Rolex 7

7

மத்திய சுரங்கத்துறை அமைச்சர் அர்ஜுன் தேவராஜின் பங்களா அந்த மதிய நேரத்தில் நிசப்தமாக இருந்தது. அந்த நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு சந்துருவின் புல்லட் போர்டிகோவில் டயர்கள் தரையில் உராய வந்து நின்றதும் அவன் கீழே குதித்தான்.

அதே பட்டுச்சட்டை, அதே கரை போட்ட வேஷ்டியில் அவனது தோற்றம் இருந்தாலும், கண்களில் இருந்த தீட்சண்யமும், நடையில் இருந்த வேகமும் அவன் ஏதோ ஒரு போர்க்களத்திலிருந்து வருவதைப் போலவே இருந்தது.

வாசலில் நின்றிருந்த துப்பாக்கி ஏந்திய காவலர்கள் சந்துருவை ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்தார்கள். பட்டு வேஷ்டி சட்டையில் ஒரு அதிகாரியைப் பார்ப்பது அவர்களுக்குப் புதுமையாக இருந்தது. ஆனால், அந்த வேஷ்டிக்குள்ளே மறைந்திருக்கும் இரும்புக் கரங்களைப் பற்றி அவர்களுக்கு நன்றாகத் தெரியும். சட்டென்று கைகள் நெற்றிக்குச் சென்றன.

“ஜெய்ஹிந்த் சார்!”

காவலர்களின் மரியாதையை ஒரு சிறு தலையசைப்பால் ஏற்றுக்கொண்ட சந்துரு, எதற்கும் காத்திராமல் நேராக அமைச்சரின் பிரத்தியேக அறைக்குள் நுழைந்தான்.

உள்ளே நுழைந்ததும் கம்பீரமாக நின்றவன், “ஜெய்ஹிந்த் சார்!” என்று உரக்கச் சொன்னான்.

மேஜையில் இருந்த கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் அர்ஜுன் தேவராஜ், சந்துருவின் குரல் கேட்டு மெதுவாகத் தலை நிமிர்ந்தவர். “ஜெய்ஹிந்த் சந்திரசேகர்… ப்ளீஸ், டேக் யுவர் சீட்,” என்றார்.

அவரது குரலில் வழக்கமான அதிகாரம் இல்லை, மாறாக ஒருவித சோர்வும், கலக்கமும் கலந்திருந்தது. அதைச் சந்துருவின் கூர்மையான கண்கள் கவனித்தன. இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்தவன், அமைச்சரின் முகத்தையே உற்றுப் பார்த்தான்.

“என்ன சார்… குரல் ஒரு மாதிரி இருக்கு? எனி ப்ராப்ளம்? மறுபடியும் ஏதாவது புது மிஷனா? சொல்லுங்க சார், இப்போவே கிளம்புறேன்,” என்ற சந்துருவின் குரலில் ஒருவிதத் துடிப்பு இருந்தது.

ஒரு நீண்ட பெருமூச்சை வெளிப்படுத்திய அமைச்சர், “சந்துரு, இந்த மிஷனை நான் உன்கிட்ட ஒப்படைச்சது ஒரு அமைச்சரா இல்லை… என் பர்சனல் ஆர்டர் படி கொடுத்தது. நீயும் சொன்னபடி கச்சிதமா முடிச்சுட்ட. யாருக்கும் எந்தத் தடயமும் தெரியாதுன்னு தான் நான் நினைச்சேன். ஆனா, டிபார்ட்மெண்ட்டைப் பொறுத்தவரை உன் மேல இருந்த சந்தேகம் இப்போ உறுதியாகிடுச்சு.”

சந்துரு மௌனமாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“தொழில் அதிபர் ரத்தினவேலோட மகன் சஞ்சயை நீதான் அடிச்சு துவம்சம் பண்ணியிருக்கேன்னு மேலிடத்துக்குத் தெரிஞ்சு போச்சு சந்துரு. அந்தத் தொழிலதிபர் இப்போ முதலமைச்சர் வரைக்கும் அழுத்தம் கொடுத்துட்டு இருக்கார். டிபார்ட்மெண்ட் என்குயரிக்கு ஆர்டர் வரப்போகுது.” தன் மூக்கு கண்ணாடியை கழிட்டிக்கொண்டே அவர் சொல்லவும்

சந்துருவின் முகம் சிவக்க, அமர்ந்திருந்தவன் சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தான். “பின்ன என்ன சார் பண்றது? அவன் செஞ்சது அப்படிப்பட்ட சின்னத் தவறா என்ன?”

