காதல் 31

கடந்தகாலம்… அதை நினைக்கும் பொழுது அவனது இதழில் புன்னகை வந்து ஆட்கொண்டது. 

புத்தகத்தில் மூழ்கிருந்தவளைப் பார்த்து, “ஜியா… ஜியா!” என்று பல முறை அழைத்தும் எந்தப் பதிலும் வராமல் போக, தன் பொறுமையை இழந்தவன் தன் விரலால் அவளைச் சீண்ட, சிறு புன்னகையோடு விரலைப் பற்றியவள்,

“டேய் கைய, கால வச்சுட்டு சும்மா இரு.” என்று புத்தகத்தில் இருந்து தன் விழியை அகற்றாமல் கூற, 

“மா… ட்… டேன்…” என்று ராகம் போட்டவன் மீண்டும், “ஜியா!” என்று கெஞ்சலாய் அழைக்க, 

அவனிடம் கோபம் கொள்ள முடியாதவள், அவனைத் தன் மடியில் கிடத்தி அவனது மார்போடு தன் கரத்தை போட்டுக் கொண்டாள். அவன் அவளது கையில் தன் இதழைப் பதிக்க மேனி சிலிர்த்தாள். 

“ப்ளீஸ்டா, கொஞ்ச நேரம் சும்மா இரு, எனக்கு நாளைக்கு எக்ஸாம் இருக்கு.” என்று செல்லமாய் கெஞ்சியவளின் கையைத் தன் மார்பில் இருந்து நீக்கியவன், எழுந்து அமர்ந்துகொண்டு தன் விரலால் அவளது கையைச் சுரண்டினான். 

“ஆஷிக்!” என்று கோபமாக நிமிர்ந்து பார்த்தவளுக்கு, தன் அக்மார்க் புன்னகையை மட்டும் தன் இதழோரம் சிந்தியவன், தன்னவளது விரல்களைத் தன் இதழால் தீண்ட, கோபம் மறைந்து சின்னதாய் புன்னகைத்தவள், 

“ஆஷிக்!” என்று செல்லமாய் கண்டிக்க,

“ம்ம்…” என்றவாறு, தன் குறும்பை ஆரம்பித்தவன், 

தன் விரலால் மெல்ல அவளது கைகளில் படம் வரைந்து, தன் முகத்தை அவளது கழுத்தில் புதைத்து, தன் முத்தத்தால் தன்னவளை சிலிர்க்க செய்ய, 

“ம்ம் குத்துது…” என்று சிணுங்கலாய் கூறியவளின் கழுத்தில் தன் முகத்தைப் புதைத்தவாறே, “நேத்துதான் செல்லம் சேவ் பண்ணினேன், நீ வேணும்னா பாரு.” என்று தன்னவளது வதனத்தில் தன் கன்னத்தைக் கொண்டு காதலோட உரச, வெட்கத்தில் முகமெல்லாம் சிவந்தது.

அவனது முகத்தைத் தன் கரத்தில் ஏந்தி, “ஆஷிக், ஏம்பா இப்படி இம்சை பண்ற?” என்று கெஞ்சலாய் அவனைப் பார்க்க, 

அவனோ இமை மூடினால் எங்கே மறைந்துவிடுவாளோ என்று இமைத்தட்டாமல் அவளையே பார்த்தான். இல்லை பார்வையிலே கிறங்கடித்தான். கிறங்கியவள் அவனது முகத்தைச் செல்லமாகத் தன் கரம் கொண்டு திருப்ப, முடியாது என்பது போல மீண்டும் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்க்க, அவனது செய்கையில் மெல்ல சிரித்தாள்.

சிரித்தவாறே, “அப்படிப் பார்க்காத.”

“பார்ப்பேன்.”

“பார்க்காத”

“என்னடி செல்லம் பண்றது, நீ என் பக்கத்துல வந்தாலே, அப்படியே எனக்குள்ள ஏதேதோ பண்ணுது.”

“அப்படியா? அது ஒன்னு குடுத்தா எல்லாம் சரியாகிரும்.”

