Rolex 58

58

ஸ்காட்லாந்தின் பிரம்மாண்டமான பனிமலை உச்சி.

சுற்றிலும் பச்சைப் பசேல் எனப் படர்ந்திருந்த மரக்கூட்டங்கள், மேகங்களைத் தொட்டு நின்ற பனிப்பாறைகள், கீழே ஆர்ப்பரிக்கும் அட்லாண்டிக் பெருங்கடலின் கரிய அலைகள்… அந்த மாபெரும் இயற்கை ஓவியத்தின் நடுவே, ஒரு பிரம்மாண்டமான மரப் பண்ணை வீடு கம்பீரமாக வீற்றிருந்தது.

வீட்டின் திறந்தவெளி பால்கனியில், மர நாற்காலியில் அமைதியாக அமர்ந்திருந்தான் ரோலக்ஸ்.

அவனது தூய வெண்ணிறச் சட்டை பனிக்காற்றில் லேசாக அசைந்தாட, அவனது கண்கள் கடலின் ஆழமான பரப்பை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தன. அங்கே கடலின் மையத்தில் மிதந்து கொண்டிருந்த எட்வர்டின் மாபெரும் சரக்குகப்பலில் இருந்து, சிறிய படகுகள் வழியே அரிய ரகசியப் பெட்டிகளைத் தொழிலாளர்கள் கரைக்கு எடுத்துச் செல்லும் காட்சிகள் அவனது கண்களில் மின்னின.

ஆனால், அவனது மனம் அந்தக் காட்சியில் இல்லை. கடந்த காலத்தின் ரத்தம் தோய்ந்த நினைவுகள், வஞ்சகத் துரோகங்கள், நடுக்கடலின் மரணப் போர்கள் என அத்தனை நினைவுகளும் அவனுள் அலையடித்துக் கொண்டிருந்தன.

திடீரென, ஒரு சிறிய பிஞ்சுக் கை அவனது சட்டையை இறுகப் பிடித்து இழுத்தது.

“பா… ப்பா… !” என்ற சாருவின் மழலை மொழியும், அவனது பிஞ்சு விரல்களின் தீண்டலும் ரோலக்ஸைக் கடந்த கால நினைவுகளிலிருந்து சட்டென நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தன.

ரோலக்ஸின் முகத்திலிருந்த கொடூரமான மாஃபியா சாயல் நொடியில் மறைந்தது. அவனது உதடுகளில் ஒரு தாய்மை கலந்த அசுரப் புன்னகை பூத்தது. சாருவை அப்படியே வாரித் தூக்கித் தன் அகலமான மடி மீது அமர்த்திக் கொண்டான். சாரு தன் தந்தையின் தாடியைக் கட்டைவிரலால் தொட்டு விளையாடத் தொடங்கினான்.

அவர்களுக்கு எதிரே, மர மேஜையில் ஆவி பறக்கும் காபி கோப்பையுடன் அமர்ந்திருந்தள் மயூராவின் மான் விழிகள்… பல ஆண்டுகள் கடந்தும் அதே மாறாத காதலோடும், அளப்பரிய ஆராதனையோடும் தன் கணவனை ரசித்துக் கொண்டிருந்தன. காபி கோப்பையைத் தன் உதடுகளோடு சேர்த்துச் சிறிய உறிஞ்சுதலுடன் பருகியபடி, அவளது பார்வை ரோலக்ஸின் கம்பீரமான முகத்திலேயே நிலைத்திருந்தது.

ரோலக்ஸ் சாருவை நெஞ்சோடு அணைத்துக் கொண்டே, தன் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி, கண்ணசைவிலேயே ‘என்ன அப்படிப் பார்க்க?’ என அவளிடம் கேட்டான்

 தன் தலையை லேசாக ஆட்டிய மயூரா, ‘ஒன்றுமில்லை’ என்பது போலச் செல்லமாகப் புன்னகைத்தாள்.

