11
விசாகப்பட்டினம் கடற்கரையின் அலைகள் ஆக்ரோஷமாக கரையில் மோதிச் சிதறிக் கொண்டிருந்தன. நிலவொளி கடலில் பட்டுத் தெறிக்க, மணற்பரப்பில் அமர்ந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த சந்துருவின் தோளில் ஆதரவாகக் கை போட்டபடி அமைதியாக அமர்ந்தான் கணேஷ்.
கடலைப் பார்த்தபடியே அமர்ந்திருக்க, சந்துரு மெல்லத் தலைத் திருப்பி அவனைப் பார்த்தான்.
“என்னடா… வேலை எல்லாம் ரெடி ஆயிடுச்சா? நாளைக்கே நான் ஜாயின் பண்ணிடலாம்ல? ஏதும் பிரச்சனை இல்லையே? அங்க என்ன பண்ணணும், எப்படி இருக்கணும்னு நீதான் மச்சி எனக்கு எல்லாமே சொல்லிக் கொடுக்கணும்,” என்ற சந்துருவின் குரலில் ஒரு செயற்கையான நிதானம் இருந்தது.
அவனை ஊடுருவிப் பார்த்த கணேஷ், “வேலை பத்தி நான் சொல்லிக் கொடுக்கிறது இருக்கட்டும் டா, ஆனா நீ திடீர்னு இந்த ஹார்பர் வேலைக்கு, அதுவும் ஒரு டம்மி போஸ்டிங்குக்கு வர என்னடா காரணம்?” என கணேஷ் நேரடியாகக் கேட்க
“அதான் சொன்னேனே… டிபார்ட்மெண்ட்ல சின்ன சஸ்பென்ஸ், அதான் இங்க தூக்கிப் போட்டுட்டாங்க,” என ஒரு மெல்லிய புன்னகையுடன் மழுப்பினான்.
“சஸ்பென்ஸ்னாலும் உன்னை இங்க போட வேண்டிய அவசியம் இல்லடா. நீயே விரும்பி இங்க வந்திருக்கன்னு எனக்குத் தெரியும். நீ இங்க எதைத் தேடி வந்திருக்க? உண்மையான காரணம் என்ன? எந்தக் காரணமும் இல்லாம நீ இங்க வரமாட்டேன்னு எனக்குத் தெரியும் மச்சி,” என கணேஷ் கொக்கி போட்டு கேள்வி கேட்க, சந்துருவின் முகம் ஒரு கோணத்தில் திரும்பியது.
சந்துருவின் பார்வை மீண்டும் ஆக்ரோஷமான கடலுக்குத் திரும்பியது. அடுத்த நொடி அவனது உதடுகள் துடிக்க … “ரோலக்ஸ்…” என அழுத்தமான குரலில் உச்சரித்தான்.…
சந்துருவின் தோள் மீது இருந்த கணேசனின் கைகள், மின்சாரம் தாக்கியது போலத் தானாகவே கழன்று கீழே விழுந்தன. அவனது உடல் ஒரு கணம் நடுங்கியதைச் சந்துரு கவனித்தான்.
உடனே கணேசனின் பக்கம் திரும்பிய சந்துரு, “என்னடா… ரோலக்ஸ் பெயரை கேட்டவுடனே நீயே இப்படித் தடுமாற்ற? இப்போ நீ ஒரு DC ஆபீசர், அவன் ஒரு தாதா. என்ன நெனச்சுட்டு இருக்க நீ?” என்று ஏளனமாகவோ கேட்க, கணேசனின் முகம் வெளிறிப் போயிருந்தது.
“நீ… நீ அதுக்குத்தான் இங்க வந்தியா சந்துரு?” என திக்கித் திணறிக் கேட்டான்.
