சாயங்கால வேளை நெருங்கியதும் ஆயிஷாவின் வீட்டில் அனைவரும் மாப்பிள்ளை வீட்டாரின் வரவுக்காகக் காத்துக்கொண்டிருக்க, அஸாத் மாப்பிள்ளை வீட்டாரோடு தன் காரில் வந்திறங்க, ஹாஜராவுடன் சேர்ந்து தியா, ஆதர்ஷ், ஆஷிக் மூவரும் வாசல் வரை வந்து வரவேற்று அவர்களை உள்ளே அழைத்துச் சென்றனர்.
அப்பொழுது ஆதர்ஷ், தியாவை அறிமுகப்படுத்திய அஸாத் ஆஷிக்கை அறிமுகப்படுத்துவதற்குள், மாப்பிள்ளையின் தந்தை ஷாஹித் கான், “இவருக்கு அறிமுகமே தேவையில்லை சார். பார்த்தாலே தெரியுது, இது ஆஷிக் தானே? அப்படியே உங்க ஜாடை.” என்று அவர் கூறி சிரிக்க, அதைக் கேட்ட பின்பு மிகவும் கோபம் அடைந்தவன், ‘நான் அவரை மாதிரியா இருக்கேன்?’ என்று தன் மனதிற்குள் எண்ணிப் பார்க்கும் பொழுதே அருவருப்பை உணர்ந்தான்.
சிறிது யோசிக்காமல் தன் முகத்தைச் சுளித்துவிட, அவனது முகத்தின் அசைவுகளைக் கண்ட அஸாத்துக்கு, ஆஷிக் மீது அவ்வளவு கோபம் வந்தது. ஆனால் அதை எதையும் ஷாஹித்திடம் காட்டிகொள்ளாதவர்,
ஷாஹித்திடம், “மாப்பிள்ளை எப்போ லண்ட்ல இருந்து திரும்பி வருவாரு?” என்று கேட்க, அவர் தன் மனைவி ரஸ்மீனை பார்த்தவாறு,
“இன்னும் ஒரு பத்து நாள்ல வந்திருவேன்னு சொன்னான்ல…” என்று கேட்க, அவரும் அதற்கு ஆமாம் என்பது போல பதில் சொல்ல, ஷாஹித் அஸாத்திடம், “பொண்ணு பார்க்கிறதெல்லாம் ஜஸ்ட் ஒரு ஃபார்மலிட்டிதான். ஆயிஷாதான் எங்க வீட்டு மருமகனு போட்டோ பார்த்த உடனே நாங்க முடிவு பண்ணிட்டோம். ஆயிஷா வாயால அவளோட விருப்பத்தைக் கேட்டுட்டோம்னா எங்களுக்குக் கொஞ்சம் திருப்தியா இருக்கும்.
நாளைக்கே முக்கியமான சொந்தக்காரங்களோட வந்து ஒரு உறுதி பண்ணிக்கிறோம். மத்ததெல்லாம் சமீர் வந்ததுக்கு அப்புறம் பார்த்துக்கெல்லாம்.” என்று அவர் சொல்லி முடிக்கவும்,
அஸாத், “நல்லது, சமீர் என்ன சொன்னாரு?”
“எங்க முடிவுதான் அவனோட முடிவும். என் வார்த்தைக்கு சமீர் மறு பேச்சே பேசமாட்டான்.” என்று ஷாஹித் பெருமையாகக் கூற,
அஸாத், “என் பொண்ணு அப்படித்தான், நான் என்ன சொன்னாலும் கேட்பா. அப்படித்தான் நான் அவளை வளத்திருக்கேன்.” என்று அவர் ஆஷிக்கைப் பார்த்தவாறு கூற, ஆஷிக்கோ அவரை அசட்டை பார்வை பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான்.