ஆனால், அவளது விழிகள் பொய் சொல்லவில்லை. அவளது மனதிற்குள் காதலின் பெருவெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது.

ஆயிரம் மனிதர்களை ஒரே கையில் வெட்டிச் சாய்க்கும் அசுரன்… உலகத்தையே நடுங்க வைக்கும் நிழல் உலகச் சக்கரவர்த்தி… இன்று தன் பிஞ்சு மகனை மடியில் வைத்துக்கொண்டு, ஒரு அமைதியான குடும்பத் தலைவனாகத் தன் முன்னே அமர்ந்திருப்பதை அவளால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை!

அவனது அகன்ற தோள்கள், கூர்மையான நாசி, கம்பீரமான தாடி, அவனது உடலிலிருந்து வீசும் அந்தப் பிரத்யேக ஆண்மையின் வாசனை… இவை அனைத்தும் மயூராவைத் தன் வசமிழக்கச் செய்தன.

‘எத்தனை புயல்கள் வந்தாலும், எத்தனை எதிரிகள் சூழ்ந்தாலும்… இந்த மார்பில் சாய்ந்து கொண்டால் உலகத்தின் எந்த ஆபத்தும் என்னை நெருங்க முடியாது’ என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவளுக்குள் மலர்ந்தது. அவளது பார்வையில் இருந்த அந்த ஆழமான காதல், அந்தப் பனிமலைக் குளிரையும் மீறி அங்கே ஒரு கதகதப்பானக் காதல் காவியத்தை எழுதிக்கொண்டிருந்தது.

அப்போது, பண்ணை வீட்டின் கூழாங்கல் பாதையில் ஒரு கருப்பு நிறச் சொகுசு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

காரின், “ஸ்க்ரீச்!.. ” என்ற சத்தம் கேட்டதும், மயூரா பால்கனி சுவரோரம் வந்து எட்டிப் பார்த்தாள். அவள் பார்ப்பதைக் கண்ட ரோலக்ஸும் தன் பார்வையை வீட்டின் நுழைவாயிலை நோக்கித் திருப்பினான்.

காரின் கதவு திறக்கப்பட்டு, ஒரு நபர் வெளியே இறங்கினான். அவன் வேறு யாருமில்லை… காலையில் அவர்களை இந்த பண்ணை வீட்டில் பத்திரமாகக் கொண்டு வந்து விட்ட எட்வர்டின் முக்கிய நம்பிக்கைக்குரிய ஆள்!

அவனைக் கண்டதும், ரோலக்ஸ் தன் தலை அசைவால் ‘மேலே வா’ என்று சைகை செய்தான்.

அவனும் தன் முகத்தில் ஒரு மரியாதையானச் சிரிப்பை ஏந்தியபடி பால்கனியை நோக்கி விரைந்து வந்தான். அவர்கள் அருகே வந்த அவனுக்கு, மயூரா உபசரிப்போடு மற்றொரு கோப்பையில் சூடான காபியை ஊற்றிக் கொடுக்க முன்வந்தாள்.

ஆனால், அவன் தன் கைகளை மெதுவாக உயர்த்தி, “No.. please.. Thanks,” என்று மறுத்தான்.

பிறகு, ரோலக்ஸின் பக்கம் திரும்பி, வார்த்தைகள் இன்றித் தன் கரங்களின் சைகையினாலும், அவசரமான முக பாவனையினாலும், ‘sir… எட்வர்ட் உங்களை உடனே அழைத்துக் கொண்டு வரச் சொன்னார். ஏதோ மிக முக்கியமான, அவசரமான விஷயம் பேச வேண்டும்!’ என கொண்டு வந்த செய்தி சொன்னான்.

அவனது பதற்றமானக் கண்களும், அவசரமானச் செயல்களும் அங்கே ஏதோ ஒரு பெரிய விஷயம் காத்திருக்கிறது என்பதை உணர்த்தின.

