67
பைரவனுக்கு இயல்பிலேயே படிப்பு மண்டையில் ஏறவில்லை. “எனக்கு இந்தப் புத்தகப் பாடம் எல்லாம் வராதுடா… நான் என் அப்பாக் கூட சேர்ந்து தொழில் பார்க்கப்போறேன்!” என்று சொல்லி பைரவன் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டான்.
இருப்பினும்… ரோலக்ஸ், சந்துரு, பைரவன் ஆகிய மூவரின் நட்பு மட்டும் துளியும் குறையவில்லை. மாலை நேரங்களில் கடற்கரையோரச் மணலில் அமர்ந்து, தங்களின் எதிர்காலக் கனவுகளைப் பற்றிப் பேசும்போது, அந்த நட்பு ஆழமான வேரூன்றியது.
வாழ்க்கை அமைதியாகச் சென்று கொண்டிருந்த வேளையில்… விதியின் கொடூரக் கரம் மீண்டும் விளையாடியது.
ரோலக்ஸிற்குத் தந்தையைப் போல ஆதரவளித்த அந்த கசாப்புக் கடைக்கார பாய், திடீரென ஏற்பட்ட கொடூரமான நோயினால் மரணமடைந்தார்.
மீண்டும் ஆதரவற்றுத் தனித்து நின்றான் ரோலக்ஸ்.
பாய் இறந்தது தெரியாமல், கசாப்புக் கடைக்கு வழக்கமாக இறைச்சி ஆடுகளையும் கோழிகளையும் சப்ளை செய்பவர்கள் சரக்குகளை அனுப்பிக் கொண்டே இருந்தனர். பாயின் கடையில் நின்று கறியை வெட்டி விற்று, அந்தப் பணத்தைப் பத்திரமாகச் சேர்த்து வைத்தான்.
ஆனால்… பல நாட்களாக அந்தப் பகுதியில் மாமூல் வசூலிக்கும் ரவுடிக் கும்பலுக்குப் பணம் போய் சேரவில்லை.
ஒரு நாள் மாலை… அந்தப் பகுதியையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த மாஃபியா தலைவன் பாபியின் பிரதான அடியாள் ஒருவன், கசாப்புக் கடைக்குள் அராஜகமாக நுழைந்தான்.
அங்கே ஒரு புதிய வாலிபன் மட்டுமே இருப்பதைப் பார்த்த அடியாள், ரோலக்ஸின் சட்டையைப் பிடித்து ஓங்கி ஒரு அறை விட்டான்!
“டேய் ஊமைப் பயலே! பாய் செத்துட்டான்ல… அப்புறம் எதுக்குடா கடையை திறந்து வியாபாரம் பண்ற? இந்த மாச மாமூல் பணம் எங்கேடா?!” என்று கத்தியபடி, மேஜையில் இருந்த பணப் பெட்டியைப் பிடுங்க முயன்றான்.
கன்னத்தில் விழுந்த அறையினாலும், தன் உணவளித்த பாயின் கடையை ஒரு ரவுடி சேதப்படுத்துவதைக் கண்டதாலும்… ரோலக்ஸின் கரிய விழிகளில் ரத்த வெறி படர்ந்தது!
அவன் தன் மாமிசம் வெட்டும் கூர்மையான அசுரக் கத்தியை மின்னல் வேகத்தில் உருவினான்!
எதிரில் நிற்பவன் பெரிய ரவுடி என்ற பயம் சிறிதும் இன்றி, ரோலக்ஸ் அந்த அடியாளின் நெஞ்சில் ஓங்கி உதைத்து, அவனது கையை ஒரே வெட்டாக வெட்டப் பாய்ந்தான்!
அவனது கண்களில் தெரிந்த கொடூரமானக் கொல வெறியைக் கண்டு அந்த அடியாளே அலறித் துடித்தான்!
