காதல் 71

மறுநாள் காலையில் ஜீவா, சுஜித்தின் கொடூரமான மரணச் செய்தி காட்டுத் தீ போல ஊரெங்கும் பரவியது. 

ப்ரெஸ் ரிப்போர்ட்டர்ஸ்களைத் தொடர்ந்து பலர் பலவிதமான கேள்விகளை எழுப்பிருந்த நிலையில், ஜீவா மற்றும் வருணின் உறவுக்காரர்கள் அவர்கள் இருவரது மரணத்திலும் யார் மீதும் சந்தேகம் இல்லை என்று தெரிவிக்க, போலீஸ் தரப்பு விசாரணையிலும் சந்தேகப்படும் படி எந்தத் தடயமும் கிடைக்காததால், 

ஹைவேயில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டிருக்கும் அதே வழிப்பறி கொள்ளைக்காரர்கள் தான், பணத்திற்காக இவர்களது கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார்கள். 

போலீஸ் தரப்பில் தனிப்படை அமைத்து அக்கொள்ளை கும்பலை என்கவுண்டர் செய்தோ இல்லை, உயிரோடோ மிக விரைவாகக் கைது செய்வோம் என்று போலீஸ் கமிஷ்னர் அறிக்கையிட, ஜீவா மற்றும் வருணின் கொலை வழக்கு முடிவுக்கு வந்தது. 

அரசு விடுமுறை முடிந்த நிலையில் ஆஷிக்குக்குப் பெயில் கிடைத்திருக்க, வீட்டில் உள்ளவர்கள் ஒருவித மகிழ்ச்சியில் இருந்தாலும், 

மறுநாள் இருக்கும் ஜியாவின் கேஸை பற்றிய சிந்தனையில் அனைவரும் சோகமாய் இருந்தனர். அப்பொழுது ஆஷிக்

“நீங்க எல்லாரும் நிம்மதியா இருங்க. நாளைக்கு கேஸ்ல ஜியா தான் ஜெய்ப்பா. சமீருக்குக் கண்டிப்பா தண்டனை கிடைக்கும். ஜியாவை தப்பா பேசுன எல்லாரும் கூனி குறுகி நிற்பாங்க.” என்று நம்பிக்கையாகப் பேச, 

ஆதர்ஷ், “அந்தச் சுஜித்தை நீ எப்படி நம்புறனு எனக்குச் சத்தியமா தெரியல. அவன் கண்டிப்பா நமக்கு ஆதரவா சாட்சி சொல்ல மாட்டான்.” என்ற ஆதர்ஷைத் தொடங்கி அனைவரும் இதையே கூற, 

தியா, “சரி அவனை ஏன் நம்புற, அதுக்குக் காரணம் சொல்லு?” என்று கேட்க,

சுஜித் தன்னை வந்து சந்தித்தது, ஜியாவுக்கு உதவி செய்வதாக வாக்களித்தது, ஜீவாவும் வருணும் என்ன செய்வார்கள், எங்கே செல்வார்கள் என்னும் செய்தியை தன்னிடம் கூறியது, அதன் பெயரில் தான் ஜீவாவையும் வருணையும் பழிவாங்கியது, சமீரை பழிவாங்க உதவியது என்று சுஜித் தனக்கு உதவிய அனைத்தையும், தன் மனதிற்குள் எண்ணி பார்த்த ஆஷிக், தியா உட்பட அனைவரையும் பார்த்து,

“உங்க கேள்விக்கு என்கிட்ட பதில் இல்லை, ஆனா அவன் நாளைக்கு சாட்சி சொல்லுவான்.” என்று உறுதியாய் கூறினான். 

பால்கனியில் வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஜியாவின் அருகில் வந்த ஆஷிக், 

“சுஜித் கால் பண்ணினான், சமீர் கண் முழிச்சு ஒரே சத்தமாம். யாரையும் உள்ள விடமாட்டிக்கிறானாம். மறுபடியும் மயக்க மருந்து குடுத்திருக்காம்.”

