காதல் 63

உடல் அலுப்பு காரணமாய் சற்று நேரம் அசந்திருந்த ஆஷிக், சத்தம் கேட்டு கண் விழித்துப் பார்த்த பொழுது, ஜியா மூச்சு விடவே மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள். 

கண்கள் மேலே சொருக கை, கால்கள் எல்லாம் உதறல் எடுக்க, “ஆஷிக் ஆஷிக்..” என்ற அவனது பெயரையே தடுமாற்றத்தோடு உளறினாள். 

பதறி போனவன் மருத்துவருக்குச் செய்தி தெரிவித்துவிட்டு ஜியாவின் கரங்களைப் பற்றிகொண்டவாறு, “ஒன்னுமில்லைடா..” என்று ஜியாவிற்கு ஆறுதல் அளித்துக் கொண்டிருந்தான். 

மருத்துவர் மிகவும் சிரமப்பட்டு ஜியாவின் உடல் நிலையைக் கட்டுக்குள் கொண்டுவந்தார். 

ஜியா, ஆஷிக்கின் கரங்களை இறுக்கப் பற்றிக் கொண்டவாறே, “ஆஷிக்…” என்று அழுத்தமாகக் கூறியவாறு கண்கள் அயர்ந்தாள். 

ஆஷிக்கைத் தனியாக அழைத்த மருத்துவர் அவனிடம், “இனிமே நீங்க பயப்படத் தேவையே இல்லை. அவங்க பேச ஆரம்பிச்சுட்டாங்க. இன்னும் கொஞ்ச நாள்தான், ஏன் நாளைக்கு… ஏன் இன்னைக்கே கூட பழைய நிலைமைக்கு அவங்க திரும்புறதுக்கு எல்லா வாய்ப்பும் இருக்கு.”

“ஆனா டாக்டர், நல்லா ஆகிட்டான்னா ஏன் இப்படி மூச்சு வாங்க கஷ்டப்படுறா?” என்று முகத்தில் பதற்றம் தொனிக்கக் கேட்க, 

ஆஷிக்கின் பயத்தைப் புரிந்துகொண்ட மருத்துவர் அவனை ஆசுவாசப்படுத்தி, “அதீத மனம் அழுத்தம். அவங்க அன்னைக்கு நடந்த சம்பவத்தைக் கூட நினைச்சு பார்த்திருக்கலாம்.”

“என்னோட பேரை சொல்லி இப்போ அழுததுக்குக் கூட அதுதான் காரணமா?”

“கண்டிப்பா இருக்கலாம். அந்தச் சம்பவத்தை ஞாபகப்படுத்துற மாதிரி எதோ ஒன்னு இன்னைக்கு அவங்களுக்கு நடந்திருக்கலாம். யாராவது பேசியிருக்கலாம், என்னவா வேணும்னாலும் இருக்கலாம்.  அதை உங்ககிட்ட சொல்ல முயற்சி பண்ணிதான் உங்க பேரை சொல்லிருக்காங்க. அதுக்கு மேல சொல்ல முடியாம போனதால அவங்க மனசுக்குள்ள அழுத்தம் அதிகமாகி மூச்சு திணறல் வந்திருக்கு. 

நீங்க மனசைத் தளர விடாதீங்க ஆஷிக், எல்லாம் நல்லதுக்கே…” என்ற மருத்துவரிடம் பேசிவிட்டு, மீண்டும் அறைக்கு வந்து ஜியாவின் நெற்றியை ஆதரவாய் நீவியபடி, அவளது அருகிலே அமர்ந்து கொண்டான் ஆஷிக். வைத்த கண் வாங்காமல் அவளது முகத்தையே பார்த்து கொண்டிருந்தவனின் விழிகள் தானாகக் கலங்கியது. 

நெற்றியை நீவியபடி அமர்ந்திருந்தவனை இருக்கரங்கள் தழுவ சட்டென்று நிமிர்ந்தவன், தியா தன் அருகில் இருப்பதைப் பார்த்து ஜியாவின் தூக்கம் கெட்டுவிடாமல் இருப்பதற்காக அவளுடன் வெளியே சென்றான். 

