Rolex 63

63

விசாகப்பட்டினத் துறைமுகத்தின் அந்த இல்லத்தில் நிலவிய உறைந்த அமைதி, பைரவனின் குரலால் மேலும் தீவிரமடைந்தது.

அறையின் ஒரு மூலையில், சுவரில் சாய்ந்துகொண்டு, கைகளைக் கட்டியபடி நின்றிருந்த பைரவணின் கூர்மையானக் கண்கள் சந்துருவின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருந்தன.

ஸ்காட்லாந்து பனிமலையிலிருந்து ரோலக்ஸ் அனுப்பிய அந்த அதிமுக்கிய ரகசியத் தந்திச் செய்தியின் ஒவ்வொரு வார்த்தையையும் பைரவன் அணுவணுவாக விவரித்து முடிக்க… அதைக் கேட்டுக்கொண்டிருந்த சந்துருவின் கண்கள் பேரதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் அகல விரிந்தன!

சந்துரு தன் கன்னங்களில் வற்றிப்போயிருந்த கண்ணீர்த் தடங்களை மெதுவாகத் துடைத்துக் கொண்டான்.

அவனது முகத்திலிருந்த பலவீனமும் கதறலும் நொடிப் பொழுதில் மறைந்தன. காயங்களின் கடும் வலியையும் மீறி, தன் முழுப் பலத்தையும் திரட்டி கட்டிலிலிருந்து கம்பீரமாக நிமிர்ந்து எழுந்து நின்றான். ஒரு நேர்மையான காவல் சிங்கமான சந்துருவின் பழைய கம்பீரமும் வீரியமும் அவனது முகத்தில் மீண்டும் சுடர்விட்டு எரிந்தன.

பைரவனை நேருக்கு நேராக, கூர்மையாக ஊடுருவிப் பார்த்தவன், “இப்போ என்ன பண்ணணும் சொல்லு பைரவா? ரோலக்ஸ் என்ன கட்டளை சொல்லியிருக்கான்?” என்ற சந்துருவின் குரல் அனலாக வீசியது. 

சந்துருவின் அருகே வந்த பைரவன், அவனது தோளைத் தொட்டு அழுத்தமான குரலில், “ரோலக்ஸ் அனுப்புன தந்தி செய்தி இதுதான் சந்துரு… டெல்லியில நடக்கப்போற அந்த சர்வதேச மந்திரி கூட்டத்தில், மத்திய அமைச்சர் சௌத்ரி அரங்கேற்ற இருக்கிற அந்த கொடூரமான மனித வெடிகுண்டு திட்டத்தை இனி உன்னுடைய அதிகாரப் பூர்வ போலீஸ் பதவியைப் பயன்படுத்தி நீதான் தடுத்து ஆகணும்! தேவைப்பட்டால்… அந்தத் துரோகியை ஸ்பாட்லேயே என்கவுண்டர் பண்ணிடு !”

“இந்த வேலையை, உன்கிட்ட கொடுத்திருக்கக் காரணம்… இந்த சர்வதேசச் சதியை உன்னால் மட்டுமே வெற்றிகரமாக முடிச்சுக்காட்ட முடியும்ங்கிற அசைக்க முடியாத நம்பிக்கையில்தான்! ரோலக்ஸ் இதை உன்னை முடிக்கச் சொல்லியிருக்கான் சந்துரு!” என்ற பைரவனின் வார்த்தைகள் சந்துருவின் நரம்புகளில் தீயைப் பாய்ச்சவும், தன் இரும்புக் கரங்களை இறுக மூடி, திடமான முடிவுடன் நின்றவன்..

“இது வெறும் ரோலக்ஸோட கட்டளை மட்டும் இல்லை பைரவா… இந்த நாட்டோட எதிர்காலம்… என் தாய்நாட்டின் பாதுகாப்பு… காவல்துறையில இருக்கிற என்னோட புனிதமான கடமையும் இதுல இருக்கு! என்னுடைய அதிகாரப்பூர்வ பதவியைப் பயன்படுத்தி, எப்பேர்ப்பட்ட ஆபத்து வந்தாலும் இதைத் தடுத்தே தீருவேன்! தேவைப்பட்டா… அந்த அதிகாரப் பிசாசை, துரோகி சௌத்ரியை உயிரோட கொல்றதுல எந்தத் தப்பும் கிடையாது!” 