“ஓ…” எதையோ எண்ணியவாறே வந்தது பதில்.

“என்னாச்சு?”

“எனக்கும் சுஜித் நாளைக்கு கோர்ட்ல உண்மைய சொல்லுவான்னு நம்பிக்கை இல்லை.”

“மத்தவங்களுக்கு எந்த உண்மையும் தெரியாது. ஆனா உனக்கு என்னாச்சு? அவன் மட்டும் சமீர், ஜீவா, வருண் பத்தி சரியான செய்தி குடுக்கலைனா நம்மளால அவங்கள பழிவாங்கிருக்கவே முடியாது.”

“அவன் என்னைக்கோ திருந்திருந்தா இன்னைக்கு இந்தப் பழிவாங்குறதெல்லாம் தேவையே பட்ருக்காதே?”

“அவன் திருந்திட்டான், எல்லாத் தப்பையும் ஒத்துக்கிட்டு ஜெயிலுக்குப் போகத் தயாரா இருக்கான்.”

“நம்பிக்கை இல்லை”

“அவன் திருந்தலைன்னா, ஏன் என்னைப் பார்க்க ஜெயிலுக்கெல்லாம் வரணும்?”

“யாரையும் என்னால நம்ப முடியல ஆஷிக்.”

“நம்பு, எல்லாம் நாளைக்கு நல்ல படியா நடக்கும்.” என்று ஆஷிக் கூறினாலும், ஜியா ஒருவித கவலையிலே இருந்தாள். 

கதிரவன் புலர்ந்த வேளையில் ஆஷிக்கும் ஜியாவும் நீதிமன்றத்திற்குச் செல்வதற்காகத் தயாராகிக் கொண்டிருக்க, அப்பொழுது அங்கே வந்த தியா அவர்களிடம்,

“நியூஸ் பார்த்திங்களா?” என்று ஒருவித பதற்றத்துடன் கேட்க, 

“இல்லை, ஏன்?”

“முதல்ல நியூஸ் பாருங்க.” என்றவாறு நியூஸ் சேனலை ஆன் செய்ய அதில், சமீரின் ஆதரவாளர்கள் அனைவரும் சமீரின் ஹாஸ்பிடலில் அத்துமீறி நுழைந்து, அங்கே அரை மயக்கத்தில் இருந்து தள்ளாடியாவாறு எழுந்து வந்த சமீரை, சரமாறியாகத் தாக்க, போலீஸ்காரர்கள் அவர்களிடம் இருந்து சமீரை மீட்டு கைது செய்து கொண்டு போகும் காட்சி பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. 

இதைத் தொடர்ந்து செய்தியை வாசிப்பவர், “நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்ட டாக்டர் ஜியா வழக்கில் திடீர் திருப்பம். உயிருக்குப் போராடி வருவதாகக் கூறிவிட்டு ஹாஸ்பிடலில் சமீர் மது அருந்தும் காட்சி வெளியீடு. சமீரின் ஆதரவாளர்கள் கொந்தளிப்பு! வீடியோவில் பதிவான சுஜித்தின் வாக்குமூலம், திடுக்கிடும் நிஜங்கள்! 

நேற்று வரை சமீர் குற்றமற்றவர் என்று அவருக்கு ஆதரவு அளித்த அனைவரும், இன்று அதிகாலையில் சமீரின் நண்பர் இந்த வழக்கில், சமீருக்கு ஆதரவாய் சாட்சி கூறிய டாக்டர் சுஜித் வெளியிட்ட வீடியோ காட்சியைத் தொடர்ந்து,

