அர்ப்பணம் 14

அவனை அப்படி அசிங்கப்படுத்தி அனுப்பி வைத்து விட்டக் குரூரத் திருப்தியிலும், நிம்மதியிலும் ராஜன் மற்றும் அவனது தாய், தந்தையின் முகங்களிலும் புன்னகைப் பளிச்சிட்டது எனலாம்! 

ஆனால் அங்கிருந்த மற்றவர்களோ தங்கப்புஷ்பத்தின் குணத்தையே சந்தேகிக்கும் வகையில் அவளைப் பார்க்கத் தொடங்கினார்கள். 

அதைத் தானும் கண்டு கொண்டுத் தனது உடலை இன்னும் குறுக்கிக் கொண்டு, 

“அப்பா! அம்மா! நான் உள்ளே போகவா?”எனத் தன்னுடைய பெற்றோரிடம் கேட்டிருந்தாள் தங்கப்புஷ்பம். 

“அட! நீ அதுக்குள்ளே அப்படி உள்ளே போயிட முடியுமா புஷ்பம்? இன்னும் உனக்குப் பரிசமே போடவே இல்லையே? அப்பறம் எப்படி இங்கேயிருந்து நகர முடியும்த்தா?”என்று அவளுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தார் சற்குணம். 

அதில் அவளது சர்வாங்கமும் அதிர்ச்சிக்கு உள்ளாகி விட்டதால் அதற்குப் பிறகுத் தன் வாயைத் திறந்து எதையும் கூறும் தைரியம் அவளுக்கு வரவில்லை! 

அதேபோல், தன் தமையன் மற்றும் அவனது மனைவியிடம்,”எங்கப் பையனுக்கு உங்கப் பொண்ணைக் கட்டிக் கொடுக்கச் சம்மதமா?”என்று பூ, பழங்கள் மற்றும் இன்னப் பிற மங்களகரமானப் பொருட்கள் அடங்கிய தட்டைத் தங்கப்புஷ்பத்தின் பெற்றோரை நோக்கி நீட்டி விட்டிருந்தார்கள் சற்குணம் மற்றும் வளையாபதி. 

உடனே தங்களது மகளைக் குற்றம் சுமத்தும் பார்வையால் ஏறிட்டுப் பார்த்து விட்டுத் தங்களது கரங்களை அனிச்சையாக முன்னோக்கி நீட்டி அந்தத் தட்டைத் தாங்கள் இருவரும் பெற்றுக் கொண்டு,”எங்களுக்கும் எங்க வீட்டுப் பொண்ணை உங்கப் பையனுக்குக் கட்டிக் கொடுக்க முழுச் சம்மதம் சம்பந்தி!”என்றுரைத்து அவர்களிடம் தாங்கள் வைத்திருந்த தட்டைக் கொடுத்தனர் காளிமுத்துவும், வள்ளியும். 

அதைத் தனது விழிகளில் பழி வெறி மின்ன ஏளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் ராஜன்.

அதுவும் இல்லாமல் பல்வேறு சமயங்களில், தான் உரையாடலை மேற்கொள்ளும் போதெல்லாம் தன்னை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் தன்னைத் திமிராகவே நடத்தும் தன் மாமன் மகளின் பிடி இனிமேல் தன்னிடம் மட்டுமே இருக்கும் என்பதில் பேருவகை அடைந்து போயிருந்தான். 

அப்போது தங்கப்புஷ்பத்தின் பெற்றோர் நீட்டிய தட்டை வாங்கி வைத்து விட்டு,”எங்க மருமவளுக்கு நாங்க அட்டிகைப் போட விருப்பப்பட்றோம்!”என்றிருந்தார் சற்குணம். 

அதைக் கேட்டு விட்டு அங்கிருந்த உறவினர்களும், அண்டை வீட்டாரும் ஆச்சரியத்தில் வாய் பிளந்து போய் அவரைப் பார்த்தனர். 

அதுவும் அவரது கரத்தில மிளிர்ந்த அந்த அட்டிகை அவர்கள் அனைவரின் கண்களையும் கூசச் செய்தது என்று கூறலாம்! 

“இதென்ன இம்புட்டு ஜம்பம் காட்டுறா இவ? இவளுக்கு அப்படி ஒன்னும் அவளோட அண்ணே பொண்ணு மேலே அன்புப், பாசம் இருந்தது கிடையாதே!”என்று தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டார்கள். 

அதையெல்லாம் கண்டும், காணாமல் விட்டுவிட்டு,”நீ ஏன் அங்கே நின்னுட்டு இருக்கிறப் புஷ்பம்? இப்படி வந்து அத்தைப் பக்கத்துல உட்காரு! நான் இப்பவோ உனக்கு இந்த அட்டியலைப் போட்டு விடனும்னு ஆசைப்பட்றேன்!”என்று தன் வருங்கால மருமகளைத் தன்னுடைய அருகில் வந்து அமருமாறு அறிவுறுத்தினார் சற்குணம். 

அதற்கு இணங்கி அவரது சொல்லின் படியே நடந்து கொண்டாள் தங்கப்புஷ்பம். 

உடனே தன்னிடம் இருந்த அட்டிகையை அவளது கழுத்தில் போட்டு விடத் தொடங்கி விட்டார். 

