18.வல்லினம்
வண்ணங்களில் குழைத்த ஓவியமாக மிளிர்ந்தாள் ஓவியத்தில் இருக்கும் பெண். கள்ளங்கபடமற்ற குழந்தை முகம் அவளுடையது. சிறிய அளவிலான நாசி, அதற்கு கீழ் சிவந்த செப்பு இதழ்கள், இதழ்களை பிரித்து பவளவாய் திறந்து சிரிக்கும் வெண்புன்னகை என ஓவியமாக மிளிரும் பாவையின் முகம் பிரகல்யாவின் இரு கரு விழிகளுக்குள் நிரம்பியது.
அவளைக் கண்ட பிரமிப்பில் பெண்ணவளின் கண்கள் பெரிதாக விரிந்தது. பிரகல்யாவின் பார்வையே, ஓவியப்பாவையை முன்பே தெரியும் என்பதை எடுத்துரைக்க, அதே ஆச்சரியமான கண்களில் வலியும் ஒரு சேர இழைந்தோடியது.
“ந….நட்சத்திரா.” என்றாள் தன் நா மேல் அன்னத்தை ஒட்டுமளவிற்கு மிக அழுத்தமாக.
அன்றொரு நாள் வானை சுட்டிக்காட்டிய ருத்ரஜித்தின் செயல் நட்சத்திராவைப் பற்றியே என்பது பொட்டில் அறைந்தாற் போல் புத்தியில் உரைக்க, வானில் மின்னிக்கொண்டிருந்த நட்சத்திரங்களை எண்ணிப் பார்த்தவளது இருவிழிகளை நிரப்பியது நட்சத்திராவின் முகம்.
“நட்சத்திரா… நட்சத்திரா… நட்சத்திரா…” என்று அவ்வறையே அதிரும் வண்ணம் ருத்ரஜித் கர்ஜித்ததில் ஒரு நிமிடம் திடுக்கிட்டு போனாள் பிரகல்யா.
அவனது குரலைக் கேட்டு அதிர்ந்தவள் திரும்பிப் பார்க்கும் முன் ருத்ரஜித்தின் கைகள் பிரகல்யாவின் கழுத்தை நெறித்திருந்தது.
வலியில் அவள் முகம் சுருங்கியது. எச்சிலை விழுங்க இயலாது தவித்தவள் திணற, அவளையே எரித்து விடும் பார்வை பார்த்தான் ருத்ரஜித். பார்வை வீச்சு பெண்ணிவளைச் சுட்டெறிக்க, கருவிழிகளோ மேல்நோக்கி பார்த்தது அவனது இரும்புப் பிடியில்.
“இப்போ சொல்லுடி அவ பேரை.” என்றவன் அவளைப் படுத்தி எடுக்க, அவனது கைகளை விடுவிக்கப் போராடினாள் பெண்.
“உன் வாயிலிருந்து அவ பேர் கூட வரக்கூடாது. ஏன்னா அவ வாழ்க்கையை அழிச்சவ நீ தான்.” என்று மேலும் அவளது கழுத்தை இறுக்கியவன் பலமாக அவளைப் பிடித்துத் தள்ள, பிடிமானமின்றி பின்னோக்கி பொத்தென்று விழுந்தாள்.
கை பலமாக அடிப்பட்டிருந்தது. அவன் கழுத்தை நெறித்த அந்த நெறி ரணமாக வலியினைக் கொடுக்க, ஒரு நிமிடம் மூச்சு விட முடியாத அளவிற்கு இருமியவள்,
இரண்டு நிமிடம் கழித்தே நிதானத்திற்கு வந்தாள்.
“நட்ஸ்… சாரி… நட்சத்திரா எனக்கு ரொம்ப பிடிச்ச பொண்ணு. அவளுக்கு என்னாச்சி…அவ நிலைமைக்கு நான் எப்படி காரணமா இருப்பேன்? எனக்கு ஒண்ணும் புரியலை? நீங்க நட்சத்திராக்கு என்ன வேணும்?” பதற்றம் சிறிதும் விலாகமல் கேட்டாள்.
