அத்தியாயம்- 8
தில்லை நாதன் தாட்சாயிணி காலில் விழுவார் என்று யாருமே எதிர்பார்க்காமல் இருக்க. அவரின் செயலில் அதிர்ந்து போயினர் அனைவரும்.
பதறி போய் தாட்சாயிணி தன் கால்களை நகர்த்த, முதலில் சுதரித்த கேஷவ் அவரை எழுப்பினான்.
பின் ஆராதனாவும் ரகுபதியும் அதிச்ச்சியுடன் தில்லை நாதன் அருகில் சென்று “என்ன காரியம் பண்ணிட்டீங்க பெரியப்பா? நம்ம சைட் தப்பு இருக்கு தான். அதுக்கு வயசுல மூத்தவரு நீங்க போய்” என்றவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
இதுவரை அவள் பெரியப்பா யாரிடமும் தலை குனிந்துக் கூட பேசியதில்லை. அப்படிப்பட்டவர் இன்று ஒருவரின் காலிலே விழுந்து விட்டதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
அனைத்துக்கும் சௌந்தர்யா தான் காரணம் நினைக்கும் போது அவளுக்கு அழுகையுடன் கோபம் கோபமாக வந்தது.
ரகுபதிற்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. தந்தையின் முகத்தை கூட அவனால் நிமிர்ந்து காண முடியவில்லை.
தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை அவர் அருகில் இருந்தும் இப்படி மற்றவர்கள் காலில் விழ விட்டு விட்டானே என்று யோசிக்கும் போதே அவனுக்கே அவன் மீது கோபமாக இருந்தது.
அதிர்ந்த விழியோடு ரதி தில்லை நாதனை பரிதபமாக பார்த்தாள்.
ஆரம்பத்தில் அவர்கள் அங்கே வந்து நிற்பது பிடிக்காமல் தான் இருந்தது ரதிபாலாவிற்கு. ஆனால் தில்லை நாதனின் செயலை கண்டு வாயடைத்து போனாள்.
தாட்சாயிணிக்கு தான் மிகவும் குற்றவுணர்வாக தோன்றியது. வீடு தேடி வந்தவரை காலில் விழும் அளவிற்கு நடந்துக் கொண்டோமா என்று எண்ணி வருந்தினார்.
முதலில் தில்லை நாதன் சம்மந்தி என்று அழைத்தப் போது அவ்வாறு அழைக்க வேணாம் என்று நினைத்த தாட்சாயிணி அதை மறந்து இப்போது,
“சம்மந்தி ஏன் இப்படி பண்ணிட்டீங்க. நான் உங்களை விட வயசுல சின்னவ தான். என் காலுல போய் விழுந்துட்டு. நேத்து நடந்ததை நாங்க சுத்தமா மறந்துட்டோம். நீங்க அதை நினைச்சி வருத்தப்பட வேணாம் விடுங்க. உங்க பொண்ணுக்கு பிடிக்கலனா நம்ம என்ன பண்ண முடியும்” என்று உண்மையான மனதோடு பேசினார் தாட்சாயிணி.
தில்லை நாதன் மீண்டும் சோபாவில் அமர்ந்து தன் இருக்கரம் கூப்பி திரும்ப மன்னிப்பு வேண்டியவர் “எனக்கு இது போதும் சம்மந்தி. நீங்க என்னை சம்மந்தி கூப்பிட்டதே போதும்” என்று நெகிழ்ந்து கூறினார்.
தாட்சாயிணி விரக்தியாக புன்னகைத்து “கூப்பிட மட்டும் தானே முடியும் உண்மையா ஆகிட முடியாதே” என்று வருத்தமாகவே சொன்னார்.