“அப்படியா செல்லம், தாராளமா, ஏராளமா குடு.” என்று கிறக்கமாக கூறியவனைப் பார்த்து கையை ஓங்க, ஓங்கிய கையை மெல்ல பற்றி வருடியவன், 

“போ அம்மு, உனக்கு ஒழுங்காவே குடுக்கத் தெரியலை.” என்று தன் இதழை அவளது விரலோடு விளையாட விட, 

தன் புத்தகத்தைத் தன் கையில் எடுத்தவள், “தப்பு என் பேர்லதான், நான் இன்னைக்கு இங்க வந்திருக்கவே கூடாது. அம்மாவும் தங்கச்சியும் இருக்கும் போதே நீ அந்த ஆட்டம் ஆடுவ, இன்னைக்கு என்னை விட்டு வைப்பியா? நான் வீட்டுக்கு போறேன்.” என்றவளைத் தடுத்தவன், 

“போகாதடி.”

“என்ன போகாதடி? உள்ள வரும்போது நான் என்ன சொன்னேன்?”

“என்ன சொன்ன?”

“கை, கால வச்சுட்டு ஒழுங்கா இருப்பன்னா நான் வரேன், இல்லனா நான் வரமாட்டேன்னு சொன்னேன்ல?”

“ம்ம்…”

“அதுக்கு நீ என்ன சொன்ன?”

“சரினு சொன்னேன்.”

“இப்போ என்ன பண்ற? ப்ராமிஸ் பண்ணிட்டு இப்படிப் பண்ணலாமா?”

“அட செல்ல குட்டி, ப்ராமிஸ் பண்றதே அத பிரேக் பண்றதுக்கு தானே?” என்று கண்ணடிக்க, 

“நீ சரியில்ல, நான் கிளம்புறேன்.” என்றவளிடம், தன் முகத்தைச் சோகமாக மாற்றியவன், 

“போடி, உனக்குக் கொஞ்சம் கூடக் கவலையே இல்லை. மீட் பண்றதே எப்போவாதுதான். அப்போ கூடப் படிச்சுட்டே இருக்க. என் ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் கழட்டிவிட்டுட்டு உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு நான் இருந்தா, என்னைத் திட்டிட்டே இருக்க. உனக்காக ராப்பகலா முழிச்சிருந்து எத்தனை நாள் நான் ப்ராஜெக்ட் பண்ணி தந்திருப்பேன். உனக்காக நீ படிச்சத விட நான் படிச்சது தான்டி அதிகம். எவன்டி தான் லவ் பண்ற பொண்ணோட படிப்புக்கெல்லாம் ஹெல்ப் பண்றது? நீ என்னைப் புரிஞ்சிக்கவே மாட்டிக்கிற…” என்று பாவமாய் பார்த்தவனைப் பார்த்து ஜியா,

“அடப்பாவி! அப்படி எத்தனை நாள்டா எனக்கு ப்ராஜெக்ட் செஞ்சி தந்திருக்க? ஒரு நாளாது என்னைத் தொல்லை பண்ணாம படிக்க விட்ருக்கியாடா? காலேஜ்ல ஒரு க்ளாஸாது என்னை ஒழுங்கா அட்டென்ட் பண்ண விட்ருக்கியா? டவுட் சொல்லித் தரேன்னு வெறும் வாய்ல சொல்லிருக்கியே தவிர, என்னைக்காது சொல்லி தந்திருக்கியா?”

“அடிப்பாவி! என்னடி இப்படிச் சொல்லிட்ட?”

“உண்மைய தான் சொல்றேன், ஒரு நாளாது இந்த புக்ல இருக்கிற ஒரு சாப்டர் வேண்டாம், ஒரு ஹெட்டிங் சொல்லி குடுத்திருக்கியா?” என்றவளைப் பார்த்தவாறு அவளது அருகில் வந்தவன், 

“இந்தப் புக்கு…” என்று அவளது கையில் இருந்த புத்தகத்தைத் தூக்கி மெத்தையில் எறிந்தவன், 

“மொத்த சயின்ஸையும் உனக்கு அப்படியே அக்குவேறு ஆணிவேறா க்ளாஸ் எடுத்திருக்கேன்.” என்று காதலாய் பார்த்தவனின் பார்வை மாற்றத்தை உணர்ந்தவள், 

“நீ எனக்கு மொத்த சயின்ஸையும்… போடா…” என்று அங்கிருந்து சற்று நகர, தன் கரம் கொண்டு அவளைத் தன் பக்கம் இழுத்தவன், 

தன் மயக்கும் கண்கள் கொண்டு தன் பார்வையாலே வருடி, தன்னவளை உச்சி முதல் பாதம் வரை அங்குலம் அங்குலமாய் அளவிட்டான். ஏனோ அவனது பார்வை அவளை விட்டு நகர மறுக்க, இமைமூடாமல் அவளை ரசித்தான். 

