21
விசாகப்பட்டினம் துறைமுகத்தின் ஆரவாரங்களுக்கு அப்பால், கைவிடப்பட்ட ஒரு பழைய கப்பல் கட்டும் தொழிற்சாலை . துருப்பிடித்த இரும்புத் தூண்களும், இடிந்து விழுந்த மேற்கூரைகளும் அந்த இடத்திற்கு ஒரு சுடுகாட்டின் அமைதியைக் கொடுத்திருந்தன. ஆனால், அந்த நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு ஆக்ரோஷமான அலறல்களும், எலும்புகள் நொருங்கும் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தன.
சுற்றிலும் அடியார்கள் பட்டாளம். அவர்களின் கைகளில் கூர்மையான கத்திகள், நவீன ரகத் துப்பாக்கிகள் பெயரிடப்படாத விசித்திரமான இரும்பு ஆயுதங்கள் மின்னின. அவர்கள் அனைவரது பார்வையும் மையப்புள்ளியில் நின்றிருந்த அந்த உருவத்தின் மீது நிலைத்திருந்தது.
அவன் மனிதனா அல்லது காட்டேரியா? கப்பல் கட்டப் பயன்படுத்தும் ஒரு மிகப்பெரிய இரும்புச் சுத்தியலைத் தனது ஒற்றைக் கையால் அநாயாசமாகப் பிடித்துக் கொண்டு, எதிரே இருப்பவனைப் போட்டுத் துவம்சம் செய்து கொண்டிருந்தான் ஜகா ரெட்டி.
காண்டாமிருகம் போன்ற அவனது உடலமைப்பும், கண்களில் தெரிந்த அந்த ரத்த வெறியும் பார்ப்பவர்களையே நிலைகுலைய வைத்தன.
அவன் அடிக்கும் ஒவ்வொரு அடியிலும், எதிரே இருப்பவனின் எலும்புகள் தூள் தூளாக நொருங்கும் சத்தம் அந்தப் பாழடைந்த தொழிற்சாலை எங்கும் எதிரொலித்தது. அங்கிருந்த கொடூரமான அடியாள்களே அந்தச் சத்தத்தைக் கேட்டு முகம் சுளித்தனர். ஜகாவிடம் இரக்கம் என்ற சொல்லுக்கே இடமில்லை. எதிரில் இருப்பவன் உடலில் உயிர் இருக்கிறதா இல்லையா என்பதைக் கூட அவன் உணரவில்லை, அவனது கோபம் தீரும் வரை அந்தச் சடலத்தைத் தொடர்ந்து சிதைத்துக் கொண்டே இருந்தான்.
அதே சமயம், அந்தத் தொழிற்சாலையின் வாசலில் பைரவனின் அடையாளமான அந்த வெள்ளை நிறக் கார் வந்து நின்றது. டயர்கள் தரையை உரசி எழுப்பிய சத்தத்தோடு கார் நிற்க, பைரவன் கம்பீரமாக இறங்கினான். தன் ஆட்களை வெளியிலேயே நிற்கச் சொல்லிவிட்டு, ஒருவித அதிகாரத் தோரணையில் உள்ளே நுழைந்தான்.
பைரவன் வருவதைப் பார்த்த ஜகாவின் அடியாள் ஒருவன் ரங்கா, அவசரமாக ஓடிச் சென்று ஜகாவின் காதோரம் குனிந்து,
“ஜகா… பைரவன் வந்திருக்கிறான்!” என்று ரகசியமாகச் சொன்னான்.
அந்தக் குரலைக் கேட்டு, ஜகா தன் வெறியாட்டத்தை நிறுத்தினான். முகத்தில் அடிபட்டவனின் ரத்தத் தெறிப்புகள் படிந்திருக்க, மெதுவாகத் தலை திருப்பினான். அவனது கண்கள் இன்னும் சிவந்திருந்தன.
