65
டெல்லி சர்வதேச மாநாட்டு மையத்தில் நிலவிய துப்பாக்கிச் சூட்டின் புகையும் அலறல் சத்தங்களும் மெல்ல மெல்ல அடங்கத் தொடங்கின.
பிரதம மந்திரிக்கு வைக்கப்பட்ட அந்த மாபெரும் கொடூர சதி முறியடிக்கப்பட்ட செய்தி காட்டுத்தீ போல பரவியது. பாதுகாப்புப் படையினரும் சிறப்பு அதிரடிப் படையினரும் மைதானத்தை முழுமையாகத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
பிரதமரின் பிரத்யேகப் பாதுகாப்பு அதிகாரிகள், அவரைப் பாதுகாப்பாக மேடையிலிருந்து அழைத்துச் சென்று, அவசரக் கட்டுப்பாட்டு அறையில் அமர வைத்தனர். அதிர்ச்சியிலிருந்து மெல்ல மீண்ட பிரதமர், தனது உயிரையும் இந்த நாட்டின் மானத்தையும் காப்பாற்றிய அந்த வீரர்களை உடனடியாகச் சந்திக்க விரும்பினார்.
அப்போது, சுங்கத்துறை அமைச்சர் அர்ஜுன் தேவராஜ், சந்துருவையும் கணேஷையும் பிரதமரின் முன் அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார்.
அர்ஜுன் தேவராஜ், “மாண்புமிகு பிரதம மந்திரி ஐயா… இந்த மாபெரும் ஆபத்தை நாம் முறியடித்ததற்கு முழு முதற்காரணம் இதோ என் முன்னால் நிற்கும் இந்த இரண்டு தைரியமிக்க காவல் அதிகாரிகள்தான்! காவல்துறை அதிகாரி ACP சந்துருவும், கஸ்டம்ஸ் அதிகாரி DC கணேஷும்!”
பிரதமர் இருவரையும் கூர்மையாகப் பார்த்தார்.
அர்ஜுன் தேவராஜ் தொடர்ந்தார், “இந்தக் கூட்டம் நடப்பதற்கு முன்பே, மத்திய அமைச்சர் சௌத்ரியின் துரோகத்தையும், அவனது கொடூரமான ஸ்னைப்பர், மனித வெடிகுண்டுத் திட்டத்தையும் பற்றி சந்துரு எனக்குத் துல்லியமானத் ரகசியத் தகவல்களைக் கொடுத்தார். இந்த மாநாட்டை உடனடியாக ரத்து செய்ய நான் நினைத்தேன். ஆனால், ‘கூட்டத்தை ரத்து செய்தால் எதிரி தப்பித்துவிடுவான், அவனை ரெட்-ஹேண்டாடாகப் பிடிக்க வேண்டும்’ என்று சந்துருதான் திட்டம் தீட்டினார்.”
“இவர்களின் துல்லியமான திட்டமிடலாலும், நொடிக்கு நொடி எடுத்த அசாத்தியமான முடிவுகளாலும் தான், பாதுகாப்புப் படைகளின் எண்ணிக்கையை நாம் ரகசியமாக அதிகரித்து, மிகச் சரியான நேரத்தில் அந்த சதியைச் சுக்குநூறாக உடைக்க முடிந்தது. இவர்கள் இருவரும் இல்லையென்றால்… இன்று இந்த தேசம் ஒரு மாபெரும் பேரழிவைச் சந்தித்திருக்கும்!” என முடித்தார்
பிரதமர் நெகிழ்ச்சியோடு எழுந்து நின்று, சந்துரு, கணேஷின் கரங்களைப் பற்றி இறுக்கமாகக் குலுக்கினார்.
“உங்கள் இருவரின் இந்தத் தியாகத்திற்கும், துணிச்சலிற்கும் இந்த பாரத தேசமே கடமைப்பட்டிருக்கிறது. இதற்கான உயரிய தேசிய அங்கீகாரத்தையும், விருதுகளையும் அரசு விரைவிலேயே உங்களுக்குக் வழங்கி கௌரவிக்கும்!” என்று உறுதியளித்தார்.
அப்போது, மேடையின் நடுவே குருதி வெள்ளத்தில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த அந்த வீரனின் உடல் நோக்கி அனைவரின் பார்வையும் திரும்பியது.
பைரவன்… நிழல் உலகத்தில் சர்வதேச மாஃபியாக்கள் அஞ்சிய அந்த அசுரத் தளபதி! ஆனால், அவன் அணிந்திருந்த போலிஸ் சீருடையும், தோளில் இருந்த நட்சத்திரங்களும், நெஞ்சில் பொறிக்கப்பட்டிருந்த “S.I. Bairavan” என்ற அடையாள அட்டையும், அங்கிருந்த அதிகாரிகளுக்கு அவனை ஒரு நேர்மையான காவல் அதிகாரியாகவேக் காட்டியது.
