உருத்திரா ❤️20

 

“மேடம் இவனை கைது பண்ணுங்க. இவன் செய்த குற்றங்களுக்கான ஆதாரங்கள் எல்லாம் நான் குடுக்குறேன், விசாரணை நடத்தி, சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுங்க” என்றவன் சரபனிடம் போனான். 

ருத்ரா முகத்தில் கோபம் இல்லை, அமைதி மட்டுமே இருந்தது.

“சரபா… என் குடும்பத்துக்கு நிகரா உன்னை நம்பினேன். எந்த இடத்திலயும் உன்னை எனக்குக் கீழே இருக்கிறவனா நினைச்சதே இல்லை. நீ என்னை மட்டும் ஏமாத்தியிருந்தா, ஒருவேளை உன்னை மன்னிக்க முயற்சி பண்ணியிருப்பேன்”

“ஆனா நீ என் ஆரலியோட அம்மாச்சியைக் கொன்னிருக்க. உன் சொந்த அப்பாவையே படுக்கையில முடமா தள்ளியிருக்க, ஆரலியை என்னிடமிருந்து பிரிக்க முயற்சி பண்ணியிருக்க, என் வாழ்க்கையை அழிக்க நினைச்சிருக்க, இதுக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது!”

சரபனின் கண்களை நேராகப் பார்த்து, “ஜெயில் உன்னோட தப்புகளை ஒவ்வொரு நாளும் உனக்கு ஞாபகப்படுத்தும். நீ இழந்தது என்னன்னு புரிய வைக்கும்” என்று அழுத்தமாக சொன்னான்.

தன் சட்டைப் பையிலிருந்து ஒரு போட்டோவை எடுத்த ருத்ரா, 

“இன்னொரு விஷயத்தை உனக்கு காட்டணும்னு இத்தனை வருஷமா காத்திருந்தேன்” என அந்த போட்டோவை சரபனின் முன் நீட்டினான்.

அதில் ஆரலி அழுதுகொண்டிருந்தாள். அவளுடைய கழுத்தில் ருத்ரா கருப்புக் கயிறை கட்டிக்கொண்டிருந்தான்.

அதை கண்ட சரபனின் முகம் வெளிறியது. “இது… இது எப்போ நடந்தது? என்று கேட்டான்.

“ஆரலி என் மனைவி சரபா!” என ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தமாகச் சொன்னான்.

“நீ என்னை இத்தனை வருஷமா பைத்தியம்னு நினைச்ச, ஆனா உண்மையிலேயே இத்தனை வருஷமும் உன்னை என் கண்ணுக்கு முன்னாடி பைத்தியமாக்கி வச்சிருந்தேன்”

“இல்லை… இது பொய்!”

“நீ நம்பினாலும் நம்பாம போனாலும் இதுதான் உண்மை. என் வாழ்க்கையில நீ ஆசைப்பட்ட எதுவுமே நடக்கல. நீ திட்டம் போட்டுத் தோற்கடிக்க நினைச்ச ஒவ்வொரு இடத்திலும், நான் என்னுடைய திட்டத்தை செயல்படுத்தி ஜெயிச்சிட்டு இருந்தேன்”

ருத்ரா அவனுடைய தோளில் கை வைத்தான். “நீ என் வாழ்க்கையை அழிக்க நினைச்ச ஆனால் உன் துரோகம் எனக்கு யாரை நம்பணும், யாரிடமிருந்து விலகி இருக்கணும்னு கத்துக்கொடுத்தது. 

நீ என்னைத் தோற்கடிக்க நினைச்சு செலவு பண்ண ஒவ்வொரு நாளும், நான் உன்னை எழுந்திருக்கவே முடியாத குழில தள்ளுனதை நீ உணரல!” என்றதும் சரபனால் எதுவும் பேச முடியவில்லை.

அவன் கண்களுக்கு முன்னால் இருப்பது வெறும் போட்டோ அல்ல! தான் வென்றுவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்த ஒருவனின் உண்மை பக்கம், ‘நீ தான் கேவலமா தோத்து போயிருக்க!’ என சொல்லாமல் சொன்னது.

போலீஸார் அவனை இழுத்துச் செல்லத் தொடங்கினர்.

