64
“சந்துரு! சௌத்ரி, கையால நேரடியாகச் சுடப் போறது இல்லை… இவனோட திட்டம் மனித வெடிகுண்டில் இருந்து வேற திட்டத்துக்கு தாவி இருக்கான்னு தோணுது, இவனோட பார்வை மைதானத்தோட வெளிப்புறத்தை நோக்கி அடிக்கடி போகுது! வெளியில ஏதோ ஒரு பெரிய சதி நடக்குது!” என கணேஷ் சொல்லவும்
அப்போது, பைரவன், “மைதானத்துக்கு வெளியில VIP பார்க்கிங் ஏரியாவுல ஒரு கறுப்பு நிற வேன் சந்தேகத்துக்கு இடமா நிற்குது. அதோட ஜன்னல் கண்ணாடிகள் முழுக்க கருப்பு ஃபிலிம் ஒட்டப்பட்டிருக்கு!” என்றவுடன் சந்துருவின் மூளை மின்னல் வேகத்தில் வேலை செய்தது!
“ஸ்னைப்பர்!!” சந்துரு உரக்கக் கத்தினான்.
“சௌத்ரி மேடையில இருந்து சிக்னல் கொடுக்கப் போறான்! வெளியில இருக்கிற வேன்ல இருந்து ஸ்னைப்பர் மூலம் பிரதமரைச் சுடப் போறான்! கணேஷ்… நீ உடனே வெளியில இருக்கிற அந்த வேனை நோக்கி ஓடு! பைரவா… நீ மைதானத்தோட பிரதான மேடையைச் சுற்றி உன்னோட ஆட்களை நிற்குமாறு தயார் பண்ணு! நீயும் அங்க போ .. நான் நேரடியாக மேடைக்குள்ள நுழையப்போறேன்!” என்றான்
மூவரும் ஒரே நேரத்தில் மின்னல் வேகத்தில் செயல்படத் தொடங்கினர்!
பிரதம மந்திரியின் சிறப்புப் வாகனப் பேரணி மைதானத்தின் பிரதான வாயிலை வந்தடைந்தது!
பல்லாயிரக்கணக்கான மக்கள் “வாழ்க! வாழ்க!” என முழக்கமிட்டனர். பிரதமர் புன்னகையோடு மேடையை நோக்கி அடியெடுத்து வைத்தார்.
முன்னே அமர்ந்திருந்த சௌத்ரியின் முகத்தில் பிசாசின் சிரிப்பு மலர்ந்தது. அவன் தன் காதில் இருந்த ஏர்பாட்டில் ரகசியக் கட்டளையிட்டான், “ரோஜர்… டார்கெட் உள்ளே நுழைஞ்சாச்சு! கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்… 3… 2…”
வெளியில் வேனில் இருந்த ஸ்னைப்பர் கொலையாளி, தன் ரீஃபிள் துப்பாக்கியின் Triggerல் விரலை வைத்தான்!
அதே நொடியில்,… “டம்மால் டம்..!
வேனின் பின் கதவை தன் அசுரக் காலால் ஓங்கி உதைத்து உடைத்துக்கொண்டு உள்ளே பாய்ந்தான் கணேஷ்!
ஸ்னைப்பர் கொலையாளி திடுக்கிட்டுத் திரும்புவதற்குள், கணேஷ் தன் கையிலிருந்த லேசர் பிஸ்டலால் அவனது தோள்பட்டையில் சுட்டான்!
“ஆஆஆஹ்!” கொலையாளி அலறியபடி துப்பாக்கியைக் கீழே தவறவிட்டான்! கணேஷ் அவனது கழுத்தைப் பிடித்து ஓங்கி ஒரு குத்து விட்டு, அவனை நிலைகுலையச் செய்து, அவனது கையில் இருந்த தொடர்புக் கருவியைப் பிடுங்கினான்!
அதே நேரத்தில்… மேடையில் இருந்த சௌத்ரிக்கு அதிர்ச்சி காத்திருந்தது!
