Rolex 35

35

 

அன்று காலை துறைமுகத்தின் கடலின் உப்புக்காற்று வீசிக் கொண்டிருக்க, இரும்பு சங்கிலிகளின் இரைச்சலும், கப்பல்களின் ஹாரன் சத்தமும் அந்த இடத்தை ஒரு இயந்திர கதியாக மாற்றியிருந்தது. ரோலக்ஸ் தனது வெளிர் சிவப்புச் சட்டையை அணிந்து, கையில் அந்த அடையாளப் பேட்ஜை மாட்டிக்கொண்டு, கப்பலில் இருந்து சரக்குகளை இறக்கும் கூலித் தொழிலாளியாகச் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தான்.

அவனது அவன் கண்கள் ஒரு கழுகைப் போலச் செயல்பட்டன. அவனது ஒவ்வொரு அசைவிலும் ஒரு அசாத்தியமான வேகம் இருந்தது. மற்ற கூலிகள் பத்து பேர் சேர்ந்து தூக்கும் பெரிய மரப் பெட்டியை, அவன் தனியொருவனாகத் தனது தோளில் ஏற்றிச் செல்வதைப் பார்க்கும் போதே மற்றவர்கள் அவனுக்கு ஒரு தனி மரியாதையைத் தரத் தொடங்கினர்.

அதே சமயம், அந்தத் துறைமுகத்தின் நிழல் உலகம் பாபியின் கட்டுப்பாட்டில் இருந்தது. பாபி, ரோலக்ஸின் மீதான நம்பிக்கையை முழுமையாகக் கொண்டிருந்தான். தர்மாவின் மறைவுக்குப் பிறகு, அந்த இடத்தைப் பூர்த்தி செய்யக் கூடிய ஒரே ஆளாக அவன் ரோலக்ஸையே பார்த்தான்.

ஒரு மாலை நேரம். துறைமுகத்தின் containers Godown அருகே பாபியின் ஆட்கள் சிலரை, உள்ளூர் ரவுடிகள் கும்பல் ஒன்று மிரட்டிக் கொண்டிருந்தது. அவர்கள் பாபியின் சரக்குகளைக் கடத்தப் பார்த்து, அதற்குத் தடையாக இருந்த ஆட்களை அடித்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அங்கு ரோலக்ஸ் வந்தான்.

அவன் தன் கையில் இருந்த கூலி வேலைக்கான இரும்புக் கம்பியைச் சுழற்றிக் கொண்டே அந்த இடத்திற்கு வந்தான். அவனுக்குக் கேட்கும் திறன் இல்லை என்றாலும், அந்த ரவுடிகள் காட்டிய ஆக்ரோஷமான உடல்மொழியை வைத்தே அவர்கள் அச்சுறுத்தலை உணர்ந்தான். அவன் எந்தவித சத்தமும் போடவில்லை. மெதுவாக அவர்களுக்கு முன்னே சென்று நின்றான்.

அந்த ரவுடி கும்பலின் தலைவன் ரோலக்ஸைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான். “என்னடா கூலி வேலை பார்க்கிறவன் எல்லாம் குறுக்க வர்ற?” என்று அவன் கத்த, அவனது உதட்டசைவை வைத்தே ரோலக்ஸ் அவன் பேசுவதை புரிந்துக் கொண்டான்.

ரோலக்ஸ் பதிலுக்கு எதுவும் பேசவில்லை. அவன் ஒரு மின்னல் வேகத்தில் தன் துணியைத் தட்டி விட்டு, அந்த ரவுடியின் தாடையைப் பிடித்து அழுத்தினான். அடுத்த நொடி, அந்த இடமே போர்க்களமானது. அவன் காது கேட்காதவன் என்பது அவனுக்குப் பெரிய பலமாகவே இருந்தது, ஏதுவான சத்தங்களோ, பயமுறுத்தும் கூச்சல்களோ அவனைச் சிதறடிக்கவில்லை. அவன் ஒரு தாள கதியுடன் அந்த ரவுடிகளைத் தாக்கிய விதம், அங்கிருந்த மற்றவர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. ஒரே நிமிடத்தில், அந்தப் பதினைந்து பேர் கொண்ட கும்பலும் ரோலக்ஸின் காலடியில் கிடந்தது.

அந்தப் பாபியின் ஆட்கள் வியப்போடு அவனைப் பார்த்தனர். ரோலக்ஸ் அமைதியாகத் தனது காலரைச் சரி செய்துவிட்டு, மீண்டும் தனது கூலி வேலையைத் தொடரச் சென்றான். அவன் ஒரு வீரனைப் போலப் பெருமை கொள்ளவில்லை, மாறாக, ஒரு சாதாரணக் கூலியைப் போலவே தன் வேலையைத் தொடர்ந்தான். ஆனால், அந்த இடத்திலிருந்த அனைவருக்கும் புரிந்தது, ‘ரோலக்ஸ் வெறும் கூலி அல்ல, பாபியின் பலமான கரம்’ என்று.