“ருத்ரா! நீ என்னை ஏமாத்திட்ட! என்னை ஏமாத்திட்டடா! என வெறிப்பிடித்தவனாக கத்தினான்.

ருத்ரா அசையாமல் நின்று ஒரே வரி பதில் சொன்னான். “இல்லை சரபா, உன்னை நீயே ஏமாத்திக்கிட்ட!”

சரபனை போலீஸ் இழுத்து போனதும், அனைவரின் பார்வையும் மீண்டும் நிலாவின் மீது திரும்பியது.

இன்னும் நீ உண்மைய முழுசா சொல்லல! என்ற பார்வைகள் அவளை துளைத்தது. 

சரபன் ஏன் உங்களை கொலை பண்ண பார்த்தான் நிலா? என்ற அபிராமி கேள்வியில், நிலா கண்களை துடைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.

அன்று ருத்ரா வீட்டை விட்டு வெளியே தள்ளியதும், வீட்டிற்கு போகாமல் அழுதுபடியே தோட்டத்திலிருந்த ஒரு மரத்தின் பின்னால் அமர்ந்திருந்தாள்.

அவள் அங்கிருப்பதை கவனிக்காத சரபன் போனில் தன் ஆட்களிடம் பேசிக்கொண்டிருந்தான்.

“ஒரே நேரத்தில் ருத்ராவை கொன்னுட்டா என் மேல சந்தேகம் வந்திடும். நான் கொடுக்கிற விஷத்தோட அளவை நாளைலருந்து அதிகப்படுத்தப்போறேன்… அவன் செத்ததும் என் அப்பனைக் கொன்னுட்டு நான் நிம்மதியா இருப்பேன்”

சரபனின் பேச்சை கேட்ட ஆரலி அதிர்ந்து போனாள். அங்கிருந்து அப்போதே ஓடியிருந்தால் ஒருவேளை உயிர் பிழைத்திருப்பாள்.

“ஐயோ பாவி! ஏகரா சாரை கொல்லப் பார்க்கிறியா? இரு அவருகிட்ட போய் உண்மைய சொல்றேன்!” என்று ஆத்திரத்தில் அவனிடம் நேரடியாகக் கேள்வி கேட்டவளை, அருகிலிருந்த மண்வெட்டியால் தலையில் ஓங்கி அடித்தான் சரபன். அடுத்த நொடியே மயங்கிச் சரிந்தாள் ஆரலி.

தன் ஆட்களை எஸ்டேட் எல்லைக்கு வரச் சொல்லிவிட்டு, மயங்கிக் கிடந்த ஆரலியை காரில் தூக்கி போட்டு வண்டியை வெளியே ஓட்டி வந்தவன், உண்மையாகவே அவளைத் தேடி வந்த அம்மாச்சியைக் கண்டு ஒரு நொடி அதிர்ந்தான்.

பிறகு எதுவும் நடக்காதது போல,

“பாட்டி ஆரலி மயங்கிட்டா! ஹாஸ்பிடல் போகலாம் போகலாம் வாங்க” 

என்று கூறி இருவரையும் வண்டியில் ஏற்றிக்கொண்டு கிளம்பினான்.

பேத்தியை கண்டதும் கதறி அழுதவர், அவளது தலையிலிருந்த காயத்தைப் பார்த்துவிட்டு,

“ஐயோ! என் பேத்திக்கு என்ன ஆச்சு? தலையில இவ்வளவு பெரிய காயம் எப்படி வந்துச்சு?” என்று பதறிக் கேட்டார்.

அவரது கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமே சரபனுக்கு இருக்கவில்லை. அடுத்த நொடியே அவருடைய தலையிலும் ஓர் அடி விழுந்தது. வயதானவர் அல்லவா, அந்த ஒற்றை அடியிலேயே உயிர் பிரிந்துவிட்டது.

இரண்டு உயிர்களைப் பறித்துவிட்டோம் என்ற சிறு உறுத்தல்கூட இல்லாமல், சர்வசாதாரணமாக அடுத்த வேலையை பார்க்கத் தொடங்கினான் சரபன்.

