Rolex 12

12

 

அதிகாலைச் சூரியனின் இளம் கதிர்கள் ஜன்னல் வழியாக ஊடுருவி அறையை நனைத்துக் கொண்டிருந்தன. சந்துரு தனது வெள்ளை நிறக் சீருடையை அணிந்து, கண்ணாடியின் முன் நின்று தன்னைச் சரிசெய்து கொண்டிருந்தான். அந்தச் சீருடையின் கம்பீரம் அவனது முகத்தில் ஒரு புதிய தேஜஸைக் கொடுத்திருந்தது.

அப்போது மெல்ல அறைக்குள் நுழைந்த யாழினியின் கையில் காபியுடன் வந்தவள், சீருடையில் நின்றிருந்த தன் காதல் கணவனைக் கண்டதும் அப்படியே மெய்சிலிர்த்துப் போனாள்.

அவனிடம் நெருங்கி வந்தவள், காபிக் கோப்பையை மேஜையில் வைத்துவிட்டு, சந்துருவின் தோள்பட்டையில் இருந்த அந்தப் பெயரை தொட்டு ரசித்தாள். “இந்த வெள்ளைச் சீருடை உனக்கு ரொம்பவே நல்லா இருக்கு புருஷா.. என் கண்ணே பட்டுடும் போல !” என்று பெருமிதத்துடன் சொன்னவள், சட்டென்று எட்டி அவனது கன்னத்தில் ஈரமான முத்தம் ஒன்றைப் பதித்தாள்.

சந்துருவின் முகத்தில் ஒரு குறும்புச் சிரிப்பு அரும்பியது. “வெறும் கன்னத்துல மட்டும்தானா?” என்று கேட்டபடியே, அவளது இடையைச் சுற்றித் தன் கரங்களை வளைத்து, யாழினியைத் தன்னோடு மிக நெருக்கமாக, இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

அந்த அதிகாலைப் பொழுதில், அவர்களின் இதயம் ஒன்றுடன் ஒன்று பேசிக் கொண்டது. சந்துரு மெல்லக் குனிந்து, யாழினியின் இதழ்களைத் தன் இதழ்களால் கவ்வினான். அது ஒரு நீண்ட, ஆழமான முத்தம்… இத்தனை காலப் போராட்டங்கள், பிரிவுகள் மற்றும் வலிகளுக்கான ஒரு இனிய மருந்தாக அந்த முத்தம் அமைய அவளும் அதனை ரசித்தபடி அவனிடம் தஞ்சம் அடைந்தாள்.

பின்னர் அவனின் இறுக்கமான பிடியிலிருந்து மெல்ல விடுபட்ட யாழினியின் முகம் சிவக்க,  மூச்சிரைக்கச் அவனை ஏறிட்டு பார்த்தவள், “இப்படியே நின்னுகிட்டு இருந்தா, முதல் நாள் வேலைக்கு நேரமாயிடும் புருஷா .. ! அப்புறம் உங்க டிபார்ட்மென்ட்ல டிசிப்ளின் இல்லன்னு சொல்லிடுவாங்க… ஒழுங்கா கிளம்புங்க!” என்று செல்லமாக அதட்ட,

சந்துரு சிரித்துக்கொண்டே அவளது நெற்றியில் மீண்டும் ஒரு முத்தத்தைப் பரிசாகத் தந்துவிட்டு, “உன் அன்பு இருக்கிற வரைக்கும் இந்தச் சந்துருவை யாராலும் அசைக்க முடியாது யாழி!” என்று கூறிவிட்டுத் தன் தொப்பியை அணிந்து கம்பீரமாக அங்கிருந்து நகர்ந்தான்.

வாசலில் நின்று அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த யாழினியின் முகத்தில், தன் காதலனை வென்றெடுத்த ஒரு பேரரசியின் நிம்மதி நிலவியது.

 

 

நாட்டின் எல்லைக்கு அப்பாற்பட்ட ஆழ்கடலில் அலைகள் இடைவிடாமல் எழுந்து அடிக்க, அவற்றின் தாலாட்டலோடு அந்த கப்பல் மென்மையாக மிதந்துக் கொண்டிருந்தது.  

கட்டுப்போடப்பட்ட காயங்களுடன், மரணத்தின் விளிம்பைத் தொட்டு மீண்ட அசுரனாகக் கட்டிலில் கிடந்தான் ரோலக்ஸ்.

