Rolex 46

46

பாபியின் பங்களா இப்போது மனித நடமாட்டமற்ற, வெறும் மதுப் போத்தல்களாலும், மாதுக்களின் போலிச் சிரிப்பொலிகளாலும் மட்டுமே நிரம்பியிருந்த ஒரு இருண்ட குகையாக மாறியிருந்தது. தன் வாழ்நாளின் அனைத்து ரகசியங்களையும், சர்வதேசத் தொடர்புகளையும், அதிகாரத்தையும் ரோலக்ஸிடம் முழுமையாக வழங்கிவிட்டு, தான் உருவாக்கிய போலிச் சாம்ராஜ்யத்தின் நிழலில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான் பாபி.

ஆனால், ரோலக்ஸிற்கு அதுதான் சரியான தருணமாக அமைந்தது. பாபி நேரில் செல்ல வேண்டிய சர்வதேச மாஃபியா சந்திப்புகளுக்கு இப்போது ரோலக்ஸே துணிச்சலாக நேரில் செல்லத் தொடங்கினான்.

விசாகப்பட்டினத் துறைமுகத்தில் அமைதியாகத் தொடங்கிய அவனது பயணம், மும்பையின் இருண்ட தாதா தெருக்களையும், கொல்கத்தாவின் பழைய ஹூக்ளி நதிக்கரை கிடங்குகளையும் கடந்து, கடல் தாண்டிச் சீனா, சிங்கப்பூர், மலேசியா என சர்வதேச மாஃபியா நெட்வொர்க்கிற்குள் அடியெடுத்து வைத்தது.

மும்பையின் தார்காட் பகுதியில் இருந்த ஒரு பழைய மில்லுக்குள், மகாராஷ்டிராவின் தாதாவான பதானும் அவனது ஆயுதம் தாங்கிய அடியாட்கள் குழுமியிருந்தனர். பாபி நேரில் வராமல், ஒரு புதிய இளைஞனை அனுப்பியதைக் கண்டு பதான் கோபமடைந்தான்.

“பாபி எங்கே? இந்தச் சின்னப் பையனை அனுப்பி எங்களை அவமானப் படுத்துறானா?” என்று பதான் தன் மராத்தி கலந்த இந்தியில் கத்தினான்.

ரோலக்ஸ் அமைதியாக நடந்தான். அவனது உதட்டில் ஒரு சிறிய, மென்மையான, ஆனால் உறைந்துபோகச் செய்யும் ஆபத்தான புன்னகை மட்டுமே இருந்தது. அவன் பேசவில்லை. தன் மேஜை மீது இடுப்பில் இருந்த அந்தப் புகழ்பெற்ற வெள்ளை நிறத் துப்பாக்கியையும், பாபியின் ரகசிய லாக்கரில் இருந்து எடுத்த பதான் தொடர்பான முறைகேடு ஆவணங்களையும் வீசினான்.

பைரவன் முன்னே வந்து கம்பீரமாகப் பேசினான், “பாபி இனி வெறும் பெயர் மட்டும்தான் பதான். இனி இந்தியா முழுமைக்கும், கடல் தாண்டிய அனைத்துக் கடத்தல்களுக்கும் ஒரே அதிபதி இந்த ரோலக்ஸ் மட்டும்தான். பாபி உங்களுக்குக் கொடுத்த லாபத்தில் மூன்று மடங்கு ரோலக்ஸ் தருவான். ஆனால், துரோகம் நினைத்தால்… இந்த வெள்ளைத் துப்பாக்கியில் இருக்கும் தோட்டா உங்கள் நெற்றியில் பேசும்.” என்றான் 

பதான் ஆவணங்களைப் பார்த்துவிட்டு, ரோலக்ஸின் கூர்மையான கழுகுப் பார்வையை நேருக்கு நேர் சந்தித்தான். அந்தப் பார்வையில் இருந்த கம்பீரமும் பயமின்மையும் பதானை உரைய வைத்தன. அவன் மெதுவாக எழுந்து நின்று, ரோலக்ஸிற்குத் தன் கைகுலுக்கலை வழங்கினான்.