“ம்ம்… வரட்டும்,” என்று சுருக்கமாகத் தலையசைத்தவன், மீண்டும் ஒருமுறை கீழே பிணமாகக் கிடப்பவனைப் பார்த்தான். அவன் முற்றிலுமாக உயிர் பிரிந்திருப்பதை உறுதி செய்துகொண்டு, தன் ஆட்களிடம் சைகை காட்டியவன்.
“இவனைத் தூக்கிக் கடல்ல வீசுங்கடா!” என்று சொல்லிவிட்டு, கையில் இருந்த ரத்தக்கறை படிந்த சுத்தியலை வீசி எறிந்தான்.
வேகமாகச் சென்று தன் முகத்திலும் உடையிலும் படிந்திருந்த ரத்தக் கறையை கழுவிக் கொண்டு, துண்டை உதறியபடி வெளியே வந்தான் ஜகா. எதிரே பைரவன் நின்று கொண்டிருந்தான்.
“வா பைரவா!” என்று உரத்த குரலில் அழைத்தபடி, ஜகா முன்னே வந்து பைரவனை ஒரு பழைய நண்பனைப் போலக் கட்டித் தழுவிக் கொண்டான். இரு அதிகார மையங்கள் அங்கே சங்கமித்தன. ஆனால், அந்தத் தழுவலுக்குப் பின்னால் எத்தனை துரோகங்களும், ரகசியத் திட்டங்களும் ஒளிந்திருக்கின்றன என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.
அந்தப் பாழடைந்த தொழிற்சாலையின் மேல் தளத்தில் இருந்த ஒரு ரகசிய அறைக்குள் இருவரும் நுழைந்தனர். அங்கே ஒரு பழைய தேக்கு மர மேஜை, அதன் மேல் சில வரைபடங்களும் ஒரு பெரிய இரும்புப் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. ஜகா ரெட்டி தனது சட்டைப் பையிலிருந்து ஒரு சிகாரை எடுத்துப் பற்றவைத்து, அதன் புகையை அறையெங்கும் பரவச் செய்தான்.
“பைரவா… இந்த வாரம் வர்ற அந்த நார்வே சரக்குக் கப்பல் தான் நமக்கு ரொம்ப முக்கியம். அதுல வர்றது வெறும் இரும்புத் தாது மட்டும் இல்ல, அதையும் தாண்டி அடியில் இருக்கிற அந்த ரகசியப் பார்சல்கள் தான் நம்ம ராஜ்ஜியத்தை இன்னும் பெருசாக்கும்,” என்றான் ஜகா.
பைரவன் அமைதியாகத் தன் கையில் இருந்த கோப்பைப் பார்த்தபடி பேசத் தொடங்கினான். “எனக்குத் தெரியும் ஜகா. ஆனா அந்தச் சரக்கு இங்கிருந்து பாதுகாப்பா வெளிய போகணும்னா, இங்க இருக்கிற சில வாய்ங்களை நாம அடைக்கணும். ஏற்கனவே இருந்த AC சர்மா மாதிரி ஆட்கள் இன்னும் நோண்டிக்கிட்டு இருக்காங்க.”
ஒரு ஏளனச் சிரிப்பு சிரித்த ஜகா. “சர்மா வா ? அவனைப் பத்தி கவலைப்படாதே. ஆனா மேலிடத்துல இருந்து அழுத்தம் வருது. மந்திரிகளுக்குக் கொடுக்க வேண்டிய அந்த 20 கோடி ரூபாய் கமிஷன் இன்னும் போய்ச் சேரலன்னு அவங்க PA போன் பண்ணிக்கிட்டே இருக்கான். லோக்கல் போலீஸ்காரங்களுக்கு மாசம் அஞ்சு லட்சம் போயிட்டு இருக்கு, ஆனா இந்த முறை இன்ஸ்பெக்டருக்கு மட்டும் கொஞ்சம் அதிகமாத் தூக்கிப் போடணும்… ஏன்னா செக்-போஸ்ட்ல அவன் தான் நம்ம ஆளு.”