“ஆமா… அவனுக்காகத்தான் வந்தேன். அந்தப் பழைய பகையை நான் தீர்த்தே ஆகணும் கணேஷா. அதுக்காகத்தான் இந்த ஹார்பர் போஸ்டிங்கே வாங்கினேன். அவனை ஒரு தடவை… ஒரே ஒரு தடவை நேர்ல பார்க்கணும்,” என்று சொல்லச் சொல்ல சந்துருவின் உதடுகள் வன்மத்தில் துடித்தன.
ஒரு நீண்ட பெருமூச்சை விட்டு, தலையைத் தாழ்த்திக் கொண்ட கணேசன். “சந்துரு… ரோலக்ஸை உன்னால பிடிக்க முடியாதுடா,” என்றான் மிகவும் நிதானமாக.
“ஏன் முடியாது? அவன் இந்த ஹார்பர்ல தான் இருக்கான்னு எனக்குத் தெரியும். அவன் எங்க இருந்தாலும் சரி, பாதாளத்துல ஒளிஞ்சுட்டு இருந்தாலும் சரி… அவனைத் தேடிப் பிடிச்சு அவன் செஞ்ச பாவத்துக்குக் கணக்கு தீர்ப்பேன்!” என்று உச்சகட்ட ஆக்ரோஷத்தில் சந்துரு பேசினான்.
கணேசன் மெல்லத் தலை நிமிர்ந்து சந்துருவைப் பார்த்தான். அவனது கண்களில் ஒருவிதமான அச்சம் கலந்த எச்சரிக்கை இருந்தது.
“நீ நினைக்கிற மாதிரி அவன் எங்கேயும் ஒளிஞ்சுட்டு இல்ல சந்துரு. அவன் இந்த ஹார்பரோட ஒவ்வொரு அணுவுலயும் இருக்கான். ஆனா..
“ஆனா என்னடா … ?”
“டேய் சந்துரு … ரோலக்ஸ் இறந்துட்டான்டா!”
இதைச் சொல்லும்போது கணேசனின் குரலில் ஒருவித நடுக்கம் இருந்தது. அமர்ந்திருந்த சந்துரு, ஒரு மின்சாரம் தாக்கியது போலச் சட்டென்று இருக்கையை விட்டு எகிறி குதித்து எழுந்து நின்றவனது கண்கள் அதிர்ச்சியில் அகல விரிந்தன.
“என்ன… என்னடா சொல்ற? எப்படி? என்ன சொல்ற நீ? உண்மையாத்தான் சொல்றியா கணேஷ்?” எனப் பதற்றத்துடன் சந்துரு கேட்க, அவனது குரல் கரகரத்தது.
“ஆமாம் சந்துரு… இதுதான் உண்மை.” என கணேஷன் பாரமான இதயத்துடன் தலையாட்டினான்.
“எப்படி இது நடந்தது? எதை வச்சு இதைச் சொல்ற? ஆதாரமில்லாம நீ பேச மாட்டியே!” என்று அந்தப் பதபதைப்பு குறையாமல் சந்துரு ஆக்ரோஷமாக வினவ.
கணேசன் கடலைப் பார்த்தபடி, “கொஞ்ச நாளைக்கு முன்னாடி வங்காளக் கடலோட நடுப்பகுதியில, ரோலக்ஸோட சொகுசு கப்பல்ல இந்தச் சம்பவம் நடந்தது. யார் இதைச் செஞ்சாங்கன்னு யாருக்கும் தெரியல. ரோலக்ஸுக்கு உலகமெங்கும் ஏகப்பட்ட எதிரிகள் இருக்காங்கன்னு உனக்கே தெரியும். இதுல யாரு முக்கியக் குற்றவாளிங்கிறது இன்னும் மர்மமா இருக்கு.
ஆனா, கடல் நடுவே யாரோ புயல் மாதிரி உள்ள புகுந்து, ரோலக்ஸையும் அவனோட ஆட்கள் எல்லாரையும் சுட்டு கொன்னு குவிச்சுட்டாங்க. அந்தப் பகுதியே ரத்தக் காடா மாறிடுச்சு. இந்த கேஸை எப்படி நகர்த்துறதுன்னு தெரியாம டிபார்ட்மென்ட் தடுமாறிட்டு இருக்கு. அதனாலதான் மேலிடத்துல இருந்து இந்தத் தகவலை யாருக்கும் தெரியாம மூடி வச்சிருக்காங்க.”
