Rolex 66

66

கொழுக்குமலையின் அந்த பிரம்மாண்டமான மலைத்தொடர்களைக் பனிமேகங்கள் சூழ்ந்திருந்தன.

தேயிலைத் தோட்டங்களின் பச்சைப் பசேல் நிலப்பரப்பில், வழக்கமாக வீசும் சிலிர்க்க வைக்கும் குளிர்காற்றிற்குப் பதிலாக… அன்று மரணத்தின் கொடூர நெடி காற்றில் கலந்திருந்தது.

கொழுக்குமலையையே தன் சாத்தானின் வழிபாட்டில் ஆட்டிப்படைக்க நினைத்த டேவிட், தனது அக்கிரமங்களின் எல்லைக்கே சென்றபோது, ஆதியின் கைத்துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட தோட்டாக்கள் அவனது நெஞ்சைத் துளைத்தன. டேவிட்டின் கொடூரம் அந்த ரத்த வெள்ளத்தில் முடிவுக்கு வந்தது.

ஆனால்… அவனது கொடூரச் செயல்களுக்குப் பின்னே, அவன் விட்டுச்சென்ற அந்த இரண்டு பிஞ்சு இரட்டைக் குழந்தைகள் அனாதைகளாக நின்றன.

அந்த ஊரையே நல்வழிப்படுத்தும் வீரசிங்க வர்மன், அந்த இரட்டைச் சிறுவர்களைப் பரிதாபமாகப் பார்த்தார்.

“இந்தக் குழந்தைகள் என்ன பாவம் செய்தது? தந்தை செய்த பாவத்திற்காக இந்தப் பிஞ்சுகளைப் பலிகடாவாக்கக் கூடாது. ஆனால்… அதேநேரத்தில் இந்த ஊரிலேயே இவர்கள் வளர்ந்தால், ஊர் மக்களின் வஞ்சமும், எதிரிகளின் பார்வையும் இவர்கள் மீது விழுந்து மீண்டும் ஒரு ரத்தக் களரி உருவாகிவிடும்!” என ராஜாவின் மனம் ஆலோசித்தது.

அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.

அந்த இரட்டையர்களில் ஒருவன் இயல்பிலேயே பேசவும் கேட்கவும் முடியாத ஊமைச் சிறுவன் (ரோலக்ஸ்).

“இந்த ஊமைப் பையனால் யாருக்கும் எந்த ஆபத்தும் வராது. இவனை தன்னுடனேயே வைத்து நல்லவனாக வளர்த்து ஆளாக்குகிறேன்!” என்று தீர்மானித்தார் வீரசிங்க வர்மன்.

ஆனால், மற்றொரு சிறுவனான சாமுவேல்… எப்போதும் தன் தந்தை டேவிட்டின் அருகிலேயே சுற்றிக்கொண்டிருந்தவன். தந்தையின் சாத்தான் வழிபாட்டு சடங்குகளையும், அவனது கொடூர குணங்களையும் நேரில் பார்த்தவன். அவனை இந்த கொழுக்குமலைப் பகுதியில் வைப்பது ஆபத்து என்று கருதிய ராஜா, அவனைத் தூரத்து ஆசிரமத்திற்கு அனுப்ப முடிவெடுத்தார்.

அன்று நள்ளிரவு… மலையின் அடிவாரத்தில் இருந்த பழமையான அமைதியான சர்ச்சில் மெழுகுவர்த்தி வெளிச்சம் மெலிதாக ஒளிர்ந்துகொண்டிருந்தது.

வீரசிங்க வர்மன், அங்குள்ள பாதிரியாரிடம் சில பணமுடிச்சுகளைக் கொடுத்து, “ஃபாதர்… இந்தச் சிறுவனை யாருக்கும் அடையாளம் தெரியாத வாடா இந்தியா பக்கம் ஏதேனும் ஒரு நல்ல ஆசிரமத்தில் சேர்த்து விடுங்கள். அவனுக்கான செலவுகளை இந்த நிதி பார்த்துக்கொள்ளும்” என்று ரகசியமாகப் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது… அங்கே ஒரு சதி அரங்கேறியது!