மறுநாள், பாபியின் கோட்டையில். பாபி ரோலக்ஸ் செய்த வீரச் செயலைக் கேள்விப்பட்டு, அவனைத் தன் அறைக்கு அழைத்திருந்தான். அவன் அமர்ந்திருந்த தர்மாவின் பழைய இருக்கையில் ரோலக்ஸ் அமர்ந்திருக்க, பாபி அவனைப் பெருமையுடன் பார்த்தான்.

“தர்மாவிற்கு அப்புறம், எனக்கு இவ்வளவு தைரியத்தைக் கொடுத்தது நீதான் ரோலக்ஸ். நீ பேச மாட்டேன்னு தெரியும், ஆனா உன் செயல் உரக்கப் பேசுது. இந்த ஊர்ல இருக்குற ஒவ்வொரு ரவுடியும் உன்னைப் பார்த்தா பயப்படணும். அதுதான் என்னோட விருப்பம்,” என்று பாபி சைகையில் கூறினான்.

ரோலக்ஸ் பாபியின் கண்களை ஆழமாகப் பார்த்தான். அவன் மனதில் ஓடியது வேறொன்று. ‘உன் நம்பிக்கையை நான் வளர்க்கிறேன். நீயே உன் கைகளால் என் கையில் அதிகாரத்தைக் கொடுப்பாய். அன்று, உன் வீழ்ச்சியை நீயே உணர்வாய்,’ என்று அவன் எண்ணினான்.

இதற்குப் பிறகு, ரோலக்ஸின் செல்வாக்குத் துறைமுகத்தில் மட்டுமல்ல, பாபியின் கோட்டையிலும் பலமடைந்தது. பாபிக்குத் தேவையாக இருந்த சில முக்கியமான ஆட்களை மிரட்டுவதற்கும், அவனது எதிரிகளின் நிழல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கும் ரோலக்ஸ் ஒரு கருவியாக மாறினான். அவன் எங்கு சென்றாலும், அவன் அணிந்திருக்கும் அந்தப் பழைய கூலிப் பேட்ஜ் அவனது அடையாளமாக இருந்தது.

ஒரு நாள், பாபியின் எதிரி ஒருவன், பாபியை நேருக்கு நேர் சந்திக்கத் துணிந்தான். அவன் பாபியின் மேஜையில் ஒரு சவாலை வைத்தான். பாபி ஆத்திரமடைந்தபோது, ரோலக்ஸ் இடைமறித்தான். அவன் எந்த ஆயுதமும் இன்றி அந்த எதிரியின் முன் சென்றான். அவனது கண்களில் இருந்த தீர்க்கமும், மௌனமும் அந்த எதிரியைப் பதற வைத்தது. ரோலக்ஸ் அவன் மேஜையின் மீது மெதுவாகத் தன் கையை வைத்துத் தட்டினான். அவன் பேசவில்லை, ஆனால் அவன் உடல்மொழி சொன்னது: “நீ பேசும் ஒவ்வொரு சொல்லும் உனக்கு ஆபத்து.”

பாபி இதைப் பார்த்து மெய் சிலிர்த்துப் போனான். ரோலக்ஸ் இப்போது தர்மாவின் இடத்தை மட்டுமல்ல, பாபியின் அச்சத்தின் அடையாளமாகவும் மாறியிருந்தான்.

ஆனால், இவை அனைத்திற்கும் பின்னால், பைரவனுடன் சேர்ந்து ரோலக்ஸ் ஒரு ரகசியத் திட்டத்தைத் தீட்டிக் கொண்டிருந்தான். துறைமுகத்தில் வரும் ஒவ்வொரு ஸ்டாக் கணக்கையும், பாபி கையாளும் பணப் பரிமாற்றங்களையும் நுணுக்கமாகக் கவனித்து வந்தான். பாபியின் நம்பிக்கையைப் பெற்று, அவனது பலவீனங்களை ஒவ்வொன்றாக அறிந்து கொண்டான்.

துறைமுகத்தின் வேலைகளுக்கு இடையே, அவன் பாபியின் ஆட்களைப் பயிற்றுவித்தான். ஒரு அடியாளாக எப்படி இருக்க வேண்டும், எப்போது சண்டையிட வேண்டும் என்று அவனது ஒவ்வொரு அசைவும் ஒரு கலைப்படைப்பாக இருந்தது. பாபிக்கு ரோலக்ஸ் ஒரு தம்பியாகத் தெரிந்தான், ஆனால் ரோலக்ஸ் பாபிக்கு ஒரு மறைமுகமான எமனாக வளர்ந்து கொண்டிருந்தான்.