அவனது மருண்ட பார்வை அவளைக் கசக்கி பிழிய, உடலும் உள்ளமும் சிலிர்க்க, அவனது பார்வையின் தீண்டலினாலே செவ்வண்ணமாய் சிவந்தவள், இதற்கு மேல் முடியாதவளாய் தன் முகத்தை வேறுபக்கமாய்த் திருப்ப, அவளது காதுமடல்களை உரசியவாறு, 

“நோரெபினிஃப்ரைன்” என்றதும் கேள்வியாய் பார்த்தவளைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்தவன், 

“நோரெபினிஃப்ரைன் இத ஸ்ட்ரெஸ் ஹார்மோன்னு சொல்லுவாங்க. எப்போ எல்லாம் நம்ம மனசுக்கு புடிச்சவங்க நம்மளோட பக்கத்துல நெருங்கி வராங்களோ, அப்போலாம் உடம்புக்குள்ள அனல் அடிச்ச மாதிரி இருக்கும், முகமெல்லாம் வியர்க்கும். 

கை, கால் எல்லாம் நடுங்கும், லிப்ஸ் ட்ரையாகும், வார்த்தை இடம் மாறும். முதல் முதலா நான் உன்னைக் கட்டிபுடிச்சப்ப கூட, இப்படித்தான் நீ என் முன்னாடி வெடவெடுத்து போய் நின்னுகிட்டு இருந்த.” என்றவனிடம் எதையும் வெளிக்காட்டிக்காதவள், 

“அது அப்போ திடீர்னு அப்படி நடந்ததால இருக்கும். இப்போ அப்படிலாம் இல்ல.” என்று பின்னால் சென்றவளை, அதே காதல் பார்வையோடு தொடர்ந்து மெல்ல தன் விரல்களால் அவளது நெற்றியை வருட, “ஏசி போடலல அதான்…” என்றவளைப் பார்த்து இதழ் ஓரம் புன்னகைத்தவன், தன் முகத்தால் தன்னவளது நெற்றியில் உள்ள வியர்வை துளிகளை ஒற்றி எடுத்து, ஜன்னலின் ஓரம் ஓயாமல் பெய்து கொண்டிருக்கும் மழையைச் சுட்டிகாட்ட, 

தான் பொய் கூறி மாட்டிக்கொண்டதை நினைத்து தன் கீழ் உதட்டைக் கடித்தவளைப் பார்த்ததும் அவனுக்குள் அனல் அடிக்க, அவளது பற்கள் தீண்டிக்கொண்டிருந்த தன்னவளின் இதழைத் தீண்ட துடித்த தன் இதழ்களை அடக்கியவன், பற்களில் சிக்குண்ட கீழுதட்டை மென்மையாய் சுண்டி, தன் புருவம் உயர்த்தி என்னவென்று தன் மயக்கும் கண்களால் கேட்டான். 

“ஒன்னும் இல்லை…” என்று தடுமாறியவளது கரத்தைப் பற்றிகொண்டவன் நடுங்கிக்கொண்டிருக்கும் விரல்களைச் சுட்டிகாட்ட, சிணுங்கலுடன் அவனிடம் தப்பிப்பதாய் நினைத்து, 

“உள்ளுக்குள்ள அப்படியே அனலா அடிக்குதுடா, அதான் லேசா கை நடுங்குது.” என்று தான் மீண்டும் உளறியதை நினைத்து தன் ஒற்றை விழியை மூடியாவாறே தன் பல்லைக் கடித்தவளை, மேலும் தன் பார்வையாலே வருடினான். முடிவில்லாத காதல் பார்வையை வீச, அவள் மேலும் வெட்கி சிவக்க, மெல்ல கண்ணாடி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றவன், அவளது விழிகளைச் சந்தித்தவாறு

“டோபமைன்.” ஒருத்தொருக்கொருத்தர் அதிக காதலோடு பார்க்கும் பொழுது, புதுசா பிறந்த மாதிரி ஒரு உணர்வு வரும். இதோ இப்போ உனக்கு வந்திருக்கே?” என்று சிவந்த அவளது கன்னங்களைத் தட்டி விட்டவாறு வருடியவன் மெல்ல தன் இதழைப் பதிக்க, 