மனிதத்தன்மை அவனிடமிருந்து விடைபெற்று பல வருடங்களாகிவிட்டது. ருத்ராவின் மீதிருந்த பொறாமை, அவனது அப்பாவால் வன்மமாக மாறியிருந்தது. அந்த வன்மம் இப்போது அவனை அழிவு பாதைக்கு கொண்டு சென்றது.

“டேய்! இந்த இரண்டு பொணத்தையும் பத்திரமா புதைச்சிடுங்க. மலைகிராமத்துக்கு போகும் போது இரண்டு பேரும் செத்துட்டதா முத்து மூலமா தகவலைப் பரப்பிவிடணும், நான் கிளம்புறேன்” என்று தன் ஆட்களிடம் எச்சரித்துவிட்டு எஸ்டேட்டுக்குத் திரும்பினான் சரபன்.

அவன் எதிர்பாராத ஒன்று ஆரலி சாகவில்லை மயக்கத்தில் இருந்தாள்.

பிணங்களை புதைப்பதற்காக அவனது ஆட்கள் குழி தோண்டிக்கொண்டிருந்த நேரத்தில், ஆரலிக்கு மயக்கம் தெளிந்துவிட்டது. 

கண்களைத் திறந்தவள், அருகில் உயிரற்றுக் கிடந்த தன் பாட்டியைக் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

“அம்மாச்சி…” என்று முனகியவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது. உடல் முழுவதும் வலித்தாலும், அங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் மெதுவாக எழுந்து, யாரும் கவனிக்காத நேரத்தில் அங்கிருந்து ஓடத் தொடங்கினாள்.

அதே நேரத்தில், குழி தோண்டிக்கொண்டிருந்த பகுதியில் இயற்கையின் கோரத் தாண்டவமாக உண்மையான மண்சரிவு ஏற்பட்டது. யாருமே அதை எதிர்பார்க்கவில்லை.

அந்தச் சம்பவத்தில் சரபனின் ஆட்கள் சிலர் மண்ணுக்குள் புதைந்து போனார்கள். தப்பி பிழைத்த இருவர், நடந்த விஷயத்தை சரபனிடம் சொல்ல

எதிர்பாராத விதமாகக் கிடைத்த அந்த சாதகமான சூழ்நிலையை அவன் ஏன் விட்டுவைக்கப் போகிறான்? ஏற்கெனவே திட்டமிட்டிருந்த கதையை கொஞ்சம் மாற்றி மண்சரிவில் இறந்ததாக சொல்லிவிட்டான்.

நிலா தப்பித்த கதையே சொல்லிமுடிக்க, அடுத்து சோமசுந்தரம் முன்னே வந்து, “மீதிக் கதையை நான் சொல்றேன் எங்க மகள் நிலாஞ்சி! என்றவர் குரல் அழுகையில் தத்தளித்தது.

“அவ இறந்த அன்னைக்கு தான் நாங்க ஆரலியைக் காப்பாத்தினோம்!”

சோமசுந்தரம், பார்வதி தம்பதியினரின் முதல் மகள் நிலாஞ்சி!

அப்பா, அம்மா என்று இருவரையும் சுற்றிச்சுற்றி வரும் செல்ல மகள். அவளுக்கு அடுத்ததாக பிறந்தவள் திகள்விழி. இரண்டு பெண் குழந்தைகளையும் தங்களுடைய உயிராகவே நினைத்து வளர்த்தார்கள் அந்தத் தம்பதியினர்.

பார்வதி மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தை சேர்ந்தவர். கல்லூரியில் படிக்கும் போது தன் மனதைக் கவர்ந்த சோமசுந்தரத்தை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார்.

சோமசுந்தரம் மிடில்கிளாஸ் பேமிலி என்றாலும், பணமோ அந்தஸ்தோ அவர்கள் காதலுக்குத் தடையாக இருக்கவில்லை. இரு குடும்பங்களின் சம்மதத்தோடே திருமணம் நடந்தது.

சோமசுந்தரம் தனியார் வங்கியில் வேலை செய்து தன்னுடைய உழைப்பால் உயர்ந்தவர். பார்வதியோ ஏற்கெனவே வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர், வதி ஹாஸ்பிடல்களை நிர்வாகம் செய்யும் அளவுக்கு வசதி என்றாலும் அந்த வேறுபாடு ஒருநாளும் அவர்களுடைய காதலை குறைக்கவில்லை.

