19
நள்ளிரவின் கரும்புகை போன்ற இருள், அந்தப் பிரம்மாண்டமான கடலை ஒரு கருப்புப் போர்வையால் மூடியிருந்தது. கப்பலின் அடிப்பாகத்தில் மோதிச் சிதறும் அலைகளின் ஓசை, அமைதியான இரவில் ஒரு போர்க்களத்தின் இரைச்சலைப் போலக் கேட்டுக் கொண்டிருந்தது.
அந்தப் பயங்கரமான ஓசையை ரசித்தபடி, கப்பலின் மேல்தளத்தின் விளிம்பில் நின்றிருந்தான் எட்வர்ட்.
அவரது விரல்களுக்கு இடையே இருந்த புகை Pipe வெளிவந்த மெல்லிய புகை, கடல் காற்றோடு கலந்து கலைந்து கொண்டிருந்தது. எட்வர்ட்டின் கண்கள் அந்த இருண்ட அலைகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாலும், அவரது மூளை ஒரு சதுரங்க ஆட்டத்தின் அடுத்தடுத்த நகர்வுகளைக் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது.
எட்வர்ட்டின் ஆழ்ந்த சிந்தனையைத் துண்டிக்கும் விதமாக, கப்பலின் கேப்டன் தயக்கத்துடன் அவர் அருகே வந்து நின்றார். எட்வர்ட் திரும்பாமலேயே, தனது புருவங்களை உயர்த்தி, புகையை ஊதியபடியே “என்ன?” என்பது போலச் சைகை காட்டினார்.
தொண்டையைச் சரிசெய்துகொண்ட கேப்டன், “சார்… நான் சொல்லப்போறது உங்களுக்குப் பிடிக்குமான்னு தெரியல. ஆனா, நீங்க செய்றது எதுவுமே சரியா இருக்கிறதா எனக்குத் தோணல!” என்றான்
எட்வர்ட் இப்போது மெல்லத் திரும்பி, தனது கூர்மையான விழிகளால் கேப்டனை ஏறிட்டுப் பார்த்தார். அந்தப் பார்வையில் இருந்த அதிகாரம் கேப்டனைச் சற்றே தடுமாற வைத்தது. இருந்தாலும், தன் எஜமானின் பாதுகாப்பின் மீது இருந்த அக்கறையினால் அவன் தொடர்ந்தான்.
“சார், அந்த ரோலக்ஸ்… அவன் ஒரு சாதாரண ஆள் கிடையாது. அவன் ஒரு காட்டுமிராண்டி! எப்போ, எதை, யாருக்காகச் செய்வான்னு அவனுக்கே தெரியாது. அவன் ஒரு ரத்தக் காட்டேரி… ரத்தத்துல புரண்டவன். அவனுக்குப் பணம் மட்டும் போதாது, அந்தப் பணத்தை விடவும் கொலை செய்றதுல அவனுக்கு ஒரு வக்கிரமான சந்தோஷம் இருக்கு. அப்படிப்பட்ட ஒரு மிருகத்தைத் தேடிப் போய்க் காப்பாத்தி, நம்ம கப்பல்ல ஏத்தினது ஒரு பெரிய ஆபத்து சார். இது நமக்கும் நம்ம நாட்டுக்கும் வீணான சிக்கலைத்தான் கொண்டு வரும். ஒருவேளை உங்க உயிருக்கே கூட இது ஆபத்தா முடியலாம்!” என்றான்
கேப்டனின் எச்சரிக்கையைக் கேட்கக் கேட்க, எட்வர்ட்டின் உதடுகளில் ஒரு மெல்லிய, மர்மமான புன்னகை அரும்பியது. வாயிலிருந்த பைப்பை மெல்ல எடுத்தவர், ஒரு சிறுபிள்ளையின் பேச்சைக் கேட்டு ரசிப்பது போலச் சிரித்தார்.
“Captain… Thanks for your advice . அவனைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். அவன் ஒரு மிருகம்னா, நான் ஒரு வேட்டைக்காரன், அந்த மிருகத்தை எப்படி அடக்கணும்னு எனக்குத் தெரியும். இந்த ஆட்டத்தை எப்படி விளையாடணும்னு நான் முடிவு பண்ணிட்டேன். I will handle him… don’t worry !” என்று உறுதியான குரலில் எட்வர்ட் பதில் சொன்னார்.