ஒரு ஓரமாக உறங்குவது போலப் படுத்திருந்த சிறுவன் சாமுவேல், ராஜாவும் பாதிரியாரும் பேசுவதை ரகசியமாகக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனது பிஞ்சு மனதில், தந்தை டேவிட் சொல்லிக்கொடுத்த சாத்தானின் வழிபாட்டு வெறியும், அதிகார ஆசையும் தீயாக எரிந்தன!

‘என் தந்தை தொடங்கிய அந்த சாத்தான் வழிபாடும், இந்த மலை மீதான அதிகாரமும் அழியக்கூடாது! நான் கொழுக்குமலையை விட்டுப் போக மாட்டேன்!’ என்று சாமுவேல் மனதிற்குள் உறுமினான்.

அவன் தந்திரமாக யோசித்தான். தன் அருகில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த தன் சகோதரன் ரோலக்ஸைப் பார்த்தான்.

ராஜாவும் பாதிரியாரும் வெளியே சென்ற அந்தச் சில நொடிகளில்… சாமுவேல் மெதுவாக எழுந்து, தூங்கிக் கொண்டிருந்த ரோலக்ஸின் சட்டையை மாற்றி, தன் அடையாளங்களை மாற்றி அமைத்தான். பின்னர், ராஜா திரும்பி வரும்போது, சாமுவேல் தன்னைத்தானே ஊமை போல நடித்து, சைகையிலேயே பேசி ராஜாவின் கால்களைக் கட்டிக்கொண்டான்!

இரட்டையர்கள் இருவருமே ஒரே மாதிரியான முக அமைப்பைக் கொண்டிருந்ததாலும், அந்த மங்கலான வெளிச்சத்தாலும்… வீரசிங்க வர்மனால் உண்மையான ஊமைச் சிறுவன் யார் என்பதை அடையாளம் காண முடியாமல் போனது!

தன்னை அணைத்துக் கொண்டிருந்த சாமுவேலைத் தான் ஊமை ரோலக்ஸ் என்று தவறாக நம்பிய வீரசிங்க வர்மன், அவனைத் தழுவிக்கொண்டு, “கவலைப்படாதே கண்ணா… நீ என்னுடனே கொழுக்குமலைக்கு வரியா !” என்று கூறி அவனைத் தன்னுடன் அழைத்துச் சென்றார்.

(அந்த சாமுவேல்தான் பிற்காலத்தில் முத்து என்ற பெயரில் கொழுக்குமலையில் வளர்ந்து, தன் தந்தையைப் போலவே சாத்தான் வழிபாடுகளை ரகசியமாகத் தொடர்ந்து, இறுதியில் மடிந்துபோனான்!)

ஆனால்… உண்மையான ஊமையாகிய அந்தச் சிறுவன் ரோலக்ஸ்… விதியின் கொடூரக் கரங்களால் ஃபாதருடன் நள்ளிரவு ரயிலில் ஏற்றி அனுப்பப்பட்டான்!

நள்ளிரவில் சீறிப் பாய்ந்த அந்த ரயிலின் தாள நயத்தில், ஃபாதர் அசதியில் தூங்கிப்போனார்.

திடீரெனக் கண் விழித்த சிறுவன் ரோலக்ஸ், தன் அருகில் தன் உடன்பிறந்த சகோதரன் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தான்! காது கேட்காத, வாய் பேச முடியாத அந்தச் சிறுவனின் இதயத் துடிப்பு எகிறியது.

அவன் பதற்றத்துடன் ரயிலின் ஒவ்வொரு பெட்டியாகத் தேடி ஓடினான். ரயில் ஒரு தெரியாத நிலையத்தில் மெதுவாக நின்று நகரத் தொடங்கியபோது, தன் சகோதரன் கீழே இறங்கிவிட்டானோ என்ற பயத்தில், சிறுவன் ரோலக்ஸ் அந்தப் புது அநாகரீகமான ஸ்டேஷனில் குதித்து இறங்கிவிட்டான்!

ரயில் நகர்ந்து சென்றது… ஃபாதரும் பிரிந்தார், சகோதரனும் பிரிந்தான்!

நாட்கள் நகர்ந்தன. திசை தெரியாமல், மொழி தெரியாமல் அலைந்து திரிந்த அந்த ஊமைச் சிறுவன்… இறுதியாக ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம் துறைமுக நகரத்தின் அழுக்கு படிந்த தெருக்களில் வந்து சேர்ந்தான்.