“திரும்பவும் அவ பேரை சொன்ன? அடிச்சே உன்னை கொன்னுடுவேன்.” என்றவன் எட்டி உதைக்க வர, பயத்தில் கண்களை பட்டென்று மூடினாள் பெண்.
கால்களை கீழே இறக்கியவன், அவளை உறுத்து விழித்தான்.
“பயமா இருக்கா? ரொம்ப பயமா இருக்கா?” ருத்ரஜித் அடிக்காதுக் கேட்க, அவனது குரலில் கண்களைத் திறந்தவளோ,
“எனக்கு ஒன்னுமே புரியலை? இங்க என்ன நடக்குது. நட்சத்திராவோட நிலைக்கு நான் எப்படி காரணம் ஆனேன்? எதுக்கு என் தங்கையை நீ பழி வாங்கணும்?” என்று இதழ் மடித்து அழுதாள் பெண்.
“நட்சத்திரா வாழ்க்கையில நீ எப்படி குறுக்க வந்தேனு யோசிச்சுகிட்டே இரு. அதுக்குள்ள உன் தங்கைக்கும் எனக்குமான கல்யாணத்தை முடிச்சுட்டு வரேன். அந்த வலி உன்னை அடிக்குறதை விட உனக்கு கொடுமையா இருக்கும்.”
ருத்ரஜித்தின் சொல்லில் ஆடிப்போனாள் பிரகல்யா. எத்தனை அழகான நினைவுகள் அவளுக்கும் நட்சத்திராவுக்கும் இடையில் இருந்தது. தனக்கு மிகவும் பிடித்த பெண்ணிற்கு எப்படி இவள் தீங்கு விளைவிப்பாள்?
நட்சத்திராவிடம் அவளுக்கு மிகவும் பிடித்ததே அவளின் சிரிப்பு தான். சிரித்த முகத்துடன் அவள் பாடும் பாடலை இன்று நினைத்தால் கூட, தேவராகமாகத் தோன்றும். அப்படியிருக்க, எதுவும் செய்யாமல் ஏன் இந்த தண்டனை அதுவும் தன் பெயரை வைத்து தன் தங்கையை பழிவாங்குவதா? கோபமாக வந்தது பெண்ணவளிற்கு.
“ஆனால் ஏன்? எதுக்கு என் தங்கச்சி வாழ்க்கையை வீணடிக்கப் பார்க்குற?” என்று கண்ணீர் கசியக் கேட்பவளை வெறியுடன் நோக்கின ருத்ரஜித்தின் கண்கள்.
“பாவம்…. நீ செஞ்ச பாவம்…. அதுக்கான தண்டனை இப்போ நீ அனுபவிக்கணும். அந்த வலி உன்னை கொல்லும்.” என்று கனல்விழி சிவக்க கூறுபவனது முகத்தில் தெரிந்த வன்மம் பிரகல்யாவின் அடிவயிற்றை கலங்கடிக்கச் செய்தது.
“நா… நான் என்ன பாவம் செஞ்சேன். அதுவும் நட்சத்திராக்கு?” என்று கண்கள் கலங்கிப் போய் கேட்பவளை, தனது இருவிழிகளால் பொசுக்கியவன், அடுத்த நிமிடம் உதிர்த்த செய்தியில் அவளது உயிரே அவளிடம் இல்லை.
யாரோ நெஞ்சினை ஈட்டியைக் கொண்டு தாக்குவதுப் போல உணர்ந்தவள், “இல்லை…..” என்று அந்த அறையே அதிரும் வண்ணம் கத்தியவள், பிடிமானம் இன்றி கீழே விழுந்தாள். பெண்ணவளின் கைகளோ நடுங்கியது. முகமோ வியர்த்து வழிந்தது.
“அய்யோ…. நட்சத்திரா….” என்று கதறியவளுக்கு பெண்ணவளின் மதிமுகமே அந்த நொடி பிம்பமாய் இருவிழிகளுக்குள் தோன்றியிருக்க, ஓவியமாக மிளிர்ந்தவள் அவளைக் கண்டு புன்னகைப்பது போல ஒரு மாய பிம்பம், அந்நிமிடம் அவள் அடி மனதிற்குள் தோன்றியது.
