உருத்திரா❤️18

 

ஒருவழியாக அனைவரும் கிளம்பி மண்டபத்தை அடைந்தபோது இரவு ஒன்பது மணியாகிவிட்டது.

“எருமை! பேக்கை பிடிடா!” விமலை விரட்டிக்கொண்டிருந்த சரபனின் கையில் ஒரு பையைத் திணித்துவிட்டு, இன்னொரு பையுடன் தூக்கமுடியாமல் நின்றாள் நிலா.

“ருத்ரா, இந்த பேக் பிடி. என்னால தூக்க முடியல!”

அவள் கையிலிருந்த பையை வாங்கியவன், தம்பி பத்ரனிடம் தூக்கி எறிய, பத்ரனோ அண்ணனை முறைத்தான்.

ருத்ரா அவனை கண்டுகொள்ளாமல் நிலாவை அப்படியே தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு மண்டபத்துக்குள் நடக்க ஆரம்பித்தான்.

“டேய் பாகுபலி, இறக்கிவிடு! எல்லாரும் பார்க்குறாங்க ருத்ரா!”

“பார்த்தா பார்க்கட்டும் மஃபின்!” என யாரையும் கண்டுகொள்ளவில்லை.

தன்னை தாண்டி போகும் ஆறடி உயர மலையையும், அவனுடைய தோளில் பாவமாகத் தொங்கிக்கொண்டிருந்த தங்கச்சிலை அக்காவையும் பார்த்த திகள்விழி வாயை பிளந்தாள்.

அது மனுஷிடா எதோ துண்டை தூக்கிட்டு போறமாதிரி போறான்! என்று நினைத்தபடி திரும்பியவள், ஆண்கள் கூட்டத்தோடு நடந்து வந்த பத்ரனை கண்டதும் புன்னகையோடு அவனிடம் ஓடினாள்.

“மாமா!” என அவன் மீது திகள் குதித்த நொடி பத்ரன் தன் கையிலிருந்த பையை சரபன், விமல் மீது வீசிவிட்டு அவள் விழுந்துவிடாமல் இடையோடு பிடித்துத் தூக்கினான்.

“ஐயோ! மூக்கு போச்சே!” என இருவர் கத்துவதை காதில் வாங்கவில்லை காதலர்கள்.

பச்சைத் தாவணியில் கொள்ளை அழகுடன் போதையேற்றும் திகள்விழியை தூக்கிக்கொண்டு உள்ளே போனான் பத்ரன்.

“குட்டச்சி… என்ன போதை ஏத்துறியே!” அவளுடைய கூந்தலில் சூடியிருந்த மல்லிகை மலர்களை ஆழமாகச் சுவாசித்தவன் குரல் உண்மையில் போதையாக வந்தது.

 

“மாமா…” என்ற வார்த்தையை அவள் முடிப்பதற்குள் பத்து முத்தமாவது அவள் இதழ்களில்  கொடுத்திருப்பான்.

“போதும் மாமா! உள்ளே போகலாம். அபிகிட்ட போகணும்” என அவனிடமிருந்து விடுபடப் போராடியவளுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

அவளை இன்னும் இறுக்கமாக அணைத்து விடுவித்த பத்ரன், அவளுடைய நெற்றியில் முத்தமிட்டுவிட்டு உள்ளே அழைத்துச் சென்றான்.

 

மணமகள் அறையில் நிலா பதற்றத்துடன் நடந்துகொண்டிருந்தாள்.

அவளுடைய கைகளில் இருந்த ஜூஸ் பாட்டிலை திகள்விழியிடம் கொடுக்க,

“அக்கா எனக்கு வேண்டாம். நீ குடி!” என மறுத்தாள் திகள்.

“அடியேய்! இது நமக்கு இல்ல, ருத்ராவுக்கு குடுக்க வேண்டிய மயக்க மருந்து கலந்த ஜூஸ். பத்திரமா அவர்கிட்ட குடுக்கணும் ஆனால் எப்படி குடுக்கிறதுன்னு தெரியல. பயமா இருக்கு அதான் அவருக்காக காத்திருக்கேன்”

“நீயே கொண்டு போய் குடு அக்கா, நாங்க போனா கண்டுபிடிச்சிடுவாரு. நான் ஒண்ணு பண்றேன். உங்களை யாரும் டிஸ்டர்ப் பண்ணாம பார்த்துக்கிறேன்”

திகள்விழி சொல்ல, நிலா தயக்கத்துடன் தலையாட்டினாள்.