தன் ஏர்பாட்டில் இருந்து கொலையாளியின் அலறல் சத்தம் கேட்டதும், சௌத்ரியின் முகம் வெளுத்துப் போனது! தன் திட்டம் தோற்றுவிட்டதை உணர்ந்த சௌத்ரி, சற்றும் தாமதிக்காமல் தான் ஏற்கனவே திட்டம் போட்டு இருந்தபடி மற்றொரு கொலையாளியை தொர்பு கொண்டான்.
அரங்கத்தின் மேற்குப் பகுதியில் இருந்த உயரமான விளக்குக் கோபுரத்தின் இருண்ட இரும்புச் சட்டங்களுக்கு நடுவே, அதிநவீன ஸ்னைப்பர் ரீஃபிள் துப்பாக்கியுடன் மறைந்திருந்தான் சௌத்ரியின் மற்றொரு பிரத்யேகக் கூலிப்படை கொலையாளி. அவனது துப்பாக்கியின் சிவப்பு நிற லேசர் புள்ளி, மேடையில் நின்றிருந்த பிரதமரின் நெஞ்சைக் குறியாக வைத்து மெல்ல நகர்ந்தது.
“டார்கெட் லாக் ஆயிடுச்சு,” கொலையாளியின் குளிர்ந்த குரல் சௌத்ரியின் காதில் கேட்டது.
சௌத்ரியின் உதடுகளில் ஒரு பிசாசின் புன்னகை அரும்பியது.
அதே விநாடி, மைதானத்தின் வெவ்வேறு மூலைகளில் இருந்து நிலைமையை உணர்ந்து கொண்ட அந்த மூன்று வேட்டைச் சிங்கங்கள் சந்துரு, கணேஷ், போலிஸ் சீருடையில் இருந்த பைரவன் மின்னல் வேகத்தில் பாய்ந்தனர்!
“பிரதமரைச் சாய்க்கப் போறான்! கணேஷ்… இன்னொரு culprit லெஃப்ட் சைடு Light tower மேல பாரு! பைரவா… மேடை ரைட் போ சீக்கரம் !” என சந்துருவின் அசுரக் குரல் அவர்களின் ரகசிய தகவல் தொடர்புச் சாதனத்தில் வெடித்தது.
விளக்குக் கோபுரத்திலிருந்து ரீஃபிள் துப்பாக்கியின் தோட்டாக் காற்றைக் கிழித்துக் கொண்டு பிரதமரை நோக்கிச் சீறிப் பாய்ந்தது!
நொடிப் பொழுதில் நிலைமையை உணர்ந்த பைரவன், தன் அசுர உடலை அசாத்திய வேகத்தில் உயர்த்தி, பிரதமரின் குறுக்கே ஒரு இரும்புச் சுவரைப் போலப் பாய்ந்தான்!
“டப்..! டப்..!”
அந்தக் கொடூரமான ஸ்னைப்பர் தோட்டாக்கள் பிரதமரின் மீது படுவதற்குப் பதிலாக… பைரவனின் மார்பிலும் தோள்பட்டையிலும் ஆழமாக இறங்கின!
குருதி பீறிட்ட அடித்தது! பைரவனின் வாய் வழியாகச் செந்நிற ரத்தம் வழிந்தது. இருந்தாலும், அவன் தன் வலியைப் புறந்தள்ளி, பிரதமரை மேடையின் கீழே தள்ளி, தன் உடலால் மூடிக் பாதுகாத்தான்.
“பைரவா .. அ…. அ… அ.. !!” சந்துருவின் அலறல் வானத்தைப் பிளந்தது.
அடுத்த நொடி, சந்துரு தன் கையிலிருந்த அதிநவீனத் துப்பாக்கியை விளக்குக் கோபுரத்தை நோக்கி உயர்த்தி, ஒரே சீரான இயக்கத்தில் டிரிகரை அழுத்தினான்.