“ஆஷிக், சும்மா எதாவது சொல்லிட்டு…” என்று அங்கிருந்து சென்றவளைத் தன் கரத்துக்குள் சிறைவைத்து, சுவற்றோடு சாய்த்து அவளது இதழ்நோக்கி குனிய, அவனது தாப பார்வையில் வெட்கியபடி தன் கண்கள் மூடி இதழ்கள் மலர்ந்தபடி நின்று கொண்டிருந்தவளை, மனம் குளிர ரசித்தவன் அவளது காதருகில் சென்று, 

“ஆக்சிடோசின்.” என்றதும் தான் எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை என்பதை உணர்ந்து வெடுக்கென விழி மலர்ந்தவளின் உள்ளத்தை உணர்ந்தவனாய், 

“அப்புறம் தரேன்.” என்று கண்ணடித்தவன் மேலும் தொடர்ந்தான்.

“இதுதான் லவ் ஹார்மோன், நான் உன்னை நெருங்கி முத்தம் குடுக்க வந்தேன், ஆனா நீ என்னைத் தடுக்காம என்னை விட்டு விலகாம அப்படியே நின்ன. நான் குடுக்கலைனு தெரிஞ்சதும் உன் கண்ல ஏமாற்றம். இதெல்லாத்துக்கும் இதுதான் காரணம்.” என்று அவன் கூறவும், செல்லமாக அவனது மார்பில் அடித்தாள். 

தன் மார்போடு சிறிதளவு இடைவெளி கூட இல்லாது இறுக்கி அணைத்துக்கொண்டவன், அவளது செவ்விதழ் நோக்கி குனிந்து தனக்குள் எரிந்து கொண்டிருக்கும் காதல் தீ தன்னவளின் இதழ் தரும் காதல் மழையில் அணையும் வரை நனைந்தான். 

அவனது இதழின் ஸ்பரிசத்தில் அவளது கண்கள் மெல்ல சொருக, இருவரும் மாறி மாறி தங்களின் காதலை முத்தத்தில் பரிமாறிக்கொண்டனர். மூச்சு விடும் நொடி நெருங்க, தன்னை அவனிடம் இருந்து பிரித்துக் கொண்டவளை, 

கணப்பொழுதும் விலகமாட்டேன் என்பது போலத் தன் முகத்தை அவளது கழுத்தின் வளைவில் புதைத்துக்கொண்டான். 

“ஸோ எதுவும் சொல்லித் தரலனு சொல்லாத, மொத்த சயின்ஸையும் பிராக்டிகல் கம் தியரியாவே எடுத்திருக்கேன்.” என்று கழுத்தின் வளைவில் தன் இதழைப் பதிக்க,

ஜியாவோ புன்னகைத்தவாறே அவனது காது மடலை உரசி, “***” என்று மெல்லமாய் கூற, சிலநொடிகள் கழித்து அவள் கூறியதில் உள்ள அர்த்தத்தைப் புரிந்து கொண்டவன், வெடுக்கென்று நிமிர்ந்து குறும்பாய் தன்னைச் சீண்டிக்கொண்டிருந்த தன்னவளது விழிகளைப் பார்க்க, அதிர்ந்து போய் தன்னையே பார்த்தவனைப் பார்த்து கண்சிமிட்ட,

“உன்னை…” என்று நெருங்கியவனிடம் போக்கு காட்டிவிட்டு அங்கிருந்து கீழே ஓடிவந்தவளை விரட்டிக்கொண்டு கீழே வந்தவன், 

“ஜியா!” என்று அழைக்கவும், 

“ஆஷிக், ஜியா!” என்று அழைத்தவாறு ஹாஜரா வரவும் சரியாக இருந்தது. தன் தாயைக் கண்டதும் அவன் அசடு வழிய, அவரோ அவன் அசடு வழியும் காரணம் அறியாமல், 

“என்னடா நெளிஞ்சிட்டு இருக்க? ஒழுங்கா ஜியாக்கு எல்லாம் சொல்லித் தரியா, இல்லையா?” என்றவர்,

“இங்க பாருடா ஜியா, இவனை விட்றாத நல்லா புடிச்சுக்கோ. என்ன வேணுமோ கேட்டு தெரிஞ்சிக்கோ சரியா? நீ வந்ததுக்கு அப்புறம்தான் இவன் ஒழுங்கா வீட்ல இருக்கான், இல்லைனா ஃப்ரண்ட்ஸ் கூட எங்கையாவது சுத்தப் போயிருவான்.”

