30.ராட்சசனின் காதல் பாவை

30. ராட்சசனின் காதல் பாவை

போன பகுதியில்:

சிஸ்டம் முன்பு அமர்ந்து அவளுக்கு ஒவ்வொன்றாகச் சொல்லித் தரத் தொடங்கினான். அதுமட்டுமில்லாமல், விதுரனின் அடுத்தடுத்த ஷெட்யூல்கள் அனைத்தையும் சொன்னான்.

இனி…

விதுரனின் பிசினஸ் பார்ட்னர்ஸ், கஸ்டமர்ஸ், டீலர்ஸ் என அனைத்து தகவல்களையும் அவளுக்குச் சொன்னான். அதுமட்டுமில்லாமல், விதுரனின் பேங்க் டீடெயில்ஸ், ஷேர்ஹோல்டர்ஸ் என இன்னும் பல தகவல்களை அவளுக்கு டீடெயிலாகச் சொல்லி முடித்தான்.

அதை மொத்தமாகக் கேட்டவளுக்கு என்னதான் புரிந்தாலும், தலை சுற்றுவது போல் இருந்தது. தலையில் கை வைத்தபடி சுனிலைப் பார்த்தாள் ஸ்ரீனா. ஆனால் அவனோ, அவளுக்குச் சொல்லித் தரும் ஆர்வத்தில் அனைத்தையும் ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டே சென்றான். அவள் இருக்கும் நிலையை அவன் கவனிக்கவே இல்லை.

இப்படியே கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் சென்றிருக்க, இதற்கு மேல் தன்னால் முடியாது என்று நினைத்தவள்,

“போதும், நிறுத்துங்க! முக்கியமான எல்லா டீடெயில்ஸும் சொல்லிட்டீங்களா?” என்று கேட்டாள் ஸ்ரீ.

“முக்கியமான டீடெயில்ஸ் எல்லாம் சொல்லிட்டேன். இருந்தாலும் சின்னச் சின்ன விஷயங்கள் இருக்கு” என்றான் சுனில்.

“அதைக் கொஞ்சம் கொஞ்சமா நானே தெரிஞ்சுக்கிறேன். மொத்தத்தையும் எனக்கு ஒரே நாள்ல சொன்னா என் மூளை தாங்காது” என்றாள் ஸ்ரீனா.

அவள் சொல்லிய விதத்தைப் பார்த்தவன் வாய்விட்டுச் சிரித்தான்.

“நல்ல ஜோக் பண்ற ஸ்ரீ! ஓகே, முக்கியமானது எல்லாம் நான் டீடெயிலா சொல்லிட்டேன். எதாவது டவுட்னா எனக்குக் கால் பண்ணு. ஆனா, எதிலேயும் எந்தத் தப்பையும் பண்ணி பாஸ் கிட்ட மாட்டிக்காத. இப்போ இந்த டெண்டரை நீ தான் மொத்தமா ஹேண்டில் பண்ற மாதிரி இருக்கும். கவனமா ஹேண்டில் பண்ணு. நேத்து நைட்டு நான் அந்தக் கொட்டேஷன்ல இருந்து பாதி ரெக்கார்ட் பண்ணி எடுத்து வச்சிருக்கேன். உனக்கு அது யூஸ் ஆகும். சரி, ஓகே… நான் தீபக் கிட்ட போயிட்டு ஒர்க் எப்படி போகுதுன்னு பார்த்துட்டு கிளம்பிடுவேன். நாளைக்கு ஆபீஸ் வரமாட்டேன். நீ என் வேலையை ஹேண்டில் பண்ணிக்கோ” என்று சொன்னவன் அங்கிருந்து கிளம்பிவிட்டான் சுனில்.

இவளும் தன் விதியை நினைத்துக்கொண்டு வேலையில் மூழ்கிவிட்டாள். இப்படியே அந்த நாளும் சென்றது.

வேலைகள் அனைத்தையும் முடித்தவளுக்கு, விதுரனிடம் சில டாக்குமெண்ட்களில் கையெழுத்து வாங்க வேண்டியிருந்தது. உடனே சுனிலுக்கு அழைத்தாள். அவனும் உடனே அழைப்பை ஏற்றவன்,

“சொல்லு ஸ்ரீ…” என்று கேட்டான் சுனில்.

