அத்தியாயம் 13

திறப்பு விழா முடிந்ததும் ஊழியர்கள் அனைவரும் உற்சாகத்துடன் உள்ளே நுழைந்தனர். எல்லோரும் நேராக மீட்டிங் ஹாலுக்குச் சென்று தங்களுக்குரிய இடங்களில் அமர்ந்தனர். ஆரம்பத்தில் லேசான சலசலப்புடன் இருந்த அந்த அரங்கம், பாலா மேடையேறி வந்ததும் அமைதியானது. 

பாலா மைக் பிடித்துப் பேச ஆரம்பித்தான். “இத்தனை நாள் பொறுமையா காத்திருந்து, திரும்பவும் நீங்க எல்லாரும் இந்த நிறுவனத்தை நம்பி வந்ததுக்கு நான் உங்களுக்கு ரொம்ப நன்றிக்கடன் பாத்திருக்கேன், தேங்க் யூ ஆல்! இது என்னோட கம்பெனி மட்டும் இல்ல… நம்ம எல்லாரோட கம்பெனி! இதோட வளர்ச்சியும் வெற்றியும் இவ்வளவு காலமா உங்களோட உழைப்பால மட்டும்தான் சாத்தியமாச்சு. 

“என்னோட சில தவறுகளால வந்த பெரிய பிசினஸ் நஷ்டத்துல இருந்தும், சட்டப் போராட்டத்துல இருந்தும் இப்போ நாம முழுமையா மீண்டு வந்திருக்கோம். இனி இந்த நிறுவனத்தை மறுபடியும் வளர்ச்சிப் பாதையில கொண்டு போக, நீங்க எல்லாரும் எனக்குப் பக்கபலமா இருப்பீங்கன்னு நம்புறேன். இது தனி மனித வெற்றி இல்ல, ஒரு முழுமையான டீம் வொர்க்! நம்ம எல்லாரும் ஒண்ணா சேர்ந்து உழைச்சா, ரொம்ப வேகமா முன்னேற முடியும். உங்களுக்கு என்னென்ன தேவைகளோ, அதை இந்த கம்பெனி கண்டிப்பா முன்னுரிமை கொடுத்துச் செய்யும். உங்களோட நியாயமான கருத்துகளும் ஆலோசனைகளும் எப்பவும்போல இங்க மதிக்கப்படும், கேட்கப்படும்,” என்று உணர்வுப்பூர்வமாகப் பேசினான்.

“இத்தனை நாளா என்னாலதான் நீங்க வேலை இல்லாம கஷ்டப்பட்டீங்க. உங்களுக்கு என்னால சரியான நேரத்துக்குச் சம்பளம் கொடுக்க முடியாத இக்கட்டான நிலைமையில நான் இருந்தேன். அதையெல்லாம் ஈடுகட்ட, இப்போ நீங்க வாங்குற சம்பளத்துல இருந்து எல்லாருக்கும் 10% இன்கிரிமென்ட் போட்டிருக்கோம்! அதுமட்டும் இல்லாம, அட்வான்ஸா ஒரு மாசச் சம்பளமும் இன்னைக்கே உங்க பேங்க் அக்கவுண்டுக்கு வந்திடும். சந்தோஷம்தானே? அதே சந்தோஷத்தோட உங்களோட வேலையை ஸ்டார்ட் பண்ணுங்க… மை பெஸ்ட் விஸ்ஸஷ்!” என்று பாலா புன்னகையுடன் கூறி முடிக்க, அரங்கமே அதிரும் வண்ணம் அனைவரும் எழுந்து நின்று உற்சாகமாகக் கைதட்டினர். 

கைதட்டல் சற்றே அடங்கியதும், பாலா மேடையில் நின்றிருந்த மலரைத் தன் அருகில் அழைத்தான். 

“அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்… இவங்க மலர், என்னோட பர்சனல் அசிஸ்டென்ட்டா நம்ம கம்பெனியில புதுசா ஜாயின் பண்ணியிருக்காங்க. நம்ம குடும்பத்துல இணைஞ்சிருக்கற இவங்களை உங்க எல்லார் சார்பாகவும் நான் வெல்கம் பண்றேன்,” என்று அறிமுகப்படுத்த, மீண்டும் பலத்த கைதட்டல் ஒலி அரங்கை நிறைத்தது. 

கைதட்டல்களுக்கு நடுவே பாலா மலரைத் திரும்பிப் பார்த்தான். 

அவன் அணிந்திருந்த மிடுக்கான உடை… மேடையில் அவனது கம்பீரமான பேச்சு… சந்தோஷ ஒளியைச் சிந்தும் காந்தப் பார்வை! 

எல்லாவற்றிற்கும் மேலாக, பாலா பேசும்போதெல்லாம் அவனது கன்னங்களில் நிரம்பி வழிந்த கன்னக்குழிகளில் ஏற்கனவே தன் மனதைப் பறிகொடுத்து மயங்கிக் கிடந்தாள் மலர். இப்போது அவனது ஒற்றைச் சிரிப்பில் மொத்தமாய் அவனிடம் மயங்கிப் போனாள்.

மீட்டிங் முடிந்ததும், பாலா தன் கேபினுக்கு அருகிலேயே இருந்த சசியின் தனி அறையை (Cabin) மலருக்குக் கொடுக்குமாறு உத்தரவிட்டான். 

நண்பனை அழைத்து, “சசி… நீ இனிமே புரொடக்ஷன் ஃபுளோருக்கே போயிடு. அங்கேயே இருந்து எல்லா வேலைகளையும் நேரடியா கவனிச்சுக்கோ,” என்று கூறி அனுப்பி வைத்தான். அதேபோல் ரகுவிற்கும் ராகவிற்கும் முறையே டெவலப்மெண்ட், டெஸ்டிங் எனப் பொறுப்புகளைப் பிரித்துக் கொடுத்து, அவர்களை அந்தந்தத் தளங்களுக்கு அனுப்பி வைத்தான். 

மலரை அக்கவுண்ட்ஸ் டீமுக்குத் தலைவியாகவும் (Team Lead) நியமித்தான். நிறுவனம் மீண்டும் செயல்படத் தொடங்கியதும், நிலுவையில் இருந்த அனைத்து வாடிக்கையாளர்களையும் தொடர்பு கொண்டு, தற்காலிகமாக நின்றிருந்த ப்ராஜெக்ட்களைத் திட்டமிட்டபடி முடித்துத் தருவதாக உறுதி அளித்தனர். 

நிறுவனத்தின் அனைத்து துறைகளிலும் வேலைகள் மீண்டும் துரித வேகத்தில் நடக்கத் தொடங்கின. பாலா மற்றும் மலர் இருவரது கேபின்களுக்கும் இடையே இருந்த கண்ணாடி தடுப்பின் திரையை சற்றே விலக்கினால், அதன் வழியே எதிரே தன் அறையில் அமர்ந்திருக்கும் பாலா மிகத் தெளிவாகத் தெரிந்தான். 

மலர் அவனைப் பார்த்துக் கள்ளத்தனமாகப் புன்னகைத்தாள். ‘எவ்வளவு அழகாக இருக்கிறான்! இங்கு வேலை செய்யும் ஒவ்வொரு ஊழியரின் மனதையும் புரிந்து கொண்டு பேசுகிறான். யாருடைய துணையுமின்றி, தனியொரு மனிதனாக இந்த நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்ல அவன் எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டிருப்பான்? ஆனால், அத்தனை கஷ்டங்களையும் தன் ஒற்றைப் புன்னகையாலேயே கடந்து விடுகிறான்!’ 

அவனைப் பற்றிய நினைவுகள் உள்ளுக்குள் தோன்ற, அவளுக்கு அவன் மேல் இருந்த மதிப்பும் மரியாதையும் பல மடங்கு உயர்ந்தது. அதே சமயம், அவளுக்குள் இருந்த காதலை இன்னும் ஆழமாகத் தன் மனதிற்குள்ளேயே புதைத்து மறைத்துக்கொண்டாள். 

