27. ராட்சசனின் காதல் பாவை
போன பகுதியில்:
அந்த வீட்டைச் சுற்றி ஆங்காங்கே தோட்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இது போதும். இதற்குப் பிறகு நமக்கு எப்போதாவது தேவைப்படும்போது பார்த்துக்கலாம்.
இனி…
எப்போதும் லிப்டில் செல்பவன், இன்று தான் இருக்கும் கோபத்தில் என்ன செய்கிறோம் என்று கூடத் தெரியாமல் பத்தாவது தளம் வரை படிக்கட்டில் ஏறினான்.
பத்தாவது தளம் வரை படிகளில் ஏறி வந்தவன், தனது அறைக்குள் புகுந்தான். அறைக்குள் வந்தவன் நொடியும் தாமதிக்காமல் குளியலறைக்குள் நுழைந்து ஷவரைத் திறந்து அதற்கு அடியில் நின்றான்.
போதையின் பிடியில் இருந்தவனுக்குக் குளிர்ந்த தண்ணீர் தேகத்தில் படப்பட மதுவின் போதை குறைந்தது. ஆனால், ஹார்மோன்களால் ஏற்பட்ட போதை மட்டும் குறையாமல் அவனை வாட்டி எடுப்பது போல் இருக்க, அப்படியே நின்றிருந்தான்.
நொடிகள் நிமிடங்களாக மாறின. நிமிடங்கள் நேரங்களாக மாறின. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அப்படியே ஷவரின் அடியில் நின்றிருந்தான்.
அந்த ஷவர்தான் எவ்வளவு நேரம் தண்ணீரை ஊற்றிக் கொண்டிருப்பது என்று கடுப்பாகி, தண்ணீரை ஊற்றுவதை நிறுத்திவிட்டது. தண்ணீர் நின்றவுடன்தான் நினைவுக்கு வந்தவன் மெல்லக் கண்களைத் திறந்தான்.
கண்களைத் திறந்தவனின் கண்கள் முழுவதும் ரத்தம் போல் சிவந்திருந்தன. பார்ப்பதற்கே அசுரன் போல் தெரிந்தான்.
தனது ஈர ஆடைகளைக் கலைத்தவன் வேறொரு ஆடைக்கு மாறினான். அப்போது கண்களை மூடி ஒரு ஆழ்ந்த பெருமூச்சை எடுத்தான். மீண்டும் அவனுடைய நினைவுகளில் அவளின் அதிர்ச்சியும் அழுகையும் வந்து செல்ல, அதில் மீண்டும் கடுப்பானவன் இந்த முறை சுனிலுக்கு அழைத்தான்.
ஆனால், சுனிலின் போன் நாட் ரீச்சபிள் என்று வந்து கொண்டே இருந்தது. அதில் இன்னும் அவனுக்குக் கடுப்பேற, மீண்டும் இரண்டு முறை அழைத்தான். அப்போதும் அதே பதில்தான் வர, வேறு வழியில்லாமல் ஸ்ரீனாவின் நம்பரைத் தேடினான். அதுவும் அவனிடத்தில் இல்லை.
அதில் இப்போதே யாரையாவது கொன்றுவிட வேண்டும் என்பது போல் அவனுக்குக் கோபம் தலைக்கேறியது. டென்ஷனில் தனது போனைக் கட்டிலில் தூக்கி அடித்தவன், கட்டிலின் முனையில் அமர்ந்துவிட்டான் விதுரன்.
அதே நேரம், ஆபீஸில்…
வெளியே சென்ற சுனில் டென்ஷனாக உள்ளே நுழைந்தான். அப்போது ரிசப்ஷனில் ஒரு பெண் பதற்றமாக ஷீலாவிடம் பேசிக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்த சுனில் அங்கு சென்றவன்,
“ஏதாவது ப்ராப்ளமா?” என்று கேட்டான் சுனில்.
அதைக் கேட்ட ரிசப்ஷனிஸ்ட்,
“நோ ப்ராப்ளம் சார். இவங்களும் நம்ம கம்பெனியோட எம்ப்ளாய்தான். சேல்ஸ் டிபார்ட்மெண்ட்ல எச்.ஆர். இருக்காங்க. இவங்க பேரு கவிகா” என்று சொன்னாள் ஷீலா.