“லியாக்கா” என்றழைக்கும் நட்சத்திராவின் குரல் அந்நொடி அவளது செவியில் கேட்டது. நிச்சயம் அது பிரம்மை என்றாலும் அவள் மனமோ ரணமாக வலித்தது. என்றுமே தன்னை பார்த்து புன்னகைத்துக் கொண்டே இருப்பவள் அல்லவா! வலியுடன் ஓவியத்தை ஏறிட்டது பிரகல்யாவின் கண்கள்.
“நீ ஒரு கொலைகாரி. கொலைகாரியான உன்னை பழிவாங்க எது வேணாலும் பண்ணுவேன்.” அசட்டையாக சொன்னவனை வலி நிறைந்தப் பார்வை பார்த்தவளோ, கூனிகுறுகிப் போனாள்.
“என்னை கொன்னுடு ருத்ரஜித். மனசார கேட்குறேன் என்னை கொன்னுடு. என் தங்கச்சியை மட்டும் எதுவும் செஞ்சிடாத. அவளும் நட்சத்திரா மாதிரி அப்பாவியான பொண்ணு.” பொங்கி வந்த கண்ணீருடன் பெண்ணவள் கூறியிருக்க, அவளை அலட்சியமான பார்வை பார்த்தான் ருத்ரஜித். பிரகல்யா அந்நிமிடம் தன்னைத் தானே வெறுத்தாள்.
“என் நட்சத்திராவ நானே கொன்னுட்டேனே.” என்று கதறியவளது கண்ணீர் மட்டும் பொய்யல்ல. இருந்தும் அவள் அழுவதைக் கண்டு ரசித்தவனோ, அடுத்த நொடி அங்கிருந்து கிளம்பியிருக்க, பிரகல்யாவோ ஓவியத்தை ஓடிச் சென்று பற்றிக் கொண்டு அழுதாள்.
“உன் படத்தை தொடக்கூட எனக்கு அருகதை இல்லைமா. என்னால தானே எல்லாம்? எங்கிட்ட வா நட்சத்திரா. எனக்கு சத்தியமா தெரியலை. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் நட்ஸ். என் நட்ஸ் என் கையாலேயே நானே உன்ன கொன்னுட்டேனா? அய்யோ?” வாய்விட்டு கதறியவள், தன் தலையை சுவற்றில் முட்டிக்கொண்டே அழ, சுவற்றில் முட்டிய பெண்ணவளின் நெற்றி வகுட்டிலிருந்து ரத்தம் சொட்டு சொட்டாக வழிந்தது. தன் மீதே தனக்கிருந்த கோபத்தை மொத்தமுமாக காட்டியவள் அப்படியே மயங்கிக் கீழே சரிந்தாள்.
***
நேற்றைய நாள் மர்மநபரைத் தேடி சென்ற விஷ்வா சந்தித்தது என்னவோ அவனது தந்தையை தான். அவரோ இவனை கேள்வியாகப் பார்க்க, இவனோ அவரை சந்தேகமாகப் பார்த்தான். இறுதியில் இருவருமே முறைத்துக் கொண்டது தான் மிச்சம்.
இன்று காலை சீக்கிரமாகவே புறப்பட்டிருந்தவன், காரினை எடுத்துக் கொண்டு அதி வேகமாக சென்றான். அவனது கைபேசியில் வைகைக்கு அழைப்பை விடுத்தபடி காரை ஓட்டிக் கொண்டிருந்தவனுக்கோ மனமோ பதைபதைத்தது. ஏனோ ஒரு நெருடல் அவனுக்குள் அந்த நொடி உதித்தது. அங்கு பெண்ணவள் படும் துயர் இவனை அடைந்தததோ என்னவோ?
ஞாயிற்று கிழமை என்பதால், வைகை விடுமுறையைக் கழிக்கும் பொருட்டு நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். அவனைப் பொருத்த மட்டும் நன்றாக உறங்கி எழுந்திருப்பதே விடுமுறையை நல்லமுறையில் செலவிடுவதாக அர்த்தம்.
என்றுமே வேலை, டென்ஷன் ருத்ரஜித்தின் திட்டுக்கள் என்றோட அந்த நாள் மட்டுமே அவனுக்கு நிம்மதியினை அளிக்கும். அப்படிப்பட்ட நிம்மதியான மனநிலையில் குப்புற கவிழ்ந்திருந்தவனை எழுப்பியது என்னவோ அவனது கைபேசி.