ஆம், மலர் பாலாவைத் தன் உயிராகவே காதலித்தாள். ஆனால், தனக்கென்று இந்த உலகில் யாருமில்லை என்ற ஏக்கம் அவளுக்குள் எப்போதும் இருந்தது. 

ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவள் என்ற தாழ்வு மனப்பான்மையும், அவனது உயரிய அந்தஸ்தும் அவளுக்கு தயக்கத்தை உண்டாக்க, அவனிடமிருந்து தன் காதலைத் தள்ளி வைக்கவும், விலகி இருக்கவும் அவள் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தாள்.

 

‘இப்போது அவன் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் சி.இ.ஓ. அவனது அந்தஸ்தும் உயரமும் எட்டாத உயரத்தில் இருக்கிறது.’ 

அலுவலகத்தில் அவனுக்குக் கிடைக்கும் அளவற்ற மதிப்பையும், ஊழியர்கள் அவன் மீது வைத்திருக்கும் அளவிட முடியாத மரியாதையையும் நேரில் பார்த்த கணத்தில், அவனது காதலுக்குத் தான் எவ்விதத்திலும் தகுதியானவள் இல்லை என்ற தீர்க்கமான முடிவுக்கே அவள் வந்துவிட்டாள்.

மேஜை மீதிருந்த கோப்புகளை மும்முரமாகப் புரட்டிக் கொண்டிருந்த பாலா, யாரோ தன்னை உற்று நோக்குவது போல் இருக்க, சட்டென்று நிமிர்ந்து பார்த்தான். அங்கே மலர் தன்னையே மறந்து, அவனை கண்கொட்டாமல் ரசித்துக் கொண்டிருந்தாள். 

என்னதான் காதலை மனதிற்குள் மறைத்துக் கொண்டாலும், அவளது காதல் ததும்பிய விழிகள் அதை அவனுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின. 

பாலா அவளது செய்கையைப் பார்த்து முகம் மலர்ந்து புன்னகைக்க, அதில் சட்டெனச் சுயநினைவுக்கு வந்தாள் மலர். கள்ளத்தனம் பிடிபட்ட திருடி போலப் பதறியவள், வேகமாக தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்தாள். 

கணினித் திரைக்குப் பின்னால் முகத்தை மறைத்துக் கொண்டு, “அச்சோ…!” என நாக்கைக் கடித்துக் கொண்டாள். 

‘அய்யோ மலர்! சைட் அடிக்கலாம்… அதுக்காக அவனுக்கே நல்லாத் தெரியுற மாதிரியா சைட் அடிப்ப? இப்படி மாட்டிக்கிட்டியே!’ என்று தனக்குள்ளே வெட்கத்துடன் பேசிச் சிரித்துக் கொண்டாள்.

மேஜை மீதிருந்த இண்டர்காமை அழுத்தி பாலா அவளை கேபினுக்கு வருமாறு அழைத்தான். “என்ன மலர்… இங்க ஒர்க் எல்லாம் பிடிச்சிருக்கா? உனக்கு ஓகே தானே?” என்று முன்னிருந்த கோப்புகளைப் பார்த்துக் கொண்டே அவளிடம் வினவினான். 

“ரொம்பப் பிடிச்சிருக்கு சார்…” என்று அவள் கூறியதும், அவளது ‘சார்…’ என்ற விளிப்பில் திகைத்தவன், கோப்புகளிலிருந்து தன் பார்வையை விலக்கி, நிமிர்ந்து அவளை ஊடுருவிப் பார்த்தான். 

‘அய்யோ! பார்வையாலேயே கொல்றானே!’ அவனது காந்த விழிப்பார்வையில் மலர் மனதிற்குள் உருகிப் போனாள். 

