Rolex 8

8

“சந்துரு… நீ எதையோ பெருசா பிளான் பண்றன்னு எனக்குத் தோணுது. ஒரு அமைச்சரா இதை நான் செய்யக்கூடாதுதான். ஆனா, அந்தப் பொண்ணுக்கும் அவ குடும்பத்துக்கும் நீ தேடித் தந்த நீதிக்காக… இதோ இப்போவே உன் போஸ்டிங் ஆர்டரை நான் மாத்தச் சொல்றேன்,” என்றவர் சற்றும் தாமதிக்கவில்லை. மேஜையில் இருந்த பிரத்யேகத் தொலைபேசியை எடுத்து, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியிடம் சில நிமிடங்கள் ரகசியமாகப் பேசினார்.

அடுத்த சில நிமிடங்களில், அறையில் இருந்த Fax இயந்திரம் மெல்லிய சத்தத்துடன் இயங்கத் தொடங்கி, ஒரு காகிதத்தை வெளியே தள்ளியது.

அமைச்சர் அந்தக் காகிதத்தை எடுத்து, தீர்க்கமாக ஒரு கையெழுத்தைப் போட்ட, பின்அதைச் சந்துருவிடம் நீட்டினார்.

“சந்துரு, இதோ நீ கேட்டபடி விசாகப்பட்டினம் ஹார்பருக்கான அப்பாயின்மென்ட் ஆர்டர். ஆனா ஞாபகம் இருக்கட்டும்… இது ஒரு புரொபேஷன் பீரியட் மாதிரிதான். நீ ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது, யாரையும் தாக்கக் கூடாது. இதுக்கு மேல நீ என்ன பண்ணணும்னு நினைக்கிறியோ, அதை உன் நண்பன் மூலமா யாருக்கும் தெரியாம ‘காதோடு காது வச்ச மாதிரி’ கவனிச்சுக்கோ. உன் மேல இருக்கிற நம்பிக்கையிலதான் நான் இவ்வளவு தூரம் இறங்கி வர்றேன். எதாவது முக்கியம்னா எனக்கு உடனே இன்ஃபார்ம் பண்ணு,” என அமைச்சர் அழுத்தமான குரலில் சொல்ல.

“நிச்சயமா சார்… தேங்க்யூ சோ மச்!” என்று கம்பீரமாகச் சொல்லிவிட்டு சந்துரு வெளியே வந்தான். அவனது உதடுகளில் அந்த மர்மப் புன்னகை இன்னும் மறையவில்லை. ஒரு பக்கம் வெற்றி களிப்பு இருந்தாலும், உள்ளுக்குள் கோபம் எரிமலையாய் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

சந்துரு வேகமாகத் தன் வாகனத்தை நோக்கிச் செல்ல, அங்கே அவனுக்காகவே காத்திருந்தாள் யாழினி. அவன் வருவதைப் பார்த்ததும் ஓடி வந்தவள், “என்ன ஆச்சு? அமைச்சர் என்ன சொன்னார்?” என்று படபடப்புடன் கேட்டாள்.

அவளைப் பார்த்து மெலிதாகச் சிரித்த சந்துரு, “நாம இப்போவே விசாகப்பட்டினம் போகப் போறோம். கிளம்பு!” என்றான் புல்லட்டில் ஏறியபடி.

திகைத்துப்போய் நின்ற யாழினி, “என்னது விசாக்கா? ஹலோ புருஷன் சார்… பொதுவா எல்லாரும் கல்யாணம் பண்ணிக்கிட்டுதான் ஹனிமூனுக்குப் போவாங்க. நீங்க என்னடான்னா ஹனிமூன் போய் அப்புறம் கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா?” என்று கிண்டலாகக் கேட்க

அவளை ஏற இறங்கப் பார்த்த சந்துரு, “அட கள்ளி, இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே!” என்றவன் அவளது கன்னத்தை கிள்ள …

அவனின் கையை தட்டிவிட்டவள், “ஹெலோ சார் பப்ளிக் place பார்த்து நடந்துக்கோங்க, அப்பறம் உனக்கே danger ஆகிடும் ” என மிரட்டும் தோரணையில் பொய் கோபத்தில் பேச  

சிரித்தவன்.. “ம்ம் சரி… மேடம் சொன்னது போல, நாம அங்கேயே போய் கல்யாணம் பண்ணிக்கலாம், என்ன சொல்ற உனக்கு சம்பந்தம் தானே ?” என விளையாட்டாக கேட்க.