கத்தி அந்த அடியாளின் கழுத்தைத் தொடுவதற்குச் சில அங்குலங்களே இருந்தபோது, ரோலக்ஸின் கரத்தை… ஒரு இரும்பு போன்ற மாபெரும் கரம் இடைமறித்துப் பற்றியது!
ரோலக்ஸ் சீற்றத்துடன் நிமிர்ந்து பார்த்தான். அங்கே… கறுப்பு நிறக் கோட் அணிந்து, முகத்தில் வெட்டுக்காயத் தழும்புகளுடன் கம்பீரமாக நின்று கொண்டிருந்தான் நிழல் உலகத்தின் மாபெரும் தாதா பாபி!
அந்தச் சிறிய வயதில், தன் அடியாளின் கொடூரமான அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல், கத்தியை எடுத்து வெட்டத் துணிந்த ரோலக்ஸின் தைரியத்தையும், அவனது கண்களில் தெரிந்த அசைக்க முடியாத அசுர வேகத்தையும் பார்த்த பாபிக்கு… அவனை மிகவும் பிடித்துப்போனது!
“அடடா… என்ன ஒரு வெறி! என்ன ஒரு துணிச்சல்!” என்று பாபி உரக்கச் சிரித்தான்.
பாபி ரோலக்ஸின் தோளைத் தட்டி, “இனிமேல் நீ இந்தக் கடையில கறி வெட்ட வேண்டாம்டா… என் கூடவே வா!” என்று அழைத்தான்.
ஆனால், ரோலக்ஸ் தன் கையில் இருந்த புத்தகப் பையைக் காட்டி, தான் படிக்க விரும்புவதாகச் சைகை செய்தான்.
ரோலக்ஸின் வைராக்கியத்தைக் கண்டு வியந்த பாபி, அவனைத் தன்னுடன் வைத்துக்கொண்டான். அவனுக்கான கல்லூரிப் படிப்பிற்கான முழுச் செலவையும் பாபியே ஏற்றான். பகலில் கல்லூரி… இரவில் பாபியின் ரகசியப் பணிகளையும், எதிரிகளை நோட்டமிடும் வேலையையும் ரோலக்ஸ் கவனித்து வந்தான்.
அதே கல்லூரியில்தான்… ரோலக்ஸ், சந்துரு, அவர்களின் புதிய நண்பன் கணேஷ் மூவரும் ஒன்று சேர்ந்தனர்!
அந்தக் கல்லூரி நட்பில்தான் அவர்களின் மாபெரும் லட்சியம் உருவானது!
இந்தியாவின் மிக உயரிய சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, அதிகாரப்பூர்வமாகப் பெரிய அரசு அதிகாரிகளாக வேண்டும் என்பதே அவர்களின் கனவாக இருந்தது..
கணேஷின் விருப்பப்படி அவன் IRS அதிகாரி ஆக வேண்டும் என்று இலக்கு வைத்தான். சந்துரு தன் கம்பீரமான குணத்திற்கு ஏற்ப IPS ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான்.
ரோலக்ஸிற்கும் IPS அதிகாரி ஆக வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால்… அவனது காது கேளாமை, வாய் பேசாமை என்ற உடல் குறைபாடு காரணமாக, சீருடைப் பணியான IPS பெற முடியாது என்பதை உணர்ந்தான்.
அதனால், அவன் சற்றும் தளராமல்… இந்தியாவின் மிக உயரிய IAS அதிகாரி ஆக வேண்டும் என்று வெறியோடு படிக்கத் தொடங்கினான்!
சந்துருவும் கணேஷும் படிப்பில் கைதேர்ந்தவர்கள்தான். ஆனால்… ரோலக்ஸ் அவர்களை விட அசாத்தியமான ஞாபக சக்தியும், கூர்மையான அறிவும் கொண்டவனாக இருந்தான்!
இரவு நேரங்களில் பாபியின் நிழல் உலக வேலைகளைச் செய்து கொண்டே, பகலில் புத்தகங்களைப் புழுவாகப் படித்துத் தள்ளினான்.