“சரி வா போகலாம்!” என  இருவரும் வெளியே வந்தபோது அபிராமி சில உறவினர்களுடன் நின்றிருந்தார்.

நிலாவை அவர்களிடம் அறிமுகப்படுத்தியவர் மேலும் பேசிக்கொண்டே இருக்க, நிலாவுக்கு நேரம் செல்லச் செல்ல பதற்றம் அதிகரித்தது.

‘ருத்ரா தூங்கிட்டா என்ன பண்றது?’

அவள் அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனித்த திகள்விழி, “அபி, ருத்ரா மாமா நிலா அக்காவை கூப்பிட்டாரு. அவ போகலைன்னா டென்ஷன் ஆகிடுவாரு” என்று சமாளித்து நிலாவை அனுப்பினாள்.

அபிராமி அனுமதித்ததும், நிலா வேகமாக மணமகன் அறையை நோக்கிச் சென்றாள்.

அறையில் ருத்ரா இல்லை என்றதும் 

‘இவன் எங்க போனான்?’ என்ற குழப்பத்துடன் வெளியே வந்தவளின் பார்வையில் சரபனும் விமலும் பட்டனர்.

“ருத்ரா எங்க போனாரு? நீங்க பார்த்தீங்களா?”

“சார் மொட்டை மாடியில இருக்காரு மேடம். இப்போதான் பத்ரன் சார்கூட பேசிட்டு வரோம்!” என்றான் விமல்.

“ஓகே நான் மேலே போறேன்” என நிலா நகரப்போக, விமல் அவளைத் தடுத்தான்.

“மேடம், கொஞ்சம் ஜூஸ் தாங்களேன் பசிக்குது!” என அவள் கையிலிருந்த பாட்டிலை வாங்கி, யோசிக்காமல் வாயில் ஊற்ற ஆரம்பித்தான்.

“ஐயோ! அதைக் குடிக்காதிங்க!”

நிலா பதறிப்போய் அவன் கையிலிருந்த பாட்டிலைப் பிடுங்கினாள்.

சரபன் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தான்.

“ஏன்? என்னாச்சு நிலா?”

ஐயோ! மயக்கமருந்துன்னு சொன்னா ருத்ரா காதுக்கு விஷயம் போயிடுமே! என்ற பயத்தில்,

“அது… அது கெட்டுப்போயிடுச்சு சார்! முதல்ல விமலை வாந்தியெடுக்க வைங்க இல்லைனா உடம்பு முடியாமப் போயிடும்” என்று சமாளித்துவிட்டு மாடிப்படிகளில் ஏறினாள்.

சரபனுக்கு விஷயம் புரிந்தது.

“டேய் விமல்! குடிச்சதை வாந்தி எடுத்துத் தொலைடா, ஃபுட் பாய்சன் ஆகி மயங்கிட்டா என்ன பண்றது?”

“என்னது ஃபுட் பாய்சனா?” பயந்துபோன விமல் பாத்ரூமை நோக்கி ஓடினான்.

அவனைப் பார்த்த சரபன் தலையில் அடித்துக்கொண்டான்.

மொட்டை மாடியில் அண்ணனும் தம்பியும் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.

நிலா அங்கே வந்ததும் பத்ரன் பேச்சை நிறுத்திவிட்டு அவளை அழுத்தமாக பார்க்க, பயத்தில் நிலாவின் முதுகுத்தண்டு சில்லிட்டது.

“பத்ரன் சார்…” என அவள் பயத்துடன் அழைக்க, ருத்ரா உடனே அவளைத் தன்னருகே இழுத்து அணைத்துக்கொண்டான்.

“மஃபின்!”

அவளுடைய முகத்தை தன் நெஞ்சில் புதைத்துக்கொண்டான்…

பத்ரன் இருவரையும் முறைத்துவிட்டு கீழே இறங்கினான்.

