10
கல்யாணம் முடிந்து கோவிலை விட்டு கீழே இறங்கியதும், கணேசன் அவர்களை ஒரு பிரம்மாண்டமான ஆந்திரா உணவகத்திற்கு அழைத்துச் சென்றான். ஆந்திரா என்றாலே காரமும், உபசரிப்பும் பிரபலம். அதுவும் ஒரு நண்பனின் திருமண விருந்து என்றால் கேட்கவா வேண்டும்?
உணவகத்தின் ஒரு தனிப்பகுதியில் நீண்ட வாழை இலைகள் விரிக்கப்பட்டன. கணேசன் ஓடி ஓடி உபசரித்துக் கொண்டிருந்தான்.
“டேய் சந்துரு, இது ஆந்திரா மச்சி! இங்க சாப்பாடுங்கிறது வெறும் பசிக்கு இல்லை, அது ஒரு கௌரவம். யாழினி தங்கச்சி, பயப்படாம சாப்பிடுங்க,” என்று கணேசன் உற்சாகப்படுத்தினான்.
இலையில் முதலில் நெய்யும், பருப்புப் பொடியும் வைக்கப்பட்டன. தொடர்ந்து ஆவி பறக்கும் சாதம்.
“அண்ணா… இது என்ன கலர் கலரா இருக்கு?” என்று யாழினி ஒரு சிவப்பு நிறச் சட்னியைப் பார்த்து ஆச்சரியமாகக் கேட்க,
சந்துரு சிரித்துக்கொண்டே, “அதுதான் ஆந்திராவோட பேமஸ் ஆவக்காய் ஊறுகாய். தொட்டுப் பாரு, அப்புறம் தெரியும் அதோட பவர்,” என்றான்.
யாழினி ஆர்வத்துடன் ஒரு துண்டு ஊறுகாயை வாயில் வைக்க, அடுத்த நொடியே அவளது கண்கள் விரிந்து, முகம் சிவந்தது. “ஐயையோ… காரம்! அண்ணா … தண்ணி… தண்ணி!” என்று அவள் தவிக்க,
சந்துரு பதறிப்போய் தண்ணீர் கொடுக்க முயன்றான்.
ஆனால் கணேசன் குறுக்கிட்டு, “தண்ணி குடிக்காத தங்கச்சி, இந்தா இந்தத் தயிரை சாப்பிடு!” என்று ஒரு கிண்ணம் கெட்டித் தயிரை நீட்டினான்.
“ஏய் யாழி, ஒரு சின்ன ஊறுகாய்க்கே இப்படிப் பயந்தா எப்படி? இன்னும் கோங்குரா மட்டன் வரப்போகுது, அதையெல்லாம் சாப்பிட்டா நீ அப்படியே விசாகப்பட்டினம் பீச்ல போய் விழுந்துடுவ போல இருக்கே?” என் சந்துரு அவளைக் கிண்டல் செய்ய
யாழினி காரத்தை அடக்கிவிட்டு, “உங்களுக்குச் சிரிப்பா இருக்கா? இருங்க… உங்களுக்கு ஊட்டி விடுறேன்,” என்று சொல்லி, ஒரு பிடி சாதத்தில் நிறையக் காரமான ஊறுகாயை மட்டும் கலந்து, சந்துருவின் வாயருகே கொண்டு சென்றாள்.
“வேண்டாம் யாழி… எனக்குத் தெரியும் அது எவ்வளவு காரம்னு,” என்று சந்துரு தப்பிக்க முயல,
“சாப்பிடுங்க புருஷன் சார்… இது மனைவி கொடுக்கிற முதல் உருண்டை!” என்று அவள் கட்டாயப்படுத்த…
சந்துரு வேறு வழியின்றி அதைச் சாப்பிட, அவனது நெற்றியிலும் வேர்வை அரும்பியது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொள்ள, காரத்தின் சூட்டிலும் காதலின் சிலிர்ப்பிலும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க..
“டேய் சந்துரு, போதும்டா… பொண்டாட்டி ஊட்டி விட்டதுல காரமே தெரியாம தின்னுட்டு இருக்க! ஆனா எனக்குத் தெரியும் அது எவ்வளவு உறைக்கும்னு. முடிச்சாச்சில வாங்க கிளம்பலாம்,” என்று கணேசன் அவர்களைக் கலைத்தான்.
அவர்கள் அங்கிருந்து கணேசன் ஏற்பாடு செய்திருந்த அந்தப் புதிய வீட்டிற்குத் திரும்பினார்கள்.
