காதல் 40

எப்படிக் கூறியும் புரிந்து கொள்ளாதவளுக்குத் தன் ஒற்றை முத்தத்தால் உணர்த்திவிட்டான் தன் காதலை!

வன்மை, மென்மை என்று தனது பெண்மையை ஆதிக்கம் செய்த அவனது ஆண்மையில் மெல்ல இளகினாள் ஜியா. 

கண்களை மூடி லயித்திருந்தவளைப் பார்த்து, “போகலையா?” என்று கூற, விழிமலர்ந்தவள் அவனது உயிர் வரை சென்று ஊடுருவி பார்க்க,

“ஏன்டி? கண்ணுல என்மேல அவ்வளவு காதலை வச்சுருக்க, அப்புறமும் ஏன்டி இப்படி என்னைக் கஷ்டப்படுத்துற? என்னை நீ வேண்டாம்னு சொல்லும் பொழுது என்னை விட அதிகமா கஷ்டப்படுறது நீதான். செத்து போயிருவேன்னு சொல்ற, ஆனா ஒவ்வொரு தடவையும் என்னை நீ கண்மூடாம பார்க்கும் பொழுது, உன்னை நெருங்கவும் முடியாம விலகவும் முடியாம செத்து செத்துப் பிழைக்கிறது நான்தான்டி. 

ஜியா என்னால நீ இல்லாத ஒரு வாழ்க்கைய வாழ்றது கஷ்டம்னா, உன்னால நான் இல்லாம வாழவே முடியாது.” என்றவன் அவளது முகத்தைத் தன் கையில் ஏந்தி,

“வாழணும்டி உன்கூட, நம்பி வா, நெஞ்சுக்குள்ள வச்சுப் பார்த்துகிறேன். நீ இல்லனா நான்…” என்பதற்குள் ஆஷிக்கின் நெஞ்சோடு சாய்ந்து கொண்டாள் ஜியா. 

“இந்த டிசைன் எப்படி இருக்கு சம்பந்தி?” என்றவாறு ரஸ்மின் ஒரு மோதிரத்தை எடுத்து வந்து ஹாஜராவிடம் காண்பிக்க, 

பதிலுக்கு ஹாஜரா, “நல்லா இருக்கு” என்று எதோ ஒப்புக்காகக் கூற,

அவர், “வந்ததுல இருந்தே ஆயிஷாவோட முகமும் உங்க முகமும் சரியே இல்லை. இன்னும் நேற்று நடந்ததைப் பத்தியே நினைச்சுகிட்டு இருக்கீங்களா?”

“ஆமா, ஆஷிக்கை நினைச்சா கவலையா இருக்கு.”

“எங்களுக்கும் இல்லாம இல்லை, ஆனாலும் ஆயிஷாவ பாருங்க. நாளைக்கு என்கேஜ்மென்ட், ஆனா அவ முகத்துல அதுக்கான சந்தோஷம் கொஞ்சம் கூட இல்லையே? நீங்க கவலையா இருந்தா அவளும் கவலையா தானே இருப்பா. நீங்க கவலைப்படாதீங்க, எல்லாம் சரியாகும்.” என்றவரின் வார்த்தையில் உள்ள நியாயத்தை உணர்ந்த ஹாஜரா, சரி என்பதாய் அவருக்குப் புன்னகைத்துவிட்டு சோகமாக யாருக்கோ என்று அமர்ந்திருந்த ஆயிஷாவை சமாதானம் செய்தார். 

அப்பொழுது, “அண்ணி, மம்மிஸ் எல்லாரும் ரிங் பார்க்கட்டும், நாம லெஹங்கா பார்க்கலாம். வந்ததுல இருந்து இப்படி அமைதியாவே உட்கார்ந்துட்டு இருக்கீங்க, என்கூட வாங்க.” என்று தாஹிரா ஆயிஷாவை அழைக்க, 

ரஸ்மீன், “ஆமா ஆயிஷா, போ உனக்கு என்ன புடிச்சுருக்கோ அதையே வாங்கிக்கோ. எங்க டேஸ்ட் எல்லாம் பழைய மாதிரி இருக்கும், என்ன சொல்றீங்க சம்பந்தி?”

“ஆமா, ரொம்ப சரியா சொன்னீங்க போயிட்டு வாமா.” என்று அவர் இதழோரம் புன்னகைக்க, தாய் புன்னகைத்ததில் மகிழ்ச்சி அடைந்தவள் தாஹிராவுடன் சென்றாள். 