அவன் சென்றதும் நிலா ருத்ராவிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தாள், 

“ஏன் கோவமா இருக்கிங்க? நான் தப்பான நேரத்துல வந்துட்டேனா?”

“இல்ல ஆரலி, நாங்க நார்மலாத்தான் பேசினோம். நீ தூங்கலையா? என்னைத் ஏன் தேடி வந்த?”என்றவன் கேள்வியில் அவளுடைய மனம் தடுமாறியது.

அவனுக்காகவே தயாரித்திருந்த ஜூஸை அவனிடம் நீட்டினாள்.

“உனக்கு ஃப்ரெஷ்ஷா ஜூஸ் கொண்டு வந்தேன். குடுக்க மறந்துட்டேன் இந்தா குடி!”

அவளுடைய கைகள் லேசாக நடுங்கின.

ருத்ரா அதை பார்த்தாலும் வெளிப்படையாகக் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. அவளைப் பார்த்துச் சிரித்தபடி ஜூஸை வாங்கிக் குடித்து முடித்தான்.

“இன்னைக்கு நைட் வரை மட்டும் உனக்கு வாய்ப்பு!” என்றதும் நிலா அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள்.

“இன்னைக்கு நைட் என்ன வாய்ப்பு?”

ருத்ரா அவளுடைய கன்னத்தைத் தட்டி,

“நாளைக்கு காலையில என் கையால தாலி வாங்கிட்டா, அதுக்கப்புறம் எங்கேயும் தப்பிக்க முடியாதே! அதைத்தான் சொன்னேன்”

அவனுடைய உதடுகளில் இருந்த நமட்டுச் சிரிப்பு, நிலாவின் வயிற்றில் புளியைக் கரைத்தது போலிருந்தது.

“எல்லாம் தெரிஞ்சு பேசுறானா? இல்ல வழக்கம்போல என்னைச் சீண்டுறானா?” என்று அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.

அவளுடைய முகத்தை இன்னொரு முறை அழுத்தமாக பார்த்துவிட்டு ருத்ரா உள்ளே சென்றான்.

மறுபுறம் பத்ரன் திகள்விழியை தேடிச் சென்றான்.

“விழி!”

“என்ன மாமா?” அவனைப் பார்த்துச் சிரித்தபடி ஓடிவந்தாள்

ஆனால் பத்ரனின் முகத்தில் சிரிப்பே இல்லை.

“என்கிட்டருந்து எதாவது முக்கியமான விஷயத்தை மறைக்கிறியா?” என்று கூர்மையாக வந்த அவன் வார்த்தைகளை கேட்டு திகள்விழியின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.

“ஏன் இந்த திடீர் கேள்வி?”

“பதில் சொல்லு விழி. என்கிட்டருந்து எதையாவது மறைக்கிறியா?”

“இல்லையே! நான் உங்கிட்ட எதையும் மறைக்கல, நம்புங்க மாமா” என பட்டென வந்த அவளுடைய பதிலை கேட்டவன் சில நொடிகள் அமைதியாக இருந்தவன்,

“ஓஓஓ… அப்போ என்கிட்ட நீ உண்மையாத்தான் இருக்க, ரைட் நீ போகலாம்” என்றவனை பயத்தோடு பார்த்தவள் ஏதோ சொல்லவந்தாள்.

அவ்வளவு தான் பத்ரன் பார்த்த தீ பார்வையில் வார்த்தை வர மறுத்தது. வேகமாக உள்ளே ஓடிவிட்டாள்.

அவள் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்த பத்ரனின் முகம் இறுகியது.

நள்ளிரவு கடந்ததும், மண்டபத்தில் ஆட்களின் நடமாட்டம் மெல்லக் குறைந்தது.

நிலா மெதுவாக ருத்ராவின் அறைக்குள் நுழைந்தாள்.

அவளுடைய உள்ளங்கையில் மறைத்து வைத்திருந்த ஊசி வியர்வையால் நனைந்திருக்க, அவள் கைகளோ நடுங்கிக்கொண்டிருந்தது.

நான் செய்யப்போவது சரியா? என்ற கேள்வி வேறு நேரம் காலம் தெரியாமல் அவளை உலுக்கி எடுக்க, அதே நேரத்தில் அவளுடைய காதுகளில் ருத்ராவின் வார்த்தைகள் ஒலித்தன.