அறை முழுவதும் நிலவிய அந்த மருந்துகளின் வாசம் அவனுக்குப் பழகிப்போயிருந்தது. காயங்கள் தந்த வலியால் உடல் ஒருபுறம் துடிக்க, உள்ளுக்குள் கனன்றுகொண்டிருந்த வன்மத்தின் நெருப்பு அவனை அமைதியாக இருக்க விடவில்லை.

ஆனால், அவனது நரம்புகளைத் தூண்டும் அந்தப் பழைய வன்மம் இப்போது அவனது மனைவியின் மென்மையான தீண்டலில் மெல்லக் கரையத் தொடங்கியது.

மயூரா… அவனது இருண்ட உலகத்தின் ஒரே மென்மை. எதிரிகளைச் சூறையாடும்போது சிங்கமாகக் கர்ஜிப்பவன், அவளது ஒற்றைத் தீண்டலில் ஒரு சிறு குழந்தையாக மாறிப்போனான். ரத்தக் கறைகளும், துப்பாக்கிச் சூடுகளும் தழும்புகளாக நிறைந்த அவனது கரத்தை மயூரா தன் கைகளால் ஏந்தியபோது, ரோலக்ஸின் விரல்கள் சிரமமின்றி அவளைப் பற்றிக்கொண்டன. கண்கள் மூடியிருந்தாலும், அந்தத் தீண்டலின் வாசம் அவனுக்குத் தெரியும், அது பல ஆண்டுகால நேசத்தின் அடையாளம்.

கண்ணீர் அவளது கன்னங்களை நனைக்க, மயூரா அவனது முகத்தையேப் பார்த்திருந்தாள். அவளது நினைவுகள், அவர்களின் அழகான அந்தப் பழைய வசந்த காலத்திற்குப் பின்னோக்கிப் பயணித்தன.

 

அந்தக் கடற்கரை ரோலக்ஸின் அமைதிப் பள்ளத்தாக்காக இருந்தது. அவனுக்குச் சத்தங்கள் கேட்காது என்பது உலகிற்குப் பலவீனம், ஆனால் அவனுக்கு அது ஒரு வரமாகவே அமைந்தது. அலைகளின் ஓசை கேட்கவில்லை என்றாலும், மணலில் பாதம் பதியும்போது ஏற்படும் அந்தச் சிறு அதிர்வுகளில் அவன் கடலோடு மௌனமாக உரையாடி வந்தான்.

அன்று ஒரு சிறு மணல் வீட்டை அவன் நேர்த்தியாகக் கட்டிக்கொண்டிருந்தபோதுதான், மயூரா முதன்முதலாக அவனது உலகிற்குள் நுழைந்தாள். அவள் பேசிய வார்த்தைகள் அவனுக்குப் புரியவில்லை என்றாலும், அவள் நீட்டிய அந்தச் சிறு பூவும், அவளது கண்கள் சிந்திய பேரன்பும் அவனுக்கு எல்லாவற்றையும் புரியவைத்தன. சைகை மொழியில் அவன் தொடங்கிய அந்தப் பந்தம், மணல் வீடு போலக் கலைந்துவிடாமல் காலத்தின் ஓட்டத்தில் ஒரு கோட்டையாக மாறியது.

ஓவியனாக ரோலக்ஸ் வளர்ந்தான். அவனது மௌனமே மயூராவிற்கு மிகவும் பிடித்த இசையாக இருந்தது. ஆனால், விதி ஒரு புகைப்படத்தின் வடிவில் வந்தது. நகரத்து மாப்பிள்ளையை அவளது தந்தை அறிமுகப்படுத்தியபோது, மயூராவுக்குத் தன் இதயத்தின் துடிப்பு ரோலக்ஸிற்காக மட்டுமே என்பது புரிந்தது. அவளுக்குப் பட்டணத்து மாப்பிள்ளையின் சொகுசு வாழ்க்கை தேவையில்லை, பேசாமலேயே எல்லாவற்றையும் சொல்லிவிடும் ரோலக்ஸின் கண்கள் மட்டுமே போதும் என்று தோன்றியது.

காலம் அவர்களைப் பிரிக்க நினைத்தது. ஆனால், ரோலக்ஸின் வாழ்க்கை ஓவியங்களிலிருந்து ரத்தத்திற்கு மாறியது. பாபி ரெட்டியின் ஆலோசனையின் பேரில், ஒரு இக்கட்டான சூழலில் செய்த இரட்டைக் கொலைக் குற்றத்திற்காக போலீசிடம் இருந்து தப்பித் தலைமறைவாக இருந்தான் ரோலக்ஸ். அவன் எங்கே இருக்கிறான் என்பது யாருக்கும் தெரியாது.