“கண்டிப்பா நான் டெல்லிக்குப் போறேன்! இப்போவே கிளம்பி டெல்லிக்கு போறேன்… அதுக்குத் தேவையான அனைத்துக் கட்டுப்பாட்டு ஃபார்மாலிட்டீஸையும் இப்போவே முடிச்சிட்டுப் புறப்படுறேன்!”

என சந்துரு தன் சட்டையைச் சரி செய்தபடி கதவை நோக்கி வேகமாக நகர முயன்ற நொடி…  பைரவனின் தடிமனான இரும்புக் கை, சந்துருவின் வலது பக்கத் தோளைப் பற்றி நிறுத்தி, அவனது கண்களை அழுத்தமாக பார்த்தவன்…

“நானும் உன் கூட வர்றேன் சந்துரு!” என்ற பைரவனின் கண்கள் சீற்றத்தால் மிளிர்ந்தன.

“இது ரோலக்ஸ் கொடுத்த கட்டளை! இதை உன்னோடு சேர்ந்து நிறைவேற்றுவது என் கடமை!” என்றான் 

அதே விநாடியில்… மற்றுமொரு பக்கம் நின்று கொண்டிருந்த கணேஸும் முன்வந்து, சந்துருவின் இடது பக்கத் தோளில் தன் கையை வைத்தான்.

“நானும் வர்றேன் சந்துரு! இதை நாம மூணுபேரும் சேர்ந்து பண்ணலாம்! என் பதவியின் மூலமாகவும் நம்மால் டெல்லி சர்வதேச பாதுகாப்பு வளையத்திற்குள்ளே சுலபமாக நுழைய முடியும்!” என்ற கணேஷின் குரலில் அசைக்க முடியாத உறுதி தெரிந்தது. 

சந்துரு தன் இரு பக்கமும் நின்றிருந்த அந்த இரு மாபெரும் வீரர்களையும் பார்த்தான். ஒரு பக்கம் நிழல் உலகத்தின் அசுர தளபதி பைரவன்… மறுபக்கம் தன் நண்பனும் நேர்மையான கஸ்டம்ஸ் அதிகாரியுமான கணேஷ்!

சந்துரு நொடியும் தாமதிக்காமல், தன் தொலைபேசியை எடுத்து, தனக்கு மிகவும் நெருக்கமான சுங்கத்துறை அமைச்சர் அர்ஜுன் தேவராஜிற்கு அவசர அழைப்பை ஏற்படுத்தி, நிலைமையை விவரித்தான்.

மறுமுனையில் விஷயத்தைக் கேட்ட அர்ஜுன் தேவராஜ் அதிர்ச்சியடைந்தார்.

“சந்துரு! இது உண்மையிலேயே உறுதியானத் தகவல் தானா? டெல்லி மத்திய அமைச்சருக்கு எதிராகப் பேசுற… ஆதாரம் ஏதேனும் இருக்கா?” என்று பதற்றத்துடன் கேட்டார்.

சந்துருவின் மனதில் ரோலக்ஸின் அசைக்க முடியாத பிம்பம் நிழலாடியது, “சார்! இது எனக்கு ரொம்பவே நம்பகத்தன்மையான இடத்திலிருந்து வந்த தகவல்! இதில் எந்தச் சந்தேகமும் இல்லை… 100% இது உண்மை!” என்று உறுதியளித்தான்.

ஒரு கணம் யோசித்த, அர்ஜுன் தேவராஜ், “அப்படினா சந்துரு… நானும் உடனே டெல்லிக்கு புறப்படுறேன்! நேரடியாப் பிரதமமந்திரியைச் சந்தித்து விஷயத்தைக் கூறி, நடக்கவிருக்கும் இந்த சர்வதேச மந்திரி கூட்டத்தை உடனே ரத்து செய்ய முயற்சிக்கிறேன்!” என்றார்.

அவசரமாக தடுத்த சந்துரு, “வேண்டாம் சார்!, இந்த கூட்டம் கண்டிப்பா நடந்தாகணும்! இப்போ இந்த கூட்டத்தை நிறுத்தினா… அந்த நரி சௌத்ரி தப்பிச்சிடுவான்! எதிரியை எப்பவும் தப்பிக்க விடக் கூடாது! அவன் வீசிய வலையிலேயே அவனைச் சிக்க வைக்கணும்! அதனால் கூட்டம் கண்டிப்பா நடக்கணும்… அவனுடைய அந்த மனித வெடிகுண்டு திட்டமும் நடக்க முயற்சி செய்யட்டும்! ஆனா, சௌத்ரியோட பிளான் வெற்றி அடைய நான் விடமாட்டேன்! அங்கே வைத்து அவனை ரெட்-ஹேண்டடா பிடிப்பேன்… இதுக்கு உங்களுடைய சிறப்பு அனுமதி எனக்கு வேணும் சார்!”