கேப்டன் மேலும் ஏதோ சொல்லத் துடித்தான். ஆனால், எட்வர்ட் தனது கையை உயர்த்தி அவனைத் தடுத்தார். அந்த ஒற்றைச் செய்கையில் ஒரு பேரரசனின் ஆணை இருந்தது. மேற்கொண்டு பேச விருப்பம் இல்லாத எட்வர்ட், “இனி நீ போகலாம்” என்பது போலக் கண்களால் உத்தரவிட, கேப்டன் மறுபேச்சு பேசாமல் அங்கிருந்து கனத்த இதயத்துடன் நகர்ந்து சென்றார்.
மீண்டும் அந்தப் pipeயை வாயில் சொருகிக் கொண்ட எட்வர்ட், புகையை மேகக் கூட்டமாக ஊதினார். கடல் அலைகளின் ஓசை இப்போது இன்னும் பலமாகக் கேட்டது. எட்வர்ட்டின் மனதிற்குள் பல ரகசிய பாரங்கள் இருந்தாலும், ரோலக்ஸ் இப்போது தனது பிடிக்குள் வந்திருப்பதை நினைக்கும்போது அவருக்கு ஒருவிதமான நிம்மதி பிறந்தது.
“ரோலக்ஸ்… நீ ஒரு மிருகம் தான். ஆனா, ஒரு வேட்டைக்காரனுக்குத் தெரியும், எந்த மிருகத்தை எப்போ வேட்டைக்கு விடணும்னு!” என்று எட்வர்ட் தனக்குத்தானே நினைத்துக் கொண்டார்.
அவரது கண்கள் இப்போது இருண்ட கடலைக் கடந்து, ஸ்காட்லாந்தின் கரையை நோக்கிப் பயணித்தன. அங்கே ரோலக்ஸை வைத்து அவர் நடத்தப்போகும் அந்தப் புதிய ஆட்டம், பல சாம்ராஜ்யங்களின் தலையெழுத்தையே மாற்றப்போகிறது என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அலைகளின் ஓசையையும் தாண்டி எட்வர்ட்டின் மனது வெற்றிக்கான கணக்குகளைப் போட்டுக் கொண்டிருந்தது.
அலைகளின் தாளத்திற்கேற்ப அந்தப் பிரம்மாண்டமான சொகுசுக் கப்பல் ஒரு தொட்டில் போல மெல்ல அசைந்து தாலாட்டியது. அந்த அறையினுள், தன் பிஞ்சு மழலை சாருவை இடது தோளில் சாய்த்து, முதுகில் மென்மையாகத் தட்டிக் கொடுத்து உறங்க வைத்துக் கொண்டிருந்தாள் மயூரா.
அவளது கால்கள் அறையின் தரை விரிப்பில் ஓசையின்றி குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாலும், மயூராவின் விழிகள் மட்டும் காந்தம் போல அறையின் ஓரத்தில் மௌனமாக அமர்ந்திருந்த ரோலக்ஸ் மீதே நிலைத்திருந்தன.
ரோலக்ஸ் அங்கே இருந்தாலும், அவனது மனம் அங்கே இல்லை. அந்த அறையின் சுவரில் மாட்டப்பட்டிருந்த ஒரு புகைப்படத்தில் அவனது பார்வை ஊடுருவி இருந்தது. அது ஏதோ ஒரு நாட்டின் பரபரப்பான துறைமுகம். வியர்வை சிந்த மூட்டை தூக்கும் தொழிலாளர்கள், ராட்சதக் கப்பல்கள், அந்தப் புகைப்படத்தின் ஒவ்வொரு அணுவிலும் அவனது கடந்த காலம் ஒளிந்திருந்தது. அவனது சாம்ராஜ்யம் உருவாவதற்கு முன், ஒரு சாதாரண மனிதனாக அந்தத் துறைமுகத்தில் அவன் சிந்திய வியர்வையும், பார்த்த அவமானங்களும் நிழலாடின.
அவனது ஆழமான மௌனத்தை மயூராவின் கூர்மையான பார்வை கலைத்தது. புகைப்படத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ரோலக்ஸ், தன் மீதான மயூராவின் பார்வையின் அழுத்தத்தை உணர்ந்து மெல்லத் தலை திருப்பினான்.
