அர்ப்பணம் 12

தன்னுடைய கட்டைக் குரலில்,“பரிசம் போடத் தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து வச்சுட்டீயளா?”எனத் தற்காலிகமாக தங்கள் வீட்டில் சம்பளத்திற்கு வேலை செய்ய வந்தவர்களிடம் கேட்டார் சற்குணம். 

“எடுத்து வச்சாச்சுங்க அம்மா”என்று அவரிடம் பவ்யமாக கூறினர். 

உடனே,”ஏங்க! எங்கே போயிட்டீங்க?”எனத் தன் கணவரை அழைக்க, 

“இதோ வந்துட்டேன்ம்மா”என்று அவர் முன்னால் போய் நின்றார் வளையாபதி. 

“ஓஹ்! துணியை மாத்திட்டு வந்தீங்களாக்கும்? அங்கவஸ்திரத்தை ஏன் இப்படி போட்டு இருக்கீய?”என்று அதை தானே சரி செய்தார் சற்குணம். 

“நம்ம மவனை எங்கே காணோம்ங்க? அப்பாவுக்கும், மகனுக்கும் என்னைக் கத்த வைக்கிறதுல அப்படியென்ன சந்தோஷமோ தெரியலை!”என நொடித்துக் கொண்டிருந்த நேரத்தில், 

அவர்கள் முன் பிரசன்னம் ஆனான் ராஜன். 

அவனது தோற்றத்தைக் கண்டதும்,”உன்னைப் பார்க்கிறதுக்கு அப்படியே ராசா மாதிரி இருக்க ஐயா!”என்று தன் கரங்களால் அவனுக்குத் திருஷ்டி எடுத்தார் சற்குணம். 

“ஹிஹி! அப்படியாம்மா இருக்கேன்? அப்போ சரி!”என்று குழைந்துச் சிரித்த மகனிடம்,

“புஷ்பத்துக்கு வாங்கியிருந்த அந்த அட்டியலை எடுத்து நீ வச்சுக்கோடா! ஏன் சொல்றேன்னா? இங்கே வேலை செய்றதுங்களோட கண்ணு முழியே சரியில்லை. அதை லவட்டிட்டுப் போகப் பாக்குறாளுக! அதான்!”என்று தனது குரலைத் தாழ்த்தி அவனுக்கு அறிவுறுத்த, 

அதற்கும் அவன்,”சரிம்மா. நான் எடுத்து வச்சுக்கிறேன்”என அவரிடம் தெரிவித்து விட்டு அந்த அட்டிகையைத் தனது கையிலேயே வைத்துக் கொண்டு வளைய வரத் தொடங்கி விட்டிருந்தான் ராஜன். 

அதற்குப் பிறகுத் தங்கப்புஷ்பத்தின் பெற்றோரிடம் என்னென்னப் பேச வேண்டும் என்பதை தாங்கள் மூவரும் கூடி உட்கார்ந்து கலந்துரையாடினார்கள். 

இதே வேளையில் தன்னுடைய நண்பன் சிலம்பனிடம்,”என்னடா எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிட்டியா?”என விசாரித்தான் வீரபத்திரன். 

உடனே அவனும்,“ம்ஹ்ம். செஞ்சிட்டேன்டா. நீ எப்போ வீட்டிலிருந்து கிளம்பச் சொல்றியோ, அப்போ கிளம்பலாம்”என்றுரைத்து விட்டிருந்தான். 

“சரி. நான் அப்பாவைப் பார்த்துப் பேசிட்டு வர்றேன்”என்று கூறி விட்டுத், 

தன்னுடைய தந்தையிடம் சென்று,”என்னப்பா நீங்கத் தயார் ஆகிட்டீங்களா? நாமக் கொஞ்ச நேரத்தில் அங்கே போகனும்”என அவருக்கு அறிவுறுத்தினான் வீரபத்திரன். 

உடனே,”அதெல்லாம் தயாராகிட்டேன். ஆனால் எனக்கு இன்னும் இது சரியாகப்படலை!”என்றிருந்தார் தர்மராஜ். 

அதை அவனும் எதிர்பார்த்தது தானே? 

அதனாலேயே,”எனக்குச் சரியாகத் தான் படுது! நீங்க வர்றீயளா? இல்லையா?”என அவரிடம் அழுத்தமாக வினவினான் வீரபத்திரன். 

அதில் அவனைச் சலிப்புடனும், ஆதங்கத்துடனும் பார்த்து,

“வாரேன் டா. வேற என்னத்தப் பண்ண முடியும்”என்றுரைத்தவாறே அவனது இழுப்பிற்கு இசைந்து கொடுக்க முடிவெடுத்தார் தர்மராஜ்.