தாட்சாயிணிக்கும் இப்படிப்பட்ட நல்ல மனிதரின் சம்மந்தம் விட்டு போனது நினைத்து மிகவும் வருத்தம் தான் அவருக்கு. அவர் அப்படி நினைத்துக் கொண்டு இருக்கும் போதே தில்லை நாதன் கூறிய அடுத்த வார்த்தையை கேட்டு அனைவரும் குழப்பத்துடன் அவரை பார்த்தனர்.
தில்லை நாதன் அவர்களை பார்த்து “நம்ம நினைச்சா அதை திரும்ப உண்மையாக்கிட முடியும் சம்மந்தி” என்றார் அழுத்தமாக.
அனைவரின் பார்வையும் சந்தேகமாக அவர் மீது இருக்க. அவரோ சட்டென்று எழுந்துக் கொண்டார்.
அவர் எழுந்திடவே மற்றவர்களும் தானாக எழுந்து நிற்க. அங்கே புத்தகப்பையை மாட்டிக் கொண்டு நின்று இருந்த ஆராதனாவின் கரத்தை பிடித்து எதிரே நின்று இருந்த கேஷவ் அருகில் நிற்க வைத்து “ஆராதனாவும் என் பொண்ணு தான் சம்மந்தி அம்மா. நீங்க எதிர்பார்க்கிற எல்லா குணமும், ஏன் அதுக்கு மேலயே இருக்கு அவ கிட்ட. என் பொண்ணு ஆராதனா உங்க வீட்டுக்கு மருமகளா வந்தா, நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்” என்று சொல்லி முடிக்க அவரை திடுக்கிட்டு போய் அதிர்ந்து பார்த்தாள் ஆராதனா.
கேஷவ்விற்குமே இது அதிர்ச்சி தான். அவர் திரும்ப சௌந்தர்யாவிற்காக பேச வந்து இருக்கிறார். அப்படி ஒருவேளை நடந்தால் அவரை அவமானப்படுத்தி அனுப்ப வேண்டும் என்று நினைத்து இருந்தவனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது ஆராதனாவை அவன் அருகில் நிற்க வைத்து சம்மந்தம் பேசுவது.
இது அவனே எதிர்பார்க்காத ஒன்று என்று தான் கூற வேண்டும்.
தாட்சாயிணிற்கு பேச்சே வரவில்லை. அவருமே தில்லை நாதன் சௌந்தர்யாவிற்காக தான் வந்து இருக்கிறார் என்று அல்லவா நினைத்து இருந்தார். ஆனால் இப்போது ஆராதனாவை அவர் மகனுக்கு பேச வந்தத்தை பார்த்து வாயடைத்து போனார்.
உண்மையில் அவருக்கு ஆராதனாவை மறுக்க எந்த காரணமுமில்லை. அவ்வளவு ஏன் அவர்கள் வீட்டிற்கு சௌந்தர்யா பெண் கேட்டு போகும் போது ஆராதனாவை பார்த்து இருந்தால் கண்டிப்பாக அவர் மனமாறி இருந்து இருக்கும் என்று, நேற்றே அவர் ஆராதனா நடந்துக் கொண்ட விதத்தை பார்த்து எண்ணியவர் தான்.
ஆனால் அதற்குள் என்ன என்னவோ நடந்து விட, இப்போது அவர் மனதிற்கு பிடித்த பெண்ணையே மகனின் அருகில் நிற்க வைத்து சம்மந்தம் பேசுவதை கண்டு அடுத்து என்ன முடிவு எடுப்பது என்றே தெரியாமல் குழம்பி போனார்.
ரதிற்குமே தாட்சாயிணியின் எண்ணம் தான் இருந்து இருக்கும் போல. அவள் அண்ணன் அருகில் தலை குனிந்து நின்று இருந்த ஆராதனாவை பார்த்தாள்.
ரகுபதியோ அதிர்ச்சியுடன் தந்தையை திரும்பி பார்க்க. அவரோ கண்சாடையாலே அமைதியாக நிற்க சொன்னார்.
