Rolex 55

55

நள்ளிரவு 11 மணி.

அரபிக் கடலின் ஆழமான மையப் பகுதியில், கரையே தெரியாத அந்தப் பெருவெளியில், The Emperor என்ற அந்த மிதக்கும் பிரம்மாண்ட அரண்மனை அலைகளைக் கிழித்துக் கொண்டு நகர்ந்து கொண்டிருந்தது.

கப்பல் அல்ல அது, கடலின் மீதே மிதக்கும் ஒரு மாபெரும் நகரம்! பளபளக்கும் பளிங்குத் தரைகள், நடுவே ஜொலிக்கும் விளக்குகள் என அந்த நள்ளிரவுப் பெருங்கடலில் ஒரு ஒளிப்பிழம்பைப் போல அது அசைந்தாடியது.

கப்பலின் மேல் தளத்தில், திறந்தவெளி பால்கனியில் ரோலக்ஸ் நின்றிருந்தான்.

அவனது உடம்பில் தூய வெண்ணிற கோட்-சூட் கம்பீரமாக மிளிர்ந்தது. கையில் அவனது பிரத்யேக கனரக Shortgun ஒளிர, இடுப்பின் ரகசிய உறையில் இன்னுமொரு தானியங்கிப் கைத்துப்பாக்கி மறைந்திருந்தது. அவனது அருகில், லேசான பனி நடுக்கத்துடன் தன் பிஞ்சு மகன் சாருவை நெஞ்சோடு அணைத்தபடி மயூரா நின்றிருந்தாள். சாரு தன் தந்தையின் சட்டையைப் பிடித்துக்கொண்டு அமைதியாக நள்ளிரவுக் கடலைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவர்களுக்குப் பாதுகாப்பாக, ஷர்மா தன் கையில் மதுக் கோப்பையோடு புன்னகைத்தபடி நின்றிருந்தான்.

கப்பலின் நான்கு மூலைகளிலும், பிரதான கேப்டன் அறை முதல் கீழ் தளத்தின் deck பகுதிகள் வரை… ரோலக்ஸின் அதிநவீன ஏகே-47 ஏந்திய பத்து கழுகுக்கண் பாதுகாவலர்கள் ரோந்து வந்துகொண்டிருந்தனர். அவர்களின் பார்வையில் சுற்றிலும் ஒரு பறவை கூட ஊடுருவ முடியாத அளவுக்குப் பாதுகாப்பு இரும்பு அரணாக இருந்தது.

திடீரென, கடலின் இருண்ட பரப்பில் இருந்து சில சிறு கப்பல்களின் எஞ்சின் சத்தம் முழங்கியது.

பனிமூட்டத்தைக் கிழித்துக் கொண்டு, இரவின் கரிய நிறத்தை விட இருண்ட சில மாஃபியா கப்பல் மெதுவாக இவர்களின் கப்பலை நெருங்கியது!

ஷர்மா தன் மதுக் கோப்பையைக் கீழே வைத்துவிட்டு, “ரோலக்ஸ்… இதோ வந்துட்டான்! அந்தமான் டேனியல் வந்துட்டான்! அந்தப் பெரிய கப்பல்லதான் அவனோட ஆட்களும், சர்வதேச தாதாக்களும் வர்றாங்க. நாம போய் வரவேற்போம்,” என்று நயமாகப் பேசினான்.

ரோலக்ஸ் தன் சுருட்டை வாயில் வைத்துப் புகைத்துக்கொண்டே, அமைதியாக அந்த கரிய கப்பலையே உற்றுப் பார்த்தான். அவனது ஆறாவது அறிவு ஏதோ ஒரு கொடூரமான அசம்பாவிதத்தை எச்சரித்தது!

அந்த இருண்ட கப்பல், ரோலக்ஸின் சொகுசுக் கப்பலோடு உரசி நிழலாக நின்றது. தடிமான கயிறுகள் இரு கப்பல்களுக்கும் இடையே தூக்கி வீசப்பட்டு இணைக்கப்பட்டன.