“அப்போ வாங்க”என அவருக்கு அறிவுறுத்தினான் வீரபத்திரன்.

வெள்ளை வேட்டிச், சட்டையை அணிந்து கொண்டு இருந்தவனுக்குப் புது மாப்பிள்ளைக்கானக் களை இப்பொழுதே கொட்டிக் கிடந்தது அவனது முகத்தில்! 

அவனது அந்தத் தோரணையைக் கண்டுத் தன்னுடைய மூக்கின் மேல் விரல் வைத்துப் பார்த்து அதிசயித்துப் போனார்கள் முனீஸ்வரியும், அவரது மகள் ஈஸ்வரியும்! 

அதிலும்,”அண்ணே! உங்களுக்கு இப்போவே மாப்பிள்ளைக் களை வந்துடுச்சு! நீங்கப் போறக் காரியம் வெற்றிப் பெற என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்!”என்று அவனிடம் மலர்ந்த முகத்துடன் தனது வாழ்த்தைக் தெரிவித்தாள் ஈஸ்வரி. 

அதைக் கேட்டதும் தன்னுடைய காதில் புகை வராத குறையாக”ஏய்! நீ இன்னும் சாப்பிடலைல? முதல்லப் போய் அந்த வேலையைப் பாரு”என அவளை அதட்டினார் முனீஸ்வரி. 

அதில் அனிச்சையாகப் பயம் உருவாகவே உடனே அடித்துப், பிடித்துக் கொண்டு அங்கேயிருந்து அகன்று விட்டிருந்தாள் அவரது மகள். 

“ப்ச்! முனீசு! அவளை எதுக்கு அதட்டுற? நாங்கப் போயிட்டு வெரசாக வந்து சேந்துட்றோம்! சரியா?”என்று மனைவியிடம் அறிவித்தார் தர்மராஜ். 

“சரிங்க. நானும் எல்லாமே நேர்மறையாக நடக்கனும்னு வேண்டிக்கிறேன்”என்று பயபக்தியுடன் உரைத்தார் முனீஸ்வரி. 

இவ்விருவரையும் மௌனமாக கவனித்துக் கொண்டிருந்த தனது இதழை இகழ்ச்சியாக வளைத்துப் பார்த்து விட்டு, 

“போகலாமா ப்பா?”எனத் தந்தையிடம் அழுத்தத்துடன் வினவினான் வீரபத்திரன். 

“ம்ஹ்ம். போகலாம்”என்றவரோ, 

தனது மனைவி மற்றும் மகளிடம் விடைபெற்றுக் கொண்டு மகனுடன் கிளம்பி விட்டார் தர்மராஜ்.

அவர்களுடன் தானும் இணைந்து கொண்டான் சிலம்பன். 

அவர்கள் மூவரும் தங்கப்புஷ்பத்தின் வீடு இருக்கும் ஊரை நோக்கிப் பயணமானார்கள். 

அதே நேரத்தில் தாங்களும் தங்களது வீட்டிலிருந்து தடபுடலாகச் செய்திருந்த ஆயத்தங்களுடன் தங்கப்புஷ்பத்தின் இல்லத்திற்குக் கிளம்பிப் போயினர் சற்குணம், வளையாபதி மற்றும் ராஜன்.

தன்னுடைய அத்தைக் குடும்பத்தார் தன்னைப் பரிசம் போட வருவது தனக்குப் பிடிக்காமல் இருந்தாலும் கூடத் தன் பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் தயாராகி விட்டிருந்தாள் தங்கப்புஷ்பம். 

அவளது விழிகளில் கண்ணீர்த் துளிகள் தடையின்றி வழிந்தோடியது. 

அதைப் பற்றிய அக்கறையே இல்லாமல் வரப் போகும் விருந்தினருக்காகச் சிற்றுண்டிகள் மற்றும் அவர்களுக்குக் குடிக்கக் கொடுப்பதற்காக கொட்டை வடிநீரைத் தயாரித்துக் கொண்டிருந்த வேலையாட்களை மேற்பார்வை இட்டுக் கொண்டும், அக்கம், பக்கத்து வீட்டிலிருந்து வருபவர்களை வரவேற்றுக் கொண்டும் இருந்தார்கள் அவளது பெற்றோரான காளிமுத்து மற்றும் வள்ளி. 

சிறிது நேரத்திலேயே தங்களது ஆடம்பரமான ஏற்பாடுகளுடனும், பரிசம் போடத் தேவையானப் பொருட்களுடனும் தங்கப்புஷ்பத்தின் வீட்டை அடைந்திருந்தார் சற்குணம், அவரது கணவர் மற்றும் மகன். 

