31
ஹார்பர் மருத்துவமனையில் சந்துருவின் நிலையை நேரில் பார்த்த கணேஷின் மனநிலை, ஒரு சீற்றம் கொண்ட கடலில் சிக்கிய காகிதப் படகு போல அலைக்கழிந்தது.
அங்கிருந்து மின்னல் வேகத்தில் தன் அலுவலகத்திற்குத் திரும்பியவன், அறைக்குள் நுழைந்ததும் கதவைப் படாரென்று சாத்திவிட்டு, அவனது இருக்கையில் அமர்ந்தபோது, நெற்றியில் வழிந்த வியர்வை துளிகள் கண்ணாடி மேஜையின் மீது விழுந்து சிதறின. கைகள் நடுங்க, கண்கள் சுவரில் இருந்த கடிகாரத்தின் ‘டிக்-டிக்’ சத்தத்தையே ஒரு இடி முழக்கமாகக் கேட்டுக்கொண்டு, சுற்றும் முற்றும் அலைபாய்ந்தன.
ஒரு பொறுப்பான அதிகாரி, ஆனால் இப்போது அவன் தன் சொந்த அறையிலேயே ஒரு குற்றவாளி போலத் தன் நகங்களைக் கடித்துக் கொண்டிருந்தான். அவனது விரல்கள் லேசாகத் துடித்தன. இந்த மௌனம் அவனுக்குச் சாபமாக இருந்தது. திடீரென, மேஜையின் ஓரத்தில் இருந்த அந்தச் சாட்டிலைட் போன், ஒரு விசித்திரமான இரைச்சலோடு அதிர்ந்தது.
அந்த ஒளியே அது ஒரு வெளி தொடர்பு அழைப்பு என புரிய அது வரும் நேரம் தான் இது என்று அவனுக்கு முன்னரே தெரிந்திருந்தாலும், அது நிஜமாகவே வந்தபோது அவன் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது.
போனைப் பார்த்துக் கொண்டே சில நொடிகள் உறைந்து நின்றான். “எடுக்கலாமா? வேண்டாமா?” என்ற போராட்டம் அவனுள். ஆனால், அந்த வேறு வழியின்றி, கசப்பான ஒன்றை உண்பது போல போனை எடுத்தான்.
“ஹலோ…” என்றான் கணேஷ். குரல் மென்மையாக இருந்தாலும், அதில் ஒரு நடுக்கம் இருந்தது. அவனது கண்கள் அறையின் கதவை வெறித்தனமாகக் கவனித்தன. யாராவது ஒட்டுக் கேட்கிறார்களா என்ற பயம் அவனைப் பிடுங்கித் தின்றது.
எதிர்முனையில் இருந்து வந்த குரல், ஒரு உறைபனிப் புயலைப் போலக் குளிர்ந்திருந்தது. கணேஷ்
மௌனமாகத் தலையசைத்தான். பிறகு, “ம்ம்…” என்று மட்டும் முணுமுணுத்தான். மெதுவாக இருக்கையை விட்டு எழுந்து, அறைக்குள் இருக்கும் மறைவிடங்கலும் கதவின் இடுக்கைப் பார்த்தான். யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பின், மீண்டும் நாற்காலியில் அமர்ந்தான்.
“ஆமாம், சந்துரு பிழைத்துக்கிட்டான் … . குண்டு காயங்கள் தீவிரமாகத் தான் இருந்தது, ஆனா மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் உயிர் தப்பிச்சிட்டான்.”
”******”
“ம்ம்ம் ஆமா, இன்னக்கி காலை தான் கண் விழித்தான்,” என்ற கணேஷின் குரல் இப்போ தெளிவாக இருந்தது
ஆனால் எதிர்முனையில் ஏதோ ஒரு கேள்வி. அதற்குப் பதிலாக கணேஷ், “ம்ம் பைரவன் அங்க தான் இருந்தான்..” என்றான்
‘******”
“ம்ம்ம் அவன் தான் .. ஆனா, சந்துரு கண் விழித்தபோது என்ன நடக்குது னு என்னாலேயே கணிக்க முடியல.”
‘******”
“இல்ல அவனுக்கு கிட்ட ஏதும் தெரியாது..”