சந்துருவின் மூச்சு வாங்கியது. “அப்போ அவன் செத்துட்டானா? அவனோட பாடி… அவனோட பிணம் எங்க போச்சு?”
“தெரியல சந்துரு… ஆனா அவனை அவங்க முடிச்சுட்டாங்கன்னு மட்டும் உறுதியா சொல்ல முடியும். அந்தக் கப்பல்ல அவனோட ரத்தம் சிதறிக்கிடந்தது. தடயவியல் சோதனையில அது ரோலக்ஸோட ரத்தம் தான்னு உறுதியாகிடுச்சு. கொன்னுட்டு கடல் சுறாக்கு இரையா வீசிட்டாங்களா இல்ல பாடியை எடுத்துட்டுப் போயிட்டாங்களான்னு எந்த விவரமும் சிக்கல,” என்றான் கணேசன்.
“ஹாஹாஹா … ” என ஒரு விசித்திரமான சிரிப்பைச் சிந்திய சந்துருவின் கண்கள் சிவந்து தகித்தன.
“டேய் அவனுடைய பாடி கூடக் கிடைக்கலைன்னா, அவன் செத்துட்டான்னு எப்படிடா உறுதியா சொல்ல முடியும்? ரோலக்ஸ் என்ன மத்த தாதாக்கள் மாதிரி சாதாரண ஆளுன்னு நினைச்சியா? அவன் யாருடா… அவன் ஒரு அசுரன்! He is an Immortal… அவனை அவ்வளவு சீக்கிரம் யாராலும் எதுவும் பண்ண முடியாதுடா!”
கணேசன் அமைதியாகச் சந்துருவையே பார்த்துக் கொண்டிருந்தான். சந்துருவின் ஆவேசம் ஒரு பைத்தியக்காரத்தனத்தின் விளிம்பில் இருப்பதைப் போல அவனுக்குத் தோன்றியது.
“ரோலக்ஸ் கண்டிப்பா உயிரோடதான் இருக்கணும்டா… அவன் சாகமாட்டான். ” என்று சந்துரு அதிர்வுடன் சொல்ல, அந்த வார்த்தைகள் அந்த காற்றில் ஒரு சாபம் போல ஒலித்தன.
எங்கோ இந்திய எல்லையை கடந்து, கடலில் மிதந்துக் கொண்டிருந்தது அந்த சொகுசு கப்பல் …
காப்பலின் மேல் தளத்தில் கடல் காற்று சில்லென்று வீசிக் கொண்டிருந்தது. வெளிநாட்டுத் தொழிலதிபர் Edward , தன் அடியாள் சுமந்து வந்த அந்த மினுங்கும் கருப்பு நிறப் பெட்டியை உற்றுப் பார்த்தான். அதன் பூட்டுகள் திறக்கப்பட, உள்ளே தங்கத்தாலும் வெள்ளியாலும் நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட அந்த ‘White Dragon’ சின்னம் நிலவொளியில் மின்னியது.
எட்வர்ட் தன் நடுக்கம் கலந்த விரல்களால் அந்தச் சின்னத்தைத் தடவிப் பார்த்தபோது, சில வருடங்களுக்கு முன்னால் நடந்த அந்த ரத்த சரித்திரம் அவன் நினைவுகளில் நிழலாடியது.
அந்த ஏற்றுமதி துறைமுகம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். ஆனால் அன்று எட்வர்ட்டின் சரக்குக் கப்பல், அங்குள்ள அதிகாரமிக்க தாதாவான பாபி ரெட்டியின் ஆட்களிடம் சிக்கிக்கொண்டது. எட்வர்ட் கொண்டு வந்த சரக்குகள் அனைத்தும் சட்டத்திற்குப் புறம்பானவை என்பது பாபிக்கு தெரிந்துவிட்டது.