அவன் ஒரு நிழல் உலகத் தாதா என்பதும், கடத்தல் உலகத்தின் முதன்மைப் புள்ளி என்பதும் அங்கிருந்த எந்தவொரு அரசு அதிகாரிக்கோ இல்ல பிரதமருக்குக் கூடவோ தெரியாது!
உண்மையை அறிந்திருந்த துரோகி சௌத்ரியும், அவனது கூட்டாளி ACP சர்மாவும் இப்போது பிணமாகக் கிடந்ததால்… பைரவனின் நிழல் உலக அடையாளம் அந்த இடத்திலேயே புதைக்கப்பட்டுவிட்டது.
சந்துரு தன் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, பிரதமரிடமும் கமிஷனரிடமும் பைரவனுக்கான அதிகாரப்பூர்வத் தியாக அறிக்கையைச் சமர்ப்பிக்க நினைத்தான்,
“ஐயா… இவர் SI. பைரவன். இந்த ரகசிய வேட்டையில் எனக்கு உதவியாளராக, என் நிழலாகச் செயல்பட்ட சிறப்புத் திட்டத்தின் பிரத்யேக அதிகாரி. இந்தத் திட்டத்தின் வெற்றியில் 90% பங்கு இவருடையது தான்! தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல்… உங்களுக்காகவும், நாட்டின் பாதுகாப்பிற்காகவும் பாய்ந்து வந்த இரண்டு குண்டுகளையும் தன் சொந்த மார்பில் ஏந்தி… தன் உயிரைத் தியாகம் செய்துவிட்டார் ஐயா!” என்ற சந்துருவின் குரல் தழுதழுத்தது
சந்துருவின் வார்த்தைகளைக் கேட்ட பிரதமரம் மற்ற உயர் அதிகாரிகள் அனைவரும் நெகிழ்ந்து போயினர்.
பிரதமர் பைரவனின் உடலை நோக்கிச் சென்று, தன் கரங்களைக் கூப்பி தலை வணங்கினார்.
“ஒரு உண்மையான இந்தியக் காவல் அதிகாரியின் தியாகத்திற்கு ஈடு இணையே இல்லை! இந்த நாட்டின் சட்டப்படி, அரசு மரியாதையுடனும் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடனும் இவருக்கான இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும்!” என்று பிரதமர் ஆணையிட்டார்.
சந்துருவும் கணேஷும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
தன் வாழ்நாள் முழுவதையும் அதிகாரப்பூர்வச் சட்டத்திற்கு வெளியே, ஒரு மாஃபியாவாக வாழ்ந்த பைரவனுக்கு… அவன் இறந்த பிறகு, இந்த தேசமே தலைவணங்கி அரசு மரியாதை செலுத்துகிறது என்பதை நினைத்தபோது, அவர்களின் நெஞ்சம் கணத்தது.
மறுநாள் காலை… டெல்லி மயானப் பகுதி ஒரு புனிதமான போர்க்களத்தைப் போலக் காட்சியளித்தது.
காலைச் சூரியனின் இளம் கதிர்கள் பரவிக் கொண்டிருக்க, இந்தியத் தேசியக் கொடியால் போர்த்தப்பட்டிருந்தது பைரவனின் உடல். அவனது கரிய, கரடுமுரடான முகத்தில்… இப்போது ஒருவித தெய்வீக அமைதியும் நிம்மதியும் குடிகொண்டிருந்தன.
காவல்துறையின் பிரத்யேக இசைக்குழுவின் சோகமான பறை ஒலிகள் காற்றில் மிதந்து வந்தன. உயர் காவல் அதிகாரிகள், கமாண்டோக்கள் எனப் பலரும் சீருடையில் வரிசையாக நின்று அஞ்சலி செலுத்தத் தயார் நிலையில் இருந்தனர்.
பைரவனின் சிதைக்கு அருகில் நின்றிருந்த சந்துருவும் கணேஷும்… நண்பனை இழந்த தங்களின் துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுது கொண்டிருந்தனர்.
கணேஷ் பைரவனின் கரங்களை தொட்டுக் கண்ணீர் விட்டான், “பைரவா… உன்னை ஒரு நிழல் உலகப் பிசாசுனு நினைச்சப்போ எல்லாம்… உன் நெஞ்சுக்குள்ள இப்படி ஒரு அசைக்க முடியாத தேச பக்தியும், அன்பும் இருக்குனு எனக்குத் தெரியாம போச்சுடா! போலிஸ் சீருடையில நீ செத்தாலும்… நீ செய்த தியாகம் எந்த அதிகாரியாலும் செய்ய முடியாததுடா!” என அவனின் ஆன்மாவுக்கு மட்டும் கேட்கும் அளவுக்கு பேசி கதறினான்.