“வெறும் பதினாறு வயசுப் பொண்ணு சார் அவ… ஸ்கூலுக்குப் போயிட்டு இருந்த ஒரு சின்னக் குழந்தையை சிதைச்சு கொலை செஞ்சிருக்கான் அந்த மிருகம். அவனுக்கு இன்னும் சின்ன வயசுதான், திருந்த வாய்ப்பு இருக்குன்னு யாராவது சொன்னா அதை என்னால ஏத்துக்க முடியாது. அவனோட அப்பா ரத்தினவேல் தன் பணபலத்தையும், அதிகாரத்தையும் வச்சு இவனை எப்படியும் வெளியக் கொண்டு வந்துடுவார். ஒருவேளை கோர்ட் தண்டனை கொடுத்தாலும், ஜெயில்ல இவனுக்கு ஏசி ரூமும், ஸ்பெஷல் சாப்பாடும் தான் கிடைக்கும். அங்கேயும் இவன் ராஜவாழ்க்கை தான் வாழப்போறான்.”

“வெளிய வந்தா மறுபடியும் அதே தப்பைத்தான் செய்வான் சார். இன்னொரு அப்பாவிப் பொண்ணோட உயிர் இவனால போகும். அப்படி ஒரு உயிர் போறதுக்கு முன்னாடி, இவன் இனிமே எந்தப் பொண்ணையும் தொட்டுப் பார்க்க முடியாத அளவுக்கு நான் கொடுத்த ட்ரீட்மென்ட் கண்டிப்பா தேவையானது தான் சார்.” என பேச பேச அவனது குரலில் ஆக்ரோஷம் கொப்பளித்தது,  சற்று இடைவெளி விட்டு, தன் குரலைச் தாழ்த்தியவன் .. 

“சார், நீங்க கொடுத்தது மிஷன்… ஆனா அந்தப் பொண்ணோட நிலைமையைப் பார்த்தப்போ ஏற்பட்ட என் தனிப்பட்ட ஆத்திரத்துல, நான் அவனுக்குக் கொடுத்தது அடிஷனல் ட்ரீட்மென்ட். இதுல எந்தத் தப்பும் இருக்கிறதா எனக்குத் தெரியல சார். அந்தப் பொண்ணோட ஆத்மா இப்போ நிம்மதியா இருக்கும். அதுக்காக எந்தப் பழியையும் சுமக்க நான் தயார்!” என உறுதியாகச் சொன்னான்

அவனை அமைதியாகப் பார்த்த தேவராஜ், “சந்துரு, உன் பக்கம் இருக்கிற நியாயம் எனக்குத் தெரியும் சந்துரு. ஆனா சட்டம் எப்பவும் ஆதாரங்களைத் தான் பார்க்கும். ரத்தினவேல் சாதாரண ஆள் இல்லை… உன்னைச் சிக்க வைக்க எல்லா வேலையும் பார்ப்பார்.”

“என்ன சார் சட்டம், அப்பா காசு வச்சிருக்கார்ங்கிற திமிர்ல, அதிகாரம் இருக்குங்கிற தைரியத்துல இது போல பல பெண்களோட வாழ்க்கையை அவன் சிதைக்கப் பார்த்தப்போ, சட்டம் என்ன பண்ணிட்டு இருந்தது சார்? நான் செஞ்சது தப்புன்னா, அந்தத் தப்பை ஆயிரம் முறை செய்யத் தயாரா இருக்கேன். அவன் இப்போ ஆஸ்பத்திரியில உயிர் பிழைச்சதே பெரிய விஷயம். நான் அவனுக்குக் கொடுத்தது தண்டனை இல்லை சார்… ஒரு பாடம்!”

 நாற்காலியில் சாய்ந்து அமர்ந்த அர்ஜுன் தேவராஜ், சந்துருவை ஊடுருவிப் பார்த்தார். சந்துருவின் வார்த்தைகளில் இருந்த நியாயத்தை அமைச்சருக்கு உணர்த்திக் கொண்டிருந்தது.

“எனக்கு புரியுது சந்துரு… உன் தரப்பு நியாயம் எனக்கு நல்லாவே புரியுது. மேலிடத்துல இருக்கிறவங்களுக்கு உண்மை தெரிஞ்சாலும், ரத்தினவேலோட பணபலம் இந்த விஷயத்தை வெளிய வராம பாத்துக்கிச்சு. ஆனா, சட்டப்படி உன் மேல ‘லீகல் ஆக்ஷன்’ எடுக்கறதுக்கு மட்டும் அவங்க ரொம்ப தீவிரமா காத்துட்டு இருக்காங்க,” 

ஒரு அலட்சியமான புன்னகையைச் சிந்தியவன் … “என்ன சார் பண்ணிடப் போறாங்க? அதிகபட்சம் ஒரு சஸ்பென்ஷன் ஆர்டர்… அதானே அவங்க சட்டத்தோட பெரிய ஆயுதம்? பரவால்ல சார், அதை சந்திக்க நான் தயார்!”