“மிஸ்டர் எட்வர்ட்… இந்தச் சரக்கு முழுசா வெளியே போகணும்னா, எனக்கு இதுல சரிபாதி பங்கு வேணும். இல்லைன்னா, உன் கப்பலும் கடலுக்குள்ள போகும், உன் உயிரும் காத்துல போகும்!” என்று பாபி மிரட்டினான்.
எட்வர்ட் கைகளைக் கூப்பி மன்றாடினான். “ப்ளீஸ் பாபி .. சரிபாதி கொடுத்தா என் தொழிலே அழிஞ்சிடும். லஞ்சமா எவ்வளவு வேணுமோ கேளுங்க, ஆனா என் சரக்கை விட்டுடுங்க,” என்று உயிர் பிச்சை கேட்டான். ஆனால் பாபியின் முகத்தில் இரக்கம் இல்லை.
திடீரென்று அந்த இடமே அதிரும்படி துறைமுகத்தின் இரும்புக்கதவுகள் “டமார்!” என்ற சத்தத்துடன் காகிதத்தைப் போலக் கிழிந்து தெறித்தன. அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய்த் திரும்பிப் பார்த்தார்கள். புகை மண்டலத்தைக் கிழித்துக்கொண்டு உள்ளே நுழைந்தான் அந்த வெள்ளை வேந்தன்..
துறைமுக தொழிலாளிகள் அணியும் செம்மஞ்சள் நிற உடையில், வியர்வையில் முழுகி நனைந்த உடம்புடன்… முகத்தில் சோர்வின் சாயலும், முறுக்கி நிற்கும் மீசையும் அவன் கோபத்தை வெளிப்படுத்த, கண்களில் கொதிக்கும் தீப்பொறி… வாயில் மெதுவாக புகை வீசும் பீடியுடன், ஒரு அசைக்க முடியாத கம்பீரத்தோடு உள்ளே நுழைந்தான் ரோலக்ஸ்!.
அவன் கையில் இருந்த அந்த பீடி மட்டும் அல்ல… அவன் கண்களே கனலாய் எரிந்து கொண்டிருந்தன
ரோலக்ஸை பார்த்ததும் பாபி ரெட்டி அதட்டலாகத் துப்பாக்கியை உயர்த்தினான். ஆனால், ரோலக்ஸின் உதட்டில் ஒரு ஏளனச் சிரிப்பு அரும்பியது.
அவன் ஒரு விரலை மட்டும் சைகையாய் அசைத்தவுடன்… பின்னாலிருந்து அதிநவீன துப்பாக்கிகளை ஏந்திய துறைமுக தொழிலாளர்கள், புயல் போல் சீறி உள்ளே புகுந்தார்கள்.
பாபி அமர்ந்திருந்த இடத்தை நோக்கி ரோலக்ஸ் ஒரு அடி எடுத்து வைக்க, எட்வர்ட் இருவரையும் மாறி மாறிப் பார்த்துப் திகைத்துப் போனான்.
அடுத்த நொடி துப்பாக்கிகள் முழங்கின. “டிச்… டிச்… துபாக்!” தோட்டாக்கள் பாபியின் ஆட்களின் மண்டைகளைப் பிளந்தன. ஆனால் ரோலக்ஸ்? அவன் நிதானமாகப் பிணங்களுக்கு நடுவே நடந்து வந்தான். ஒருவன் கத்தியோடு ரோலக்ஸை நெருங்க, ரோலக்ஸ் தன் கையில் இருந்த தங்க நிறக் கைப்பிடி கொண்ட கத்தியை மின்னல் வேகத்தில் சுழற்றினான்.
