ஒருவழியாக ஆஷிக் வெளியே சென்று இருப்பதை ஆயிஷாவின் மூலமாக அறிந்துகொண்ட சமீர், ஆயிஷாவிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, “நான் வந்ததில இருந்து ஜியாகிட்ட சரியாவே பேசலை, ஜியாவ பார்க்கணும். அவ ரூம்ல தானே இருக்கா?” என்று கேட்க, ஆயிஷா, சமீரை அழைத்துக் கொண்டு ஜியாவின் அறைக்குள் சென்றாள்.
திடீரென்று அவர்களைத் தன் அறையில் பார்த்த ஜியா, ஒருவித பதற்றத்துடன் நிற்க,
ஆயிஷா, “ஜியா உன்னைப் பார்க்க சமீர் வந்திருக்காரு, நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க, எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு.” என்று புன்னகை தளும்ப அவர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து சென்றாள்.
அவள் சென்ற மறுநொடி வேகமாக ஜியாவின் அருகில் கோபம் தன் கண்களில் தெறிக்க வந்த சமீர், ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியை அவளது கையில் இருந்து கைப்பற்றிக் கீழே தூக்கி போட்ட மறுநொடி, ஜியாவின் கண்களில் நீர் கட்டியது. கரங்கள் அச்சத்தில் துடித்தன.
அவள் அழுவதைக் கண்டவனின் கண்களில் இருந்த கோபமும் முகத்தில் இருந்த இறுக்கமும் சற்றுத் தளர்ந்தது. வேகமாய் சென்று கதவிற்குத் தாழிட்டு அவளிடம் வந்தவன்,
“உனக்கென்ன பைத்தியமா ஜியா? கத்திய கையில வச்சுட்டு இருக்க, நான் மட்டும் வரலைனா என்ன ஆகியிருக்கும்? செத்துட்டா எல்லாம் சரியாகிருமா? தப்பு பண்ணினவங்க இன்னும் நிம்மதியா இருப்பாங்க.” ஆற்றாமையில் சிடுசிடுத்தான்.
“சும்மா ஒன்னும் நான் செத்து போக மாட்டேன், அவங்க பண்ணின எல்லாத் தப்பையும் நான் ஒன்னு விடாம ஸ்டேட்மென்ட்டா என் மொபைல்ல வீடியோ ரெக்கார்டிங் பண்ணிருக்கேன். அவங்க நிச்சயமா தப்ப முடியாது.” என்று கதறியவளின் கரத்தில் இருந்த அலைபேசியை வாங்கியவன், அதில் இருந்த வீடியோ பதிவைப் பார்த்து அதிர்ச்சியுற்று,
“இதை உன் மாமியார் குடும்பத்துல யாராவது பார்த்தா என்ன ஆகும்?” என்றவாறு வேகமாக ரெக்கார்டிங்கை டெலீட் செய்துவிட்டு ஜியாவை இறுக்கமாகப் பார்த்து,
“நீ இப்படிப் பண்றதுனால எல்லாருக்கும் எவ்வளவு கஷ்டம்? உன் குடும்பம், ஆஷிக் இப்படி எல்லாரும் பெரிய கனவுல இருக்காங்க. சரி எல்லாரையும், விடு ஆஷிக்க நினைச்சு பாரு. அன்னைக்கு மயங்கி விழுந்ததும் உயிரே போன மாதிரி துடிச்சு போய்ட்டாரு. இப்படி உன் மேல உயிரே வச்சுருக்கிற உன் ஹஸ்பண்ட எப்படி உன்னால ஏமாத்த முடியும்? உடைஞ்சி போயிற மாட்டாரு? பதில் சொல்லு ஜியா.” என்று அக்கறை கலந்த கோபத்தோடு சமீர் பொரிந்து தள்ள,
ஜியா ஆக்ரோஷத்தோடு, “அப்போ இப்போ நான் பண்ணிட்டு இருக்கிறதுக்குப் பேரு என்ன? இது ஏமாற்றம் இல்லை? இல்லை இதுக்குப் பேரு துரோகம். கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒருத்தனோட வாழ்க்கையே நான் கேள்வி குறி ஆக்கிட்டேனே. உண்மை தெரிஞ்சா உடைஞ்சி போயிற மாட்டான்? ஆஷிக்கிற்கு எல்லாம் தெரியறதுக்கு முன்னாடி நான் என் உயிரை விடுறதுதான் சரி.
உன்னைப் பார்த்ததுக்கு அப்புறம் எப்படி சமீர்? ரெண்டு பேரும் ஒரே குடும்பத்துக்குள்ள இருந்துட்டு என்னால எப்படி இயல்பா இருக்க முடியும்? உன்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் எனக்கு அதுதான் ஞாபகத்துக்கு வருது. இப்போ உன்கூடப் பேசிட்டு இருக்கேன், ஆனா என் மனசு முழுக்க அந்தச் சம்பவம்தான் ஓடிட்டு இருக்கு. எனக்கு என்னைப் பார்க்கிறதுக்கே அருவெறுப்பா இருக்கு.” என்று மனம் வெம்பி அழுதாள்.