ஆனால்… கயிற்றின் வழியே வரவேற்கப்பட வேண்டிய டேனியலோ அல்லது அவனது விருந்தினர்களோ வரவில்லை!

மாறாக, கரிய உடைகளில், முகமூடி அணிந்த, அதிநவீன தாக்குதல் துப்பாக்கிகளை ஏந்திய நூற்றுக்கணக்கான கொடூரக் கூலிப்படை வீரர்கள், ஒரு பிசாசுக் கூட்டம் போல ரோலக்ஸின் கப்பலுக்குள் பாய்ந்து குதித்தனர்!

அவர்கள் காலடி எடுத்து வைத்த அடுத்த நொடி,  “டக் டக் டக் டக் டக்! பாங்! பாங்! பாங்…!”

யாரும் சுதாரிப்பதற்குள், கப்பலின் மூலைகளில் நின்றிருந்த ரோலக்ஸின் பத்துப் பாதுகாவலர்களையும் நோக்கிச் சரமாரியாகத் தோட்டாக்கள் பாய்ந்தன. ரோலக்ஸின் விசுவாசமான வீரர்கள் அலறக்கூட நேரமின்றி, ரத்த வெள்ளத்தில் கப்பலின் பளிங்குத் தரையில் சரிந்து விழுந்தனர்!

“மயூரா!” ரோலக்ஸின் கண்கள் நொடியில் ரத்தச் சிவப்பாக மாறின. அவன் தன் இடுப்பில் இருந்த ஷார்ட்கனை உருவ முயன்ற அந்த ஒரே விநாடி…

அருகில் நின்றிருந்த ஷர்மா, தன் முகமூடியைக் கழற்றிவிட்டுத் தன் அசல் கொடூர முகத்தைக் காட்டினான்! அவன் தன் கையிலிருந்த பிஸ்டலை ஓங்கி, மயூராவின் மண்டையோடு சேர்த்து வைத்து, சாருவை தன் இடது கையால் தூக்கித் தன் கட்டுப்பாட்டுக்குள் இழுத்துக் கொண்டான்!

“அசையாதே ரோலக்ஸ்!” ஷர்மா அரக்கத்தனமாகக் கத்தினான். “ஒரே ஒரு அடி முன்னாடி வச்சாலும்… உன் பொண்டாட்டி மண்டையைச் சிதறடிச்சிடுவேன்! உன் பையனை இந்தக் கடல்ல தூக்கி வீசிடுவேன்!”

ரோலக்ஸின் கரங்கள் உறைந்து போயின.…

அந்த நள்ளிரவு வேளையில், டெல்லியின் அதிகார மையத்தில் அமைந்திருந்த சௌத்ரியின் பங்களா பேரமைதியில் மூழ்கியிருந்தது.

வெளியே உறைபனி வீசிக் கொண்டிருக்க, பங்களாவின் ரகசிய அறையின் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. அறையின் நடுவே தன் பிரத்யேகத் தோல் நாற்காலியில் அமர்ந்து, ரகசிய ஆவணங்களை ஆராய்ந்து கொண்டிருந்தான் சௌத்ரி. அவனது முகத்தில் எப்போதும் இல்லாத ஒருவிதக் கணக்கீடும், அதிகார வெறியின் நிழலும் படர்ந்திருந்தன.

திடீரென, அறையின் பிரதான கதவு மெதுவாகத் திறந்து, அவசர அவசரமாக உள்ளே நுழைந்தான் ஷர்மாவின் முகத்தில் சௌத்ரி ஏன் இந்த நள்ளிரவில் தன்னைத் தனியாக அழைத்தார்?’ என்ற கேள்வியும் குழப்பமும் அப்பட்டமாகத் தெரிந்தன.

“அவசரமா வரச் சொல்லியிருந்தீங்க?” என்று கேட்டபடி, சௌத்ரியின் எதிரிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான் ஷர்மா.

