36
கப்பலில் இருந்து இறங்கி வந்த அந்த வெள்ளைக்காரன் ஏதும் பேசவில்லை. மாறாக, தனது விரல்களை லாவகமாக அசைத்து, சைகை மொழியில் பாபிக்கு ஏதோ சொன்னான். அவன் சைகையை கவனித்த ரோலக்ஸின் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. அவன் ஒரு ஊமை! ரோலக்ஸைப் போலவே அவனுக்கும் பேச்சு வராது, காது கேட்காது. ஆனால் அவனது சைகையில் இருந்த அழுத்தம், பாபியைப் புண்படுத்தியது.
பாபிக்கு ஆத்திரம் தலைக்கேற, “வாய் பேச முடியாத நீயே எனக்கு சைகை காட்டுறயா?” என்று சொல்லி, மேஜை மீது இருந்த துப்பாக்கியை எடுத்தான்.
பாபி துப்பாக்கியைச் சுடுவதற்குள், அந்த வெள்ளைக்கார இளைஞன் மின்னல் வேகத்தில் செயல்பட்டான். அவனது சட்டைப் பையிலிருந்து ஒரு சிறிய கத்தி மின்னலாகப் பாய்ந்தது. பாபியின் கையிலிருந்த துப்பாக்கியின் trigger பகுதியை அவன் கத்தி பதம் பார்த்தது. பாபி சுடுவதற்குள், அவன் பாபியின் கழுத்தைப் பிடித்து மேஜையில் தள்ளினான்.
அங்கே நின்றிருந்த பாபியின் ஆட்கள் பத்து பேர், இரும்புக் கம்பிகளுடன் அந்த இளைஞனைச் சூழ்ந்தனர். ஆனால் அவன் பயப்படவில்லை. அவனது அசைவுகள் ஒரு நடனம் போல இருந்தன. அவன் ஒரு கம்பியைத் தட்டிப் பறித்து, அதைச் சுழற்றிய விதம் ஒரு இராணுவ கமாண்டோ போல திறமையை வெளிப்படுத்தியது.
ரோலக்ஸ் அங்கேயே சிலை போல நின்றிருந்தான். அவன் ஏன் இன்னும் தடுத்து நிறுத்தவில்லை? ஏதோ ஒரு மர்மம் அவனைத் தடுத்தது.
அந்த வெள்ளைக்காரன், ஒரு ஆளின் முகத்தில் ஓங்கி உதைத்தான். அவன் விழுந்த வேகத்தில், அருகில் இருந்த பெரிய இரும்புப் பெட்டி சரிந்து, மற்றுமொரு ஆளின் மேல் விழுந்தது. அந்த இளைஞன், பாபியின் ஆட்களை ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளச் செய்தான். கப்பலின் டெக்கிலிருந்து அந்த ஆட்கள் தண்ணீரில் தலைகுப்புற விழுந்தனர்.
பாபி, “ரோலக்ஸ்! என்ன பார்த்துட்டு இருக்க? அவனைத் தீர்த்துக்கட்டு!” என்று கத்தினான்.
ரோலக்ஸ் மெதுவாக அடி எடுத்து வைத்தான். அந்த வெள்ளைக்கார இளைஞன், ரோலக்ஸைப் பார்த்தான். அவன் கண்களில் பயம் இல்லை, மாறாக ஒரு சவால் இருந்தது. ரோலக்ஸ் தன் கைகளை மடக்கி, சண்டைக்குத் தயாரானான். அவன் இடி போன்ற ஒரு குத்தை அந்த இளைஞனின் முகத்தை நோக்கி வீசினான். அவன் அதைத் தந்திரமாக விலக்கினான்.
இருவருக்கும் இடையே நடந்த சண்டை, அந்தத் துறைமுகத்தையே அதிர வைத்தது. ரோலக்ஸ் ஒரு இயந்திரம் என்றால், அந்த வெள்ளைக்கார இளைஞன் ஒரு கூர்மையான கத்தி! ரோலக்ஸ் வீசிய ஒவ்வொரு குத்தும், அந்த இளைஞனின் வேகத்தால் காற்றில் கரைந்தது. இளைஞன் ஒருமுறை ரோலக்ஸின் மார்பில் பலமாக உதைக்க, ரோலக்ஸ் பின்னோக்கிச் சரிந்தான்.