அடுத்து கொல்கத்தாவின் ஹூக்ளி நதிக்கரையில், வங்காள தேச எல்லைக் கடத்தல்காரர்களுடன் நடந்த சந்திப்பில், எதிரி கும்பல் ஒன்று ரோலக்ஸை வஞ்சகமாக வீழ்த்த முயன்றது. ஆனால், ரோலக்ஸ் தன் அசாத்தியமான வேகம் மற்றும் கைகலப்புத் திறமையால், நொடிப் பொழுதில் எதிரித் தலைவனின் கையை முறித்து, அவனது சொந்தக் கத்தியாலேயே அவனது தொண்டையைத் தொட்டான். அவனது துணிச்சலைக் கண்டு கொல்கத்தாவின் அத்தனை பாதாள உலகக் தலைவர்களும் ரோலக்ஸிற்கு அடிபணிந்தனர்.

சிங்கப்பூரின் மாசற்ற மின்சார வெளிச்சத்தில் பிரகாசிக்கும் சொகுசு துறைமுகத்தில், ஆசியாவின் மிகப்பெரும் சர்வதேசக் கடத்தல்காரர்கள் ஒரு பிரம்மாண்ட கப்பலில் கூடியிருந்தனர். சீன பாதாள உலகத்தின் கொடூரத் தலைவனான மிஸ்டர் சாங்ம் மற்ற மலேசிய கடத்தல் கும்பலின் பிரதான தலைவர்கள் அங்கே வீற்றிருந்தனர்.

எப்போதும் கம்பீரமாக, உதட்டில் ஒரு சிறிய, மென்மையான ஆபத்தான புன்னகையோடு நடக்கும் ரோலக்ஸின் வருகை, அங்கிருந்த பல கொடூரமான குற்றவாளிகளையே ஒரு கணம் மிரள வைத்தது.

அவன் பேச வேண்டிய அவசியமில்லை, அவனது கூர்மையான கழுகுப் பார்வையும், சாதுரியமான உடல் மொழியும், இடுப்பில் பளபளக்கும் அந்த வெள்ளை நிறத் துப்பாக்கியும் அவன் யார் என்பதை உரக்கச் சொன்னன.

சாங் தன் சீன மொழியில், “பாபியின் பிரதிநிதியாக வந்திருக்கும் நீ, எங்கள் சர்வதேச விதிகளை ஏற்பாயா?” என்று கேட்டான்.

ரோலக்ஸ் தன் கையில் இருந்த ரோலக்ஸ் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, மேஜை மீது இருந்த உலக வரைபடத்தில் தன் விரலால் சோழ மண்டலக் கடலையும் சர்வதேச கடல் எல்லையையும் சுட்டிக்காட்டினான். அவன் தன் கையால் செய்த சைகைகள், சர்வதேச கடல் வழிகளில் இனி பாபியின் பெயரால் அல்லாமல், ரோலக்ஸ் என்ற பெயரிலேயே அனைத்துச் சரக்குகளும் தங்கு தடையின்றி இயங்கும் என்பதைத் தெளிவாக உணர்த்தின.

கடல் தாண்டி இருக்கும் பல பாதாள உலகத் தலைவர்களுடன் ரோலக்ஸ் தனக்கான நட்புப் பாலத்தை உருவாக்கினான். பாபியின் பெயரால் சரக்குகளைக் கையாளத் தொடங்கியவன், மெல்ல மெல்லத் தன் அசாத்திய ஆளுமையால் அவர்களைத் தன் பக்கம் ஈர்த்தான்.

ரோலக்ஸ் வெறும் புதிய நண்பர்களை மட்டும் உருவாக்கவில்லை. தமிழ்நாடு, ஆந்திரா, மும்பை போன்ற பகுதிகளில் முன்னாட்களில் மாஃபியா சாம்ராஜ்யத்தில் கொடிகட்டிப் பறந்து, பின்னர் பாபியின் கொடூரமான துரோகங்களாலும், தந்திரங்களாலும் வாழ்க்கையைத் தொலைத்து நொடிந்து போயிருந்த பழைய கடத்தல்காரர்களைத் தேடிப் பிடித்தான்.