ரோலக்ஸ் நொடியும் தாமதிக்கவில்லை, சாருவை மெதுவாக மயூராவின் கரங்களில் ஒப்படைத்தான். மயூராவின் நெற்றியிலும், சாருவின் மென்மையான கன்னத்திலும் தன் காதல் தோய்ந்த இறுக்கமான முத்தத்தைப் பதித்தான்.

சாருவின் தலையைக் கோதிவிட்டு, மயூராவைப் பார்த்துச் சைகையில், ‘நான் சீக்கிரம் வந்துவிடுகிறேன்… பத்திரமாக இருங்கள்.’  என்றான் 

பிறகு, எட்வர்டின் ஆளுடன் அந்த மரப் படிக்கட்டுகளில் இறங்கி, காரை நோக்கி நடந்தான்.

மயூரா பால்கனி சுவரில் சாய்ந்தபடி, ரோலக்ஸ் காரில் ஏறி அந்தப் பனிப்பாதையில் மறைந்து செல்லும் வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

கார் மெதுவாகப் பனிமூட்டத்திற்குள் மறைந்தது.

மயூரா தன் மகனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு, அந்த ஸ்காட்லாந்து மலையின் எழில் கொஞ்சும் இயற்கைக் காட்சியையும், அட்லாண்டிக் கடலின் அழகையும் ஆழ்ந்து ரசித்தாள். அவளது உதடுகளில் ஒரு நிம்மதியானப் புன்னகை தவழ்ந்தது.

“கடவுளே… இத்தனை வருடப் போராட்டத்துக்கு அப்புறம், இவ்வளவு அழகான, அமைதியான ஒரு வாழ்க்கை எங்களுக்குக் கிடைச்சிருக்கு. இரத்தம், துப்பாக்கி, மரணம்னு வாழ்ந்த என் புருஷனுக்கு இந்த இயற்கையான சூழ்நிலையில ஒரு நிம்மதியான வாழ்க்கை அமைஞ்சிருச்சு. இனிமே நாம இந்த வாழ்க்கையை எந்தப் பிரச்சனையும் இல்லாம தொடர்வோம்… என் சாருவும், ரோலக்ஸும் என் கூடவே சந்தோஷமா இருந்தா அதுவே எனக்குப் போதும்…” என்று தனக்குள்ளேயே நினைத்துக் கொண்டு பெருமூச்சு விட்டாள்.

ஆனால்…

பவளப் பாறைகளுக்கு அடியில் ஒளிந்திருக்கும் சுறா மீன்களைப் போல… அந்த அமைதியானப் பனிமலைக்கு அடியில் ஒரு மாபெரும் ரத்தப் புயல் உருவாகிக் கொண்டிருப்பதை மயூரா கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை!

அவள் நினைத்தது போல இது ஒரு புதிய அமைதியான வாழ்க்கையின் தொடக்கம் அல்ல…

எட்வர்ட் அழைத்தது ஒரு சாதாரண சந்திப்பிற்கு அல்ல… எதற்காக ரோலக்ஸ் தன் வாழ்நாளை அர்ப்பணித்தானோ, எந்த ஆதி ரகசியம் அவனைத் தேடி வந்ததோ… அந்தப் பிரம்மாண்டமானச் சதியின் இறுதி நேரத்துக்காக அங்கே காத்துக் கொண்டிருந்தது!

காரில் அமைதியாகச் சென்று கொண்டிருந்த ரோலக்ஸின் கண்கள், ஜன்னலுக்கு வெளியே அடர்ந்து படர்ந்திருந்த இருண்ட பனிமூட்டத்தை ஊடுருவிப் பார்த்தன.

அவனது ஆறாவது அறிவு உரக்கச் சொன்னது, ‘வேட்டை இன்னும் முடியவில்லை… அசுரன் இன்னும் தன் ஆயுதத்தைக் கீழே வைக்க வேண்டிய நேரம் வரவில்லை!’

மர்மத்தின் கதவுகள் திறக்கப்படும் அந்த ஆபத்தான நொடியை நோக்கி… ரோலக்ஸின் வாகனம் அதிவேகத்தில் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது!