சந்துரு மெதுவாக பைரவனின் முகத்திற்கு அருகில் குனிந்தான். தன் நண்பனின் குருதி படிந்த நெற்றியில் தன் உதடுகளால் முத்தமிட்டான்.
“பைரவா… நீ சாகலடா… இந்த தேசத்தோட வரலாற்றில ஒரு ரகசிய மாவீரனா நீ வாழ்ந்துகிட்டு தான் இருப்ப! உன்னோட இந்தத் தியாகத்தை… நம்ம ரோலக்ஸும், உன்னை மாமான்னு கூப்பிட்ட அந்தப் பாப்பா சாருவும் என்னைக்கும் மறக்க மாட்டாங்கடா…” சந்துருவின் கண்ணீர்த் துளிகள் பைரவனின் கன்னத்தில் விழுந்து கரைந்தன.
துப்பாக்கிகள் வானத்தை நோக்கி உயர்த்தப்பட்டன!
டப்! டப்! டப்!… என சுடப்பட்டது, இருபத்தொன்று துப்பாக்கிக் குண்டுகள் காற்றில் முழங்க, அரசு மரியாதையோடு தேசியக் கொடி அகற்றி எடுக்கப்பட்டு, பைரவனின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
சிதையில் தீ மூட்டப்பட்டபோது… அந்த வீரன் சாம்பலாக மாறினான். ஆனால், அவனது தியாகத்தின் புகை டெல்லியின் வான்வெளியில் ஒரு காவியமாகப் படர்ந்தது!
இறுதிச் சடங்குகள் முடிந்து, கூட்டத்தினர் மெல்ல மெல்ல கலைந்து செல்லத் தொடங்கினர்.
டெல்லியின் அந்த மைதானத்தின் நடுவே, கலங்கிய கண்களோடு நின்றிருந்தார்கள் கணேஷும் சந்துருவும். அப்பொழுது சந்துருவின் பார்வை எதேச்சையாக, சற்றுத் தொலைவில் காற்றில் கம்பீரமாக ஆடிக் கொண்டிருந்த இந்தியத் தேசியக் கொடியின் பக்கம் சென்றது.
நண்பகலின் சுட்டெரிக்கும் சூரிய ஒளி, அந்தத் தேசியக் கொடியின் மீது பட்டுப் பிரதிபலித்தது.
அப்போது, அந்தச் சூரிய ஒளியின் பிரகாசத்திற்கு நடுவே… ஒரு அடர்ந்த நிழல் உருவம் நகர்வதை சந்துரு கவனித்தான்! அந்த ஒளியின் கூச்சத்தில் தன் கண்களைச் சுருக்கி, கூட்டத்திற்கு நடுவே கூர்மையாக ஊடுருவிப் பார்த்தான்.
சந்துருவின் இதயத் துடிப்பு ஒரு கணம் நின்று நிதானித்தது!
சுமார் 100 மீட்டருக்கு அப்பால்… மக்களோடு மக்களாக, கூட்டத்தில் ஒருவனாக வெள்ளை நிற நீண்ட உடை அணிந்து, கம்பீரமாக நின்று கொண்டிருந்தான் ரோலக்ஸ்!
அவனது ஆருயிர் நண்பன்… அவனுடன் சிறுவயதிலிருந்தே கூடவே இருந்து, அவனுக்காகவே வாழ்ந்து, அவனின் கட்டளைக்காகவே தன் உயிரைத் தியாகம் செய்த பைரவன் இறந்து கிடக்கிறான்.
அரசாங்கமும் இந்தத் தேசமும் அவனுக்கு அஞ்சலி செலுத்துவதைப் பார்க்காமல் ரோலக்ஸால் இருக்க முடியுமா?! தன் நண்பனின் ஆன்மா சாந்தியடைவதைக் காண… மரண ஆபத்தையும் பொருட்படுத்தாமல் அந்த டெல்லி கூட்டத்திற்கு நடுவே வந்திருந்தான் அந்த நிழல் உலகச் சக்கரவர்த்தி!
ரோலக்ஸின் கரிய விழிகள் சந்துருவைப் பார்த்தன. அவனது பார்வையில் ஆழந்த சோகமும், அதே நேரத்தில் ஒரு மாபெரும் புரட்சியின் வீரியமும் தெரிந்தன.
சந்துருவின் கண்கள் அகல விரிந்தன!