அவர்கள் வந்தவுடனேயே அவர்களை வரவேற்று ஓடியாடி உபசரித்தார்கள் காளிமுத்துவும், வள்ளியும். 

அதில் அவர்களுக்கு இன்னும் தலைக்கனம் அதிகமாகி விடவே,

“என்னப் பாலில் தண்ணீர் கலந்து இருக்கீய போலவே? வாயில் வைக்க விளங்கல!”எனத் தன்னுடைய தமையனையும், அவரது மனைவியையும் வேண்டுமென்றே மட்டம் தட்டிப் பேசினார் சற்குணம். 

அதைக் கேட்டுத் தங்களது முகம் வாடிப் போனாலும் கூட, 

“தண்ணீர் எல்லாம் கலக்கலைத்தா. நம்பிக் குடி”என்று அவரிடம் சமாதானமாகப் பேசினார் காளிமுத்து. 

ஆனால் வள்ளிக்குத் தனது நாத்தனாரின் வார்த்தைகள் மனதில் சுருக்கென்று தைத்து விட்டதால், 

அதனால் அங்கேயிருந்து அகன்று தனது மகள் இருக்கும் அறைக்குப் போய் விட்டார். 

அதையும் ஓரக்கண்ணால் கவனித்து விட்டுத் தான் தன் பானத்தைக் குடித்து முடித்திருந்தார் சற்குணம். 

அப்பொழுது அவரது தோளில் சுரண்டி,”ம்மா! எப்போ புஷ்பத்தை வரச் சொல்லுவாக?”என்று ஆர்வத்துடன் வினவினான் ராஜன். 

உடனே அவனைத் திரும்பி விழிகள் இடுங்கப் பார்த்து,”என்னடா உனக்கு அவ மேலே அந்தளவுக்கு ஆசையா?”என முணுமுணுப்பான குரலில் கேட்கவும், 

அதில் வெகுண்டு எழுந்தவனோ,“என்னம்மா நீங்க? நான் அவ மேலே போய் ஆசைப்படுவேனா? எங்கிட்டே அந்தக் கருவாச்சி எவ்வளவு வாய்ச் சவடால் பேசி இருக்கிறா? அதுக்கெல்லாம் சேர்த்து வச்சு நான் அவளைப் பழி வாங்குற விதமாக இன்னைக்குப் பரிசம் போட வந்திருக்கோம்ல? அதனால் அவளுக்கு ஏற்பட்ற அவமானத்தை நான் நேரடியாக அவ முகத்தில் பார்த்து ரசிக்க வேண்டாமா? அதுக்குத் தான் இப்படி கேட்டேன்”என்று அவருக்கு விளக்கம் கூற, 

“ஓஹ்! அப்படின்னா சரி. இந்தா அவளை வெரசா வரச் சொல்லிச் சொல்றேன்”என்றவரோ, 

“அண்ணே! எங்களை இப்படியே காப்பித் தண்ணீரைக் கொடுத்து அனுப்பிடலாம்னு நினைச்சு வரச் சொன்னீயளா என்ன? எப்போ எங்க மருமவளைக் கண்ணில் காட்டப் போறீய?”எனத் தன் தமையனிடம் வினவினார் சற்குணம். 

“அதானே? நாங்க வந்து எவ்வளவு நேரமாச்சு? வெறும் காப்பியை மட்டும் கொடுத்தால் ஆச்சா? இன்னும் கொறிக்கிறதுக்கு ஏதாவது பலகாரத்தை மருமவகிட்டே கொடுத்து விடுங்க”என்று தன்னுடைய விஷயத்தில் தெளிவாக இருந்தார் வளையாபதி. 

“இதோ வந்துடுவா ம்மா, மாப்பிள்ளை!”என்று அவர்களிடம் தெரிவித்து விட்டுத் தனது மகள் மற்றும் மனைவியைத் தேடிச் சென்று, 

“இப்படியே உட்கார்ந்து இருந்தால் பரிசம் போட்றதை எப்போ தான் நடத்தி முடிக்கிறது?”எனத் தங்கைக் குடும்பத்திடம் காட்டாத கோபத்தை இவர்களிடம் காண்பித்தார் காளிமுத்து. 

“அவுக தான் இன்னும் என்னத்த எல்லாம் முழுங்கலாம்ன்னுத் திரியிறாவளே தவிர, இதைப் பத்தி மூச்சே விடலையே? அப்பறம் நான் மட்டும் எப்படி இவளைச் சபையிலே நிறுத்துறது?”எனத் தானும் அவரிடம் கோபத்தில் வெடித்தார் வள்ளி. 