“பாஸ் கிட்ட சைன் வாங்க வேண்டிய பைல்ஸ் எல்லாம் இருக்கு. என்ன பண்றது? நீங்களே சைன் வாங்குறீங்களா?” என்று கேட்டாள் ஸ்ரீ.

“இல்ல, என்னால போக முடியாது ஸ்ரீ. இப்போ முடிக்க வேண்டிய வேலை நிறைய இருக்கு. நான் இன்னைக்கே முடிச்சாதான் நாளைக்குக் கிளம்புறதுக்கு ஏற்பாடு பண்ண முடியும். அதனால நீயே பாஸ் கிட்ட சைன் வாங்கிட்டு வந்துடு. அதுமட்டுமில்ல, இனி நீ தான் எல்லாமே பண்ற மாதிரி இருக்கும். எல்லாத்துக்கும் பயந்துக்கிட்டே இருந்தா முடியாது. அதனால நீயே போ” என்றான் சுனில்.

“அவர் ஆபீஸ்ல கிடையாது. அவர் எங்க இருப்பாருன்னு எனக்குத் தெரியாது” என்றாள் ஸ்ரீனா.

“அவர் இப்போ எங்க இருக்காருன்னு பார்த்துட்டு, அவரோட அட்ரஸை உனக்கு செண்ட் பண்ணி விடுறேன்” என்று சொன்னவன் போனை வைத்துவிட்டான்.

அவன் போனை வைத்த இரண்டு நிமிடங்களிலேயே அவளுடைய போனுக்கு மெசேஜ் வந்தது. சுனில் சொன்னது போல், அவன் போனை வைத்தவுடன் அவளுக்கு அட்ரஸை அனுப்பியிருந்தான்.

அதைப் பார்த்தவள் அனைத்து பைல்களையும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

ஆபீஸில் இருந்து வெளியே வந்தவள், ஏதாவது வண்டி வருகிறதா என்று பார்த்தாள். அப்போது அந்தப் புறமாக ஒரு ஆட்டோ செல்ல, அதை நிறுத்தியவள்,

“அண்ணா, இந்த அட்ரஸுக்குப் போகணும்” என்று தன் கையில் இருந்த போனை அவரிடம் காட்டினாள் ஸ்ரீனா.

“இங்க ஆட்டோ எல்லாம் போகாதுமா. நான் கூட்டிட்டுப் போனாலும் உன்னை மெயின் ரோட்லதான் விட முடியும். நீ தான் உள்ளே போகணும்” என்றார் ஆட்டோக்காரர்.

“சரி, பரவாயில்ல. நீங்க மெயின்ல விட்டுருங்க. நான் நடந்து போய்க்கிறேன்” என்று சொன்னவள் ஆட்டோவில் ஏறிக்கொண்டாள் ஸ்ரீனா.

சிறிது நேரப் பயணத்திற்குப் பின்பு அந்த ஆட்டோ நிறுத்தப்பட்டது. அதை உணர்ந்தவள் ஆட்டோக்காரருக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டுத் திரும்பினாள்.

அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. பார்க்கும் தூரம் முழுவதும் காம்பவுண்ட் சுவர் மட்டும்தான் இருந்தது. அக்கம் பக்கத்தில் வீடுகள் இருப்பது போல் எதுவும் தெரியவில்லை. ஆனால், அதன் கேட் கண்ணுக்குத் தென்படவில்லை.

மெல்ல உள்ளே நடந்து சென்றாள். செல்லச் செல்ல அமைதியான பாதையும், மரங்களின் காற்று வீசும் சத்தமும் மட்டுமே கேட்டது. அதை ரசித்தபடியே சென்றாள்.

கிட்டத்தட்ட இருபத்தைந்து நிமிடங்களுக்கும் மேலாக நடந்து வந்தவளுக்கு, அப்போதுதான் கேட் கண்ணில் பட்டது. அதன் வாசலில் இரண்டு வாட்ச்மேன்கள் அமர்ந்திருப்பதைப் பார்த்தவள்,

“நான் பாஸைப் பார்க்கணும்” என்றாள் ஸ்ரீனா.

