் பண்ணிட்டான். இந்தா… நீயும் குடிடா!” என்று கூறி, ஒரு கிளாஸில் மதுவை விளிம்பு வரை ஊற்றி ரோலக்ஸிடம் நீட்டினான்.
ரோலக்ஸ் அந்த கிளாஸைப் பெற்றுக் கொண்டான். அவன் குடிப்பது போலத் தன் உதடுகளில் கிளாஸை வைத்துக் கொண்டு, பாபியின் கண்களை உற்று நோக்கிக் கொண்டே இருந்தான். ஆனால், ஒரு சொட்டுக் மதுவைக் கூட அவன் தொண்டைக்குள் இறக்கவில்லை. பாபியின் கவனம் திசைதிரும்பும் போது, அதைத் தரையில் மெதுவாக ஊற்றினான்.
இப்போது பாபியின் வாயைக் கிளற இதுதான் சரியான தருணம் என்பதை ரோலக்ஸ் உணர்ந்தான். அவன் தன் விரல்களாலும் அசைவுகளாலும் பாபியிடம் மெதுவாகக் கேட்கத் தொடங்கினான். பைரவன் அதை வாய்மொழியாக மொழிபெயர்ப்பது போலப் பாபியிடம் கேட்டான்.
“அண்ணே… இப்போ தங்கம் போனது போகட்டும். ஆனா நம்மோட பிரதான சர்வதேசக் கடத்தல் பாதைகள் எல்லாம் எங்கே இருக்கு? மலேசியா சரக்கு மட்டுமில்லாம, மத்த பெரிய பெரிய ரகசியக் கடத்தல் எல்லாம் எங்கிருந்து வருதுண்ணே? அதைச் சொன்னீங்கன்னா நான் இப்போவே போய் அதை எல்லாம் நமக்காகப் பாதுகாப்பேன்,” என்றான் பைரவன் தந்திரமாக.
குடிபோதையில் இருந்த பாபிக்கு ஏதும் நினைவில்லை. தன் மீதே அவனுக்குக் கட்டுப்பாடு இல்லாத அந்த நொடில், ரோலக்ஸின் மீது இருந்த கண்மூடித்தனமான நம்பிக்கையால், அவனது சாம்ராஜ்யத்தின் ஆகப்பெரும் ரகசியங்கள் அனைத்தையும் கொட்டத் தொடங்கினான்.
“அதை ஏன் கேக்குற ரோலக்ஸ்… நம்மோட அசல் சாம்ராஜ்யமே அந்த சர்வதேசக் கடல் எல்லையிலதான் இருக்குடா. அந்தப் பெரிய அரசியல் புள்ளியோட நேரடிக் கட்டுப்பாட்டுல இருக்குற ‘பிளாக் வாட்டர்’ துறைமுகப் பகுதிதான் நம்மோட மெயின் தளம். அங்கிருந்துதான் மாதாந்தம் பல்லாயிரக்கணக்கான நவீன ஆயுதங்களும், தூய்மையான ஹெராயின் பொருட்களும் சர்வதேச நாடுகளுக்குப் போகுது. அதோட ரகசிய சிக்னல் குறியீடு, அந்தப் பாதையோட வரைபடம்… இதோ… இந்த மேஜைக்குள்ள இருக்குற ரகசிய லாக்கர்லதான் வச்சிருக்கேன். அதோட பாஸ்வேர்ட்…” என்று கூறி, பாபி அந்த ரகசிய எண்களையும், கடத்தல் வழிகளின் அனைத்து விவரங்களையும் ஒவ்வொன்றாகக் கொட்டினான்.
ரோலக்ஸ் மற்றும் பைரவனின் கண்கள் இருட்டில் மின்னின. பாபியின் சாம்ராஜ்யத்தின் இதயத்துடிப்பே அந்த ரகசியக் கடத்தல் பாதைகள்தான். அது இப்போது அவர்களின் கைகளுக்குள் வந்துவிட்டது. பாபி போதையின் உச்சத்தில் சோபாவிலேயே சரிந்து விழுந்து, அடுத்த சில விநாடிகளில் குறட்டை விட்டுத் தூங்கத் தொடங்கினான்.
ரோலக்ஸ் மெதுவாக எழுந்தான். அவன் மேஜையின் அடியில் இருந்த ரகசிய லாக்கரைத் திறந்து, அங்கிருந்த அந்த சர்வதேசக் கடத்தல் வரைபடங்களையும், ரகசிய சிக்னல் குறியீடுகளையும் அடங்கிய முக்கிய ஆவணங்களை எடுத்தான். அதைத் தன் ஆடையின் உள்ளே மறைத்து வைத்துக் கொண்டான்.
அவன் பாபியின் முகத்தைப் பார்த்தான். தூக்கத்தில் இருக்கும் அந்த மிருகத்தின் முகத்தில் மரணத்தின் நிழல் ஏற்கனவே படியத் தொடங்கியிருந்தது. ரோலக்ஸ் தன் வெள்ளை துப்பாக்கியை ஒருமுறை தொட்டுப் பார்த்துவிட்டு, பைரவனுக்குச் சைகை செய்தான்.
இருவரும் அந்தப் பெரிய பங்களாவின் கோட்டையை விட்டு வெளியே வந்தார்கள். காவலுக்கு நின்றிருந்த அடியாட்களுக்கு எதுவும் தெரியாது. அவர்கள் ரோலக்ஸையும் பைரவனையும் பார்த்துத் தலைவணங்கினர். தங்களின் சாம்ராஜ்யத்தின் ஒட்டுமொத்த ரகசியங்களையும் இழந்துவிட்டுத் தங்கள் தலைவன் தூங்கிக் கொண்டிருக்கிறான் என்பது அந்த முட்டாள் அடியாட்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.
வெற்றியோடும், பாபியை முழுமையாகத் தகர்ப்பதற்கான ஆகப்பெரும் பலத்தோடும் அந்தப் பங்களாக் கோட்டையை விட்டு வெளியே வந்த ரோலக்ஸின் முகத்தில், அந்த நள்ளிரவு மழையிலும் ஒரு மாபெரும் புயலின் கம்பீரம் தென்பட்டது.
பங்களாவை விட்டு வெளியேறி, துறைமுகத்தின் வடக்கு எல்லையை நோக்கி ரோலக்ஸ் பைக்கு சீறிப் பாய்ந்தன. ஆனால், அவர்கள் அரை கிலோமீட்டர் கூடக் கடந்திருக்க மாட்டார்கள், திடீரெனப் பின்னால் நான்கு பெரிய எஸ்யூவி கார்கள் அதிவேகமாக இவர்களின் பைக்குகளைத் துரத்தத் தொடங்கின.
யார் அவர்கள் ?
வேட்டை தொடரும் ..⚓
