காதல் 44

சுட்டெரிக்கும் சூரிய கதிர்கள் ஜன்னல் வழியே ஊடுருவி தன் இமைகளைத் தட்டி எழுப்ப, உறக்கம் இன்னும் மீதி இருக்கும் நிலையில் வலுக்கட்டாயமாக இமைகளைப் பிரித்தெடுத்தவன், தன் நெஞ்சத்தை மஞ்சமாக்கி முகத்தை மார்பில் புதைத்துக்கொண்டு, விடமாட்டேன் என்பது போல் தன் வலகரத்தால் தன் கழுத்தை இறுக்கி வளைத்துக்கொண்டு, நேற்று பிறந்த குழந்தையைப் போல ஆழ்ந்த தூக்கத்தில் துயில் கொண்டிருந்த, தன் காதல் மனைவியை கண்டவனுக்குப் படுக்கையில் இருந்து எழுந்திருக்க மனமே இல்லை. 

நித்தில தெளிவாய், புதிதாய் உதிர்ந்த முத்து போல மிளிர்ந்து கொண்டிருந்த தன்னவளின் அழகை, ஆஷிக்கால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை. அதனால் தனக்குத் தடையாய் அவளது நெற்றியில் புரண்டு கொண்டிருந்த கேசத்தை, காதோரத்தில் ஒதுக்கி விட்டவாறு தன்னவளை இமைகொட்டாமல் ரசித்தான். 

சூரிய ஒளியில் புதிதாய் மலர்ந்த மலர் போல மிளிர்ந்து கொண்டிருந்தது அவளது முகம். கொஞ்சமும் தெவிட்டாத அழகு. பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது. தேன் ஊறும் பலாவை போல அமுதம் சுரந்துகொண்டிருந்த தன்னவளின் ரோஜா நிற இதழ். விரித்த வலையில் உலர்ந்து போன தன் செவ்விதழை தளிர்த்துக் கொள்ள விரும்பியவன், 

எங்கே தன் தீண்டலினால் தன்னவளின் தூக்கம் கலைந்துவிடுமோ என்று எண்ணி, கனன்று வந்த தன் காதலை கட்டிப் போட்டுவிட்டு, மெல்ல அவளது தூக்கம் கலையாமல் படுக்கையில் இருந்து எழுந்து, உடலை குறுக்கிக்கொண்டு படுத்திருந்தவள் மேல் போர்வையைக் கொண்டு நன்றாகப் போர்த்திவிட்டு, சத்தமின்றித் தன் அறையை விட்டு வெளியே வந்தான். 

ஆஷிக் எப்பொழுது வருவான், ஜியாவின் உடல் நலத்தைப் பற்றிக் கேட்கவேண்டும் என்று ஆர்வமாக காத்திருந்த ஹாஜராவும், ஆயிஷாவும் அவன் வந்ததும் அவனது அருகில் சென்று இருவரும் ஒருசேர, 

“ஜியா இப்போ எப்படி இருக்கா?” என்று கண்களில் கவலை தொனிக்க கேட்க, ஆஷிக் அவர்களை ஆசுவாசப்படுத்தியவாறே,

“ஒன்னும் இல்லை, ராத்திரி தூக்கத்துல எதையோ பார்த்து பயந்த மாதிரி கொஞ்சம் நேரம் அழுதுட்டே இருந்தா. மறுபடியும் அந்தச் சம்பவத்தைப் பத்தி நினைச்சு பார்த்திருப்பானு நினைக்கிறேன். ஆனா அதுக்கப்புறம் ரொம்பவே நார்மல் ஆகிட்டா. எனக்கு ஜியாவை அந்தப் பயத்துல இருந்து வெளியில கொண்டு வந்துடலாம்னு ஒரு நம்பிக்கை வந்திருக்கு, நீங்க பயப்படாதீங்க.” என்ற அவனது நம்பிக்கை பேச்சு அவர்களுக்கு நிம்மதியை அளித்தது. 

“என்னடா பண்றது, ஜியா மூச்சு பேச்சு இல்லாம மயங்கி கிடந்ததும், சமீர் அவளுக்கு நடந்ததைப் பத்தி சொன்னதும் ரொம்பவே பயந்துட்டேன்.”

“நானும்தான் ரொம்ப பயந்துட்டேன். ஆனா சமீருக்கு நான் ரொம்பவே கடமை பட்ருக்கேன். அவர் மட்டும் சரியான நேரத்துல ஜியாவைத் தாங்கி பிடிக்கலைனா மயங்கி போய் கண்ணாடி டேபிள் மேல விழுந்திருப்பா. தலையில கண்டிப்பா அடி பட்ருக்கும்.” என்றதும் ஆயிஷா ஆஷிக்கிடம்,

“ஆமா அண்ணா, சமீர் ரொம்பவே கேர் எடுத்துகிட்டாரு.”