பைரவன் மேஜை மீது இருந்த அந்த இரும்புப் பெட்டியைத் திறந்தான். அதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புதிய ஐநூறு ரூபாய் நோட்டுக் கட்டுகள் கண்சிமிட்டின. “இதோ, மந்திரிகளுக்குக் கொடுக்க வேண்டிய முதல் தவணை ரெடியா இருக்கு. இதைச் சரியான ஆள் மூலமா அனுப்பிடுறேன். அப்புறம் இந்த துறைமுகத்துல இப்போ நடக்கிற இந்தச் சின்னச் சின்னத் திருட்டுகளையும், கொள்ளைகளையும் கொஞ்சம் குறைச்சுக்கச் சொல்லு உன் ஆட்களை. ஏன்னா ரொம்பச் சத்தம் வந்தா மேல இருக்கிறவங்களுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.”
“பயப்படாதே பைரவா,” என்று ஜகா குறுக்கிட்டான். “கொள்ளை அடிக்கிறது நம்ம உரிமை. அதுல வர லாபத்துல தான் நாம இந்தத் துறைமுகத்தையே கட்டி ஆளுறோம். வர்ற சரக்குக் கப்பல்ல ஒரு பத்து சதவீதத்தை நாம அமுக்கலைன்னா, நமக்கு எதுக்கு இந்த தாதா பட்டம்? எந்த போலீஸோ… நம்ம வழிக்கு வரலைன்னா, இன்னைக்கு செத்தானே அந்தத் தொழிலாளி, அவன் கதிதான் எல்லாருக்கும்!”
பைரவன் மெல்லத் தலையசைத்தான். “சரி, அந்த கபில் கிட்ட இருந்து தகவல் ஏதாவது வந்ததா? அவன் தான் இந்த சரக்குக் கப்பலுக்குப் பின்னாடி இருக்கிற பெரிய தலைன்னு கேள்விப்பட்டேன்.”
ஜகாவின் முகம் சற்றே மாறியது. “கபில் … அவன் ஒரு புதிரா இருக்கான். ஆனா அவன் கொடுக்கிற பணம் சரியா வந்துடுது. இப்போதைக்கு அவனோட கைகோர்த்துப் போறது தான் நல்லது. ரோலக்ஸ் இல்லாத இந்த நேரத்துல, நமக்கான வருமானம் குறையக் கூடாது… அதுதான் என் குறிக்கோள்.”
பணக் கட்டுகளைப் பங்கு பிரித்துக் கொண்டே, அடுத்த வாரம் துறைமுகத்திற்கு வரப்போகும் அந்தப் பெரிய வேட்டைக்காக இருவரும் ஒரு ரகசியத் திட்டத்தைத் தீட்டினார்கள். அதிகாரமும், பணமும், ரத்தமும் கலந்த அந்த அறைக்குள் அடுத்த ஒரு பெரிய அழிவுக்கான விதை விதைக்கப்பட்டது.
அறையில் பணக்கட்டுகளின் வாசமும், சிகாரின் புகையும் கலந்திருக்க, பைரவன் மெல்ல அந்தத் துலக்கப்படாத ரகசியத்தைத் தோண்டத் தொடங்கினான்.
“ஜகா… அதெல்லாம் இருக்கட்டும். இன்னைக்குக் காலைல துறைமுகம் Dock பக்கத்துல ஒரு கொலை நடந்திருக்கு. அந்த மொரிங் போஸ்ட்ல அடிச்சுச் சிதைச்சுக் கிடந்தானே ஒரு தொழிலாளி… அது உன் வேலைதானே? எதுக்காக அந்த இடத்துல அவ்வளவு கொடூரமா ஒருத்தனை முடிச்ச?” என்று பைரவன் நிதானமாகக் கேட்டான்.