பெங்களூரில் அழகான குடும்பமாக வாழ்ந்துகொண்டிருந்த அவர்களுக்கு, நிலாஞ்சி என்றால் உயிர்! 

பார்வதியின் அக்கா சகுந்தலா, அவர் கணவர் ராம்குமார். இருவரின் மகன்களான விமலேஷ், குகன் என்ற குழந்தைச் சாமி என நால்வரும் அவர்களுக்கு நெருங்கிய உறவுகள். 

ராம்குமார் டாக்டர் என்பதால் மருத்துவமனைகளை அவரோடு சேர்ந்து பார்த்துக்கொள்கிறார் பார்வதி.

இரண்டு ஆண் பிள்ளைகளுமே சித்தி வீட்டில் தான் இருப்பார்கள். நிலாவும், திகளும் அந்த இருவரோடு சேர்ந்து செய்யும் வம்புகள், சிரிப்புகள் என அந்த வீடு எப்போதும் கலகலப்பாகவே இருக்கும்.

அந்தச் சிரிப்புகள் எல்லாம் ஒரே நாளில் நின்றுபோகும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை.

பதினொன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நிலாஞ்சிக்கு NCC முகாமிற்காக ஆரலி ஊருக்கு போகவேண்டியிருந்தது. 

அம்மாவை கட்டிக்கொண்டு முத்தமிட்டவள், தந்தையின் கன்னத்திலும் முத்தமிட்டுவிட்டு, அண்ணன்களிடம் கையசைத்தபடி தான் திரும்ப வரப்போவதில்லை என தெரியாமல் சந்தோசமாக கிளம்பினாள்.

பத்து நாட்களும் நிலாவுக்கு மகிழ்ச்சியாகவே சென்றது. புதிய நண்பர்கள், முகாம், பயிற்சிகள் என நேரம் பறந்தது.

கடைசி நாள் வீட்டுக்குத் திரும்பப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் அனைவரும் தயாரானார்கள். ஆனால் இயற்கை விதியால்

மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக முகாமிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த குழுவினர் விபத்தில் சிக்கியதாகத் தகவல் வந்தது.

செய்தியை கேட்ட, சோமசுந்தரமும் பார்வதியும் பதறிப்போனார்கள்.

“நம்ம பொண்ணுக்கு எதுவும் ஆகியிருக்காது பார்வதி! நிலா நல்லா இருப்பா!” என்று மனைவிக்கு தைரியம் சொன்னபடியே காரை எடுத்தார் சோமசுந்தரம்.

பார்வதியோ கடவுளிடம் வேண்டிக்கொண்டே வந்தார்.

“என் பொண்ணுக்கு ஒன்னும் ஆகக்கூடாது. அவளைப் பத்திரமா என்கிட்ட கொண்டு வந்து சேர்த்திடு கடவுளே!”

அவர்களுடைய பிரார்த்தனையை கடவுள் கேட்கவில்லை.

வண்டியை ஓட்டிக்கொண்டு வந்த, சோமசுந்தரத்திற்கு போன் வர அவசரமாக எடுத்து பேசினார்.

அங்கு கூறப்பட்ட நிலாஞ்சி உயிரிழந்துவிட்டாள் என்ற செய்தியை கேட்டதும் அவர் கைகள் நடுங்கிட,

கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த ஒரு பெண்ணை இடித்து தூக்கி எறிந்துவிட்டு, சாலையோர மரத்தில் மோதி நின்றது.

பார்வதி அலறிக்கொண்டே காரிலிருந்து இறங்கினார். சாலையோரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்தாள் ஆரலி! ஆம் அங்கிருந்து தலையில் ஏற்பட்ட காயத்தோடு தப்பித்து வந்தவளை பலமாக மோதியிருந்தது சோமசுந்தரம் கார். ஊருக்கு வெளியில் இந்த சம்பவங்கள் நடந்ததால் யாருக்கும் தெரியாமல் போனது.

கார் அவள் மீது மோதிய வேகத்தில் முன்புற கண்ணாடிகள் சிதறி அவள் முகத்தை சிதைத்து இரத்த வெள்ளத்தில் கிடந்தாள், தலையிலிருந்து ரத்தம் நிற்காமல் வழிந்துகொண்டிருந்தது.