இருவரது கண்களும் சந்தித்துக் கொண்டன. ரோலக்ஸ் தன் புருவங்களை மெல்ல உயர்த்தி, “என்ன?” என்பது போல சைகையிலேயே வினவினான்.
மயூரா தன் தலையைச் சாய்த்து, “ஏன் அந்தப் படத்தையே பார்த்துக் கொண்டிருக்க? பழைய நினைவுகளா?” என அவளது விழிகள் மெளனமாக இந்தக் கேள்வியைத் தொடுத்தன.
ஒரு மெல்லிய பெருமூச்சுடன் ஆமாம் என்பது போலத் தலையசைத்தான் ரோலக்ஸ். ஆனால், அடுத்த நொடியே அவனது பார்வை அந்தப் புகைப்படத்தை விட்டு விலகி, எதிரே நின்றிருந்த தன் காதல் மனைவி மயூராவின் மீது நிலைத்தது.
விளக்கின் மங்கலான ஒளியில் அவளது வசீகரிக்கும் அழகு அவனை வசியம் செய்தது. மையிடாத அவளது காந்தக் கண்கள், உறங்கும் குழந்தையை அணைத்திருக்கும் அந்தத் தாய்மையின் கனிவு, எல்லாவற்றிற்கும் மேலாக அந்த நாவல் பழ நிற உதடுகள்… அவன் பார்த்த எத்தனையோ சாம்ராஜ்யங்களை விட அவளது அழகு மேலோங்கி நின்றது. ரோலக்ஸ் வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பார்வையில் அதிகாரமில்லை, மாறாக அளவற்ற காதல் மட்டுமே ததும்பியது.
அவனது தீர்க்கமான பார்வையைக் கண்டு மயூராவுக்குள் ஒரு மெல்லிய நாணம் துளிர்விட்டது. தன் முத்துப்பற்கள் மின்ன, உதடுகளைச் சுழித்து அவள் ஒரு குறும்புச் சிரிப்புச் சிரித்தாள்.
அவளது இதழ்களில் பூத்த அந்தச் சிறு புன்னகை, அந்த வெள்ளை வேந்தனை ஒரு நொடியில் வீழ்த்திவிட்டது. அதிகாரத்தின் சிகரத்தில் அமர்ந்திருப்பவன், தன் காதல் மனைவியின் முன்னால் வெறும் சரணாகதி அடைந்த காதலனாக மாறினான். தன் குறும்பான மீசையை அசைந்து மயிர்கள் விரிய, அவளை ஆழமாகப் பார்த்த ரோலக்ஸ், மெல்லிய இதழ் அசைவில் “I Love You” என்று சொல்ல, மயூரா அந்தச் சொல்லின் வெப்பத்தில் உருகிப் போனாள்.
கையில் இருந்த சாருவை மெல்ல நகர்ந்து சென்று, அருகில் இருந்த மென்மையான வெல்வெட் மெத்தையில் கிடத்தினாள். உறக்கத்தில் இருந்த அந்தப் பிஞ்சு மழலையின் சீரான சுவாசம் மட்டும் அந்த அறையில் கேட்டது. மயூரா நிதானமாக நடந்து சென்று, கடல் காற்றால் அசைந்து கொண்டிருந்த அந்த ஜன்னல் திரைச்சீலைகளைப் பொறுமையாக மூடினாள். அறையின் பிரகாசமான விளக்குகளை அணைக்க, நிலவொளி மட்டும் ஜன்னல் திரைகளின் இடுக்கு வழியே ஊடுருவி ஒரு நீல நிற மாயாஜாலத்தை அங்கே உருவாக்கியது.
தன் பின்னியிருந்த தலைமுடியை அவள் மெல்ல அவிழ்த்து விட, அது மலை மேலிருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் கருப்பு அருவியைப் போல அவளது முதுகில் படர்ந்து விரிந்தது. அவளது கூந்தலின் வாசம் அந்த அறையெங்கும் ஒரு வசியத்தை ஏற்படுத்தியது.