அவனுக்கு ஆதரவளிக்க யாருமில்லை. உடுக்க உடையும், பசிக்கு உணவும் இன்றி, விசாகப்பட்டினத்தின் வீதிகளில் கையேந்தி யாசகம் கேட்கத் தொடங்கினான் அந்த அனாதைச் சிறுவன்.

அன்று விசாகப்பட்டினத்தில் காரிருள் சூழ்ந்து, பெருமழை பெய்து ஓய்ந்திருந்தது.

சாலைகளில் சாக்கடை நீரும், சேறும் சகதியுமாக ஈரம் படிந்திருந்தது. சுட்டெரிக்கும் பசியால் வயிற்றைப் பிடித்துக்கொண்டு, பல நாட்களாக உணவின்றித் தவித்த சிறுவன் ரோலக்ஸ், மெதுவாக அங்குள்ள ஒரு டீக்கடையை நோக்கி நடந்தான்.

டீக்கடையின் முன்னால் கூட்டமாக அமர்ந்து டீ குடித்துக்கொண்டிருந்த சில காரியவாதிகளின் முன்னே சென்று, தன் வயிற்றைக் காட்டி, “பசிக்கிறது… ஏதேனும் உணவு தாருங்கள்” என்பது போலக் கைகளைக் கூப்பிச் சைகை செய்தான்.

ஆனால், அங்கு இருந்த இரக்கமற்ற மனிதர்களோ அவனது துயரத்தைப் பொருட்படுத்தவில்லை.

“போடா இங்கிருந்து! அழுக்கு பிடிச்ச நாயே!” என்று ஒருவன் அவனது நெஞ்சில் கைவைத்து தள்ளிவிடவும் … அந்தச் சிறுவன் தெருவின் பிளாட்பாரத்திலிருந்து நழுவி, சாக்கடை ஈரம் படிந்த தார்ச் சாலையில் ஓங்கி விழுந்தான்!

அவனது முழங்காலிலும் முட்டித் தோலிலும் ரத்தம் கசிந்தது. வலி தாங்க முடியாமலும், பசியின் கொடுமையாலும் அந்த நடுரோட்டில் அமர்ந்து, சத்தமில்லாமல் தன் ஊமைத் தொண்டையால் விம்மி விம்மி அழுதான் சிறுவன்.

அப்போது…

அருகில் இருந்த கசாப்புக் கடையிலிருந்து இரக்க குணம் படைத்த முஸ்லீம் பாய் ஒருவர் ஓடிவந்தார்!

“யா அல்லாஹ்! என்ன காரியம் பண்றீங்கடா மனிதப்பயல்களா?!” என்று அந்த டீக்கடைக் காரர்களைக் கடிந்து கொண்ட பாய், ஓடிவந்து சாலையில் கிடந்த சிறுவனைத் தூக்கி நிறுத்தினார்.

அவனது கிழிந்த சட்டையில் ஒட்டியிருந்த தூசியையும் அழுக்கையும் தன் சொந்தக் கரங்களால் தட்டிவிட்டவர், “தம்பி… அடி பலமா பலமா பட்டிருக்காடா? யாருப்பா நீ?” என்று பாய் பரிவோடு கேட்க…

அந்தச் சிறுவன் தன் காதுகளைத் தொட்டு, பின்னர் தன் உதடுகளைத் தொட்டு, “எனக்குக் காதும் கேட்காது… வாயும் பேச வராது” என்று சைகையில் கண்ணீரோடு விளக்கினான்.

அதைக் கண்ட பாயின் இதயம் நொறுங்கிப்போனது!

“அடப்பாவிங்களா… பேச முடியாத, கேட்க முடியாத ஒரு பிஞ்சுப் பையனையா இப்படி போட்டு மிதிச்சீங்க?!” என்று ஆத்திரப்பட்ட பாய், சிறுவனின் கையைப் பிடித்துக்கொண்டு நேராக அதே டீக்கடைக்குச் சென்றார்.