ஆனால் ரோலக்ஸ் சளைப்பவன் அல்ல. அவன் மீண்டும் எழும்பி, அந்த இளைஞனைப் பிடித்துத் தூக்கி, கப்பலின் இரும்புத் தூணில் மோதினான். அந்த இளைஞன் இரத்தத்தைக் துப்பினான். ஆனாலும் அவன் சிரித்தான். அந்தச் சிரிப்பில் இருந்த ஏளனம் ரோலக்ஸை மேலும் ஆத்திரப்படுத்தியது.
துறைமுகத்தின் தரைத்தளம், இரத்தமும் வியர்வையும் கலந்த களமான மாறியிருந்தது. ரோலக்ஸுக்கும் அந்த மர்மமான வெள்ளைக்கார இளைஞனுக்கும் இடையே நடந்த சண்டை, ஒரு உயிரிழக்கும் போராட்டம் போலத் தோன்றியது. ஆனால், அந்தப் போருக்குப் பின்னால் ஒரு ரகசிய உடன்படிக்கை உருவாவதை பாபியின் ஆட்கள் எவரும் கவனிக்கவில்லை.
இருவரும் ஒருவரை ஒருவர் இறுக்கிக் கொண்டு, இரும்புத் தளத்தின் துருப்பிடித்த தரையில் உருண்டு புரண்டு சண்டையிட்டனர். ரோலக்ஸின் ஒவ்வொரு குத்தும் அந்த இளைஞனின் கன்னத்தைச் சீண்டிச் சென்றதே தவிர, அவன் மீது பலமாக விழவில்லை. ரோலக்ஸ் வேண்டுமென்றே தன் இலக்கை மாற்றி, அவனது உடலை உரசித் தப்பித்தான். இதைக் கவனித்த அந்த வெள்ளைக்காரன், ரோலக்ஸின் கண்கள் சொல்லும் அந்த மௌன மொழியைப் புரிந்துகொண்டான். ரோலக்ஸ் அவனை அடிக்கவில்லை, மாறாகக் காப்பாற்ற முயன்றான்!
அந்த இளைஞன் ரோலக்ஸைத் தாக்காமல் இருக்கவில்லை, அவன் ரோலக்ஸைச் சுற்றிப் பாய்ந்து வந்த பாபியின் ஆட்களைத் தன் கால்களாலும் கைகளாலும் சிதறடித்தான். ஒவ்வொரு அடியும் ஒரு இடியென விழுந்தது. ஒரு ஆளின் நெஞ்சில் அவன் வைத்த உதை, அவனைப் பத்து அடி தள்ளிப் போய் விழச் செய்தது. அதே நேரம், கப்பலின் மறுபக்கம் பாபியின் ஆட்கள் அந்த வெள்ளைக்காரனின் மாலுமிகளையும், கப்பலையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர். இப்போது அந்த இளைஞன் தப்பித்தால், கப்பலும் உள்ளே இருக்கும் சரக்கும் பாபியின் கைவசமாகிவிடும் என்பதை ரோலக்ஸ் உணர்ந்தான்.
அவர்கள் இருவரும் புரண்டு சண்டையிட்டுக் கொண்டிருக்கும் அந்தச் சிறு இடைவெளியில், ரோலக்ஸ் மின்னல் வேகத்தில் தன் விரல்களை அசைத்தான். அவன் செய்த அந்தச் சைகை மிகத் தெளிவாக இருந்தது, ‘சரணடைந்து விடு! நீ மட்டும் தப்பித்தால் உன் கப்பலும் சரக்கும் கிடைக்காது. நான் உனக்கு மறைமுகமாக உதவுகிறேன். என்னை நம்பு!’ என்றான்
அந்த வெள்ளைக்கார இளைஞனின் கண்கள் விரிந்தன. அவனுக்கு இப்போதுதான் தெரிந்தது, தனக்கு எதிரே நிற்பவனும் தன்னைப்போலவே ஒரு ஊமை என்பதை. அவனது கண்கள் ரோலக்ஸைப் பார்த்தன. அதில் ஒரு புதிய நம்பிக்கை மின்மினியது. அவன் சுற்றிப் பார்த்தான், தன் கப்பல் பாபியின் ஆட்களால் வளைக்கப்பட்டிருந்தது. தான் மட்டும் தப்பிப்பதில் அர்த்தமில்லை. ரோலக்ஸின் செய்கையை நம்புவதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை. அவன் தன் வேகத்தைக் குறைத்துக் கொண்டு, ரோலக்ஸிடம் வீழ்வது போலத் தளர்ந்தான். ரோலக்ஸ் அவனைத் தன் பிடிக்குள் அடக்கி, ஒரு வெற்றியாளனைப் போலப் பாபியின் முன் கொண்டு வந்து நிறுத்தினான்.