பின்பு ஆயிஷாவை ஜியா கீழே அழைத்துக் கொண்டு வர, ஆயிஷாவிடம் அவர்கள் இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் ஆயிஷாவின் சம்மதத்தையும் அறிந்து கொண்டவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
அதே மகிழ்ச்சியோடு அனைவரும் உணவு அருந்திக்கொண்டிருந்த நேரம் பார்த்து, அஸாத்தின் மொபைல் தன் இருப்பிடத்தைக் காட்ட, “எக்ஸ்க்யூஸ் மீ” என்றவாறு தன் அலைபேசியோடு தொலைவில் சென்றவர்,
“வாட்! நோ நோ… ஜஸ்ட் ஸ்டாப் திஸ், ஐ வில் கால் பேக்.” என்றவர் கோபமாகத் திரும்ப,
“என்ன என்னைத்தான் தேடுறீங்க போல?” என்றவாறு ஆஷிக் அவரது பின்னால் வந்து நிற்க,
“ஆஷிக் என்ன காரியம் பண்ணிருக்க?” என்று அவர் கோபமாய் கேட்க,
“என்ன பண்ணினேன்?” என்று ஆஷிக் விளங்காதவன் போல நடிக்க,
“யாரை கேட்டு ஷேர விக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணிருக்க? அதுவும் வெறும் ஐம்பது கோடிக்காக?”
“எனக்குத் தேவைபட்டுது, என் ஷேரை நான் விக்கிறேன். உங்களுக்கு என்ன வந்தது?”
“யு ஃபூல்… அதோட மதிப்பு தெரியுமா உனக்கு?”
“தெரியாது, தெரிஞ்சி நான் என்ன பண்ண போறேன்?” என்று குலாப் ஜாமூனை ருசித்தவாறே அவன் கேட்க,
“வாட் டூ யு வான்ட்?”
“அது உங்களுக்கே தெரியுமே மிஸ்டர் அறிவாளி.”
“நாளைக்கு மார்னிங் உன்னோட அக்கவுண்ட்ல பணம் இருக்கும்.”
“தட்’ஸ் இட். லைக் குட் பாய்.” என்றவன், அவரைப் பார்த்து ஏளனமாய் சிரித்தவாறு அங்கிருந்து செல்ல,
ஆஷிக்கின் இந்தச் செயலால் அஸாத் மிகவும் கோபமாக இருந்தார். ஷாஹித், “சாப்பாடெல்லாம் ரொம்பப் பிரமாதமா இருந்தது.” என்றவர், “நாளைக்கே நாங்க சொன்ன மாதிரி வந்து சின்னதா உறுதி பண்ணிக்கிறோம். சமீர் வந்ததுக்கு அப்புறம் உடனே என்கேஜ்மென்ட் வச்சுக்கலாம். என் பொண்ணு தாஹிராக்குப் ஃபிக்ஸ் பண்ணின உடனே ஆயிஷா, சமீரோட கல்யாணத்தை வச்சுக்கலாம்.” என்று கூற,
சிறிது நேரம் யோசித்த அஸாத், ஆஷிக்கைப் பார்த்தவாறு, “நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே?” என்று ஆரம்பிக்கவும் அனைவரும் குழப்பமாகப் பார்க்க,
“இல்லை சம்பந்தி உங்க கருத்து எதுவா இருந்தாலும் சொல்லுங்க.” என்று கேட்க,
“தாஹிராவுக்கு எதுக்கு வெளியில மாப்பிள்ளை தேடிட்டு இருக்கீங்க, நீங்க சரினு சொன்னீங்கனா என் பையன் ஆஷிக்கையே பேசி முடிக்கலாம்.” என்றவர், விஷம புன்னகையோடு ஆஷிக்கைப் பார்க்க, ஆஷிக்கோ அந்த இடத்தில என்ன செய்வதென்று புரியாமல் தன் தந்தையைப் பார்த்து முறைத்தவாறு நின்றான்.
