32
அந்தப் பிரம்மாண்டமான கப்பல், நீல நிறக் கடல் நீரை மெல்லக் கிழித்துக்கொண்டு, அந்தத் தீவின் துறைமுகத்தை அடைந்து நின்றது. கப்பலின் எஞ்சின் சத்தம் அடங்கியதும், அந்தத் துறைமுகத்தின் அமைதி மெல்லக் கூடினது. கரையில், எட்வர்டை வரவேற்பதற்காகக் காத்திருந்த அந்த ஸ்காட்லாந்து நாட்டு காரர்கள் சிலரின் கண்கள், கப்பல் வாசலையே ஆவலோடு நோக்கிக் கொண்டிருந்தன. அவர்களைப் பார்த்ததும் எட்வர்ட் கனிவான புன்னகையோடு கைகளை அசைத்துத் தன் வருகையை உறுதிப்படுத்தினான்.
பின்னர் ரோலக்ஸின் பக்கம் திரும்பி, ‘போலாமா?’ என்பது போல ஒரு மெல்லிய தலையசைப்புடன் அவனைக் கேட்க, ரோலக்ஸ் எந்தவிதமான மாற்றமும் காட்டாமல் மென்மையாகத் தலையசைத்தான்.
ரோலக்ஸின் உடல்நிலை இன்னும் முழுமையாகக் குணமாகாததால், மயூராவின் தோள் அவனுக்கு ஒரு பெரிய பலமாக இருந்தது. அவள் அவனைத் தாங்கியபடி மிகக் கவனமாகக் கப்பலில் இருந்து இறங்கினாள். அவள் கைகளில் இருந்த சாருவை, எட்வர்ட் மிகுந்த அன்போடு வாங்கிக்கொண்டு, முதலில் தரையிறங்கினான்.
அந்தத் தீவு பார்ப்பதற்கு ஒரு சிறு கிராமம் போலவே காட்சியளித்தது. நவீன உலகின் அந்த இரைச்சலான இயந்திரத்தனமான வசதிகள் அங்கே இல்லையென்றாலும், பின்தங்கிய நிலையை அது அடையவில்லை. மாறாக, இயற்கை அன்னை வாரி வழங்கிய ரம்மியமான அழகுடன் அந்தத் தீவு திகழ்ந்தது. அடர்ந்த மரங்கள், மலைகளிலிருந்து வழிந்தோடி வரும் குளிர்ந்த காற்று, மற்றும் மண்ணின் மணம் என அனைத்தும் ஒருவிதமான புதிய வாழ்வுக்கான நம்பிக்கையை அவர்கள் மனதிற்குள் விதைத்தன.
இந்த அமைதியான சூழலைப் பார்த்ததும் மயூராவின் இதயம் லேசானது. ‘இனிமேல் வன்முறையும் இரத்தமும் இல்லாத இந்த இயற்கை அன்னை மடியில் நமது வாழ்க்கையைத் தொடரலாம்’ என்ற நம்பிக்கை அவள் முகத்தில் ஒரு நிம்மதியான புன்னகையை வரவழைத்தது. அவளது கைகள் ரோலக்ஸின் கரங்களை இன்னும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டன.
ஆனால், ரோலக்ஸின் பார்வையில் அந்தத் தீவு வெறும் கிராமமாக மட்டும் தெரியவில்லை. கடற்கரையில் எட்வர்டை வரவேற்க நின்றிருந்தவர்கள், அவனைக் கண்டதும் மிக மரியாதையுடனும், கட்டுக்கோப்புடனும் சல்யூட் அடித்து நின்ற விதம், அந்தத் தீவின் பின்னணியில் ஏதோ ஒரு மறைமுகமான அதிகாரம் இருப்பதை அவனுக்கு உணர்த்தியது. அவனது கூர்மையான கண்கள் அந்த மனிதர்களை அலசின.
‘இங்கேயும் ஏதோ ஒரு கட்டமைப்பு இருக்கிறது, எட்வர்ட் வெறும் சாதாரண மனிதன் இல்லை’ என்று அவனது ஆழ்மனது எச்சரித்தது. ஆனாலும், இப்போது அமைதி மட்டுமே தேவை என்பதால், எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மௌனமாக நடந்தான்.
எட்வர்ட் தன் காரின் அருகில் நின்றிருந்த தனது நம்பிக்கைக்குரிய ஒரு ஆளை அருகில் அழைத்தான். அவனைப் பார்த்ததும் ரோலக்ஸுக்கு, ‘இவன் ஒரு சாதாரண உதவியாளன் இல்லை என்பது புரிந்தது.
