இத்தனை நாட்களாக விடாமல் வீசிய புயல் ஓய்ந்ததில் வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாய் இருந்தனர். ஆஷிக்கும் ஆதர்ஷும் எதையோ பற்றிப் பேசி சிரித்துக் கொண்டிருக்க,
“என்னடா சிரிப்புச் சத்தம் எல்லாம் பயங்கரமா இருக்கு, என்ன விஷயம்?” என்றவாறு வந்த ரோஹித்திடம்,
ஆதர்ஷ் புன்னகையோடு, “இல்லை, எனக்குக் குழந்தை பிறந்தா ஆஷிக்கும் நீயும் என்ன முறை வருவீங்கன்னு கேட்டேன். இவன் சொன்னான் நீ பெரியப்பா, அவன் சித்தப்பான்னு. அதான் சிரிப்பா இருந்துச்சு…” என்று சொல்ல,
கடுப்பான ரோஹித், “ஆமாடா உன் குழந்தைக்கு நான் பெரியப்பா, இவன் குழந்தைக்கு நான் சித்தப்பா. தியா குழந்தைக்கு நான் மாமா, அப்புறம் மேல சொல்லுங்க. ஆனா கடைசி வரைக்கும் என்னை அப்பாவா மட்டும் ஆக விட்றாதீங்க…” என்று முணுமுணுக்க,
“அதெல்லாம் ஆடி போய் ஆவணி வந்தா நீ டாப்பா ஆகிடுவ…!” என்று ஆதர்ஷ் வம்பிழுக்க,
அங்கு எதேர்ச்சையாக வந்த சரண்யா வாய்விட்டே சிரித்து விட, அவ்வளவு தான் போயும் போய் இவ முன்னாடி அசிங்கப்பட்டுட்டோமே, ‘ச்ச…’ என்ன நினைச்சுருப்பா என்று எண்ணியவன், தன்னை பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த ஆதர்ஷையும் ஆஷிக்கையும் பார்த்து முறைத்துவிட்டு, அங்கிருந்து செல்ல சரண்யாவுக்கு என்னவோ போல் ஆனது.
அவளது முக மாற்றத்தை உணர்ந்து கொண்ட ஆஷிக், “ஏய் சரண், அவன் அப்படித்தான். சட்டுன்னு கோபம் வரும், ஆனா சரியாகிருவான். அவனோட கோபம் பால் பொங்குற மாதிரி, ரெண்டு செகண்ட் கூடத் தாக்கு புடிக்காது.”
“சரி மாம்ஸ், நான் சும்மாதான் இங்க வந்தேன், நீங்க பேசிட்டு இருங்க.” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றவளின் விழிகள் ரோஹித்தைத் தேடி வட்டமிட்டது.
ஓரமாக இருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு அலைபேசியைப் பார்த்து கொண்டிருந்தவனின் அருகில், ஒருவித தயக்கத்தோடு சென்றவள்,
“ஹுக்கும்…” என்று செரும, எட்டிப்பார்த்தவன் அவளைக் கண்டதும் அங்கிருந்து செல்ல போக,
“ஹலோ…!” என்று அவனை அழைக்க, அவள் பக்கம் திரும்பிப்பார்த்தவன், “என்ன?” என்று கேட்டான்.