“நல்லது ரோலக்ஸ்! இதோ பார், இந்த வெளிநாட்டு நாயின் திமிரை அடக்கிட்டேன்!” என்று பாபி கர்ஜித்தான். கோபத்தோடு எழுந்து வந்த பாபி, அந்த இளைஞனின் கன்னத்தில் தன் அதிகாரத்தைப் பறைசாற்றும் விதமாக ஓங்கி ஒரு அடி கொடுத்தான். அந்த அடியில் அவனது கன்னம் பழுத்து, உதட்டின் ஓரத்தில் இருந்து ரத்தம் கசிந்து அந்த இரும்புத் தளத்தில் துளியாக விழுந்தது. அவன் வலியை உணர்ந்தாலும், துளியும் அசையாமல் பாபியை ஏளனமாகப் பார்த்தான்.
பாபி மீண்டும் அடிக்கக் கை ஓங்கினான். ரோலக்ஸ் குறுக்கே வந்து அவன் கையைப் பற்றினான். சைகையிலே, “இவனை அடிப்பதால் நமக்கு என்ன லாபம்? இவன் வாயைத் திறக்கப்போவதில்லை. நமக்குத் தேவை அவனுடைய சரக்கு! அதை மட்டும் வாங்கிக்கொண்டு இவனை அனுப்பிவிடுவோம். இவன் வெளிநாட்டுக் காரன், போலீஸ் பிரச்சனை வந்தால் நமக்குத்தான் வம்பு!” என எச்சரித்தான்
ரோலக்ஸ் மீது பாபி வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையால், அவன் கோபத்தைக் குறைத்துக்கொண்டவன். “சரி ரோலக்ஸ்… நீ சொல்வதிலும் நியாயம் இருக்கு. ஆனா, இவ்வளவு ரோஷமா இவன் நடந்துகொள்கிறான் என்றால், அவன் கப்பலில் இருக்கும் சரக்கு சாதாரணமாக இருக்காது. என்ன இருக்கிறது என்று பாருங்கள்!” என்று தன் ஆட்களுக்குக் கட்டளையிட்டான்.
பாபியின் ஆட்கள் கப்பலின் உள்பகுதிக்கு ஆயுதங்களோடு நுழைந்தனர். சிறிது நேரத்தில், கனமான மரப்பெட்டிகளைத் தூக்கிக்கொண்டு வந்தனர். அந்தப் பெட்டிகள் இரும்புக் கம்பியும் தடிமனான கட்டைகளால் இறுகக் கட்டப்பட்டிருந்தன. அதைத் திறக்க ரோலக்ஸைப் பணித்தான் பாபி.
ரோலக்ஸ் ஒரு பெரிய கம்பியை எடுத்து அந்தப் பெட்டியின் மூடியைப் பெயர்த்தான். ‘க்ரீச்…’ என்ற சத்தத்துடன் மூடி திறந்தது. உள்ளே இருந்ததைப் பார்த்த பாபியின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. அவனது உடல் நடுங்கத் தொடங்கியது.
அதில் இருந்தது வெறும் சாதாரணப் பொருட்கள் அல்ல. பெட்டி முழுக்க உயர்தரமான, சர்வதேசச் சந்தையில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தூய்மையான தங்கம்..