அவ்வளுவு தான் அந்த அடியானின் கழுத்து பாதியாகத் துண்டிக்கப்பட்டு, ரத்தம் ஒரு நீரூற்றைப் போலச் சீறிப் பாய்ந்தது. ரோலக்ஸின் சட்டையில் ஒரு துளி ரத்தம் கூடப் படவில்லை. அவன் அந்த ரத்த வாடையைச் சுவாசித்தபடி பாபியை நோக்கி முன்னேறினான்.
துப்பாக்கிச் சத்தங்களும், மரண ஓலங்களும் அந்தத் துறைமுகத்தையே அதிர வைத்தன. ஆனால், அந்த ரத்தக் கறை படிந்த போர்க்களத்திற்கு நடுவே ரோலக்ஸ் மட்டும் எதற்கும் அசையாமல், அந்தச் பீடியை புகைத்தபடி ஒரு அசுரக் கலைஞனைப் போல நின்று கொண்டிருந்தான்.
அந்த வெடிச்சத்தங்களும் நிறைந்திருந்த அந்தப் போர்க்களத்தில், மறைந்திருந்த பாபி, ரோலக்ஸின் முதுகில் கத்தியுடன் பாய முயன்றான்.
கன்டெய்னருக்குப் பின்னால் பதுங்கியிருந்த எட்வர்ட், இதைப் பார்த்துவிட்டான். ஒரு நொடித் தயக்கம், பின் ஏதோ ஒரு உந்துதலில் பாய்ந்து வந்து பாபியின் கையைப் பிடித்துத் தள்ளிவிட்டான். அந்த அதிர்வில் ரோலக்ஸ் சட்டென்று திரும்பினான்.
தன் முதுகின் பின்னால் மின்னிய கத்தியையும், அதைத் தடுத்து நிறுத்திய அந்த வெள்ளைக்காரனையும் பார்த்த ரோலக்ஸின் கண்கள் ஒரு வினாடி குறுகின. எட்வர்ட் செய்த அந்த ஒரு உதவியால் ரோலக்ஸ் தப்பினான்.
அடுத்த கணம், மின்னல் வேகத்தில் தன் இடுப்பில் இருந்த துப்பாக்கியை உருவிய ரோலக்ஸின் பார்வை இப்போது பாபியின் மீது விழுந்தது. அது ஒரு மனிதனின் பார்வையல்ல, ஒரு பசியுள்ள வேட்டை நாயின் பார்வை. பாபி தப்பிக்கும் வழியின்றி ஒரு கன்டெய்னருக்குப் பின்னால் பதுங்கினான்.
ஆனால் ரோலக்ஸ் தன் கையில் இருந்த கனமான இரும்புச் சங்கிலியைப் பாபியின் கழுத்தில் வீசி எறிந்தான். அது ஒரு சுருக்கைப் போலப் பாபியின் கழுத்தை இறுக்கியது. பாபி மூச்சுத் திணறித் தரையில் விழுந்து புரண்டான்.
ரோலக்ஸ் அவனது சட்டைக் காலரைப் பிடித்துத் தரதரவென இழுத்து வந்து, ஒரு கன்டெய்னரின் இரும்புச் சுவரில் ஓங்கி முட்டினான். பாபியின் மண்டை ஓடு உடையும் சத்தம் அங்கே தெளிவாகக் கேட்டது.
பாபி ரத்தத்தை உமிழ்ந்தபடி, “என்னை விட்டுடு ரோலக்ஸ்… என்ன வேணும்னாலும் தர்றேன்.. இந்த துறைமுக அதிகாரத்தை இனி நீயே எடுத்துக்கோ …” என்று கெஞ்சினான்.
ரோலக்ஸ் சிரித்தான். அது ஒரு அசுரச் சிரிப்பு. அவன் மெதுவாகப் பாபியின் வலது கையைப் பிடித்து மேஜையில் வைத்தவன். தன் கால் ஷூ இடுக்கில் சொருகி வைத்திருந்த சிறு கத்தியை எடுத்து பாபியின் உள்ளங்கையில் அழுத்தினான்.