வீட்டுக்குள் நுழைந்ததும் யாழினிக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. வீட்டின் ஒரு அறை முழுவதும் கணேசன் மிக அழகாக அலங்கரித்திருந்தான். வாசலில் மல்லிகைப் பூக்கள் தோரணமாகத் தொங்க, அறைக்குள்ளே மெழுகுவர்த்திகளின் மங்கலான வெளிச்சம் ஒரு மர்மமான அழகைத் தந்தது. படுக்கை முழுவதும் ரோஜா இதழ்கள் தூவப்பட்டிருக்க, ஒரு ஓரத்தில் ஒரு கண்ணாடித் தட்டில் பாலும் பழங்களும் வைக்கப்பட்டிருந்தன.
கணேசன் சந்துருவின் தோளில் தட்டி, “மச்சி, ஒரு நண்பனா என் கடமையை முடிச்சுட்டேன். இனிமே எல்லாம் உன் கைல தான். ஆல் தி பெஸ்ட்!” என்று கண்ணடித்துவிட்டு அங்கிருந்து நழுவினான்.
சந்துரு மெதுவாக அறையின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். யாழினி ஜன்னல் ஓரம் நின்று வெளியே தெரிந்த விசாகப்பட்டினம் நகரின் விளக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது பட்டுப்புடவையின் ஜரிகை அந்த மெழுகுவர்த்தி ஒளியில் மின்னியது.
சந்துரு பின்னால் இருந்து மெல்ல அவளருகே சென்றான். அவனது நிழல் அவள் மேல் பட்டதும் யாழினி சட்டென்று திரும்பினாள். அவளது முகம் இப்போது சிவந்து போயிருந்தது. அந்தத் துறுதுறுப்பான யாழினியா இது என்று சந்துருவுக்கே ஆச்சரியமாக இருந்தது.
“ஏன் யாழி… இப்போ பேச்சு மூச்சைக் காணோம்? ஹோட்டல்ல காரம் ஜாஸ்தின்னு கத்தினது யாரு?” என்று அவன் அவளது முகவாயைத் தொட்டு மெல்ல நிமிர்த்திக் கேட்க, “அது… அது வந்து… அப்போ பசிச்சது, இப்போ ஏனோ ஒரு மாதிரி நடுக்கமா இருக்கு,” என்று அவள் அவனது சட்டையைப் பிடித்துக் கொண்டு முணுமுணுத்தாள்.
சந்துரு அவளருகே இன்னும் நெருங்கிச் சென்றான். அவனது இதயத்துடிப்பு அவனுக்கே தெளிவாகக் கேட்டது. “யாழி…” என்று அவன் அழைத்த அந்த ஒரு வார்த்தையில், அவனது மொத்தக் காதலும் கரைந்திருந்தது.
அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அந்த மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அவளது கண்கள் ஈரமாக மின்னின. சந்துரு மெதுவாகத் தன் கைகளை உயர்த்தி, அவளது நெற்றியில் விழுந்திருந்த ஒரு சிறு கற்றை முடியை ஒதுக்கிவிட்டான். அவனது விரல்கள் அவளது நெற்றியைத் தீண்டிய அந்த நொடி, யாழினியின் உடலில் ஒரு மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. அவள் மெல்லக் கண்களை மூடிக்கொண்டாள்.
“பயமா இருக்கா?” என்று சந்துரு ரகசியமாகச் கேட்க, “பயம் இல்ல புருஷா … ஆனா இது கனவா இல்ல நிஜமான்னு ஒரு நடுக்கம்…” என்று அவள் முணுமுணுத்தாள்.
சந்துரு அவளது இரு கைகளையும் தன் கைகளுக்குள் பொத்திக் கொண்டவன் அதில் தன் இதழ்களைப் பதித்தான். அந்த முதன்முதல் ஸ்பரிசம், ஆயிரம் வார்த்தைகள் சொல்லாத அன்பை அவர்களுக்குள் கடத்தியது.
யாழினி மெல்லத் தன் தலையை அவன் அகன்ற மார்பில் சாய்த்துக் கொண்டாள். அவனது இதயத்துடிப்பு சீராகவும் பலமாகவும் ஒலித்தது. அது அவளுக்கு ஒரு பெரும் பாதுகாப்பைக் கொடுத்தது. சந்துரு அவளைத் தன் கைகளால் இறுக அணைத்துக் கொண்டான். வேட்டையாடத் துடிக்கும் ஒரு சிங்கம், ஒரு மலரைத் தீண்டுவதைப் போல அவ்வளவு மென்மையாக இருந்தது அவனது அணைப்பு.
ஜன்னல் வழியே உள்ளே நுழைந்து குளிர்ந்த காற்று, அவர்களின் நெருக்கத்தைத் தூண்டியது. சந்துரு அவளது கன்னத்தை வருடி, அவளது கண்களை ஆழமாகப் பார்த்தான். அந்தப் பார்வையில் காமம் இல்லை, மாறாக, அவளைத் தன் உயிராகப் போற்றும் ஒரு உன்னதமான உறுதி இருந்தது.