“ஃப்ரண்ட்ல, கவலை இல்லாம இருக்குமா?”

“நேத்து முழுக்க ஜியா எப்படி இருக்கானு சமீர் கேட்டுகிட்டே இருந்தாரு. நான் இப்போ அவருக்குப் ஃபோன் பண்ணி நல்லா இருக்கானு சொல்லிடுறேன்.” என்ற ஆயிஷாவிடம் ஆஷிக், 

“சரி நீ பேசிட்டு எனக்கிட்ட ஃபோன் குடு, நான் சமீருக்குப் பெர்சனலா தாங்க் பண்ணணும். நேத்து இருந்த டென்ஷன்ல தாங்க் பண்ணாம விட்டுட்டேன்.”

“சரி அண்ணா, அவருக்குத்தான் ட்ரை பண்றேன், அட்டன் பண்ணினதும் தரேன்.” என்ற ஆயிஷா சமீருக்கு தன் அலைபேசியின் மூலமாக அழைப்பு விடுத்துக் கொண்டிருக்க,

ஆஷிக் தன் தாயிடம், “நடாஷா எழும்பிட்டாங்களா?”

“இல்லப்பா, அந்தப் பொண்ணும் ராத்திரி முழுக்கத் தூங்காம ஜியாவ நினைச்சு கவலைபட்டுட்டே இருந்துச்சு. லேட்டா தூங்கிருப்பானு நினைக்கிறேன். இப்போ பார்த்தப்போ நல்லா அசந்து தூங்கிட்டு இருந்தா, அதான் எழுப்பாம அப்படியே விட்டுட்டேன்.”

“சரிமா, சீக்கிரமா ஜியா இதைவிட்டு வெளிய வரணும், அது மட்டும்தான் இப்போதைக்கு என் மைண்ட்ல ஓட்டிட்டு இருக்கு.” என்று அவன் கூறவும், 

“என்ன மருந்தெல்லாம் குடுக்கணுமோ எல்லாத்தையும் குடுத்து இன்னும் ரெண்டு நாள்ல சரி பண்ணிருக்கணும். ரிசெப்ஷன் அன்னைக்கு கெஸ்ட் முன்னாடி எந்தச் சீனும் நடக்கக் கூடாது. உன் மனைவிக்கு ஸ்டேட்டஸ் மட்டும்தான் இல்லை. ஆனா பிரச்சனைக்கு குறைவே இருக்காது போலயே? லைஃப் முழுக்க டிவிஸ்ட் அண்ட் டர்ன்ஸாதான் இருக்கும் போல, ஆல் த பெஸ்ட்டா. 

இந்தப் பொண்ண கல்யாணம் பண்ணதான் இவ்வளவு ஸீன் கிரியேட் பண்ணுனியா?” என்ற அஸாத் தன் புருவத்தைச் சுளித்தவாறு ஏளன பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து செல்ல, 

என்ன சொல்லி இவன் கத்த போகிறானோ என்பது போலத் தன்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த தன் தாயிடம் ஆஷிக், “ஏன் மிரண்டு போய் பார்த்துட்டு இருக்கீங்க, சண்டை எல்லாம் நான் போட மாட்டேன். எனக்கு இவர்கிட்ட சண்டை போடுறத விட முக்கியமான விஷயம் நிறையா இருக்கு. 

ஆனா ஒன்னு, எப்படிமா இப்படி ஒரு சாடிஸ்ட் கூட வாழ்ந்துட்டு இருக்கீங்க. உண்மையாவே நீங்க கிரேட்.” என்று ஆச்சரியமாகக் கேட்ட தன் மகனின் தலையைக் கோதியவாறு ஹாஜரா,

“இப்படி ஒரு சாடிஸ்ட் கூட நான் வாழ்ந்தனால தானே நீ எனக்குக் கிடைச்ச.” என்று தன் உதட்டில் புன்னகை தளும்பக் கூறி. “எதை பத்தியும் யோசிக்காம இந்த டீ குடி, நான் ஜியாவ பார்த்துட்டு வரேன்.” என்றவர் அங்கிருந்து சென்றார். 