மீண்டும் ஒரு நீண்ட உரையாடல். எதிர்முனை கேள்விகளைக் கேட்க, கணேஷ் விளக்கங்களைச் சொல்லிக் கொண்டிருந்தான். “ஆமாம், ஜகாவை பைரவன் தான் கொலை செய்தான் அதுல சந்தேகமே இல்ல. நேற்று இரவு நடந்த அந்த மோதல், பைரவனின் ஆவேசத்தை வெளிப்படுத்தியது உண்மை தான்.”
‘******”
“ம்ம்ம் ஆனால் ஜகாவின் உடல்…”
‘******”
“ம்ம் அதுதான் இப்போ பெரிய புதிரா இருக்கு, அந்த இடம் முழுவதும் ரத்தக் கறை, ஆனால் ஜகா உடல் மட்டும் அங்க இல்ல … நானும் போய் தேடி பார்த்தேன் .. இது எப்படிச் சாத்தியம் எனக்கே புரியல..!” என்ற கணேஷின் கண்கள் விரிந்தன.
‘******”
“பைரவனா .. ? இல்ல .. ஜகா இறந்தது தான், அப்பறம் .. பைரவனை நான் பார்க்கவே இல்ல. அவன் எங்கேயோ போய்ட்டான்… ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம்… அவன் ஒளிந்து வாழ்றவன் கிடையாது, அது உனக்கே தெரியும் …”
‘******”
“ம்ம் ஆமா, rolex விசயத்துல அப்படி தானே … புயலுக்கு முன் வரும் அமைதி போல அவன் எங்கேனும் இமை மூடி இருக்கான், அவன் கண்டிப்பா திரும்ப வருவான்…!”
எதிர்முனையில் இருந்து வந்த குரல் சற்று அழுத்தமாக இருக்க.. “புரிது. ஜகாவின் உடல் கிடைக்காததுதான் இப்போ நமக்கு இருக்கும் பெரிய தலைவலியே. ”
‘******”
“ம்ம்ம் இல்லா .. அவன் பிழைத்திருக்க வாய்ப்பே இல்ல.. நானும் தானே அங்க இருந்தேன், சந்துரு மயக்கத்தில் இருந்தாலும் நா தெளிவா பார்த்தனே .. அங்க இருந்த ரத்தத்தின் அளவைப் பார்த்தா கண்டிப்பா அவன் உயிர் பிழைக்கச் சாத்தியமே இல்லை. அப்படினா அவன் உடலை யாரோ தூக்கிட்டு போயிருப்பாங்க னு தெரியல .. நா ஹாஸ்பிடல் வந்துட்டேன் ?” என்றான்.
அந்தத் தொடர்பில் இருந்த மர்ம மனிதன் ஏதோ ஒன்றை மீண்டும் சொல்ல, “ம்ம் சரி… நான் பார்த்துகிறேன். ” என்றான் ..
அதே நேரம் அங்கே ஏதோ நிழல் அசைவது போலத் அவனுக்கு தெரிந்தது … அதனை கவனித்தவன் ..”சரி நா அப்பறம் வரேன் ” என்று சொல்லி, போனை அணைக்க முயன்றான்.
ஆனால், அதற்குள் கதவின் அருகே ஒரு நிழல் படர்ந்தது. கணேஷ் பதறிப்போய் எழுவதற்குள், அந்த அலுவலகத்தின் கனமான அந்த கதவு ‘படார்’ என்று திறந்துகொண்டு சுவரில் மோதியபடி உள்ளே நுழைந்தது பைரவன்.
அவனது ஆடைகள் இன்னும் அந்த சோர்வைக் கொண்டிருந்தன. கண்கள் சிவந்து, முகம் ஒரு பாறையைப் போல இறுக்கமாக இருந்தது. அவன் உள்ளே நுழைந்த அந்த வினாடியே அறைக்குள் இருந்த காற்று உறைந்து போனது போலிருந்தது.