சௌத்ரி மெதுவாகத் தன் பேனாவைக் கீழே வைத்தவர், “ஷர்மா… உன்னை இந்த நேரத்துல கூப்பிட்டது ஒரு முக்கியமான விஷயம் பேசத்தான்,” 

“நேற்று இரவு டெல்லியில மத்திய அமைச்சர்கள் மேலிடத் தலைவர்களின் ரகசியக் கூட்டம் நடந்தது. அதுல அடுத்தப் பிரதமர் வேட்பாளர் பட்டியலை முறைப்படித் தயார் செஞ்சிருக்காங்க… அதுல முதலிடத்துல என்னோட பெயர் தான் இருக்கு! அநேகமா அடுத்தப் பிரதமர் பதவி எனக்குக் கிடைக்கிறது நூற்றுக்கு நூறு உறுதி!”

இந்தச் செய்தியைக் கேட்டதும் ஷர்மாவின் முகத்தில் மாபெரும் புன்னகை மலர்ந்தது. அவன் உடனடியாகச் சௌத்ரிக்கு வாழ்த்து தெரிவிக்க முற்பட்டான்.

“வாழ்த்துக்கள் ஐயா! இது நாம எதிர்பார்த்ததுதான்… ” என சொல்வதற்குள் .. சௌத்ரி தன் கையை உயர்த்தி, அவனை அமருமாறு சைகை செய்தார். அவனது முகத்தில் எந்தவிதக் கொண்டாட்ட உணர்வும் இல்லை.

ஷர்மா புரியாமல் மீண்டும் அமர்ந்தான்.

“வாழ்த்துக்கள் அப்புறம் இருக்கட்டும் ஷர்மா… இந்த மாபெரும் பதவி என்னைத்தேடி வர்ற இந்த நேரத்துல… ரோலக்ஸ்னால எனக்கு ஏதேனும் பெரிய பிரச்சனை வருமோனு எனக்குள் ஒரு சந்தேகம் எழுந்துட்டே இருக்கு.”

ஷர்மா அதிர்ச்சியுடன் புருவங்களை உயர்த்தினான். “ரோலக்ஸ்னாலயா? ஐயா… அவன் நமக்காகத் தானே தென்னகத்துல அத்தனை பெரிய மாஃபியா வலையமைப்பையும் நடத்திட்டு இருக்கான்? அவனால நமக்கு என்ன பிரச்சனை?”

“புரிஞ்சுக்கோ ஷர்மா! ரோலக்ஸ் இதுவரை செஞ்ச அத்தனை கடத்தல்களும், நிழல் உலகக் காரியங்களும் எனக்குத் தெரிஞ்சுதான் நடந்தது… என் பின்பலத்துல தான் நடந்ததுங்கிற விஷயம் இந்த எதிர்க்கட்சிகளுக்கோ இல்ல என் கட்சி மேலிடத்துக்கோ துளி அளவுக்குத் தெரிஞ்சா கூட… அடுத்த நிமிஷம் என் அரசியல் வாழ்க்கையே முடிஞ்சுடும்! என் பிரதமர் கனவு சுக்குநூறாக உடைஞ்சு போயிடும்!” என சௌத்ரி மேஜை மீது ஓங்கி அடித்தான்.

“அதுமட்டும் இல்லாம… ரோலக்ஸ் இப்போ ரொம்ப நேர்மையான கடத்தல்காரனா மாறத் தொடங்கிட்டான்! அவன் தன் எல்லையில இருக்குற ஏழை தொழிலாளர்களுக்கு உதவி செய்றான், பெண்களைக் காப்பாத்துறான், தேவையில்லாத கொலைகளைத் தவிர்க்குறான். நாம சொல்ற சில காரியங்களை அவன் தன் கொள்கைன்னு சொல்லி செய்ய மறுக்கிறான்! நமக்குத் தேவை சொல்வதைச் செய்யும் ஒரு அடிமை… கொள்கை பேசுற வீரன் இல்லை!” ஷர்மாவின் பக்கம் தன் அழுத்தமான பார்வையைத் திருப்பினார்.