எட்வர்ட் அவனிடம் ரோலக்ஸ் பற்றி ஏதோ ரகசியமாக விளக்கவும், அவனின் கண்கள் ரோல்க்ஸை ஆர்வமாக பார்த்தது. பின்னர், அவர்கள் இருவருக்கும் தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தவிதமான ஆபத்தும் வராதபடி அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று உத்தரவிட்டான். எட்வர்டின் பேச்சில் இருந்த அந்தத் தீர்க்கமான உத்தரவு, அவன் இந்தத் தீவின் ராஜா என்பதை மெல்ல அவனுக்குப் புரியவைத்தது.
பின்பு அவர்கள் பக்கம் திரும்பிய எட்வர்ட், “என் வீடு இந்தத் தீவுக்கு அப்பால் இன்னொரு பகுதியில் இருக்கிறது. பல விஷயங்களுக்காக நான் இந்தத் தீவை ஒரு தளமாகப் பயன்படுத்துவது வழக்கம். இந்தத் தீவில் நடக்கும் ஒவ்வொன்றும் என் கட்டுப்பாட்டில்தான் நடக்கும்.” என்றவனின் பார்வையில் மயூராவின் கண்களில் இருக்கும் குழப்பத்தை கவனித்தவன்,
“மயூரா, உன் கண்களில் இருக்கும் அந்தச் சந்தேகத்தை என்னால் படிக்க முடிகிறது. சில விஷயங்கள் சட்டத்துக்குப் புறம்பாக நடப்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், நம்மைச் சுற்றியுள்ள இந்த உலகில் நேர்மையாக மட்டுமே செயல்பட்டு எதையும் சாதிக்க முடியாது னு உனக்கும் தெரியும்,” என்றான்.
பிறகு ரோலக்ஸைப் பார்த்து, “ரோலக்ஸ், இப்பதான் நீ மரணத்தின் விளிம்பிலிருந்து மீண்டு வந்திருக்க. இப்போது எதுவும் தெரிந்து கொள்ள வேண்டாம். உன் உடல்நிலை தேற வேண்டும். அதுவரை இங்கு ஓய்வெடு. எல்லாம் சரியானதும் நான் உனக்கு விளக்கமாகச் சொல்றேன்,” என்று செய்கையில் சொல்ல, ரோலக்ஸ் அமைதியாகத் தலையசைத்தான்.
பின்னர், எட்வர்ட் மற்றொரு காரில் கிளம்ப, ரோலக்ஸ், மயூரா தங்களுக்கு ஒதுக்கப்பட்ட காரில் ஏறிப் பயணம் செய்யத் தொடங்கினர்.
அந்த மலைப் பாதையில் கார் மெல்ல ஏறியபோது, இயற்கை தன் முழு அழகையும் அவர்கள் முன் விரித்தது. மலையைச் சுற்றிச் சூழ்ந்திருந்த அந்த நீலக்கடல், சூரிய ஒளியில் வைரம் போல மின்னிக்கொண்டிருந்தது. தூரத்தில் அலையலைகளாகத் தெரிந்த மலை முகடுகளில் மேகங்கள் தவழ்ந்து கொண்டிருந்தன. கடலின் ஓரத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளைச் சீரமைப்பதும், சிறுவர்கள் மணலில் விளையாடுவதும் அந்தத் தீவின் எதார்த்தமான அழகைப் பறைசாற்றின.
கார் ஒரு வளைவில் திரும்பியபோது, மலையின் உச்சியிலிருந்து கீழே விழுந்து கொண்டிருந்த ஒரு அருவி, ஒரு மெல்லிய வெள்ளி நூலிழை போலத் தெரிந்தது. அந்த அருவியின் நீர்த்துளிகள் காற்றில் கலந்து வரும்போது, அது ஒரு குளிர்ந்த சாரலாக அவர்கள் மீது பட்டது. மயுரா அந்த இயற்கைக் காட்சியில் மெய்மறந்து போனாள்.
ரோலக்ஸ் கார் ஜன்னல் வழியாக அந்த அழகை ரசித்தபடியே, ‘இந்த அமைதி ஒரு வரம்தான். ஆனால், இந்த அமைதி எத்தனை நாட்களுக்கு என்று தெரியவில்லை,” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்..
மலைப் பாதையின் இருபுறமும் அடர்ந்த காடுகள் இருந்தன. கார் செல்லும் பாதையை ஒரு பசுமைச் சுரங்கமாக மாற்றியிருந்தன. அவ்வப்போது மரங்களின் இடுக்கில் தெரிந்த பறவைகளின் ஓசை, அந்த அமைதியை இன்னும் இசையாக்கியது. மயூரா தன் மடியில் இருந்த சாருவை மென்மையாக வருடினாள். சாரு, அந்தப் புதிய சூழலை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தது.