யாழினி தன் விரல்களைக் கோர்த்துக்கொண்டு தரையையேப் பார்த்துக் கொண்டிருக்க, சந்துரு அவளது முகத்தை மெல்ல நிமிர்த்தினான். “யாழி… இங்க பாரு,” என்றான் மிக மென்மையான குரலில்.
அவள் இமைகளை உயர்த்தி அவனைப் பார்த்தபோது, அந்தப் பார்வையில் இருந்த காதலின் ஆழம் அவனைச் சுணங்க வைத்தது. சந்துரு சட்டென்று அவளது மூக்கு நுனியைத் தன் விரலால் தட்டியவன்.
“என்ன இப்படிப் பார்க்கிற? மறுபடியும் ஏதாவது கிண்டல் பண்ணப் போறியா?” என்று அவன் கேட்க, யாழினி மெலிதாகச் சிரித்தாள்.
“இல்ல… என் புருஷன் இவ்வளவு அமைதியா இருக்கிறதைப் பார்க்கவே ஆச்சரியமா இருக்கு,” என குறும்பு மின்ன சொல்ல .
சந்துரு அவளைத் தன்னிடம் இழுத்து அணைத்துக்கொண்டான். அவளது கழுத்தோரம் அவனது மூச்சுக்காற்று பட்டபோது யாழினி சிலிர்த்துப் போனாள். சந்துரு அவளது காதோரம் குனிந்து, அவளது காது மடலை மெல்ல வருடினான். அந்தச் சின்னஞ்சிறு சீண்டலில் யாழினி அவனது சட்டையை இறுகப் பற்றிக்கொண்டாள்.
அடுத்து அவளது கன்னங்களை மெல்ல வருட, அவளது இதழ்கள் லேசாகப் பிரிந்தன. அவன் மெதுவாகக் குனிந்து அவளது நெற்றியில் ஒரு நீண்ட முத்தத்தைப் பதித்தான். அங்கிருந்து மெல்லக் கீழே இறங்கி, அவளது மூக்கு நுனியிலும், பின் இரு கன்னங்களிலும் இதழ் பதித்து அவளை ஆராதித்தான்.
யாழினி தன் கைகளை அவனது கழுத்தைச் சுற்றிப் பிணைத்துக்கொண்டு, “சந்துரு…” என்று முணுமுணுத்தாள். அந்த அழைப்பில் இருந்த நெருக்கம் சந்துருவை இன்னும் அவளிடம் இழுத்தது. அவன் மெதுவாக அவளது இதழ்களைத் தன் இதழ்களால் சிறைபிடிக்க, ஒரு மென்மையான, ஆழமான முத்தத்தை அவளுக்கு கொடுக்க,
யாழினி வெட்கத்தில் அவன் மார்பில் முகம் புதைத்துக்கொள்ள, சந்துரு அவளை இன்னும் பலமாக அணைத்துக்கொண்டு படுக்கையில் சாய்ந்தான். “உன்னை விட்டு இனி எங்கேயும் போகமாட்டேன் யாழி,” என்று அவன் ரகசியமாகச் சொன்ன அந்த வார்த்தைகளோடு அந்த இரவு அவர்களின் காதலுக்கு மௌன சாட்சியாய் நகர்ந்தது.
காலம் அதன் போக்கில் நகர்ந்தது. இரவு முழுவதும் அவர்கள் ஒருவரை ஒருவர் உணர்ந்து, ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, அந்தப் புதிய பந்தத்தின் மேன்மையில் திளைத்திருந்தனர். அந்த அறையின் மௌனம், அவர்களின் முத்தங்களாலும், மென்மையான அணைப்புகளாலும் நிரம்பியிருந்தது.
மெல்ல இருள் விலக, ஜன்னல் திரைச்சீலைகளின் வழியாக விடியற்காலைச் சூரியனின் முதல் கதிர் உள்ளே எட்டிப் பார்த்தது.
யாழினி, சந்துருவின் தோளில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவளது முகத்தில் ஒரு ஆழ்ந்த அமைதி நிலவியது. சந்துரு கண் விழித்து அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான். விடியல் பிறந்துவிட்டது. இந்தப் புதிய விடியல் அவனுக்கு ஒரு புதிய பலத்தைத் தந்தது.
“விடிஞ்சிடுச்சா சந்துரு?” என்று யாழினி உறக்கக் கலக்கத்தில் கேட்க, “ஆமா யாழி… நம்ம வாழ்க்கையோட மிக அழகான விடியல் இது,” என்றவன் அவளது நெற்றியில் ஒரு நீண்ட முத்தத்தைப் பதித்தவன், அவளை மீண்டும் உறங்கவைத்துவிட்டு, எழுந்து ஜன்னல் வழியாகத் துறைமுகத்தைப் பார்த்தான்.