ஜகா ரெட்டி ஒரு ஏளனச் சிரிப்புடன் தன் கையில் இருந்த அந்தப் பிரம்மாண்டமான இரும்புச் சுத்தியலை ஒரு செல்லப் பிராணியைத் தடவுவது போலத் தடவிக் கொண்டிருந்தான். அவனது விரல்களில் இன்னும் ஒட்டியிருந்த உலர்ந்த ரத்தக்கறையை அவன் ஒரு பதக்கம் போலக் கர்வமாகப் பார்த்தான்.
“ஆமாம் பைரவா, அது என் ஆளுங்கதான் செஞ்சாங்க. ஆனா அவன் வெறும் தொழிலாளி மட்டும் இல்ல… ஒரு சுத்தமான துரோகி! நம்ம ராஜ்ஜியத்துல இருந்துகிட்டு, நம்ம தட்டுல சோறு தின்னுட்டு, ACP சர்மாவுக்கு இந்தத் துறைமுகத்தோட ரகசியப் பாதைகளைப் பத்தியும், நாம சரக்கு இறக்குற இடத்தைப் பத்தியும் மெசேஜ் அனுப்பிட்டு இருந்தான். அதான் மத்தவங்களுக்கு ஒரு பாடமா இருக்கட்டும்னு, அவன் உடம்புல ஒரு எலும்பு கூட மிஞ்சாத அளவுக்கு முடிச்சுட்டேன். துரோகிகளுக்குத் தண்டனை வெறும் மரணமா இருக்கக்கூடாது, அது ரத்தத்துல எழுதப்பட்ட பாடமா இருக்கணும்!” என்று ஜகா கொந்தளித்தான்.
பைரவன் முகத்தில் எந்தச் சலனமும் காட்டவில்லை. கல்லால் செதுக்கிய சிலை போல அமர்ந்திருந்தான். “சரி சரி… துரோகம்னு வந்துட்டா அதுக்கு இதுதான் முடிவு. அதுல நான் தலையிடல,” என்று மேலே அந்தப் பேச்சை வளர்க்காமல் அப்படியே அமுக்கினான்.
ஆனால், பைரவனின் மனதிற்குள் வேறொரு நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. ஜகாவுக்குத் தெரியாத ஒரு ரகசியம் பைரவனின் இதயத்தை ரணமாக்கிக் கொண்டிருந்தது.
“மற்றவர்கள் நினைப்பது போல சர்மா வெறும் போலீஸ்காரன் மட்டும் கிடையாது… அவன் ரோலக்ஸின் பல ரகசியங்களைப் பதுக்கி வைத்திருக்கும் பெட்டகம்,” என்று பைரவன் தனக்குள் நினைத்துக் கொண்டான்.
பைரவனின் கண்கள் ஜகாவைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், அவனது எண்ணங்கள் மட்டும் அந்தச் சிதைந்த சடலத்தைச் சுற்றித் திரிந்தன. “அந்தத் தொழிலாளிக்கு சர்மாவைத் தெரியுமா? ஒருவேளை ஜகா அவனைக் கொல்வதற்கு முன்னால் அவன் மட்டும் என் கையில் கிடைத்திருந்தால்… எப்படியாவது அவனிடம் இருந்து சர்மாவைப் பற்றிய துப்புக்களை வாங்கியிருப்பேனே! சர்மா எங்கே பதுங்கியிருக்கிறான், ரோலக்ஸின் அடுத்த திட்டம் என்ன என்பது அந்தத் தொழிலாளிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறதே! ஜகா அவசப்பட்டு அந்தத் துரோகியைச் சடலமாக்கிவிட்டானே,” எனப் பைரவன் மனதிற்குள் குமைந்தான்.
அவன் முகத்தில் தெரிந்த அந்தச் சிறிய இறுக்கத்தைக் கவனித்த ஜகா, “என்ன பைரவா… எதையோ யோசிக்கிற?” என்று கேட்டான்.
சட்டென்று சுதாரித்துக் கொண்ட பைரவன், ஒரு பொய்யான புன்னகையை உதிர்த்துவிட்டு, “ஒன்னும் இல்ல ஜகா… இந்தத் துறைமுகத்துல இன்னும் எத்தனை ஓட்டைகள் இருக்குன்னுதான் யோசிச்சேன். இனிமே நாம இன்னும் ஜாக்கிரதையா இருக்கணும்,” என்று மழுப்பினான்.
