தனஞ்செழியன் தன் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும்; அவருக்கு மூன்று மாதங்களில் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்ற எண்ணத்தில் பாலா கடுமையாக உழைத்தான்.
நிறைய ப்ராஜெக்டுகளை வாங்கி, அவற்றைச் சரியான நேரத்தில் முடித்தும் கொடுத்தான். யார் எந்தப் பணியைச் சிறப்பாகச் செய்வார்கள் என்பதை அறிந்து, அதற்கேற்பப் பொறுப்புகளைப் பிரித்துக் கொடுத்தான்.
அன்று மலர் உடல்நிலை சரியில்லாததால் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்திருந்தாள். பாலா காலையில் அலுவலகம் வந்ததும் முதல் வேலையாக ரகுவை வரவழைத்தான்.
“ரகு… இன்னைக்கு நான் கொடுக்கிற ஃபைலை ஏ.ஆர். கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்ல போய்க் கொடுத்துட்டு வந்துரு” என்று நண்பனிடம் கூறியவன், மலருக்கு இண்டர்காமில் அழைத்தான். அவள் கேபினில் இல்லை. உடனே மலரின் அலைபேசிக்கு அழைத்தான்; அவள் எடுக்கவில்லை. அக்கவுண்ட்ஸ் பிரிவில் விசாரித்தபோது, “தெரியல சார்… லீவுன்னு நினைக்கிறோம்” என்று பதில் வந்தது.
“இன்னைக்கு ஒரு இம்பார்டன்ட் ஃபைல் செக் பண்ணிட்டுத் தரச் சொல்லியிருந்தேன். உங்ககிட்ட மலர் எதுவும் சொன்னாங்களா?” என்று அவன் விசாரிக்க, அதற்கும் ‘தெரியாது’ என்றே பதில் வந்தது.
“மலர்கிட்ட இருந்து லீவ் மெயில் வந்திருக்கா?” என அவன் புருவங்களைச் சுருக்கி வினவ, அவளது குழுவினரோ, “இல்ல சார்…அவங்க மெயில் எதுவும் அனுப்பல” என்றனர். பாலாவுக்கோ கோபம் தலைக்கேறியது.
“என்னடா… ஃபிளவர் எப்பவும் வேலைன்னா கரெக்ட்டா இருக்கணும்னு அட்வைஸ் பண்ணும். இப்போ என்னாச்சு… எதுவும் சரியில்லையே!” என்று ரகுவும் தன் பங்கிற்கு அவன் கோபத்தை அதிகமாக்கிட, பற்களைக் கடித்தபடி அழுத்தமாய் மேஜையை வெறித்திருந்தான்.
மீண்டும் மலருக்கு அழைத்தான்; அவள் எடுக்கவில்லை. அனன்யாவிற்கும் அலைபேசியில் முயற்சித்தான்; பதிலில்லை. அவள் கேபினுக்குச் சென்று தேடிப் பார்க்கச் சொன்னான். அங்கேயும் அவன் கேட்ட ஃபைல் இல்லை.
‘வேலையைச் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, போனை எடுத்துப் பதில் சொல்லலாமே! அவள் அதைச் சரிபார்த்து விட்டாளா என்றும் தெரியவில்லை. கிளையண்டிற்கு என்னவென்று பதில் சொல்வது?’ என யோசித்த பாலா கோபத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டான்.
மதியம் தான் மலர் பாலாவிற்கு அழைத்தாள். “பாலா, கால் பண்ணியிருந்தீங்க… சொல்லுங்க?” என்று அவள் சாதாரணமாகக் கேட்க,
“கால் பண்ணா எடுக்க மாட்டீங்களா? எத்தனை டைம் கூப்பிடுறது மலர்? உங்களுக்கு வேலை மேல அக்கறையே இல்ல. ஒரு எம்.டி. கால் பண்ணா அதை நீங்க மதிக்கிறதும் இல்ல. நீங்க என்னதான் மனசுல நினைச்சுட்டு இருக்கீங்கன்னு தெரியல. உங்களுக்குக் கொஞ்சம் இடம் கொடுத்தா, அதை ரொம்ப அட்வான்டேஜா எடுத்துக்கிறீங்க. இதுக்குத்தான் தகுதி பார்த்துப் பழகணும் போல!