அவனின் பார்வை எதிரே இருந்த அந்தப் பாழடைந்த அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியை ஊடுருவியது. நிலக்கரித் தூசு படிந்து கறுத்துப்போயிருந்த அந்தச் சுவர்கள், காலத்தின் கோரப்பிடியில் சிதைந்து போயிருந்தன. ஆங்காங்கே மக்கள் நடமாட்டம் தெரிந்தாலும், அந்த இடமே ஒரு மௌனமான சுடுகாடு போலத்தான் அவனுக்குத் தெரிந்தது.
அவனது கண்கள் சரியாக மூன்றாவது மாடியின் ஓரத்தில் இருந்த அந்தச் சிதிலமடைந்த வீட்டை உற்றுப் பார்த்தன. அடுத்த நொடி, காலம் சக்கரமாகப் பின்னோக்கிச் சுழன்றது.
15 ஆண்டுகளுக்கு முன்னால்…
அப்போது சந்துருவுக்கு இருபத்திரண்டு வயது. அதே இருபத்திரண்டு வயது வாலிபனாக ரத்த வெறியுடன் நின்றிருந்தான் ரோலக்ஸ்.
ஆம் …
அறையின் ஓரத்தில் இருந்த சோபாவிற்குப் பின்னால் சந்துரு சுருண்டு பதுங்கிக் கிடந்தான். அவனது கண்கள் மட்டும் வெளியே தெரிய, மிரட்சியுடனும் அதிர்ச்சியுடனும் எதிரே நடக்கும் கோரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். வரண்டாவில் அவனது தாய் ரத்த வெள்ளத்தில் அசைவற்றுத் தரை கிடந்தார். அருகில் அவனது தந்தை, கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
ரோலக்ஸின் கையில் இருந்த கத்தி குருதியால் குளித்திருந்தது. அவனது முகத்தில் தெறித்திருந்த ரத்தத் துளிகளுக்கும் நடுவே, ஒரு விகாரமான புன்னகை தவழ்ந்தது.
சோபாவிற்குப் பின்னால் ஒலிந்திருந்த சந்துருவின் கண்களைச் சட்டென்று ரோலக்ஸ் பார்த்துவிட்டான். பயத்தில் சந்துருவின் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. ஆனால் ரோலக்ஸ் அவனைப் பிடிக்க வரவில்லை. மாறாக, பற்கள் தெரிய ஒரு வெற்றிக் களிப்புடன் சந்துருவைப் பார்த்துச் சிரித்தான்.
“பார்த்துக்கோடா… உன் கண்ணு முன்னாடியே எப்படிச் சிதைக்கிறேன்னு பார்த்துக்கோ!” என்று அவனது மௌனப் புன்னகை சொல்வது போல இருந்தது.
ரோலக்ஸ் மீண்டும் கத்தியை இறுக்கப் பிடித்துக் கொண்டு, உயிருக்குத் துடித்துக் கொண்டிருந்த சந்துருவின் தந்தை மீது பாய்ந்தான்.
சதக்கு… சதக்கு… சதக்கு…
வெறிபிடித்தவனைப் போல அந்த உடலை அவன் கத்தியால் குத்திக் கிழிக்க, பிணத்திலிருந்தும் மிச்சமிருந்த ரத்தம் பீய்ச்சியடித்து ரோலக்ஸின் முகம் முழுவதையும் நனைத்தது. அந்த ரத்தத் துளிகளைத் தன் நாவால் சுவைத்தபடி, அவன் சந்துருவை நோக்கி ஒரு அசுரப் புன்னகையைச் சிந்தினான். பயத்தில் உறைந்து போன சந்துரு, சோபாவிற்குப் பின்னால் இன்னும் ஆழமாகத் தன்னை மறைத்துக் கொண்டான்.
அந்தக் கத்தியின் ஒளியும், சிதறிய குருதியும் இன்றும் சந்துருவின் இமைகளுக்குள் நிழலாடிக் கொண்டே இருந்தன. 15 வருடங்களாக அந்தக் காட்சி அவனுக்குள் ஒரு கனலாக எரிந்து கொண்டிருந்தது.
நினைவுகளின் பாரம் தாளாமல் சந்துருவின் கண்கள் சிவந்து தகித்தன. அவனது உதடுகள், நீரை விட்டுத் தரை விழுந்த மீனைப் போலத் துடித்தன. ஆவேசம் தலைக்கேற, அவன் அந்த விசாகப்பட்டினம் கடற்கரையின் பேரிரைச்சலையும் மிஞ்சும் வகையில்.…
“ரோலக்ஸ்…!!!” என கத்தினான், அவனது குரல் அலைகளில் மோதி எதிரொலித்தது.
அந்தப் பெயரில் வன்மம் இருந்தது, 15 ஆண்டுகாலத் தவம் இருந்தது.
வேட்டை தொடரும் ..⚓