தன் பையிலிருந்து காசை எடுத்துக் கொடுத்து, “தம்பிக்கு ஒரு சூடான டீயும், பெரிய பன்னும் கொடு!” என்று வாங்கி, சிறுவனின் கரங்களில் கொடுத்தார்.

பசியில் நடுங்கிக்கொண்டிருந்த சிறுவன் ரோலக்ஸ், அந்தப் பன்னை டீயில் தோய்த்து அவசர அவசரமாகச் சாப்பிடுவதைக் கண்ட பாயின் கண்கள் கலங்கின. அவர் அமைதியாகத் தன் கசாப்புக் கடைக்குத் திரும்பினார்.

 

அன்று இரவு…

சாரல் மழை மீண்டும் தூறத் தொடங்கியது. பாய் தன் கசாப்புக் கடையைப் பூட்டிவிட்டு, வீட்டிற்குப் புறப்பட ஆயத்தமானார்.

அப்போது, கடைக் கதவின் ஓரத்திலிருந்த மரப்பலகையின் அடியில், சுருண்டு படுத்து உறங்கிக் கொண்டிருந்த அந்தச் சிறுவனைக் கண்டார். செல்ல இடம் இல்லாமல், புகலிடம் இல்லாமல் அந்த இரக்கமற்ற நகரத்தின் வீதியோரத்தில் ஒடுங்கிப் படுத்திருந்தான் ரோலக்ஸ்.

பாய் அவனைக் கலைக்காமல், ஒரு நீண்ட பெருமூச்சோடு வீட்டிற்குச் சென்றார்.

மறுநாள் காலை…

பாய் வழக்கம்போலக் கடையைத் திறக்க வந்தபோது, அந்தச் சிறுவன் இன்னும் அதே இடத்திலேயே பசியோடு அமர்ந்திருப்பதைக் கண்டார். பாய் அவனது தோளைத் தட்டி எழுப்பினார்.

சிறுவன் பயத்தோடு விழித்தான். பாய் புன்னகையோடு அவனுக்கு மீண்டும் சூடான டீயையும் சிற்றுண்டியையும் வாங்கித் தந்தார். சிறுவன் அந்த டீயை அமைதியாகவும் நன்றியுணர்வோடும் குடித்தான்.

அவனது பாவமான, அதேநேரத்தில் தீட்சண்யமான கண்களை உற்றுப் பார்த்த பாயின் மனதில் ஒரு நல்ல எண்ணம் உதித்தது.

“தம்பி… உனக்குன்னு யாருமில்லை… எனக்குக் கடையில உதவி செய்ய ஒரு ஆள் தேவை. நீ என்னோடவே கடையில் இருக்கியா?” என்று பாய் சைகையிலேயே அவனிடம் கேட்டார்.

சிறுவன் ரோலக்ஸின் கண்கள் நன்றியால் பிரகாசித்தன! அவன் வேகவேகமாகத் தலையசைத்தான்.

அன்று முதல்… அந்த முஸ்லீம் பாயின் கசாப்புக் கடையில் சிறிய உதவியாளனாகச் சேர்ந்தான் சிறுவன் ரோலக்ஸ்.

அங்கே… கசாப்புக் கடையின் பெரிய வெட்டுக்கத்திகளையும், ரத்தம் சொட்டும் இறைச்சிகளையும், கத்திகளைச் சாணை பிடிக்கும் இரும்பு உராய்வுகளையும் பார்த்தபடி…

அனாதையாக வந்த அந்த ஊமைச் சிறுவன், பிற்காலத்தில் அகில உலகமும் அஞ்சும் “மாஃபியா சக்கரவர்த்தி ரோலக்ஸாக” உருவெடுப்பதற்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்டிருந்தது!

விசாகப்பட்டினத்தின் அந்தச் சிறிய கசாப்புக் கடையில், நாட்களும் வாரங்களும் மெல்ல நகர்ந்தன.

கடைக்கார முஸ்லீம் பாய் கொடுத்த வேலையைச் சிறுவன் ரோலக்ஸ் மிகவும் பொறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் செய்து முடித்தான். கடையைப் பெருக்குவது, கத்திகளைத் துடைத்து வைப்பது, இறைச்சியைத் துணியால் மூடி வைப்பது என அவனது சுறுசுறுப்பைக் கண்ட பாயின் மனதில் ஒருவிதத் தாயுள்ளம் கனிந்தது.

