49
கட்ச் துறைமுகத்தின் தரைவழிச் சதித்திட்டம் வெற்றிகரமாக முடிந்த அந்த நள்ளிரவுக்குப் பிறகு, ACP ஷர்மாவின் பார்வையில் ரோலக்ஸ் வெறும் பாதாள உலகக் கடத்தல்காரனாக மட்டும் தெரியவில்லை. சட்டம், சுங்கத் துறை, சர்வதேசக் கடல் வர்த்தகம் என அனைத்தின் பலவீனங்களையும் தன் ஒற்றைப் பார்வையில் கணித்துச் செயல்படும் ஒரு மாபெரும் அசுரனாகவே உருவெடுத்திருந்தான்.
அடுத்தடுத்த வாரங்களில், ஷர்மாவும் ரோலக்ஸும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளத் தொடங்கினர். ஒவ்வொரு சந்திப்பின் போதும், ஷர்மா தன் கறுப்பு நிறச் சாட்டின் பையில் ஏதேனும் ஒரு சர்வதேசக் கப்பலின் ரகசிய ஆவணங்களையும், ரேடார் குறியீடுகளையும் கொண்டு வந்து ரோலக்ஸிடம் நீட்டுவான்.
“ரோலக்ஸ்… இப்போ வர்ற சரக்கு சாதாரணமானது இல்ல. கிழக்கு ஐரோப்பாவிலிருந்து வர்ற ரகசியத் தொடர்புச் சாதனங்கள், பிளாட்டினப் பாளங்கள். வழக்கம்போல மும்பைக்கும் கொல்கத்தாவுக்கும் போக வேண்டிய வழித்தடம். ஆனா, இது டெல்லியின் வடக்கு எல்லையில் இருக்குற ஒரு ரகசியக் கிடங்குக்குச் சேரணும். உன்னால மட்டும்தான் இது சாத்தியம்,” என்று ஷர்மா வரைபடத்தை விரிப்பான்.
ரோலக்ஸ், தன் கூர்மையான கண்களால் அந்த வரைபடத்தைச் சில விநாடிகள் உற்று நோக்கினான். அவனது விரல்கள் வழக்கம்போல மேஜை மீது ஒரு ரகசிய தாள லயத்தில் தட்டும். பக்கத்தில் இருக்கும் பைரவன், ரோலக்ஸின் கண்ணசைவைப் புரிந்து கொண்டு, அந்த திட்டத்தின் நுணுக்கங்களை உடனேயே தன் மூளையில் வரைபடமாக மாற்றிவிடுவான்.
நடுக்கடலில் கப்பல்களை மறிப்பது, சிக்னல் ஜாமர்கள் மூலம் தொடர்புகளைத் துண்டிப்பது, குஜராத் மற்றும் ஆந்திரக் கடற்கரைகளின் ஆளில்லாப் பகுதிகளில் ரகசியமாகச் சரக்குகளைத் தரையிறக்குவது, அங்கிருந்து கனரக இயந்திரங்களின் உட்பகுதிகளில் பற்றவைத்து மறைத்து, போலி ராணுவ எண்கள் பதித்த வாகனங்களில் டெல்லிக்குக் கடத்துவது என ரோலக்ஸின் வியூகங்கள் நாளுக்கு நாள் உக்கிரமடைந்தன.
ஒவ்வொரு கடத்தலும் சுங்கத் துறையின் மூக்கிற்கு எதிரே, காவல் துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள்ளேயே மிகக் கச்சிதமாக அரங்கேறியது. கடத்தல் உலகின் வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் சர்வதேச நெட்வொர்க், ரோலக்ஸின் ஒற்றைச் சைகையில் இயங்கத் தொடங்கியது.
ஷர்மாவுக்கும் ரோலக்ஸிற்கும் இடையிலான அந்த இருண்ட நட்பு, நாளுக்கு நாள் அசாத்தியமான நம்பிக்கையாக மாறியது. ரோலக்ஸின் துல்லியமான செயல்பாட்டைக் கண்டு வியந்த ஷர்மா, தன் வாக்குறுதியின்படி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தான்.