வெளியே ரோஹித், ஆதர்ஷும் காத்துக் கொண்டிருக்க, அவர்களை ஆச்சரியமாகப் பார்த்தவன், “நீங்க இங்க என்னடா பண்றீங்க? நாளைக்கு ஆயிஷாவுக்குக் கல்யாணம், போங்க போய் ரெஸ்ட் எடுங்க.” என்றவனிடம் ரோஹித்,

“நீ ஃபோன்ல ஜியா மூச்சு விடக் கஷ்டப்பட்டான்னு சொன்னதுக்கு அப்புறம், நாங்க மட்டும் எப்படி நிம்மதியா இருக்க முடியும்? அதான் உன் கூடத் துணைக்கு இங்க இருக்கலாம்னு வந்துட்டோம்டா.” என்றவனைப் பார்த்து வெறுமையாய் சிரித்தவன்,

“வாழ்க்கை எப்படி மாறி போச்சு? நாளுக்கு நாள் பயமா இருக்குடா. ஜியா கண் முழிச்சு வரும் பொழுது எப்படி நடந்துக்குவான்னு நினைச்சாலே பயமா இருக்கு. நானே இன்னும் இதை விட்டு வெளிய வரல. அவளை எப்படி நான் வெளியே கொண்டு வரப்போறேன்னு எனக்குச் சுத்தமா தெரியல. ஒரு பேஷண்ட் செத்து போனதுக்கே அவ்வளவு டிப்ரெஸ்ட் ஆனவ, இதை எப்படித் தாங்குவானு நினைச்சாலே பயமா இருக்கு.” என்று ஆரம்பித்தவன் இன்று டாக்டர் கூறியதை பற்றிக் கூற, சிறிது நேரம் சிந்தித்த தியா ஆஷிக்கிடம், 

“ஜியாவோட இந்த நிலைமைக்கு யார் காரணமா இருப்பாங்கன்னு நீ நினைக்கிற?”

“ம்ம்… தெரியல, யார் பண்ணினாங்க, ஏன் பண்ணினாங்க ஐ ஆம் சிம்ப்ளி ப்ளாங்க். அது யாருன்னு நினைச்சு நினைச்சு உள்ளுக்குள்ள வெந்துட்டு இருக்கேன். ஆனா யாரா இருந்தாலும் அவங்க என்னை வேற மாதிரி பார்ப்பாங்க.” என்று கோபமாகக் கூறினான். 

அப்பொழுது தியா, “எனக்கு என்னவோ அது ஜியாக்கு… ஏன் உனக்கு, நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச ஆளா இருக்குமோன்னு தோனுது.” என்று தன் மனதில் பட்டத்தைக் கூற, 

உடனே மறுத்த ஆதர்ஷ், “தெரிஞ்சவங்கன்னா கண்டிப்பா ஜியாவ அந்த இடத்துலயே கொன்னுருப்பாங்க. ஏன்னா ஆஷிக்கத் தெரிஞ்சவங்கன்னா கண்டிப்பா அவன் ஜியாக்காக என்ன வேணும்னாலும் செய்வான்னு தெரிஞ்சிருக்கும். கண்டிப்பா உயிரோட விட்ருக்க மாட்டாங்க. சோ கண்டிப்பா ரேண்டம் பெர்ஸன் யாரோதான் போதையில பண்ணிருப்பாங்க. அவங்க யாருன்னு சீக்கிரம் கண்டுபுடிக்கணும்.”

“இல்லை டாக்டர் சொன்னதைக் கவனிசீங்கள்ல, ஜியா தன்னைப் பத்தி எதுவும் சொல்லிறகூடாதுனு தான் அவ உடம்புல ட்ரக்ஸ் இன்ஜெக்ட் பண்ணிருக்காங்க. எதோ ஒரு ரேண்டம் பெர்ஸன் ஏன் இப்படி எல்லாம் பண்ண போறான்? பண்ணினவன், எதோ ஒரு மோட்டிவ்ல தான் பண்ணிருக்கான். 