“ஐயோ! என்னங்க அந்தப் பொண்ணுக்கு ரொம்ப ரத்தம் போகுது! சீக்கிரம் தூக்குங்க, ஹாஸ்பிடலுக்குக் கொண்டு போகணும்!”

தங்களுடைய மகளின் இறப்புச் செய்தியால் உடைந்து நின்றிருந்த அந்த பெற்றோர், அடுத்த நொடியே உயிருக்கு போராடும் அந்த பெண்ணை காப்பாற்றத் துடித்தார்கள்.

சோமசுந்தரம் அவளைத் தூக்கி காரில் ஏற்றினார்.

“ஒண்ணும் ஆகாது, கண்ணு! நீ நல்லா ஆயிடுவ!” யாரிடம் சொல்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை.

தங்களுடைய மகளை காப்பாற்ற முடியவில்லை என்ற வேதனைக்கிடையில், இந்த பெண்ணையாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற தவிப்பு அவர்களுக்குள் எழுந்தது.

மருத்துவமனைக்குச் சென்றதும் ஆரலியை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தார்கள்.

கதவுக்கு வெளியே நின்ற பார்வதியால் அழுகையை அடக்க முடியவில்லை.

“என்னங்க, நம்ம நிலாவை கடைசியா ஒருமுறை பார்த்திட்டு வரலாமே!” என்று தேம்பி அழுதார். மகளை நினைத்து இரு உள்ளமும் துடித்தது

சோமசுந்தரம் மனைவியை அணைத்துக்கொண்டார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு வெளியே வந்த மருத்துவர், “சரியான நேரத்துக்கு அழைச்சிட்டு வந்துட்டிங்க, உயிருக்கு ஆபத்தில்லை. அந்த பொண்ணு பிழைச்சிட்டா பட் தலையிலும் உடம்பிலும் காயங்கள் அதிகம் இருக்கு. குறிப்பா முகத்துல நிறைய கண்ணாடி கிழிச்சு காயங்களாகியிருக்கு, அது தழும்பா மாறும்போது முகம் வேறமாதிரி தெரியும். மெண்டலி அவங்க பிரிப்பேர் ஆகணும்” என்று சொல்லிவிட்டு போனார்

அந்த வார்த்தைகளைக் கேட்ட பிறகுதான் பார்வதி நிம்மதியாக மூச்சுவிட்டார். இப்போது முகத்தை விட அவள் உயிர் பிழைத்தது அதிசயம் அல்லவா! 

சகுந்தலா குடும்பத்தினர் அந்த ஊருக்கு வந்தபோது, நிலாஞ்சியின் இறப்பு செய்தி ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் நிலைகுலைய வைத்திருந்தது.

விமலேஷ் ஒரு வார்த்தைகூட பேசாமல் சுவரை வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

குகன் தலையைக் குனிந்தபடி கண்ணீரைத் துடைத்துக்கொண்டிருந்தான்.

அவர்களுடைய செல்லத் தங்கச்சி இனிமேல் திரும்பி வரமாட்டாள் என்ற உண்மையை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

திகள்விழி மட்டும் அக்காவை கேட்டு கத்திக்கொண்டிருந்தாள்.

“எனக்கு அக்கா வேணும்! என் அக்காவைக் கூட்டிட்டு வாங்க!” என யார் என்ன சொன்னாலும் அவளால் அழுகையை நிறுத்த முடியவில்லை.

அழுதழுது இறுதியில் மயங்கி விழுந்தவளை, தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள்.

அந்த சிறு பெண்ணின் மனதில் ஏற்பட்ட காயத்தை ஆற்ற யாராலும் முடியவில்லை.

இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் நிலாஞ்சியின் உடல் கிடைத்தது. உடலை அடையாளம் காண்பதே குடும்பத்தினருக்குப் பெரும் வேதனையாக இருந்தது.

மகளின் முகத்தை இறுதியாகப் பார்த்த பார்வதி கதறி அழுதார். மனைவியை தாங்கிக்கொண்டு நின்ற சோமசுந்தரம் கண்களிலும் கண்ணீர்.