“ஆயிஷாவ நான் கல்யாணம் பண்ணிக்கப் போறதுனால நான் ஆஷிக்கிட்டயும், அவன் குடும்பத்துக்கிட்டயும் எல்லாத்தையும் சொல்லிருவேன்னு நினைச்சு தானே இப்படிப் பேசுற. நான் இப்பவே என் வீட்லையும் ஆயிஷாகிட்டயும் இந்தக் கல்யாணத்துல எனக்கு விருப்பம் இல்லனு சொல்றேன். என்ன வந்தாலும் நான் பார்த்துக்கிறேன். உன் முகத்துலயே முழிக்க மாட்டேன், நீ நிம்மதியா இரு.” என்ற அழுத்தமான வார்த்தைகள் அவளது மனதை அழுத்த,
“நான் அவ்வளவு சுயநலவாதியா சமீர்? உன்னையும் ஆயிஷாவையும் கஷ்டப்படுத்திட்டு நான் சந்தோஷமா இருந்திருவேனா?” என்றாள் வேதனையோடு.
“இல்லை, நீ ரொம்ப நல்லவ. நீ எனக்குப் பண்ணினதை என்னால என்னைக்குமே மறக்க முடியாது. என்னாலதான் உனக்கு இப்படி ஒரு நிலைமை. அதான் உனக்கு எதாவது பண்ணணும்னு துடிக்கிறேன்.”
“உண்மைய பொய்யாக்க முடியாதே சமீர்?”
“எந்த உண்மையைப் பத்தி பேசுற ஜியா? அதைக் கெட்ட கனவா நினைச்சு மறந்திருனு உன்கிட்ட எத்தனை தடவ சொல்றது. நீ சொல்ற உண்மை எனக்கும் உனக்கும் மட்டும் தெரிஞ்ச ஒன்னு. அது ஆஷிக்குக்கு எப்படித் தெரியும்? நான் அவன்கிட்ட சொல்லமாட்டேன், நீயும் சொல்லாத.”
“எப்படிச் சொல்லாம என்னால இருக்க முடியும்? அது அவனுக்கு நான் பண்ற துரோகமா ஆகிடாதா? அது மட்டும் நான் பண்ணவே மாட்டேன்.”
“தப்ப மறைச்சா அது துரோகம், ஆனா தவறை மறைச்சா அது இயலாமை. அந்தத் தவறை கூட நீ பண்ணலையே, யாரோ பண்ணின பாவத்துக்கு நீ ஏன் உனக்கே தண்டனை குடுத்துக்கிற? பாவம் பண்ணினவங்க நிம்மதியா இருக்காங்க.”
“அவங்க இன்னும் என்னைத் துரத்திட்டுதான் இருக்காங்க சமீர்.” என்று ஜீவாவை சந்தித்தது, அதன்பிறகு நடந்த அனைத்தையும் கூறினாள்.
அவள் கூறியதை கேட்டபிறகு குற்ற உணர்வில் தலை கவிழ்ந்து இருந்தவனிடம் மேலும் தொடர்ந்து,
“அவங்களுக்கு மனசாட்சியே கிடையாதா? இப்படி அநியாயமா ரெண்டு உயிரை கொன்னுட்டு, என்னையும் உயிரோட கொன்னுக்கிட்டு இருக்கோம்னு சின்ன உறுத்தல் கூடவா அவங்களுக்கு இருக்காது. டாக்டரா இருந்துட்டு எப்படி அவங்களால ஒரு கொடூர மிருகமா இருக்க முடியுது? செத்து செத்துப் பிழைக்கிறேன் சமீர்!
உடம்புல உயிர் மட்டும்தான் இருக்கு, அந்த உயிர் கூட என் ஆஷிக்குக்காகத்தான் இருக்கு. எனக்கு எதுவும் ஆகிட்டுனா அவன் தாங்குவானானுதான் நான் இன்னும் கஷ்டப்பட்டு வாழ்ந்துட்டு இருக்கேன்.” என்ற ஜியாவிடம் சமீர்,
“தெரியுதுல, அப்புறம் ஏன் தற்கொலை பண்ண முயற்சி பண்ணின?”
“குற்ற உணர்ச்சியா இருக்கு.”
“மனசை தளர விடாத, இப்போ கூட உன்மேல கோபத்தோடுதான் வந்தேன். அன்னைக்கு நீ என்கிட்ட எதுவும் சொல்லாம எங்கையோ போயிட்ட. ரொம்பவே உடைஞ்சி போய்ட்டேன். என் மேல நம்பிக்கை இல்லாம தானே இப்படி என்னை விட்டுட்டு போன. உனக்கு நியாயம் கிடைக்கணும்னு நான் நினைச்சேன்.