 

மறுபக்கம் .…

விசாகப்பட்டினத் துறைமுகத்தை ஒட்டி அமைந்திருந்த சந்துருவின் தற்காலிக இல்லத்தில் பேரமைதி சூழ்ந்திருந்தது.

வெளியே வங்கக் கடலின் அலைகள் சீற்றத்துடன் கரையை மோதி உடையும் சத்தம் இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டிருந்தது. அறையின் ஜன்னல் வழியே வீசிய உப்புக்காற்று, அங்கிருந்த திரைச்சீலைகளை மெதுவாக அசைத்தது.

அறையின் நடுவே அமைந்திருந்த கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தான் சந்துரு. அவனது வலது தோளிலும், முதுகு பகுதியிலும் பலத்த குண்டடி பட்டதற்கான தடிமனான வெள்ளைக் கட்டுகள் போடப்பட்டிருந்தன. மருந்துகளின் நெடி அந்த அறை முழுவதையும் ஆக்கிரமித்திருந்தது.

சந்துருவின் கண்கள் சீற்றத்துடன் கூரையைப் பார்த்துக்கொண்டிருந்தன. அவனது நெஞ்சில் கோபமும் பொறுமையின்மையும் அனலாகக் கொதித்துக் கொண்டிருந்தன.

தமிழ்நாட்டின் வலம் வந்த நேர்மையான காவல் அதிகாரி அவன். விசாகப்பட்டினம் வரை அவன் துரத்தி வந்த ஒரே இலக்கு, நிழல் உலகத்தைச் தன் விரல் நுனியில் ஆட்டிப்படைக்கும் ‘கடல் அரசன்’ ரோலக்ஸ்!

அவனைக் சந்தித்து, அவனது அசுரச் சாம்ராஜ்யத்தைச் சுக்குநூறாக உடைக்க வேண்டும் என்ற ஒரே வெறியோடு வந்தவனுக்கு, எதிரிகளின் திடீர் தாக்குதலில் குண்டடி பட்டு இப்படி ஒரு கட்டிலில் கோழையைப் போலப் முடங்கிப் படுத்துக் கிடப்பது மரண வேதனையைத் தந்தது.

“இல்லை… என்னால் இப்படி அமைதியா படுத்துட்டு இருக்க முடியாது! ரோலக்ஸ் வெளிய எங்கோ சுதந்திரமா உலவிக்கிட்டு இருக்கான்… நான் இங்க நாலா பக்கமும் சுவர பார்த்துட்டுப் படுத்துட்டு இருக்கேனா?” என்று தனக்குள்ளேயே சீறினான்.

சந்துரு தன் பற்களை நறநறவெனக்டித்தபடி, கட்டிலைப் பிடித்துக் கொண்டு மெதுவாக எழ முற்பட்டான். உடலின் காயங்களிலிருந்து கடும் வலி உயிரைப் பிழிந்தது. அவனது நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பின. ஆடை முழுவதும் கட்டுப்போட்ட உடலோடு, வேதனையைக் தாங்கிக்கொண்டு தன் கால்களைத் தரையில் ஊன்றினான்.

அதே விநாடியில், அறையின் பக்கவாட்டிலிருந்த சமையலறையிலிருந்து, தட்டில் சூடான காலை உணவை ஏந்தியபடி வெளியே வந்த யாழினியின் பார்வையில், காயங்களோடு அவசர அவசரமாகக் கட்டிலிலிருந்து எழ முயலும் சந்துரு விழுந்தான்.

அவளது கையிலிருந்த உணவுத் தட்டு மேஜையின் ஓரத்தில் பலத்த சத்தத்துடன் வைக்கப்பட்டது!

“சந்துரு! என்ன இது?!” என பதைபதைப்புடன் கத்தியபடி ஓடி வந்த யாழினி, சந்துருவின் இடது தோளைப் பிடித்துப் பின்னோக்கித் தள்ள முயன்றாள். அவளது கண்களில் பயமும் கண்ணீரும் முட்டி நின்றன.