“நான் சொல்ல வர்றது ஒரே விஷயம் தான் ஷர்மா… ரோலக்ஸ் கதையை முடிச்சிடு! இனிமே அவன் நமக்குத் தேவை இல்லை!”

சௌத்ரியின் வாயிலிருந்து வந்த அந்த இரக்கமற்ற வார்த்தைகளைக் கேட்டதும், ஷர்மா அதிர்ச்சியில் நாற்காலியிலிருந்து சட்டென எழுந்து நின்றான்!

“என்ன சொல்றீங்க ஐயா?! ரோலக்ஸை அழிக்கிறதா?” ஷர்மாவின் குரலில் நடுக்கம் வெளிப்பட்டது.

“ஆமாம் ஷர்மா!” சௌத்ரி உறுதியான குரலில் கூறினான். “ரோலக்ஸை அழிப்பதுதான் இப்போதைக்கு நமக்கும், என் பிரதமர் பதவிக்கம் ஒரே பாதுகாப்பு! ஆனால்… இந்த வேலையை ரொம்ப சாதுரியமா செய்து முடிக்கணும்.”

“உனக்கே தெரியும்… ரோலக்ஸ் சாதாரண ஆள் கிடையாது. அவன் ஒரு காட்டுச் சிங்கம்! அவனை நேருக்கு நேர் எதிர்த்து அழிக்கிறதுங்கிறது சாத்தியமே இல்லாத விஷயம். அவன்கிட்ட இருக்குறப் படை பலமும், அவனோட அசாத்திய ஆக்ரோஷமும் நம்ம ஒட்டுமொத்தப் படையையும் அழிச்சிடும். அதனால… தந்திரமா அவனைத் தனியா வர வைக்கணும். அவனோட பாதுகாப்பு அரணான அந்த பைரவனை முதல்ல அவன்கிட்ட இருந்து பிரிக்கணும்!” என்ற சௌத்ரியின் கண்கள் நச்சுத்தனமாக மின்னின.

“அவனை அவனோட குடும்பத்தோட அழைச்சுட்டு வா. அவனுக்கு எந்த சந்தேகமும் வராத மாதிரி, நடுக்கடல்ல ஒரு பார்ட்டி வச்சிருக்கோம்னு பொய் சொல்லு. அவனோட நிழல் கூட இல்லாத அளவுக்கு அவனையும் அவனோட வம்சத்தையும் அந்தக் கடலிலேயே புதைச்சிடு!” அமைச்சரின் இந்த வஞ்சகமானத் திட்டத்தைக் கேட்ட ஷர்மா, சில நொடிகள் தள்ளாடித் தான் போனான்.

ஆனால்… அடுத்த சில நிமிடங்களில், ஷர்மாவின் மனதிற்குள் இருந்த சுயநலமும் பேராசையும் விழித்துக் கொண்டன.

உண்மையில், ரோலக்ஸ் உயிரோடு இருக்கும் வரை ஷர்மாவால் தன் விருப்பப்படி சட்டவிரோதக் காரியங்களைச் செய்து ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. ரோலக்ஸின் கட்டுப்பாடுகளும், அவனது நேர்மையும் ஷர்மாவிற்குப் பெரும் இடையூறாகவே இருந்தன.

இப்போது நாட்டின் அடுத்த பிரதமராகப் போகும் அமைச்சரே உத்தரவு தந்துவிட்ட பிறகு, இனி தனக்கு என்ன பயம்? ரோலக்ஸை அழித்துவிட்டால், தென்னகத்தின் ஒட்டுமொத்தக் கடத்தல் சாம்ராஜ்யமும் தன் கைக்கு வந்துவிடும்! அமைச்சரின் முழு ஆதரவும் தனக்கே கிடைக்கும்!