அன்றே இறுதிச் சடங்குகளை நடத்தினார்கள்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆரலிக்கு நினைவு திரும்ப இரண்டு நாள்கள் ஆனது. அவளை காப்பாற்றியதோடு கடமை முடிந்தது என கிளம்பாமல் மகள் இறுதி சடங்குகள் முடிந்ததும் இருவரும் ஆரலியை பார்க்க வந்தார்கள்.

அவளுடைய முகத்திலும் கைகளிலும் பலமான காயங்கள் இருந்தது, சுற்றி நின்ற இருவரும் யாரென்றுகூட அவளுக்குப் புரியவில்லை.

அவளுக்கு நேரத்திற்கு உணவு கொடுப்பது, மருந்து கொடுப்பது என பார்வதி ஒரு தாயைப் போலவே ஆரலியை கவனித்துக்கொண்டார்.

முதல் இரண்டு நாட்கள் அவள் வாயை திறக்கவில்லை.

யாராவது ஏதாவது கேட்டால் மட்டும் தலையசைப்பாள். சில நேரங்களில் சுவரை வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பாள். முகத்தில் இருந்த கட்டுக்களை தொட்டு பார்த்தவளுக்கு முகம் சிதைந்து இருப்பதை பற்றி கவலை துளியும் இல்லை.

ஒருவாரம் கடந்தது, அவள் கூடவே இருந்து பார்வதி கவனித்துக்கொண்டார்.

தனக்கு கஞ்சி ஊட்டிக்கொண்டிருந்த பார்வதி கையைப் பிடித்தாள் ஆரலி. 

“அம்மா…” என்ற அவள் அழைப்பை கேட்டதும் பார்வதியின் கண்கள் கலங்கின.

“என்னம்மா?”

“என் பேரு ஆரலி அம்மா. எனக்கு யாருமே இல்ல, என்னையும் உங்க கூடவே கூட்டிட்டுப் போறீங்களா?” என்று மெதுவான குரலில் கேட்டாள்.

பார்வதி அதிர்ந்து அவளை பார்த்தார்.

“ஏன் அப்படி சொல்றம்மா, உனக்கு யாரும் இல்லையா?”

கண்கள் கலங்க “ நான் சின்ன பிள்ளையா இருக்கும் போதே என் அப்பா, அம்மா இறந்துட்டாங்க. என்னை என் அம்மாச்சிதான் வளர்த்தாங்க. ஆனா இப்போ அவங்களும்…” என்றவளுடைய குரல் உடைந்தது.

“நான் உங்களுக்கு எந்தத் தொல்லையும் கொடுக்க மாட்டேன் அம்மா. வீட்டு வேலை எல்லாம் செய்வேன். நீங்க சொல்றதை கேட்பேன். எனக்கு உங்க வீட்டுல இருக்க இடம் குடுங்க போதும்!”

அந்த சிறு பெண்ணின் வார்த்தைகளைக் கேட்ட பார்வதியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவளைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டார்.

“சரி நீ எங்க கூடவே வா! ஆனா வேலைக்காரியா இல்ல எங்க பொண்ணா வரணும். உனக்கு இனிமேல் அம்மாவும் அப்பாவும் நாங்கதான்!”

அவர் அணைப்பில் ஆரலி பாதுகாப்பை உணர்ந்தாள்.

ஆனால் அடுத்த நொடியே அவள் சொன்ன வார்த்தை பார்வதியை அதிர வைத்தது.

“அம்மா நான் ஆரலியா வர விரும்பல!”

“என்னம்மா சொல்ற?”

“நான் உங்க பொண்ணு நிலாஞ்சியா உங்க கூட வர்றேன். என்னை நிலான்னே கூப்பிடுங்க!” என்றதும் 

பார்வதி உறைந்து போனார்.

அந்த பெயரைக் கேட்டதும் அவருடைய நெஞ்சுக்குள் அடக்கி வைத்திருந்த வலி மீண்டும் பொங்கியது. ஏற்கனவே மகளை இழந்த உள்ளம் மீண்டும் நிலா கிடைத்ததை எண்ணி சிறு ஆறுதல் கொண்டது.