‘என்னை விட்டு போகணும்னு நீ நினைக்கிற அந்த நிமிஷமே உன்னைக் கொன்னுடுவேன்!’

“நிலா யோசிக்காத!” என கதவருகிலிருந்து சரபனின் குரல் கேட்டதும் அவள் திடுக்கிட்டு நிமிர்ந்தவள், ‘இல்லை நான் செய்றது சரிதான்!’ என மனதை தேற்றிக்கொண்டு ஊசியை ருத்ராவுக்கு போட்டு விட்டு வெளியே வந்தாள்.

“சரியா ஒரு மணிக்கு உன் ஃபேமிலியை கூட்டிட்டு கிளம்பிடு நிலா, மிச்சத்தை நான் பார்த்துக்கிறேன்” என்று சரபன் சொன்னதும் நிலா சரியென தலையாட்டினாள்.

ஆனால் அறைக்குள் நுழைந்தவளுடைய கால்கள் தள்ளாடியது, அவளுடைய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

திகள்விழி, அக்காவின் அருகே அமர்ந்து சமாதானம் செய்யதாள்.

சரியாக இரவு ஒரு மணி, யாருடைய பார்வையிலும் படாமல் ஒவ்வொருவராக மண்டபத்திலிருந்து வெளியேறினர்.

ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரில் நிலாவின் குடும்பத்தினர் ஏறிக்கொண்டனர்.

கடைசியாகக் காரில் ஏறிய நிலா, மண்டபத்தைத் திரும்பி பார்த்தவளுடைய கண்கள் கலங்கி இருந்தது.

கார் மெதுவாக நகரத் தொடங்கியது.

சரபனுக்கு நிலா பாதுகாப்பாகக் கிளம்பிவிட்டாள் என்ற செய்தி கிடைத்தது.

அவனும் உடனடியாகத் தன் ஆட்களிடம் தொடர்புகொண்டு, கார் சென்னையைத் தாண்டும் வரை கண்காணிக்கச் சொன்னான்.

நிலா பாதுகாப்பாகப் போனாள் போதும், இனி ருத்ராவை எப்படிச் சமாளிப்பது என்று அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்!

என்று நினைத்தவன் பெருமூச்சு விட்டான்.

அதிகாலை மூன்றரை மணி. திருமணத்திற்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்துகொண்டிருந்தன.

மணமகளை அலங்கரிக்க வந்த பெண்கள், மணமகள் அறைக்குள் நுழைந்ததும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

அங்கே நிலாவையும் காணவில்லை,

அவளுடைய குடும்பத்தினரையும் காணவில்லை.

முதலில் ஏதோவொரு அறையில் இருப்பார்கள் என்று நினைத்து, ஒவ்வொரு இடமாகத் தேடத் தொடங்கினர்.

நேரம் செல்லச் செல்லப் பதற்றம் அதிகரித்தது.

சரி ருத்ராகிட்ட சொல்லலாம் என்று மணமகன் அறைக்கு போக, அங்கு மணமகன் அறையிலிருந்து சரபனும் விமலும் கத்தும் சத்தம் கேட்டது.

“டேய் ருத்ரா! மச்சான், கண்ணைத் திறடா!” சரபனின் குரல் மண்டபத்தையே அதிர வைத்தது.

அறைக்குள் ஓடிச்சென்றவர்கள் கண்ட காட்சி அவர்களை உறைய வைத்தது.

ருத்ரா படுக்கையில் பேச்சு மூச்சின்றிக் கிடந்தான்.

விமல் பதட்டமாக ஆம்புலன்ஸ்க்கு அழைக்க ஓடினான்.

சில நிமிடங்களுக்குள் மண்டபமே கலவரமாக மாறியது.

ருத்ராவை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல ஏற்பாடுகள் நடந்தன.

அவனைத் தூக்கிச் செல்லும்போது, சரபனின் கைகள் நடுங்கின.

மருத்துவமனையில் ருத்ராவுக்கு சிகிச்சை நடந்துகொண்டிருந்தது.

வெளியே பத்ரன் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு நின்றிருந்தான்.

ஒருபுறம் உறவினர்களின் கேள்விகள்.