ஷர்மாவின் முகத்தில் ஒரு கொடூரமான நச்சுப் புன்னகை பூக்க, “சரிங்க ஐயா… நீங்க சொன்ன மாதிரியே ரோலக்ஸின் கதையை முடிச்சுடுறேன். அவன் இந்த உலகத்துல வாழ்ந்த அடையாளமே இல்லாத அளவுக்கு அவனை நடுக்கடல்ல புதைக்கிறேன்!” என்று சௌத்ரியிடம் உறுதியளித்தான்.

டெல்லியில் தீட்டப்பட்ட அந்த நச்சு திட்டத்தின்படியே அனைத்தும் கச்சிதமாக நடந்தேறிய ஷர்மா மிகச் சாதுரியமாகக் காய்களை நகர்த்தினான்.

முதலில், குஜராத் எல்லையில் ஒரு போலியான பிரச்சனையை உருவாக்கி, ரோலக்ஸின் உயிர்நாடியாக விளங்கிய பைரவனை அங்கிருந்து வெகுதூரம் திசைதிருப்பி அனுப்பி வைத்தான். பைரவன் இல்லாத ரோலக்ஸ்… சிறகுகள் இல்லாத சிங்கத்தைப் போன்றவன் என்பதை ஷர்மா நன்கு அறிவான்.

அடுத்து, அந்தமான் டேனியலைச் சந்திக்கப் போவதாகவும், சர்வதேசத் தாதாக்களுடன் குடும்பத்துடன் நட்பு பாராட்டுவது நல்லது என்றும் ரோலக்ஸிடம் அடுக்கடுக்காகப் பொய்களைக் கூறினான்.

ரோலக்ஸை கொள்வதற்காக, டெல்லியிலிருந்து சில ரகசியக் கூலிப்படைகளையும், சர்வதேச அளவில் பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கான கருப்பு உடை முகமூடி அடியாட்களையும் விலைக்கு வாங்கி நடுக்கடலில் காத்திருக்க வைத் தான்.

அவனது ஒரே இலக்கு… ரோலக்ஸை அவனது மனைவி மயூரா, மகன் சாருவுடன் சேர்த்து, ஒரே இடத்தில் வைத்து ரத்த வெள்ளத்தில் மூழ்கடிப்பதுதான்!

கப்பல் நடுக்கடலை அடைந்ததும், திட்டமிட்டபடி அந்த இருண்ட கூலிப்படை கப்பல் வந்து மோதியது.

இப்பொழுது ஷர்மாவின் துப்பாக்கி முனை மயூராவின் நெற்றிப் பொட்டில் அழுத்தமாகப் பதிந்திருந்தது! அவளது கூந்தலைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்தவன், தன் இடது கையால் அலறிய சிறுவன் சாருவை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்! மரணத்தின் வஞ்சக வலையில் … ரோலக்ஸைச் சுற்றி இறுக்கமாக இறுகியிருக்க … ஷர்மா பலமாக சிரித்தான் ..

 

மயூராவின் வாயிலிருந்து பயத்தில் கதறல் வெளிப்பட்டது. சாரு “அப்பா!” என்று கத்தியபடி கதறினான்.

கப்பல் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட முகமூடி அணிந்த கருப்பு உடை மனிதர்கள், துப்பாக்கி முனைகளுடன் ரோலக்ஸைச் சுற்றி வளைத்தனர்.

ஷர்மா கொடூரமாகச் சிரித்தான். “என்ன ரோலக்ஸ்… டெல்லி சௌத்ரியும் நானும் உன்னை வச்சு அண்டர்வேர்ல்ட் ராஜாவா மாத்தினது, கடைசியில நீ எங்களுக்கே மேல வளருறதுக்கா? இந்தியா முழுமைக்கும் நீ மட்டும்தான் ராஜாவா? உன்னோட சாம்ராஜ்யத்தையும், இந்தச் சொத்துகளையும், கடத்தல் வழிகளையும் ஒரே அடியா கைபற்றத்தான் இந்த நள்ளிரவுச் சதி! பைரவனை குஜராத்துக்குத் திசைதிருப்பி அனுப்பிட்டேன். இப்போ இந்தக் கடல்ல உன்னைக் காப்பாத்த அந்தச் சாமி வந்தாலும் முடியாதுடா!” என்றான் 

தன் மனைவியின் நெற்றியில் துப்பாக்கி முனை இருக்க … தன் பிஞ்சு மகனின் கதறல்… துரோகம்!