சமீரின் மருத்துவமனைக்கு அத்துமீறி நுழைந்து அவரைச் சரமாரியாகத் தாக்கினர். சுஜித் வெளியிட்ட வீடியோவில், “சமீர் ஹாஸ்பிடல் பெட்டில் அமர்ந்து கொண்டு மது அருந்துவது போலவும், ஜீவாவும் வருணும் மிஸ்டர் ஆஷிக் மீது பொய்யான வழக்குப் பதிவு செய்து, செய்யாத குற்றத்துக்குப் போலீஸில் மாட்டிவிட்டதுக்குச் சமீரிடம் நன்றி தெரிவிப்பது போலவும், 

சமீர் இந்த கேஸ் முடியும் வரை உங்களால எனக்கு வேறு எந்தப் பிரச்சனையும் வர கூடாது என்பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.”

அதைத் தொடர்ந்து சுஜித், “என் பேரு சுஜித் குமார் நான் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர். சமீபத்துல தான் சிறந்த இளம் மருத்துவருக்கான விருதை நான் வாங்குனேன். சமீபத்துல ஜியா, சமீர் மீது கொடுத்த எல்லாம் புகாரும் நிஜம். சமீர், ஜியாவை மானபங்கம் படுத்தும் பொழுது நான் அங்கதான் இருந்தேன். 

ஜியா சொன்னது போல மாளவிகாங்கிற பொண்ண மெடிக்கல் டெஸ்டக்காக, வெளிநாட்ல தடை செய்யப்பட்ட மருந்தை பணத்துக்காக அவளோட உடம்புல செலுத்தி, அவளையும் அவளோட வயித்துல வளர்ந்த குழந்தையையும் நாங்க நாலு பேரும்தான் கொலை பண்ணினோம். 

மாளவிகா மட்டும் இல்லை, மாளவிகாவோட சேர்த்து ஐம்பத்தி ஒன்பது பேரோட உடம்புல புதுப்புது மருந்தை கொடுத்து, டெஸ்ட் பண்ணிருக்கோம். அதுல இருபத்தொரு பேரு ஆண்கள். பத்தொன்பது பேர் பெண்கள். பத்தொன்பது பேர் குழந்தைகள். இதைப் பண்றதுக்கு எங்களுக்குக் கோடிக்கணக்கான பணம் வரும். 

மருந்தை செலுத்துறது மட்டும் எங்களுக்கு வேலை இல்லை, அவங்களோட உடம்புல நடக்குற ஒவ்வொரு மாற்றத்தையும் ரிப்போர்ட்டா நாங்க அனுப்புவோம். இதனால எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது என்பதுக்காக, ஆதரவற்ற நபர்களைத்தான் நாங்க தேர்ந்தெடுப்போம். இது பெரிய நெட்வொர்க். 

இதுல யார் யார் சம்பந்தபட்ருக்காங்கங்கிற லிஸ்ட், என்ன என்ன மருந்து, யார் யாருக்கெல்லாம் கொடுத்திருக்கோம் இப்படி எல்லா டீட்டையில்ஸையும் நான் கமிஷ்னர்கிட்ட கொடுத்துட்டேன். ஜியா ஒரு நல்ல டாக்டர். அவளோட வாழ்க்கைய நாங்கதான் சீரழிச்சிட்டோம். ஜியாக்கு நியாயம் கிடைக்கணும். இந்த அவார்ட தொட்டு பார்க்கிற தகுதி கூட எனக்குக் கிடையாது.” என்று அவர் கூறிய வாக்குமூலமும் பதிவாகி இருக்க, அனைவரும் கொந்தளித்தனர். 

“சமீர் ஒழிக!” என்று ஆங்காங்கே மக்கள் கோஷம் போட தொடங்கினர் என்று நியூஸ் சேனலில் செய்திகள் வெளியாகியது. 

இதைக்கண்ட வீட்டில் உள்ள அனைவரும் ஜியாவுக்கு நியாயம் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்தனர்.