“என்ன பண்றீங்க சந்துரு? டாக்டர் உங்களை அசைக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க! உடம்புல ரெண்டு இடத்துல குண்டு பாய்ஞ்சிருக்கு… தையல் பிரிஞ்சா என்ன ஆகிறது? ஏன் இப்படிச் சின்னப் பிள்ளை மாதிரி பிடிவாதம் பண்றீங்க? முதல்ல படுங்க!” என்று கதறினாள்.

சந்துரு அவளது கரங்களை மெதுவாக விலக்க முயன்றான். அவனது முகத்தில் வீரியமும் பிடிவாதமும் தெறித்தன. “என்னை விடு யாழி! தயவுசெஞ்சு என்னைத் தடுக்காதே… நான் இங்க வந்த வேலை இன்னும் முடியல! நான் இப்போவே துறைமுகத்துக்குப் போயாகணும்!”

வேகமாக அவனது மார்பில் கை வைத்துத் தடுத்த யாழினி, “”சந்துரு, உங்களுக்கு அறிவு இருக்கா இல்லையா, வெளியே உங்களைக் கொல்றதுக்கு ஒரு கூட்டமே அலைஞ்சிட்டு இருக்கு! இந்த நிலைமையில நீங்க வெளியே போனீங்கன்னா உங்க உயருக்கே ஆபத்து! என்னை மீறி நீங்க இந்த அறையை விட்டு வெளியே போகக் கூடாது!” அவளது குரல் அழுகையில் உடைந்தாலும், அவனைக் காப்பாற்றும் பிடிவாதம் அவளிடம் அதிகமாக இருந்தது.

“யாழி! புரிஞ்சுக்கோ… என்னை இந்த நிலைமையில ஆக்குனவன் ரோலக்ஸ் இல்லை! அது எனக்கு நல்லா தெரியும், ஆனா அந்த ரோலக்ஸைப் பிடிக்காம நான் இந்தச் நகரத்தை விட்டு நகர மாட்டேன்! ஒரு கோழையைப் போல இந்தச் நாலு சுவருக்குள்ள படுத்துக்கிட்டு உயிரைக் காப்பாத்திக்க நான் இங்க வரல!” என்று சந்துரு சிங்கம் போலக் கர்ஜித்தான்.

இருவருக்கும் இடையே உணர்ச்சிப்பூர்வமான வாக்குவாதம் தீவிரமடைந்து கொண்டிருந்த அந்த நேரத்தில்.. அமைதியாக வீட்டிற்குள் நுழைந்தான் கணேஷ்.

அறையிலிருந்து வந்த சத்தத்தைக் கேட்டு விரைவாக உள்ளே வந்தவன், சந்துரு எழுந்து நிற்பதையும், யாழினி அவனைப் போராட்டத்துடன் தடுத்து நிறுத்துவதையும் பார்த்தான். 

“சந்துரு! என்ன இது லூசுத்தனம்?!” என கணேஷ் ஓடிச் சென்று சந்துருவின் வலது கரத்தை பலமாகப் பிடித்தான்.

“டேய் என்ன டா பிரச்சனை உனக்கு? ஏன் இப்படிப் பைத்தியக்காரத்தனமா நடந்துக்கிற?” என்று அதட்டினான்.

கணேஷின் முகத்தை நேருக்கு நேர் பார்த்த சந்துருவின் கண்களில் ரத்தம் தேங்கியிருந்தது. “கணேஷ்! இதுக்கு மேல என்னால அமைதியா இருக்க முடியாதுடா! எனக்கு அந்த ரோலக்ஸைப் பார்த்தே ஆகணும்! அவன் எங்கே இருக்கான்னு உனக்குத் தெரியும் தானே? அவனோட ரகசியத் தளங்கள் எங்கே இருக்குன்னு எனக்குக் காட்டு! நான் இப்போவே போறேன்!” என்று அடாவடி செய்தான்.