அவனது வயதையும், சுறுசுறுப்பான அறிவையும் பார்த்த பாய், தன் தாடியை வருடியபடி ஆழமாக யோசித்தவர், 

“யா அல்லாஹ்! இந்தப் வயசுல கறிக்கடையில் கத்தியும் ரத்தமுமா இருக்குறது இவனுக்கு அழகில்லை… படிப்புதான் இவன் வாழ்க்கையை வெளிச்சமாக்கும்!” என்று நினைத்த பாய், தன் சொந்தச் செலவிலேயே அவனை அருகில் இருந்த அரசாங்கப் பள்ளியில் சேர்த்தார்.

அங்குதான்… ரோலக்ஸின் வாழ்க்கையை மாற்றப்போகும் அந்த மாபெரும் நட்பு தொடங்கியது!

அந்தப் பள்ளியில்தான் சந்துருவும், பைரவனும் படித்துக் கொண்டிருந்தனர்.

ஆரம்பத்தில், காது கேட்காத, வாய் பேச முடியாத ரோலக்ஸைப் பார்த்த மற்ற மாணவர்கள் அவனை ‘ஊமை… ஊமை…’ என்று கேலி செய்து, அவனது புத்தகங்களைப் பிடுங்கி எறிந்து கிண்டல் செய்தனர்.

அப்போதுதான், சிங்கக் குட்டியைப் போல நடுவே பாய்ந்து வந்தான் நம்ம சந்துரு!

“டேய்! எவனாவது இவனை இனிக் கிண்டல் பண்ணினீங்க… பல்லைத் தட்டி கையில் கொடுத்துடுவேன்!” என்று சந்துரு கர்ஜித்து, ரோலக்ஸிற்கு முழு அரணாக நின்றான்.

எங்கு பார்த்தாலும் எதிரிகள், அவமதிப்பு, அசிங்கம், நிறைந்த அந்த உலகத்தில், ரோலக்ஸிற்குக் குரலற்ற வாழ்க்கை சாபமாக இருந்தது. ஆனால், அந்த ஊமை உலகத்தில் வெளிச்சத்தைக் கொண்டு வந்தவன் சந்துரு.

பலமுறை சகமானவர்களின் கிண்டல் கேலியில் சிக்கி, பேசும் சக்தியை இழந்து, அவமதிப்பின் விளிம்பில் நின்ற ரோலக்ஸைக் காப்பாற்றியவன் அதே சந்துரு தான்.

அன்று முதல்… சந்துருவின் மீது ரோலக்ஸிற்கு வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஓர் ஆழ்ந்த அன்பும், உயிரான நட்பும் உருவானது. மற்றவர்கள் அவனை கிண்டல் செய்ய … சந்துருவோ அவனது கண்களிலுள்ள வலியைப் படித்தறிந்தான். சந்துரு பேசும் ஒவ்வொரு வார்த்தையும், அவனது குரலும் ரோலக்ஸிற்கு உலகின் மிகச்சிறந்த இசையாகத் தோன்றியது.

 

தன் வாயால் பேச முடியாது என்ற குறையை, சந்துருவின் நட்பு முழுமையாக நிரப்பியது. தன்னுடைய ஊமை வாயை ரோலக்ஸ் லேசாக அசைத்து, சந்துருவை வாஞ்சையாக அழைக்கும் அந்த ஒற்றை வார்த்தைதான்… ‘சாரு..’

(அன்று மயூராவுக்குப் பிரசவம் முடிந்து, அந்தப் பிஞ்சு குழந்தையின் முகத்தைப் பார்த்த ரோலக்ஸ், தன் ஊமை உதடுகளை அசைத்து முணுமுணுத்த பெயர் இதே சாரு…! தான்

அதே அறையின் நின்று கொண்டிருந்த பைரவனின் முகத்தில் பெரும் அதிர்ச்சி பாய்ச்சியது, ‘என்ன இது? தன்னை அழிக்கத் துடிக்கும் அந்த சந்துருவின் பெயரை தன் மகனுக்கு எப்படி வைக்கலாம்?’ என குழம்பினான்.)

போனஸ் வேட்டை தொடரும் ..⚓

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!