“என்ன சம்பந்தி பேசவே மாட்டிக்கிறீங்க?” என்ற அஸாத்திடம் ஷாஹித், “ஆஷிக்கப் பார்த்ததும் எனக்கும் தோனுச்சு. எப்படிக் கேட்குறதுனு யோசிச்சுட்டு இருந்தேன். நீங்களே கேட்டுட்டீங்க, எனக்கு இதுல ரொம்ப சந்தோஷம்.” என்றதும்,
“அப்புறம் என்ன, நாளைக்கு ஆயிஷாவுக்கு உறுதி பண்ணும் பொழுது தாஹிரா, ஆஷிக்குக்கும் உறுதி பண்ணிடலாம். என்கேஜ்மென்ட், கல்யாணம் எல்லாம் ரெண்டு ஜோடிக்கும் ஒரே நேரத்துல பண்ணிடலாம்.” என்றவர், ஆஷிக்கின் கோபமான முகத்தை ஏளனமாய் பார்த்தவாறே ஷாஹித்தைக் கட்டி அணைத்துக்கொள்ள, ஷாஹித், ஆஷிக்கை மகிழ்ச்சியோடு கட்டி தழுவிக்கொண்டு அவர்களிடம் இருந்து விடைபெற்று சென்ற மறுநொடி,
ஆஷிக்கின் முகத்தை எட்டி கூடப் பார்க்காத ஜியா, ஹாஜராவிடமும் ஆயிஷாவிடம் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றாள். எந்தவித எதிர்ப்பையும் தன் முகத்தில் காட்டாது ஜியா அங்கிருந்து சென்றது, ஆஷிக்கிற்கு இன்னும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது.
ஜியா சென்ற பிறகு ஆதர்ஷ், தியாவும் அங்கிருந்து சென்று விட, அஸாத், ஆஷிக் இருவருக்கும் இடையே வாக்குவாதம் என்றைக்கும் விட இன்று ஒருபடி அதிகமாக, கோபத்தில் ஆஷிக், அஸாத்தின் சாட்டையின் காலரைப் பற்றிக்கொள்ள, ஹாஜராவிற்கு அவர்களது சண்டையைப் பார்த்து பிபி அதிகமாக, அவர் தன் சுய நினைவை இழந்தவாறு மயக்கமுற்று கீழே விழுந்தார்.
சில மணிநேரம் கழித்துக் கண்விழித்த ஹாஜராவிடம் ஆஷிக்கால், தன் மனதில் உள்ள எதையும் பேச முடியாமல் போக, ஜியாவிற்கும் தனக்கும் உள்ள மனத்தாங்கலை தீர்க்காமல் தன் விருப்பத்தைப் பற்றி, தன் வீட்டில் எப்படிச் சொல்வது என்கின்ற குழப்பத்தில் தவித்த ஆஷிக்கிற்கு, ஜியா மீது அடக்க முடியாத அளவிற்கு கோபம் வந்தது.
தன் அறையில் தனிமையில் அமர்ந்தவாறு யோசித்தவன், “அம்மாவும் தங்கச்சியும் எனக்கு முக்கியம்தான், அவங்களுக்காக என்ன வேணம்னாலும் பண்ணுவேன். ஆனா கண்டிப்பா ஜியாவை விட்டு இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கவே முடியாது. இதுல மூணு பேரோட வாழ்க்கை இருக்கு. என்ன ஆனாலும் சரி, நாளைக்கு நம்ம மனசுல உள்ளதை பத்தி எல்லார்கிட்டயும் தெளிவா சொல்லிரணும். ஆனா அதெல்லாத்துக்கும் முன்னாடி ஜியாகிட்ட மனசு விட்டு பேசணும்.
ரெண்டு பேரும் தானே காதலிச்சோம், நான் எவ்வளவு கஷ்டப்படுறேன், அவளுக்கு ஏன் கொஞ்சம் கூட வருத்தமே இல்லை? இல்லை ஜியா, இனிமே உன்னை நான் விடுறதா இல்லை. நீ என்கிட்ட மனசு விட்டு பேசிதான் ஆகணும். உன்னால மட்டும்தான் எனக்குத் தீர்வு சொல்ல முடியும். என் வாழ்க்கையை சூனியமாக்கிட்டு, நீ மட்டும் நிம்மதியா இருக்க முடியாது.” என்றவன்,
ஜியாவை சந்தித்துப் பேச எவ்வளவோ முயற்சித்தும் அது பலன் அளிக்காது போக, இன்னும் கொஞ்ச நேரத்தில் ஃபங்ஷன் ஆரம்பிக்க இருக்க, கோபத்தோடு ஜியாவையே அவன் தேடிக்கொண்டிருக்க, வீட்டில் எங்குத் தேடியும் அவளைக் காண முடியாமல் போக, இறுதியாக ஆயிஷாவிடம் வந்து ஜியாவைப் பற்றி கேட்க அதற்கு அவள், “ஏன் என்னாச்சு, நீ ஏன் ஜியாவை பார்க்கணும்?” என்று தன் தமையனின் வாடிய முகத்தைப் பார்த்தவாறு கேட்க,
அவனோ என்றும் இல்லாது, “கேள்வி கேட்டா பதில் சொல்லு, மறுபடியும் கேள்வி கேட்காத? எல்லாருக்கும் என்னைப் பார்த்தா கேன கிறுக்கன் மாதிரி தெரியுதா? எங்க அவளை?” என்று தனக்குள் எரிந்து கொண்டிருந்த கோபத்தீயை அடக்க முடியாமல் அவளிடம் கோபத்தோடு கேட்க,
“ஏன் அண்ணா நீ கவலையா இருக்க?” என்ற ஆயிஷாவின் வாடிய முகத்தைப் பார்த்ததும் ஆஷிக்கின் மனதிற்குள் எதோ செய்ய, அவளது கேள்வியைப் புறக்கணித்தவன், “அவளை எங்க?” என்றான் எரிமலையின் சீற்றத்தைத் தனக்குள்ளே அடக்கியபடி.