குறுக்கிட்ட அமைச்சர், “இல்ல சந்துரு… ஆக்சுவலா அவங்க உன்னை சஸ்பென்ட் பண்ணி வீட்டுல உட்கார வைக்கத்தான் பார்த்தாங்க. ஆனா, என்னோட அதிகாரத்தைப் பயன்படுத்தி, இவ்வளவு நேர்மையா இருக்கிற ஒரு ஆபீசரை வீட்டுல முடக்கி வைக்கக்கூடாதுன்னு போராடினேன். விளைவு… உனக்கு சஸ்பென்ஷன் இல்லை, ஆனா ஒரு பெரிய ட்ரான்ஸ்பர் கிடைச்சிருக்கு.” 

“அவங்க போட்டிருக்கிற ட்ரான்ஸ்பர் ஆர்டர் படி நீ தமிழ்நாட்டுல தற்காலிகமா இருக்க முடியாது. அதனால ஆந்திரா எல்லைக்கே உன்னை அனுப்புறதா முடிவு பண்ணிட்டாங்க. அங்க உனக்கு பெருசா Active duty எதுவும் இருக்காது. ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்துல, ஒரு சாதாரண போலீஸ் ஆபீசரா நீ இருக்கணும். ஆனா பயப்படாத… உன்னோட Power எப்பவும் போல உன்கிட்டயே தான் இருக்கும்.”

‘ஆந்திரா’ என்ற வார்த்தையைக் கேட்ட அடுத்த நொடி, சந்துருவின் மூளை நரம்புகள் மின்னல் வேகத்தில் துடித்தன. அவனது கண்கள் ஒரு வினாடி நிலைகுத்தி நின்றன. முகம் ஒரு விசித்திரமான கோணத்திற்கு மாறியது. ஏதோ ஒரு பழைய ஞாபகம் அவனது மனதில் சட்டென்று உதயமாகி மனதை கிளறியது..

சந்துருவின் மௌனத்தைக் கவனித்த அமைச்சர்… “சந்துரு… சந்துரு…” என்று இரண்டு முறை அழைத்த பிறகுதான் அவன் நிகழ்காலத்திற்கு வந்தான்.

“என்ன சந்துரு? வேற மாநிலத்துக்குப் போறோமே, அங்க நம்ம பவரை யூஸ் பண்ண முடியாது, ஒரு டம்மி பீஸா இருக்கணுமேன்னு ஃபீல் பண்றியா?” என அமைச்சர கேட்க்க.

சட்டென்று சுதாரித்துக் கொண்டவன், “அப்படியெல்லாம் இல்ல சார்… இந்த இக்கட்டான சூழ்நிலையிலயும் உங்க அதிகாரத்தைப் பயன்படுத்தி எனக்கு ஒரு பதவியைத் தக்க வச்சு கொடுத்ததே பெரிய விஷயம். அதுக்கு ரொம்ப நன்றி சார். ஆனா… எனக்கு ஒரு சின்ன ரெக்வெஸ்ட் இருக்கு. அதை நீங்க செஞ்சு தருவீங்களா?”

அமைச்சர் அவன் முகத்தைப் பார்த்தார். சந்துருவின் கண்களில் ஏதோ ஒரு பெரிய வேட்டைக்கான அறிகுறி தெரிந்தது.

“சொல்லு சந்துரு… எனக்காக இவ்வளவு தூரம் துணிச்சலா நின்னவன் நீ. உனக்காக என்னால முடிஞ்சதை கண்டிப்பா செய்வேன். என்ன அந்த ரெக்வெஸ்ட்?”

மேஜையின் மீது கைகளை ஊன்றி, அமைச்சரை நோக்கிச் முன்னே குனிந்த சந்துரு, “சார், நீங்க சொன்ன மாதிரி டம்மி ஆபீசர் போஸ்டிங், ஆந்திரா மாநிலம்… இது எல்லாத்துக்கும் நான் சம்மதிக்கிறேன். ஆனா எனக்கு ஒரு சின்ன நிபந்தனை. எனக்கு போஸ்டிங் விசாகப்பட்டினம் ஹார்பர்ல வேணும் சார்,” என்றான் உறுதியாக.

அமைச்சரின் புருவங்கள் உயர்த்தது. “ஹார்பரா? அங்க போய் என்ன பண்ணப் போற சந்துரு? அது ஒரு வட்டத்துக்குள்ள முடங்குற மாதிரியான வேலை. கப்பல் வரும், போகும்… ஒரு செக் போஸ்ட் மாதிரி அங்கயே உட்கார்ந்திருக்கணும். நீ ஒரு துடிப்பான IPS ஆபீசர். நீ வெளிய இருந்தாதான் நான் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உன் ட்ரான்ஸ்பரை கேன்சல் பண்ணி, உன்னை ஆக்டிவ் டியூட்டிக்குக் கொண்டு வர முடியும்.”