“டேய் ரோலக்ஸ்! எங்களை விட நீதான்டா கண்டிப்பா ஆல் இந்தியா ரேங்க் எடுக்கப்போற! நீ கண்டிப்பா ஒரு நாள் பெரிய IAS Officer ஆகி, இந்த நாட்டை ஆளப்போறடா!” என்று சந்துருவும் கணேஷும் அவனைக் கட்டிப்பிடித்துப் பெருமையோடு கூறுவார்கள்.
ரோலக்ஸின் கண்கள் நம்பிக்கையில் மிளிர்ந்தன.
ஆனால்… அவன் IAS அதிகாரியாக மாறப்போகிறானா… அல்லது காலத்தின் கொடூரச் சுழலால் நிழல் உலகத்தின் சக்கரவர்த்தியாக மாறப்போகிறானா என்பதை விதி தன் மடியில் ரகசியமாக ஒளித்து வைத்திருந்தது!
விசாகப்பட்டினத்தின் வீதிகளில் அதுவரை வீசிய அமைதியான தென்றல், அன்று இரவில் குருதி நெடியோடு சுழன்றடித்தது.
IAS தேர்வுக்குத் தீவிரமாகத் தயாராகிக் கொண்டிருந்த சந்துரு, கணேஷ், ரோலக்ஸ் ஆகிய மூவரின் கனவுகளுக்கு நடுவே, ஒரு பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.
சந்துருவின் தந்தை… பெயரளவில் மட்டுமே ஒரு காவல் அதிகாரி! ஆனால், உண்மையில் ஒரு கொடூரமான குடிகாரன், ரவுடிகளை விடவும் இரக்கமற்றவன்! தினமும் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு வந்து, வீட்டில் சந்துருவையும் அவன் தாயையும் அடித்துத் துன்புறுத்துவது அவனது வழக்கமாக இருந்தது. தாயின் விம்மல் சத்தமும், தந்தையின் கொடூரமான வசவுகளும்தான் சந்துருவின் சிறுவயது நினைவுகள் முழுவதும் நிறைந்திருந்தன.
அன்று நள்ளிரவும் அதே நரகம் மீண்டும் தொடங்கியது.
வெறி பிடித்த நிலையில் வீட்டிற்குள் நுழைந்த தந்தை, சந்துருவின் தாயைக் கொடூரமாகத் தாக்கத் தொடங்கினான்.
“வேண்டாம்ங்க… பையன் படிச்சுக்கிட்டு இருக்கான்… அவனை விட்டுடுங்க!” என்று கதறிய அந்தப் பாவப்பட்ட தாயின் தலையை, போதையில் சுவரில் ஓங்கி அடித்தான் அந்த அசுரன்! ரத்தம் பீறிட்டுப் பாய, சந்துருவின் தாய் கணப்பொழுதில் துடிதுடித்துத் தரையில் சாய்ந்து உயிரிழந்தாள்!
தன் கண் முன்னேயே தாய் பிணமாக விழுந்ததைக் கண்ட சந்துருவின் மூளை உறைந்துபோனது. அவனது நரம்புகளில் ஆத்திரமும், அசாத்தியமான கொல வெறியும் பாய்ந்தன!
சுவரோரம் கிடந்த கூர்மையான கத்தியை எடுத்தான். தந்தை என்றும் பாராமல், “டேய் மிருகமே!” என்று கர்ஜித்தபடி, தன் தாயைக் கொன்ற அந்தப் பாதகனின் நெஞ்சிலும் வயிற்றிலும் சரமாரியாகக் குத்தினான்!
ரத்த வெள்ளத்தில் தந்தை சரிந்து விழ… சில நொடிகள் கழித்தே சந்துருவிற்குத் தான் செய்த காரியத்தின் வீரியம் புரிந்தது.
கைகளில் ரத்தம் சொட்டச் சொட்ட… தான் ஆசையாக நெஞ்சில் சுமந்த IPS கனவும், லட்சியமும், தன் தாயின் பிணமும் அவன் கண்முன்னே வந்து சென்றன. தன் தலையில் கைகளை வைத்துக்கொண்டு, “ஐயோ! நான் என்ன காரியம் பண்ணிட்டேன்… அம்மா!” என்று கதறி அழுதான் சந்துரு.