“சாரி, நான் வேணும்னே சிரி…” என்று அவள் மேலும் தொடர்வதற்குள்,
“இட்ஸ் ஓகே!” என்றவன் அங்கிருந்து செல்ல,
“ஒரு நிமிஷம்!” என்று அவள் அவனை மீண்டும் அழைக்க,
“என்ன?” என்று மீண்டும் புருவம் உயர்த்தியவனிடம்,
“தேங்க்ஸ்… அக்காக்கு ஹெல்ப் பண்ணினதுக்கு…” என்று தன் கரங்களைப் பிசைந்தவளைப் பார்த்து, லேசாய் தன் உதட்டுக்கு வலிக்காமல் புன்னகைக்க,
மேலும் தொடர்ந்த சரண்யா, “எனக்குப் புரியுது உங்க கஷ்டம். இவ்வளவு வயசாகியும் உங்களுக்கு மட்டும் கல்யாணம் ஆகலைன்னா, கஷ்டமாதான் இருக்கும்.” என்றதும் கடுப்பானவன், ஒருவித கோபத்தோடு அவள் அருகில் வந்து,
“என்ன வயசானவனா? என்னை பார்த்தா உனக்கு எப்படி இருக்கு?” என்று தன் கைகளை உயர்த்திக் கொஞ்சம் கோபமும் எரிச்சலும் கலந்தவாறு கேட்க,
திடீரென்று அவன் நெருங்கி வந்து கணீர் குரலில் அப்படிக் கேட்டதும் திடுக்கிட்டவள், என்ன சொல்வதென்று விளங்காமல்
“சாரி சாரி… நான் அந்த அர்த்தத்துல சொல்லல. நீங்க அழகாதான் இருக்கீங்க…” என்று மிரண்டு போய் பார்த்தவளிடம்,
“அது என்ன ‘தான்ன்னு’ அழுத்தி சொல்ற?” என்று தன் புருவத்தை உயர்த்திக் கேட்க,
“இல்லை… அழகா இருக்கீங்க!” என்று அவள் தன் தலையை ஆட்டியவாறே அவசரமாகக் கூற, அவளது முகப் பாவம் அவனை அறியாமலே அவனுக்குப் புன்னகையைத் தர, சிரமப்பட்டு அடக்கிக்கொண்டவன்,
“என்ன?” என்று தன் புருவம் உயர்த்திக் கேட்க,
“என்கூட ஒரு கப் காஃபி சாப்பிடுறீங்களா?” என்று தன் மனதில் உள்ளதை வாய்விட்டு கேட்டவள், அவன் என்ன சொல்ல போகிறான் என்று ஒருவித தயக்கத்தோடு நிற்க, அவளது முகப் பாவத்தை ரசித்தவன் ஒருவித தீவிரமான முகத்துடன்,
“என் அப்பாகிட்ட சொல்லிருவேன்…” என்று சொல்ல, ரோஹித் தன்னைச் சீண்டுகிறான் என்பதை அறிந்த சரண்யா,
“உங்க அப்பாக்கெல்லாம் எனக்குப் பயம் இல்லை கேப்டன்!” என்று தன் புருவம் உயர்த்திப் பதிலுக்கு அவள் கேலி செய்ய, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தனர்.
இப்படி அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க, ஜியா மட்டும் குழப்பத்தில் இருந்தாள். வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியோடு உறவாடி கொண்டிருந்த நேரம், ஜியா மட்டும் தன் அறையின் பால்கனியில் நின்றவாறு எதையோ பற்றித் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள்.
அவளது மனதில், ‘இனி அடுத்து என்ன?’ என்கின்ற கேள்வி விடாமல் எழுந்து கொண்டே இருந்தது.
ஜியாவைப் பற்றி நன்றாக அறிந்த யாராக இருந்தாலும், ‘அவளது குழப்பமான முகம், நான் ஒரு விஷயத்தைப் பற்றித் தீவிரமாக யோசிக்கிறேன் என்று சுட்டி காட்டும் கண்கள்’ இவ்விரண்டையும் பார்த்த கனமே, அவள் மகிழ்ச்சியாக இல்லை என்பதைக் கூறிவிடுவர்.
அவளை இன்னும் ஆழமாய் அறிந்தவர்களாயின், அவள் என்ன யோசிக்கிறாள் என்பதையும் புரிந்து கொள்வார்கள்.
அதனாலோ என்னவோ ஆஷிக் இன்று ஜியாவின் அருகில் வரவே இல்லை. முடிந்த வரை, தனிமையில் அவளைச் சந்திப்பதை தவிர்த்தே வந்தான். அனைவரும் கீழே அமர்ந்து மகிழ்ச்சியோடு உறவாடி கொண்டிருக்க, ஜியா மட்டும் அங்கே இல்லை என்பதை அறிந்த மறுநொடியே ஆஷிக் அறிந்து விட்டான், தனக்காக என்ன காத்திருக்கின்றது என்பதை!
கீழே இருந்தே தன் அறையைப் பார்த்து நீண்ட பெருமூச்சு விட்டவன், ‘எவ்வளவோ நடந்து போச்சுல? எல்லாமே முடிஞ்சு போச்சுல? இனிமே என்ன இருக்கு? என்னால எவ்வளவு கஷ்டம். மொத்த குடும்பத்துக்கும் தலை குனிவு. உன்னை ரொம்பக் கஷ்ட படுத்திட்டேன். நான் முன்னாடியே என்னைக் கல்யாணம் பண்ணிக்காத, கஷ்டத்தை மட்டும் தான் உனக்குக் குடுப்பேன்னு சொன்னேன். நீதான் கேக்கலை. நான் ஒரு அதிர்ஷ்டம் கெட்டவ ஆஷிக்.