அவர்களை இரகசிய இடங்களுக்கு வரவழைத்து, அவர்களுக்கு ஆறுதல் கூறினான். பாபி அவர்களுக்குச் செய்த அநீதிகளையும், அவனது உண்மையான முகத்தையும் அவர்களுக்கு ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினான்.

“பாபி உங்களை வீழ்த்தினான், ஆனா இந்த ரோலக்ஸ் உங்களை மீண்டும் அரியணையில் அமர வைப்பான்,” என்ற பைரவனின் மொழிபெயர்ப்பு வார்த்தைகள், அந்த பழைய கடத்தல்காரர்களின் நெஞ்சில் எரியும் பழிவாங்கும் நெருப்பிற்கு எண்ணெய் வார்த்தன.

ரோலக்ஸ் அவர்களுக்குப் பண உதவிகளையும், புதிய கடத்தல் வழிகளையும் அமைத்துக் கொடுத்து, அவர்களைத் தன் புதிய நிழல் மாஃபியா உலகத்தின் தூண்களாக மாற்றினான்.

இதன் விளைவாக, பாபிக்குத் தெரியாமலேயே கடல் தாண்டி ஒரு மாபெரும் சர்வதேச மாஃபியா கூட்டணி உருவானது. கடத்தல் உலகின் தலைவனாக ஆவணங்களில் பாபியின் பெயர் இருந்தாலும், அந்த மாஃபியா பேரரசின் நிஜச் சிங்கமாக, மாற்ற முடியாத நாயகனாக ரோலக்ஸ் மட்டுமே கம்பீரமாக வீற்றிருந்தான்.

சீனாவின் பாதாள உலகத்தில் கூட ரோலக்ஸ் என்ற பெயர் கேட்டால், அங்கிருக்கும் கொடூரக் கொள்ளையர்கள் கூட எழுந்து நின்று மரியாதை செலுத்தும் அளவிற்கு அவனது பெயர் பிரம்மாண்டமாக உயர்ந்தது.

ரோலக்ஸின் நிழல் சாம்ராஜ்யம் விரிவடைந்த அளவுக்கு, அவனது தகவல் பரிமாற்ற முறைகளும் மிகவும் நுட்பமாகவும் அதிநவீனமாகவும் மாறின.

ஏற்கனவே அந்தப் பழைய தபால் தாத்தாவிடம் கற்றுக்கொண்ட தந்தி Morse Code மொழியை, ரோலக்ஸியும் பைரவனும் ஒரு புதிய நுட்பத்திற்கு மாற்றியிருந்தனர். மொபைல் போன்களோ, ரேடியோ சிக்னல்களோ அற்ற, எந்தப் போலீஸ் ஒற்றர்களாலும் கண்டுபிடிக்க முடியாத ஒரு ரகசிய தகவல் பரிமாற்ற முறை அது.

துறைமுகத்தின் இருண்ட இரவுகளில், ரோலக்ஸ் ஒரு உயரமான கட்டடத்தின் உச்சியில் நிற்பான். பைரவன் சில கிலோமீட்டர் தள்ளி மற்றொரு தெருமுனையில் நிற்பான்.

அங்கிருக்கும் தெருவிளக்குகளின் மின்சார இணைப்பை ரகசியமாகக் கட்டுப்படுத்தி, விளக்குகளின் ஒளியை On/Off செய்து, மின்சார மின்னல் ஒளியின் மூலம் தந்தி மொழியில் செய்திகளைப் பரிமாறிக் கொண்டனர்.

மிளிரும் அந்தச் சிறிய ஒளித்துளிகள், ‘அடுத்த சரக்கு சீனாவிலிருந்து புறப்பட்டுவிட்டது’, ‘பாபியின் கிடங்கு முடக்கப்பட்டது’ என்ற தகவல்களை இருண்ட இரவின் காற்றில் ரகசியமாகப் பரிமாறின.