அப்பொழுது ஆஷிக், ஜியாவிடம் தன் அலைப்பேசியை நீட்டி, “சுஜித் வீடியோ கால்ல இருக்கான், உன்கிட்ட தான் பேசணும்னு சொல்றான்.”

“என்கிட்ட என்ன பேசணும்?” என்று தயங்கியவளிடம், பேசுமாறு ஆஷிக் சொல்ல, அலைப்பேசியை வாங்கியவள் எதுவும் பேசாமல் அப்படியே இருக்க சுஜித்,

“நான் உண்மைய ஒத்துக்குவேன்னு நீ நினைச்சுருக்க மாட்டல? எனக்குத் தெரியும் ஜியா, நீ என்னைக்கும் என்னை மன்னிக்க மாட்டன்னு. உன்னோட கோபம் ரொம்ப நியாயமானது. நல்ல டாக்டர் ஆகணும். கஷ்டப்பட்டவங்களுக்கு உதவி செய்யணும்னு நினைச்சு நானும் டாக்டர்க்கு படிச்சேன், ஆனா எல்லாமே மாறி போச்சு. 

பிறக்குறதுக்கு முன்னாடியே என் அம்மாவும் அப்பாவும் நான் டாக்டர்தான் ஆகணும்னு டிசைட் பண்ணிட்டாங்க. டென்த் படிக்கும்போதுல இருந்து நான் ஓடிட்டு இருக்கேன். டென்த்ல நல்ல மார்க் வாங்கணும், அப்போ தான் நல்ல க்ரூப் கிடைக்கும். ட்வெல்த்துல நல்ல மார்க் வாங்கி என்ட்ரன்ஸ்ல ஃபர்ஸ்ட் வரணும், அப்போதான் கவர்மெண்ட் மெடிக்கல் காலேஜ்ல சீட் கிடைக்கும். இப்படி எவ்வளோ… 

நானும் படிச்சேன், ப்ளஸ் டூல தவுசண்ட் ஒன் சிக்ஸ்டி. அஞ்சு மார்க்ல என்ட்ரன்ஸ்ல ஃபர்ஸ்ட் வர முடியல. கவர்மெண்ட் காலேஜ்ல சீட் கிடைக்கல, மெரிட் போச்சு. பிரைவேட் காலேஜ் தான் இருந்தது. அம்பது லட்சம் டொனேஷன் குடுத்தா தான் சீட்ன்னு சொல்லிட்டாங்க. என் அப்பா ஒரு கவர்மெண்ட் எம்ப்ளாய். இப்போ மாதிரி அப்போ கவர்மெண்ட்ல வேலை பார்க்கிறவங்களுக்குச் சம்பளம் கிடையாது. ஒரு பையங்கிறதுனால எனக்குக் குடும்பக் கஷ்டம் தெரியாது. ஆனா அம்பது லட்சம் குடுக்குற அளவுக்கு அப்பாகிட்ட பணம் இல்லன்னு தெரியும். சொத்தையும் அம்மா நகையையும் வித்துப் படிக்க வச்சாரு. பணத்துக்காக அவர் அலைஞ்சது இன்னும் என் கண்ணுக்குள்ள இருக்கு.

உனக்கு ஒன்னு தெரியுமா? ப்ளஸ் டூல ஆயிரத்துக்கு மேல வாங்கின நானும், ஜஸ்ட் பாஸ் பண்ணின சமீரும் ஒரே காலேஜ்ல தான் படிச்சோம். ஆச்சரியமா இருக்குல? நான் அழுதேன்! அப்போ என் உழைப்புக்கு வேல்யுவ் இல்லல? பணம்தான் எல்லாத்தையும் முடிவு செய்யுது. 

சமீருக்கு காலேஜ்ல அவ்வளவு மதிப்பு. அப்பா பெரிய பிஸ்னஸ்மேன். ராஜா மாதிரி இருப்பான். அஞ்சு வருஷ படிப்பு முடிஞ்சதும், நாமளும் இந்த மாதிரி மதிப்பா வாழலாம்னு கனவோட இருந்தேன். 