அப்போது… சந்துருவின் வீட்டிற்கு வழக்கம் போலப் படிக்க வந்த ரோலக்ஸ், உள்ளே நுழைந்தவனது இதயத்தையே உலுக்கியது! தரையில் சந்துருவின் தாயும் தந்தையும் குருதி வெள்ளத்தில் பிணமாகக் கிடைக்க… நடுவே கத்தியோடு நடுங்கியபடி நின்று கொண்டிருந்தான் சந்துரு!
சந்துருவின் கலங்கிய கண்கள் ரோலக்ஸைப் பார்த்தன. “ரோலக்ஸ்… நான்… நான் எங்க அம்மாவைக் காப்பாத்த நினைச்சேன்டா… ஆனா… ஆனா அப்பாவை கொன்னுட்டேன்டா…” என்று சந்துரு விம்மியபடி முழங்காலிட்டு வீழ்ந்தான்.
ரோலக்ஸ் ஒரு நொடி கூட யோசிக்கவில்லை! அவன் சற்றும் தாமதிக்காமல் ஓடிவந்து சந்துருவைக் கட்டியணைத்துக் கொண்டான். அடுத்த விநாடி… சந்துருவின் கையில் இருந்த குருதி படிந்த கத்தியை, தன் சொந்தக் கரங்களுக்கு மாற்றிக் கொண்டான்!
பின்னர், சந்துருவை பலமாகத் தள்ளிவிட, அவன் நிலைதடுமாறி ஓரமாக இருந்த சோபாவின் பின்னால் போய் விழுந்தான்.
ரோலக்ஸ், ஏற்கனவே பிணமாகக் கிடந்த சந்துருவின் தந்தையின் உடலின் மீது… தன் கையிலிருந்த கத்தியால் மீண்டும் பல முறை குத்தினான்! தன் கைரேகைகள் அந்த கத்தியிலும், பிணத்தின் மீதும் பதியுமாறு செய்தான்!
சந்துரு அதிர்ச்சியில் உறைந்துபோய், சோபாவின் பின்னாலிருந்து நிமிர்ந்து பார்த்தான்.
ரோலக்ஸ் தன் கரிய விழிகளால் சந்துருவைக் கூர்மையாகப் பார்த்தான். காது கேட்காத, வாய் பேச முடியாத அவன், சந்துருவிற்குத் தன் கரங்களால் ஆவேசமாகச் சைகை செய்தான்…
“இங்கிருந்து உடனே ஓடிப்போ! இந்தச் செய்தி வெளியில் தெரிந்தால் உன் IPS கனவு சுக்குநூறாகிவிடும்! உன்னால் ஒரு காவல் அதிகாரியாக முடியாது! என்னைப்பற்றி நீ கவலைப்பட வேண்டாம்… உன் ஃபைலையும் எடுத்துக்கொண்டு இப்போதே இந்த ஊரை விட்டு ஓடிவிடு!”
“இல்லை ரோலக்ஸ்! நான் தான் கொலை செய்தேன்… உன்னை மாட்ட விடமாட்டேன்!” என்று சந்துரு உண்மையைச் ஒப்புக்கொள்ள முயன்றான்.
ஆனால்… அப்போது ரோலக்ஸின் முகத்தில் எழுந்த கோபப் பார்வை… சந்துரு இதுவரை கண்டிராத ஒரு அசுரக் கோபம்!
அந்தக் கணத்தில், ரோலக்ஸின் கட்டளையை மீற முடியாது என்பதை உணர்ந்த சந்துரு, பயமும் கண்ணீரும் முட்ட, தன் சான்றிதழ்கள் அடங்கிய ஃபைலை மட்டும் எடுத்துக்கொண்டு, அந்த நள்ளிரவு இருட்டில் ஓடி மறைந்தான்!