ஷீலா சொன்னதும், இவ்வளவு நேரம் தன் பக்கத்தில் நிற்பவளின் முகத்தைக் கூடப் பார்க்காதவன், இப்போது அவள் சொல்லியதும் நிமிர்ந்து பார்த்தான்.
கவி மிகவும் பதற்றத்துடன் நின்றிருந்தாள். அதைப் பார்த்தவன் மீண்டும் ஷீலாவிடம் திரும்பி,
“ஓகே, அதுக்கும் இவங்க டென்ஷனா இருக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டான் சுனில்.
“அது வந்து சார், இவங்க ஸ்ரீனா மேடமோட ஃப்ரெண்ட். இன்னைக்கு நடந்த ப்ராப்ளம்ஸ் கேள்விப்பட்டு இப்போ அவங்களைப் பார்க்கணும்னு சொல்றாங்க. அதை இப்போ முடியாது, ஈவினிங் வரைக்கும் வெயிட் பண்ணுங்கன்னு சொல்லிட்டு இருந்தேன் சார்” என்று சொன்னாள் ஷீலா.
அதைக் கேட்டவன் கவியிடம் பேசத் தொடங்கினான்.
“நீங்க டென்ஷன் ஆகுற அளவுக்கு ஒண்ணுமே இல்ல. உங்க ஃப்ரெண்ட் இப்போ நல்லா இருக்காங்க” என்று சொன்னான் சுனில்.
“இல்ல சார், நான் அவளைப் பார்த்தே ஆகணும். நேத்துல இருந்து நான் அவளைப் பார்க்கவே இல்ல. நேத்து காலையில பார்த்ததுதான். அதுக்கப்புறம் நாங்க பார்த்துக்கவே இல்ல. அதுவும் இல்லாம, இப்போ இவங்ககிட்ட கேட்கும்போதுதான் தெரிஞ்சது, அவளுக்கு நைட்டு ஃபுல்லா உடம்பு சரியில்லன்னு. சார், எப்படி இருந்தாலும் அவளைப் பார்க்கணும் சார். ப்ளீஸ்” என்று கேட்டாள் கவி.
அதில் கடைசியாகச் சொன்னதைக் கேட்டவன், திரும்பி ஷீலாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு,
“ஓகே, டென்ஷன் ஆகாதீங்க. நான் கூட்டிட்டுப் போறேன்” என்று சொன்ன சுனில் அவளை அழைத்துக்கொண்டு மேலே வந்தான்.
ஆனால், இங்கு ஸ்ரீ மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தாள். இருவரும் உள்ளே நுழைய, இவர்கள் வருவதைக் கூடத் தெரியாமல் தனது கம்ப்யூட்டரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவளைக் கவியின் குரல்தான் கலைத்தது.
“ஸ்ரீ…” என்று அழுகையுடன் கூப்பிட்டவள் ஓடிச் சென்று அவளை அணைத்துக்கொண்டாள் கவி.
அவளின் மனநிலையை அறிந்த ஸ்ரீ, தன் தோழியை அணைத்துக்கொண்டு சிறிது நேரம் தன் அணைப்பிலேயே வைத்திருந்தாள்.
கவியின் அழுகையும் மெல்ல அடங்கியது. ஸ்ரீயிடமிருந்து விலகியவள்,
“ஏண்டி, இதெல்லாம் என் கிட்ட இருந்து மறைச்ச? நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா இந்த விஷயம் கேள்விப்பட்ட உடனே? பாஸ் வேற ரொம்ப கோபக்காரர்னு எல்லாருமே சொன்னாங்க” என்று விசும்பலுடன் சொன்னாள் கவி.
அதைக் கேட்டவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவள் அமைதியாக நிற்க,
“என்னடி, நான் பேசிட்டே இருக்கேன். அமைதியா நிக்கிற? உன்னைத்தான் கேட்டுட்டு இருக்கேன். எதுக்கு என் கிட்ட இதைச் சொல்லாம மறைச்ச?” என்று கோபமாகக் கேட்டாள் கவி.