குரலை செறுமிய கேஷவ் வேண்டாம் என்று மறுக்க நினைத்து பேச வாய் திறந்த போது,
“நாங்க திரும்ப திரும்ப ஏமாற தயாரா இல்லை தில்லைநாதன்” என்றார் தாட்சாயிணி.
அவரின் வார்த்தையை கேட்ட கேஷவ் திகைப்புடன் அன்னையை நோக்கினான்.
‘அவரின் வார்த்தைகள் ஆராதனாவை வேணாம் என்று சொல்வது போல இல்லாமல். ஆராதனா எங்கே வேணாம் என்று சொல்லிவிடுவாளோ என்று நினைப்பது போல் ஏன் எனக்கு தோன்றிகிறது. ஒருவேளை அம்மாவிற்கு ஆராதனாவை பிடித்து இருக்கிறதா? அது எப்படி அவமானப்பட்ட வீட்டிலிருந்தே திரும்ப பெண் எடுப்பது சாத்தியமாகும். அதுவும் படிக்கும் பெண்ணை’ என்று நினைத்த கேஷவ்வின் நயனங்கள் முதல் முறை ஆராதனாவை ஆராய்ச்சியாக நோக்கியது.
மென்மையான தேகம், பால் வண்ண அழகு, பிண்ணி இருந்த நீண்ட கூந்தலும், படபடக்கும் இமைகள், பதற்றதில் துடித்துக் கொண்டு இருந்த உதடு, எங்கே கரங்கள் கீழே விழுந்து விடுமோ என்று பயத்துடன் கைப்பையை இறுக்கமாக பிடித்து கொண்டு ஒரு வித அச்சத்தோடு நின்று இருந்த பெண்ணை பார்ப்பத்தை எண்ணி திடுக்கிட்டு தான் போனான் கேஷவ்.
‘என்ன இப்படி வெறிச்சி போய் பார்க்கிறேன். நான் இப்படி பார்க்கிறதை யாராவது பார்த்தா என்னை பத்தி என்ன நினைப்பாங்க’ என்று தன்னை தானே திட்டுக் கொண்டு திரும்பி முன்னே பார்க்க அங்கே அவனையே பார்த்தபடி நின்று இருந்தாள் அவன் தங்கை ரதி.
‘அச்சோ இவளா?’ என்று அவன் நினைக்க,
ரதியோ ‘என்ன’ என்று புருவம் உயர்த்தி சாடையால் கேட்டாள்.
கேஷவ் ஒன்றுமில்லை என்பது போல் இருப்பக்கமும் தலையை ஆட்டியவன் தன் அன்னையை நோக்கினான்.
தாட்சாயிணியின் பதிலை கேட்ட தில்லை நாதன் சற்று மகிழ்ந்தவராக “அப்படியெல்லாம் நடக்காது சம்மந்தியம்மா. என் பொண்ணு சௌந்தர்யா போல என் ஆராதனா குட்டி இல்லை. ரொம்ப தங்கமான புள்ளை. நான் சொல்லி தான் உங்களுக்கு அவளை பத்தி தெரியனும் இல்லை நீங்களே பார்த்து இருப்பீங்களே நேத்து” என்று முகமலர பேசியவரை பார்த்தார் தாட்சாயிணி.
ஏனோ அவரின் இந்த முகமலர்ச்சியை கெடுக்க தாட்சாயிணிற்கு விரும்பமில்லை. அதை விட மிகப்பெரிய காணரம் தாட்சாயிணிக்கு ஆராதனாவை மிகவும் பிடித்து போனது தான். அவரை இந்த அளவிற்கு யோசிக்க வைக்கிறது.
தில்லைநாதனின் பேச்சால் நேற்று நடந்த சம்பவத்தை கூட தாட்சாயிணி மறந்து போனார்.
அவர் மனதிலோ அருகருகில் நின்று இருந்த மகனையும் ஆராதனாவையும் ஜோடி சேர்த்து பார்த்தது.