“இன்னைக்கு லீவ்னு நீங்க மெயிலும் பண்ணல. ஒரு முக்கியமான ஃபைலை செக் பண்ணிக் கொடுக்கச் சொல்லியிருந்தேன், அதையும் நீங்க தரல. அந்த வேலையை முடிக்கலன்னா, என்கிட்ட தகவலாச்சும் சொல்லியிருக்கணும். நேத்தே அதைச் செய்ய முடியாது, இன்னைக்கு லீவ்னு இன்ஃபார்ம் பண்ணியிருந்தா, நான் வேற யாரையாச்சும் வச்சு அந்த வேலையை முடிச்சிருப்பேன்.
“இதெல்லாம் எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்காது மலர். உங்களால ஒர்க்ல சரியா இருக்க முடியும்னா இருங்க; இல்ல, ஏனோதானோன்னு தான் இருப்பீங்கன்னா நீங்க செழியன் அங்கிள் ஆபீஸுக்கே போயிடுங்க!” என்று பாலா கோபத்தில் வார்த்தைகளை வீசிக்கொண்டிருக்க, மலர் அதிர்ந்து போனாள்.
அவளுக்குப் பேச நா எழவில்லை; அப்படியே உறைந்து போய் அமைதியாக இருந்தாள்.
“சாரி பாலா… நான் காலையிலேயே லீவ் மெயில் போட்டுட்டேன், அது சென்ட் ஆகல போல. அந்த ஃபைல் செக் பண்ணி ரெடியா இருக்கு. மிஸ் ஆகிடக் கூடாதுன்னு அதை உங்க டேபிளுக்குக் கீழ இருக்கிற டிரால வச்சிருக்கேன். எனக்குத் தெரியும் சார், அது ரொம்ப இம்பார்ட்டன்ட் ஃபைல்னு. கொஞ்சம் உடம்பு சரியில்ல; தூங்கிட்டேன். அதனாலதான் போன் எடுத்துப் பேச முடியல. மத்தபடி உங்களை மதிக்காமலாம் இல்ல சார்.
“இனிமே லீவ் போட்டா உங்ககிட்ட முதல் நாளே இன்ஃபார்ம் பண்ணிடறேன் சார்… ஐ ஆம் ரியலி சாரி!” என்று தழுதழுத்த குரலில் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
அப்போதுதான் பாலா ஆத்திரத்தில் தான் எல்லை மீறிப் பேசியதை உணர்ந்தான். அவளைக் கஷ்டப்படுத்தி விட்டோமே என்று மனம் வருந்தினான்.
கோப்பினை எடுத்து ரகுவிடம் கொடுத்து அனுப்பியவனுக்கு, அதன் பிறகு வேலையே ஓடவில்லை. ‘ஃபைல் எங்கே இருக்கிறது என்று மட்டும் நான் கேட்டிருக்கலாம்; இவ்வளவு தூரம் கோபப்பட வேண்டிய அவசியமில்லை’ என்று தன்னைத்தானே நொந்து கொண்டான்.
அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தோன்றியது. மாலை அவள் தங்கியிருக்கும் விடுதியின் அருகில் சென்று நின்று பார்த்தான். மலரின் அறையில் விளக்கு எரியவில்லை; அவளுடைய தோழியும் அங்கு இல்லை.
அவளைப் பார்ப்பதற்காக விடுதிக்கு முன்பு நீண்ட நேரமாகக் காத்திருந்தான். அப்போது சரியாக மலரிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. தன்னைப் பார்த்துவிட்டுத்தான் அவள் அழைக்கிறாள் என்று நினைத்து, சுற்றும் முற்றும் அவளைத் தேடிக்கொண்டே புன்னகையுடன் அழைப்பை ஏற்றான்.