சந்துருவின் துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட மூன்று தோட்டாக்கள், 300 மீட்டர் தொலைவில் இருந்த அந்த ஸ்னைப்பர் கொலையாளியின் நெற்றியையும் நெஞ்சையும் துளைத்தன! கொலையாளி அலறியபடி விளக்குக் கோபுரத்திலிருந்து கீழே விழுந்து தரையில் மோதி உயிர விட்டான்.
அரங்கத்தில் மாபெரும் கலவரம் வெடித்தது! மக்கள் நாலாபுறமும் அலறியடித்துக்கொண்டு ஓடினர். சௌத்ரியின் ரகசியக் கூலிப்படை தீவிரவாதிகள் தங்களின் உடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கிகளை உருவி நாலாபுறமும் சுடத் தொடங்கினர்.
“எவனையும் தப்பிக்க விடாதீங்கடா!” கணேஷ் கத்தியபடி எதிரிகளின் நடுவே பாய்ந்தான்.
கணேஷின் சண்டைக்காட்சி அங்கிருந்த கமாண்டோக்களையே மிரள வைத்தது. அவன் தன் சுழல் கால்களால் இரு தீவிரவாதிகளின் முகத்தில் ஓங்கி உதைத்து, ஒருவனின் கையை முறித்து, அவனது ஆயுதத்தைப் பிடுங்கி, அடுத்தடுத்து வந்த நான்கு தீவிரவாதிகளை ஸ்பாட்டிலேயே சுட்டு வீழ்த்தினான்.
சந்துரு தன் தோள்பட்டை காயத்தையும் பொருட்படுத்தாமல், சிங்கத்தைப் போல உருண்டு, மேடையை நோக்கிப் பாய்ந்து வந்த தீவிரவாதிகளைத் தன் துப்பாக்கிச் சூட்டால் ஒவ்வொன்றாகச் சாய்த்தான்.
ஆனால்… மேடையில் அரங்கேறியது ஒரு கொடூரமானக் காட்சி!
தன் ஸ்னைப்பர் கொலையாளி செத்து வீழ்ந்ததையும், சந்துருவும் கணேஷும் தன் ஆட்களை அழிப்பதையும் கண்ட சௌத்ரி, ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்றான்.
பைரவன் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடப்பதையும், பிரதமர் அதிர்ச்சியில் உறைந்து நிற்பதையும் பார்த்த சௌத்ரி, தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த பிஸ்டலை மின்னல் வேகத்தில் உருவினான்!
“எல்லாத்தையும் கெடுத்துட்டீங்கடா… நீங்க யாரடா காப்பாத்தப் போறீங்க?! செத்துத் தொலையுங்கடா!” என்று கத்தியபடி, சௌத்ரி துப்பாக்கியைப் பிரதமரின் தலையைக் குறிவைத்துத் திருப்பினான்!
பிரதமர் கண்கள் அகல விரிய, மரணத்தை எதிர்நோக்கி நின்றார்.
அப்போது, ரத்த வெள்ளத்தில், உயிர்ப்போராட்டத்தில் தரையில் கிடந்த பைரவன்… தன் உடலின் கடைசிச் சொட்டு ரத்தத்தின் பலத்தையும், ஆன்மாவின் வீரியத்தையும் ஒன்று திரட்டினான்!
அவன் ஒரு நரகத்தின் வேதாளம் போல, தரையிலிருந்து மீண்டும் திடுமென எழுந்து நின்றான்!
“டுமீல்…..!”
சௌத்ரி துப்பாக்கியில் இருந்து பாய்ந்த அந்த குண்டு, மீண்டும் பைரவனின் வயிற்றுப் பகுதியைத் துளைத்தது!
ஆனால்… பைரவன் அசையவில்லை! வலியில் அவனது கண்கள் சிவந்தன. குருதி வழிந்த உதடுகளோடு அவன் கொடூரமாகச் சிரித்தான்.
“என் ரோலக்ஸ் இருக்குற வரைக்கும்… இந்தத் தேசத்தோட தலைவனுக்கு எந்த ஆபத்தும் வராதுடா துரோகி!” என பைரவன் தன் கையில் இருந்த துப்பாக்கியை மெதுவாக உயர்த்தினான்.