சந்துரு தப்பிச் சென்றதை உறுதி செய்துகொண்ட ரோலக்ஸ்… அந்த கொலைப்பழியை முழுமையாகத் தன் மீது போட்டுக்கொண்டு, அமைதியாக அங்கிருந்து மறைந்து பாபியிடம் சென்றான்.
தனக்கு இடைஞ்சலாகவும், தன் நிழல் உலகப் பணிகளுக்குத் தடையாகவும் இருந்த அந்த ரவுடி போலீஸைக் கொன்ற செய்தி பாபிக்குத் தெரியவந்தபோது, அவனுக்கு அளவற்ற சந்தோஷம்!
“என் ரோலக்ஸ் தான் அவனைக் கொன்றான்!” என்று பெருமிதம் அடைந்த பாபி, பைரவனை துணைக்கு அனுப்பி ரோலக்ஸிற்கு முழுப் பாதுகாப்பு அளித்ததோடு, அவனைத் தன் வலது கரமாக மாற்றிக்கொண்டான். சட்டத்தின் பிடியிலிருந்து அவனைத் தன் மாஃபியா அதிகாரத்தால் காப்பாற்றினான்.
ஆனால், மறுபுறம்… ஆந்திராவை விட்டு ஓடிய சந்துரு, தன் நண்பன் செய்த தியாகத்தை வீணடிக்க விரும்பவில்லை. இரவு பகலாகப் படித்து, UPSC தேர்வில் வெற்றி பெற்று, ஒரு கம்பீரமான IPS அதிகாரியாக உருவெடுத்தான்!
ஆனால்… சந்துரு ஆந்திராவிற்குத் திரும்பி வந்ததன் நோக்கம், ரோலக்ஸைக் கைது செய்வதற்காக அல்ல!
தனக்காகத் தன் வாழ்க்கையையே தியாகம் செய்து, தன் மீது விழுந்திருக்க வேண்டிய கொலைப்பழியை ஏற்றுக்கொண்டு, தன்னைப் ஒரு IPS அதிகாரியாக மாற்றிய அந்த நண்பன் ரோலக்ஸைப் பார்த்து, அவன் காலடியில் மண்டியிட்டு கண்ணீர் வழிய நன்றி சொல்லவே வந்தான்!
ஆனால்… சந்துரு திரும்பி வந்தபோது, சிறுவயதில் அசாத்திய மூளையுடன் IAS ஆக வேண்டிய ரோலக்ஸ்… அகில உலகமும் நடுங்கும் கடத்தல் உலகத்தின் அசுர மாஃபியா தலைவனாக, கடலின் அரசனாக மாறியிருந்தான்!
அன்று… தன் அறையில் தனியாக அமர்ந்திருந்த சந்துரு, நெஞ்சை அடைக்கும் துக்கத்தோடு கதறி கதறி அழுதான், ” அன்று மட்டும் அந்தச் சம்பவம் நடக்காமல் இருந்திருந்தால்… ரோலக்ஸ் இந்நேரம் இந்தியாவிலேயே மிகச் சிறந்த IAS Collector ஆகி இருப்பான்டா! என் அவசரத்தாலும், என் கோபத்தாலும் தான்… ஒரு நாட்டின் மாபெரும் அதிகாரி ஆக வேண்டியவன், இன்று நிழல் உலகத் தாதாவாக மாறிப்போனான்! அவன் இப்படி மாஃபியாவாக மாறுவதற்குக் முழு முதற்காரணமே நான்தான்டா…!” என்று சந்துரு தன் நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறினான்.
இந்தக் கொடூரமான உண்மை… உலகத்தில் சந்துரு, ரோலக்ஸ் இருவரைத் தவிர வேறு யாருக்குமே தெரியாது!
ரோலக்ஸை உயிருக்கு உயிராக நேசிக்கும் பைரவனுக்கோ, அல்லது உடன் படித்த கணேஷிற்கோ கூட இந்த ரகசியம் தெரியாது. அத்தனை பேரிடமும் “நான் தான் கொன்றேன்” என்றே ரோலக்ஸ் பொய் சொல்லியிருந்தான்.