மறுபுறம் குடும்பத்தினரின் அழுகை.

என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை.

அபிராமி கண்ணீரைத் துடைத்துக்கொண்டு பத்ரனிடம் கேட்டார்.

“என் பேரனுக்கு என்ன ஆச்சு? நல்லாத்தானே இருந்தான், திடீர்னு இப்படி ஆகிட்டானே!”

பத்ரனால் பதில் சொல்ல முடியவில்லை.

அப்போது வேகமாக டாக்டர் வெளியே வந்தார், அவருடைய முகத்தில் இருந்த தீவிரத்தை பார்த்ததும் அனைவரும் அவரைச் சூழ்ந்துகொண்டனர்.

“டாக்டர்! என் பேரனுக்கு என்ன ஆச்சு?” என அபிராமி பதற்றத்துடன் கேட்டார்.

“பேஷன்ட் உடம்புல பாய்ஷன் அதிக அளவுல கலந்திருக்கு, அவரோட நிலைமை ரொம்ப மோசமா இருக்கு” 

“விஷமா?” என சாம்பவி அதிர்ந்து போனார்.

சரபன் துடித்துப்போய் மருத்துவரின் கைகளை பிடித்து கெஞ்சலாக பேசினான் “டாக்டர்,அவனைக் காப்பாத்த முடியுமா?”

“நாங்கள் எங்களால் முடிஞ்சதை செய்றோம், ஆனால் உறுதியா எதையும் சொல்ல முடியாது” என்றவர் வார்த்தைகள் அனைவரையும் நிலைகுலைய செய்தன.

“நிலாதான் என் பேரனுக்கு சாப்பாடு குடுத்தா!” என அபிராமியின் குரல் உடைந்து வந்தது.

“அவனை விட்டு தப்பிச்சுப் போறதுக்காக என் பேரனைக் கொல்ல முடிவு பண்ணிட்டாளே!” என அவர் நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதார்.

சாம்பவியும் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் கதறினார்.

சரபன் ஒரு மூலையில் நின்றுகொண்டு தலையைப் பிடித்தான். அவனுடைய மனதில் குற்றவுணர்வு அலைமோதியது.

நிலாவைத் தப்பிக்க வைக்க உதவ மயக்க மருந்து கொடுக்க சொன்னது அவன்தானே! ஆனால் அவள் ருத்ராவுக்கு விஷம் வைத்திருப்பாள் என்று அவன் நினைத்து கூட பார்க்கவில்லை.

சரபன் தன் கைப்பேசியில் யாருக்கோ அவசரமாக ஒரு குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு, நடராஜனின் முன் வந்து நின்றான்.

“தாத்தா என்னை மன்னிச்சிடுங்க, நிலா மேல இருந்த நம்பிக்கையில அவ கையில ருத்ராவுக்கு தேவையான மாத்திரை, இன்ஜெக்ஷன், மயக்க மருந்து எல்லாத்தையும் குடுத்தேன். அவ மயக்கமருந்துக்கு பதிலா விஷத்தை குடுப்பானு நானும் எதிர்பார்க்கல!”

“இனியும் நாம அமைதியா இருக்க வேண்டிய அவசியமில்லை. போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாம். ருத்ரா நிலைமைக்கு காரணமானவங்களை சட்டத்துக்கு முன்னாடி நிறுத்தணும்!”

அவன் சொன்னதைக் கேட்டதும் மகாதேவனின் கோபம் மேலும் அதிகரித்தது.

“ஆமாம் அப்பா! என் பையனையே படுக்க வச்சுட்டாங்க. அவனை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தவங்களை சும்மா விடக்கூடாது!” என்று ஆவேசமாகக் கத்தினார்.

“அப்பா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!” என்று இடையில் புகுந்தான் பத்ரன்.

அவனை திரும்பி முறைத்த சரபனின் கண்களில் அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த கோபம் அனலாக மாறியது.

“என்னடா பேசுற? உன் அண்ணனுக்கு விஷம் குடுத்து கொல்லப் பார்த்திருக்காங்க! நான் அந்தப் பொண்ணுக்குக் கொடுத்தது மயக்கமருந்து. ருத்ராவைக் கண்ட்ரோல் பண்ண வேண்டிய சூழ்நிலை வந்தா பயன்படுத்திக்கட்டும்னுதான் கொடுத்தேன். ஆனா அவளும், அவ குடும்பமும் ருத்ராவைக் கொலை பண்ற அளவுக்குப் போயிருக்காங்க!” என ஆவேசமாக கத்தினான்.