“என்னை ‘சார்’னு கூப்பிட வேண்டாம் மலர். நான் உனக்கு நல்ல ஃப்ரெண்ட்தான். நீ என்னை எப்பவும் போல ‘பாலா’ன்னே கூப்பிடு, அதுவே போதும்,” என்றான் கனிவான குரலில். 

“என்னதான் இருந்தாலும் நீங்க இந்த கம்பெனியோட சி.இ.ஓ. எல்லாரும் இருக்கிற இடத்துல…” அவள் தயங்கி இழுத்துப் பேச, “மலர்… நான் இப்பவும் உன்கூட அன்னைக்கு இருந்த அதே பாலாதான். ப்ளீஸ்… என்னை உன்கிட்ட இருந்து தள்ளி விலக்கி வைக்காதே,” என்று அவன் தீர்க்கமாய் உரைத்தான். 

அதற்கு மேலும் வற்புறுத்த விரும்பாமல், “சரி பாலா…” என்று மெல்லிய புன்னகையுடன் சம்மதித்தாள்.

மலர் எப்படித் தன் வேலையில் அர்ப்பணிப்புடன் இருப்பாளோ, அதேபோலப் பாலாவும் வேலை விஷயத்தில் சற்றுக் கண்டிப்பானவன்தான். பணியில் சிறு தவறு நடந்தால் கூட அவனுக்குக் கோபம் தலைக்கேறிவிடும். அந்த ஆத்திரத்தில் என்ன பேசுகிறோம் என்றே அவனுக்குத் தெரியாது. 

கோபம் தணிந்த பிறகு, அப்படிப் பேசியதற்காக மனதுக்குள் வருந்துவான். அதன் பின், தவறு செய்தவர்களைத் தனித்து அழைத்து அவர்கள் செய்த பிழையை எடுத்துச் சொல்லிப் புரிய வைப்பான். வேலை என்று வந்துவிட்டால், தன் உயிர் நண்பர்களாக இருந்தாலும் கூட கொஞ்சம் கடுமையாகத்தான் நடந்து கொள்வான். 

நிறுவனம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், அலுவலகத்தில் இப்போது முன்பை விட இன்னும் அதிகக் கண்டிப்புடன் நடந்து கொண்டான். 

மலருக்குப் பாலாவின் இந்தத் தொழில்முறை முகம் முற்றிலும் புதிதாகத்தான் இருந்தது. அவளோ எப்போதும்போல தன் வேலைகளில் எந்தக் குறையும் வைக்காமல் மிகச் சரியாக நடந்து கொள்வதால், அவனது இந்தக் கோபத்தை பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி, இதுவரை அவனிடம் அவள் ஒருமுறை கூடத் திட்டு வாங்கியதும் இல்லை.

அலுவலக நிமித்தமாகப் பாலா எங்குச் சென்றாலும், அவனது நிழலாக மலரும் கூடவே சென்றாள். பிசினஸ் தொடர்பான எல்லா விஷயங்களிலும் தவறாமல் அவளது கருத்துகளைக் கேட்கிறான். அவள் சொல்லும் யோசனை சரியாக இருக்கும் பட்சத்தில், சற்றும் யோசிக்காமல் அதையே நடைமுறைப்படுத்துகிறான். 

ஒருவேளை அவள் சொல்வது சரிவராது எனத் தோன்றினால், ‘இதை இப்படி மாற்றிச் செய்யலாம் மலர்…’ என்று அன்போடு அவளுக்கு எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கிறான். ஒரு சிறந்த வழிகாட்டியாக மாறி, தொழிலில் இருக்கும் அத்தனை நுணுக்கங்களையும் அவளுக்குப் பொறுமையாகக் கற்றுத் தந்தான். 

பாலா மலரைக் காதலிக்கிறான்! அவளைத் தன் வாழ்க்கைத் துணையாக ஏற்றுத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே அவனது குறிக்கோளாக இருந்தது. செழியன் அவளைத் தன் நிறுவனத்திற்கே வேலைக்கு அனுப்பி வைத்தது, அவனுக்குள் இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்திருந்தது. 