ரோலக்ஸின் நெஞ்சிற்குள் உறைந்திருந்த மாபெரும் அசுரன் விழித்துக்கொண்டான்! அவனது கண்கள் மனிதக் கண்களாகத் தெரியவில்லை, அது சாத்தானின் தணல் பிழம்பாக மாறியது!

தன் சாவதைப் பற்றி அவனுக்குக் கவலையில்லை, ஆனால் தன் குடும்பத்தைத் தொட்ட அந்த நச்சு நரியையும், அவனது படையையும் இந்த பூலோகத்தில் வாழவிடக் கூடாது என்ற வெறி அவனுள் வெடித்தது!

ரோலக்ஸ் தன் உடலை அசாத்திய வேகத்தில் பக்கவாட்டில் சுழற்றி, தன் ஷார்ட்கனை உருவி, ஷர்மாவின் துப்பாக்கி ஏந்திய கையை நோக்கி ஒரே சுடு சுட்டான்!

“….டுமீல்…!”

ஷர்மாவின் மணிக்கட்டு துண்டிக்கப்பட்டுத் தெறித்தது! அவன் “ஆஅஹ்ஹ்ஹ்!” என்று அலறிக்கொண்டு கீழே விழுந்தான். சாருவும் மயூராவும் நிலைகுலைந்து கப்பலின் சுவரோரம் சாய்ந்தனர்.

“மயூரா! பையனைப் பிடி!” ரோலக்ஸ் தன் ஊமை வாயால் கர்ஜிப்பது போல ஒரு ரகசிய ஒலியை எழுப்பி, எதிரிகளின் நரகத்திற்குள் பாய்ந்தான்!

நூற்றுக்கணக்கான எதிரிகள் ரோலக்ஸை நோக்கித் தோட்டாக்களைப் பொழிந்தனர்.

டக்டக்டக்டக்! பாங்! பாங்! பாங்!…

தோட்டாக்கள் காற்றில் சீறி வந்தன. ரோலக்ஸ் தன் உடலைச் சறுக்கி, முன்னால் வந்த ஒரு கருப்பு உடை வீரன் மீது பாய்ந்து, அவனது கழுத்தை இடது கையால் பிடித்து முறித்தான். அவனது உடலையே தன் உடலுக்குக் கேடயமாகப் பயன்படுத்தி, பின்னால் வந்த ஐந்து பேரைக் தன் ஷார்ட்கனால் சுட்டுத் தள்ளினான்!

கப்பலின் தரை ரத்தச் சேறாக மாறத் தொடங்கியது.

ரோலக்ஸ் ஒரு வேட்டை மிருகத்தைப் போலக் களமாடினான். தன் கையில் இருந்த ஷார்ட்கனில் தோட்டாக்கள் தீர்ந்த அடுத்த நொடி, அதை ஒரு எதிரியின் முகத்தில் ஓங்கி எறிந்தான். அவனது மண்டை ஓடு பிளந்தது!

கீழே கிடந்த தன் வீரனின் ‘ஏகே-47’ துப்பாக்கியை இரு கரங்களிலும் ஏந்தினான்! இரண்டு கரங்களிலும் தானியங்கித் துப்பாக்கிகள் சீறின. ரோலக்ஸ் சுழன்று சுழன்று சுட்டான். எதிரிகளின் தலைகள், கைகள், கால்கள் துண்டிக்கப்பட்டு நடுக்கடலில் தெறித்து விழுந்தன.

எதிரிகள் பயத்தில் நடுங்கினர். “இவன் மனிதனே இல்லைடா! இவன் ஏதோ பேய்… மிருகம்!” என்று அலறியபடி பின்வாங்க முயன்றனர்.