ஒரு நள்ளிரவு வேளையில், டெல்லியின் புறநகர்ப் பகுதியில் இருந்த ஒரு பிரம்மாண்டமான பண்ணை வீட்டில் அந்த ரகசியச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுற்றிலும் ஏசிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளும், நவீன ஆயுதங்கள் தாங்கிய கமாண்டோக்களும் பாதுகாப்பிற்கு நின்றிருந்தனர்.
அந்தப் பண்ணை வீட்டின் ஆடம்பரமான தர்பார் அரங்கில், டெல்லி மத்திய அரசியலின் செல்வாக்குமிக்க மாபெரும் புள்ளியான சௌத்ரி அமர்ந்திருந்தார். அரசாங்கத்தின் கொள்கைகளையே தன் விரலசைவில் மாற்றும் வல்லமை படைத்தவர் அவர்.
ஷர்மா ரோலக்ஸையும் பைரவனையும் அழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான்.
“சர்மா… இவன்தானா நீ சொன்ன அந்தச் தென்னகத்துச் சிங்கமா ?” என்று சௌத்ரி தன் கம்பீரமான குரலில் கேட்டார்.
ரோலக்ஸ் மெதுவாக நடந்து வந்து சௌத்ரியின் முன்னால் நின்றான். அவன் மற்றவர்கள் போல தன் தலையை சாய்க்கவில்லை, வணங்கவில்லை. அவனது முகத்தில் எந்தவிதமான பணிவோ, பயமோ இல்லை. அதே உறைந்துபோன கம்பீரமும், குளிர்ந்த பார்வையும்தான் இருந்தன.
ஷர்மா முன்னே வந்து, “Sir… கட்ச் துறைமுகத்தில் நடந்த அந்தப் பிரம்மாண்டத் தரைவழி நகர்வாகட்டும், நடுக்கடலில் கப்பல்களைத் திசைதிருப்பியதாகட்டும்… அத்தனையையும் சாதிச்சது இவன் ஒருத்தன் தான். இவனை நம்பி நாம எந்தப் பெரிய காரியத்தையும் ஒப்படைக்கலாம்,” என்றான்.
சௌத்ரி ரோலக்ஸின் கண்களை நேருக்கு நேர் பார்த்தார். அந்தப் பார்வையில் இருந்த அஞ்சா நெஞ்சமும், மிருகத்தனமான ஆளுமையும் சௌத்ரியை வியப்பில் ஆழ்த்தின.
“அற்புதம்!” என்று சௌத்ரி தன் கைகளைத் தட்டினார். “இனிமேல் டெல்லிக்கு வர வேண்டிய அத்தனை சர்வதேச ரகசியச் சரக்குகளுக்கும், மத்திய அரசின் பாதுகாப்பில் நடக்கும் அத்தனை அண்டர்வேர்ல்ட் பரிவர்த்தனைகளுக்கும் நீதான் பொறுப்பு ரோலக்ஸ். உனக்கு பின்னால டெல்லி அரசாங்கத்தோட அதிகாரமும், என் முழுப் பலமும் இருக்கும். உன்னை இந்தியாவில் எந்தப் போலீஸோ, எந்தச் சட்டமோ கை வைக்க முடியாது!”
அன்று முதல், டெல்லி மேலிடத்தின் அதிகாரப்பூர்வமற்ற நிழல் தளபதியாக ரோலக்ஸ் உருவெடுத்தான். டெல்லி அரசியல் புள்ளிகள் செய்யும் பல நூறு கோடி சர்வதேசக் கடத்தல் வேலைகளுக்கு ரோலக்ஸ் முன்னின்று அச்சாரம் அமைத்தான். இந்தியாவின் பாதாள உலகத்தின் ஒட்டுமொத்த வரைபடமும் ரோலக்ஸின் கைகளுக்குள் சுருங்கியது.
