11 ராட்சசனின் காதல் பாவை

11… ராட்சசனின் காதல் பாவை…

போன பகுதியில்:

ஆனால், விதுரனின் மனதில் எரிந்து கொண்டிருந்த தீ, இப்போது காட்டுத்தீயைப் போல இன்னும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அவளைத் தன் கையாலேயே கொன்று புதைக்க வேண்டும் என்ற வெறி, நொடிக்கு நொடி அதிகரித்ததே தவிர, கொஞ்சம்கூடக் குறையவில்லை.

இனி…

இவனின் கோபத்தைப் பார்த்த சுனிலுக்கு மூச்சுவிடவே சிரமமாக இருந்தது. இதைவிடப் பெரிய பிரச்சனைகளையெல்லாம் சர்வசாதாரணமாகக் கையாள்பவர், இன்று இந்தப் பெண்ணின் விஷயத்தில் ஏன் இவ்வளவு கோபம் கொள்ள வேண்டும் என்று அவனுடைய மூளையும் மனமும் கேள்வி எழுப்பின.

ஆனால், ஒருபுறம் தான் கஷ்டப்பட்டுக் காப்பாற்றிய சாம்ராஜ்யம், இவள் ஒருத்தியால் ஆட்டம் கண்டுவிட்டது என்று நினைக்கும்போது, விதுரனின் கோபம் நியாயமானதுதான் என்று அவனுக்குத் தோன்றியது. இருந்தாலும், அந்தப் பெண்ணின் நிலையை நினைத்து வருந்தவும் செய்தான்.

இப்படியே ஐந்து நிமிடங்கள் கடந்திருக்க, சுனிலின் மெயிலுக்கு அவன் கேட்டிருந்த தகவல்கள் அனைத்தும் வந்து சேர்ந்தன. அதை ஓபன் செய்து, அதிலிருந்த தகவல்களை ஒவ்வொன்றாகப் பார்த்தவன், உடனே யாருக்கோ அழைத்தான்.

“ஹலோ சார்! சொல்லுங்க. என்ன, ரொம்ப நாள் கழிச்சு கால் பண்ணியிருக்கீங்க?” என்று கேட்டான் எதிர்முனையில் இருந்தவன்.

“உன் கிட்ட இப்போ நலம் விசாரிக்கிற அளவுக்கு நான் இல்லை. உனக்கு ஒரு பொண்ணோட போட்டோ, பேரு எல்லாமே அனுப்பியிருக்கேன். அந்தப் பொண்ணைப் பத்தின எல்லா டீடெயில்ஸும் எனக்கு தேவை. அந்தப் பொண்ணு உன்னோட ஊருதான்.”

“ஓகே சார். நீங்க அனுப்புங்க. இன்னும் ஒன் ஹவர்ல உங்களுக்கு எல்லா டீடெயில்ஸும் வந்துரும்” என்று சொன்னவன் ஃபோனை வைத்தான்.

பிறகு, விதுரனின் முன்பு வந்து நின்ற சுனில்,

“பாஸ், அந்தப் பொண்ணைப் பத்தின ஃபுல் பயோடேட்டா எடுக்கச் சொல்லியிருக்கேன். இன்னும் ஒன் ஹவர்ல கிடைச்சிடும், பாஸ்” என்றான்.

ஆனால், விதுரனோ தன் பார்வையாலேயே அவனிடம் பல கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தான். அவனுடைய பார்வையை உணர்ந்த சுனில், உடனே விளக்கமளிக்கத் தொடங்கினான்.

“பாஸ், சேல்ஸ் டிபார்ட்மென்ட்ல ஒரு ஆள் மட்டும்தான் தேவைப்பட்டிருந்தது. ஆனா, அந்த ரெண்டு பேரோட குவாலிஃபிகேஷனும் ரொம்பவே நல்லா இருந்ததால ரெண்டு பேரையுமே எடுத்திருக்காங்க. வேற எந்த டிபார்ட்மென்ட்ல ஆள் தேவைப்படுறாங்களோ, அங்கே மாத்திப் போட்டுக்கலாம்னு சொல்லியிருக்காங்க. அதுவும் இல்லாம, அந்தப் பொண்ணு எல்லாத்துலயும் டாப்பரா இருக்கா” என்றான்.