‘நல்ல பொருத்தம், அமைதியான பொண்ணு. பெரியவங்களுக்கு எப்படி மரியாதை கொடுத்து பேசனும் தெரிஞ்ச பொண்ணு. மத்தவங்களுக்கு எவ்வாறு மதிப்பு அளிப்பானு நேத்தே பார்த்தோம். பிரச்சனையை அழகா தவிர்த்தாள். பார்க்கவும் ரொம்ப அழகா இருக்கா. இந்த பொண்ணை பத்தி ஏன் முன்னாடி அந்த தரகரு சொல்லல. முதல தெரிஞ்சி இருந்தா இந்நேரம் இவளுக்கு தானே என் மகனை பேசி முடிச்சி நிச்சியம் பண்ணி இருப்பேன்’ என்று கேஷவ்வையும் ஆராதனாவையும் மாறி மாறி பார்த்தவர் மனமும் சரி முகமும் சரி பூரித்து தான் போனது.
ஆனாலும் அவருக்குள் இருந்த சந்தேகம் அவரை உடனே சம்மதம் சொல்ல வைக்கவில்லை.
தில்லை நாதனை திரும்பி பார்த்த தாட்சாயிணி “இந்த கல்யாணத்துல ஆராதனாவிற்கு முழு சம்மதமா?” என்று கேட்டார்.
“அதெல்லாம் இந்த பெரியப்பா பேச்சை தட்ட மாட்டா என் பொண்ணு” என அவர் சொல்ல,
தாட்சாயிணி ஆராதனாவை பார்த்து “நீ சொல்லு ஆராதனா. உனக்கு இந்த கல்யாணத்துல முழு சம்மதமா?” என்று நேரடியாக கேட்டார்.
இக்கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத ஆராதனா திருத்திருவென முழிக்க ஆரம்பித்தாள்.
அவளுக்கே அவளின் திருமண செய்தி புதியது அல்லவா.
போனை உடைத்ததிற்காக மன்னிப்பு கேட்டு போகலாம் என்று வந்த பெண்ணிற்கு இப்போது திருமண நடத்துவதை பற்றி பேசுவது அதிர்ச்சி தானே.
அவளால் சபையில் அவளின் பெரியப்பாவை விட்டு கொடுக்க முடியவில்லை. அதே போல் ஏற்கனவே சௌந்தர்யவால் அவமானப்பட்டு இருக்கும் தாட்சாயிணிற்கும் ஏமாற்றத்தை கொடுக்க விரும்பவில்லை.
அதனால் கண்ணை மூடி, ஆழ்ந்து மூச்சு எடுத்து ஒரு கணம் தாட்சாயிணி முகத்தை கண்டாள்.
பின் தலையை குனிந்துக் கொண்டு “என் பெரியப்பா எனக்கு எது பண்ணாலும் அது நல்லதுக்கு தான் நினைக்கிறவள் நான். அப்படி இருக்கும் போது என் திருமண விசியத்துல எந்த தப்பான முடிவும் எடுக்க மாட்டாரு நினைக்கிறேன். அவர் என்ன சொன்னாலும் நான் கேட்பேன்” என்று கடக்கடவென கூறினாள்.
பின் மெல்ல மீண்டும் தாட்சாயிணி நிமிர்ந்து பார்த்து “நான் கல்யாணத்து அப்புறம் படிக்கலாமா அத்தை” என்று எதிர்பார்ப்புடன் கேட்டாள்.
பெண்ணவளின் மறைமுக சம்மதத்தை கேட்ட கேஷவ் வியந்து தான் போனான்.
‘உண்மையாவே இவளுக்கு இந்த கல்யாணத்துல சம்மதமா?’ என்று அதிர்ந்தான் கேஷவ்.