மின்சார விளக்குகள் சிமிட்டும் அந்த விசித்திரமான மொழியைத் துறைமுக மக்கள் ஏதோ மின்னல் கோளாறு என்று நினைத்துக் கடந்து செல்ல, அதற்குப் பின்னால் ஒரு மாபெரும் சர்வதேச மாஃபியாவின் கட்டளைகள் பிறந்து கொண்டிருந்தன.

எவ்வளவு பெரிய மாஃபியா சாம்ராஜ்யத்தை ஆட்டிப் படைத்தாலும், ரோலக்ஸ் என்ற அந்த மாபெரும் சிங்கத்தை மென்மைப்படுத்தும் ஒரே நங்கூரமாக மயூரா மட்டுமே இருந்தாள்.

ஒரு நள்ளிரவு வேளையில், கடல் காற்று வீசியடிக்கும் தன் வீட்டின் மொட்டை மாடியில் நின்றிருந்தான் ரோலக்ஸ். அவனது கையில் இருந்த ரோலக்ஸ் கடிகாரத்தின் முட்கள் 2 மணியைக் காட்டின.

பின்னாலிருந்து அமைதியாக வந்த மயூரா, அவனது இடுப்பைத் தன் மெல்லிய கைகளால் வளைத்துப் பிடித்து, அவனது முதுகில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

ரோலக்ஸ் மெதுவாகத் திரும்பி, அவளைத் தன் பலமான கைகளில் ஏந்திக் கொண்டான். நிலவின் வெளிச்சத்தில் மயூராவின் கண்கள் அவனைக் காதலோடு உற்றுப் பார்த்தன.

“உலகத்தையே உன் காலடியில் கொண்டு வரப் போராடுற ரோலக்ஸ்… ஆனா உன் மனசுல இன்னும் ஏதோ ஒரு பாரம் இருக்கே?” என்று சைகையில் கேட்டாள் மயூரா.

ரோலக்ஸ் அவளது உதடுகளில் தன் விரலை வைத்து அமைதியாக்கினான். பின்னர் அவளது நெற்றியில் தன் உதடுகளைப் பதித்து, ஒரு நீண்ட, ஆழமான முத்தத்தைக் கொடுத்தான்.

அவன் தன் சைகை மொழியில், “என் பாரமெல்லாம் உன் மடியில சாயும் போது கரைஞ்சு போயிடும் மயூரா. இந்த உலகத்தை நான் ஆள்வது உனக்காகவும், நம்மைக் காயப்படுத்தியவர்களை அழிக்கவும்தான்.”

அவளது உதடுகளும் அவனது உதடுகளும் ஒன்றிணைந்தன. காதலின் உன்னதமான அந்த நள்ளிரவுத் தருணத்தில், கொடூரமான மாஃபியா நாயகன் தன் காதலியின் மடியில் ஒரு குழந்தையைப் போல அமைதியடைந்தான்.

நாட்கள் தங்களின் வேகத்தில் உருண்டோடின. ரோலக்ஸின் நிழல் சாம்ராஜ்யம் இப்போது முழுமையான ஒரு விருட்சமாக மாறியிருந்தது.

அன்று நள்ளிரவு, துறைமுகத்தின் ஒதுக்குப்புறமான அந்த பழைய கப்பல் கட்டும் தளத்தில், சர்வதேச மாஃபியா தலைவர்களின் ரகசியக் கூட்டம் முடிவடைந்திருந்தது. அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளும் ரோலக்ஸிடம் தலைவணங்கி விடைபெற்றுச் சென்றனர்.

ரோலக்ஸும் பைரவனும் அந்த ரகசியக் கூட்டத்தைக் கலைத்துவிட்டு, இருண்ட தெரு வழியே தங்களின் வாகனத்தை நோக்கி நடந்து வந்தனர். காற்றில் உப்பின் வாடையும், ஏதோ ஒரு விபரீதத்தின் அறிகுறியும் கலந்திருந்தன.