“லூசு மாதிரி பேசாத. உன் கிட்ட நான் எதையும் மறைக்கணும்னு பண்ணல. இதைச் சொன்னா நீ பயந்துடுவேன்னு உன் கிட்ட சொல்லல. அதுவும் இந்தப் பிரச்சனை எனக்கு இவ்வளவு பெருசா வரும்னு தெரியாது. இப்படி ஏதாவது பெரிய பிரச்சனை வரும்னு தெரிஞ்சிருந்தா முன்னாடியே உன் கிட்ட சொல்லியிருப்பேன் டி. அதாவது, உன் கிட்ட சொல்லாததுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. நான் சொல்லியிருந்தா நீ பயந்து போயிருப்ப. அதனாலதான் நான் சொல்லல” என்று சொன்னாள் ஸ்ரீனா.
“நான் பயப்படுறேனா, பயப்படலையா? அது நீ சொன்னதுக்குப் அப்புறம்தானே தெரியும். நீ முதல்லயே சொல்லியிருக்கணும்” என்று கேட்டாள் கவி.
“சரி, சாரி. உன் கிட்ட சொல்லாம விட்டதுக்கு என்ன தண்டனை மேடம் கொடுக்கப் போறீங்க? கொடுங்க, நான் அக்சப்ட் பண்ணிக்கிறேன்” என்று தன் காதைப் பிடித்துக்கொண்டு கேட்டாள் ஸ்ரீ.
அதைப் பார்த்த கவிக்குத் தன் தோழியைப் பார்த்துச் சிரிப்பு வந்துவிட, உடனே அவளைச் செல்லமாக அடித்தவள் மீண்டும் அவளை அணைத்துக்கொண்டாள். ஸ்ரீயும் தன் தோழியை அணைத்துக்கொண்டாள்.
இவர்களின் பேச்சுவார்த்தையை இவ்வளவு நேரம் சுனில் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். அவனே இவர்களைப் பார்ப்பதற்கு ஏதோ சிறு குழந்தைகள் பேசிக்கொள்வது போலத்தான் தெரிந்தது. அதைப் பார்த்து அவனுமே மெல்லச் சிரித்தான்.
“சரி கவி, நீ போய் உன்னோட வேலையைப் பாரு. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. நம்ம ஈவினிங் பார்க்கலாம்” என்று சொன்னாள் ஸ்ரீனா.
“ஸ்ரீ, இன்னிக்கு ஒரு நாள் என் கூட இரு டி. என்னவோ என் மனசெல்லாம் ஒரு மாதிரியா இருக்கு” என்று சொன்னாள் கவி.
அதைக் கேட்ட ஸ்ரீ ஏதோ சொல்ல வர, அவளுக்கு முன்பு பேசினான் சுனில்.
“சாரிங்க, உங்க ஃப்ரெண்ட் இன்னைக்கு எங்கேயும் வர முடியாது” என்று சொன்னான் சுனில்.
“எதுக்கு வர முடியாது? வேலை முடிச்சிட்டு அவ வீட்டுக்கு வரலாம் இல்ல?” என்று கேட்டாள் கவி.
“நீங்க கேட்கிற கொஸ்டின் கரெக்டுதான். உங்க ஃப்ரெண்ட் பாஸோட பர்சனல் செக்யூரிட்டி. அவங்க அப்படி இருக்கும்போது அவங்களால எப்படி வர முடியும்?” என்று சொன்னான் சுனில்.
“ஏன் சார், பர்சனல் பி.ஏ-வா இருந்தா அவங்க வீட்டுக்குப் போகக் கூடாதா என்ன? அவங்களுக்குன்னு ஒரு ஃபேமிலி இருக்கும் தானே?” என்று கேட்டாள் கவி.
இவள் சொல்லியதைக் கேட்ட சுனிலுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஸ்ரீனாவின் முகத்தைப் பார்த்தான்.