அவன் குரலில் இருந்த ஆவேசம் அங்கிருந்தவர்களை ஒரு கணம் அமைதியாக்கியது. ஆனால் பத்ரனோ அவனை சந்தேகத்துடன் பார்த்தான்.

“நிலா விஷம் குடுத்தானு எப்படி உறுதியா சொல்ற? அவளா வந்து சொன்னாதான் உண்மை தெரியும்”

அவ்வளவுதான்! சரபனின் முகம் கோபத்தில் இறுக “ஓஹோ! உனக்கு உன் அண்ணனைவிட அந்தப் பொண்ணு மேல இருக்குற காதல்தான் பெருசாப் போயிடுச்சா? நீயெல்லாம் ஒரு மனுஷனா? 

 

உன் அண்ணன் உயிருக்கு ஆபத்தான நிலைமைல இருக்கான். இந்த நேரத்தில்கூட அந்தப் பொண்ணும், அவ குடும்பமும் உனக்கு முக்கியமா போய்ட்டாங்களா?” என்று கத்தியவன், பத்ரனை அடிப்பதற்குக் கையை ஓங்கினான்.

“உன்னைவிட இந்த உலகத்துலயே ஒருத்தன் கேவலமானவனா இருக்க முடியாது! நீ என் மாமாவைக் கேவலமாவனு சொல்றியா நாயே?”

திகள் குரல் அந்த இடத்தையே அதிர வைத்தது.

அனைவரும் ஒரே நேரத்தில் வாசலைத் திரும்பிப் பார்த்தார்கள்.

அங்கே நிலாஞ்சி நின்றிருந்தாள், அவளுக்குப் பின்னால் சோமசுந்தரம், பார்வதி, திகள், பேபி என அனைவரும் உக்கிரமாக நின்றிருந்தனர்.

நிலாவின் முகத்தில் வழக்கமான அமைதியோ, சிரிப்போ இல்லை. அவளுடைய கண்களில் கொற்றவையின் ஆங்காரம் கொழுந்துவிட்டு எரிந்தது.

அழுதுகொண்டிருந்த ருத்ராவின் குடும்பத்தினர், முகம் இறுக நின்ற பத்ரன், கோபத்தில் துடித்த சரபன் என அனைவருடைய பார்வையும் நிலா குடும்பத்தின் மீது பதிந்தது.

“என்ன பார்க்குறீங்க தம்பி?” என்று நக்கலாகக் கேட்ட பார்வதி. “ஊரை விட்டு ஓடிட்டாங்க, இஷ்டத்துக்குக் கதை கட்டி, பழியை தூக்கி எங்க தலையில போட்டுடலாம்னு பார்த்திங்களா?”

அவருடைய இதழ்கள் கேலியாக வளைந்தன.

நிலாவைப் பார்த்த சரபன் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து நின்றான். மறுகணம் அவளை நோக்கி ஆவேசமாக அடிக்கப் பாய்ந்தான்.

அவன் அருகில் வருவதற்குள் அவனுடைய கன்னத்தில் ஓங்கி ஓர் அறை நிலா கொடுக்க, அந்த அடியின் வேகத்தில் நிலைதடுமாறிய சரபன் கீழே விழுந்தான்.

அனைவரும் அதிர்ச்சியில் வாயடைத்துப் போனார்கள். நிலா தன் கையை உதறிக்கொண்டாள்.

“ அபி, பவி முதல்ல அழுகுறதை நிறுத்துங்க. உள்ள உங்க பேரன் கேம் விளையாடிட்டு இருக்காரு!” என்று சிடுசிடுத்தாள் திகள்விழி.

அவள் சொன்னதைக் கேட்டு மகாதேவன் திகைத்தார். “அடப்பாவிகளா! என்னடா நடக்குது இங்க?” என்று பத்ரனைப் பார்த்தார்.