பாபியின் அலறல் அந்தத் துறைமுகத்தையே அதிர வைத்தது. ஆனால் ரோலக்ஸ் நிறுத்தவில்லை. மின்னல் வேகத்தில் தன் இடுப்பிலிருந்த துப்பாக்கியை உருவி, பாபியின் தாடையின் கீழே வைத்தவன், மற்றொரு கையை அசைத்து … “Bye.. ” என்றான்..
அடுத்த நிமிஷம்
“டுமீல் …!”
பாபியின் ரத்தமும் சதையும் அந்த கன்டெய்னர் சுவரில் ஒரு கோரமான ஓவியமாகத் தெறித்தன. அவனின் உடல் ஒரு ஜடமாகத் தரையில் சாய்ந்தது.
அடுத்த சில நிமிடங்களில் துப்பாக்கிச் சத்தங்கள் அடங்கின. புகையும் ரத்த வாடையும் அந்த இடத்தையே ஆக்கிரமித்திருக்க, பிணங்களுக்கு நடுவே ரோலக்ஸின் ஆட்கள் வெற்றியின் களிப்பில் நின்றிருந்தார்கள். பிணங்கள் சிதறிக் கிடக்க, ரோலக்ஸ் அந்த ரத்தக் கறை படிந்த மேடையில் கிடந்த ஒரு மர நாற்காலியில் ஒரு பேரரசன் அமர்வதைப் போல நிதானமாக அமர்ந்தான்.
மெதுவாகத் தன் கரங்களை உயர்த்தியவன் அவனின் எதிரில் தாலாட்டு பாடிக்கொண்டிருந்த கடலை சுட்டிக் காட்டி..
“இந்த வங்காள விரிகுடா கடலுக்கே நான்தான்டா ராஜா…!” என அவன் கொடுத்த அந்த ஒற்றைச் சைகை, ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் அறிவிப்பாக இருந்தது.
அவனது ஆதிக்கக் குரல் எதிரொலிக்க, அடியார்கள் அனைவரும் “ஹே… ஜோ… ஹே…!” என விண்ணதிரக் கத்தித் தங்கள் தலைவனுக்கு வணக்கம் செலுத்தினார்கள்.
அடுத்த நொடி, ரோலக்ஸின் பார்வை தன்னைத் தற்காத்த வெள்ளைக்காரன் பக்கம் திரும்பியது. ஒரு சிறு கை அசைவில் அவனை அழைத்தான். எட்வர்ட் நடுக்கத்துடன் அவன் முன்னால் வந்து நின்றான்.
ரோலக்ஸ் அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, விவரம் கேட்க… எட்வர்ட் படபடப்புடன்.. . “சார்… பாபி என் கப்பலை பிடிச்சு வச்சிருக்கான். அதுல இருக்குற கடத்தல் பொருள்ல 20% உங்களுக்குத் தந்துடுறேன். தயவு செஞ்சு என் கப்பலை மட்டும் விட்டுடுங்க சார்,” என உண்மையைச் சொல்லி மன்றாடினான்.
அவனின் உதட்டசைவை வைத்து புரிந்துகொண்ட ரோலக்ஸ் ஒரு ஏளனப் புன்னகையைச் சிந்தினான். அருகில் இருந்த பைரவனை பார்த்து, “இவன் கப்பலை விட சொல்லு !” என சைகையில் உத்தரவிட்டவன், எட்வர்ட்டை இன்னும் அருகில் அழைத்தான்.
எட்வர்ட் நெருங்கி வந்ததும், ரோலக்ஸ் தன் இடுப்பில் சொருகியிருந்த ஒரு பிரத்யேகத் துப்பாக்கியை உருவினான். அதன் கைப்பிடியில், கறுப்புப் பின்னணியில் தங்க நிறத்தில் சீறும் டிராகன் சின்னம் பதிக்கப்பட்டிருந்தது. அதை எட்வர்ட்டின் கையில் கொடுத்தான்.