“யார்ரா இந்த நேரத்தில கால் பண்றது?” என்று சலித்துக் கொண்டே கைபேசியை உயிர்ப்பிக்க, எதிர்முனையிலிருந்த விஷ்வஜித்தோ, “டேய் எங்கயிருக்க?” என்று எடுத்த எடுப்பில் கேட்டான்.
“அடேய் தூங்கிட்டு இருக்கவனை எழுப்பி கேட்குற கேள்வியாடா இது? யாருடா நீ?” வைகையின் பதிலில் எதிர்முனையிலிருந்த விஷ்வஜித் பல்லைக் கடித்தான்.
“அடிங்கு என்னடா மரியாதை குறையுது. டேய் அஜ்ஜூ பேசுறேன்டா.” என்று அவன் கூறியது இவன் காதுகளில் சரியாக விழாதுப் போக,
“என்னது ஜூ வா? எந்த ஜூ வண்டலூர் ஜூவா? இல்லை கிண்டி ஜூவா” என்றான் தூக்கக் கலக்கத்தில், முக்கியமான வேலைக்காக சென்றுக் கொண்டிருந்த விஷ்வஜித்துக்கு அவனது பதில் கடுப்படிக்க, நாலு கெட்ட வார்த்தைகளை விலாசித் தள்ளியது மட்டுமின்றி அறிவுரையும் கூறியிருந்தான்.
அந்த வார்த்தைகளை கேட்டு அடித்துப் பிடித்து எழுந்த வைகையோ, அப்போது தான் திரையை உற்று கவனித்தான்.
“அய்யோ அஜ்ஜூ அண்ணா நீங்களா?” என்றான் அதிர்ச்சி குறையாமல்.
“நானே தான்டா. வெட்டியா தான இருக்க?” இதற்கு மேல் அவனை திட்டாது நேரடியாக கேள்விகளைத் தொடுத்திருந்தான் விஷ்வா.
‘அடப்பாவிகளா மாசத்துல எதாவது ஒரு ஞாயிற்று கிழமை தான் விடுமுறை கொடுக்குறீங்க. அதுவும் பொறுக்க மாட்டிங்குதே.’ என்று மனதில் புலம்பியவன், “ஆமா அண்ணா சொல்லுங்க?” என்றான்.
“எப்போதும் ருத்ரஜித் பின்னாடி தானே சுத்துவ என்னாச்சு?”
“அது எப்படி அண்ணா சொல்லுவேன்.”
“சரி சொல்லாத?”
“அய்யோ அஜ்ஜூ அண்ணா. அது அப்படி இல்லை. பாஸ் என்னை டிவோர்ஸ் பண்ணிட்டாரு. இப்போ எல்லாம் அடிக்கடி கழட்டி விட்டுட்டு போயிடுறாரு. என்ன பண்றாருனே தெரியலை.”
“எல்லாம் காதல் செய்யும் மாயம். நீ கிளம்பி வெளிய வா. அஞ்சு நிமிசத்துல உன் வீட்டுக்கு முன்னாடி நிற்பேன்.” என்று கூறிவிட்டு போனை அணைத்திருக்க, அடித்துப் பிடித்து தயாராகி வெளியே வந்தான் வைகை.
“அடேய் அண்ணனும் தம்பியும் என்ன நிம்மதியா விடமாட்டீங்க போலவே.” என்று புலம்பியபடி அவன் வெளியே நிற்க, சரியாக அவ்விடம் வந்து சேர்ந்தான் விஷ்வா. பின் வைகை வண்டியில் ஏறிக்கொள்ள விஷ்வாவின் வாகனமோ சீறிப் பாய்ந்தது.
ஏறியது தொடங்கி தற்போது வரை அவன் எதுவும் பேசாது அமைதியாக இருக்க, வைகை தான் குழம்பிப் போனான்.
“என்ன விசயம் அஜ்ஜூ அண்ணா?”
“ம்ம்ம் சொல்றேன். அதுக்கு முன்னாடி நீ ஒரு விசயம் சொல்லு? ருத்ரஜித் பத்தி.”