சௌத்ரியின் முகத்தில் மரண பயம் கவ்வியது. “வேண்டாம்… பைரவா… என்னை…”
“டுமீல்…..! டுமீல்…..! டுமீல்…..! ”
பைரவனின் துப்பாக்கியில் இருந்து பாய்ந்த தோட்டாக்கள், சௌத்ரியின் நெற்றிபொட்டில் நேர்கோட்டில் இறங்கின!
சௌத்ரியின் கண்கள் நிலைத்து நிற்க, அவன் ரத்த வெள்ளத்தில் மேடையிலிருந்து கீழே சுருண்டு விழுந்து, தன் பேராசையோடும் துரோகத்தோடும் உயிரை விட்டான்!
சௌத்ரி செத்து வீழ்ந்த அடுத்த நொடி… பைரவனின் கரங்களில் இருந்த துப்பாக்கி நழுவித் தரையில் விழுந்தது.
அவனது கால்கள் தளர்ந்தன. நெஞ்சிலும் வயிற்றிலும் துளைத்த குண்டுகளிலிருந்து ரத்தம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. அவன் மெதுவாகப் பின்னோக்கிச் சரிந்தான்.
“பைரவாஅ… அ.. அ.. !!”
சந்துருவும் கணேஷும் தங்கள் துப்பாக்கிகளைக் கீழே போட்டுவிட்டு, பித்துப் பிடித்தவர்களைப் போல மேடையை நோக்கி ஓடி வந்தனர்.
சந்துரு ஓடி வந்து, கீழே விழப்போன பைரவனைத் தன் மடியில் ஏந்திக் கொண்டான். கணேஷ் கதறியபடி பைரவனின் ரத்தம் சொட்டும் கரங்களை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான்.
“பைரவா… கண்ணைத் திறந்து பாரு பைரவா! ஒன்னும் ஆகாதுடா… உன்னை நான் காப்பாத்துவேன்! போலிஸ்! ஆம்புலன்ஸ் கூப்பிடுங்கடா!” சந்துருவின் தொண்டை அடைத்தது. அவனது கண்களிலிருந்து கண்ணீர் ரத்தக் கண்ணீராக வழிந்தது.
பைரவன் தன் குருதி படிந்த விரல்களால் சந்துருவின் சட்டையைப் பற்றினான். அவனது சுவாசம் மிகவும் மெதுவாக, தட்டுத் தடுமாறி வந்தது.
பிரதமர் கண்ணீருடன் பைரவனை பார்த்து நன்றி சொன்னார் …
பைரவன், பிரதமரைப் பார்த்து, தன் தளர்ந்த குரலில் முணுமுணுத்தான், “பிரதமர் ஐயா… உங்களுக்கு இனி எந்த ஆபத்தும் இல்லை… என் கடமை (ரோலக்ஸோட கட்டளை ) நிறைவேறிடுச்சு… நாட்டைக் காப்பாத்தியாச்சு…” அவனது குரல் தேய்ந்தது.
சந்துரு அவனது நெஞ்சில் கைவைத்து, ரத்தப்போக்கை நிறுத்த முயன்றான், “பைரவா… பேசாதடா! ப்ளீஸ்… எங்களை விட்டுப் போகாதடா! நீ என் நண்பன் நண்பா டா!” சந்துரு குழந்தை போலக் கதறி அழுதான்.
கணேஷால் தன் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ” பைரவா எங்களை விட்டுட்டுப் போகாதடா!” என அவன் அலறினான்.
பைரவனின் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மங்கத் தொடங்கியது. சுற்றிலும் இருந்த சந்துருவின் அலறலும், கணேஷின் கதறலும் அவனது காதுகளில் தூரத்து ஒலியாக மாறின. அவனது மூளையின் திரையில்… அவனது வாழ்க்கை நினைவுகள் படமாக ஓடத் தொடங்கின.