“நீ தான் வேணும் னு வீடு விட்டே வந்துட்டேன், இன்னும் என்ன கேள்வி இது … ஆமா அங்க யாரு நமக்குக் கல்யாணம் பண்ணி வைப்பா?” என்று அவள் அப்பாவியாகக் கேட்க,

“என் பிரண்ட் அங்கதான் இருக்கான், அவன் எல்லாத்தையும் பார்த்துப்பான்,” என்று அவன் சொல்லவும், யாழினி வாயடைத்துப் போனாள்.

“ஓ… அப்படியா? அப்போ ஓகே கிளம்பலாம். ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு ரொம்ப பசிக்குது புருஷன் சார்! என் புருஷன் எப்போ வருவான்னு கவலையில நேத்துல இருந்து ஒரு பருக்கை கூட வயித்துல விழல. ஏதாவது வாங்கித் தரீங்களா?” என்று வயிற்றைத் தடவிக்கொண்டு பரிதாபமாகக் அவள் கேட்க

சந்துருவின் உள்ளமோ உருகியது. “ஓ… தாராளமா சாப்பிடலாமே என் செல்லப் பொண்டாட்டி!” என்று சொல்லி, அவள் கன்னத்தை மீண்டும் மென்மையாகக் கிள்ளினான்.

அடுத்த சில நிமிடங்களில், ஒரு சிறிய நெடுஞ்சாலை உணவகத்தின் ஓரத்தில் வண்டியை நிறுத்தினான் சந்துரு. மாலை நேரம் என்பதால் கூட்டம் குறைவாக இருந்தது.

“என்ன வேணும் சொல்லு?” என சந்துரு வினவ.

“ம்ம்ம் எனக்கு ஒரு பெரிய பிளேட் மசால் தோசை, ரெண்டு இட்லி, அப்புறம் அந்த வடை… ஓகே, ஒரு ஊத்தப்பமும் சொல்லிடுங்க,” என்று யாழினி லிஸ்ட் போட, சந்துரு மிரண்டு போனான்.

“ஏய்… ஹனிமூன் போறதுக்கு முன்னாடியே என் சம்பளத்தை இப்படிச் சாப்பாட்டுலயே காலி பண்ணிடுவ போல இருக்கே?” என்று அவன் கிண்டல் செய்ய, யாழினியின் உதடுகளோ அவனை பார்த்து பொய் கோபத்தில் செல்லமாக முணுமுணுத்தது.

அடுத்த சில நிமிடங்களில் உணவு மேஜைக்கு வர, பசியில் இருந்த யாழினி, சூடான மசால் தோசையைப் பிட்டு, சாம்பாரில் முக்கி ஆசையாக வாயில் வைத்தாள். “ம்ம்ம்… சொர்க்கம் தான் சார்!” என்றாள் கண்களை மூடிக்கொண்டு அதனை ரசித்து ருசித்தாள்.

நம்ம பையனோ அவளையே ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் முகத்தில் இருந்த அந்தத் துறுதுறுப்பும், மழலைத்தனமும் அவனது இறுக்கமான மனநிலையைச் சற்றுத் தளர்த்தியது.

“மெதுவா சாப்பிடு யாழி… யாரும் பிடுங்கிக்க மாட்டாங்க,” என்று சொல்லித் தன் கைக் குட்டையால் அவள் உதட்டோரம் ஒட்டியிருந்த சட்னியைத் துடைத்துவிட, அந்தத் தீண்டலில் யாழினி சட்டென்று சிலிர்த்துப் போனவள்,

“ஏன் சார்… இப்படிப் பாக்குறீங்க? அப்புறம் எனக்கு வெட்கம் வந்துடும், அப்புறம் நான் சாப்பிட மாட்டேன்,” என்று அவள் சிணுங்கிக் கொண்டே சொல்ல,

சிரித்தவன், “நீ சாப்பிடாம இருக்கிறது உலக அதிசயமாச்சே டி..! சரி சரி… சீக்கிரம் சாப்பிடு, நமக்கு முன்னாடி பெரிய தூரம் இருக்கு,” என சந்துரு சொல்ல.

யாழினி அவனை முறைத்துப் பார்த்துவிட்டு, “என்னது… டி யா? கல்யாணத்துக்கு முன்னாடியே அதிகாரத்தை ஆரம்பிச்சிட்டீங்களா, சார் ? இப்போவே இப்படினா, அப்புறம் அவ்வளவுதான் போல,” என்று உதட்டைப் பிதுக்கினாள்.