“அவருக்கு என்ன? அவரோ புரியாத புதிர்.”
“ருத்ரஜித்தோட சமீபத்திய நடவடிக்கையக் கேட்குறேன். ருத்ரஜித் அபூர்வா பத்தி.”
“அண்ணா. பாஸ் வலையில அபூர்வா சிக்குனாங்களா? இல்லை அபூர்வா வலையில பாஸ் சிக்குனாங்களானு தெரியலை. இரண்டு பேருக்குள்ள ஹெவி கெமிஸ்ட்ரி போயிட்டு இருக்கு.” என்று புன்னகையோடு கூறுபவனைக் கண்டு சற்று முறைத்துப் பார்த்தான் விஷ்வா.
“அது எனக்கு அவசியம் இல்லாதது.” என்று கூறிக்கொண்டே வண்டியினை ஓரமாக நிறுத்தியிருந்தான் விஷ்வஜித்.
“அந்த வீட்டிலயிருந்து ஒரு பொண்ணு வருவா. வெளியே உனக்கான பைக் நிக்குது. அதை எடுத்துட்டு நீ அவளை பாலோ பண்ணனும்.”
“யாரு அண்ணா அந்த பொண்ணு?”
“யாரா இருந்தா உனக்கு என்ன? சொன்னது மட்டும் செய் வைகை. ரொம்ப முக்கியமான விசயம். இது நமக்குள்ளவே இருக்கட்டும்.” என்று கூறியவன் அமைதியாக இருக்க, வைகையோ அவன் சொன்னதுப் போலவே தயாராகியிருந்தான்.
“வைகை. ப்ளூடூத் போட்டுக்கோ. அவ எங்க போறா. திரும்பி இங்க எப்போ வரப்போறா, எல்லாமே சொல்லிட்டே இரு. பீ கேர்புள்.” என்று எச்சரிக்கை உணர்வுடன் கூறுபவனைக் கண்டு லேசாக தலையசைத்தவன், காரிலிருந்து இறங்கி வெளியே நிற்கும் இருசக்கர வாகனத்தில் ஏறிக்கொண்டான்.
அவ்வீட்டிலிருந்து ஒரு பெண் தனது ஸ்கூட்டியுடன் வெளியே வர, விஷ்வாவோ காரிலிருந்தபடியே கைக்காட்டினான். சரி என்று தலையசைத்த வைகையோ, மெதுவாக சந்தேகம் வராத வண்ணம் பின் தொடர்ந்தான்.
வைகையும் விஷ்வா பற்றி நன்கு அறிவான். காரணமில்லாமல் அவன் எதையுமே செய்வதில்லை. ஆதலால் தான் என்ன? ஏது ? என்று கேட்காமல் அவன் சொல்வதை செயலாற்றத் தொடங்கியிருந்தான்.
விஷ்வாவோ தனது கேப்பை அணிந்துக் கொண்டவன், அவ்வீட்டின் பின்புறமாக நடந்து சென்று சுவறேறிக் குதித்திருக்க, யாரும் தன்னை கவனிக்கவில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டே வீட்டின் முன்புறம் சென்றான்.
தன்னிடமிருக்கும் போலி சாவியினைக் கொண்டு கதவினை திறந்து அவன் உள்ளே செல்ல, நிசப்தமாக காட்சியளித்தது மொத்த வீடும்.
சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பெண்ணவளின் புகைப்படத்தை ஒருமுறை உற்று கவனித்தவனது இதழ்கள் அன்னிச்சையாக மலர்ந்தது.
அந்த புகைப்படம் வேறு யாருடையதும் அல்ல. மகிஷா மகிமாவின் புகைப்படமே. அடுத்த நொடியே மகிஷா படுத்திருக்கும் அறைக்குள் நுழைந்தவன், தான் கொண்டு வந்திருந்த சில மாத்திரைகளை எடுத்து மேசையின் மீது வைத்தான். அங்கு ஏற்கனவே இருந்த மாத்திரைகளை எடுத்துக் கொண்டவன், கண்களை மூடி படுத்திருந்தவளை வாஞ்சையோடு பார்த்தான்.