ஆடை வாங்கிய பின்பு தாஹிரா தன் அலைபேசிக்கு அழைப்பு வரவும், தான் இப்பொழுது வந்துவிடுவதாகக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து செல்ல,

பொழுது போக்கிற்காகக் கடையை வலம் வந்த ஆயிஷாவின் கண்களில் ஒரு இளம் ஜோடி புலப்பட, அவர்களின் செய்கைகளைத் தான் இருக்கும் இடத்தில இருந்தே ரசித்துக் கொண்டிருந்தாள். 

அந்தப் பெண் தன் கணவனுக்கு ஷர்ட் தேர்வு செய்வதும் அதற்கு அவன் கேலி செய்வதும் என்று, அவர்களின் சம்பாஷணைகளை ரசித்த ஆயிஷாவின் உதடுகள் புன்னகைக்க மறக்கவில்லை. தன்னையும் சமீரையும் அவர்களின் இடத்தில் வைத்து பார்த்தவளின் கண்களில் அப்படி ஒரு சந்தோஷம். 

“நான் இப்போ யோசிக்கிற மாதிரிதான் சமீரும் யோசிப்பாருல? நாளைக்கு அவருக்கு எதாவது கிஃப்ட் பண்ணினா நல்லா இருக்கும்ல, என்ன வாங்கலாம்?” என்று யோசித்தவளின் கண்களில் வாட்ச் ஷோரூம் தென்பட புன்னகையோடு அங்கே சென்றாள். 

அவளது கண்கள் மொத்த கடையையும் அலசி ஆராய்ந்து கொண்டிருக்க, திடீரென்று ஒரு கண்ணாடி பெட்டகத்துக்குள் இருந்த ப்ளாக் மெட்டல் வாட்ச் அவளது கண்ணில் பட, அங்கிருந்த அனைத்திலும் தனித்துவமாய் விளங்கிய அந்தக் கைக்கடிகாரம் அவளுக்கு மிகவும் பிடித்துப் போனது. 

விற்பனையாளர் அவளிடம், “இது ரொம்ப ரேர் கலெக்ஸன், இந்தியால கிடைக்கிறது ரொம்பக் கஷ்டம், யு ஆர் லக்கி.” என்று கூறவும் புன்னகை தளும்ப ஆயிஷா, 

“அப்போ என் செலெக்ஸன் சரியாதான் இருந்திருக்கு.” என்று கூறி காதலாய் தனக்குள், ‘சமீர் இது உங்களுக்குப் புடிக்கும்னு நம்புறேன்.’ என்று யோசிக்கும் பொழுதே முகம் கும்குமமாய் சிவந்திருந்தது. 

தேவையான பொருட்களை எல்லாம் வாங்கிய பிறகு இருவீட்டாரும் கடையை விட்டு கிளம்பும் பொழுது, ஆயிஷாவின் அலைபேசிக்கு வந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்த, அலைபேசி வந்த அடுத்த நிமிடம் அனைவரும் ஆதர்ஷின் இல்லத்திற்குச் சென்றனர். 

அவர்கள் அங்கே வரவும் ஜியாவின் சித்தப்பாவும் சித்தியும் அங்கே வந்துவிட, மாலையும் கழுத்துமாய் இருந்த ஆஷிக்கையும் ஜியாவையும் பார்த்த அவர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றனர். 

இருவீட்டாருக்கும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அஸாத்தின் கண்கள் கோபத்தீயில் சூடேறி போய் இருந்தது. ஹாஜராவோ என்ன செய்வதென்று விளங்காமல் கண்களில் நீர் வழிய நின்றுகொண்டிருந்தார். 

ஷங்கர் தன் கண்கள் கலங்க வார்த்தைகள் தொண்டைக் குழியை அடைக்கப் பேச முடியாமல் தடுமாறியவாறே, ஜியாவின் அருகில் வந்து, “உன்கிட்ட நான் இப்படி ஒரு காரியத்தை எதிர்பார்க்கல.” என்று கூறவும், “அங்கிள் இதுல ஜியா மேல எந்தத் தப்பும் இல்ல…” என்று குறுக்கிட்ட ஆஷிக்கை, உன்கிட்ட எதுவும் பேச விரும்பவில்லை என்பது போல தன் கரங்களை உயர்த்தியவர், “நான் என் பொண்ணுகிட்ட பேசிட்டு இருக்கேன்.” என்று அவனது முகத்தைக் கூடப் பார்க்காமல் இறுக்கமாகக் கூற, இதற்கு மேல் பதில் எதுவும் பேச முடியாமல் ஆஷிக் அமைதியடைந்தான். 