சந்துருவின் அசாத்தியமான மாஸ்டர் பிளானைப் புரிந்து கொண்ட அர்ஜுன் தேவராஜ், அவனது துணிச்சலைப் பாராட்டி, டெல்லி சர்வதேச மண்டலத்திற்குள் நுழைவதற்கான சிறப்பு ஆணை வழங்கி உத்தரவிட்டார்!

அடுத்த கணமே டெல்லி நோக்கிப் புறப்பட ஏற்பாடுகள் மின்னல் வேகத்தில் நடந்தன. தங்கள் அதிகாரப்பூர்வ போலிஸ் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி சந்துருவும் கணேஷும் டெல்லி சிறப்பு பாதுகாப்புப் பிரிவுக்குள் நுழையத் தயாராகினர்.

அதே நேரத்தில், பைரவனை உள்ளே அழைத்துச் செல்ல சந்துரு ஒரு ரகசியத் திட்டம் தீட்டினான். தன்னுடைய சிறப்பு உதவியாளராக, ஒரு போலி S.I சீருடையில் பைரவனை உடைமாற்றச் செய்தான்.

அந்த கம்பீரமான போலிஸ் சீருடையில், தோள்களில் நட்சத்திரங்களோடு நின்ற பைரவன்… ஒரு வேட்டைச் சிங்கத்தைப் போலக் காட்சியளித்தான்!

டெல்லி அரசாங்கம் தன் சிறப்புப் படைகளுக்கும் பிரதமருக்கும் அதிநவீனப் பாதுகாப்புகளையும் ஆயுதங்களையும் தயார் நிலையில் வைத்திருந்தது உண்மைதான்.

ஆனால்… எதிரி இருப்பது அரசாங்கத்தின் உச்சகட்ட பதவியில்! சாதாரணச் சட்ட ஆயுதங்கள் அவனது சதியை எதிர்கொள்ளப் போதாது என்பதை உணர்ந்த கணேஷ், தன் தந்திரத்தைப் பயன்படுத்தினான்.

ரோலக்ஸின் விசாகப்பட்டின ரகசியக் கோட்டையிலிருந்து… நிழல் உலகத்திற்கே உரித்தான சில அதிநவீன, சத்தமில்லாமல் உயிரைக் குடிக்கும் லேசர் ரகத் துப்பாக்கிகளையும், கவசங்களை ஊடுருவும் அதிநவீன ரகசிய ஆயுதங்களையும் மூவரும் கைகளில் ஏந்திக் கொண்டனர்!

அந்த ஆயுதங்கள்… தங்கள் சுயநலத்திற்காகவோ, தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவோ ஏந்தப்பட்டவை அல்ல!

இந்தியத் திருநாட்டையும், நாட்டின் மாபெரும் தலைவர்களையும், லட்சக்கணக்கான அப்பாவி மக்களையும் ஆதி பிசாசிடமிருந்து காப்பாற்றுவதற்காக ஏந்தப்பட்ட தர்ம ஆயுதங்கள்!

காயம்பட்ட உடலோடு, நெஞ்சில் தாய்நாட்டைக் காக்கும் சிங்கத்தின் வீரியத்தோடும், கைகளில் அதிகாரப்பூர்வ போலிஸ் பிஸ்டலோடும் நின்றான் சந்துரு, 

போலிஸ் சீருடையில், ரோலக்ஸின் அசைக்க முடியாத விசுவாசத்தோடும், கைகளில் நவீன நிழல் உலக பேராயுதத்தோடும் கம்பீரமாக நிமிர்ந்து நின்ற அசுர தளபதி பைரவன்!

கூர்மையான புத்தியோடும், சண்டைக் கலைகளில் வல்லமையோடும், எந்நேரமும் உயிரைக் கொடுக்கத் தயாராக நின்ற விசுவாசத்தின் அடையாளமாக கணேஷ்!

மூவரும் டெல்லி நோக்கிச் சீறிப் பாயும் சிறப்பு விமானத்தை நோக்கி வேகமாகக் காலடிகளை எடுத்து வைத்தனர்.