“ஹே மகி. எப்படி இருக்க? எப்போ தான் கண்விழிக்கப் போற? உன்னோட பதிலுக்காக தான் காத்திருக்கேன்.” என்று கூறிக்கொண்டே அவளது கைகளை வாஞ்சையோடு பிடித்துக் கொண்டதில், பெண்ணவளின் கண்களில் கண்ணீர் சுரந்தது.
“நீ சீக்கிரமே ரெக்கவர் ஆகப் போற? உனக்கு ஒன்னும் இல்லை. நம்பிக்கையை மட்டும் கைவிட்ராத?” என்றவன் அவளது தலையை கோதிவிட்டுப் பிரிய, வைகையிடமிருந்து அழைப்பு வந்தது.
“சொல்லு வைகை?”
“அஜ்ஜூ அண்ணா. அவ பாதியில திரும்பி வீட்டுக்கே வந்திட்டு இருக்கா அண்ணா.”
“எந்த இடத்தில இருக்கா?”
“அந்த தெருகிட்ட வந்திட்டா அண்ணா.” என்று அவன் கூறவும் பதட்டம் கொண்டவன்,
“ஓகே வைகை. நீ அவளை டைவெட் பண்ணு.” என்று மட்டும் கூறியவன், தனக்கு தேவையான ஒன்றைத் தேடினான்.
அதற்குள் மகிமா அவ்விடம் வந்துவிட, அவளுக்கு முன் வண்டியை கொண்டு வந்து நிறுத்தினான் வைகை. தன் எதிரே யாரோ ஒருவன் வந்து நிற்கவும் அதிர்ந்தவள், குழப்பத்துடன் அவனை ஏறிட்டாள்.
“ஹாய் மேடம்?” என்று தலைகவசத்தை கழற்றாது அவன் பேச, அவளது முகத்திலோ குழப்ப ரேகை நிரம்பியது.
“யார் நீங்க? ஒருவேளை செயின் திருடனா நீ?” என்றவளோ தனது கழுத்திலிருக்கும் தங்க சங்கிலியினை மறைத்துக் கொள்ள, வைகைக்கோ ஒரே அசிங்கமாகப் போய்விட்டது.
‘என்னை பார்த்தா செயின் திருடனு சொன்ன? உன்னை என்ன பண்றேனு மட்டும் பாரு.’ என்று மனதில் கருவிக் கொண்டவன், “மேடம் என்னை பார்த்தா உங்களுக்கு அப்படியா தெரியுது? எங்க குடும்பம் ரொம்ப மரியாதையான குடும்பம் மேடம்.” என்றான் பதட்டம் குறையாது.
“மொதல்ல அந்த ஹெல்மெட்ட கழட்டு நீ?” என்றவள் முறைத்த பிறகே, ஹீஹீ என்று புன்னகைத்துக் கொண்டு தலைக்கவசத்தைக் கழற்றினான் வைகை.
இந்த முகத்தை இதுவரை அவள் பார்த்தது இல்லை என்பதால் குழம்பினாள் மகிமா.
“யாருங்க நீங்க?”
“என்னை தெரியலையா? நான் தான் உங்க பக்கத்து வீட்டு பரமசிவத்தோட பேரன். அப்போ உங்களுக்கு அஞ்சு வயசு. எனக்கு ஏழு வயசு. இரண்டு பேரும் சேர்ந்து கண்ணாமூச்சி எல்லாம் ஆடுனோமே?” என்றவன் உற்சாகத்துடன் கூற, இவளோ திருதிருவென விழித்தாள்.
“என்னங்க நீங்க சொல்றீங்க?” என்று நம்பாது பார்த்தவளது பார்வையே பறைச்சாற்றியது அவனை இவள் பைத்தியக்காரனாக இருப்பானோ என்று நினைத்துவிட்டதை.
அதே சமயம் விஷ்வஜித்தோ அங்கு கிடைத்த சிலவற்றை தனது பையில் திணித்துக் கொண்டவன் நகரப் பார்க்க, அவளது சட்டையை பற்றியிருந்தது மகியின் கைகள். ஒருநிமிடம் அதிர்ந்தவன் திரும்பிப் போய் பார்க்க, லேசாக கண் விழித்தவள் அவனையே இமை மூடாமல் பார்த்தாள்.