ஜியாவை சந்தித்த நொடியில் இருந்து எதையோ பற்றிச் சிந்தித்தவாறே, தன் இரவையும் தூக்கத்தையும் மறந்தவன் தன்னை அறியாமல் எப்பொழுது தூங்கினானோ தெரியவில்லை. ஆயிஷாவின் தொடர் அழைப்பின் காரணமாகத் தன் நித்திரையில் இருந்து சடாரென்று விழித்த சமீர், ஆயிஷாவின் பத்து மிஸ்ட் காலை பார்த்து,

“என்னாச்சு, ஏன் இவ்வளவு தடவ கால் பண்ணிருக்கா. ஜியா ஏதும்… நோ… நோ… சமீர் இருக்காது. ஜி… யா…” என்று கோபமுற்றவாறே தன் தலையில் கை வைத்தவன், சில நொடிகள் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு ஆயிஷாவுக்குத் தொடர்பு கொள்ள, முதல் ரிங்கிலே அட்டன் செய்யவும் அவள் எதுவும் பேசுவதற்குள் முந்திக்கொண்டவன்,

“என்னாச்சு எல்லாம் ஓகே தானே?” என்று இடைவெளியில்லாமல் கேட்டுவிட்டு அவளது பதிலுக்காகக் காத்திருக்க, 

ஆனால் ஆயிஷா, “அஸ்ஸாலாம் அலைக்கும்…” என்று தன் உரையாடலைத் தொடங்க,

தன் புருவத்தை உயர்த்தியவன், “அலைக்கும் அஸ்ஸாலாம்…” என்றுவிட்டு அடுத்த வரி கூறும் முன், 

ஆச்சரியத்துடன் ஆயிஷா, “என்ன ஆகணும்?” என்று கேட்க, 

‘கேள்வி கேட்டா பதிலுக்குப் பதிலா கேள்வியே கேக்குறா. சட்டம் படிச்சுருக்கால்ல கேட்கதான் செய்வா.’ என்று மனதிற்குள் முணுமுணுத்தவன், கோபத்தில் முகத்தைச் சுளிக்க இருந்தும் அதை அவளிடம் காட்டிக்காமல்,

“அது ஜியாக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையேனு கேட்க வந்தேன், ஜியா நல்லா இருக்காள்ல?”

“ஆமா நல்லா இருக்கா, அதைச் சொல்லத்தான் நான் இவ்வளவு நேரம் கால் பண்ணினேன். நீங்கதான் அட்டன் பண்ணவே இல்லை. ஜியா நல்லாதான் இருக்கா…” என்ற வரிகளைக் கேட்ட பின்பே நிம்மதி அடைந்தவன், 

“எதுவும் சொன்னாளா…” என்று கலவரம் தொனிக்க கேட்க,

“தெரியலை, ஆனா அண்ணா உங்ககிட்ட பேசணும்னு சொன்னாங்க. நான் அவர்கிட்ட குடுக்குறேன், நீங்க அவர்கிட்டயே பேசிக்கோங்க.” என்று அலைபேசியை ஆஷிக்கிடம் கொடுத்தாள். 

ஆஷிக்கிடம் பேசி முடித்த பிறகு சமீர், “நல்லவேளை ஜியா எதுவும் சொல்லல. ஆனா அவ ரொம்ப நாள் அமைதியா இருக்க மாட்டா. என்னைப் பார்த்ததுக்கு அப்பறம் கண்டிப்பா ஏதாவது ஏடா கூடமா பண்ணுவா. நாமதான் எச்சரிக்கையா இருக்கணும். ஜியாவை கண்டிப்பா சந்திச்சாகணும். தனியா எப்படி மீட் பண்றது?” என்று குழம்பியவனின் கண்களில், கோபம் மட்டும் தனியாமல் அப்படியே எரிந்து கொண்டிருந்தது. 

ஹாலில் ஆஷிக், ஜியா இருவரும் பொம்மை போல அசையாமல் நின்று கொண்டிருக்க, ஆடை வடிவமைப்பாளர்கள் ஜியாவையும் ஆஷிக்கையும் அங்குலம் அங்குலமாக அளந்து கொண்டிருந்தனர். அவர்கள் எல்லாரும் பிரத்யேகமாகத் திருமண ஆடைகள், அதுவும் மணமக்களின் ஆடைகளை வடிவமைக்கக் கூடிய புகழ் பெற்ற ஆடை வடிவமைப்பாளர்கள். 

ஒருவழியாக அளவெல்லாம் எடுத்து முடிக்க அஸாத் அவர்களிடம், “ரொம்பவே குறைவான நேரம்தான் இருக்கு, பட் எனக்கு இதுல எந்தத் தப்பும் நடக்கக் கூடாது. அவுட்ஃபிட்ஸ் எல்லாம் பெர்ஃபெக்ட்டா இருக்கணும். ஐ டோன்’ட் மைண்ட் அபௌட் ப்ரைஸ். எந்த அவுட்ஃபிட்டும் ட்வெண்ட்டி Lக்கு கம்மியா இருக்கக் கூடாது. அண்ட் வெரி வெரி இம்பார்ட்டெண்ட், எவெரிகாஸ்ட்யும் மஸ்ட் பீ எக்ஸ்க்ளூசிவ். என்னோட பையனையும் என்னோட மருமகளையும் பாக்குறவங்க எல்லாரும் அசந்து போகணும்.” என்று ஒருவித கர்வத்தோடு சேர்த்து அதட்டலாய் கூறினார். 