அதைக் கேட்ட விதுரனுக்கு ஏதோ ஒன்று மூளையில் உதித்தது. சில நிமிடங்கள் தனக்குள்ளேயே கணக்குப் போட்டுப் பார்த்தவன், சட்டென்று சுனிலை அழைத்தான்.

“சுனில், எனக்குப் பர்சனல் பி.ஏ. வேணும். அதுவும் அவதான் வேணும். ஆல்ரெடி நம்ம கம்பெனியோட ரூல்ஸ் அவளுக்குத் தெரிஞ்சிருக்கும். ஆனா, அவளைப் பொறுத்தவரைக்கும் அந்த ரூல்ஸ் எதுவும் கிடையாது. இனிமே நான் போடுற ரூல்ஸ் மட்டும்தான். நான் சொல்றதை அப்படியே அக்ரிமென்ட்டா ரெடி பண்ணு” என்றான் விதுரன்.

அந்த அக்ரிமென்ட்டில் என்னென்ன இருக்க வேண்டும் என்று ஒவ்வொன்றாகக் கூறினான்.

அதைக் கேட்ட சுனிலுக்கு ஒரு நிமிடம் உலகமே தலைகீழாக மாறிவிட்டதைப் போன்ற அதிர்ச்சி ஏற்பட்டது. விதுரன் சொன்ன நிபந்தனைகளைக் கேட்கும்போதே அவனுடைய உடல் ஒருமுறை நடுங்கியது. அதுவும் அந்த நிபந்தனைகள் ஒரு பெண்ணுக்காகப் போடப்படுகின்றன என்று நினைக்கும்போது, அவனால் அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை.

அப்படியே விதுரனைப் பார்த்துக் கொண்டிருந்தான் சுனில்.

“என்ன சுனில்? நான் சொன்னதெல்லாம் கேட்டுச்சில்ல? போய் அக்ரிமென்ட் ரெடி பண்ணு” என்றான் விதுரன்.

அவன் சொன்னதைக் கேட்ட சுனிலுக்கு, என்னது, பி.ஏ-வா? என்று மீண்டும் அதிர்ச்சியாக இருந்தது.

விதுரன் தன்னுடைய பிசினஸில் கால்பதித்த நாளிலிருந்து இன்று வரை, தனக்குப் பி.ஏ. வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தவன். ஆனால், இப்போது அவனாகவே தனக்குப் பி.ஏ. வேண்டும் என்றும், அதுவும் அந்தப் பெண்ணைத்தான் நியமிக்க வேண்டும் என்றும் சொல்வது சுனிலுக்கு ஆச்சரியமாக இருந்தது.

இருந்தாலும், தயக்கத்துடன் அவனிடம் பேசத் தொடங்கினான்.

“பாஸ், நான் சொல்றேன்னு கோபப்படாதீங்க. உங்களோட கோபம் எனக்குப் புரியுது. ஆனா, ஒரு பொண்ணுகிட்ட இப்படி ஒரு அக்ரிமென்ட் போட முடியுமா?” என்று தயக்கத்துடன் கேட்டான் சுனில்.

தயங்கித் தயங்கி மனதில் பட்டதைக் கேட்டவனை அழுத்தமாகப் பார்த்தான் விதுரன்.