“சரி நிலா! இனிமேல் நீ எங்க பொண்ணு நிலாஞ்சி!” அந்த நொடியிலிருந்து ஆரலி தன்னுடைய பழைய வாழ்க்கையை மறைத்து, புதிய வாழ்க்கையைத் தொடங்க முடிவெடுத்தாள்.

சோமசுந்தரமும் பார்வதியும் ஆரலியைத் தங்களுடைய மகளாக ஏற்றுக்கொண்டார்கள். அடுத்த நாளே அவளை பெங்களூரில் உள்ள தங்கள் மருத்துவமனைக்கு மாற்றினார்கள்.

அவளை பார்த்த சகுந்தலா குடும்பத்தினர் முதலில் அதிர்ந்தாலும், பின் அவளுடைய நிலைமையை அறிந்து அன்போடு அவளை அரவணைத்துக்கொண்டது அந்த குடும்பம். 

குறிப்பாகத் திகள்விழி! அக்காவின் இழப்பால் மனதளவில் உடைந்துபோயிருந்த அந்தச் சிறுமிக்கு, ஆரலியை அக்காவாக மிகவும் பிடித்துப்போனது. 

“திகளு இவதான் உன் அக்கா!”

ஆரலியின் கையைப் பிடித்துக்கொடுத்தார் பார்வதி.

அவளுக்கு குழப்பமாய் இருந்தாலும் ஆரலி நம் பொறுப்பு என பார்வதி சொன்னதை கேட்ட அடுத்த நொடியே ஆரலியை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள் திகள்விழி.

“அக்கா!” என்ற திகள் குரலில் இருந்த ஏக்கத்தை கேட்ட ஆரலியின் கண்கள் கலங்கின. அவளும் திகள்விழியை அணைத்துக்கொண்டாள்.

ஆரலிக்குப் புதிதாக ஒரு குடும்பம் கிடைத்தது.

அவள் பேசும் விதம், பழக்கவழக்கங்கள் என அனைத்தும் வேறு மாதிரி இருந்தாலும் அவளை யாரும் ஒருநாளும் தாழ்வாக நடத்தியதில்லை.

பேபி அவளுடைய உடல்நலத்தை வீட்டிலிருந்தே கவனித்துக்கொண்டான். 

அவளுக்கு ஆங்கிலத்தில் ஒரு வார்த்தைகூட சரியாக பேசத் தெரியாது என்பதை அறிந்த விமலேஷ், அவளுக்கு தனியாக நேரம் ஒதுக்கி ஆங்கிலம் சொல்லிக்குடுக்க, முதலில் மிகவும் தடுமாறினாள்.

“மை நேம் இஸ்… நிலாஞ்சி!”

“குட்! இப்போ கொஞ்சம் தைரியமா பேசு, தப்பா பேசினா திருத்திக்கலாம். தப்பாவே பேசக்கூடாதுன்னு நினைச்சு அமைதியா இருந்தா ஒருநாளும் கத்துக்க முடியாது!” என விமல் பொறுமையாக சொல்லிக்கொடுத்தான்.

திகள்விழியோ அவளுடைய உடை, நடை, பேச்சு என ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்தினாள்.

“அக்கா, இந்த டிரஸ் உனக்கு நல்லா இருக்கும் ட்ரை பண்ணிப் பாரு!”

“எனக்கு இது பழக்கமில்லையே திகளு!”

“பழக்கப்படுத்திக்கலாம் அக்கா. உனக்கு எது பிடிக்குதோ அதை தாராளமா எடுத்துக்கோ! எது பிடிக்கலையோ அதை விட்ரு, யாரும் உன் மேல திணிக்க மாட்டோம்” என்றவளுடைய வார்த்தைகளைக் கேட்ட ஆரலியின் கண்களில் கண்ணீர் நிறைந்தது.

அவளுடைய பழைய வாழ்க்கையில் யாரும் ஆரலியிடம் இப்படிப் பேசியதில்லை.

அவள் தோற்றத்தைக் கேலி செய்தவர்களும். அவளுடைய உடல் எடையை வைத்து அவமானப்படுத்தியவர்களும், அவள் எதற்கும் தகுதியற்றவள் என்று சொல்லியவர்கள் மட்டும் இருந்தார்கள்.

இங்கு குடும்பமே அவளைத் தாங்கிக்கொண்டது.

 

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!