ஆனால், ரோலக்ஸ் அவர்களை விடவில்லை. கப்பலின் படிக்கட்டுகள், பால்கனிகள், பிரதான ஹால் என ஒவ்வொரு இடமாகப் பாய்ந்து சென்று, எதிரிகளைக் கோழிகளை அடித்துப் போடுவது போல வெட்டிச் சாய்த்தான்!

ஒற்றை ஆளாக நூறு பேரை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தான்!

ஆனால்… எதிரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. நாலாபுறமிருந்தும் பாய்ந்த தோட்டாக்கள் ரோலக்ஸின் உடலைத் துளைக்கத் தொடங்கின! அவனது தோள்பட்டையில் இரண்டு தோட்டாக்கள் பாய்ந்தன! அவனது விலாப்பகுதியில் ஒரு தோட்டா ஊடுருவியது! அவனது இடது காலில் தோட்டா பட்டு எலும்பு முறிந்தது!

ரோலக்ஸின் தூய வெண்ணிறக் கோட்-சூட்… முற்றிலும் ரத்தச் சிவப்பாக மாறியது. அவனது உடம்பிலிருந்து குருதி அருவியெனக் கொட்டியது. அவன் முழங்கால் இடறி கீழே சரிந்தான்.

“ரோலக்ஸ்ஸ்ஸ்!” மயூரா கதறினாள். சாரு தன் தாயைக் கட்டிக்கொண்டு அலறினான்.

காயமடைந்த ஷர்மா, தன் உடைந்த கையைப் பிடித்துக்கொண்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்த ஒரு பெரிய சுழல் துப்பாக்கியை எடுத்து ரோலக்ஸை நோக்கி நகர்ந்தான்.

“செத்து தொலைடா ரோலக்ஸ்!” என்று ஷர்மா கொடூரமாகச் சிரித்தான்.

ஆனால்… கீழே சரிந்த அந்த இமயம்… மரணத்தின் விளிம்பிலும் தோற்கவில்லை!

ரோலக்ஸ் தன் உதிரம் சிந்திய கண்களை உயர்த்தி ஷர்மாவைப் பார்த்தான். அவனது உதடுகளில் அதே கொடூரமான, உறைந்துபோனப் புன்னகை பூத்தது!

தன் உடம்பில் பாய்ந்திருந்த தோட்டாக்களின் வலியைப் பொருட்படுத்தாமல், தன் கடைசிச் சொட்டு உயிர் பலத்தையும் திரட்டி… ரோலக்ஸ் பாய்ந்து எழுந்தான்!

ஷர்மா அதிர்ச்சியில் உறைந்துபோகும் முன்… ரோலக்ஸ் அவனது தொண்டையைப் பிடித்து ஓங்கி தூணில் மோதினான்!

க்ராக்!.. எனக் ஷர்மாவின் எலும்பு முறியும் சத்தமே அந்த வெளியே கேட்டது, ஷர்மாவின் துப்பாக்கியைப் பிடுங்கி, அவனது வாய்க்குள்ளேயே அதைத் திணித்தான்!

ரோலக்ஸின் கண்கள் ஷர்மாவின் ஆன்மாவைச் சுட்டெரித்தன…. “பாங்…!”

ஷர்மாவின் மண்டை ஓடு பிளந்து, அவனது பிணம் கப்பலின் ஓரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டு, ஆழமானக் கடலுக்குள் பிணமாக மிதந்தது!

மீதமிருந்த சில கருப்பு உடை வீரர்களையும், ரோலக்ஸ் தன் வெறும் கரங்களாலேயே கழுத்தை முறித்தும், நெஞ்சில் குத்தியும் கொன்று குவித்து… கப்பலின் விளிம்பில் இருந்து கடலுக்குள் வீசினான்!

சில நிமிடங்களில்… அந்த பிரம்மாண்டச் சொகுசுக் கப்பல், நூற்றுக்கணக்கான பிணங்களும் ரத்த ஆறுமாக மாறியது.