பெரிய டாக்டரா வரணும்னா எம்பிபிஎஸ் மட்டும் பத்தாது, மேல படிக்கணும்னு சொன்னாங்க. மெரிட்ல படிக்கணும்ங்கிறதுக்காக எம்எஸ்க்குறிய எண்ட்ரன்ஸ் எழுதினேன். 

இரண்டு பேர் ஃபர்ஸ்ட் வந்தோம். மெரிட் சீட் வேணும்னா இருபது லட்சம் கட்டணும்னு சொன்னாங்க. அந்தப் பையன் கட்டிட்டான், என்னால முடியல. அதுக்கப்புறம் எம்எஸ் படிக்கிறதுக்கு அப்பா வீட்டை வித்துப் பணம் குடுத்தாரு. மீதி பணத்தைச் சமீர்தான் எனக்குக் குடுத்தான். 

அங்க படிக்கும் பொழுதுதான் எனக்கும் சமீருக்கும் ஜீவா, வருணுடைய நட்பு கிடைச்சுது. ஒருவழியா முட்டி மோதி படிச்சு வந்தேன். எனக்கு ஒரு ஹாஸ்பிடல்ல வேலை கிடைச்சுது. அந்த ஹாஸ்பிடல் ரொம்ப வித்தியாசமான ஹப்பிட்டல் எப்படின்னா? யாரெல்லாம் நல்லா ட்ரீட்மெண்ட் குடுக்குறாங்களோ, அவங்கள பாராட்ட மாட்டாங்க. 

ஆனா யாரெல்லாம் நல்லா சம்பாதிச்சு குடுக்குறாங்களோ, அவங்கள நல்லா பாராட்டி தள்ளுவாங்க. இன்க்ரீமெண்ட் எல்லாம் உண்டு. பணத்துக்கு இருக்கிற மதிப்பு வேற எதுக்கும் இல்லைன்னு தெரிஞ்சிகிட்டேன். நானும் அவங்கள மாதிரியே மாறினேன். நூறு ரூபாயில குணமாக வேண்டிய தலைவலிக்கு எம்ஆர்ஐ ஸ்கேன், காஸ்ட்லி விட்டமின்ஸ், காஸ்ட்லி சிரப் இப்படி ஏழாயிரம் ரூபா வர ப்ரஸ்க்ரிப்ஷன் எழுதுவேன். 

இப்படி இருக்கும் பொழுதுதான் சமீர் மூலமா எனக்கு அதிகம் பணம் சம்பாதிக்கிற வாய்ப்பு கிடைச்சுது. வெளிநாட்ல இருந்து மருந்து வாங்குறது, அவங்க கூடப் பேச்சுவார்த்தை நடத்துறது எல்லாம் சமீரோட வேலை. வருண் அவனுக்கு ஹெல்ப் பண்ணுவான். பேஷண்ட்ஸ்க்கு மெடிசின் போடுறது என்னோட வேலை. ரிப்போர்ட் அனலைஸ் பண்றது ஜீவா பண்ணுவான். 

கொஞ்ச நாளையிலே நிறையப் பணம் கிடைச்சுது. பாதி மெடிசின்ஸ், டெஸ்ட் பண்ணும் பொழுது சக்ஸஸா இருக்கும். பாதி மெடிசின்ஸ்ல எந்த மாற்றமும் இருக்காது. அதிகப்படியா நாங்க மெடிசின் குடுத்த பேஷன்ஸ்ட்க்கு ஹைபீவர் வரும், இல்லைன்னா ஃபிட்ஸ் வரும். 