சிறு வயது முதல் ரோலக்ஸூடன் இருந்த நாட்கள், அனாதையாக வீதியில் இருவரும் தோளில் சுமந்த நாட்கள் ! தன் கையைப் பிடித்து “பைரவா… நீதான் என் நிழல்!” என்று ரோலக்ஸ் சொன்ன அந்த அசைக்க முடியாத நம்பிக்கையின் வார்த்தைகள்!
அடுத்து… அவனது நினைவில் வந்தது சாருவின் முகம். அந்தச் சின்னஞ்சிறு பிஞ்சுப் பாப்பா… தன் தடிமனான மீசையையும், கரடுமுரடானக் கரங்களையும் பார்த்துப் பயப்படாமல், தன் கழுத்தைக் கட்டிக்கொண்டு “பைரவா மாமா!” என்று அன்போடு முத்தமிட்ட அந்தப் பிஞ்சு மனதின் தொடுதல்! அவளது சிரிப்பு, அவளது சுட்டித்தனம்… அத்தனையும் அவனது இதயத்திற்குள் பூக்களாகத் தூவப்பட்டன.
‘என் ரோலக்ஸையும்… என் பாப்பா சாருவையும்… இந்த நாட்டை காப்பாத்திட்டேன்டா…’ அவனது மனதிற்குள் ஒரு விவரிக்க முடியாத நிம்மதி பரவியது.
பைரவனின் கண்கள் மெதுவாக மேலெழுந்தன.
மாநாட்டு மையத்தின் உயரத்தில்… காற்றில் கம்பீரமாகப் பறந்து கொண்டிருந்தது இந்தியத் தேசியக் கொடி!
அரங்கத்தின் பின்னணியில், அந்தத் தேசியக் கொடியை நோக்கித் தன் மங்கலானப் பார்வையை நிலைநிறுத்தினான் அந்த நிழல் உலகத்தின் அசுரத் தளபதி.
அவனது உதடுகளில் ஒரு சிறிய, அமைதியான புன்னகை அரும்பியது.
தன் தாய்நாட்டையும், தன் ஆருயிர் நண்பன் ரோலக்ஸ் வாக்கையும் காப்பாற்றிய மனநிறைவோடு… பைரவனின் கரங்கள் சந்துருவின் மடியிலிருந்து நழுவிக் கீழே விழுந்தன. அவனது கரிய விழிகள் தேசியக் கொடியைப் பார்த்தபடியே உறைந்து நின்றன.
அவனது ஆவி பிரிந்தது!
“பைரவாஅஅஅஅஅஅ!!”
கணேஷும், சந்துருவும் பைரவனின் உடலைக் கட்டியணைத்துக்கொண்டு உரக்கக் கத்தினான். அவனது அலறல் டெல்லி நகரத்தையே உலுக்கியது.
நாட்டைக் காப்பாற்றிய மாபெரும் வீரன்… ஒரு மாஃபியாத் தளபதியாக அறிமுகமாகி, தேசத்தின் காவலனாக, தன் உயிரையே தியாகம் செய்துவிட்டு அமைதியாகக் கிடந்தான்.
சுற்றிலும் நின்றிருந்த கமாண்டோக்களும், அதிகாரிகளும், சாட்சாத் இந்தியப் பிரதமரும் தன் தலைவணங்கி, அந்தத் தியாகிக்கு மரியாதை செலுத்தினர்.
அதே நேரத்தில்… மைதானத்தின் உயரமானக் கட்டிடத்தின் உச்சியில்…
பனிமூட்டத்திற்கு நடுவே நின்றிருந்தான் ரோலக்ஸ்.
மாஃபியாக்களின் உலகமே அஞ்சும் அந்த அசைக்க முடியாத அசுரனின் கண்களிலிருந்து… ஒற்றைக் கண்ணீர்த்துளி கன்னத்தில் வழிந்தோடியது.
அது… தன் ஆருயிர் நண்பனுக்கு, தன் நிழலுக்கு, தேசத்தைக் காத்த தியாகி பைரவனுக்கு… அந்த நிழல் உலகச் சக்கரவர்த்தி செலுத்திய இறுதி அஞ்சலி..!
வேட்டை தொடரும் ..⚓