“என் ரூம்லதான் அண்ணா இருக்கா, அண்ணா தியா உங்களைத் தேடுனாங்க.” என்று கூற, அவன் தியாவைப் பற்றி அவள் கூறியதைத் தன் காதிலே வாங்காது வேகமாக ஜியாவைப் பார்க்க சென்றான். ஆயிஷாவின் அறைக்குச் சென்றவன் கோபத்தில் கதவை வேகமாகத் தட்ட, குளியல் அறையில் இருந்து தன் தலையைத் துவட்டியவாறே வெளியே வந்தவள், “வரேன்…” என்றவாறு கதவைத் திறக்க,
கதவை திறந்த மறுநொடி வேகமாக உள்ளே வந்தவன் தன் கரங்களை முறுக்கியவாறு கண்களில் கனல் துளிர்க்க, ஒருவித வெறியோடு ஜியாவைத் தன் கண்கள் சிவக்க ரௌத்திரத்தோடு பார்த்தான்.
அவனது பார்வையை அலட்சியம் செய்தவளாய் அவனைத் தன் கண்களால் கூடப் பார்க்காது நிற்க, அது அவனுக்கு இன்னும் எரிச்சலை ஏற்படுத்த, ஆனால் அவனது இந்தக் கோபம் எல்லாம் சில நேரத்திற்குத் தான்.
ஈரமான கேசத்தில் சொட்ட சொட்ட நீர் வழிய, அடர் நீல நிற ப்ளைன் புடைவையில் நிலவென தன் கண் முன் வந்து நின்றவளைப் பார்த்தவனது விழிகளில், தளும்பிய கனல் தீயெல்லாம் உறைபனி போலச் சில நேரம் உறைந்து செயலற்று போக, அந்தப் பனிப்பூவை தன் கண்கள் அயராது பார்த்த வண்ணம் அவன் நின்றுகொண்டிருக்க, அவளோ அவனது முகத்தை நேருக்கு நேராகப் பார்க்காது, “நான் என் திங்ஸ் எல்லாத்தையும் எடுத்துட்டு போயிடுறேன்.” என்றவாறு அங்கிருந்து கிளம்பிய மறுகணம், பூவிலும் மென்மையான தன்னவளை தன் வலிய புஜத்துக்குள் சிறை வைத்தான்.