அவள் முகத்திலோ கலவரம் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. அதில் ஒன்றும் புரியாதவன் அவளை உற்றுப் பார்க்க, ஸ்ரீனா அவனிடம் ஏதோ கண்களால் சைகை செய்தாள். அது அவனுக்குப் புரியவில்லை.
விதுரனின் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்துகொள்பவனுக்கு, இவள் கண்களால் சைகை செய்யும் செயலைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனென்றால், அவள் கண்களை உருட்டி உருட்டிக் காண்பித்துக் கொண்டிருந்தாள்.
அதில் கடுப்பானவன்,
“ஸ்ரீ, நீ என்ன சொல்ல வர? எனக்கு ஒண்ணுமே புரியல” என்று கவியிடம் அவளைக் கோர்த்துவிட்டான் சுனில்.
இவன் கேட்ட கேள்வியில் கவி திரும்பி ஸ்ரீனாவைப் பார்க்க, ஸ்ரீனாவுக்கு ‘ஐயோ!’ என்பது போல் அவளைப் பார்த்தாள்.
அதில் கவி அவளை முறைத்துப் பார்க்க, அந்தப் பார்வையில் புரிந்துகொண்டாள். தான் தான் சமாளித்தாக வேண்டும். இவரை நம்பியது வேஸ்ட் என்று மனதில் நினைத்தவள்,
“அது இல்ல கவி, என்னால வர முடியாது. அன்னைக்கு உன் கிட்ட சொன்னதுதான். எப்பவுமே பாஸ் கூட இருக்கணும். அதுவும் இல்லாம, இப்போ ஒரு டெண்டர் கொட்டேஷன் ரெடி பண்ணணும். அது முக்கியமான டெண்டர். இன்னும் மூணு நாள்ல அந்தக் கொட்டேஷனை சப்மிட் பண்ணாதான் நம்ம கம்பெனிக்கு பெரிய ஆஃபர் கிடைக்கும்” என்று சொன்னாள் ஸ்ரீனா.
“அப்போ நீ வரமாட்டியா?” என்று கவலையாகக் கேட்டாள் கவி.
“ஏண்டி, இப்படி முகத்தைச் சோகமா வச்சிக்கிற? சரி, நான் உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு நினைச்சேன். ஆனா, சொல்லாம மறந்துட்டேன் டி” என்று சொன்னாள் ஸ்ரீனா.
“என் கிட்டயே நீ கதையை மாத்துற இல்ல? சரி, சொல்லு. என்ன சொல்லணும்னு நினைச்ச?” என்று தன் புருவத்தை உயர்த்தியபடி கேட்டாள் கவி.
“நான் ஹவுஸ் ஓனருக்குக் கால் பண்ணியிருந்தேன். நான் வரமாட்டேன், நீ மட்டும் தான் இருப்பேன்னு சொல்லிட்டு இருந்தேன். அப்போதான் அவரு ஒரு விஷயம் சொன்னாரு” என்று சொன்னாள் ஸ்ரீனா.
“என் வீட்டை ஏதாவது காலி பண்ணச் சொல்லிட்டாரா?” என்று கேட்டாள் கவி.
“அப்படியெல்லாம் எதுவும் சொல்லல. நான் வரமாட்டேன், நீ மட்டும் தான் இருப்பேன்னு சொன்னேன். அதுக்கு அவர் கூட வேற யாரையாவது தங்க வச்சுக்கலாம்னு கேட்கிறாரு. அதான் உன்னைக் கேட்டுச் சொல்றேன்னு சொல்லியிருக்கேன்” என்று சொன்னாள் ஸ்ரீனா.
“ஆரம்பத்திலேயே நாம சொன்னதுதானே? நீயும் நானும் மட்டும்தான்னு. இப்போ என்ன புதுசா வேற யாரையாவது தங்க வைக்கிறேன்னு சொல்றாரு? அதைக் கேட்டு வந்து என் கிட்ட சொல்ற?” என்று கோபமாகக் கேட்டாள் கவி.
இனி என்ன நடக்கும் என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
காதல் பாவை தொடரும்…
இப்படிக்கு,
உங்கள் அன்புத் தோழி…