டெல்லியின் மாபெரும் அரசியல் பலமும், கடல் கடந்த சர்வதேச மாஃபியாக்களின் ஆதரவும் தன் கையில் வந்து குவிந்த போதிலும், ரோலக்ஸ் வெளியே தன் அடையாளத்தைச் சிறிதும் மாற்றிக் கொள்ளவில்லை.
அவன் ஆடம்பர பங்களாக்களிலோ, விலையுயர்ந்த நவீன ஆடைகளிலோ தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. அதுதான் அவனது ஆகப்பெரும் தந்திரம்!
விசாகப்பட்டினத் துறைமுகத்தின் உப்புக் காற்று வீசும் அந்தப் பழைய தெருக்களில், ரோலக்ஸ் எப்போதும் போலத் தன் வழக்கமான தோற்றத்திலேயே வலம் வந்தான்.
அதே ரத்தம் போன்ற அடர் செந்நிறச் சட்டை… கையில் தொங்கும் அதே கூலி பேட்ஜ் … உதட்டோரம் புகைந்து கொண்டிருக்கும் அதே அரைகுறை பீடி… இடுப்பில் மறைந்திருக்கும் அதே வெள்ளை நிறத் துப்பாக்கி!
துறைமுகத்தில் மூட்டை தூக்கும் கூலிகளும், சாதாரண தொழிலாளர்களும் அவனை இன்னமும் ஒரு சாதாரணச் சுமை தூக்கும் தொழிலாளியாகவே பார்த்தனர். ஆனால், அதே துறைமுகத்தின் அடியில், அவன் உருவாக்கிய ‘அண்டர்வேர்ல்ட்’ மாஃபியா பேரரசு ஒரு மாபெரும் ஆலமரத்தைப் போல வேர்விட்டிருந்தது.
பாபி தன் பங்களாவில் மதுவிலும் பெண்களின் போதையிலும் மூழ்கித் திளைத்துக்கொண்டிருந்தான். ‘துறைமுகத்தை ரோலக்ஸ் கவனித்துக் கொள்கிறான், சரக்குகள் சரியாக வருகின்றன, பணம் தவறாமல் வருகிறது’ என்ற போலிச் சுகத்தில் அவன் மிதந்தான்.
தன் கண்ணெதிரே, தன் கூலி பேட்ஜ் போட்ட ஒருவன், தன்னுடைய ஒட்டுமொத்த ஆட்களையும், சர்வதேசத் தொடர்புகளையும், ஏன்… இந்திய அரசியலின் உச்சகட்டப் புள்ளிகளையும் தன் பக்கம் இழுத்துக்கொண்டு, தன்னை ஒரு வெறும் களிமண் பொம்மையாக மாற்றிவிட்டான் என்பதை அந்த முட்டாள் பாபி அறியவே இல்லை.
ரோலக்ஸ் துறைமுகத்தின் கலங்கரை விளக்கத்தின் அடியில் நின்று தன் பீடியை ஒரு ஆழமான இழு இழுத்தான். புகையை மெதுவாக மேலே பறக்கவிட்டான்.
அவனது உதடுகளில் அந்த மெல்லிய, கொடூரமான புன்னகை தவழ்ந்தது.
“பைரவா…” ரோலக்ஸ் தன் விரல்களால் சைகை செய்தான்.
“சொல்லு ரோலக்ஸ்,” பைரவன் அருகில் வந்தான்.
“பாபி இன்னும் எவ்வளவு நாள் இந்த போதையில இருப்பான்?”
“அவன் முழுசா நம்ம வலைக்குள்ள மாட்டிக்கிட்டான் ரோலக்ஸ். இப்போ அவன் சாம்ராஜ்யம்னு நினைச்சிட்டு இருக்கிறது வெறும் காத்தாடி. நூல் நம்ம கையிலதான் இருக்கு. நீ எப்போ அறுக்கப்போறியோ… அப்போ அவன் நிலைகுலைஞ்சு விழுவான்,” என்றான் பைரவன்.