தன் இருக்கையை விட்டு எழுந்து நின்ற கணேஷ், பைரவனை பார்த்ததும் மீண்டும் அப்படியே தன் இருக்கையில் அமர்ந்தான். அவனது கண்கள் தன்னிச்சையாக அந்தச் சாட்டிலைட் போனை பார்த்தது .. . அது அணைந்திருக்கிறதா? இல்ல இன்னும் தொடர்பில் இருக்கிறதா? என்ற பதற்றத்தில், அந்தப் போனில் ஒளிர வேண்டிய அந்தச் சிறிய சிகப்பு நிற விளக்கு எரியாமல் இருப்பதைக் கண்டு, அது அணைத்திருப்பதை உறுதி செய்துகொண்டான். ஆனால் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கு முன்பே, பைரவனின் உருவம் அவன் மேசைக்கு அருகில் வந்து நின்றது.
தன் இரு கைகளையும் கணேஷின் மேசை மீது ‘டொக்’ என்று அழுத்தி வைத்தான், பைரவன். அவனது விரல்கள் மேசையின் மரப்பலகையில் அழுத்தத்தை ஏற்படுத்தின. அவனது கண்கள் கணேஷின் ஆன்மாவையே தோண்டி எடுப்பது போல அவனை ஆழமாகப் பார்த்தன. அறையில் ஒரு நிசப்தம் நிலவியது. அந்த அமைதியை உடைக்கத் துணிந்தவன்போல, பைரவனின் வாயிலிருந்து ஒரு சொல் மட்டும் உதிர்ந்தது.
“சந்துரு…?”
அந்த ஒரு சொல், ஆயிரம் கேள்விகளைத் தன்னுள் அடக்கி இருந்தது. சந்துருவின் உடல்நிலை என்ன, எங்கே இருக்கிறான், என்ன செய்கிறான்… அனைத்தையும் அந்த ஒற்றை வார்த்தைக்குள் அடக்கி வினவினான்.
கணேஷ் மெல்லத் தொண்டையைச் செறித்துக் கொண்டு, “அவனோட உயிருக்கு இப்போ எந்த ஆபத்தும் இல்ல, பைரவா. குண்டு காயம் பட்டதால் வலியுடன் தான் இருக்கான். நாளைக்குத்தான் வீட்டுக்கு டிஸ்சார்ஜ் ஆகி போற போல இருக்கு,” என்று சொல்ல
மேசை மீது இருந்த கைகளை எடுத்துக்கொண்டு, நிமிர்ந்து நின்ற பைரவன். “கணேஷ், இதுக்கு தான் நான் ஆரம்பத்திலிருந்தே எவ்வளவோ எச்சரித்தேன். அவன் அப்பவே ஊருக்குப் போய் சேரச் சொல்லியிருந்தேன். தேவையில்லாம வம்பை விலை கொடுத்து வாங்கிக்கிறான்,” என பைரவன் ஆவேசமாக பேச.
“பைரவா, நீ சொல்றது எனக்கும் புரிது. ஆனா நான் எவ்வளவவோ அவன்கிட்ட சொல்லிப் பார்த்தேன் தெரியுமா? அவன் கேட்குற போல இல்லை. அவன் பிடிவாதக்காரன் னு உனக்கும் தெரியும்தானே? நான் இதில் என்னதான் செய்ய முடியும்?” என்று கணேஷ் தன் இயலாமையை வெளிப்படுத்த.
பைரவன் மீண்டும் கணேஷின் கண்களை நேராகப் பார்த்தான். “கணேஷ், இப்பவும் சொல்றேன். அவனை இங்கிருந்து போகச் சொலு. இங்கே இருக்க வேண்டா. இது அவனுக்குச் பாதுகாப்பான இடம் இல்லை,” என அழுத்தமான குரலில் பைரவன் சொல்ல .
“பைரவா, அவன் என்னை மதிக்கவே இல்ல… நான் எப்படி அவனை வலுக்கட்டாயமா இங்கிருந்து போக சொல்ல முடியும்? நீயே அவன் கிட்ட நேரடியா சொல்லி இருக்கலாமே இல்ல, மிரட்டி பார்த்திருக்கலாமே?”. கணேஷின் வார்த்தையில் அவனை சந்துருவின் வலையில் சிக்க வைக்கும் தடயம் இருந்தது.