ரோலக்ஸின் இதயம், மயுராவின் இந்த மகிழ்ச்சியைக் கண்டு ஓரளவு நிம்மதி அடைந்தது. எவ்வளவுதான் ஆபத்துகள் இருந்தாலும், இந்த இரண்டு உயிர்களுக்காகத் தான் வாழ வேண்டும் என்ற உறுதி அவனுக்குள் வலுப்பட்டது.
கார் மலையின் மற்றொரு பகுதிக்குச் செல்லும்போது, அந்தத் தீவின் உண்மையான முகம் மெல்லத் தெரியத் தொடங்கியது. அங்கே நவீனக் கட்டிடங்கள் இல்லை என்றாலும், அங்கே வாழும் மக்களின் முகங்களில் ஒருவிதமான கட்டுப்பாடும், ஒழுக்கமும் தெரிந்தது. அவர்கள் செல்லும் வழியெங்கும் இருந்த மக்கள், காரைப் பார்த்ததும் ஒரு நிமிடம் நின்று மரியாதையுடன் கும்பிட்டனர். இது, எட்வர்டின் ஒரு மர்மமான சாம்ராஜ்யம் என்பதை ரோலக்ஸ் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொண்டான்.
கார் மெல்லத் தன் இலக்கை நோக்கிச் சென்றது. அந்த மலைச் சரிவில் அமைந்திருந்த ஒரு அழகான பண்ணை வீடு, முன் கார் நின்றது. அது பார்ப்பதற்கு மிக அமைதியான, ஆனால் பாதுகாப்பான இடமாகத் தெரிந்தது. சுற்றிலும் மலர்களும், மரங்களும் நிறைந்த அந்தச் சூழல், அவர்கள் எதிர்பார்த்த நிம்மதியான வாழ்க்கைக்குச் சரியான இடமாகத் தோன்றியது.
காரிலிருந்து இறங்கியதும், மயூராவின் கண்கள் முதலில் விரிந்தது அந்த வீட்டைச் சுற்றியிருந்த பூந்தோட்டத்தின் மீதுதான். வண்ணமயமான மலர்கள், காற்றில் ஊசலாடிக் கொண்டிருந்த கொடிகள், இதமான வாசனை என அந்தப் பண்ணை வீட்டின் வெளித்தோற்றம் எவரையும் மயக்கும் வகையில் இருந்தது.
வீட்டிற்குள் நுழைந்தார்கள். வசதிகள் என்று பார்த்தால் அங்கே ஆடம்பரமான மின்சாதனங்களோ, நவீனக் கருவிகளோ இல்லை. ஆனால், அந்த இடமே ஒருவிதமான ஆத்மார்த்தமான அமைதியைக் கொண்டிருந்தது. திறந்தவெளி ஜன்னல்கள் வழியாக மலையிலிருந்து வீசும் குளிர்ந்த காற்று, வீட்டிற்குள் ஒரு இயற்கை இசையை வாசித்துக் கொண்டிருந்தது. மயூராவிற்கு அந்த இடத்தைப் பார்த்ததும் ஒரு குழந்தைக்கே உரிய குதூகலம் தொற்றிக்கொண்டது.
“ரோலக்ஸ் … பாரு! எவ்வளவு அழகாக இருக்கு! அந்த ஜன்னலுக்கு வெளியே தெரியும் மலைச் சிகரம், வீட்டைச் சுற்றிப் படர்ந்திருக்கும் மலர்கள்… இத்தனை காலம் இழந்த அமைதி இங்கே கிடைத்துவிட்டது போல இருக்கு எனக்கு!” என்று அவள் உற்சாகத்தில் வீட்டைச் சுற்றிச் சுற்றி ஓடினாள்.
அவள் ஓடிய அந்தத் துள்ளலையும், பல வருடங்களுக்குப் பிறகு அவளது முகத்தில் மலர்ந்த அந்த சுத்தமான புன்னகையையும் பார்த்த ரோலக்ஸ், மெய்மறந்து நின்றான். இத்தனை காலம் அவளது முகத்தில் இருந்த பயம், பதற்றம், மற்றும் அந்த நிழலாகத் தொடர்ந்த மரண பயம் அனைத்தும் மறைந்து, ஒரு மலரைப் போல அவள் மலர்ந்திருந்தாள். அவள் சிரிப்பை ரசித்தபடியே நின்ற ரோலக்ஸின் மனதிலும், ஏதோ ஒரு பெரும் பாரம் இறங்கி, அமைதியான சந்தோஷம் குடியேறியது.
அந்த வெளிநாட்டுக்காரன், ரோலக்ஸிடம் ஒரு மொபைலை நீட்டி, “ஏதாவது தேவைப்பட்டால் இந்த எண்ணிற்கு அழையுங்கள்,” என்று செய்கை மொழியில் சொல்லிவிட்டு, நிசப்தமாக அங்கிருந்து அகன்றான்.