“எஸ் மிஸ்டர் அஸாத் அஹமத், எவரிதிங் வில் பீ பெர்ஃ\பெக்ட். ஓகே மிஸ்டர் அஹமத், வீ வில் ஸீ யு ஆன் சண்டே மார்னிங்.” என்றவர்கள் அவருக்கு உறுதி கொடுத்துவிட்டு, அஸாத்திடம் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றனர். 

ஆஷிக் அஸாத்தைப் பார்த்து முறைத்தவாறே, “மத்தவங்க வேணும்னா உங்கள பெருமையா நினைக்கலாம், ஆனா எனக்கு நல்லாவே தெரியும். இதெல்லாத்தையும் என்னை மட்டம் தட்டுறதுக்காகத் தான் பண்ணிட்டு இருக்கீங்கனு. நீங்க திருந்தவே மாட்டீங்க.” என்று தனக்குள் கூறிக்கொண்டு அஸாத்தை இறுக்கமாகப் பார்க்க,

அப்பொழுது அங்கே வேகமாக வந்த ஆயிஷா, “நடாஷா சீக்கிரமா வாங்க.” என்றவாறு ஆஷிக், ஜியாவின் அருகில் வந்து, “கிளம்பலாம் வாங்க.” என்று உற்சாகம் ததும்பக் கூற, 

உடனே ஆஷிக், “ஷாப்பிங் தானே போறோம், அதுக்கு ஏன் இப்படி பறக்குற? என்ன சமீர வர சொல்லிருக்கியா?” என்று தன் கண்ணைச் சிமிட்டியவாறு கேட்க, 

உடனே அஸாத் சோபாவில் இருந்து எழுந்து ஆயிஷாவிடம், “நீ சமீர மீட் பண்ணிட்டு இருக்கியா என்ன?” என்று கண்டிப்போடு கண்கள் உருள கேட்க,

“இல்லப்பா…” என்றாள் மெலிந்த குரலில்.

“இந்தக் காலத்துல கல்யாணம் பண்ணிக்கப் போறவங்க, மீட் பண்ணிக்கிறது ரொம்பப் பெரிய விஷயம் இல்லதான். ஆனாலும் நீ கல்யாணம் முடியிற வரைக்கும் உன் பழக்கத்தை மொபைல் எஸ்எம்எஸோட முடிச்சுக்கோ. எல்லாரும் இருக்கும் பொழுது மீட் பண்றது ஓகே, தனியா மீட் பண்ண வேண்டாம் சரியா?” என்று ஒருவித கண்டிப்பும் அக்கறையும் கலந்தவாறு கூற, 

தன் தந்தையின் பேச்சுக்கு எதிர்பேச்சுப் பேசாமல் ஆயிஷாவும், ‘சரி’ என்பதாய் தன் தலையை ஆட்ட, 

உடனே ஆஷிக் ஜியாவிடம், “இப்போ எல்லாம் அட்வைஸ் யாரு வேணும்னாலும் குடுக்கலாம்னு ஆகிட்டுல, ஃப்ரீ ஆஃப் காஸ்ட். அதான் தகுதியே இல்லாதவங்க…” என்று அவன் முடிப்பதற்குள், அவனது கரத்தை நறுக்கென்று கிள்ளியவள் தன் பார்வையாலே, ‘ஷட் அப்!’ என்பது போலச் செய்கை செய்தாள். 

அஸாத் அவனுக்குப் பதில் கூறுவதற்குள் சுதாரித்துக்கொண்ட ஆயிஷா, “அப்பா நாங்க எல்லாரும் ஷாப்பிங் போறோம், உங்களுக்கு என்ன வேணும்?” என்று கேட்க,

கோபத்தை ஒதுக்கி வைத்தவர் தன் மகளின் தலையை மெலிதாய் வருடிவிட்டு, “உன்னோட சந்தோஷம்தான். சந்தோஷமா போயிட்டு வாங்க. நைட் சீக்கிரமா வந்திருங்க.” என்று தன் இதழ் இசைத்தவர்,

ஆஷிக்கைக் கடுமையாகப் பார்த்து முறைக்க, அவனோ உங்களின் பார்வை என்னை எதுவும் செய்யாது என்பது போல அசட்டு சிரிப்போடு பார்க்க, ‘யு வில் நெவர் சேஞ்’ என்பது போல தன் தலையை உலுக்கிவிட்டு, அலைபேசியைத் தன் காதில் சொருகியவாறு அங்கிருந்து சென்றார்.

***

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!