ஆனால் பைரவனுக்கு நன்றாகத் தெரியும், சர்மா கையில் இருக்கும் அந்த ஒரு ரகசிய ஆவணம் மட்டும் கிடைத்துவிட்டால், அவன் ஜகாவையும் மிஞ்சி இந்த உலகத்தையே ஆள முடியும். ஜகா செய்த அந்த அவசரக் கொலை, பைரவனின் ஒரு பெரிய வாய்ப்பைப் பறித்துவிட்டதாக அவன் உணர்ந்தான். ஜகாவிடம் இதைப் பகிர்ந்து கொள்ளவும் முடியாது; பகிர்ந்தால் ஜகாவுக்கே சர்மா மீதான ஆர்வம் வந்துவிடும்.
மெல்ல ஜகாவின் பக்கம் சாய்ந்த பைரவன், குரலைத் தாழ்த்திக் கேட்டான். “இருந்தாலும் ஜகா… என் மனசுக்குள்ள ஒரு சந்தேகம் ஓடிக்கிட்டே இருக்கு. அந்த ரோலக்ஸ்… அவன் நிஜமாவே இறந்துட்டானா? இல்ல எங்கையாவது மறைஞ்சு இருந்து காய நகர்த்துறானா? அவன் உடம்பு கிடைக்காத வரைக்கும் எனக்கு இந்தச் சந்தேகம் தீராது.”
ஜகா ரெட்டி வாய்விட்டுச் சிரித்தான். அந்தப் பாழடைந்த கட்டிடமே அதிரும் அளவுக்கு அவனது சிரிப்பு இருந்தது. பைரவனின் தோளில் பலமாகத் தட்டிய ஜகா, அவனை உசுப்பேற்றும் விதமாகப் பேசத் தொடங்கினான்.
“பைரவா! உனக்கு ஏன் இன்னும் அந்தப் பழைய பயம் போகல? அந்த ரோலக்ஸ் செத்து அஞ்சு அடுக்கா கடலுக்குள்ள போயிருப்பான். கடலோட ஆழமும், என்னோட ஆட்களோட கணக்கும் எனக்குத் தெரியும். இனி அவனைப் பத்தி யோசிச்சு உன் நேரத்தை வீணாக்காதே. அவன் ஒரு முடிஞ்சு போன சரித்திரம்!”
ஜகா பைரவனின் கண்களை உற்றுப் பார்த்துத் தொடர்ந்தான். “இப்போ பாரு… இந்த விசாகப்பட்டினம் துறைமுகமே உன் காலடியில கிடக்கு. அந்த ACP சர்மாவோ, உன்னைத் தொடக்கூட முடியாது. ரோலக்ஸ் இருந்த இடத்துல இப்போ நீதான் இந்தத் துறைமுகத்துக்கு மகாராஜா! இனிமே ரோலக்ஸ் விசுவாசின்னு சொல்லிக்காத… பைரவன் சாம்ராஜ்யம்னு சொல்லு. நீ நினைக்கிறதெல்லாம் நடக்கும். நான் உன் பக்கம் நிழலா இருப்பேன்!”
ஜகாவின் வார்த்தைகள் பைரவனுக்குள் ஒரு புதிய கர்வத்தை ஏற்படுத்தின. ரோலக்ஸ் மீது இருந்த அந்தப் பயம் மெல்ல மறைந்து, அதிகாரத்தின் போதை தலைக்கேறத் தொடங்கியது. ஆனால், அதே நேரம் ஜகாவின் கண்களில் தெரிந்த ஒரு விசித்திரமான மின்னல், அவன் பைரவனைத் தன் விரல் நுனியில் ஆட்டப் பார்க்கிறானா என்ற கேள்வியையும் எழுப்பியது.
வேட்டை தொடரும் ..⚓