“மகி..” என்றவன் பெற்ற மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஒவ்வொரு நாளும் அவள் எப்போது கண்விழிப்பாள் என்று காத்துக் கொண்டிருந்தான். அவளால் மட்டுமே அவனுக்கான விடையினைக் கூற முடியும்.
இங்கு வெளியே இருந்த மகிமாவோ, உச்சகட்ட கோபத்தில் வைகையை முறைத்தாள்.
“நீ யாருனே தெரியலை. வேணும்னே கதை விடுறியா? யாருடா நீ? இல்லை கீழ்பாக்கத்துல இருந்து எஸ்கேப் ஆகிட்டியா?” என்றாள் காட்டமாக.
“வனி உங்களுக்கு என்னை தெரியலையா? ஓ காட் நான் தான் பீட்டர். உங்க பக்கத்து வீட்டு பையன்.”
“அடேய் பைத்தியக்கார என் பேரு வனியே இல்லைடா.” என்றவள் கத்தியதும் சாலையிலிருந்தவர்களோ ஓடோடி உதவ வந்தனர்.
“என்னாச்சுமா என்ன பிரச்சனை?” என்று ஆளாளுக்கு குரலை உயர்த்த,
‘அடேய் பொண்ணுக்கு ஒன்னுனா ஓடி வந்திருவீங்களே. என்னைக்காவது பையனுக்கு ஒன்னுனா வந்திருக்கீங்களாடா?’ என்று கேட்கத் துடித்த நாவை அடக்கியிருந்தான் வைகை.
“இவன் யாருனே தெரியலை. கீழ்ப்பாக்கம் போக வேண்டிய கேஸ் இங்க வந்து என் உயிரை வாங்குதுங்க.” என்றாள்.
“யாருடா நீ. அப்பாவி பொண்ணை தொந்தரவு பண்றியா?”
“அய்யோ அங்கிள் என் பக்கத்து வீட்டு பொண்ணு வனிதானு நினைச்சு தான் பேசுனேன். இப்போ தான் அவங்க இல்லைனு தெரிஞ்சிடுச்சே. இனி என்ன விடுங்க.” என்றவன் அனைவரையும் சமாளித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்துவிட, மகிமாவோ தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் கேட்டினைத் திறந்துக் கொண்டு உள்ளே நிறுத்தினாள்.
வண்டியை நிறுத்தியதும் வீட்டின் கதவினை உள்ளே திறந்துக் கொண்டு சென்றவளுக்கு, அவ்வறையில் எதோ மாற்றம் தெரிவதுப் போல உணர்ந்தாள்.
உடனே மகிஷாவின் அறைக்கு நுழைந்தவள் பார்க்க, அங்கு மகிஷாவோ அதே நிலையில் இமை மூடிப் படுத்திருந்தாள். அவளைக் கண்டு பெருமூச்சொன்றை விடுத்தவள் தான் எதற்காக வந்தோமோ அந்த பொருளை எடுத்துக் கொண்டு வெளியேறிவிட, காரில் அமர்ந்தபடி வேடிக்கைப் பார்த்தான் விஷ்வஜித்.
கூட்டம் சேர்ந்த நேரமே, அவன் வீட்டை விட்டு வெளியேறியிருக்க, அவ்விடம் நின்று பேசிக் கொண்டிருந்தவளின் முன்னே கடந்துச் சென்றவன், தனது தொப்பியை சரிசெய்தபடி காரில் ஏறிக் கொண்டான். விஷ்வஜித்தின் முகத்தில் தெரிந்த ரௌத்திரத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
தான் வந்ததை சாதித்த களிப்பில் வண்டியை அவன் இயக்க, அவனுக்காக சாலையின் சந்தில் காத்திருந்த வைகையும் அவன் சொன்ன இடத்தில், இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு , அவனது காரில் ஏறிக்கொண்டான்.
பூவான பெண்ணவளை
வதைத்தவள்
இவளோ…?
நிஜத்தை தேடும்
நாயகனின்
பார்வையில்
என்றும் அவள்
நிரபராதியே…..!!!!