இரவு நேரங்களில், கடற்கரையில் அமர்ந்து கடலைப் பார்த்தபடி, ரோலக்ஸ் தனது வருங்காலத்தைப் பற்றிச் சிந்திக்க தொடங்கினான், அவனது சிந்தனையில் அன்று ஓடி போன சந்துருவின் நினைவுகள் இல்லாமல் இல்லை… அவனின் கண்களில் அன்று தெரிந்த குரோதம் …  அதனின் விளைவு என்றோ ஒரு நாள் அவன் தன் முன் வந்து நிற்பான் என்ற எண்ணம் இருந்தது, அவன் மௌனம் ஒரு சாபம் அல்ல, அது ஒரு பெரும் கடலைப் போன்றது. எவ்வளவு அமைதியாக இருந்தாலும், கடலின் ஆழத்தில் எப்போது வேண்டுமானாலும் ஒரு சுனாமி எழலாம்.

அவன் தன் கையிலிருந்த பேட்ஜைப் பார்த்தான். அது வெறும் இரும்புத் துண்டு அல்ல, அது பாபியின் சாம்ராஜ்யத்தை இடிக்க அவன் பயன்படுத்தும் திறவுகோல். பைரவன் அவனருகே வந்து, “எல்லாம் சரியாப் போய்கிட்டு இருக்கு, ரோலக்ஸ். அவன் முழுமையா உன்னை நம்பிவிட்டான்,” என்று சைகையில் கூறினான்.

ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்தான் ரோலக்ஸ், அந்தப் புன்னகையில் வஞ்சகம் இல்லை, அது அவன் இலக்கை அடைவதற்கான உறுதியைக் காட்டியது. பாபியின் கோட்டையில் அவன் இப்போது தர்மாவைப் போல மிக முக்கியமான நபராகக் கருதப்படுகிறான். பாபியின் ஒவ்வொரு கட்டளையும் ரோலக்ஸ் வழியாகவே நிறைவேறத் தொடங்கியிருந்தது.

அவனைப் பார்த்த பாபி, “ரோலக்ஸ், நீ என் தம்பி. தர்மாவைக் கொன்றவன் யாராக இருந்தாலும், நீ அவனைத் தேடி கண்டுபிடி. உனக்குத் துணையாக இந்த மொத்தப் படை இருக்கும்,” என்று சொன்னபோது, ரோலக்ஸ் தன் கைகளைச் சேர்த்து வணக்கம் வைத்தான்.

அவன் அந்த அறைக்குள் நடக்கும்போது, அவன் காலடிச் சத்தத்தை விட அவனது மௌனம் அதிக சத்தத்தை எழுப்பியது. பாபி அவனைக் கட்டித் தழுவியபோது, ரோலக்ஸின் கைகள் அவன் முதுகுக்குப் பின்னால் ஒரு கத்தியைத் தீட்டுவது போல இறுக்கமடைந்தன.

அந்த நாளில், அந்த துறைமுகத்தின் அந்த பழைய சிவப்புச் சட்டையணிந்த கூலி, பாபியின் சாம்ராஜ்யத்தின் ஒரே முடிச்சுப் புள்ளியாக மாறினான். அந்த மௌனத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் பெரும் புயல், எப்போது வேண்டுமானாலும் அந்தப் பிரம்மாண்டமான கோட்டையைச் சிதைக்கத் தயாராக இருந்தது. ரோலக்ஸ் ஒரு கூலியாக வாழ்ந்தாலும், அவன் ஒரு மன்னனாக அந்தச் சூழலை ஆண்டு கொண்டிருந்தான்.

எதிரிகள் பயந்தனர். பாபி நம்பினான். ஆனால் ரோலக்ஸ் மட்டும் தான் என்ன செய்யப் போகிறோம் என்பதற்கான அந்தத் திட்டத்தை மட்டும் யாருக்கும் தெரியாமல் தன் மௌனத்திற்குள் பூட்டி வைத்திருந்தான். அந்த மௌனம் தான், பாபியின் வீழ்ச்சிக்கான முதல் அறிவிப்பு.

அன்று ஒரு நாள் நற்பகல் நேரம் துறைமுகத்தின் தகிக்கும் வெயில் சரக்கு கப்பல் Deck Port பகுதியில்  கடல் காற்று உப்பு வாசனையுடன் வீசிக்கொண்டிருந்தது. ராட்சதக் கப்பல்கள் வந்து செல்லும் அந்த இடத்தில், பாபியின் ஆதிக்கம்தான் சட்டம். துறைமுகத்திற்கு வரும் ஒவ்வொரு கப்பலும், பாபியின் கஜானாவிற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை லஞ்சமாககொடுக்க வேண்டும். இது எழுதப்படாத விதி.