அன்று இரவு ரோலக்ஸின் பிரம்மாண்டமான மாளிகைக்குள் சந்துரு நுழைந்தபோது, அவனுக்கு கிடைத்த அந்த ஒரு புகைப்படம் தான்!
பல ஆண்டுகளுக்கு முன்பு… ஆந்திராவின் கடற்கரையில், எந்தவிதக் கவலையும் கள்ளமும் இல்லாத அந்த இளமைப் பருவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது!
பைரவன் புதிதாக வாங்கிய தன் கேமராவில்… கடற்கரை மணலில் அமர்ந்து கவலையின்றிப் புன்னகைத்துக் கொண்டிருந்த ரோலக்ஸ், சந்துரு, கணேஷ் மூவரையும் படம் பிடித்திருந்தான்.
அந்தப் புகைப்படத்தில் இருந்த ரோலக்ஸின் கண்களில் தெரிந்த அந்தப் பரிசுத்தமான புன்னகையையும், தற்போதைய அவனது கொடூரமான மாஃபியா பார்வையையும் ஒப்பிட்டுப் பார்த்த சந்துருவின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.
ஒரு நண்பனின் தியாகம்… மற்றொருவனை அதிகாரியாக மாற்றியிருந்தது!
ஆனால், அந்த அதிகாரத்தின் பின்னணியில்… ஒரு மாபெரும் மேதையின் வாழ்க்கை, நிழல் உலகத்தின் சாம்பலில் புதைந்து போயிருந்தது!
Scotland..!
எட்வர்டின் மாளிகையின் பிரம்மாண்டமான படிக்கட்டுகளின் திருப்பத்தில், அந்த வளைவான சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த தங்க நிறச் சட்டமிட்ட புகைப்படத்தின் முன்னே ரோலக்ஸ் அசையாமல் நின்றுவிட, அவனது உடலின் அத்தனை நரம்புகளும் விறைத்துப்போயின! அவனது கூர்மையான கழுகு விழிகள் அதிர்ச்சியின் உச்சத்திற்குச் சென்றன.
அங்கே… அந்தப் புகைப்படத்தில் புன்னகைத்துக் கொண்டிருந்த உருவம் வேறு யாருமில்லை!
பல ஆண்டுகளுக்கு முன்பு, கொடூரமான பாபியின் பிடியில் இருந்து தன்னைப் போலவே காது கேட்காத, வாய் பேச முடியாத அந்த அனாத இளைஞனைக் காப்பாற்ற ரோலக்ஸ் உயிரைப் பணயம் வைத்துப் போராடினானே… அந்த அலெக்ஸ் என்ற அலெக்சாண்டரின் புகைப்படம் தான் அது!
ஆம்! அன்று பாபியின் ஆட்களிடம் போராடியும் அலெக்ஸைக் காப்பாற்ற முடியாமல் போக… அந்த ஆத்திரத்திலும் பழிவாங்கும் வெறியிலும்தான் ரோலக்ஸ் பாபியைக் கொடூரமாகக் கொன்று, அவனது நிழல் உலகச் சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றி, ‘கடலின் அரசனாக’ மாறினான்!
இன்று தன் கண்முன்னே… சர்வதேச ஆயுத அசுரனான எட்வர்டின் மாளிகையில், அதே அலெக்ஸின் படம் இருப்பதை ரோலக்ஸால் நம்பவே முடியவில்லை!
ரோலக்ஸ் மெதுவாகத் தன் தலையைத் திருப்பி, தன் தோளோடு தோள் உரசி நின்று கொண்டிருந்த எட்வர்டைப் பார்த்தான். அவனது விழிகளில் விவரிக்க முடியாத சந்தேகமும், மிரட்சியும், கொடூரமான தவிப்பும் கலந்திருந்தன.