“பாலா சார்… நாளைக்கும் நான் லீவ். இன்னும் எனக்கு உடம்பு சரியாகல. பெருசா இம்பார்ட்டன்ட் ஒர்க் எதுவும் இல்ல, புது இன்வெஸ்டரைப் பார்க்கப் போகணும்னு மட்டும் சொல்லியிருந்தீங்க. ஜி.வி. சார்கிட்ட அப்பாயின்ட்மென்ட் வாங்கியாச்சு; நாளைக்குக் காலைல பத்து மணிக்குப் போகணும்.
“அந்த ஃபுல் டீடெயில்ஸ் ஃபைலும் உங்க டேபிள்ல இருக்கு சார். வேற ஏதாவது டவுட்னா எனக்கு கால் பண்ணுங்க. போன் என்கிட்டதான் இருக்கும்; நான் அட்டென்ட் பண்ணி பேசுறேன்” என்று அவள் படபடவென பேசிக்கொண்டிருக்க, வார்த்தைக்கு வார்த்தை அவள் ‘சார்’ என்று அந்நியமாகப் பேசுவதைப் பாலா அப்போதுதான் கவனித்தான்.
அவனுக்கு வருத்தமும் சினமும் ஒருசேர எட்டிப் பார்த்தன.
(பாலா சார்… நீங்க மட்டும் கோபத்துல வாங்க போங்கன்னு அந்நியமா பேசலாமா?!)
என்ன சொல்லி அவளைச் சமாதானப்படுத்துவது எனத் தெரியாமல், ‘ஹ்ம்ம்’ என்று மட்டும் முனகினான். மறுபுறம் மலர் அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.
‘நான் பேசுனது அவளை ரொம்பக் காயப்படுத்திருச்சு போல’ என நினைத்து பாலா உள்ளுக்குள் மருகினான். ‘வேலைப் பளுவில் கொஞ்சம் கடுமையாகப் பேசிவிட்டேன்; அதற்காக ஏன் அவள் இப்படி விலகிச் செல்ல வேண்டும்?’ என்ற ஆத்திரமும் எழுந்தது.
இரவெல்லாம் அவனுக்குத் தூக்கமே வரவில்லை. ‘இன்னும் ஆரம்ப நிலையிலேயே நிற்கும் என் காதல் கைகூடுமா?’ என்ற கலக்கம் அவனது நெஞ்சை அழுத்தியது.
காலை எழுந்து அலுவலகத்திற்குக் கிளம்பிக்கொண்டிருக்கையில், மலரிடமிருந்து, ‘பாலா சார், பத்து மணிக்கு இன்வெஸ்டரைப் பார்க்கணும்’ என்று குறுஞ்செய்தி வந்திருந்தது. அந்த ‘சார்’ என்ற வார்த்தை மிகவும் எரிச்சலைக் கிளப்பியது. இருந்தாலும், ‘சாரி’ என்று அவளுக்குப் பதில் அனுப்பினான்.
அங்கிருந்து மீண்டும் எந்தப் பதிலும் வராததால், கிளம்பி அலுவலகம் சென்று தன் பணிகளைக் கவனிக்கத் தொடங்கினான்.
மலர் அருகிலிருந்தபோது பாலாவிற்குப் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை; அவள் இல்லாதபோதுதான் அவளது நினைவுகள் அவனை அதிகமாகத் தாக்கின.
அலுவலகத்தில் அவள் அங்கங்கே நிற்பது போலவும், தன்னைப் பார்த்து ரசிப்பதும், புன்னகைப்பது போலவும் தோன்ற, அவனுக்குள் இனம்புரியாத அவஸ்தை எழுந்தது.