இப்போது அந்த வீட்டில் அவர்கள் மட்டுமே. ரோலக்ஸ் சாருவைத் தன் கைகளில் தாங்கிக்கொண்டு, துள்ளலுடன் வீட்டைச் சுற்றிக்கொண்டிருந்த மயூராவை நெருங்கினான். அவன் வருவது தெரியாமல் ஓடி வந்த மயூரா, எதிர்பாராதவிதமாக ரோலக்ஸின் மார்பில் வந்து மோதினாள். ஒரு கணம் அங்கே மௌனம் நிலவியது. அந்தத் தற்செயலான மோதலில், இருவரது கண்களும் சந்தித்துக் கொள்ள, மயூராவின் முகம் வெட்கத்தில் சிவந்தது. அந்த வெட்கத்தோடு மீண்டும் அவன் மார்பிலேயே தன் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.
ரோலக்ஸ் அவளை மென்மையாகத் தன் கைகளால் இறுக அணைத்துக் கொண்டான். “இந்த இடம் உனக்குப் பிடித்திருக்கிறதா?” என்று தன் கண்களால் அவளிடம் கேட்டான்.
அவள் அவனை நிமிர்ந்து பார்த்தவள், அந்தப் புன்னகையுடனே, “நிச்சயமா, ரொம்பவே பிடித்திருக்கு! இத்தனை வருடங்களில் இல்லாத ஒரு அமைதி எனக்குள் கிடைத்திருக்கு . இந்த இடம் நமக்கு ஒரு புதிய தொடக்கமா இருக்கும் ரோலக்ஸ். நாம் இருவரும் மட்டும், அந்த சாருவும்… எவ்வளவு அழகான வாழ்க்கை, இல்லையா?” என்று மகிழ்ச்சியில் அடுக்கடுக்காகப் பேசியவள், மீண்டும் வீட்டின் அந்த அழகான மூலையைச் சுற்றிப் பார்க்க ஓடினாள்.
பின்னர், குளித்துவிட்டு, உடைகளை மாற்றிக்கொண்ட பிறகு, இருவரும் உணவருந்தத் தயாரானார்கள். வீட்டின் ஓரத்தில் இருந்த பால்கனியில் அமர்ந்து அவர்கள் சாப்பிடத் தொடங்கினர். அங்கே அமர்ந்தால், அந்தத் தீவின் மற்றொரு பகுதி நன்றாகத் தெரிந்தது. உணவருந்திக்கொண்டே ரோலக்ஸின் கண்கள், அந்தத் துறைமுகத்தின் பக்கமாகத் திரும்பின.
அங்கே அந்த கப்பல் நின்றுகொண்டிருக்க, அதிலிருந்து காக்கி நிற சீருடை அணிந்த தொழிலாளர்கள், பெரிய பெரிய பெட்டிகளைச் சுமந்து கொண்டு செல்வதைப் பார்த்தான். அவர்கள் முகத்தில் பெரிய உற்சாகமில்லை என்றாலும், அடிமைகளை விடச் சற்றே மேலான நிலையில் இருப்பதாகத் தோன்றியது.
அவர்கள் அந்தப் பெட்டிகளைத் தோளில் சுமந்து செல்வதைப் பார்த்தபோது, ரோலக்ஸிற்குத் தன் கடந்த காலம் சட்டென ஞாபகம் வந்தது. ஒரு காலத்தில் அவனும் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் அதே போன்றதொரு செந்நிறச் சீருடை அணிந்து, இதே போலக் கனமான சுமையைத் தோளில் சுமந்து உழைத்துக் கொண்டிருந்தான்.
அன்றைய இரவு மயூராவும் பைரவனும் அவனைப் பார்த்து கெஞ்சினார்கள். ஆனால், அன்று அவன் அவர்கள் பேச்சைக் கேட்கவில்லை. தன்னம்பிக்கை என்ற பெயரில் தன் விதியைத் தானே மாற்றி எழுதத் துணிந்தான்.
அதன் விளைவாக, அவன் இன்று இந்தத் துறைமுகத்தில், ஒரு புதிய தேசத்தில் அமர்ந்திருக்கிறான். ஆனால், அவன் அந்த முடிவை எடுக்கும்போது, எத்தனை ரத்த ஆறு ஓடியிருக்கும்? எத்தனை உயிர்கள் பலியாகியிருக்கும்?
‘அன்று நான் அவர்கள் பேச்சைக் கேட்டு அந்த வாழ்க்கையை விட்டு வந்திருக்க வேண்டும்… அல்லது அன்று அந்த முடிவை எடுக்காமல் இருந்திருந்தால்?’ என்று எண்ணியவனுக்கு, விசாகப்பட்டினம் துறைமுகத்தின் அந்த நாள் நினைவுகள் ஒரு திரைச்சீலையைப் போல விரிந்தன.…
வேட்டை தொடரும் ..⚓