பாபி, தனது மேஜையை ஒரு டெக் போர்ட் அருகே போட்டுக்கொண்டு, சுருட்டுப் புகையை மேகங்களாக ஊதிக்கொண்டிருந்தான். அவனது வலது கை பழக்கமான ரோலக்ஸ், எந்த உணர்ச்சியும் காட்டாமல் அவனுக்குப் பின்னால் நின்றிருந்தான். தூரத்தில் ஒரு புது வெளிநாட்டின் பிரம்மாண்டமான சரக்கு கப்பல் ஒன்று நின்றது. அதன் பிரம்மாண்டம் சூரிய ஒளியில் மின்னியது.

பாபி தனது ஆட்களிடம், “இன்னைக்கு அந்தப் பெரிய கப்பல்… கமிஷனை வழக்கத்தை விட டபுளா கேளுங்க. அந்தப் பயலுக்கு இங்க இருக்கிற சட்டம் தெரியாது, மிரட்டி வாங்குங்க!” என்று அதிகாரத்துடன் சொன்னான்.

பாபியின் ஆட்கள் கப்பலுக்குள் சென்று சில நிமிடங்கள் கழித்து, கப்பலின் அதிகாரிகளுடன் திரும்பி வந்தனர். அவர்கள் பாபியிடம் வந்து, “பாபி… கப்பலோட ஓனர் உள்ளதான் இருக்காரு. அவர் வரமாட்டேன்னு சொல்லிட்டாரு” என்றனர்.

பாபி கோபத்தில் நாற்காலியில் இருந்து எழுந்தான். “என்னது வரமாட்டேனா? அந்தப் பணத்தை கொடுக்கலன்னா, இந்த கப்பல்ல இருக்குற ஒரு பெட்டி கூட கரையேறாதுன்னு சொல்லிடு! போய் அவனைக் கூட்டிட்டு வா!” என்று கர்ஜித்தான்.

ஆட்கள் தயங்கித் தயங்கி மீண்டும் கப்பலுக்குள் சென்றனர். சிறிது நேரத்தில், கப்பலின் அந்தப் பிரம்மாண்டமான படிகளில் ஒருவன் கீழே இறங்கி வந்தான். அவனைப் பார்த்ததும் அங்கே இருந்த அத்தனை பேரின் கவனமும் அவன் பக்கம் திரும்பியது.

25-28 வயது மதிக்கத்தக்க வெள்ளைக்கார இளைஞன். மெல்லிய உடல்வாகு, ஆனால் கம்பீரமான நடை. அவனது கண்கள் ஏதோ ஒரு ஆழமான ரகசியத்தைச் சுமந்து கொண்டிருப்பது போல இருந்தது. அவனது ஒவ்வொரு அடியிலும் ஒருவிதமான நிதானமான உறுதி இருந்தது.

கீழே இருந்த ரோலக்ஸின் கண்கள் அவனை ஊடுருவிப் பார்த்தன. ரோலக்ஸிற்கு அவனைக் கண்டதும் மனதிற்குள் ஏதோ ஒரு நெருடல். ஒரு அறிமுகமில்லாத உணர்வு, ஆனால் அவன் யாரென்று புரியவில்லை. அந்த இளைஞன் நேராகப் பாபியின் எதிரே வந்து நின்றான். அவனது முகம், பாபியின் அதிகாரத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

பாபி அவனைப் பார்த்து, “ஏய்… கப்பலோட ஓனரா நீ? நான் கேக்குற பணத்தை கொடுக்கலன்னா, உன் கப்பல் இங்கேயே தான் நக்கும். சரக்கை இறக்க முடியாது!” என்று கத்தினான்.

அந்த வெள்ளைக்கார இளைஞன், பாபியை ஒருமுறை ஏளனமாகப் பார்த்தான். பின்னர், பாபிக்குப் பின்னால் நின்றிருந்த ரோலக்ஸைப் பார்த்தான். அந்தப் பார்வையில் ஒருவிதமான கனிவு, ஒரு புரிதல் இருந்தது. அந்தப் பார்வை ரோலக்ஸை நிலைகுலைய வைத்தது. ரோலக்ஸ் அவனை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். 

அந்தத் தருணம், அவன் பேசவில்லை. மாறாக, தனது விரல்களை லாவகமாக அசைத்து, சைகை மொழியில் பாபிக்கு ஏதோ சொன்னான். அவன் சைகையை கவனித்த ரோலக்ஸின் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. அவன் ஒரு ஊமை! தன்னைப் போலவே அவனுக்கும் பேச்சு வராது, காது கேட்காது. ஆனால் அவனது சைகையில் இருந்த அழுத்தம், ரோலக்ஸை ஏதோ செய்தது ..

யார் அவன் ?

வேட்டை தொடரும் ..⚓

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!