அவனது பிடியில் இருந்து ஒரு வழியாகத் தன்னை விடுவித்துக் கொண்டவள் அவனைக் கோபமாய்ப் பார்த்துவிட்டு அங்கிருந்து செல்ல போகும் முன், ‘இன்று என்ன நடந்தாலும் உன்னை விடமாட்டேன்’ என்பது போல ஆஷிக் அவளது கரத்தைக் கொஞ்சம் வேகமாகவே பற்றி இழுக்க, எப்பொழுதும் போல அவன் அவளை மென்மையும் ஆண்மையும் கலந்தவாறு காதலாய் கைது செய்ய,
எவ்வளவோ முயன்றும் அவளால் அவனிடம் இல்லை இல்லை… அவனது காதலிடம் இருந்து விலக முடியாமல் போக கைதியானாள் தன்னவனிடம். அவனது வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தன் நிதானத்தை இழந்து அவன் மீது விழ, ஒரு பூ பந்தலை தன் கையில் ஏந்துவது போல, அவளது இடுப்பை வளைத்து அணைத்தவாறே அவளோடு சேர்ந்து கட்டிலில் விழுந்தான். தன் மேல் ஒரு நட்ச்சத்திரம் போல் மிளிர்ந்து கொண்டிருந்தவளைத் தன் கண்களாலே வருடியவன்,
தன்னவளின் கார் கேசத்தில் இருந்து மழை நீரை போலத் தண்ணீர் வழிந்த சொட்டுகள் ஒவ்வொன்றும் அவன் மீது படப்பட, எடுத்தான் மறுபிறப்பு. கரைந்தான் அணு அணுவாக… அவனது இடக்கரம் அவளது மென் இடையைப் பற்றி இருக்க, அவனது வலக்கரமோ அவளது வெற்று முதுகை பற்றி இருந்தது. நொடிகள் ஓட ஓட தன் அணைப்பின் இறுக்கத்தை அதிகரித்தான்.
அவனது ஒவ்வொரு இறுக்கத்திலும் அவளுக்குப் போர்க்களத்தைக் காட்டினான். சொல்லி புரியாத ஒரு வகையான உணர்ச்சி தனக்குள் தன்னையும் மீறி ஊடுருவதை உணர்ந்தவள்,
அவனது பிடியில் இருந்து விலக எத்தனிக்க, இதழோரம் எட்டிப் பார்த்த புன்னகையோடு பூமாலையாகத் தன் மீது படர்ந்திருந்தவளை மென்மையாகத் தளர்த்தியவன், அவளது முகத்தில் விளையாடிய கேசத்தை மெதுவாக நீக்கி காதோரத்தில் சொருகினான். நித்தில தெளிவு கொண்ட நிலவை போல மிளிரிய தன்னவளின் வதனத்தைத் தன் விழிகளில் படம் எடுக்க,
இதழ் தீண்டவில்லை, விரல் தீண்டவில்லை. ஆனால் அவனது ஒற்றைப் பார்வை தன்னை மொத்தமாகக் களவாடுவதை உணர்ந்தாள். அவனது பார்வையில் கபடம் இல்லை, அவனது காதலிலும் எந்தக் கலங்கம் இல்லை. அதைக் கண்ட அவளது உள்ளத்துக்குள் ஒருவித நெருடல். எதோ ஒன்று தன் நெஞ்சை கசக்கி பிழிவது போலத் தோன்றியது. அது அவனிடம் இருந்து தன்னை விலக்கி வைக்கத் தூண்டியது.
விலக முயன்றாள், ஆனால் முடியவில்லை. கட்டிப்போட்டான் தன் காதலால்.
என்னதான் அடர் நீல புடைவையில் தன்னை மறைத்துக் கொண்டாலும், இருளை வெல்லும் நிலவு மேகத்தை உடைத்துக் கொண்டு வந்து ஒளிவீசுவது போல், அவளது மஞ்சள் நிற இடை அவனது கண்ணில் பட்டு அவனது வேட்கையைக் கூட்ட, முற்றிலுமாகத் தொலைந்து போனான்.
தன் கரம் கொண்டு இடையைப் பற்றியவன், தன் இதழ் கொண்டு வண்ணமிட்டு மெல்ல நிமிர்ந்தவன், அவளது மூச்சு குழாயின் அசைவில் சற்று மூச்சடைத்தே போக, கழுத்தில் மென்மையாய் இதழ் பதித்தான். மேலும் முன்னேறியவன் அவளது செவ்விதழில் தன் இதழ் பதிக்க எத்தனிக்க, எதோ சரியில்லாதது போல உணர்ந்தவள்,
இதற்கு மேல் பொறுக்காதவளாய் அவனைத் தன் கரத்தால் தள்ள, தன்னிலைக்கு வந்தவன் ஜியாவின் கரங்களைப் பற்றியவாறு கண்களில் தொனித்த ஏக்கத்தோடு,
“ஜியா எங்கையாவது போயிரலாம், நமக்குனு சின்னதா ஒரு குடும்பம், அது போதும் ஜியா. எனக்கு நீ மட்டும் போதும். உன்னைத் தவிர என்னால வேற எந்தப் பொண்ணையும் என் கனவுலையும் நினைச்சு பார்க்க முடியலை.