ஆனால் பத்ரனோ நிலாவுக்கு இணையாகக் கோபத்தில் நின்றுகொண்டிருந்தான்.

மகாதேவன் டாக்டரை பிடித்து இழுத்துகொண்டு வர, ‘எனக்கு ஒன்னும் தெரியாது! ருத்ரா சார் தான் ஸ்கிரிப்ட் குடுத்தாரு’ என பயந்து ஓடிவிட்டார்.

“அவருக்கு நாங்க விஷம் வைக்கல, மாமாவும் அவரும் சேர்ந்து பிளான் பண்ணி வந்து படுத்திருக்காங்க” என 

திகள் சொன்னதும், 

மகாதேவன் வேகமாக ஐ. சி. யூ கதவை திறந்து கொண்டு உள்ளே போக, பால்கடலில் பரந்தாமன் பள்ளிகொண்டிருப்பதைப் போல படுக்கையில் படுத்து செல்போனில் கேம் விளையாடும் தன் மகனைப் பார்த்து பல்லை கடித்தார். 

“ஏன்டா! இவ்வளவு நேரம் நாங்க இங்க உயிரைக் கையில பிடிச்சுக்கிட்டு இருக்கோம். நீ கேம் விளையாடிட்டு ஹாயா படுத்திருக்க” என்று திட்டயவரோ, அவனுடைய கைப்பேசியைப் பிடுங்கி எறிந்தார்.

“இங்க என்னதான் நடக்குது? ஒருத்தராவது தெளிவா சொல்லுங்க”

நடராஜனின் குரலில் இருந்த கோபம் அந்த அறையையே அமைதியாக்கியது.

அடிவாங்கி கீழே கிடந்த சரபனின் அருகில் குனிந்த நிலா!

“என்ன அண்ணே… நல்லா இருக்கீங்களா?” என்ற ஆரலி குழந்தைத்தனமாக கேட்பதைப் போல அவள் கேட்ட விதத்தில் சரபன் பயந்து பின்னால் நகர்ந்தான்.

“ஏன்டா என் அம்மாச்சியைக் கொன்ன? நாங்க யார் வம்புக்கும் போகாம நிம்மதியா வாழ்ந்துட்டு இருந்தோம். எங்க குடும்பத்தை அழிச்சது மட்டும் இல்லாம உன்னை நண்பனா நினைச்ச ருத்ராவுக்கும், பிள்ளையா நினைச்ச அவர் குடும்பத்துக்கும் கூடவே இருந்து துரோகம் பண்ணியிருக்க!”

அவளுடைய கண்களில் கண்ணீர் மின்னியது. 

“உன்னை அடிச்சே கொல்ற அளவுக்கு எனக்கு ஆத்திரம் வருது. ஆனா சாதாரணமா நீ செத்துடக்கூடாது, நீ பண்ண ஒவ்வொரு தப்புக்கும் சட்டத்துக்கு முன்னாடி பதில் சொல்லணும். ஜெயில்ல இருக்குற ஒவ்வொரு நாளும் உன் குற்றத்தை நினைச்சு நீ துடிக்கணும்!”

“ஆரலி…”

ருத்ராவின் குரல் கேட்டதும், சட்டென்று அவனை உக்கிரமாய் பார்த்தாள்.

“வாயை மூடு! ஆரலி செத்துட்டா! அவளை நீதான் கொன்ன, இப்போ உன் முன்னாடி நிக்கிறது நிலாஞ்சி. 

உனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தேன் ருத்ரா. நிலாஞ்சியா என்னை ஏத்துக்கோனு ஒவ்வொரு நிமிஷமும் முன்னாடி வந்து நின்னேன் ஆனா கடைசிவரை உனக்கு ஆரலிதான் வேணும்னு பிடிவாதமா என்னை மறுத்துட்ட, இனிமேல் உனக்கு அந்த வாய்ப்பு கிடையாது!” என்றவளுடைய குரலில் வலியும் கோபமும் ஒன்றாக கலந்திருந்தது.

பிறகு நடராஜனை நோக்கித் திரும்பி “இவன் உங்க பேரனோட நண்பன் இல்லை சார். துரோகி! கூடவே இருந்து குழி பறிச்ச துரோகி!” என சரபனைச் சுட்டிக்காட்டினாள்.

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!