ரோலக்ஸ் தன் கையில் இருந்த ரோலக்ஸ் கடிகாரத்தைப் பார்த்தான். நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. பாபியை ஒரே அடியில் வீழ்த்துவதற்கான தகுந்த சமயத்திற்காக, அந்தப் பெருங்கடலின் அடியில் ஒளிந்திருக்கும் சுறாவைப் போல அவன் அமைதியாகக் காத்துக்கொண்டிருந்தான்.
ஒரு நாள் நள்ளிரவு. விசாகப்பட்டினத்தின் ரகசியக் கிடங்கில் ரோலக்ஸும் பைரவனும் அமர்ந்திருந்தனர். மேஜை மீது டெல்லி சௌத்ரி அனுப்பிய புதிய ஆயுதங்களின் ஆவணங்களும், சர்வதேசக் கடல் வழிகளின் வரைபடங்களும் விரிந்திருந்தன.
அப்போது, ஏசிபி ஷர்மா அவசரமாக உள்ளே நுழைந்தான். அவனது முகத்தில் லேசான பதற்றம் இருந்தது.
“ரோலக்ஸ்… டெல்லியில இருந்து சௌத்ரி அய்யா கூப்பிட்டாரு. அடுத்த வாரம் சர்வதேச எல்லையில் ஒரு மாபெரும் ரகசியப் பரிவர்த்தனை நடக்குது. அதுக்கு நீ நேர்ல வரணும்னு சொன்னாரு,” என்றான் ஷர்மா.
ரோலக்ஸ் தன் வெள்ளைத் துப்பாக்கியை எடுத்து மேஜை மீது வைத்தான். அவனது கண்கள் ஷர்மாவை உற்றுப் பார்த்தன.
“ஷர்மா…” பைரவன் குறுக்கிட்டான்.
“டெல்லி வரைக்கும் நாங்க வர்றோம். ஆனா, பாபிக்கு இந்த விஷயம் தெரிஞ்சா அவன் என்ன பண்ணுவான்?”
நக்கலாகச் சிரித்த ஷர்மா, “பாபியாவா? அவன் இன்னும் தன் பங்களாவில குடிபோதையில கிடக்கான் பைரவா. அவனைப் பத்தி நீங்க கவலைப்படத் தேவையில்லை. இப்போ இந்தியா முழுமைக்கும் அண்டர்வேர்ல்ட் ராஜா இந்த ரோலக்ஸ் தான். பாபியை அழிக்கிறது உனக்கு ஒரு நொடி வேலை!”
ரோலக்ஸ் தன் கையை உயர்த்திச் சைகை செய்தான்.
“பாபியை அழிக்கிறது பெரிய விஷயமே இல்லை ஷர்மா. ஆனா, அவன் சாகும்போது அவனுக்குத் தெரியணும்… அவன் யார்கிட்ட தோத்துப்போனான், அவனோட அத்தனை சாம்ராஜ்யத்தையும் பறிச்சது இந்த ரோலக்ஸ் தான்னு! அவன் அலறித் துடிக்கும் போதுதான் அந்த அலெக்ஸோட ஆத்மா சாந்தியடையும்.”
ஷர்மா ரோலக்ஸின் அந்த உக்கிரமான சைகையைக் கண்டு ஒரு கணம் மிரண்டு போனான். ரோலக்ஸின் பழிவாங்கும் வெறி இன்னும் தணியவில்லை என்பதை அவன் புரிந்துகொண்டான்.
அன்று இரவு, ரோலக்ஸ் தன் கடற்கரை வீட்டிற்குத் திரும்பியபோது, மயூரா வாசலிலேயே காத்துக்கொண்டிருந்தாள்.
ரோலக்ஸ் தன் செந்நிறச் சட்டையைக் கழற்றி வைத்துவிட்டு, சோபாவில் அமர்ந்தான். அவனது தோள்களில் வழக்கம் போலப் போராட்டத்தின் களைப்பும், ரத்தத்தின் வாடையும் படிந்திருந்தன.
மயூரா அவனது அருகில் வந்து அமர்ந்தாள். அவளது கைகளில் சூடான தேநீர் கோப்பை இருந்தது. அதை அவனிடம் நீட்டிவிட்டு, அவனது நெற்றியில் படிந்திருந்த வியர்வையைத் தன் முந்தானையால் துடைத்தாள்.