“நான் அவன்கிட்ட நேரா சொன்னாலும், அவன் என் பேச்சைக் கேட்காம மேலும் பிடிவாதமாகத்தான் நிற்பான். நீ ஒரு போலீஸ் அதிகாரி என்பதை விட ஒரு நண்பனா அவனுக்குச் சொல்றதுதான் சரியா இருக்கும். இல்ல அவன் புது பொண்டாட்டி கிட்ட சொல்லி கூட்டிட்டு போக சொல்லு, அவனை இங்கிருந்து அனுப்பிடு அவ்ளோ தான் சொல்ல முடியும்,” என்று பைரவன் உறுதியாக சொல்ல
சட்டென ஒரு முடிவுக்கு வந்த கணேஷ், “சரி… சரி… அத விடு அடுத்த விஷயம் வா.. ஜகா என்ன ஆனான்?” என்று தன் கேள்வியின் திசையை மாற்றினான்.
ஒரு நொடி மௌனமாக இருந்த பைரவன். பின்னர் , “ம்ம் அவனை முடிச்சிட்டேன் கணேஷ். அவனது உடல் கூட இனிமேல் கிடைக்காது. நீ எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டா, உனக்கு எந்தப் பிரச்சனையும் வராது,” என்றான்.
“எனக்குப் பிரச்சனை வராதது எல்லாம் இருக்கட்டும் பைரவா… ஆனா அந்த நார்வே கண்டெய்னர், அந்த பிளாக் ஸ்டாக்… அதெல்லாம் என்னாச்சு?” என்று கணேஷ் அடுத்த கேள்வியைக் கொக்கிப் போட்டான்.
ஒரு பெருமூச்சு விட்ட பைரவன், கணேஷை ஒருமுறை ஆழமாக முறைத்துப் பார்த்தவன், “கணேஷ், அதெல்லாம் உனக்குத் தேவையில்லாத கேள்வி. நான் சொன்னது மட்டும் செய். சந்துருவை இங்கிருந்து போகச் சொல்லு, அவ்வளவுதான்!” என்று சொல்லிவிட்டு, கணேஷ் பதில் சொல்லும் முன்பே வேகமாகத் அறைக்கதவைத் திறந்து கொண்டு வெளியேறினான். கதவு அவன் வேகத்தில் படாரென்று சாத்திக்கொண்டது.
தன் தலையில் கைகளை வைத்துக்கொண்டு, நாற்காலியில் சோர்ந்து போய் அமர்ந்தான், கணேஷ் …
அவன் நெஞ்சு படபடத்தது. ஒரு பக்கம் இந்த பைரவன், இந்தத் துறைமுகத்தைத் தன் கையில் எடுத்துக்கிட்டு இப்படியெல்லாம் ஆட்களைக் கொன்று குவித்துக்கொண்டிருக்கிறான். சட்டத்திற்குப் புறம்பா வரும் கண்டெய்னர்கள், ரகசியமான பிளாக் ஸ்டாக்… இது எல்லாம் எங்கே போய் முடியப்போகிறதோ? இவன் ஒரு கிரிமினலா? அல்லது நீதிமானா?
இன்னொரு பக்கம் இந்தச் சந்துரு வேற… யாரையும் பிடிக்காமல் விடமாட்டேன் னு இவன் பிடிவாதமா வேற இருக்கான்.
ரோலக்ஸ், பைரவன், சந்துரு… இவர்களுக்கிடையில் தான் ஒரு பந்து போல தள்ளாடிக் கிட்டு இருக்கேன் .. ” என தனக்குள் புலம்பிக்கொண்டவனின் கண்கள் மீண்டும் அந்தச் சாட்டிலைட் போனை நோக்கித் திரும்பியது.
‘ம்ம்ம் இந்த விஷயங்கள் பைரவனுக்கோ சந்துருக்கோ தெரியக் கூடாது. நான் அடிக்கடி இந்த தகவல் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கேன். இந்தச் சங்கிலித் தொடர் எப்போதுதான் அறுபடுமோ?’ என அவனின் மனதினுள் ஒரு தீவிரமான எண்ணம் ஓடியது..
அந்தப் போனில் பேசியது யார்?
வேட்டை தொடரும் ..⚓