“ஏன்டா ஜியா இப்படிப் பண்ணின?” என்றதும் ஜியா தேம்பி தேம்பி அழ,

“உன்கிட்ட கேட்டனே, உங்க முடிவுதான் என் முடிவுனு சொன்னியே. நான் உன் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கலையே, எல்லாருடைய சம்மதத்தோட கல்யாணம் நடக்கணும்னு தானே சொன்னேன். இதைக் கூட நிறைவேத்த முடியாதவன் உன்னை எப்படிக் கால முழுக்கச் சந்தோஷமா வச்சுக்குவான்? இது ஏன்டா உனக்குப் புரியலை?” என்றதும், 

அஸாத் ஏளனமாக, “என்ன ஷங்கர் உங்க பொண்ணு உங்க பேச்ச மீற மாட்டானு சொன்னீங்க, இப்போ என்னாச்சு? அன்னைக்கு என்ன சொன்னீங்க, உங்க பையன் வேணும்னா உங்க பேச்ச கேட்காம போகலாம், ஆனா என் பொண்ணு அப்படி இல்லனு சொன்னீங்க…” என்று கேட்க,

அஸாத்தின் கேள்வியில் கூனி குறுகிய ஷங்கர், “உன்னை என் மரியாதையா நினைச்சேன், ஆனா உன்னால என் மரியாதைப் போகும்னு நான் ஒருநாளும் நினைக்கல.” என்றதும் ஜியா தேம்பி தேம்பி அழுதவாறு,

“சித்தப்பா ப்ளீஸ், என்னை மன்னிச்சுருங்க.” என்று அவரது காலில் விழுந்து கெஞ்ச, தன் கைகளால் அவளை விலக்கிவிட்டவர் பதில் பேசாமல் இறுகிய மனதுடன் அங்கிருந்து செல்ல, திவ்யாவும் ஒன்று பேசமுடியாமல் தன் கணவருடன் அங்கிருந்து சென்றார். 

ஜியா தரையில் அமர்ந்தபடி அழுது கொண்டிருக்க, ஆஷிக்குடன் இணைந்து ஆயிஷா ஹாஜராவும் அவளை ஒருவகையாகச் சமாதானம் செய்து தங்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். ஆயிஷா, ஜியாவை வீட்டிற்குள் அழைத்துக் கொண்டு செல்ல, கோபமாக இருந்த அஸாத்திடம் ஷாஹித், “கோபப்பட்டு எந்த யூசும் இல்லை அஸாத் சார், இனிமே நடக்கப் போறத பாருங்க. ஆஷிக்கிட்ட இதைப் பத்தி எதுவும் பேசாதீங்க. புள்ளைங்க எதோ அவசரப்பட்டுட்டாங்க, அதுக்காக வேண்டாம்னு ஒதுக்கிற முடியுமா? மறப்போம் மன்னிப்போம்னு இனிமே நடக்கபோறதை பார்ப்போம். நாளைக்குச் சந்திப்போம்.” என்றவர், அவரிடமும் ஹாஜராவிடமும் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து தன் குடும்பத்தினரோடு சென்றார். 

அவர் சென்ற அடுத்த நொடி அஸாத், ஹாஜராவிடம் கோபம் தெறிக்க, “இப்படி ஒரு காரியத்தைப் பண்றதுக்குத்தான் உன் பையன சீராட்டி வளர்த்தியா? இவன் கல்யாணத்தை எப்படி எல்லாம் பண்ணணும்னு நான் கற்பனை பண்ணினேன் இப்படி என்னை அசிங்க படுத்திட்டானே. 

திருட்டுக் கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கான், அதுவும் நம்ம ஸ்டேடஸ்க்குக் கொஞ்சம் கூட மேட்ச் ஆகாத பொண்ணு கூட. என் பிஸ்னஸ் பாட்னர்ஸ்கும் என் நண்பர்களுக்கும் நான் என்ன சொல்லுவேன், என் பையன் திருட்டுக் கல்யாணம் பண்ணிகிட்டான்னா சொல்ல முடியும்? 

இன்னும் கொஞ்ச நேரத்துல நியூஸ் பேப்பர் டிவினு எல்லா இடத்துலயும் வர போகுது, அத்தனை பேரும் என்னைக் கேவலமா பேச போறாங்க. எல்லாத்துக்கும் நீதான்டி காரணம். அவன் சொல்ற எல்லாத்துக்கும் தலைய ஆட்டி ஆட்டி, இப்போ அவன் எனக்கு ஆட்டம் காட்டிட்டான்.” என்று படபடக்க, “இப்போ என்னாச்சுனு இப்படி என் அம்மாகிட்ட கத்திட்டு இருக்கீங்க, எதுவா இருந்தாலும் ஒன் டு ஒன் என்கிட்ட பேசுங்க.” என்று சிடுசிடுத்த ஆஷிக்கிடம், 

ஹாஜரா, “ஆஷிக் எதுவும் பேசாம உள்ள போ.” என்று அதட்ட,

“மா நீங்க அமைதியா இருங்க, இவர் எதுக்கு உங்ககிட்ட கத்திட்டு இருக்காரு?”