மயூராவின் விழிகளில் தெரிந்த காதலைப் புரிந்துகொண்ட ரோலக்ஸ், ஒரு நிமிடம் தலை திருப்பித் தன் மகனைப் பார்த்தான். அவள் எதற்கும் கலங்காமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
அவள் அவனருகே நெருங்கி வந்தாள். தன் அடையாளங்களை எல்லாம் களைந்துவிட்டு, ஒரு மெல்லிய போர்வையை மட்டும் இழுத்துப் போர்த்திக்கொண்டு, அவனது இரும்பு போன்ற மார்பில் மெல்லச் சாய்ந்து படுத்தாள். காயங்களால் கட்டுப் போடப்பட்டிருந்த அவனது கரங்கள், இப்போதும் ஒரு உடும்புப் பிடியைப் போல அவளைத் தன் வசப்படுத்தின.
அவனது உடலோடு தன் மேனியை ஒட்டிக்கொண்டு படுத்த மயூரா, அவனது மார்பில் தன் இதழ்களை மெல்லப் பதித்தாள். அந்த முத்தத்தில் அவனது காயங்களுக்கான மருந்தும், அவளது தீராத காதலும் கலந்திருந்தது.
“காயம் வலிக்கிறதா ரோலக்ஸ்?” என்று அவள் ரகசியமாக கேட்க, ‘இல்லை என்பது போல தலையாட்டியவன் தனது இதழ்களை அவளது நெற்றியில் பதித்தான்.
அவளது விரல்கள் அவனது கட்டுப் போடப்பட்ட கைகளை மெல்லத் தடவிக்கொடுக்க, ரோலக்ஸ் அவளது முகத்தைத் தூக்கித் தன் கண்களோடு நேருக்கு நேர் சந்திக்க வைத்தான். அந்த இருட்டிலும் அவளது கண்கள் வைரங்களைப் போல ஜொலிக்க, அவளது இதழ்களைத் தன் இதழ்களால் சிறைபிடித்தான்.
கப்பலின் மெல்லிய அசைவும், கடலின் ஆழமான இரைச்சலும் அவர்களின் காதலுக்குப் பின்னணி இசையாக மாறின. ஒரு போர்வீரனின் கரங்களும், ஒரு தேவதையின் மென்மையும் அங்கே சங்கமித்தன. அந்த இரவு அவர்களின் காதலுக்குச் சாட்சியாக நீண்டு கொண்டே போனது.
அவனது மார்பின் சூட்டில் முகம் புதைத்துப் படுத்திருந்த மயூராவின் நெற்றியின் வியர்வைத் துளிகள் அரும்பியிருந்தன. அந்த நிசப்தமான இரவில், ரோலக்ஸின் இதயத் துடிப்பு வழக்கத்திற்கு மாறாக ஒரு போர்க்களத்து முரசொலி போல வேகமாக அதிர்த்ததை அவள் உணர்ந்தாள். அவனது இதயத்தின் படபடப்பு ஏதோ ஒரு பாரத்தைச் சுமப்பதைக் கண்டுகொண்டவள், மெல்லத் தலைநிமிர்ந்து அவனது முகத்தைப் பார்த்தாள்.
ரோலக்ஸின் விழிகளில் அவள் மீதான அளவற்ற காதல் வழிந்தாலும், அந்தப் பார்வைக்கு அப்பால் ஏதோ ஒரு ஆழ்ந்த சிந்தனை அவனை நிலைகுலையச் செய்திருந்தது. அவன் மயூராவிடம் சொல்லத் துணிந்தும், சொல்ல முடியாமலும் தவிப்பதை அவனது இறுக்கமான தாடைகள் காட்டிக் கொடுத்தன. மயூராவின் மூக்கு நுனியில் மென்மையாக ஒரு முத்தத்தைப் பதித்தவன், மீண்டும் ஜன்னலுக்கு வெளியே தெரியும் அந்த எல்லையற்ற கடலையே வெறித்துப் பார்க்கத் தொடங்கினான்.
மயூரா விடவில்லை. தன் மென்மையான விரல்களால் அவனது கரடுமுரடான தாடையைப் பற்றித் தன் பக்கம் திருப்பினாள்.
“என்ன யோசனை? ” என்று அவள் விழிகளால் வினவினாள்.