இப்போ என்ன உன்னைப் பொறுத்தவரை நான்தான் தப்பு பண்ணினேன், அப்படித் தானே? ஓகே, அப்படியே இருக்கட்டும். நான் மன்னிப்பு கேட்குறேன், சரினு ஒரு வார்த்தை சொல்லு. இப்போ கூட உன்கிட்ட சண்டை போடணும்னுதான் வந்தேன், ஆனா என்னால உன்கிட்ட சண்டை போட முடியலை. முதல் தடவை உன்னைப் பார்க்கும் பொழுது என்ன தோனுச்சோ அதேதான் எனக்கு இப்பவும் தோனுது. ஏன் எப்பவும் தோணும். நான் உன்கூட வாழணும் ஜியா ப்ளீஸ்…” என்று தன் ஆண் கர்வத்தையெல்லாம் தூக்கி வீசிவிட்டு அவள் முன்பு மண்டியிட்டு கெஞ்சியவனை, பார்க்கும் எந்தப் பெண்ணின் மனமும் இளகிவிடும்.
ஜியாவும் விதிவிலக்கல்ல, அவன் கண்ணீரை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மனம் இறங்கினாள், ஏன் அவன் செய்த துரோகத்தைக் கூட மறந்து மன்னித்துவிடலாம் என்று முடிவெடுத்தாள். அவனது விழிநீரை தன் முத்தத்தால் துடைத்து அவனைத் தன் மார்போடு அணைத்துக்கொள்ள அவளது அதரமும் கரங்களும் துடித்த மறுநொடி, மீண்டும் அவளது மனதிற்குள் ஒருவித வலி. நெருஞ்சி முள்ளை போல அவளது இதயத்தைக் குத்தி குத்தி ரணமாக்கியது. மண்டியிட்டவாறே தன்னைக் கட்டி அணைத்தபடி இருந்த அவனது சிகையை ஆதரவாய் வருட சென்ற தன் கரத்தை சிரமப்பட்டுத் தடுத்தாள்.
தன் விழிநீரை துடைத்தாள். இப்பொழுது தான் கொட்ட போற விஷத்திற்காகப் பலமுறை ஆஷிக்கிடம் மன்னிப்பு கேட்டாள் தன் மனதிற்குள்ளே! இறுதியில் தன் மனதை கல்லாக்கிக் கொண்டவள் அவனிடம்,
“ச்சீ… உன்னால எப்படி ஆஷிக் முடியுது? இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கப் போற? என்கிட்ட ச்ச… உனக்குக் கூசலை… நீ தொடும் பொழுது எனக்கு அப்படியே அருவருப்பா இருக்கு.” என்று தேள் போல வார்த்தையால் அவனைக் கொட்டிவிட,
உடைந்து போனான் சுக்கு நூறாக. அவனது இதயத்திலே ஆணியை அறைவது போல அவள் வார்த்தையால் அறைந்து விட, இதயமே ஒரு நொடி நின்றது போல வலியில் துடித்தான்.
இவளும்தான், ஆனால் அதை அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
‘மே பீ இந்த லைஃப் உனக்குச் சந்தோஷத்தை குடுக்கலாம் ஆஷிக்…’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவள், அவன் தன் கண் முன்னே உடைந்து போவதைத் தாங்க இயலாது அவனை நிமிர்ந்து கூடப் பார்க்காது அங்கிருந்து செல்ல போக,
கரம் பற்றியிழுக்கவில்லை, மென் இடையை வளைக்கவில்லை, காதல் பார்வை வீசவில்லை, எதோ வெறி பிடித்தது போல, “நில்லு” என்று உறுமினான். இடி முழங்கியது போல அவன் முழங்கியதில் அவளையே அறியாமல் அவளது கால்கள் அவளைக் கட்டிப்போட்டது.
“ச்சீயா? கூசலையாவா? ஏன் கூசணும்? எனக்கானவள தொடுறதுக்கு நான் ஏன் வெட்கப்படணும்? பதில் சொல்லு.” என்று மீண்டும் அரட்டியதில் அதிர்ந்து போனவள், அவனது கேள்விக்கு என்ன பதில் கூறவேண்டும் என்று விளங்கமல் தவித்தாள்.