“என்ன சுனில், ரிட்டர்ன் கேள்வியெல்லாம் கேட்க ஆரம்பிச்சிட்ட போல! ஓகே, நோ ப்ராப்ளம். என்னைப் பொறுத்தவரைக்கும் அந்த இடத்துல ஒரு ஆண் இருந்தாலும் சரி, பெண் இருந்தாலும் சரி, என்னோட முடிவு ஒண்ணுதான். அவ ஒரு பொண்ணுங்கிறதுக்காக என் கிட்ட மோதுறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும். மோதினதுக்குப் பிறகு யோசிச்சு எந்தப் பிரயோஜனமும் இல்லை. நான் சொன்னதை இன்னும் பத்து நிமிஷத்துல ரெடி பண்ணிக் கொண்டு வா” என்று அழுத்தமாகக் கூறினான் விதுரன்.

அவன் சொன்னதைக் கேட்ட சுனிலுக்கு, இதற்கு மேல் தன்னால் மறுப்புச் சொல்ல முடியாது என்பது நன்றாகத் தெரிந்திருந்தது. அதனால், அமைதியாக அங்கிருந்து சென்று அக்ரிமென்ட்டைத் தயார் செய்யத் தொடங்கினான்.

அடுத்த பத்து நிமிடங்களுக்குள் அக்ரிமென்ட்டைத் தயார் செய்தவன், அதை எடுத்துக்கொண்டு வந்து விதுரனிடம் கொடுத்தான்.

“பாஸ், நீங்க சொன்ன மாதிரியே எல்லாம் ரெடி பண்ணிட்டேன். ஒன்ஸ் செக் பண்ணிக்கோங்க” என்றான் சுனில்.

எந்தவிதமான சலனமும் இல்லாமல் அந்த ஃபைலை வாங்கிய விதுரன், அதிலிருந்த ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாகப் படித்துப் பார்த்தான். தான் சொன்னபடியே அனைத்தும் சரியாக இருந்ததால், அந்த ஃபைலை மீண்டும் சுனிலிடம் கொடுத்தான்.

“இதுல அவ கிட்ட சைன் வாங்கிட்டு, நாளைக்கு என்னோட பி.ஏ-வா வந்து ஜாயின் பண்ணச் சொல்லு” என்றவன், தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்து கொண்டான்.

அதைக் கேட்ட சுனில், அறையை விட்டு வெளியே வந்ததும் இன்டர்காம் மூலம் சேல்ஸ் ஹெட்டைத் தன்னுடைய அறைக்கு அழைத்தான்.

அடுத்த பத்து நிமிடங்களில் அவனும் சுனிலின் அறைக்கு வெளியே வந்து நின்றான். கதவை இரண்டு முறை தட்டியவன்,

“மே ஐ கம் இன், சார்?” என்று கேட்டான்.

“எஸ், கம் இன்” என்றான் சுனில்.

அவனுடைய அனுமதி கிடைத்ததும் உள்ளே நுழைந்த சேல்ஸ் ஹெட்,

“என்ன சார், என்னை வரச் சொல்லியிருந்தீங்க?” என்று கேட்டான்.

“அது ஒண்ணுமில்ல. ஒரு பொண்ணைப் பத்தி உங்க கிட்ட விசாரிச்சிருந்தேன் இல்லையா? அந்தப் பொண்ணை பாஸுக்கு பி.ஏ-வா போடுறதுக்காக அக்ரிமென்ட் ரெடி பண்ணியிருக்கேன். அந்தப் பொண்ணோட குவாலிஃபிகேஷன் ரொம்பவே நல்லா இருந்ததால, பாஸ் இந்த முடிவை எடுத்திருக்காரு. இந்த அக்ரிமென்ட்ல அந்தப் பொண்ணை சைன் பண்ணச் சொல்லிட்டு, நாளைக்கு வந்து ஜாயின் பண்ணிக்கச் சொல்லுங்க” என்றான் சுனில்.

அதைக் கேட்ட சேல்ஸ் ஹெட்டுக்கு அப்படியொரு அதிர்ச்சி!

என்னது, பி.ஏ-வா? அதுவும் ஒரு பெண்ணா? இத்தனை நாள் பி.ஏ.வே வைத்துக் கொள்ளாமல் இருந்தவர், திடீரென்று ஒருவரை நியமிக்கிறாரே! என்று அவனுக்குள் பல கேள்விகள் எழுந்தன.