மெல்லப் புன்னகைத்த சந்துரு,  “இல்ல சார்… எனக்குச் சில பர்சனல் விஷயங்கள் அங்கே இருக்கு. இந்த இக்கட்டான நேரத்தை நான் அங்க பயனுள்ளதா மாத்திக்கலாம்னு நினைக்கிறேன். அதனாலதான் அந்த இடத்தைக் கேக்குறேன்.”

“சந்துரு, யோசிச்சுப் பேசு. ஹார்பர்ல உன்னால சுதந்திரமா இயங்க முடியாது. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளயே உன் அதிகாரம் முடிஞ்சுடும்,” 

“சார்… அங்க ஏற்கனவே என்னோட நண்பன் Deputy Commissioners அதிகாரியா அங்க இருக்கார். அவன் உதவியோட அங்க ஒரு சாதாரண வேலையில நான் இருக்கிற மாதிரி காட்டிக்க முடியும். என் ட்ரான்ஸ்பர் அங்க கிடைச்சா, ஒரு IPS அதிகாரியா நான் அங்க தெரியவே மாட்டேன். அதுதான் எனக்கு வேணும்.”

அமைச்சர் அவனை எச்சரிக்கும் விதமாகப் பார்த்தார். “சந்துரு, அங்க உன்னால எந்த ஆக்ஷனும் எடுக்க முடியாது. நீ எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தக் கூடாது. உண்மையிலேயே ஏதாவது அசம்பாவிதம் நடந்தா கூட, நீயா நேரடியா களத்துல இறங்க முடியாது. மேலிடத்துக்கு ரிப்போர்ட் பண்ணி, அங்க இருக்கிற லோக்கல் போலீஸ் மூலமாத்தான் நீ எதையும் செய்யணும். இது உன்னால முடியுமா?”

“தெரியும் சார்… Law and Order பத்தி எனக்கு நல்லாவே தெரியும். என் நண்பன் அங்க இருக்கிற வரைக்கும் எனக்கு எந்தப் பிரச்சனையும் வராது. சட்டப்படி என்ன பண்ணணுமோ அதை அங்க இருந்தே பண்ணுவேன். அதே சமயம், யாருக்கும் தெரியாம நான் முடிக்க வேண்டிய சில பர்சனல் கணக்குகளையும் அங்க முடிப்பேன். இது என்னோட பர்சனல் ரிக்வெஸ்ட் சார்… please..” என்றான் 

சந்துரு பேசுவதில் ஒரு தீர்க்கமான நியாயம் இருப்பதை அமைச்சர் உணர்ந்தார். அந்தப் பதினாறு வயதுப் பெண் சிதைக்கப்பட்டபோது, அந்த மிருகத்தைத் தண்டித்த சந்துருவின் ஆக்ரோஷம் இப்போதும் அவர் கண்முன்னே நின்றது. தன் வார்த்தைக்காக ஒரு கொடூரமான குற்றவாளியைத் தண்டித்துவிட்டு, இப்போது தண்டனையைத் தலையோடு ஏற்கும் இந்த நேர்மையான அதிகாரிக்கு உதவி செய்ய வேண்டியது தன் கடமை என்று அவர் எண்ணினார்.

சிறிது நேரம் அமைதியாகச் சிந்தித்தவர், மேஜையில் இருந்த போனை எடுத்தார்.

“சந்துரு… நீ எதையோ பெருசா பிளான் பண்றன்னு எனக்குத் தோணுது. ஒரு அமைச்சரா இதை நான் செய்யக்கூடாதுதான். ஆனா, அந்தப் பொண்ணுக்கும் அவ குடும்பத்துக்கும் நீ தேடித் தந்த நீதிக்காக… இதோ இப்போவே உன் போஸ்டிங் ஆர்டரை நான் மாத்தச் சொல்றேன்,” என்றார் அமைச்சர்.

சந்துருவின் முகத்தில் ஒரு வெற்றிப் புன்னகை மின்னியது. விசாகப்பட்டினம் துறைமுகத்தின் அலைகளில் எரியப்போகும் ஒரு பெரும் தீக்கு இப்போதுதான் திரி போடப்பட்டிருக்கிறது என்பது அந்த அறைக்குள் இருந்த யாருக்கும் தெரியவில்லை… சந்துருவைத் தவிர!

 

வேட்டை தொடரும் ..⚓

❤️ Loading reactions...
1 Comment

You cannot copy content of this page

error: Content copy warning!!