இப்போ நான் ஒரு முடிவு பண்ணிருக்கேன். நீ நல்லவன், உன்னை மாதிரி ஒரு ஆம்பளை கிடைக்க எந்தப் பொண்ணும் குடுத்து வச்சுருக்கணும். உனக்குப் பொருத்தமான ஒரு பொண்ணா பார்த்து நீ கல்யாணம் பண்ணிக்கோ, அதுதான் உனக்குச் சரி. நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். எங்கையாவது போயிடுறேன். இதுதான் ரெண்டு பேருக்கும் நல்லது.
உன் கூட வாழுற தகுதி எனக்குச் சுத்தமா கிடையாது.’ இப்படி ஒவ்வொரு வரியையும் தன் மனதிற்குள் சொல்லிப்பார்த்தவன்.
‘மனசுல நான் சும்மா சொல்லிப் பார்த்ததுக்கே இப்படி இருக்கே. இதை இவ ஏங்கி ஏங்கி அழுதுட்டே சொல்லுவாளே? இன்னைக்கு மட்டும் இவ புலம்பட்டும், நான் யாருன்னு காட்டுறேன்!’ என்று நொடி பொழுதில் பொங்கியவன், முகத்தில் எதையும் காட்டிக்காது அறைக்குள் நுழைந்தான்.
நுழைந்தவனின் பார்வை ஜியாவைத் தேடி வட்டமிட, அவள் அறையில் இல்லை என்றதுமே பாதிப் புரிந்து கொண்டவனின் பார்வை பால்கனியின் பக்கம் திரும்ப, அவள் குறுக்கே உள்ள கம்பியை பிடித்துக் கொண்டு நின்ற விதம் அவனது மூளைக்கு முழு உண்மையையும் புரிய வைக்க, ஊமையாய் அழுதவாறு அவளது அருகில் சென்று நின்றான்.
“வந்துட்டியா ஆஷிக்? ரொம்ப நேரமா காத்துகிட்டு இருந்தேன்.”
அவளது, ‘காத்துகிட்டு இருந்தேன்’ என்ற வார்த்தைக்குரிய அர்த்தம் புரிந்தவனுக்கு, கோபம் போட்டிபோட்டுக் கொண்டு வந்தது.
“அப்படியா! நான், நீ தூங்கிருப்பியோனு நினைச்சேன்.” என்று அவன் கூறவும் அவள் வெறுமையாய் சிரிக்க, அந்தச் சிரிப்பிலே நிலை குலைந்தவனிடம் அவள் மேலும்,
“இவ்வளவு நடந்ததுக்கு அப்புறம் தூக்கம் எப்படி ஆஷிக் வரும்?” போட்ட முதல் பாலிலே அடித்தான் சிக்ஸர். அவன் எதோ பேச வாயெடுக்க,
மீண்டும் விரக்தியோடு, “எல்லாமே முடிஞ்சு போச்சுல! இனிமே என்ன இருக்கு? என்னால எவ்வளவு கஷ்டம்? மொத்த குடும்பத்துக்கும் தலை குனிவு. உன்னை ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன்ல?” தொடர்ந்து போட்ட அத்தனை பந்தும் சிக்ஸர் தான்.
‘ஆஹா ஆரம்பிச்சுட்டாளே! நெக்ஸ்ட் வாட்டர் ஃபால்ஸ் தான்!’ என்று அவன் எண்ணிய மறுநொடி, கண்களில் இருந்து கண்ணீர் கரைபுரண்டு ஓடியது. ஏங்கி ஏங்கி அழுதவாறே ஜியா,
“நான் முன்னாடியே என்னைக் கல்யாணம் பண்ணிக்காத, உனக்குக் கஷ்டத்தை மட்டும் தான் உனக்குக் குடுப்பேன்னு சொன்னேன், நீதான் கேக்கலை. நான் ஒரு அதிர்ஷ்டம் கெட்டவ ஆஷிக்.” அவளது கண்களில் வழிந்த கண்ணீர் அவனை எதோ செய்ய,
“அப்படி எல்லாம் இல்லை…” என்று ஆறுதல்படுத்த ஆரம்பித்தவனிடம், ‘வேண்டாம்!’ என்பது போல் தன் கரத்தை உயர்த்திக் காட்டியவள் மேலும் தொடர்ந்து,