ஒரு கணம் மௌனமாக இருந்த ரோலக்ஸ், தன் விரல்களின் அசைவாலேயே பதில் சொன்னான். அந்தச் சைகையின் மொழியை சட்டென்று கண்டுகொண்ட மயூரா.
“என்ன… பைரவனைப் பற்றி நினைக்கிறாயா?” என்று அவள் கேட்க, அவனது கண்கள் கலங்கின.
ஆமாம் என்பது போலத் தலையாட்டிய ரோலக்ஸ், தன் ஆற்றாமையைச் சைகையில் விவரித்தான். “நான் இங்கே உன்னோடும் சாருவோடும் பாதுகாப்பாக வந்துவிட்டேன். ஆனால் அங்கே… பைரவன்? அவன் நிலைமை என்னவென்று தெரியவில்லை. அவனது உயிருக்கும் ஆபத்து இருக்குமோ? நான் உயிரோடு இருக்கும் விஷயம் அவனுக்குத் தெரியாது. ஒருவேளை நான் இறந்துவிட்டதாக நினைத்து அவன் என்ன செய்வான்? என் நிழலாகவே வாழ்ந்தவனுக்கு, நிழலை நிஜம் பிரிந்த வலி தாங்க முடியாதே மயூரா…” என்று அவனது மன ஓட்டம் சைகைகளாகப் பரிணமித்தன.
அவனது மன உளைச்சலைப் புரிந்து கொண்ட மயூரா, அவனைத் தணிக்கும் விதமாக அவனது கரங்களை இறுகப் பற்றிக் கொண்டவள்.
“ரோலக்ஸ்… அந்த இருண்ட உலகத்திலிருந்து நாம் வெளியே வந்துவிட்டோம். மீண்டும் அதைப் பற்றி யோசித்து நம்மை நாமே வருத்திக்கொள்ள வேண்டாம். பைரவன் ஒரு வீரன், அவன் தன்னைத் தானே தற்காத்துக் கொள்வான்,” என்று அவள் அமைதியாகச் சொன்னாள்.
அவளது வார்த்தைகளில் இருக்கும் எதார்த்தம் அவனுக்குப் புரிந்தது. “நாம ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிக்கப் போகிறோம். இந்த எட்வர்ட் யார் என்று நமக்குத் தெரியாது. ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக அவர் உன் உயிரைக் காப்பாற்றி, நமக்காக ஒரு புதிய பாதையை அமைத்துக் கொடுத்திருக்கிறார். அதன் பின்னணியில் என்ன மர்மம் இருந்தாலும், அவர் செய்த உதவிக்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இனி பழைய ரோலக்ஸ் இறந்துவிட்டான். இனி நமக்காக, நம் மகளுக்காக எட்வர்ட் காட்டும் வழியில் போவோம். அங்கே அவர் என்ன வேலை கொடுத்தாலும் செய்வோம், ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்வோம்,” என்று மயூரா நம்பிக்கையூட்டினாள்.
அவளது தெளிவான பேச்சில் ஒரு நியாயம் இருப்பதை ரோலக்ஸ் உணர்ந்தான். “சரி மயூரா… உன்னுடைய விருப்பப்படியே ஆகட்டும். இனி நமக்கான ஒரு வாழ்வை மட்டும் நாம் உருவாக்கிக்கொள்வோம்,” என்று அவன் உறுதியளித்தான்.
அவனது மாற்றத்தைக் கண்டு மகிழ்ந்த மயூரா, அவனது கன்னத்தில் ஒரு முத்தத்தைப் பதித்துவிட்டு, மீண்டும் அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள். ஆனால், வெளியே அமைதியாகத் தெரிந்த ரோலக்ஸின் மனதுக்குள்,
“பைரவா… நீ எங்கே இருக்கிறாய்?” என்ற கேள்வி மட்டும் ஒரு நீங்காத வடுவாகத் தங்கிவிட்டது. கடலின் அலைகள் போலவே அவனது நினைவுகளும் அலைபாய்ந்து கொண்டிருந்தன.
விசாகப்பட்டினத்தின் அலைகள் கரையை ஆக்ரோஷமாக முட்டி மோதிக்கொண்டிருக்க, அந்த நள்ளிரவு நேரத்தில் ரோலக்ஸின் பிரம்மாண்டமான அரண்மனை மாளிகையிலிருந்து வெளியேறிய பைரவன், தனது இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தான்.