ஆனால், அவற்றையெல்லாம் வெளிப்படையாகக் கேட்கும் தைரியம் அவனிடம் இல்லை.

“ஓகே சார். நான் அந்தப் பொண்ணு கிட்ட இன்பார்ம் பண்ணிட்டு, சைன் பண்ணச் சொல்றேன்” என்றான்.

அவன் கிளம்புவதற்குத் தயாரானபோது, சுனில் மீண்டும் அவனை அழைத்தான்.

“அப்புறம், ஒரு நிமிஷம் இருங்க. அந்தப் பொண்ணு அக்ரிமென்ட் படிக்கத் தேவையில்லை. ஏற்கனவே நம்ம கம்பெனி ரூல்ஸ் அவளுக்குத் தெரிஞ்சிருக்கும். இது பி.ஏ-வுக்கான ஒரு ஃபார்ம் மட்டும்தான். எக்ஸ்ட்ராவா அட்டாச் பண்ணியிருக்கேன். ஆல்ரெடி அந்த ஃபார்ம்கூட நானே ஃபில் பண்ணிட்டேன். அதனால, இருக்கிற அக்ரிமென்ட்டில் புதுசா எதுவும் இல்லை. படிக்கத் தேவையில்லை. சைன் மட்டும் வாங்கிக்கோங்க” என்றான் சுனில்.

அவனுக்கும் இந்தக் கம்பெனியின் ரூல்ஸ் தெரிந்திருந்ததால், அனைவருக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள்தான் இருக்கும் என்று நினைத்தான்.

“ஓகே சார். சைன் வாங்கிட்டு இந்த ஃபைலை உங்க கிட்ட கொடுக்கச் சொல்றேன்” என்று கூறியவன் அங்கிருந்து கிளம்பினான்.

அவன் சென்றதும், சுனில் தன்னுடைய இருக்கையில் சாய்ந்து கொண்டான்.

இனி என்னென்ன நடக்கப் போகிறதோ! என்று மனதிற்குள் நினைத்தவன், பெருமூச்சு விட்டுவிட்டு மீண்டும் தன்னுடைய வேலையில் மூழ்கினான்.

சுனிலின் அறையிலிருந்து கீழே வந்த சேல்ஸ் ஹெட், அந்தப் பெண்ணைத் தேடிச் சென்றான்.

அவளைக் கண்டதும், அவளிடம் நடந்த விஷயங்களை எடுத்துச் சொன்னான்.

அதைக் கேட்டவளுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.

“என்ன சார் சொல்றீங்க? நீங்க சொல்றது உண்மையா?” என்று மகிழ்ச்சியுடன் கேட்டாள்.

“உண்மைதாம்மா சொல்றேன். இப்போதான் சாரோட மேனேஜர் இந்த ஃபைலைக் கொடுத்து, என்கிட்ட எல்லாமே சொன்னாரு. பாஸுக்கு அடுத்தபடியா அவர்தான் இந்த ஆபீஸ் முழுக்க கண்ட்ரோல் வச்சிருக்காரு. அவரே சொல்லும்போது, இது உண்மையாதான் இருக்கும். இதுல சைன் பண்ணிட்டு, ஆபீஸ் பாய் கிட்ட கொடுத்துடும்மா” என்றான் சேல்ஸ் ஹெட்.

அவளிடம் அந்த ஃபைலைக் கொடுத்துவிட்டு, அவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.

அந்த ஃபைலைக் கையில் வாங்கியவளுக்கு அளவில்லாத சந்தோஷம். இத்தனை பெரிய கம்பெனியின் முதலாளிக்கு நேரடியாகப் பி.ஏ-வாக வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றால், அவளுடைய மகிழ்ச்சிக்கு அளவேது?

இந்த விஷயத்தை உடனே தன்னுடைய தோழியிடம் சொல்ல வேண்டும் என்று ஆவலுடன் அவளைத் தேடினாள்.