வந்த எதிரிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். அவர்களின் அடையாளமே இல்லாத அளவுக்குக் கடலில் பிணங்களாக மிதந்தனர்.

ஆனால்… அந்த மாபெரும் கடலின் மையத்தில்… கடல் அரசன் ரோலக்ஸும் சரிந்தான்!

அந்த பிரம்மாண்டமான சொகுசுக் கப்பல்… இப்போது ஒரு மிதக்கும் சுடுகாடாக மாறியிருந்தது.

விளக்குகள் பல சேதமடைந்து விட்டு விட்டுப் பிரகாசித்தன. கப்பலின் பனி வீசும் மரத் தளமெங்கும் ரத்தம் உறைந்து, காய்ந்த சிவப்பு வண்ணமாக மாறிக் கிடந்தது. சுற்றிலும் துப்பாக்கிக் குண்டுகளின் எச்சங்களும், கிழிந்த ஆடைகளும் கிடந்தன. ரோலக்ஸ் கப்பலின் பிரதான தூணில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தான்.

அவனது வெண்சூட் முற்றிலும் ரத்தத்தில் நனைந்து, அவனது சொந்தக் குருதியாலும் எதிரிகளின் குருதியாலும் நனைந்திருந்தது. அவனது மார்பில் இருந்தும், விலாவில் இருந்தும் ரத்தம் சொட்டுச் சொட்டாகத் தரையில் வடிந்து கொண்டிருந்தது.

அவனது மூச்சு மெதுவாகக் குறைந்து கொண்டே வந்தது. அவனது கண்கள் அரை பாதியாக மூடின. உயிருக்குப் போராடும் அந்த இமயத்தின் முகம்… மரணத்தின் அமைதியைத் தழுவத் தொடங்கியது.

மயூரா, தன் பிஞ்சு மகன் சாருவை மடியில் கிடத்தியபடி, தவழ்ந்து வந்து ரோலக்ஸின் அருகில் அமர்ந்தாள்.

“ரோலக்ஸ்… கண்ணைத் திற ரோலக்ஸ்! என்னைப்பார்!” மயூரா சைகையிலும், மெல்லியக் கதறலிலும் அழத் தொடங்கினாள். அவளது கண்ணீர் ரோலக்ஸின் ரத்தம் தோய்ந்தக் கன்னங்களில் விழுந்தது.

சாரு தன் தந்தையின் பிஞ்சுக் கரங்களைப் பிடித்துக் கொண்டு, “அப்பா… அப்பா…” என்று அழுதுகொண்டிருந்தான்.

ரோலக்ஸ் மெதுவாகக் கண்களைத் திறந்தான். தன் மனைவியையும், தன் பிஞ்சு மகனையும் பார்த்தான். அவனது ரத்தம் தோய்ந்த விரல்கள் மெதுவாக உயர்ந்து, சாருவின் தலையையும் மயூராவின் கன்னத்தையும் தொட்டன.

அவனது உதடுகளில் ஒரு மெல்லிய, நிறைவான புன்னகை பூத்தது. தான் தன் குடும்பத்தைக் காப்பாற்றிவிட்டோம் என்ற மாபெரும் திருப்தி அவனது கண்களில் மிளிர்ந்தது.

வெளியே பனிக்காற்று கொடூரமாக வீசியது.

நடுக்கடலில், அந்த மிதக்கும் சுடுகாட்டுக்கு நடுவே… உதவிக்கு எவனாவது வரமாட்டானா என்று மயூரா தன் குழந்தையைக் கட்டிப்பிடித்தபடி, கண்ணீருடன் நடுங்கிக்கொண்டிருந்தாள்.

ரோலக்ஸின் மூச்சு மெதுவாக ஒடுங்கிக் கொண்டிருந்தது. அரபிக் கடலின் அலைகள்… தன் சக்கரவர்த்தியின் இறுதிக் கணங்களைக் கண்டு மெளனமாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன!

வேட்டை தொடரும் ..⚓

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!