அதைக் கேட்ட இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“நீ யாருமா? திடீர்னு வந்து சாரைப் பார்க்கணும்னு சொல்ற? இதுக்கு முன்னாடி உன்னை நாங்க பார்த்ததே இல்லையே! நீ வருவேன்னு சார்கூட எதுவுமே சொல்லலையே! எந்தப் பத்திரிகையிலம்மா வேலை செய்ற? சாரைப் பார்க்கணும்னு சொல்லிப் பொய் சொல்லி உள்ளே போகப் பார்க்கிறியா?” என்று கேட்டார் அவர்களில் ஒருவர்.

“ஐயோ, தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. நான் எந்தப் பத்திரிகையிலும் வேலை செய்யல. இப்பதான் பாஸ் கிட்ட வேலைக்குச் சேர்ந்திருக்கேன். ரெண்டு நாள்தான் ஆகுது நான் வேலைக்குச் சேர்ந்து” என்றாள் ஸ்ரீனா.

“இத பாரும்மா, யார்கிட்ட கதை விடுற? எப்பவுமே சுனில் சார்தான் வருவாரு. இப்போ என்ன, நீ பைலைத் தூக்கிட்டு வந்துட்டா உன்னை நாங்க உள்ளே விட்டுடுவோமா? ஒழுங்கா இங்கிருந்து போயிடு. சார் உள்ளே இல்லை. சார் இங்க இருக்காருன்னு தப்பா நினைச்சுட்டு வந்திருக்கேன்னு நினைக்கிறேன். ஒழுங்கா இங்கிருந்து கிளம்பிடு” என்றார் இன்னொருவர்.

இவர்கள் சொல்வதைக் கேட்டவளுக்கு, இது என்ன புது சோதனை என்பது போல் இருந்தது. அவர்களிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். ஆனால், அவர்களோ அதை நம்புவது போல் இல்லை. அதில் தன் பொறுமையை இழந்தவள்,

“நான்தான் இவ்வளவு சொல்றேன்ல! நான் சொல்றதை நம்ப மாட்டேங்கிறீங்க. அப்படி உங்களுக்கு யார்தான் சொன்னா நம்புவீங்க?” என்று கேட்டாள் ஸ்ரீனா.

“இங்க பாரும்மா, நீ பாஸ் கிட்ட வேலை பார்க்கிறதாவே இருக்கட்டும். ஆனா, நீ வருவேன்னு பாஸ் எங்க கிட்ட சொல்லல. நீ சொல்றதைக் கேட்டு நாங்க உன்னை உள்ளே அனுப்பி, கடைசில நீ பாஸ் கம்பெனில வேலை பார்க்கிற பொண்ணு இல்லாம ரிப்போர்ட்டரா இருந்தா, எங்க வேலைக்கு நாங்களே ஒலைய வச்சுக்கிற மாதிரி ஆயிடும். அதனால தயவுசெய்து இங்கிருந்து கிளம்பிடு” என்றார் மீண்டும்.

அதைக் கேட்டவள், இவர்களுக்கு இதற்கு மேல் பேசி புரிய வைக்க முடியாது என்பதை நன்றாகப் புரிந்துகொண்டாள். உடனே தன் போனிலிருந்து சுனிலுக்கு அழைத்தாள்.

சுனில் அப்போதுதான் தீபக்கிடம் வேலை பற்றிப் பேசிக்கொண்டிருந்தான். இவள் போன் செய்யவும், அவனிடம் ஒரு நிமிடம் என்று கூறியவன் உடனே போனை அட்டென்ட் செய்தான்.

“என்ன ஸ்ரீ? பாஸைப் பார்த்துட்டியா? பைல் எல்லாம் கையெழுத்து வாங்கிட்டியா?” என்று கேட்டான் சுனில்.

“ஐயோ அண்ணா, அந்தக் கொடுமையை ஏன் கேக்குறீங்க? இங்க இரண்டு வாட்ச்மேன்கள் இருக்காங்க. நான் பாஸோட பி.ஏ., பாஸ் கிட்ட இந்த பைல்ல சைன் வாங்கணும்னு சொல்லிட்டேன். ஆனா, அவங்க என்னை ரிப்போர்ட்டர்னு நினைச்சு உள்ளேயே விட மாட்டேங்கிறாங்க. நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்க” என்றாள் ஸ்ரீ.

போனை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு அவர்கள் முன்பு நீட்டினாள். உடனே அவர்களில் ஒருவர்,

“ஹலோ…” என்றார்.