மெடிசின் பத்தி தெரிஞ்சிருக்குன்னா அவன் ஒரு மெடிக்கல் ஸ்டூடெண்ட்டா இருக்கலாம். மெடிக்கல் ரெப்பா இருக்கலாம்.” என்றவளைத் தொடர்ந்து ரோஹித், “ஏன் டாக்டரா கூட இருக்கலாம்.” என்றவன் சில நொடிகள் யோசித்த பிறகு ஆஷிக்கைப் பார்த்து,

“டேய் சமீர் சொன்ன பெங்களூர் இன்சிடென்ட்… செத்துப் போன அந்தப் பொண்ணுக்கு நெருக்கமானவங்க யாரும் ஜியாவ பழிவாங்க இப்படிப் பண்ணிருக்கலாமா?” என்று ஒவ்வொருவரும் தங்களின் மனதில் உள்ளதைக் கூற, ஆஷிக் ஒவ்வொருவரின் கருத்தையும் தனக்குள் உள்வாங்கிக் கொண்டு ஏதேதோ சிந்திக்கத் தொடங்கினான். 

சிந்திக்கச் சிந்திக்கக் குழப்பம் அதிகரித்ததே தவிர, இறுதி வரை எந்த ஒரு தெளிவும் இல்லாமல் போனது. சோர்வில் நெற்றியை நீவியபடி அமர்ந்தான். அவனது மனவோட்டத்தைக் கணித்த தியா, “நீ ரொம்பக் குழப்பிக்காத, எல்லாம் சரியாகும். ஒன்னு பண்ணலாம், நீ வேணும்னா வீட்டுக்கு போ, ரொம்பவே டயர்டா இருக்க. நானும் ரோஹித்தும் இன்னைக்கு நைட் ஸ்டே பண்றோம்.” என்று அவனை ஓய்வெடுக்குமாறு வலியுறுத்த, 

“இல்லை தியா, எப்படியும் நாளைக்கு நான் கல்யாணத்துல கலந்துக்கணும். சோ நைட் பார்த்துக்கறேன், மார்னிங் நீ வந்தா போதும்.” என்று மறுத்தவன் அவர்களைக் கிளம்புமாறு வலியுறுத்திக் கொண்டிருக்க, 

ஜியாவின் அறையில் இருந்து எதோ விழுவது போன்ற சத்தம் கேட்க, ஆஷிக்கைத் தொடர்ந்து மூவரும் உள்ளே சென்று பார்த்த பொழுது ஜியா தரையில் வீழ்ந்திருந்தாள். 

ஓடிச் சென்று ஜியாவைத் தன் மடியில் ஏந்தியவன் விழிகளில் பதற்றம் தொனிக்க, “ஜியா… ஜியா…” என்று எழுப்பினான், பதில் இல்லை. கைகளிலும் கால்களிலும் சிறு அசைவு மற்றும் இருந்தது. தன்னவளைத் தன் கரத்தில் ஏந்தி படுக்கையில் கிடத்தியவன், உடல் குளிர்ந்திருக்க காய்ச்சலின் அறிகுறி தெரிய, உடனே மருத்துவரை அழைக்குமாறு தன் நண்பரிகளிடம் கூறிய பொழுது, ஆஷிக்கின் கரத்தை இறுக்கப் பற்றிக் கொண்ட ஜியா மூச்சு வாங்க, வார்த்தைகள் இடம் பிறழ எதேதோ முனங்கினாள்.

“என்ன ஜியா?” என்று பலமுறை கன்னம் தட்டி கேட்ட பொழுது, மருந்தின் வீரியத்தில் மூடத் துடித்த விழிகளைத் தட்டி தட்டி பிரித்தவாறு, 

“ச… மீர்… சமீர்… வே… ண்டாம்… வேண்டாம்… ஆயிஷா… நிறுத்திரு ஆஷிக்…” என்று வார்த்தைகள் எதுவும் கோர்வை இல்லாமல் புலம்பினாள். 