எட்வர்ட் அந்தப் புகைப்படத்தை வாஞ்சையோடு பார்த்துவிட்டு, அதன் கீழே இருந்த மர மேடையில் வீற்றிருந்த வெள்ளை நிற டிராகன் பதித்த துப்பாக்கியைக் கையிலெடுத்தார்.
“ரோலக்ஸ்… நீ பாபியிடம் இருந்து காப்பாற்றத் துடித்தியே.. அந்த அலெக்ஸ் வேறு யாருமில்லைடா… என் ஒரே மகன்! என் உயிர்!” என்றார்
ரோலக்ஸின் கண்கள் பேரதிர்ச்சியில் விரிந்தன! எட்வர்ட் தன் நினைவுகளின் ஆழத்திற்குச் சென்றார்.
“என் மகன் அலெக்ஸ் சிறுவயதிலிருந்தே உன்னைப் போலத்தான்… காது கேட்காது, வாய் பேச முடியாது! சர்வதேச ஆயுதச் சந்தையின் பேரரசனாக நான் இருந்தாலும், என் ஒரே வாரிசு இப்படி ஊமையாக இருக்கிறானே என்று அவன் மீது எனக்கு அளவுக்கு அதிகமான பாசமும், அச்சமும் இருந்தது. அவன் தன்னந்தனியாக கப்பல் பயணம் சென்றபோது… அவனுக்குத் தெரியாமல் அவனது சட்டையின் பட்டனில் ஒரு நுண் ரகசியக் கேமராவைப் பொருத்தி அனுப்பியிருந்தேன்!”
“அன்று, பாபியின் கொடூரக் கும்பல் என் மகனைச் சூழ்ந்து கொண்டபோது, அதை என் கட்டுப்பாட்டு அறையிலிருந்து பார்த்து நான் அலறித் துடித்தேன்! ஆனால், ஸ்காட்லாந்திலிருந்து நான் ஓடிவருவதற்குள் என் மகன் கொல்லப்பட்டு விடுவானோ என்று கதறிய அந்த விநாடியில்தான்… ஒரு அசுரனைப் போல நடுவே பாய்ந்து வந்தாய் நீ!”
எட்வர்ட்டின் கரங்கள் ரோலக்ஸின் தோள்களை இறுகப் பற்ற, “அந்தக் கேமரா வழியாக நான் பார்த்தேன்டா… தன்னைப் போலவே ஊமையாக இருக்கும் ஒரு சக மனிதனுக்காக, அறிமுகமே இல்லாத என் மகனுக்காக, நீ உன் உயிரைப் பணயம் வைத்து பாபியின் ஆட்களை வேட்டையாடியதை! ‘இவன் என் சகோதரன்!’ என்ற வெறியோடு நீ போராடிய ஒவ்வொரு விநாடியையும் என் கண்களால் பார்த்தேன்! உன்னை எனக்கு அப்போதே மிகவும் பிடித்துப்போனது ரோலக்ஸ்!” என்ற எட்வர்டின் விழிகளிலிருந்து மீண்டும் கண்ணீர் வழிந்தது.
“ஆனால்… விதியின் கொடூரத்தால், நான் இந்திய மண்ணில் வந்து இறங்குவதற்குள் என் மகன் அலெக்ஸ் கொல்லப்பட்டுவிட்டான்! என் நெஞ்சம் வெடித்துச் சிதறியது. என் மகனைக் கொன்ற அந்த பாபியையும் அவனது கூட்டத்தையும் என் சொந்தக் கரங்களால் துண்டு துண்டாக வெட்ட வேண்டும் என்று சீறிக்கொண்டு மீண்டும் ஆயுதத்தோடு வந்தேன். ஆனால்…”
“நான் செய்ய வேண்டிய வேலையை நீ செஞ்சிட்ட, என் மகனின் மரணத்திற்குப் பழிதீர்த்து, அவனது மொத்தச் சாம்ராஜ்யத்தையும் தன் வசப்படுத்தியபடி நீ கம்பீரமாக நின்றிருந்த..!”