“இப்போ நான் ஒரு முடிவு பண்ணிருக்கேன். நீ நல்லவன், உன்னை மாதிரி ஒரு ஆம்பளை கிடைக்க எந்தப் பொண்ணும் குடுத்து வச்சுருக்கணும். உனக்குப் பொருத்தமான ஒரு பொண்ணா பார்த்து நீ கல்யாணம் பண்ணிக்கோ, அதுதான் உனக்குச் சரி. நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன், எங்கையாவது போயிடுறேன். இதுதான் ரெண்டு பேருக்கும் நல்லது. உன்கூட வாழுற தகுதி எனக்குச் சுத்தமா கிடையாது.” என்று விடமால் வடிந்த கண்ணீரைத் துடைத்தவாறே கூற,
“அந்த மாதிரி எல்லாம் எதுவும் இல்லை. நீ என் வாழ்க்கையில வந்ததை என் வரம்னு நான் சொல்லிட்டு இருக்கேன், நீ என்னன்னா இப்படிப் பேசுற?” என்று சமாதனம் செய்ய முயற்சித்தும், ஜியா வழக்கம் போலச் சொன்னதையே சொல்லி அழ கடுப்பானவன் மனதிற்குள்,
‘சாரிடி, நீ அழுதுட்டு இருக்க. உனக்கு இன்னைக்கு ஆறுதல் சொல்ல முடியலை. இப்போ நான் உனக்கு ஆறுதல் சொல்லி விளக்கம் குடுத்தேன், நீ இப்படித்தான் அப்போ அப்போ புலம்புவ. அது நடக்காது, என்ன ஆனாலும் சரி… இனிமே என்னை விட்டுட்டு போறேன்னு நீ சொல்ல கூடாது. இப்போ நான் சொல்ல போறது உனக்குக் கஷ்டமா தான் இருக்கும் ஆனா சாரி…’ என்று எண்ணியவன்,
“சரி, இதுதான் உன் முடிவுன்னா நான் என்ன சொல்றது? உன் இஷ்டம்டா. இதைப் பத்தி வீட்ல இப்பவே சொல்லிருவோம். இப்போதான் எல்லாரும் சந்தோஷமா இருந்தாங்க. சரி ஓகே, என்ன பண்றது…?” என்று ஆஷிக் எந்தவித சலனமும் இல்லாமல் கூற,
ஜியாவின் முகம் ஆச்சரியத்தில் விரிந்தது. சோகம் மறைந்து சிறு கோபம் எட்டிப்பார்த்தது.
‘அவ்வளவு தானா!?’ என்றது மனம்.
அவள் முகத்தை வைத்தே மனதை படித்தவன், ‘கொட்டி கிடக்குதுடி. எங்க அதான் விடமாட்டிகிறியே…’ இவ்வாறு மனதிற்குள்ளே கேலி செய்தான்.
“சரி வீட்ல சொல்லிறலாம்.” என்றவாறு கீழே செல்ல போனவனைத் தடுத்தவள்,
“உடனே இல்லை, கொஞ்ச நாள் போகட்டும்.” என்று கூற,
“அப்படி வா வழிக்கு…” என்று தனக்கு மட்டும் கேட்குமாறு கூற, அவன் எதுவும் நினைத்து கொள்வானோ என்று எண்ணி,
“அதாவது வீட்ல பாவம் கஷ்டப்படுவாங்க…” என்று அழகாகச் சமாளிக்க,
‘புருஷனை தவிர எல்லாரையும் பத்தி கவலைப்படு. இரு உன்னை வச்சுக்கிறேன்.’ என்று மனதில் வசைபாடியவன்,
“தென் ஓகே உன் இஷ்டம். சரிடா தூக்கம் வருது.” என்று கூறி கட்டிலில் சென்று அவன் படுத்துக்கொள்ள, அன்றோடு ஜியாவின் தூக்கம் போச்சு.
‘ஆஷிக்கின் விலகலை தானே மனம் எதிர்பார்த்தது, அப்படி இருந்தும் ஏன் இந்த வலி? எனக்கு என்ன தான் வேண்டும்?’ என்றது மனம்! அவளிடம் பதில் இல்லை. தேடினாள், பதில் இல்லை. விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தாள்.
எட்டிப் பார்த்தாள் அசைவில்லை, சீராக வெளிவந்த மூச்சு அவன் உறங்கிவிட்டதை உணர்த்தியது.
எத்தனை நாட்கள் உறக்கமின்றி இருந்திருப்பான். நிம்மதியாக உறங்கினான், சிகையை மென்மையாய் கோதினாள்.