‘சமீர் வேண்டாம், ஆயிஷா நிறுத்திரு.’ என்ன, ஏன், எதற்கு என்று விளங்காமல் அனைவரும் குழம்ப, ஆஷிக்கை ஒதுக்கிவிட்டு ஜியாவின் அருகில் வந்த தியா, விரைத்திருந்த ஜியாவின் கரங்களைப் பற்றிக் கொண்டு மெதுவாய் ஆறுதலாய் தடவி விட்டவாறு, 

“சமீர், ஆயிஷாவோட கல்யாணத்தை நிறுத்த சொல்றியா?” என்று கேட்க,

‘ஆமாம்…’ என்பதாய் ஜியா தன் தலையை மெல்லமாய் அசைக்க, அனைவரையும் பார்த்தவாறு மறுபடியும் ஜியாவிடம்,

“ஏன் அப்படிச் சொல்ற?” என்ற கேள்வி கேட்க, ஜியாவிடம் இருந்து பதில் எதுவும் வரமால் போக, 

தன் மனதை ஆறுதல் படுத்தியவாறு, “சமீர் தான் உன்னை…” என்று முடிப்பதற்குள், விழிகளில் நீர் வழிய ஜியா, ‘ஆம்’ என்பதாய் தன் தலையை அசைத்து, ஆஷிக்கின் கரத்தை இறுக்கப் பற்றிக்கொண்டாள். 

இதைக் கேட்ட நால்வரும் அதிர்ச்சியில் உறைந்திருக்க, ஆஷிக்கின் விழிகள் கோபத்தில் சிவந்திருந்தது. ‘சமீர்’தான் ஜியாவின் இந்த நிலைக்குக் காரணம் என்பதை நினைக்கும் பொழுதே, அவனுக்குக் கொலைவெறி வந்தது. 

இப்பொழுது வரை சமீர் மீது ஆஷிக்கிற்கு இருந்த கோபத்திற்கு எல்லாம் காரணம், அவனிடம் ஜியா இயல்பாக இருப்பதுதான். அவனால் முடிந்த காரியம் தன்னால் முடியவில்லையே என்கின்ற ஆதங்கம்தான், ஆஷிக்கிற்கு சமீர் மீது கோபம் கொள்ளச் செய்தது. ஆனால் சமீர், ஜியாவின் நிலைக்குக் காரணமாக இருப்பான் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. 

அவனை இக்கணமே தன் கையால் அழித்துவிட வேண்டும் என உறுதி கொண்டான். சமீர் ஆரம்பத்தில் இருந்து ஜியாவிற்கும் தனக்கும் உதவியது, ஜியாவிற்காகத் தன்னிடம் கோபப்பட்டது இப்படி அவன் நடித்த ஒவ்வொரு நடிப்பையும் எண்ணி பார்த்தவனின் இதயம், கோபத்தில் தாறுமாறாக எகிற, சமீரை அழித்தே தீர வேண்டும் என்கின்ற வெறியில் அங்கிருந்து புறப்பட்டான். தியாவிடம் ஜியாவை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு ஆதர்ஷ், ரோஹித் இருவரும் அவனைப் பின்தொடர்ந்தனர். 