டெல்லியின் வான்வெளியில்… வஞ்சமும் துரோகமும் கொண்ட சௌத்ரியின் மாபெரும் மனித வெடிகுண்டு சதி அரங்கேறக் காத்திருக்க… அதை அடியோடு சுக்குநூறாக உடைத்தெறிய, ரோலக்ஸின் முப்படை சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது!

அடுத்த சில மணிநேரங்களில்…

இந்தியத் தலைநகர் டெல்லியின் சர்வதேச மாநாட்டு மையம் ஒரு பிரம்மாண்டமான போர்க்களத்தைப் போலக் காட்சியளித்தது.

இந்தியத் தலைநகரின் மையப்பகுதியில் அமைந்திருந்த அந்த பிரம்மாண்டமான வெளிப்புற மைதானம், அன்று இந்திய அரசியலின் ஆகப்பெரிய அதிகாரக் களமாக மாறியிருந்தது.

மைதானத்தின் நடுவே பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் வண்ணமயமான விளக்குகள் ஒளிர்ந்தன. நாட்டின் பிரதம மந்திரி வருகை தரவிருந்த அந்த மாநாட்டிற்கு, இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகள், சர்வதேசத் தூதர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளமெனத் திரண்டிருந்தனர்.

நாலாபுறமும் உயரமான பல அடுக்குத் தடுப்புகள், மெட்டல் டிடெக்டர்கள், சுழலும் கேமராக்கள், கறுப்பு உடை அணிந்த கமாண்டோக்களின் கண்காணிப்பு எனப் பாதுகாப்பு வளையம் இரும்புக் கோட்டையைப் போல இறுக்கப்பட்டிருந்தது.

ஆனால்… அந்த மாபெரும் இரும்புக் கோட்டைக்குள்ளேயே, இந்திய தேசத்தின் தலையெழுத்தையே மாற்றத் துடிக்கும் ஒரு கொடூரமான மரணச் சதி அமைதியாகப் பின்னப்பட்டுக் கொண்டிருந்தது!

மைதானத்தின் வெவ்வேறு மூலைகளில்… போலிஸ் சீருடையில் உலாவிக் கொண்டிருந்தனர் மூன்று வேட்டைச் சிங்கங்கள்!

மூவரின் உடைகளுக்கடியிலும்… ரோலக்ஸின் ரகசியக் கோட்டையிலிருந்து கொண்டுவரப்பட்ட, லேசர் ரக அதிநவீனத் துப்பாக்கிகள் தயாராக இருந்தன. அவை சட்டத்தின் பாதுகாப்பிற்காக மட்டுமல்ல… தேசத்தைக் காக்கும் தர்மத்திற்காக ஏந்தப்பட்டவை!

ஆனால்… மேடையின் முதல் வரிசையில், உயர் அதிகாரிகளுக்கும் அமைச் சார்களுக்குமானப் பிரத்யேக பளிங்கு இருக்கையில்  அந்தப் பாதுகாப்பு வளையத்திற்குள்ளேயே, அதிகார பீடத்தில் அமர்ந்தபடி கொடூரமானப் புன்னகையோடு வலம் வந்தான் மத்திய அமைச்சர் சௌத்ரி!

வெள்ளை நிறக் கதர் ஆடையில், முகத்தில் எவ்விதச் சலனமும் இல்லாமல், மிகவும் யோக்கியமானவனைப் போல, ஒரு அப்பாவியைப் போலக் காட்சியளித்தான். ஆனால்… அவனது ஆடம்பர ஆடைகளுக்கு அடியில், இடுப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது ஒரு ரகசிய அதிநவீன Hidden Pistol!

அது மட்டுமல்ல… மாநாட்டு மைதானத்திற்கு வெளியில், சுமார் 500 மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பிரம்மாண்டமான கறுப்பு நிற VIP வேனின் உள்ளே, அதிநவீன லாங் ரேஞ்ச் Sniper Rifle துப்பாக்கியுடன் ஒரு கொடூரமானக் கூலிப்படை கொலையாளி தயாராக அமர்ந்திருந்தான்!

அவனது துப்பாக்கியின் லேசர் பார்வை… மேடையில் பிரதம மந்திரி அமரப்போகும் நாற்காலியை நோக்கிச் சரியாகக் குறியை அமைத்திருந்தது.