“ஆஷிக் உள்ள போ” என்று மீண்டும் அதட்டிய தாயிடம் ஆஷிக்,

“மா நீங்க உள்ள போங்க.” தன் குரலை உயர்த்த,

“ஆஷிக்!” என்று அழுத்தமாக ஹாஜரா கூறவும், 

நிதானம் அடைந்த ஆஷிக், “ம்மா ப்ளீஸ்…” என்று தன்மையான குரலில் அழுத்தமாகக் கூறியதில், இதற்கு மேல் எதுவும் பேச முடியாதவர் அங்கிருந்து சென்றார்.

அவர் சென்றதும் தன் தந்தையின் அருகில் வந்தவன், “என்ன பண்ண போறீங்க மிஸ்டர் அஸாத்? நீங்க நினைச்சது எதுவும் நடக்கலையே, உங்களுக்கு இப்போ என் மேல ரொம்பக் கோபமா இருக்கும்ல. என்னடா நாம நினைக்கிறது ஒன்னா இருக்கு, நடக்குறது வேற ஒன்னா இருக்கேனு தோனுமே… தோனனும். ஆனா உங்கள பார்த்தா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, ஐ ரியலி மீன் இட். சத்தியமா…”

“என்னடா இப்படிலாம் பேசி நீ பெரிய மனுஷன்னு நிரூபிக்கிறீயா? உனக்கு ஏன்டா புரிய மாட்டிக்குது, நீ என் பையன்னு சொல்லி பாரு, அவன் அவன் பொண்ணு தர க்யுல நிற்பான். ஆனா நீ ஒரு மிடில் க்ளாஸ் பொண்ண கல்யாணம் பண்ணிட்டு அத பெருமையா வேற பேசிட்டு இருக்க. உன் நல்லதுக்காகத்தான் நான் பேசிட்டு இருக்கேன் அதே ஏன் புரிஞ்சிக்க மாட்டிக்க?”

“ஆனா அதே மிடில் க்ளாஸ் வீட்ல இப்படி ஒரு குடும்பத்துக்கு என் பொண்ண எப்படித் தர்றதுனு செருப்பால அறைஞ்ச மாதிரி கேட்டாங்களே, அதுக்கு என்ன பதில் வச்சுருக்கீங்க? ஏதோ ஐம்பது கோடி கேட்டேன்னு சொன்னீங்களே, அது ஒன்னும் உங்க பணம் இல்லை. என் தாத்தா பணம்… என் தாத்தா என் அம்மாக்குக் குடுத்த பணம். அது இல்லனா நீங்க இந்த அளவுக்குப் பெரிய ஆளா வளர்ந்திருக்க முடியாது. கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி நீங்களும் ஒரு மிடில் க்ளாஸ்தான், அதை என்னைக்கும் மறந்துறாதீங்க. 

அம்மாக்காகத்தான் நான் உங்கள சகிச்சுக்கிட்டு இருக்கேன், எப்பவும் அப்படியே இருப்பேன்னு நினைக்காதீங்க. இனிமே ஜியா பத்தியோ அவளோட குடும்பத்தைப் பத்தியோ எதாவது பேசுனீங்க, அவ்வளவுதான்!” என்றவன் வார்த்தையால் அவரைத் தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றான். 

“என் ரத்தமா போயிட்ட, என்னோட திமிரு உனக்குக் கொஞ்சம் கூட இல்லனா எப்படி? ஆனா அதை நீ என்கிட்டயே காட்டுற பார்த்தியா, அதுதான் என் வெறியை ஏத்துது.” என்று கூறும்பொழுதே அஸாத்தின் கண்களில் கோபம் தெறித்தது. 

ஆஷிக்கின் அறையில் ஜியா தன் அழுகையை நிறுத்தாமல் அழுது கொண்டே இருக்க, ஆயிஷா அவளை எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சித்தும், அது எல்லாம் பயன் அற்றுப் போக, அந்த நேரம் பார்த்து ஆஷிக் உள்ளே வர ஆயிஷா, ஆஷிக்கிடம் ஜியாவை பற்றிக் கூற, பதிலுக்கு ஆஷிக் தான் பார்த்துக் கொள்வதாய்த் தன் விழிகளாலே உறுதி கொடுக்க, சரி என்பதாய் தன் தலையை மெல்ல அசைத்தவாறு ஆயிஷா அங்கிருந்து சென்றாள். 

***

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!