‘தன் காதலி எப்போதும் கண்பார்வையிலேயே இருக்கிறாள். சீக்கிரமே அவளது மனதில் சிறந்த காதலனாக நிரந்தர இடம்பிடித்து விடுவேன்!’ என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன், தன் காதல் உணர்வுகளைத் தற்காலிகமாக ஒதுக்கி வைத்துவிட்டு, நிறுவனத்தின் வளர்ச்சியில் மட்டும் முழுக் கவனத்தையும் செலுத்தினான்.

‘அவள் என்னுடையவள்… எனக்காகவே பிறந்தவள்!’ என்ற எண்ணம் அவனுள் ஆழமாகப் பதிந்திருந்தது. அதனால்தான், இப்போதிருந்தே தன்னைப் பற்றியும், தனது தொழிலைப் பற்றியும் அவள் முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றெண்ணி, அவளுக்கு எல்லா விஷயங்களையும் கற்றுத் தந்தான். 

வேலைக்கு நடுவே அவ்வப்போது அவளது அழகை விழிகளால் பருகி ரசிப்பான். மலர் தனக்கு அருகில் இருக்கும் தருணங்களிலெல்லாம், அவளிடம் எல்லை மீறிச் செல்லத் துடிக்கும் தன் காதற்பார்வையையும், கட்டுக்கடங்காத எண்ணங்களையும் மிகவும் சிரமப்பட்டுத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டான். 

நிஜத்தில் காட்டிய அந்தக் கட்டுப்பாட்டையெல்லாம் மீறி, பாலா தன் கனவுலகில் மலருடன் முழுமையாகக் குடும்பமே நடத்த ஆரம்பித்துவிட்டான். 

பிரம்மாண்டமாய் நடக்கும் தங்களின் திருமணம், தங்களின் மழலைச் செல்வங்கள், அவனும் அவளும் தனிமையில் உருகி உருகிக் காதல் செய்யும் அழகான தருணங்கள், ஒருவரையொருவர் கொஞ்சிக் குலாவும் அந்தரங்க இரவுகள் என அவனது கற்பனை நீண்டு கொண்டே சென்றது. 

அதுமட்டுமா? இல்லறத்திலும் சரி, இந்த அலுவலகத்திலும் சரி… இருவரும் எப்போதும் ஒன்றாகவே வேலை செய்து, ஒன்றாகச் சிரித்து, ஒன்றாக மகிழ்ந்து, சின்னச் சின்னதாய்ச் சண்டையிட்டு, பின் உடனே முத்தங்களால் சமாதானமாகி… அவளோடு தன் வாழ்நாளை எப்படிக் கழிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறானோ, அந்த ஒவ்வொரு நொடியையும் தன் கனவுகளில் வாழ்ந்து தீர்த்தான். அவனது ஒவ்வொரு இரவும் அவளது நினைவுகளின் தழுவல்களில்தான் விடிந்து கொண்டிருந்தன.

‘ஒருவேளை மலர் என் காதலுக்குச் சம்மதம் சொல்லாமல் நிராகரித்துவிட்டால் நான் என்ன செய்வேன்?’ என்ற இனம் புரியாத பயமும் சில சமயங்களில் பாலாவின் மனதிற்குள் தலைதூக்கி அவனை நிலைகுலையச் செய்யும். அடுத்த நொடியே அவனது நெஞ்சம் அதை மறுத்து அவனுக்கு ஆறுதல் தரும். 

மலர் காதலோடு தன்னை நோக்கும் பார்வையின் ரகசியத்தை அவன் அறியாமல் இல்லையே! அவளறியாமல், தன்னை முற்றிலும் மறந்து அவள் அவனது அழகில் உறைந்து ரசிப்பதை அவனும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான். அவளது அந்த விழிகளின் மொழியே, அவனது பயத்தையெல்லாம் விரட்டி அடித்து அவனுக்குள் ஒரு பேரன்பின் நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருந்தது.

காதல் மலரும்🌹 

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!