சௌத்ரி தன் காதில் பொருத்தப்பட்டிருந்த மிகச்சிறிய, கண்ணுக்குத் தெரியாத Airpod வழியே, வேனில் இருந்த அந்த ஸ்னைப்பர் கொலையாளியோடு ரகசியமாகப் பேசிக் கொண்டிருந்தான்.

“ரோஜர்… “பொசிஷன் தயாரா இருக்கா?” சௌத்ரி தன் உதடுகளை லேசாக அசைத்து முணுமுணுத்தான். 

மறுமுனையில் வேனில் இருந்த கொலையாளி, “எல்லாமே தயார், மிஸ்டர் சௌத்ரி! பிரதம மந்திரி மேடைக்கு வந்து மைக் முன்னாடி நின்ன அடுத்த மூணாவது விநாடி… அவரோட மண்டை சிதறும்! துப்பாக்கில சைலன்சர் மாட்டியிருக்கு. சத்தம் கூட வெளியே கேட்காது!”

சௌத்ரி தன் கதர் சட்டையைச் சரிசெய்தபடி கொடூரமானப் புன்னகையைச் சிந்தினான்.

“நல்லது… பிரதமர் கீழே விழுந்ததும், கூட்டத்துல ஒரு பெரிய கலவரம் வெடிக்கும்! அந்த இடைவெளியில மேடையில இருக்கிற மத்த மூத்த தலைவர்களையும் தீர்த்துக்கட்டீடு! அப்புறம் நாட்டின் அடுத்த பிரதமரா நான் அரியணையில உட்காருவேன்!” என்றான் 

அதே நேரத்தில்… சௌத்ரியின் கண்கள் மைதானத்தைச் சுற்றிச் சுற்றி வந்தன. தன் திட்டம் தங்கு தடையின்றி நடக்கிறதா என்று அவன் சாதுரியமாகக் கண்காணித்துக் கொண்டிருந்தான்.

மைதானத்தின் மூன்று வெவ்வேறு கோணங்களில் இருந்து சந்துரு, கணேஷ், பைரவன் மூவரும் சௌத்ரியின் ஒவ்வொரு அசைவையும் ரகசியமாகக் கண்காணித்து முன்னேறிக் கொண்டிருந்தனர்.

சந்துரு தன் காதில் இருந்த ரகசியத் தொடர்புக் கருவி வழியாகப் பேசினான், “பைரவா… கணேஷ்… சௌத்ரியோட ஆட்டம் ஆரம்பிக்கப் போகுது. பிரதமர் மேடைக்கு வர இன்னும் அஞ்சு நிமிஷம் தான் இருக்கு. சௌத்ரியோட முகத்துல ஏதோ ஒரு பெரிய கொடூரத் திட்டம் தெரியுது. அவன் காதுல ஏர்பாட் வச்சு யார் கூடவோ ரகசியமா பேசிக்கிட்டு இருக்கான்!” என்றான்.

மைதானத்தின் கிழக்கு கோபுரத்தின் அருகே நின்றிருந்த கணேஷ், தன் கையில் இருந்த நவீன பைனாகுலரால் மேடையை உற்றுப் பார்த்தான்.

“ஆமாம் சந்துரு! இவன் கையால நேரடியாகச் சுடப் போறது இல்லை… இவனோட பார்வை மைதானத்தோட வெளிப்புறத்தை நோக்கி அடிக்கடி போகுது! வெளியில ஏதோ ஒரு பெரிய சதி நடக்குது!” என்றான் 

அப்போது, போலிஸ் சீருடையில் கூட்டத்திற்கு நடுவே அசுரனைப் போல நடந்து கொண்டிருந்த பைரவன் தன் தடிமனானக் குரலில், “என் ஆட்கள் வெளியில கண்காணிச்சுக்கிட்டு இருக்காங்க சந்துரு… மைதானத்துக்கு வெளியில VIP பார்க்கிங் ஏரியாவுல ஒரு கறுப்பு நிற வேன் சந்தேகத்துக்கு இடமா நிற்குது. அதோட ஜன்னல் கண்ணாடிகள் முழுக்க கருப்பு ஃபிலிம் ஒட்டப்பட்டிருக்கு!” என்றான் 

சந்துருவின் மூளை மின்னல் வேகத்தில் வேலை செய்தது!

“ஸ்னைப்பர்!!” சந்துரு உரக்கக் கத்தினான்.

வேட்டை தொடரும் ..⚓

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!