மறுநாள் மலர் அலுவலகத்திற்கு வந்தாள். பாலாவின் கேபினுக்குள் நுழைந்தவள், “குட் மார்னிங் சார்” என்று கூறிவிட்டு, அன்றைய பணிகளைப் பற்றி அவனிடம் விவரித்துக்கொண்டிருக்க,
“ஐ ஆம் ரியலி சாரி மலர்… நான் அவ்ளோ தூரம் உன்கிட்ட கோபமாப் பேசியிருக்கக் கூடாது” என மனதார மன்னிப்பு வேண்டியவன், “இப்போ உனக்கு உடம்புக்கு எப்படியிருக்கு, என்ன பண்ணுது? ஹாஸ்பிட்டலுக்குப் போனியா? என்னை எதுக்கு ‘சார்’னு கூப்பிடுற? நீ எப்பவும் போல என்னை ‘பாலா’னு கூப்பிடு” எனக் கேள்விகளை அடுக்கினான்.
இடையே குறுக்கிட்டவள், “இல்ல சார்… நீங்க சொன்னதெல்லாம் கரெக்ட் தான். நீங்க இந்த கம்பெனியோட எம்.டி. உங்ககிட்ட நான் அட்வான்டேஜ் எடுத்துக்கக் கூடாது. நான் சார்னே கூப்பிடுறேன். என்னைக்காவது ஒரு நாள் வேற ஏதோ கோபத்துல, ‘நீ ஏன் என்னை பாலான்னு கூப்பிடுற?’ன்னு நீங்க கேட்டுட்டா, அப்புறம் எனக்குத்தானே கஷ்டம்!” என்றாள்.
வெளிவரத் துடித்த கோபத்தை இழுத்துப் பிடித்துக் கட்டுப்படுத்தியவன், “நான் ஏதோ தெரியாம ஒரு வார்த்தைதானே சொன்னேன்? அதை வச்சுக்கிட்டு நீ ஏன் இப்படியெல்லாம் பேசுற?” என அவன் வினவியதும்,
“சார், நீங்க ஈஸியாப் பேசிடலாம், அதைக் கேட்ட எனக்குத்தான் கஷ்டமெல்லாம். நீங்க எம்.டி, நான் ஸ்டாஃப். நான் தப்பு செஞ்சா கண்டிக்கவும், அதைத் திருத்தவும் உங்களுக்கு உரிமை இருக்கு. இதுல நிஜமாவே கஷ்டப்பட எதுவும் இல்லைதான், என்னைத் திருத்திக்கிறேன்” என்று அவன் முன்பு திடமாகப் பேசியவள், தன் கேபினுக்குச் சென்றதும் அழத் தொடங்கினாள்.
இருவரது கேபின்களுக்கும் இடையே இருந்த கண்ணாடித் தடுப்பின் திரையை மட்டுமல்ல, தன் மனதையும் சேர்த்து மூடி வைத்துவிட்டாள்.
இருவரும் வழக்கம்போல் தத்தமது பணிகளைச் செய்து கொண்டிருந்தனர். பாலாவைப் பார்த்தாலே புன்னகை சிந்தும் மலர், இப்போது தலைகுனிந்து செல்வதையும், அவனை ‘சார், சார்’ என்று அழைப்பதையும் அவனது நண்பர்கள் கவனித்துவிட்டனர்.
நண்பர்கள் மூவரும் பாலாவின் கேபினில் அமர்ந்திருந்தபோது, “என்னடா… உனக்கும் ஃபிளவருக்கும் முட்டிக்கிச்சு போல?” என ரகு கிண்டலாக வினவிட, “நீங்க வேற பேசாம இருங்கடா… எரிச்சலை கிளப்பாதீங்க” என்று கடுப்பாகப் பதில் தந்தான்.
“என்னடா, என்ன ஆச்சு?” புருவங்களைச் சுருக்கி, ஆர்வத்துடன் ராகவ் வினவியதும்,
“ம்ச்… அன்னைக்கு ஒர்க் விஷயமா, அவ பண்ணாத தப்புக்குக் கோபத்துல கொஞ்சம் அதிகமா பேசிட்டேன்” என்று பெருமூச்சுடன் தலையைக் கோதிக்கொண்டான் பாலா.