அந்த வெள்ளைக்கார இளைஞன், ரோலக்ஸைப் பார்த்தான். அவனது கண்களில் ஒருவிதமான பயமும், அதே சமயம் ரோலக்ஸ் இப்போதாவது அவனைக் காப்பாற்றுவானா என்ற ஏக்கமும் இருந்தது. அந்தத் தங்கம் பார்த்த பாபியின் கண்கள் பேராசையில் ஜொலித்தன. அவன் ரோலக்ஸைத் திரும்பிப் பார்த்தான்.
அந்தப் பெட்டியில் இருந்த தங்கம் மின்ன, அதன் பிரதிபலிப்பு பாபியின் கண்களில் விழுந்தது. அவன் அந்த இளைஞனைப் பார்த்து, “இதை என் துறைமுகத்தில் வைத்திருப்பதற்கு நீ எவ்வளவு பணம் கொடுத்தாய் என்று இப்போது புரிகிறது. நீ வெறும் வியாபாரி அல்ல, நீ ஏதோ ஒரு பெரும் தேசத்தின் தூதுவன்!” என்று நக்கலாகச் சிரித்தான்.
அந்தப் பெட்டிக்கு முன்னால் நின்றிருந்தான். அவன் கையில் இருந்த இரும்புக்கம்பி இப்போது ஒரு கதாயுதமாக மாறியது.
இந்தச் சரக்கு பாபியின் கைக்குச் சென்றால், அந்தப் பகுதி முழுவதும் பெரும் ரத்தம் சிந்தும். அந்த வெள்ளைக்கார இளைஞன் தன் வாழ்நாளின் லட்சியத்தை இழந்தான். ரோலக்ஸ் யோசித்தான், தன் பிடிவாதத்தால் அன்று அவன் எடுத்த முடிவு, இன்று இவ்வளவு பெரிய சுமையாக அவன் தோளில் விழுந்திருக்கிறது. ஒருபுறம் பாபியின் பேராசை, மறுபுறம் அந்த ஊமை இளைஞனின் ஏக்கம்.
ரோலக்ஸ் மெதுவாகச் சைகை செய்தான், “பாபி, இந்த சரக்கு இப்போது நமக்குத் தடையைத்தான் தரும். இதைத் துறைமுகத்திற்குள் வைத்தால் அரசாங்கம் நமது கழுத்தை அறுத்துவிடும். இதை நாம் அந்தத் தீவின் ஆழமான பகுதிக்குக் கொண்டு செல்வோம்.”
பாபி தலையாட்டினான். அவனுக்குத் தெரியவில்லை, ரோலக்ஸ் இந்தத் தங்களைக் கொண்டு பாபியை எப்படிச் சிக்க வைக்கப் போகிறான் என்று. அந்த இரும்புத் தளம், ஒரு பெரும் சதித் திட்டத்திற்குச் சாட்சியாக அமைதியாக இருந்தது. பாபியின் ஆட்கள் அந்தப் பெட்டிகளைத் தூக்கிக்கொண்டு நகரத் தொடங்கினர். ரோலக்ஸ் அந்த இளைஞனின் பக்கம் திரும்பி, அவனுக்கு மட்டும் புரியும் வகையில் கண்களைச் சிமிட்டினான்.
ஆனால் அந்தத் தங்கக் கட்டிகளின் மின்னல் பாபியின் கண்களைப் பறித்தது. அந்தச் சிறு பெட்டியிலேயே இவ்வளவு தங்கம் இருக்கிறதென்றால், இந்த வெளிநாட்டு இளைஞன் சாதாரணமானவன் அல்ல, ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் வாரிசாகவோ அல்லது ஏதோ ஒரு ரகசியக் குழுவின் மாபியா தலைவனாகவோதான் இருக்க வேண்டும் என்று பாபி கணித்தான். அவனது பேராசை பலமடங்கு கூடியது.