நீ போயிருக்கக் கூடாது, அவங்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கலாம். உனக்காக நான் போலீஸ் ஸ்டேக்ஷன்ல வெயிட் பண்ணிட்டு இருந்தேன். ஆனா நீ இனிமே என்னைத் தேடாதனு லெட்டர் எழுதி வச்சுட்டு போயிட்ட. ஏன் போன? சொல்லு, உன்கிட்டதான் கேக்குறேன்.”
“ஸ்டேக்ஷன் போனா உன்னைக் கொன்னுருவேன்னு என்னை சுஜித் மிரட்டும் போது, நான் என்ன பண்றது சமீர்? யாருக்கு என்ன ஆனாலும் பரவாயில்லனு என்னால எப்படி சுயநலமா இருக்க முடியும்?” என்று ஜியா கூறிய மறுநொடி, சமீர் முற்றிலும் உடைந்து போனான்.
“என் ஃப்ரண்ட்ஸால உனக்கு எவ்வளவு பிரச்சனை?”
“சமீர் அப்படி எதுவும் இல்லை, எனக்கு நடக்கணும்னு விதி இருந்தது, நடந்தது. இதுல உன் தப்பும் எதுவும் இல்லை. நீ ஃபீல் பண்ணாத.”
“உன்னால பழசை மறந்துட்டு ஆஷிக் கூட வாழ முடியுமா?”
“அது எப்படி முடியும்?”
“அப்போ என்னால எப்படி உன்னை நினைச்சு ஃபீல் பண்ணாம இருக்க முடியும். என் உயிருக்கு பயந்துகிட்டு உனக்கு அநியாயம் பண்ணிட்டேன்னு ரொம்பவே கில்டியா ஃபீல் பண்றேன். என்னை நம்பாம போய்டியேனு உன் மேல கோபம் இருந்தது. ஆனா உனக்குக் கல்யாணம் ஆகிட்டுனு தெரிஞ்சதுக்கப்புறம் நான் ரொம்பவே சந்தோஷப்பட்டேன்.
நீ எல்லாதையும் மறந்துட்டு மூவ் பண்ணிடனு நினைச்சேன், ஆனா நீ இன்னும் அதை நினைச்சு கஷ்டப்படுறதை பார்த்தப்போ ரொம்பவே ஃபீல் பண்ணினேன். இப்போ கூட நீ எதுவும் தப்பான முடிவு எடுத்துற கூடாதுனுதான் உன்னைத் தேடி வந்தேன். இங்க பாரு வாழ்க்கையில இன்னும் நீ பார்க்க வேண்டியது நிறையா இருக்கு. புது வாழ்க்கை கிடைச்சுருக்கு, சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம் இது. எந்த சோதனை வந்தாலும் அதை எதிர்த்து நின்னு வாழ்ந்து காட்டுறதுலதான் சவாலே இருக்கு.
நான் இவ்வளவு சொல்லியும் உனக்குச் செத்துப் போறதுதான் சரியான முடிவுனு தோணுச்சுனா, முதல்ல நான் செத்து போறேன். அன்னைக்கு மட்டும் நான் உன்னை அங்க கூட்டிட்டு போகாம இருந்திருந்தா, உனக்கு அப்படி ஒரு பிரச்சனையே நடந்திருக்காது.
எல்லாத்துக்கும் மேல என் உயிருக்காக, உன்னை ஊமையாக்கிட்டேன். அதுக்கு முதல்ல நான்தான் என் கையை வெட்டிக்கனும்.” என்ற சமீர் ஜியா சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் கீழே கிடந்த கத்தியை எடுத்து தன் மணிக்கட்டில் கீறினான்.
அவன் கையைக் கீறியதும் பதறியவள் ரத்தம் அதிகம் வருவதற்குள் அவனுக்கு முதலுதவி செய்தாள். உடனே செய்த முதலுதவியால் சமீரின் உயிருக்கு எந்த ஆபத்தும் வரவில்லை.
ஜியா பதற்றத்துடன், “ஏன் சமீர் இப்படிப் பண்ணி என்னைக் கஷ்டப்படுத்துற? நல்லவேளை நெர்வ்ஸ்ல கட் ஆகலை, தப்பித் தவறி ஆகிருந்தா என்ன ஆகுறது?”
“நான் எதுவும் பண்ணிக்காம இருக்கணும்னா நீ எதுவும் பண்ணிக்க மாட்டேன்னு எனக்குச் சத்தியம் பண்ணு.” என்று அழுத்தமாக மிக உறுதியாகச் சொன்ன சமீருக்கு, ஜியாவால் எந்தவித மறுப்பும் கூற முடியவில்லை. அந்த நேரத்தில் இருமனதாய் ஜியா சமீருக்கு வாக்களித்தாள். சமீர் கொடுத்த தைரியத்தில் அவளது மனம் முழுதாய் நிம்மதி பெறவில்லை என்பதைச் சமீரிடம் கூறி அவனை வருத்தப்பட விரும்பாதவள், அவன் முன்பு தன்னை முடிந்தவரை இயல்பாகக் காட்டிக்கொண்டாள்.
***