கணேஷ் சந்துருவை பலவந்தமாகத் தள்ளி, கட்டிலின் அருகில் நிறுத்தினான். அவனது கண்கள் கோபத்தில் சிவக்க. “அப்படி என்னடா உனக்கு பிடிவாதம்?”

“ரோலக்ஸைப் பிடிக்கிறது இருக்கட்டும்… முதல்ல உன் உடல்நிலையைப் பார்! தோள்ல சுடப்பட்டு ரத்தம் சொட்டச் சொட்ட நிக்கிற! இந்த நிலைமையில நீ ரோலக்ஸ் முன்னாடி போய் நின்னா ? … அவன் தன் ஒற்ற விரலால் உன்னைத் தள்ளிட்டுப் போயிடுவான்டா! முதல்ல உன் உடம்புல பலம் வேணும். இப்போ நீ இறங்குறது வீரம் இல்லை… முட்டாள்தனம்!” 

“எனக்குப் பலத்தைப் பத்தி கவலை இல்லை கணேஷ்! அந்த ரோலக்ஸ் இந்த நாட்டின் இல்லையென்றாலும் எங்கோ ஒரு நாட்டில் அவன் மிதிக்கிறான்! அவன் ஒரு அசுரன்! என் பதவியைப் பணயம் வச்சு இங்க வந்ததுக்கு காரணமே ரோலக்ஸ்  பார்க்கத்தான் ! குண்டடி பட்டாலும் சரி, என் உயிர் போனாலும் சரி… அவனை நேருக்கு நேர் பார்த்து பேசாம இந்த சந்துரு அடங்க மாட்டான்!” என்றான் 

யாழினியும் கணேஷும் எவ்வளவோ தடுத்தும், சந்துரு அவர்களின் வார்த்தைகளைக் கேட்கும் மனநிலையில் இல்லை. அவனது பிடிவாதமும், வெறியும் அவனது வலியையும் மீறி மேலோங்கியிருந்தன.

“என்னை யாரும் தடுக்காதீங்க!” என சந்துரு தன் முழுப் பலத்தையும் திரட்டி, தன் தோளைப் பிடித்திருந்த கணேஷையும், தன் கைகளைப் பற்றியிருந்த யாழினியையும் ஒரே தள்ளாகத் தள்ளிவிட்டு முன்னால் நகர்ந்தான்.

யாழினி நிலைதடுமாறிச் சுவரோரம் போய் விழ, கணேஷ் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தான்.

சந்துரு தன் காயங்களின் வலியைப் பொறுத்துக் கொண்டு, கதவை நோக்கி வேகமாகக் காலடிகளை எடுத்து வைத்தான். 

ஆனால், அவன் கதவை நெருங்கிய அதே விநாடியில்…

கதவின் மறைவில், நெடுநேரமாக அசைவற்று நின்று கொண்டிருந்த ஒரு நிழல்  மெதுவாக வெளிச்சத்திற்கு வந்தது!

அந்த நிழல் மெல்ல அசைந்து, பிரதான வாசலின் நடுவே வந்து கம்பீரமாக நின்றது.

அங்கே… கரிய நிற உடையில், இடுப்பில் தொங்கிய துப்பாக்கியோடு, கூர்மையானப் பார்வையுடன் நின்று கொண்டிருந்தான் பைரவன்!

அவனைக் கண்டதும் முன்னோக்கிப் பாய்ந்த சந்துருவின் கால்கள் அப்படியே தரைக்கட்டுப் பட்டது போல உறைந்து நின்றன!

அவனது கண்கள் அதிர்ச்சியில் அகல விரிய! தொண்டைக்குள் வார்த்தைகள் அடைத்துக் கொண்டன!பைரவனை, எதிர்பார்க்காத சந்துரு… அதிர்ச்சியின் உச்சத்தில் அவனை வெறித்துப் பார்த்தான்!

வேட்டை தொடரும் ..⚓

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!