காரணம் ஆஷிக்குக்கு கோபப்படத் தெரியும் என்பதை முதன் முதலில் பார்க்கிறாள், பேச்சு வரவில்லை. இதற்கு முன்பும் கோபப்பட்டிருக்கான், ஆனால் அதில் காதல்தான் இருக்கும். ஆனால் இன்றோ கோபம் மட்டும்தான் இருந்தது.
அவள் ஆஷிக்கை காயப்படுத்திவிட்டோமே என்று தவிப்பாய் தன்னைப் பார்த்ததை, தன்னை அவமதிப்பதாக எண்ணினான்.
அவளது சின்ன விழி அசைப்பின் மாற்றம் அறிந்து செயல்படுபவன், இன்று அவளது பார்வையின் அர்த்தத்தைக் கூட உணர முடியாத அளவிற்கு எதோ வெறி பிடித்தவன் போல மாறினான்.
“அஞ்சி வருஷம் உருகி உருகி காதலிச்சு, ஆறு வருஷம் நீ என்னை விட்டு போன பிரிவை கூடத் தாங்கிக்க முடியாம, பைத்தியக்காரன் மாதிரி உனக்காகவே காத்துக்கிட்டு இருக்கிற நான், சீயா? சொல்லுடி, அவ்வளவு பேசுன இப்போ என்னாச்சு?
நியாயமே இல்லாத காரணத்துக்காக நீ என்னை விட்டு போனதுக்கு நியாயப்படி நான் உன்னை என்ன வேணும்னாலும் பண்ணிருக்கலாம். ஆனா நான் நீ வேணும் நினைச்சேன். நீ மட்டும்தான் வேணும்னு நினைச்சேன். எத்தனை நாள் உன் வீட்டு முன்னாடி வந்து நின்றுபேன். உன்னை விட்டு நான் தள்ளி இருந்ததுக்குக் காரணம் கூட நீ செத்துருவேன்னு சொன்னதுனாலதான். நம்புனேன், ஒருநாள் நீ எப்படியும் என்கிட்ட வருவனு நம்பி காத்துகிட்டு இருந்தேன். நான் உனக்குக் கேவலமானவன்?” என்று தன் பார்வையிலும் வார்த்தையிலும் அனலை அள்ளி கொட்டியவன், அவளது இரு கரங்களையும் இறுக்கப் பற்றிக்கொள்ள, வலியில் முகம் சுளித்தவள்,
“வலிக்கு ஆஷிக்.” என்று கூறியதை கூட, “நான் தொட்டா வலிக்குதா?” என்று தவறாக நினைக்கும் அளவிற்கு அவன் தன் நிதானத்தை இழந்திருந்தான்.
இந்த நொடி ஆஷிக் தன் நிதானத்தில் இல்லை என்பதை உணர்ந்தவள், அங்கிருந்து செல்வதுதான் சரி என்று எண்ணி, “பதில் பேசாம இருந்ததுனால தப்பு என்னுடையது ஆகாது. நீ எனக்குப் பண்ணின துரோகத்துக்கு உன்கிட்ட பேசுறதே பெரிய விஷயம்.” என்று அவள் அவனைத் தள்ளிவிட்டவாறு அங்கிருந்து செல்ல,
‘துரோகம்’ என்ற வார்த்தை அவனை மீண்டும் மிருகமாக்க,
“நில்லுடி… நானாடி துரோகி?” என்று கர்ஜித்தவன், தன் மொத்த ஆத்திரத்தையும் அவள் மீது காட்டினான். தன்னவளது மென் வதனத்தைத் தன் இரும்பு கரத்திற்குப் பழி கொடுத்தான். “ஆ…” என்று தன் கன்னத்தைப் பிடித்தவாறு மெத்தையில் சுருண்டு விழுந்தாள். ஆத்திரம் அடங்கவில்லை, பிடித்து நிறுத்தினான்.
“நான் தொட்டா உனக்கு அசிங்கமா இருக்கா…?” என்றவாறு அவளை இறுக்க அணைத்தான், மென்மையாய் அல்ல வன்மையாய்!
மொத்த குடும்பமும் அவர்களை அப்படியொரு நிலையில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்திருந்தனர்.
***