“என் மகனுக்குச் செய்ய வேண்டிய நீதியை… அவனுக்காகப் போராடிய நீயே செய்து முடித்திருந்த! அன்று உன்னைப் பார்த்தபோதே… என் மகனின் ஆன்மா உனக்குள் வாழத் தொடங்கிவிட்டதை நான் உணர்ந்தேன். என் மகனுக்கு நான் கொடுத்ததும், அவன் உனக்கு கொடுத்ததும், பின்னர் நீ எனக்கு கொடுத்த அதே வெள்ளை டிராகன் துப்பாக்கியை நான் பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்டேன்.”
என்ற எட்வர்ட் தன் கையிலிருந்த அந்த வெள்ளை நிற டிராகன் பதித்த துப்பாக்கியை ரோலக்ஸை நோக்கி நீட்டினார்.
“இன்று… ஊமையான என் மகன் உயிரோடு இல்லை. ஆனால், அவனைக் காப்பாற்றப் போராடி, அவனுக்காகத் தன் வாழ்க்கையையே விபரீதமான நிழல் உலகப் பாதைக்குத் திருப்பி, இன்று மாஃபியா தலைவனாக நிற்கிறாயே… இனி நீயும் என் மகன் தான்!”
“இந்த எட்வர்டின் சர்வதேச ஆயுதச் சாம்ராஜ்யத்திற்கும், இந்த ஸ்காட்லாந்து மாளிகைக்கும் இனி நீதான் ஒரே அதிபதி! நீதான் என் வாரிசு!” எட்வர்ட்டின் வார்த்தைகள் அந்த மாளிகையின் கூரையை அதிர வைத்தன.
ரோலக்ஸ் உணர்ச்சிப் பெருக்கில் உறைந்து நின்றான். எட்வர்ட் அந்த வெள்ளை டிராகன் துப்பாக்கியை ரோலக்ஸின் கரங்களில் அழுத்தமாகக் கொடுத்தார். துப்பாக்கியின் குளிர்ப் பிடிமானம் அவனது விரல்களைத் தொட்டபோது… ஒரு புதிய அசுர அதிகாரம் அவனது நரம்புகளில் பாய்ந்தது!
இனி ரோலக்ஸ் என்ற புரட்சியாளனின் புதிய வேட்டை ஸ்காட்லாந்திலிருந்து தொடங்க போகிறது..”!
அன்பான வாசக நெஞ்சங்களே!
கதையின் திருப்புமுனையான இந்த அத்தியாயம் உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். அடுத்த பாகமாக, இக்கதை எந்தத் திசையில் நகர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமையை உங்களிடமே விடுகிறேன்!
அடுத்ததாக நீங்கள் வாசிக்க விரும்புவது எது?
1. சர்வதேச ஆயுதச் சக்கரவர்த்தியாக உருவெடுத்துள்ள ரோலக்ஸின் அசுரப் புரட்சி வேட்டை!
2. மடிந்துபோன அலெக்ஸ் என்ற அலெக்சாண்டரின் மறைக்கப்பட்ட கடந்தகாலக் காதல் மற்றும் போராட்ட வாழ்க்கையா!
இதில் எந்தக் கதையை முதலில் எழுதலாம் என்பதை உங்கள் Comments மூலம் பதிவிடுங்கள் நண்பர்களே!
மீண்டும் நன்றி …
ஹாய் பிரண்ட்ஸ், இந்தக் கதை 🏆போட்டிக்காக எழுதப்படுவதால், உங்கள் கருத்துகள் அதனை வெற்றிக்குக் கொண்டு செல்ல முக்கிய பங்கு வகிக்கும். இந்த புதிய கதைக்கும் நீங்கள் தரப்போகும் ஆதரவையும் கருத்துகளையும் அன்புடன் எதிர்பார்க்கிறேன். .🙏🏻🙏🏻
என்றும் உங்கள் 🤞🏻
கணேஸ்வரன். 🙋🏻😍