“சரி ஆன்ட்டி, ஆயிஷா வரலையா?”

“அவ அவளோட ஃப்ரண்ட பார்க்க போயிருக்கா, இப்போ வந்திருவா.”

“ஓ சரி ஆன்ட்டி, நான் கிளம்புறேன்.” என்றவளைத் தடுத்தவர்,

“நில்லுடா நான் டீ போடுறேன், குடிச்சுட்டுக் கிளம்பு.” என்று அவர் கிட்சனுக்குள் செல்ல, அவர் சென்றதும் அவளது மென்னிடையை வளைத்துப் பிடித்தவனிடம் இருந்து தன்னை விலக்க முயன்றவள், 

“ஆஷிக் விடு, என்ன பண்ற?” என்று விலக முற்பட்டவளை, மேலும் அணைத்தவன்,

“அம்மா தானே சொன்னாங்க, இவனை விட்றாத கட்டியா புடிச்சுக்கோனு. நீ புடிச்சா என்ன, நான் புடிச்சா என்ன?” என்று சில்மிஷித்தவனிடம் இருந்து தப்ப முயன்றவள், 

“அம்மா…” என்று கத்த, அவளைத் தன் அணைப்பில் இருந்து விடுவிக்கவும் அவர் அங்கே வரவும் சரியாக இருந்தது. வந்தவர், “என்னடா ஜியா?” என்று பதற்றமாய் கேட்க, 

“இல்லமா, ஒரு தியரி சொல்லி குடுத்துட்டு ப்ராக்டிகலும் இப்போவே செஞ்சி காட்டிட்டு போனு என்னை தொல்லை பண்றாரு. ஆனா எனக்கு டயர்டா இருக்குமா.” என்று ஹாஜராவிடம் சென்று ஒட்டிக்கொள்ள,

அவர், “டேய் சும்மா அவளைப் படுத்தாத, ஏதோ நீ ரொம்பப் படிப்பாளி மாதிரி. நீ உட்காருமா, அவன் கிடக்குறான். இன்னும் இங்க என்னடா பண்ற, அந்தப் பொண்ணையே பார்த்து முறைச்சுகிட்டு? நீ என் கூட உள்ள வா.” என்றவர் அவனை அழைத்துக் கொண்டு கிட்சனுக்குள் சென்றார்.

ஜியாவோ ஹாலில் அமர்ந்துகொண்டு அவனைப் பார்த்துக் கண்ணடித்துக்கொண்டு முகபாவனைக் காட்ட, அவனோ தன் தாயை தன் அருகில் வைத்துக்கொண்டு வேறு வழியில்லாமல் ஏக்கமாய் அவளது முகபாவங்களை ரசிக்க மட்டும் செய்தான். சோபாவில் இருந்து எழும்பியவள், “ஆன்ட்டி நான் போயிட்டு வரேன், டீ சூப்பர்.”

“சரிடா, பார்த்து போ.”

“ஓகே பாய் ஆன்ட்டி.” என்று அவரிடம் இருந்து விடை பெற்றவள், தன்னை ஏக்கமாய் பார்த்துக்கொண்டிருக்கும் தன்னவனுக்கு முத்தத்தைக் காற்றில் பறக்கவிட, அதைத் தன் உள்ளங்கையில் ஏந்தி தன் நெஞ்சில் பதித்துக்கொண்டு அவனும் பறந்தான் இதமாக. 

ஜியாவுடனான தன் நினைவுகளுக்குள் நுழைந்தவனுக்கு உதட்டில் புன்னகை வழிந்தாலும், அடுத்த நொடி தன்னால் அவளுக்கு ஏற்பட்ட வலியை நினைத்தவனுக்குக் கண்களின் ஓரம் கண்ணீர் வந்தடைந்தது. 

ஆதர்ஷின் குரலில் தன் நிலையடைந்தவன் என்ன என்பது போல் பார்க்க ஆதர்ஷ், “டாக்டர் வந்துட்டாரு”. என்று கூற, டாக்டர் என்ன கூற போகிறாரோ என்ற ஒருவித பதற்றத்துடன் அவரிடம் சென்றான். 

***

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!