திருமணம் மண்டபத்தில் தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜியாவின் உடல்நிலை சரியாக இல்லாததால் அலங்கார ஏற்பாடுகள் ஒன்றும் அவ்வளவு பிரமிப்பாக இல்லை. நெருங்கிய சொந்தங்களுக்குள் மட்டுமே அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. சமீரின் தாயார் ரஸ்மீன், ஹாஜரா, திவ்யா மற்றும் சில பெண்கள் ஒரு பக்கம் உட்கார்ந்து பேசி கொண்டிருக்க, 

ஆயிஷா மட்டும் மணப்பெண்ணிற்கு உரிய எந்தக் கலையும் இல்லாமல், ஜியாவைப் பற்றிய நினைப்பில் வாடிப் போய் இருந்தாள். திருமணத் தேதியை ஒற்றிவைக்குமாறு ஆயிஷாவும் ஹாஜராவும் எவ்வளவோ பேசினர். ஏன் அஸாத் கூட ஜியா நலமாகி வந்த பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று கூறினார். ஆனால் ஆஷிக் தன்னால் ஆயிஷாவின் திருமணத்தில் எந்தப் பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்று எண்ணி பிடிவாதமாக மறுத்துவிட்டான். 

அலைபேசியில் யாரிடமோ பேசியவாறே வந்த அஸாத், ஹாஜாராவை தனியாக அழைத்து, “அந்தப் பொண்ணுக்கு எப்படி இருக்கு?” என்று கேட்க, 

“பரவில்லை, ஆனா இன்னைக்குப் ஃபிட்ஸ் வந்துருச்சு. உயிருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.” என்றவரிடம், 

“நான் ஒரு வார்த்தை சொன்னா போதும், உன் மருமகளுக்கு ட்ரீட்மெண்ட் பண்ண வெளிநாட்ல இருந்து டாக்டர்ஸ் லைன்ல வருவாங்க. சொன்னா உன் பையன் எங்க கேக்குறான்? ஆயிஷா கல்யாணம் முடிஞ்சதும் அவன்கிட்ட பேசு. நல்ல நல்ல டாக்டர்ஸ் இருக்காங்க, சீக்கிரமா அவளைச் சரி பண்ணிடலாம்.”

“சரிங்க, நீங்க ஒரு தடவ போய் பாருங்க.” என்றவரிடம் சரி என்பதாய் தலையசைத்தவர், 

“அவன் ரொம்ப ஒரு மாதிரியா இருக்கான். எதுக்கும் கவலைப்பட வேண்டாம்னு சொல்லு. அவளை நினைச்சு நினைச்சு இவன் தன்னுடைய உடம்பை கெடுத்துக்கப் போறான்.” என்று அவர் பேசிக் கொண்டிருந்த நேரம் ரௌத்திரத்தோடு உள்ளே நுழைந்த ஆஷிக்,

“சமீர்!” என்று அந்த அரங்கமே அதிரும் அளவிற்கு சத்தம் போட, அவனது கோபத்தைக் கண்டு திகைத்துப் போன ஹாஜரா, ஆயிஷா எல்லாரும், “என்னாயிற்று?” என்று கேட்க,

யாருக்கும் பதில் கூறாதவன் மீண்டும், “சமீர்!” என்று உரக்க கத்த, மாடியில் இருக்கும் மணமகனின் அறையில் இருந்து தன் நண்பர்கள் ஜீவா, சுஜித், வருணுடன் மிகத் தோரணையாகச் சமீர் இறங்கி வர, 

அவன் வரும் வரை கூடப் பொறுமை கொள்ளாத ஆஷிக், ஆவேசமாக மாடி ஏறி ஒவ்வொரு படிக்கட்டுகளையும் அரை நொடியில் கடந்து சென்று, சமீரின் சட்டையைப் பற்றிக் கொண்டு கன்னத்தில் ஓங்கி குத்தியவாறு, தரதரவென இழுத்துக் கொண்டு கீழே போட்டான். அவனது செய்கையில் அனைவரும் திகைத்து நின்றனர். 

ஜீவா, வருண், சுஜித் மூவரும் ஆஷிக்கைப் பிடித்துக் கொள்ள, அவர்களை சரமாரியாகத் தாக்கியவன் சமீரைத் தாடை, கன்னம் வயிற்று பகுதி என்று மிக கொடூரமாகத் தாக்க, பதிலுக்குச் சமீர் அடிக்க இருவரையும் தடுக்க முடியாமல், அனைவரும் திகைத்துப் போய் நின்றனர்.

***

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!