அந்த இளைஞனைச் சட்டையைப் பிடித்து உலுக்கியபோது, அவனது கோட் பைக்குள் இருந்து ஒரு துப்பாக்கி நழுவித் தரையில் விழுந்தது. அந்தத் துப்பாக்கியை எடுத்த பாபியின் கண்கள் மிரண்டு போயின. அது சாதாரணத் துப்பாக்கி அல்ல. பனிவெண்மையான வெள்ளை நிறத்தில் இருந்தது, அதன் கைப்பிடியில் ஒரு உக்கிரமான டிராகன் வடிவம் செதுக்கப்பட்டிருந்தது. அதன் எடையும், அதில் பதிந்திருந்த வேலைப்பாடுகளும் அது ஒரு சாதாரண ஆயுதம் அல்ல, ஏதோ ஒரு உயர்ரகப் படையின் சின்னம் என்பதை உணர்த்தின.
பாபி அந்தத் துப்பாக்கியை ஒரு கணம் ரசித்துப் பார்த்தான். பிறகு ரோலக்ஸின் பக்கம் திரும்பி, ஒரு குரூரமான புன்னகையுடன், “ரோலக்ஸ்… இந்தப் போராளிக்கும், அந்தத் தங்கத்திற்கும் நீ தான் காரணம். இந்த டிராகன் துப்பாக்கி இனி உனக்குச் சொந்தம். இதைக் கைவசம் வைத்திரு, இது உனக்கு ஒரு கௌரவம்!” என்று சொல்லி அதை ரோலக்ஸின் கையில் திணித்தான்.
ரோலக்ஸ் அமைதியாக அந்தத் துப்பாக்கியை வாங்கித் தன் இடுப்பில் சொருகிக்கொண்டான். ஆனால், அவனது கண்கள் அந்த இளைஞனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தன. அவன் எதற்கும் அஞ்சாமல், ஒரு பாறையைப் போல அசையாமல் நின்றான். அந்த இளைஞனின் தைரியம் பாபிக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. “வெறும் தங்கத்திற்காக மட்டும் இவன் இவ்வளவு அலட்சியமாக இருக்கமாட்டான். இவன் கப்பலில் இன்னும் ஏதோ இருக்கிறது!” என்று பாபி உறுதியாக நம்பினான்.
உடனே தன் ஆட்களை ஏவி, “கப்பலைத் தரைமட்டமாக்குங்கள்! ஒரு அங்குலம் கூட விடாதீர்கள். ஆணிவேர் வரை தோண்டி எடுங்கள்!” என்று கர்ஜித்தான்.
பாபியின் ஆட்கள் வெறியுடன் கப்பலுக்குள் பாய்ந்தனர். சிறிது நேரத்திலேயே, கப்பலின் ரகசிய அடித்தளத்திலிருந்து நூற்றுக்கணக்கான பெட்டிகளை ஒன்றன்பின் ஒன்றாக வெளியே இழுத்து வந்தனர். அவை அனைத்தும் ஹார்பர் டெக் தளத்தில் ஒரு மலை போலக் குவிக்கப்பட்டன.
பாபி, “ஒவ்வொன்றாக உடைங்கள்! இன்று நாம் மிகப்பெரிய புதையலைத் தேடிப் போறோம்!” என்று கத்தினான்.
பாபியின் ஆட்கள் இரும்புக் கம்பிகளால் பெட்டிகளை உடைக்கத் தொடங்கினர். ஒவ்வொரு பெட்டியாகத் திறக்கப்பட, அங்கிருந்தவர்களின் முகத்தில் இருந்த ஆர்வம் மெல்ல மறைந்து, நடுக்கம் தொற்றிக்கொண்டது. ஒரு பெட்டி உடைந்தது. அடுத்தது… அதன் பிறகு… அந்தப் பெட்டிகளின் வரிசையைத் திறந்து பார்த்தவர்கள் அப்படியே உறைந்து போயினர். சிலர் பின்வாங்கிச் சென்றனர்.
“பா… பாபி அண்ணா… இது… இது…” என்று ஒரு ஆள் நடுக்கத்துடன் குரல் கொடுத்தான். பாபியின் கண்கள் அந்தப் பெட்டியை நோக்கின. அவன் கால்கள் ஒரு கணம் தள்ளாடின. அந்தப் பெட்டிக்குள்ளே இருந்தது தங்கம் அல்ல, அது உலகத்தையே அதிர வைக்கக்கூடிய ஒன்று.
அந்தப் பெட்டிகளுக்குள் இருந்தது என்ன?
வேட்டை தொடரும் ..⚓