ஆனா யாரோட உயிருக்கும் பெருசா ஆபத்து இருந்தது இல்லை. எல்லாம் நல்லாதான் போயிட்டு இருந்துச்சு. அப்போதான், ‘ஹாஸ்ட் டிஆர்’ டெஸ்ட் பண்றதுக்கான ஆர்டர் கிடைச்சுது. வழக்கத்தை விட அஞ்சு மடங்கு அதிகமான பணம் தரேன்னு சொன்னாங்க. பிரச்சனை வருமோன்னு பயந்தேன், வேண்டாம்னு சொன்னேன். 

ஆனா சமீர்தான் இதை மட்டும் வெற்றிகரமா முடிச்சுட்டா, எல்லாரும் செட்டில் ஆகிடலாம்னு சொன்னான். சமீருக்கு சொந்தமா ஹாஸ்பிடல் ஆரம்பிக்கணும்னு ஆசை. அப்பாகிட்ட கேட்டா அவர் சொல்ற மாதிரிதான் பண்ணணும்னு கட்டாயப்படுத்துவார்னு, அவரோட உதவி இல்லாம ஆரம்பிக்கணும்னு நினைச்சான். 

எனக்கு, ஜீவா, வருணுக்கெல்லாம் வாழ்க்கையில நல்லபடியா செட்டில் ஆகணும். சமீர் மாதிரி எங்களுக்குப் பெரிய வசதியெல்லாம் கிடையாது, நாங்க சம்பாதிச்சாதான் உண்டு. ஆக, எங்க எல்லாருடைய தேவையையும் இந்தப் பணம் பூர்த்தி செய்யும். அதனால இதோட பின்விளைவு தெரியாம ஒத்துக்கிட்டோம். சமீருக்கும் வருணுக்கும் இது தடை செய்யப்பட்ட மருந்துனு ஏற்கனவே தெரிஞ்சிருக்கு. ஆனா எனக்கும் ஜீவாவுக்கும் இது தெரியாது. மாளவிகா சாகுறத பார்த்ததுக்கு அப்புறம்தான் எனக்கே தெரியும். 

நான் பயந்துட்டேன். கொஞ்சம் கொஞ்சமா என்னுடைய தப்பு எனக்குப் புரிஞ்சிது. எங்க, டாக்டர் வாழ்க்கையே போயிருமோன்னு பயந்தேன். சமீர்தான் தைரியம் சொன்னான். மாளவிகாவுக்கு யாரும் இல்லாதனால, அவளோட சாவுல பிரச்சனை எதுவும் வரல. நிம்மதியா இருந்தேன், அப்போதான் நீ எல்லாத்தையும் கண்டுபுடிச்ச. 

அன்னைக்கு நைட் சமீர் வீட்டுக்கு வந்து எல்லாத்தையும் சொன்னான். அவனை அடிக்கிற மாதிரி அடிச்சு உன்கிட்ட இருந்து எவிடென்ஸ வாங்க சொன்னான். எனக்கு என்ன பண்றதுனே தெரியலை. அன்னைக்கு என்னுடைய எண்ணம் முழுக்க அந்த எவிடென்ஸ உன்கிட்ட இருந்து வாங்குறதுல தான் இருந்தது. உன்னை விட்றலாம்னு சொன்னேன். சமீர்தான் இப்படியே விட்டா நீ மறுபடியும் ஏதாவது பண்ணுவனு சொல்லி உன்னை வீடியோ எடுத்தான். அதுக்கப்புறம் நான் அவங்கள விட்டுட்டு தனியா வந்துட்டேன். 

ஒரு வருஷம் கழிச்சு லண்டன்ல உள்ள மெடிக்கல் கான்ஃப்ரன்ஸ்ல சமீரைப் பார்த்தேன். அவன் வருண் கூட ஃபோன்ல உன்னைப் பத்தி பேசிட்டு இருந்தான். எதுவும் தெளிவா இல்லை. 