ஆனால், காதல் வழிகாட்டும் அல்லவா? ரோலக்ஸின் உயிர் நண்பன் பைரவன் மூலம் அவன் பதுங்கியிருக்கும் ரகசிய இடத்தைக் கண்டறிந்தாள் மயூரா. கடற்கரை ஓரம், அடர் இருள் சூழ்ந்த அந்தப் பழைய பாழடைந்த கிடங்கு, ஆர்ப்பரிக்கும் அலைகளின் ஓசைக்கு நடுவே அங்கே ஒரு மூலையில், கையில் கறையோடு, கண்களில் ஒருவிதமான வெறியோடு ரோலக்ஸ் அமர்ந்திருந்தான். அவனது உலகம் நிசப்தமானது, ஆனால் அவனது மனதிற்குள் வன்மம் ஒரு எரிமலையாகக் கொதித்துக் கொண்டிருந்தது.

அப்போதுதான் மூச்சிறைக்க அங்கே வந்து நின்ற மயூரா அவன் அருகில் சென்றவள், அவனை அந்த நிலையில் பார்க்கச் சகிக்காமல் கதறி அழுதாள்.

“ரோலக்ஸ்… நீ ஓவியம் வரைஞ்ச கைகள் இது. இப்போ ஏன் இப்படி?” என்று அவள் சைகை காட்ட முயல, ரோலக்ஸ் அவளைப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

அவளை இந்த ஆபத்தான உலகிற்குள் இழுக்க அவனுக்கு விருப்பமில்லை. அவனது மௌனம் இப்போது அவளை விரட்டும் ஆயுதமாக மாறியிருந்தது. ஆனால் மயூரா விடவில்லை. அவன் கையைப் பிடித்து இழுத்து, தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்.

“நீ எங்கே போனாலும், என்ன செஞ்சாலும்… நான் உங்கூடத்தான் இருப்பேன்” என்று மயூரா சத்தியம் செய்தாள். ரோலக்ஸின் கண்கள் கலங்கின. அவனது வன்மமான உலகிற்குள் கிடைத்த ஒரே ஒரு சொர்க்கம் இவள் மட்டும்தான் என்று அவனுக்குப் புரிந்தது. ஆனாலும் அவளை நிராகரித்துத் திரும்ப முயன்றான்.

அவளது கண்கள் அருவியெனக் கொட்ட, ஆத்திரத்துடனும் காதலுடனும் ரோலக்ஸின் சட்டையைப் பிடித்து உலுக்கியவள், “ரோலக்ஸ்… எனக்கு வேறொருவனோடு திருமணம் பேசுறாங்க வீட்ல.. . என்னால உன்னைத் தவிர வேறு யாரையும் நினைக்கக்கூட பார்க்க முடியாது. நான் உன்னைக் காதலிக்கிறேன் ரோலக்ஸ்! உன் மௌனத்தையே என் ஆயுள் முழுக்கக் கேட்டுக் கொண்டிருக்க ஆசைப்படுறேன். என்னோடு வந்துவிடு!” என்று கதறினாள்.

அதிர்ந்து போனான், ரோலக்ஸ். அவனது இதயம் மகிழ்ச்சியில் துடித்தாலும், அடுத்த நொடியே அவனது ரத்தம் படிந்த கைகளும், கேட்கும் திறனற்ற அவனது இயலாமையும் அவனைச் சுட்டன. அவன் தன் கைகளை மெதுவாக அசைத்தான். அவனது சைகையில் வேதனையும் ஆத்திரமும் கலந்திருந்தது.

“வேண்டாம் மயூரா! நான் ஒரு கொலைக்காரன். என் கைகளில் ரத்தக்கறை இருக்கு. நான் ஒரு ஊமை… உனக்கு ஒரு சாதாரண வாழ்க்கையைக் கூட என்னால் தர முடியாது. என்னை மறந்துவிடு. உனது காதல் எனக்கு ஒரு பாரம்!” என்று சைகை செய்துவிட்டு, அவளைக் கடினமாகத் தள்ளிவிட்டு அங்கிருந்து வேகமாக நடந்தான்.

ரோலக்ஸின் நிராகரிப்பு மயூராவை முடக்கவில்லை. மாறாக, அவளது காதலை இன்னும் பலப்படுத்தியது. அவன் எங்கு சென்றாலும் ஒரு நிழலைப் போலப் பின் தொடர்ந்தாள். அவன் வேலை செய்யும் நாகேந்திராவின் இடத்திற்கு வெளியே மணிக்கணக்காகக் காத்திருந்தாள்.