ஆனால், அவள் அங்கே இல்லை.

இவள் தன்னுடைய தோழியைத் தேடிக் கொண்டிருந்தபோது, அவளுக்கு முன்னால் ஆபீஸ் பாய் வந்து நின்றான்.

அவனைப் பார்த்ததும், சரி, முதலில் சைன் செய்து கொடுத்துவிட்டு, பிறகு தோழியிடம் சொல்லலாம் என்று நினைத்தாள்.

அதனால், அந்த ஃபைலைத் திறந்து பார்க்கக்கூட அவளுக்குத் தோன்றவில்லை. அதிலிருந்த நிபந்தனைகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம்கூட இல்லாமல், கையெழுத்திட வேண்டிய இடங்களிலெல்லாம் கையெழுத்திட்டாள்.

ஆனால், இந்தச் சின்னக் கையெழுத்தால் அவளுடைய தலையெழுத்தே மாறப்போகிறது என்பது அவளுக்குத் தெரியவில்லை.

அவளைப் பார்த்து விதி நமட்டுச் சிரிப்புச் சிரித்தது.

என்னுடைய ஆட்டம் இப்போதுதான் ஆரம்பம். என் பிடியிலிருந்து நீ தப்ப முடியாது! என்று சொல்வதைப் போல இருந்தது அந்த விதியின் சிரிப்பு.

கையெழுத்திட்டு முடித்தவள், அந்த ஃபைலை ஆபீஸ் பாயிடம் கொடுத்துவிட்டு, தன்னுடைய தோழியைத் தேடிச் சென்றாள்.

அந்த ஃபைலை வாங்கிய ஆபீஸ் பாய், நேராகச் சுனிலின் அறைக்குச் சென்று அவனிடம் கொடுத்தான்.

அதை வாங்கிய சுனில், உடனே விதுரனின் அறைக்குச் சென்றான்.

அவன் வந்து நிற்பதைக்கூட நிமிர்ந்து பார்க்காமல், தன்னுடைய வேலையில் கவனமாக இருந்த விதுரன்,

“என்ன சுனில், அவ கிட்ட சைன் வாங்கிட்டியா?” என்று கேட்டான்.

“எஸ், சார். சைன் வாங்கியாச்சு. இந்தாங்க, பாஸ்” என்று கூறிய சுனில், அந்த ஃபைலை அவன் முன்னால் வைத்தான்.

அந்த ஃபைலைக் கையில் எடுத்த விதுரனின் கண்களில் அப்படியொரு குரோதம்!

இனி என்னிடமிருந்து அவளால் தப்பவே முடியாது! என்று அவனுடைய மூளையும் மனமும் ஆணித்தரமாகச் சொல்லின.

ஏன், விதிகூட அவனுக்குச் சாதகமாகவே சிரித்தது.

இனி என்னிடமிருந்துகூட அவளால் தப்பிக்க முடியாது! என்று சொல்வதைப் போல இருந்தது அந்த விதியின் சிரிப்பு.

“இந்த டாக்குமென்ட்டை முக்கியமான ஃபைல்ஸோட சேர்த்து லாக் பண்ணிடு. அப்புறம், லாக்கர் ரூம்ல வைக்கிறதுக்கு முன்னாடி ஒரு காப்பி எடுத்துக்கோ” என்றான் விதுரன்.

“ஓகே, பாஸ்” என்றான் சுனில்.

விதுரன் சொன்னபடியே அந்த டாக்குமென்ட்டின் ஒரு காப்பியை எடுத்துக் கொண்டான் சுனில். அதன்பிறகு, அதை லேப்டாப்பிலும் ஸ்கேன் செய்து சேமித்துவிட்டு, அசல் ஃபைலை லாக்கர் ரூமில் பத்திரமாக வைத்துப் பூட்டினான்.

இனி என்ன நடக்கும் என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

இப்படிக்கு உங்கள் அன்புத் தோழி…

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!