‘என்னை விட்டா பிரிந்து செல்வேன் என்கிறாய்’ கேட்டது அவனது குழந்தை முகம். கட்டுப்பாட்டையும் மீறி வந்த உணர்ச்சியில் தன்னவனின் நுதலில் இதழ் பதித்தவள், அறையை விட்டு வெளியேறினாள். உறக்கத்தில் ஜியா தன் அருகில் இல்லாததை உணர்ந்த ஆஷிக்,
“எங்கடி போன?” என்று கடிந்துக் கொண்டவன் அவளைத் தேடி வெளியே வர, அப்பொழுது ஆயிஷாவின் அறையில் லைட் எரிவதை பார்த்தவன் ஒருவித யோசனையோடு வந்து கதவைத் தட்டப்போக, அப்பொழுது உள்ளே ஆயிஷா அழும் குரல் கேட்டு கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.
ஆஷிக்கைக் கண்டதும் ஆயிஷா தன்னை இயல்பாக இருப்பது போல காட்டிக்கொள்ள,
அவளது மனதை படித்தவன், “சமீரை நினைச்சு அழுதுட்டு இருக்கியா?” என்று கேட்க, கட்டுக்குள் இருந்த கண்ணீர் கரையை மீறி வர, ஆஷிக்கின் தோள் மீது சாய்ந்து அழ தொடங்கினாள்.
ஆதரவாய் அவளது சிகையை வருடியவன் அவள் அழுது முடிக்கும் வரை காத்திருந்தான். அழுகை குறைந்த நிலையில், “சமீர் நல்லவன் இல்லை ஆயிஷா.”
“அதான் ஏன்? நான் என்ன தப்பு பண்ணினேன்? சமீர் ஏன் நல்லவனா இல்லை? ஏன் அவன் கெட்டவனா இருந்தான்? ஏன் இப்படி ஒரு காரியத்தைப் பண்ணினான்?” உடைந்து மீண்டும் வெடித்தாள்.
“அவனை நினைச்சு நீ அழுறதை கண்டிப்பா என்னால ஏத்துக்க முடியாது.”
“இதுல என் தப்பு என்ன இருக்கு?”
“உன் அன்புக்கு தகுதி இல்லாதவங்க மேல அன்பு வைக்கிறது உன் முட்டாள் தனம். அதைவிட்டு வெளியே வராம இப்படி அழுதுட்டு இருக்கிறது நிச்சயமா உன் தப்புதான். நியாயப்படி நீ சந்தோஷப்படணும், நல்லவேளை உன் கல்யாணத்துக்கு முன்னாடி அவனைப் பத்தின உண்மை தெரிஞ்சு போச்சு.
இல்லைன்னா கொஞ்சம் நினைச்சு பாரு, இப்போ நினைச்சாலும் கஷ்டமா இருக்கு. ஆயிஷா, மனுஷங்க சிலநேரம் கெட்டவங்களா இருக்கிறது சகஜம். ஆனா கெட்டது மொத்தமா மனுஷ ரூபத்துல இருந்தா என்ன பண்றது?
சமீர் கூட அந்த மாதிரி தான். அவனுக்காக நீ அழுதனா அதை விட முட்டாள் தனம் வேற எதுவும் இல்லை. வாழ்க்கை குடுத்த முதல் அடி. இதுல கத்துக்க வேண்டியது நிறையா இருக்கு. மனுஷங்களை படி. நான் சொல்றேன், அப்பா, அம்மா சொல்றாங்கன்னு எதையும் செய்யாத. உன் மனசு சொல்றத கேளு.
இப்படியே இருக்காத. பேசாம நீ ஏன் கொஞ்ச நாள் லா ப்ராக்ட்டிஸ் பண்ண கூடாது? உனக்கு ஒரு நல்ல சேஞ்சா இருக்கும். இன்னும் நிறைய மனுஷங்கள பார்ப்ப, உனக்கும் ஒரு தைரியம் வரும். நான் சொல்றேன்னு இல்லை, நீயே யோசிச்சு சொல்லு. நானே நல்ல லாயரா பார்த்து உன்னைச் சேர்த்து விடுறேன்.”
“ம்ம்… சரி ஆஷிக்.” என்று லேசாகத் தன் தலையை ஆட்டினாள்.
“எதுனாலும் நீ என்கிட்ட ஷேர் பண்ணலாம்.” என்றவன், அவள் உறங்கும் வரை அருகிலே அமர்ந்து அவளது சிகையைக் கோதிவிட்டு, அவள் உறங்கிய பிறகு தன் அறைக்கு வந்தான்.
அங்கே இன்னொரு ஜீவன் உறங்காமல் கண்களை மட்டும் உருட்டி உருட்டி பார்த்துக் கொண்டிருந்தது.
***