“ஹலோ, நான் சுனில் பேசுறேன்” என்றான் சுனில்.

“சொல்லுங்க சார். நான் தான் வாட்ச்மேன் பேசுறேன்” என்றார் அவர்.

“அவங்க புதுசா நம்ம கம்பெனில ஜாயின் பண்ணியிருக்காங்க. அதுவும் பாஸோட பர்சனல் பி.ஏ. எப்பவுமே பாஸ் கூடத்தான் இருப்பாங்க. அவங்க கிட்ட இருக்கிற பைல்ஸ் எல்லாம் ரொம்ப முக்கியமானது. உடனே பாஸ் கிட்ட சைன் வாங்கணும். அவங்களை உள்ளே விடுங்க. இனி நான் வரமாட்டேன். அவங்கதான் எல்லாத்துக்குமே வருவாங்க” என்றான் சுனில்.

அதைக் கேட்ட இருவரும் ஒரே நேரத்தில்,

“ஓகே சார்” என்றார்கள்.

சுனிலும் போனைக் கட் செய்துவிட, வாட்ச்மேன் கதவைத் திறந்துவிட்டார்.

கதவைத் திறந்ததும் அதைப் பார்த்தவளுக்குத் தலை சுற்றியது. இப்போதுதான் கிட்டத்தட்ட அரை மணி நேரமாக நடந்து வந்திருந்தாள். அதுவும் இல்லாமல் இவர்களிடம் வேறு பத்து நிமிடமாகப் போராடியிருந்தாள். இப்போது வீட்டைப் பார்த்தால் எங்கோ இருப்பது போல் தெரிந்தது.

அங்கு எப்படிச் செல்வது என்றே அவளுக்குப் புரியவில்லை. இருந்தும் மெல்ல நடக்கத் தொடங்கினாள்.

கிட்டத்தட்ட மீண்டும் அரை மணி நேரம் நடந்தவள், அந்த வீட்டின் வாசலை அடையும் பொழுது மூச்சு வாங்கியது.

அப்போது அந்த வீட்டின் வாசலில் காவலுக்கு நின்ற ஒருவன்,

“நீங்க யாரு? எப்படி உள்ளே வந்தீங்க?” என்று கேட்டான்.

“நான் பாஸோட பி.ஏ. அவர்கிட்ட இந்த பைல்ல சைன் வாங்க வந்திருக்கேன்” என்று மூச்சு வாங்கியபடியே அவனிடம் சொன்னாள் ஸ்ரீனா.

“பாஸ் அவரோட ரூம்ல இருக்காரு” என்றான் அவன்.

“பாஸ் ரூமுக்கு எப்படி போகணும்?” என்று கேட்டாள்.

“டென்த் ஃப்ளோர்” என்று சொன்னவன், அத்துடன் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டான்.

உள்ளே நுழைந்தவளுக்கு அந்த வீட்டின் பிரம்மாண்டத்தைப் பார்த்து வாயடைத்துப் போனது. அப்படியே நிமிர்ந்து மேலே பார்த்தவளுக்குத் தலை இன்னும் சுற்றியது.

‘என்னது, இத்தனை மாடி ஏறணுமா?’ என்று நினைத்துக்கொண்டு அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தவளுக்கு, படிக்கட்டின் ஓரம் லிஃப்ட் இருப்பது தெரிய வந்தது.

ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டவள் உள்ளே நுழைந்து பத்தாவது தளத்தின் பட்டனை அழுத்தினாள்.

அடுத்த ஐந்து நிமிடங்களில் பத்தாவது தளத்தை வந்தடைந்ததும் கதவுகள் திறந்தன. அங்கே யாரும் இருப்பது போல் தெரியவில்லை.

மெல்ல லிஃப்ட்டிலிருந்து வெளியே வந்தவள், அங்கே ஒரு அறை மட்டும் திறந்திருப்பதைப் பார்த்தாள். அந்த அறையின் அருகே சென்றவள் உள்ளே எட்டிப் பார்த்தாள். அதுவும் படுக்கையறை போல் இருந்தது.

வெளியில் இருந்தபடியே அவனை அழைத்தாள்.

( இனிவரும் அத்தியாயத்தை பார்க்கலாம்.)

காதல் பாவை தொடரும்…

இப்படிக்கு உங்கள் அன்பு தோழி…

 

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!