வாசலிலேயே அவனது வருகைக்காகக் காத்திருந்த அடியார்கள், அவன் வருவதைக் கண்டதும் மரியாதையுடன் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். ஆனால், பைரவனின் கண்கள் அவர்களைக் காணவில்லை, அவனது சிந்தனை முழுவதும் வேறு எங்கோ இருந்தது. யாரையும் ஏறெடுத்தும் பார்க்காமல், ஒரு இயந்திரத்தைப் போல நேராகத் தனது தனி அறைக்குள் புகுந்து கதவை உள்பக்கமாகத் தாளிட்டான். அந்தச் சத்தம் அந்த நிசப்தமான மாளிகையில் ஒரு எச்சரிக்கையைப் போல ஒலித்தது.
தனது மேசையின் மீது கொண்டு வந்திருந்த அந்த மர்மமான பொருளை வைத்தான். அதன் அருகிலேயே அமர்ந்தவன், அருகில் இருந்த விஸ்கி பாட்டிலைத் திறந்து, ஒரு கிளாஸில் ஊற்றினான். ரத்தத்தின் நிறத்திலிருந்த அந்த மதுவை, ஒரு மிடறு கூட இடைவெளியின்றி இரண்டு முறை ‘மடக் மடக்’ என்று ஆவேசமாகக் குடித்துத் தீர்த்தான். மூன்றாவது முறை கிளாஸை நிரப்பியவன், ஒரு சிட்டிகை மட்டும் அருந்திவிட்டு, மேசையின் மீது வைத்திருந்த அந்தப் பொருளை உற்றுப் பார்த்தான்.
விஸ்கி நனைத்த அவனது உதடுகளில் இப்போது ஒரு வக்கிரமான சிரிப்பு அரும்பியது. அந்தச் சிரிப்பில் கர்வமும், துரோகமும், வெற்றியின் களிப்பும் சரிபாதியாகக் கலந்திருந்தன. அவனது கண்கள் மின்னின. அந்தப் பொருளை வெறித்துப் பார்த்துக் கொண்டே, மெல்லிய, கனமான குரலில்
“ரோலக்ஸ்…!” என உச்சரித்தான்…
“ரோலக்ஸ்… நீ செத்துப் போயிட்டதா இங்க நிறையப் பேர் நம்பிட்டு இருக்காங்க. உன் எதிரிகள் கொண்டாடிட்டு இருக்காங்க. ஆனா நான் நம்ப மாட்டேன்… எனக்கு நல்லாவே தெரியும், நீ எங்கோ ஒரு மூளையில ஒளிஞ்சுட்டு இருக்கன்னு!”
கையில் இருக்கும் கிளாஸைச் சுழற்றியபடி , “ரோலக்ஸ்… உன் கையிலிருந்து உன் ராஜ்ஜியம், உன் அதிகாரம், உனக்குச் சொந்தமான எல்லாமே இப்போ என்கிட்ட வந்துடுச்சு. பாக்கி இருக்கிறது அந்த ACP சர்மா மட்டும்தான். அவன் மட்டும் என் கையில கிடைச்சா, உன்னோட முழு ராஜ்ஜியமும் என் காலடியில இருக்கும். நீ எங்க வேணாலும் இருந்துட்டு போ, உயிரோடவே இரு… ஆனா இந்த விசாகப்பட்டினத்துல மறுபடியும் உன்னோட காலடி படக்கூடாது!” என்றவனது குரல் மெல்ல ஆக்ரோஷமாக மாறியது.
“இனிமேல் இது என்னோட கோட்டை! உன்னோட நிழல் கூட இங்க விழக்கூடாது. உன்னோட சரித்திரம் முடிஞ்சுது ரோலக்ஸ்… இனிமேல் பைரவனோட சகாப்தம்!” என்று கர்ஜித்தவன், ஆவேசத்தில் தன் கையை மேசையின் மீது ‘படார்’ என்று ஓங்கி அடித்தான். அந்த அடியில் மேசையின் மீது இருந்த அந்தப் பொருள் எகிறித் தரையில் விழுந்து சிதறியது.
வேட்டை தொடரும் ..⚓