“நீ என்னை வெறுப்பதாகக் காட்டிக் கொண்டாலும், உனது கண்கள் என்னைத் தேடுவதை நான் அறிவேன் ரோலக்ஸ். வார்த்தைகள் பேசாத உனக்கு, என் இதயம் பேசும் காதல் புரியலையா?” என்று அவள் சைகை மொழியில் அவனிடம் சண்டையிட்டாள்.

ரோலக்ஸ் அவளைக் கண்டுகொள்ளாமல் இருக்க எவ்வளவோ முயன்றான். ஆனால், ஒவ்வொரு முறை அவள் கண்ணீர் விடும்போதும், அவனது இதயம் ஆயிரம் துண்டுகளாகச் சிதறியது.

அன்று இரவு. மயூரா ரோலக்ஸைச் சந்தித்துவிட்டுத் தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். ஊருக்கு ஒதுக்குப்புறமான அந்தப் பாதையில், பாபியின் அடியாள் தர்மா அவளை வழிமறித்தான்.

மயூரா பயத்தில் அலறினாள்.

ஆனால், அந்த நள்ளிரவில் அவளது குரல் யாருக்கும் கேட்கவில்லை. அப்போது இருட்டில் இருந்து ஒரு உருவம் பாய்ந்து வந்தது. அது ரோலக்ஸ்! அவனுக்குச் சத்தங்கள் கேட்காது தான், ஆனால் அவனது காதலி ஆபத்தில் இருக்கிறாள் என்ற அந்த உள்ளுணர்வு அவனை அங்கு இழுத்து வந்திருந்தது. தர்மா அவனைக் கண்டு ஏளனமாகச் சிரித்தான்.

“ஒரு ஊமைப் பயல் வந்துட்டானா?” என்று சொல்லி ரோலக்ஸைத் தாக்கினான்.

இருள் சூழ்ந்த அந்தப் பாதையில் மரணத்தின் நிசப்தம் நிலவியது. அடுத்த நொடி, தர்மாவின் ஆட்கள் ஓநாய்களைப் போல ரோலக்ஸ் மீது பாய்ந்தனர். ஒருவனின் கையில் இருந்த கூர்மையான கத்தி, ரோலக்ஸின் முதுகுத் தசையில் ஆழமாக இறங்கியது.

‘சதக்’ என்ற சத்தத்துடன் ரத்தம் பீய்ச்சி அடிக்க, மற்றொருவன் கனமான மரக்கட்டையால் அவன் மண்டையில் ஓங்கி அடித்தான். ரோலக்ஸின் பார்வை மங்கியது, நெற்றியிலிருந்து வழிந்த ரத்தம் அவனது கண்களை மறைத்து, உலகையே சிவப்பாகக் காட்டியது.

ஆனால், அந்த வலியையும் மீறி தர்மாவிடம் சிக்குண்டு கிடந்த  மயூராவின் மரண அலறல் அவனை தாக்கியது, அடுத்த நொடி, அங்கு நின்றது ஒரு மனிதன் அல்ல,  காயம்பட்ட ஒரு காட்டு மிருகம்!

தர்மா தன் முழு பலத்தையும் திரட்டி ரோலக்ஸின் முகத்தில் ஒரு குத்து விட வர, ரோலக்ஸ் அதைத் தன் இடது கையால் இரும்புத் தூண் போலத் தடுத்தான். தர்மாவின் மணிக்கட்டு எலும்பு நொருங்கும் சத்தம் அந்த அமைதியில் தெளிவாகக் கேட்டது. மறுபுறம், ரோலக்ஸின் வலது கை தர்மாவின் கழுத்தை ஒரு இடுக்கைப் போலக் கவ்விப் பிடித்தது.

ஆக்ரோஷத்தின் உச்சியில் இருந்த ரோலக்ஸ், தர்மாவின் தலையை அப்படியே தூக்கி அருகில் இருந்த சிமெண்ட் சுவரில் பளார் என்று ஓங்கி முட்டினான்.

‘கொடக்’ என்ற சத்தத்துடன் தர்மாவின் மண்டை ஓடு பிளந்தது. சுவரில் ரத்தம் சிதறித் தெறிக்க, அவன் கண்கள் செருகின.

ரோலக்ஸின் பார்வை தரையில் கிடந்த ஒரு நீண்ட, துருப்பிடித்த இரும்புக் கம்பியின் மேல் விழுந்தது. அதை மின்னல் வேகத்தில் கையில் எடுத்தான். பயத்தில் நிலைகுலைந்து ஓட முயன்ற தர்மாவின் கணுக்காலில் அந்தக் கம்பியால் ஓங்கி ஒரு அடி கொடுத்தான். எலும்புகள் தவிடுபொடியாகும் சத்தம் அந்த நள்ளிரவில் பயங்கரமாக எதிரொலித்தது.