“ரோலக்ஸ்… நீ ரொம்ப தூரம் போயிட்டே இருக்க. டெல்லி அரசியல், சர்வதேச மாஃபியானு பெரிய பெரிய ஆளுங்க உன்னைச் சுத்தி இருக்காங்க. எனக்கு பயமா இருக்கு,” என்று சைகையில் கேட்டாள் மயூரா.
அவளது கைகளைப் பற்றி, தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான், ரோலக்ஸ். நிலவின் வெளிச்சம் ஜன்னல் வழியே வந்து அவளது முகத்தில் விழுந்தது.
அவன் தன் விரல்களால் அவளுக்குப் பதிலளித்தான்:
“மயூரா… இந்த உலகமே என் காலடியில் கிடந்தாலும், என் நிம்மதி உன் மடியில்தான் இருக்கு. இந்த பாபியோட கதையை முடிச்சுட்டு, நம்ம எதிரிகளை அழிச்ச பிறகு… இந்த மாஃபியா சாம்ராஜ்யத்தின் ஒரே அரசியா நீதான் இருப்பாய்.”
மயூரா அவனது மார்பில் தன் தலையைச் சாய்த்துக் கொண்டாள். ரோலக்ஸ் அவளது கூந்தலை மென்மையாக வருடினான். அவளது ஸ்பரிசம் அவனுக்குள் எரியும் பழிவாங்கும் நெருப்பைச் சற்றே தணித்தது.
ஆனால், வெளியேயிருந்த பெருங்கடல் அமைதியாக இல்லை. அலைகள் கரையை மோதும் சத்தம், வரப்போகும் ஒரு மாபெரும் புயலின் முன்னறிவிப்பாக ஒலித்துக் கொண்டிருந்தது.
நாட்கள் தங்களின் வேகத்தில் உருண்டோடின. ரோலக்ஸின் அண்டர்வேர்ல்ட் மாஃபியா பேரரசு இப்போது இந்தியாவைத் தாண்டி, சர்வதேச எல்லையில் ஒரு மாற்ற முடியாத சக்தியாக உருவெடுத்திருந்தது.
பாபியின் பங்களாவுக்கு வெளியே நிற்கும் அடியாட்கள் முதல், அவனது பிரதானக் கடத்தல் மாலுமிகள் வரை அனைவரும் இப்போது ரோலக்ஸிற்கு மட்டுமே விசுவாசமாக இருந்தனர். பாபி தனியாக, தன் சொந்தக் கோட்டைக்குள்ளேயே ஒரு பிணத்தைப் போல வாழ்ந்து கொண்டிருந்தான்.
ஒரு மாலைப் பொழுதில், விசாகப்பட்டினத் துறைமுகத்தின் மிக உயரமான கன்டெய்னர் ஒன்றின் மீது நின்றிருந்தான் ரோலக்ஸ்.
அவனது செந்நிறச் சட்டை காற்றில் பறந்தது. இடுப்பில் இருந்த வெள்ளைத் துப்பாக்கி சூரிய ஒளியில் பளபளத்தது. உதட்டோரம் பீடி புகைந்து கொண்டிருந்தது.
அவன் கடலையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது மனக்கண்ணில் மூன்று விஷயங்கள் மட்டுமே ஓடிக் கொண்டிருந்தன, பாபியின் இறுதி மூச்சைத் தன் கைகளால் நிறுத்துவது. டெல்லி பேரரசின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன் காலடியில் கொண்டு வருவது. காக்கிச் சீருடையில் வரப்போகும் அந்த சந்துருவை எதிர்கொள்வது!
சிங்கம் வேட்டைக்காகத் தன் நகங்களைக் கூர்மையாக்கி, தகுந்த சமயத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தது. அந்தத் துறைமுகத்தில் வீசிய காற்று, வரப்போகும் மாபெரும் குருதிப் புனலின் வாடையை ஏந்திச் சென்றது!
வேட்டை தொடரும் ..⚓