சிரித்துக்கொண்டே அவள் பக்கம் சாய்ந்த சந்துரு, “ஏன் டி … என் பொண்டாட்டிய நான்  டி போட்டு கூப்பிடாம வேற யாரு டி போட்டு கூப்பிடுவா டி ? ஒருவேளை ‘மேடம்’னு கூப்பிடணுமோ டி … சொல்லு டி ?” என்று ரகசியக் குரலில் கேட்டவன்,

‘மேடம்… உங்களுக்கு இன்னும் ஒரு வடை வேணுமா?’ அப்படின்னு கேட்டா நல்லாத்தான் இருக்கும், மேடம்”  என அவன் சொல்ல யாழினிக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

“அப்ப்பா .. எத்தனை டி .. போதும் சார் உங்க டி .. என்ன டி போட்டு கூப்பிட உங்களுக்கு மட்டும் தான் உரிமை இருக்கு புருஷன் சார்… அப்படியே கூப்பிடுங்க. ” என்று அவள் சொல்ல, சந்துரு அவள் கையைப் பிடித்து மெல்ல அழுத்தினான்.

“வடை வேணுமோ இல்லையோ… உன் சிரிப்பு மட்டும் எப்பவும் எனக்கு வேணும் யாழி. இந்த வேட்டை, இந்தத் துரத்தல்… இதுக்கு நடுவுல எனக்கு இருக்கிற ஒரே நிம்மதி உன் பேச்சும், உன் புன்னகையும் மட்டும்தான்,” என்று அவன் திடீரென உருக்கமாகச் சொல்ல, யாழினியின் கண்கள் ஒரு நிமிடம் அவனையே ரசித்தன.

“புருஷன் சார்… நீங்க இப்படிப் பேசும்போது ரொம்ப அழகா இருக்கீங்க தெரியுமா? அப்படியே அள்ளிட்டுப் போகலாம் போல இருக்கு,” என்றவள் தன் கன்னத்தில் கை வைத்துக்கொள்ள.

“அள்ளிட்டுத் தான் போயிட்டு இருக்கேன்… ஒழுங்கா வந்து வண்டியில ஏறு!” என்று அவன் செல்லமாக மிரட்ட, இருவரும் சிரித்தபடி ஹோட்டலை விட்டு வெளியே வந்தனர்.

சாப்பிட்டு முடித்ததும், சந்துரு பில் கொடுத்துவிட்டுத் திரும்பும்போது, மெதுவாக அவன் கையைப் பிடித்துக் கொண்ட யாழினி, “நிஜமாவே அங்க போய் கல்யாணம் பண்ணிப்போமா?” என்று ஆசையோடு கேட்க

அவளைத் தன்னோடு அணைத்துக்கொண்ட சந்துரு, “உன் கழுத்துல தாலி ஏறப்போற அந்த நிமிஷம் தான் யாழி, என் வாழ்க்கையோட நிஜமான வெற்றி. இப்போதைக்கு இந்த விசாகப்பட்டினம் பயணம் ஒரு வேட்டைக்காக… ஆனா அந்த வேட்டை தொடரும்போது, நாம ஒண்ணா இருப்போம்,” என்று காதலோடு சொல்ல…

யாழினியின் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்து போனது. அவன் தோளில் சாய்ந்து கொண்டவள், “சரி… அப்படின்னா அங்க போனதும் எனக்கு ஒரு பெரிய ஐஸ்கிரீம் வாங்கித் தந்துட்டு அப்புறமா வேட்டையை ஆரம்பிங்க… ஓகேவா?” என மீண்டும் தன் குறும்பைத் தொடங்கினாள்.

சந்துரு அவளை ஆழமாகப் பார்த்துச் சிரித்துக்கொண்டே வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

இரவு நேரத்து இரயில் பயணம்.

தண்டவாளங்களில் சக்கரம் மோதும் தாள லயமும், ஜன்னல் வழியே சீறிப் பாயும் குளிர்ந்த காற்றும் அந்தப் பயணத்திற்கு ஒருவிதமான நிசப்தமான அழகைக் கொடுத்திருந்தது.