நான் வருணுக்கு கால் பண்ணினேன், குடிச்சுருந்தனால அவன் ஜீவா உன்னைச் சந்திச்சத பத்தியும், நீ ஏர்போர்ட்ல வேலை பார்க்கிறத பத்தியும் என்கிட்ட சொன்னான். உன்னைப் பார்த்து விஷயத்தைச் சொல்றதுக்காக உன் அட்ரஸ வாங்கினேன். உன் வீட்டுக்கு வந்தேன், அதுக்கப்புறம் நடந்தது எல்லாம் உனக்குத் தெரியும். 

இதெல்லாம் என்னை நியாயப்படுத்த சொல்லல. என்ன இருந்தாலும் நான் தப்பு பண்ணினது பண்ணினது தான், மாத்த முடியாது. தப்பு நடக்கும் பொழுது தட்டி கேட்காம இருக்கிறத விடப் பெரிய தப்பு எதுவும் கிடையாது. 

ஆனா எல்லார் முன்னாடியும் என் தப்ப ஒத்துக்கிற அளவுக்கு எனக்குத் தைரியமும் இல்லை. அதான் என் ஸ்டேட்மெண்டை ரெக்கார்ட் பண்ணி போலீஸ்கிட்ட குடுத்துட்டு, என் பாவத்துக்கு நானே தண்டனை குடுத்துக்கப் போறேன். மாளவிகாவோட குழந்தை மூச்சு திணறி செத்த மாதிரியே நானும் மூச்சு திணறி சாகப் போறேன். எல்லாருக்கும் தெரிஞ்ச டாக்டர் சுஜித்தாவே, நான் இந்த மண்ணை விட்டுப் போகப் போறேன். 

ஜியா, நான் அப்பாவாகப் போறேன். நான் செத்து போய்ட்டா நான் செஞ்ச பாவம் என் குழந்தையையும் என் மனைவியையும் ஒன்னு செய்யாதுல?” என்றும் சொல்லும் பொழுதே, சுஜித்தின் கண்கள் கலங்கியது, வார்த்தைகள் தடுமாறியது. 

“முடிஞ்சா என்னை மன்னிச்சுரு ஜியா!” என்று ஜியாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, அழைப்புக்கு முடிவு கட்டினான், தனக்கும்தான்! 

சுஜித்தின் அழைப்பு துண்டிக்கப்பட்ட மறுநொடி ஜியா, ஆஷிக்குடன் முடிந்த அளவு வேகமாகச் சுஜித்தின் இல்லத்திற்கு வந்தாள். அவள் அங்கு வந்த நேரம் அவன் தன் ஜீவனை இழந்திருந்தான். 

அவன் வாயில் நுரை தள்ளி அவன் கிடந்த கோலம் அவளது நெஞ்சை அடைத்தது. அவளை அறியாமலே அவளது விழிகளில் இருந்து வழிந்த கண்ணீர் அவனது நெற்றியில் விழுந்து தெறித்தது. 

அவனது தாயும் தந்தையும் மனைவியும் கதறி அழுதனர். அவர்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவதென்று அவளுக்குத் தெரியவில்லை. அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல், ஆஷிக்கின் மார்பில் சாய்ந்தபடி அங்கிருந்து சென்றாள். 

தன் தாய், தந்தை என்று யாரையும் பார்க்க விரும்பாத சமீர், தன்னைத் தானே வெறுத்து, தகர்க்கப்பட்ட கோபுரம் போலக் கம்பீரமற்று கூனி குறுகி பித்துப்பிடித்தவன் போல் ஆனான். 

ஜியாவை கற்பழித்துச் சித்திரவதை செய்த குற்றத்திற்கு, அவனுக்குப் பத்து வருடங்கள் கடுங்காவல் தண்டனை அளித்த நீதிபதி, தவறான தடை செய்யப்பட்ட மருந்துகளை நோயாளிகளுக்குச் செலுத்தியதாக அவன் மீது சுமத்தப்பட்ட புகாரை, தீர விசாரித்து இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு போலீசுக்கு உத்தரவு பிறப்பித்தார்

***

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!