இப்போது தான் தாட்சாயிணி முகத்தில் புன்னகை பூத்தது. நேற்றிலிருந்து ஒரு பேச்சிக்கு கூட சிரிக்காதவர் முகமும் இதழும் இன்று தாராளமாக புன்னைகயால் நிரம்பியது.
அவருக்கோ தன் சொந்தங்களின் முன் மகனுக்கு ஒரு நல்ல பெண்ணை திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்ற வைராகியம்.
கணவன் இல்லாமல் இருப்பிள்ளையை வளர்த்து பெரிய ஆளாக நிற்க வைத்ததை பார்த்து பலர் பொறாமையால் தாட்சாயிணியை கண்டபடி பேசினார்கள்.
அவர்களுக்கு முன் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். பிள்ளைகளையும் வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணம்.
நின்று இருந்தவர்களை பார்த்து “முதல உட்காருங்க” என்று தாட்சாயிணி சொல்லிக் கொண்டே அமர, ஆராதனாவிற்கு தான் இப்போது எங்கே அமருவது என்று பதற்றம் ஏற்பட்டது.
கைகளை பிசைந்துக் கொண்டு நின்று இருந்தவளை பார்த்த தாட்சாயிணி “கேஷவ் பக்கத்துலயே உட்காருமா” என்று கூறினார்.
அதை கேட்டு உள்ளுக்குள் திடுக்கிட்டாலும் சரியென்று தலையை ஆட்டிவிட்டு கேஷவ்வை பார்த்தாள்.
அவனோ அவளை உருட்டு விழிக்க, அதில் பயம் அவளை ஒட்டிக் கொண்டது.
அண்ணனின் செயலை கண்ட ரதிக்கு சிரிப்பு வர, எழுந்து ஆராதனாவின் கரத்தை பிடித்துக் கொண்டு “அண்ணி இங்கே உட்காருங்க” என்று அவளுக்கும் கேஷவ்விற்கும் நடுவில் அமர வைத்தாள்.
ரதியின் அண்ணி என்ற வார்த்தை ஆராதனாவிற்கு புதுவித உணர்வாக இருந்தது.
சங்கடத்துடன் கேஷவ் அருகில் அமர்ந்த ஆராதனாவிற்கு எப்போடா வீட்டிற்கு போவோம் என்று தோன்றியது.
கேஷவ்வோ “எதே அண்ணியா? ஓ முடிவே பண்ணிட்டிங்களா?” என்று வாயிற்குள் முணுமுணுத்தான்.
தாட்சாயிணி தில்லைநாதனை பார்த்து “நீங்களும் ஆராதனாவும் மட்டும் சம்மதம் சொன்னா போதாது சம்மந்தி. ஆராதனா அப்பா சம்மதம் சொல்லனும். நேத்தே அவரு விசேஷத்திற்கு வரலனு நினைக்கிறேன்” என்று பேச்சை நிறுத்தினார்.
தில்லைநாதனும் “ஆமா சம்மந்தி. அவனுக்கு வேலை மேல லீவ் கொடுக்கல. அதான் வர முடில. இதோ இருங்க இப்போவே போன் போடுறேன். அவனுக்கும் நான் எடுக்கிற முடிவுல எந்த தடையும் இருக்காது” என்று சொல்லிக் கொண்டே தன் கைப்பேசியின் மூலம் தன் உடன் பிறந்த தம்பிற்கு அழைப்பு விடுத்தார்.
தாட்சாயிணியோ “ஸ்பீக்கர்ல போட்டு பேசுங்க தில்லைநாதன்” என்று சொல்ல அதிர்ச்சி அடைந்தார் அவர்.
அவர் தான் இன்னும் தம்பியிடம் எதை பற்றியும் பேசவில்லையே. அப்படி இருக்க. இப்போது அனைவரின் முன்பும் அவர் தம்பி வேண்டாம் என்று மறுத்து விட்டால் என்ன செய்வார் தில்லை நாதன்.
இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.