‘ஆஆஆ…’ என்று தர்மா அலறிக் கொண்டே தரையில் சரிந்தான்.

இப்போது ரோலக்ஸின் கண்களில் கருணை என்பதற்கு இடமே இல்லை. தார்ச்சாலையில் விழுந்து கிடந்த தர்மாவின் மார்பின் மீது ஏறி அமர்ந்தான். அவனது மூச்சுக்காற்று கனலாகத் தெறித்தது. கையில் இருந்த அந்தக் கூர்மையான இரும்புக் கம்பியை தர்மாவின் நெஞ்சுக்கு நேராகப் பிடித்தான். தர்மா உயிர் பிச்சை கேட்டுத் துடித்தான், ஆனால் ரோலக்ஸின் செவிகளுக்கு அது கேட்காது.

அந்த இரும்புக் கம்பியைத் தர்மாவின் மார்புக் கூட்டில் ஒரே குத்தாக இறக்கினான். விலா எலும்புகள் நொறுங்கி கம்பி உள்ளே பாய, தர்மாவின் வாயிலிருந்து ரத்தம் குபு குபுவென வெளியேறியது. ரோலக்ஸ் ஆத்திரத்தில் அந்தக் கம்பியை மீண்டும் மீண்டும் குத்திக் கிழிக்க, அவனது முகம், சட்டை என அனைத்தும் தர்மாவின் சூடான ரத்தத்தால் நனைந்தது.

கடைசியாக ஒரு முறை அந்தக் கம்பியை அவனது தொண்டையில் பாய்ச்சி இழுக்க, தர்மாவின் உடல் சில முறை துடித்துவிட்டு அப்படியே அடங்கியது. ரத்தச் சகதியில் ஒரு அசுரனைப் போல அமர்ந்திருந்தான் ரோலக்ஸ். அவனது வேட்டை முடிந்துவிட்டது, ஆனால் அந்த இடமே ஒரு சுடுகாடாக மாறியிருந்தது.

உடல் முழுக்கக் காயங்களுடன், மூச்சிறைக்க மயூராவுக்கு முன்னே மண்டியிட்டான் ரோலக்ஸ். மயூரா ஓடி வந்து ரத்தம் சொட்டும் ரோலக்ஸைத் தன் மடியில் கிடத்திக் கொண்டாள்.

“எனக்காக ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிற ரோலக்ஸ் ? என்னை ஏற்றுக்கோ ப்ளீஸ்.. !” என கதறினாள். ரோலக்ஸின் கண்கள் இப்போது மென்மையாகின. இந்த மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டு தான், அவளை இழப்பது எவ்வளவு பெரிய வலி என்பதை அவன் உணர்ந்தான்.

அருகில் இருந்த ஒரு சிறிய அம்மன் கோயில் மேடையில், வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த ஒரு மஞ்சள் நூல் காற்றில் பறந்து வந்து ரோலக்ஸின் கையில் விழுந்தது.

ரோலக்ஸ் மெதுவாக அந்த நூலை எடுத்தான். தன் காயங்களின் வலியையும் மறந்து, நடுங்கும் கைகளால் மயூராவின் கழுத்தைச் சுற்றிக் கட்டினான். அந்த நொடியில் வானம் பார்த்துக் கொண்டிருந்தது, ஒரு ஊமையின் மௌனமான காதலுக்கு அந்த மஞ்சள் நூலே சாட்சியானது.

அவன் சைகை செய்யவில்லை, பேசவில்லை. ஆனால், அவளது நெற்றியில் ஒரு நீண்ட முத்தத்தைப் பதித்தான். அந்த முத்தத்தில் ஆயிரம் வார்த்தைகள் அடங்கியிருந்தன..

“இனி நீ என் பாதி… உனது குரல் என் செவி, எனது மௌனம் உனது கவசம்.” மயூரா அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள். அந்தப் பாழடைந்த சாலையில், மௌனத்திற்கும் காதலுக்கும் இடையே ஒரு புதிய உலகம் பிறந்தது. இனி அவர்களைப் பிரிக்க எந்தச் சக்தியாலும் முடியாது.

அந்த உறுதியுடன் தான் இன்றும் அவனது கரம் மயூராவின் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறது.

 

வேட்டை தொடரும் ..⚓

❤️ Loading reactions...
2 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!