“சரி… மன்னிப்பு கேட்டுச் சமாதானம் பண்ண வேண்டியதுதானே?” சசி தோள்களைக் குலுக்கியபடி சாதாரணமாகச் சொல்ல, “அதெல்லாம் நிறைய தடவை கேட்டுட்டேன்” என்றான் ஆற்றாமையுடன்.
“மன்னிப்பு கேட்டும் இன்னும் கோபம் சரியாகலையா?” வியப்பதைப் போலப் பாவனை செய்த ரகு, “ஏற்கனவே ஃபிளவர் கொஞ்சம் ஹெட் வெயிட்டான ஆளுதான். இங்க வந்து நீ அதுக்குப் பண்றதெல்லாம் பார்த்து இன்னும் கொஞ்சம் திமிர் அதிகமாகிடுச்சு போல. எனக்கென்னமோ ஜாலியான உனக்கும், ஆட்டிட்யூட் காட்டுற மலருக்கும் செட் ஆகும்னு தோணல” என்று நக்கல் தொனியில் சொல்லிக் கொண்டிருக்க,
“மே ஐ கம்மின் சார்?” என்று மெல்லிய குரலில் அனுமதி கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தாள் மலர். அறையிலிருந்த எல்லோரும் சட்டென்று அமைதியாகிவிட, உள்ளே வந்தவள் பாலாவிடம் அலுவலக வேலை விஷயமாகப் பேசிவிட்டு வெளியேறினாள்.
அவள் அங்கிருந்த சில நிமிடங்களும் பாலா அவளது கண்களையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது ஆழமான காதல் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தவித்த மலரின் விழிகள், அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டே இருந்தன.
பாலாவைப் பார்க்க அவன் கேபினுக்குள் நுழையவிருந்தவளுக்கு, அவர்கள் பேசியது எல்லாமே தெளிவாகக் கேட்டிருந்தது. இருந்தாலும், எதையுமே கேட்காதது போல இயல்பாகக் காட்டிக்கொண்டாள்.
‘அனன்யாவும் நானும் கூடச் சில சமயங்களில் பாலாவைக் கிண்டலாகப் பேசுவது இல்லையா? அதுபோலத்தான் அவன் மேல் உள்ள அக்கறையில் அவனது நண்பர்கள் பேசுகிறார்கள்’ என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டவள், ரகுவின் வார்த்தைகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
சசிக்குத்தான் உள்ளுக்குள் என்னவோ போல இருந்தது. அவன் எப்போதும் எல்லா விஷயங்களிலும் இருக்கும் நல்லது கெட்டதை நிதானமாக ஆராய்ந்து பார்ப்பவன்.
மாறாக, ரகுவும் ராகவும் அந்த நொடி மனதில் என்ன தோன்றுகிறதோ, அதன் பின்விளைவுகளைப் பற்றிக் கொஞ்சமும் சிந்திக்காமல் பேசிவிட்டுக் கடந்து சென்றுவிடுவார்கள். மற்றவர்கள் மனம் புண்படுமே என்றெல்லாம் யோசிக்க மாட்டார்கள்.
“ரகு… நீ மலர் பத்திப் பேசுறது எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கல. என்னதான் இருந்தாலும் அவங்க ஒரு பொண்ணு; அதைவிட முக்கியமா பாலாவோட லவ்வர். அவங்களுக்கு இடையில நாம கருத்து சொல்றதும் தப்பு. அவங்க கேரக்டரை ஜட்ஜ் பண்றதும் தப்பு!” என்று ரகுவிடம் குரலை உயர்த்தி சற்றுக் கோபமாகப் பேசியவன், பாலாவின் புறம் திரும்பினான்.
“எனக்கு நீ பண்றதும் பிடிக்கலடா! நாங்க உன் ஃப்ரெண்ட்ஸா இருந்தாலும், நீ லவ் பண்ற பொண்ணைப் பத்தி நாங்க தப்பாப் பேசினா நீ கேட்டுக்கிட்டுச் சும்மா இருப்பியா?” என்று அக்கறையுடன் கடிந்துகொண்டான்.
காதல் மலரும்🌹