இரயிலின் ஏசி பெட்டியில் சந்துருவும் யாழினியும் அருகருகே அமர்ந்திருந்திருக்க. யாழினி கலகலப்பாக பேச முயன்றாள், ஆனால் சந்துருவின் முகத்தில் இருந்த லேசான இறுக்கத்தை கவனித்தவள், அவனது கையைப் பிடித்தபடி,

“ஏன் புருஷன் சார்… இப்போ நாம போற விசாகப்பட்டினத்துல பெரிய பீச் எல்லாம் இருக்குமே! அங்க போய் என்ன பண்ணப் போறீங்க? கையில தூண்டிலை எடுத்துக்கிட்டு மீன் பிடிக்கப் போறீங்களா?” என்று குறும்பாகச் கேள்வி போட்டாள்

அவளை ஏறிட்டுப் பார்த்த சந்துருவின் கண்கள் அந்த இருட்டிலும் ஜொலித்தன. “ஆமா யாழினி… ஒரு மீன் இல்ல, ஒரு பெரிய திமிங்கலம் இருக்கு. அதைப் பிடிச்சே ஆகணும்,” என்றவனது குரலில் ஒருவிதமான கரகரப்பு இருந்தது.

யாழினிக்கு அவன் சொல்வது விளையாட்டாகத் தோன்றவும், மேலும் விளையாட நினைத்தவள். “அப்படி என்ன பெரிய மீன் சார் அது? திமிங்கலம் பிடிச்சா எனக்கும் அதுல பங்கு இருக்கா?” என்று சிரித்துக் கொண்டே கிண்டலாக கேட்டாள்.

ஆனால், சந்துரு சிரிக்கவில்லை. அவனது முகம் அடுத்த நொடியே கல்லைப் போல இறுகியது.

“பங்கு இல்ல யாழினி… பகை! பதினைந்து வருஷத்துப் பகை!” என்றவனின் சந்துருவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சம்மட்டி அடி போல விழுந்தன.

அவனின் குரலில் இருந்த மாற்றத்தை உணர்ந்த யாழினி … புரியாத புதிராக அவனின் முகத்தையே ஆழமாக பாத்தவள் …

“சந்துரு … ” என மென்மையாக அழைத்தாள்  

ஆனால், அடுத்து பற்களை நரநரவென கடித்தவனின் முகம் ஆக்ரோஷத்தில் சிவந்தது. அவனது கண்கள் ஏதோ ஒரு பழைய ரத்த சரித்திரத்தை அசை போடுவது போலத் தெரிந்தது.

அவன் மெதுவாகத் தன் உதடுகளைப் பிரித்து உதிர்த்த அந்த ஒரு வார்த்தை, அந்த இரயில் பெட்டியின் தட்பவெப்பத்தையே மாற்ற..

“ரோலக்ஸ்!”

என சொல்லி முடித்த அடுத்த நொடி, சந்துருவின் வலது கை முஷ்டி அந்த இரயில் ஜன்னலின் இரும்புக் கம்பியை நோக்கிப் பாய்ந்தது.

‘டாங்… டாங்…’ என இரண்டு பலமான குத்துக்கள்! கம்பிகள் அதிர்ந்தன. அவனது கையில் நரம்புகள் புடைத்துத் தெரிந்தன.

இதுவரை சந்துருவிடம் எத்தனையோ வேகத்தைப் பார்த்திருக்கிறாள் யாழினி. அவன் குற்றவாளிகளை அடித்து துவம்சம் செய்ததைப் பார்த்திருக்கிறாள். ஆனால், இப்போது அவன் முகத்தில் தெரிந்தது சாதாரணக் கோபம் அல்ல, அது ஒரு தீர்க்கப்படாத வஞ்சத்தின் வெளிப்பாடு.

அவனது அந்த வெறித்தனமான கோபத்தையும், கைகள் கம்பியைத் தாக்கிய வேகத்தையும் பார்த்த யாழினி, பயத்தில் இரண்டடி பின்னால் நகர்ந்தாள். அவளது இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.

சந்துருவின் கண்களில் தெரிந்த அந்தத் தீ, அவளை ஒரு நிமிடம் அந்நியனாகப் பார்க்க வைத்தது.

“சந்துரு…” என்று சத்தமாக அழைக்கக் கூட அவளுக்கு நாவு வரவில்லை.

சந்துரு இப்போது ஜன்னலுக்கு வெளியே பாய்ந்தோடும் கருமையான மரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது பார்வையில் விசாகப்பட்டினம் துறைமுகம் தெரியவில்லை, மாறாக, பதினைந்து வருடங்களுக்கு முன்பு தொலைந்து போன ஏதோ ஒன்றைத் தேடும் வெறிதான் தெரிந்தது.

விசாகப்பட்டினம் ஹார்பர்… வெறும் பணியிடமாக மட்டும் இருக்கப் போவதில்லை, அது ஒரு வேட்டைக்களமாக மாறப்போகிறது என்பதை யாழினி அப்போதுதான் உணரத் தொடங்கினாள்.

வேட்டை தொடரும் ..⚓

❤️ Loading reactions...
2 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!