திடீரென, தூரத்தில் இருட்டைத் கிழித்துக் கொண்டு இரண்டு ஹெட்லைட் வெளிச்சங்கள் பாய்ந்தன.

காதைக் கிழிக்கும் எஞ்சின் சத்தத்துடன், அதிவேகமாக ஒரு வாகனம் இவர்களை நோக்கிச் சீறி வந்தது.

பைரவன் சட்டென்று தன் இடுப்பில் இருந்த கனமான அரிவாளை உருவி, ரோலக்ஸிற்கு முன்னால் நின்றான். அந்த வாகனத்தின் அமைப்பையும், அதன் மேல் இருந்த சைரன் விளக்கையும் பார்த்த பைரவனின் முகம் சட்டென்று வெளுத்துப் போனது.

“ரோலக்ஸ்! எச்சரிக்கையா இரு! இது… இது போலீஸ் ஜீப்! நாம மாட்டிக்கிட்டோம் போலிருக்கு!” என்று பைரவன் பதற்றத்துடன் கத்தினான்.

ஆனால், ரோலக்ஸ் பதறவில்லை. அவன் ஒரு அடி கூடப் பின்வாங்கவில்லை. அவனது முகம் எந்தவிதச் சலனமும் இல்லாமல், ஒரு பாறையைப் போலக் கம்பீரமாக இருந்தது. அவன் தன் இடுப்பில் இருந்த வெள்ளை நிறத் துப்பாக்கியின் மரப் பிடியைத் தொட்டபடி, அசையாமல் அந்த ஜீப்பையே உற்றுப் பார்த்தான்.

அந்த போலீஸ் ஜீப், இவர்களுக்கு மிக அருகில் வந்து, தார்ச் சாலையில் டயர்கள் கருகும் சத்தத்துடன் பிரேக் அடித்து நின்றது.

ஜீப்பின் முகப்பு விளக்குகளின் மஞ்சள் வெளிச்சம் ரோலக்ஸ் மற்றும் பைரவனின் மீது வளைவாகப் படிந்தது. ஜீப்பின் எஞ்சின் அணைக்கப்பட்டது. அந்தத் தனிமையான தெருவில் ஒரு கொடூரமான நிசப்தம் நிலவியது.

ஜீப்பின் ஓட்டுநர் பக்கத்துக் கதவு மெதுவாகத் திறக்கப்பட்டது. உள்ளிருந்து ஒருவன் தன் காக்கிச் சட்டையின் கைமடிப்புகளைச் சீரமைத்தபடி வெளியே இறங்கினான்.

அவன் தன் தலையில் இருந்த போலீஸ் தொப்பியைக் கழற்றி, தன் கையில் பிடித்தபடி, கம்பீரமான நடைபோட்டு ஜீப்பின் விளக்கு வெளிச்சத்திற்கு முன்னால் வந்து நின்றான்.

அவனது முகத்தில் லேசான வெளிச்சம் விழுந்த அந்த நொடில்…

ரோலக்ஸின் கண்கள் விரிந்தன!, பக்கத்தில் நின்றிருந்த பைரவன் தன் கையில் இருந்த அரிவாளை அறியாமலேயே கீழே நழுவவிட்டான்! இருவரின் நெஞ்சும் ஒரு கணம் துடிப்பதை நிறுத்தியது போல் இருந்தது!

அவன் ரோலக்ஸைப் பார்த்து, ஒரு தீர்க்கமான, மர்மமான புன்னகையை உதிர்த்தான்.

அந்த காக்கிச் சீருடையில், கம்பீரமான காவல் அதிகாரியாகப் போலீஸ் ஜீப்பில் இருந்து இறங்கி நின்றவன் வேறு யாருமல்ல.. ******* அவனது காக்கிச் சட்டையின் நெஞ்சில் பளபளத்த பெயர் பலகையில் தெளிவான எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்தது:

அந்த நள்ளிரவுத் துறைமுகத்தின் காற்றில், வரப்போகும் மாபெரும் புயலுக்கான முதல் அதிர்வு பலமாக எதிரொலித்தது!

 

வேட்டை தொடரும் ..⚓

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!