“ரோலக்ஸ்…!!” என கத்திய சந்துரு, சற்றும் தாமதிக்காமல், கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு ரோலக்ஸ் நின்றிருந்த திசையை நோக்கி வேங்கை போல ஓடினான்!
திடீரென சந்துரு கத்திக்கொண்டு ஓடுவதைப் பார்த்த கணேஷ், “சந்துரு! என்ன ஆச்சு?!” என்று பதறியபடி அவனுக்குப் பின்னாலேயே ஓடி வந்தான்.
சந்துரு ஜன நெரிசலையும் மீறி, அந்த இடத்திற்கு ஓடி வந்து சேர்ந்தான்.
ஆனால்…
அங்கே… ரோலக்ஸ் இல்லை!
அவன் நின்றிருந்த இடம் காலியாக இருந்தது. பனிப்புகையைப் போல அவன் காற்றில் கரைந்து போயிருந்தான்.
மீண்டும் தன் கரங்களில் சிக்காமல் ரோலக்ஸ் தப்பித்துவிட்டதை உணர்ந்த சந்துரு… சொல்லொணாத் துயரத்தோடும் கண்ணீரோடும் அப்படியே முழங்காலிட்டுத் தரையில் அமர்ந்தான்.
“ரோலக்ஸ்… ஏன்டா என்னை விட்டு ஓடுற? நீ யாருனு எனக்குத் தெரியும்டா…” சந்துரு தன் தலைகுனிந்து, கண்ணீரோடு தரையைப் பார்த்தான்.
அப்போது…
ரோலக்ஸ் சற்று முன் நின்றிருந்த அதே இடத்தில், அவனது பாதச்சுவட்டின் அருகில்… ஒரு சிறிய துண்டு காகிதம் காற்றில் லேசாக அசைந்தாடிக் கொண்டிருந்ததை சந்துரு கவனித்தான்.
சந்துரு மெதுவாகத் தன் கரங்களை நீட்டி, அந்தத் துண்டு காகிதத்தை எடுத்தான்.
அதே விநாடியில்… மூச்சிரைக்க ஓடிவந்த கணேஷ், சந்துருவின் தோளில் தன் கையை வைத்து, “சந்துரு… யாரைத் தேடி ஓடி வந்த டா ?” என்று கேட்டான்.
சந்துரு பதிலேதும் சொல்லாமல், தன் கையிலிருந்த அந்தத் துண்டு காகிதத்தைக் கணேஷின் கண்களிலும் படும்படி மெதுவாக விரித்து நீட்டினான்.
அந்தக் காகிதத்தில்… கரிய மையினால், கூர்மையான எழுத்துக்களில் ரோலக்ஸின் கரங்களால் எழுதப்பட்டிருந்தது…
“ உன்னுடைய உதவிக்கு மிகவும் நன்றி சந்துரு…”
“இந்த ரோலக்ஸின் வேட்டை தொடரும்… ஆனால், கடத்தல் உலக ஜாம்பவானாக இனி இல்லை!.. அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் எதிரா உருவாகும் துரோகிகளை அழிக்க, இந்த புரட்சிக்கார சிங்கத்தின் வேட்டை இனி எல்லை தாண்டி தொடரும்!”
-ROLEX
அதை வாசித்த கணேஷின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. சந்துரு அந்த எழுத்துக்களைத் தன் விரல்களால் மெதுவாக வருடினான்.
ரோலக்ஸ் மாறிவிட்டான்!
அவன் வெறும் குற்ற உலக மாஃபியா அல்ல… ஒவ்வொரு நாட்டின் அநீதிகளையும், சௌத்ரியைப் போன்ற துரோகிகளை கடலின் எல்லை தாண்டி வேட்டையாடும் ஒரு புரட்சிச் சிங்கமாக உருவெடுத்துவிட்டான் என்பதை அந்த வரிகள் உரக்கச் சொன்னன!
சந்துரு மெதுவாக எழுந்து நின்றான்…. சூரிய ஒளியில் கம்பீரமாகப் பறந்துகொண்டிருந்த தேசியக் கொடியையும், தொலைவில் காற்றில் கரைந்து கொண்டிருந்த ரோலக்ஸின் நினைவுகளையும் பார்த்தபடி… தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, ஒரு புதிய விடியலை நோக்கி அடியெடுத்து கணேஷும் சந்துருவும் அடி எடுத்து வைத்தார்கள்!
முற்றும் …
கதை நிறைவடைந்தாலும்… உங்கள் மனங்களில் எழும் பல கேள்விகள் இன்னும் பதிலின்றி மர்மமாகவே இருக்கின்றன அல்லவா?
விடைகள் அடுத்த அத்தியாயத்தில்