இவர்களைக் கண்களில் நீர் வழியப் பார்த்து, 

“ப்ச்! இந்தப் பரிசம் போட்றதைச் சீக்கிரம் முடிச்சுத் தொலையுங்களேன்! எனக்கு இதையெல்லாம் போட்டுக்கிட்டு இருக்கிறது மூச்சு முட்றா மாதிரி இருக்கு! என்னாலே முடியலை!”என்று தன் பெற்றோரிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள் தங்கப்புஷ்பம். 

அதில் அவளை மற்ற இருவரும் கடுமையாக முறைத்து விட்டு, 

“வாயை ஒடச்சிடுவேன்!”என மகளிடம் உறுமியவரோ, 

“நீ இவளைக் கூட்டிட்டு வா. நான் முன்னாடி போறேன்”என்று தன்னுடைய மனைவியிடம் அறிவுறுத்திச் சென்றார் காளிமுத்து. 

அவரைக் கண்டதுமே,”என்ன ஆச்சுண்ணே?”என்றச் சற்குணத்திடம், 

“இப்போ புஷ்பம் வந்துருவா!”என்று அறிவித்து விட்டுக் கூடத்தில் இருந்த மற்றப் பெண்களிடம்,

“நீங்களும் உள்ளே போய்க் கொஞ்சம் அவுகளுக்கு ஒத்தாசைப் பண்ணுங்களேன்ம்மா”என்று கேட்டுக் கொள்ள, 

உடனே தாங்களும் தங்கப்புஷ்பத்தின் அறைக்குப் போய் அவளது தாயை வெளியே அனுப்பி விட்டுத் தாங்கள் அவளைக் கூடத்திற்கு அழைத்து வந்தார்கள். 

தங்களுக்கு முன்பாகத் தலை குனிந்து கொண்டும், களையிழந்த முகத்துடனும் வந்து நின்றத் தன்னுடைய மாமன் மகளைப் பார்த்ததுமே ராஜனின் மனம் குதியாட்டம் போடத் துவங்கி விட்டிருந்தது எனலாம்! 

ஏனெனில் இந்த நேரத்திற்காகத் தானே அவனும் அன்று காலையில் இருந்து காத்துக் கிடக்கிறான்?

அதனாலேயே, தன்னுடைய செருக்கை இன்னும் அதிகரித்துக் கொண்டு,”என்ன வீசின கை, வெறுங் கையாக வந்துருக்கப் புஷ்பம்? அதுவும் நீ என்னை நிமிர்ந்து பார்க்கவே மாட்டேங்குறீயே! உனக்கு நம்மக் கல்யாணத்தில் விருப்பம் இல்லையா?”என அவளிடம் வஞ்சப் புன்னகையுடன் வினவினான் ராஜன். 

அதில் பதறிப் போய்த் தனது பெற்றோரைப் பயத்துடன் நோக்கினாள் தங்கப்புஷ்பம். 

அவளது எண்ணத்தைப் பொய்யாக்காமல், தாங்களும் அவளைத் தான் கொடூரமாக முறைத்துக் கொண்டு இருந்தனர் காளிமுத்து மற்றும் வள்ளி. 

உடனே,”அப்படியெல்லாம் இல்லீங்க மாமா! எனக்கு உங்களைக் கல்யாணம் கட்டிக்க விருப்பம் தான்!”என அவனுக்கு வாக்களித்ததை அந்த வீட்டு வாயிலில் தனது தந்தை, தன் இரண்டு நண்பர்களுடனும், பரிசம் போடுவதற்கானத் தட்டுக்களைத் தூக்கி வந்தப் பெண்களுடனும் நின்று கொண்டுக் கேட்டிருந்தான் வீரபத்திரன். 

அவனுடன் இருந்த மற்றவர்களும் அதைக் கேட்டு விட்டுத் தங்களது பிடித்தமின்மையை மறைக்காமல் வெளிப்படுத்தி விட்டார்கள். 

ஆனால் தங்கப்புஷ்பத்தின் வாக்குமூலத்தைக் கேள்வியுற்றதுமே மிகவும் மனதளவில் நொடிந்து போய் விட்டாலும் கூட,

அவள் கட்டாயத்தின் பேரில் கூட அப்படி சொல்லி இருக்கலாம் என்றத் தன்னுடைய உள்ளுணர்வின் உந்துதலின் காரணமாக, 

“ஐயா!”என்றத் தன் கணீர்க் குரலின் மூலமாக வீட்டிற்குள் இருந்தவர்களுக்குத் தங்கள் அனைவரின் வரவையும் அறிவித்து விட்டிருந்தான் வீரபத்திரன். 

  • தொடரும்
❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!