அன்று ரோலக்ஸின் கரங்களில் இருந்து வாங்கிய அதே டிராகன் பதித்த துப்பாக்கிதான், இன்று சில வருடங்கள் கழித்து அந்தச் சொகுசுக் கப்பலில் எட்வர்ட்டின் கையில் தகித்துக் கொண்டிருந்தது.
அன்று பரிசாகப் பெற்ற அந்தத் துப்பாக்கி, இன்று உயிரையே மீட்கப்போகும் ஒரு மந்திரக்கோலாக மாறும் என்று எட்வர்ட் நினைக்கவில்லை. மரணத்தின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருக்கும் ஒரு சாம்ராஜ்யத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் அவனுக்குப் புரிந்தது.
எட்வர்ட் நடுங்கும் கரங்களுடன் அந்தப் பெட்டியிலிருந்து டிராகன் முத்திரை பதிக்கப்பட்ட அந்தத் துப்பாக்கியை எடுத்தவன். மெதுவாக நகர்ந்து சென்று, சலனமற்றுப் பிணமாகக் கிடந்த ரோலக்ஸின் அருகே அமர்ந்தான்.
ரோலக்ஸின் உள்ளங்கை குளிர்ந்து போயிருந்தது. உயிர் பிரிந்துவிட்டதோ என்று அஞ்சும் அளவிற்கு அந்த உடல் மௌனமாக இருந்தது. எட்வர்ட் அந்தத் துப்பாக்கியின் கைப்பிடியை ரோலக்ஸின் உள்ளங்கைக்குள் வைத்து, அவனது விரல்களை அதன் மேல் மடக்கினான்.
அந்தக் கணமே ஒரு அதிசயம் நிகழ்ந்தது!
தங்கத்தால் பொறிக்கப்பட்ட அந்தத் துப்பாக்கியின் ஸ்பரிசம் ரோலக்ஸின் நரம்புகளில் ஒரு மின்னலைப் பாய்ச்சியது. பல வருடங்களாக அந்தத் துப்பாக்கியால் அவன் சிந்திய ரத்தமும், நடத்திய வேட்டைகளும் அவனது ஆழ்மனதில் இருந்த போராட்ட உணர்வைத் தூண்டின. ஸ்தம்பித்துப் போயிருந்த ரத்த ஓட்டம் சீறிக்கொண்டு மூளைக்கு ஏறியது.
ரோலக்ஸின் கண்கள் சட்டென்று திறந்தன. அந்தப் பார்வையில் மரணம் இல்லை, மாறாக ஒரு கொடூரமான உயிர்த்தெழுதல் இருந்தது.
அவனது விரல்கள் அந்தத் துப்பாக்கியின் பிடியை இரும்பை விட பலமாக இறுக்கிக்கொண்டன. அடுத்த நொடி, யாருடைய உதவியும் இன்றி அவனது ஆள்காட்டி விரல் அந்தத் துப்பாக்கியின் Triggerஐ அழுத்தியது.
“டமால்… டமால்…!!!”
நிசப்தமான அந்த உணர்வில் கப்பலின் அறையில் துப்பாக்கி குண்டுகள் சீறிப் பாய்ந்து சுவர்களைத் துளைத்தன. அந்தச் சத்தம் ரோலக்ஸ் மீண்டும் வந்துவிட்டான் என்பதற்கான அபாயச் சங்காக ஒலித்தது.
உடம்பில் இருந்த காயங்களையும், ரத்த இழப்பையும் மீறி ரோலக்ஸ் மூச்சைப் பலமாக இழுத்துவிட்டான். அவனது உதடுகளில் அந்தப் பழைய விகாரமான புன்னகை மீண்டும் அரும்பியது.
எட்வர்ட் மிரட்சியுடன் பின்னால் நகர, ரோலக்ஸ் மெதுவாக முழு கண்களையும் திறந்து பார்த்தான்.
வேட்டை தொடரும் ..⚓