அவரது அந்தச் செயலைக் கண்டதுமே, தங்களது மகளின் குணத்தை மற்றவர்கள் சந்தேகித்துப் பேசினாலும் கூட அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் இப்படி பெருந்தன்மையுடன் நடந்து கொண்டிருக்கும் வளையாபதி மற்றும் சற்குணத்தை நன்றிப் பெருக்குடன் நோக்கி, 

“இதெல்லாம் எதுக்கு த்தா? பூவை மட்டும் வச்சு விட்டாலே போதுமே!”எனத் தன் தங்கையிடம் வினவினார் காளிமுத்து. 

அதற்கு,”இருக்கட்டும் மாப்பிள்ளை! இதெல்லாம் எங்க மருமவளுக்குச் செய்யாமல் வேற யாருக்குச் செய்யப் போறோம்!”என அவருக்குப் பதிலளித்து விட்டு, 

“என்னடா நான் சொல்வது சரித் தானே? இப்போ உனக்குச் சந்தோஷமா?”என்று மகனிடம் கேட்டிருந்தார் வளையாபதி. 

அதில் தானும் வெட்கப் புன்னகையை உதிர்த்து,

“ம்ஹ்ம். எனக்கு ரொம்பச் சந்தோஷமாக இருக்குப்பா” என்றுரைத்தான் ராஜன்.

“அப்படியே உம்மருமவ தலையில் பூவையும் வச்சு விட்ருத்தா”என்று சற்குணத்திற்கு எடுத்துரைத்தார் உறவினர் ஒருவர்.

அதை தானும் உடனே செயல்படுத்தும் விதமாகத், தாங்கள் கொண்டு வந்திருந்த தட்டிலிருந்து மல்லிகை மலர்ச் சரத்தை எடுத்து தனது மருமகளின் தலையில் சூட்டி விட்டார் ராஜனின் அன்னை. 

தன் தலையில் இடம் பெற்ற அந்தப் பூவும், கழுத்தில் இருந்த அந்த அட்டிகையும் தனது சுதந்திரத்தைப் பறித்து, தன்னைச் சங்கிலியால் பூட்டி வைக்கப்பட்டதைப் போன்றதொரு உணர்வு உண்டானது தங்கப்புஷ்பத்திற்கு. 

“எங்க மருமவளுக்கு இந்த அட்டிகை எவ்வளவு பொருத்தமாக இருக்குன்னுப் பார்த்தீயளா? அதோட கனம் தாங்காமல் இவளே தன்னோட தலையைக் குனிஞ்சிக்கிற மாதிரி ஆகிப் போயிடுச்சு!”எனத் தனது வாயெல்லாம் பல்லாக அங்கு இருந்த அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார் சற்குணம். 

அதைக் கேட்டவர்களுக்கோ பொறாமைத் தீ கொளுந்து விட்டு எரிந்தது எனலாம்!

அடுத்தடுத்தச் சடங்குகள் அனைத்தையும் விரைவாக நடத்தி முடிக்கும் வகையில், 

“இப்போ நீங்க ரெண்டு பேரும் எழுந்து மூத்தவங்க எல்லார் கிட்டேயும் ஆசீர்வாதம் வாங்கிக்கோங்க”என ராஜன் மற்றும் தங்கப்புஷ்பத்திற்கு அறிவுரை வழங்கினார் வள்ளி. 

உடனே அந்த இரு ஜோடிகளும் தங்களது பெற்றோர்கள் மற்றும் அங்கிருந்த அனைத்து பெரியவர்களின் பாதங்களில் பணிந்து, ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். 

உடனே அவர்களை அனைவரும் மலர் தூவி ஆசீர்வதித்து முடித்து விட்டு ஒன்றாக அமர வைத்து உணவைப் பரிமாறி உண்ண வைத்தார்கள்.

அதேபோல் அந்த நிகழ்விற்கு வந்திருந்த அனைவருக்கும் உணவுப் பரிமாறப்பட்டது.

தாங்கள் இருவரும் அருகருகே அமர்ந்து இருந்த அந்தச் சமயத்தில், 

“நீ இதை தடுக்குறதுக்கு நிறைய தரம் முயற்சி செஞ்சி இருப்ப தானே?”எனத் தங்கப்புஷ்பத்திற்கு மட்டுமே கேட்கும் விதமாக மெல்லிய குரலில் கேட்டிருந்தான் ராஜன். 

அதில் அவனை நிமிர்ந்து வேதனைப் பொங்கப் பார்த்தாள் பெண்ணவள். 

ஏற்கனவே சிறிது நேரத்திற்கு முன்பாக நிகழ்ந்த யாவும் தனக்குக் கொஞ்சம் கூட விருப்பமில்லாமல் நிகழ்ந்து விட்டிருக்க, 

இப்பொழுது என்னவென்றால் பரிமாறப்பட்ட உணவும் தொண்டையிலேயே சிக்கிக் கொண்டு மிகவும் சிரமப்பட்டுப் போயிருந்தாள் தங்கப்புஷ்பம். 

அவளது கண்கள் இரண்டும் கண்ணீர்த் துளிகளால் நிறைந்து விட்டிருந்தது. 

இந்தத் தருணத்தில் தனக்கு உறுதுணையாக இருந்து, ஆறுதல் வார்த்தைகளைக் கூறாவிட்டாலும் கூட, இப்படி குத்தலாகப் பேசாமல் இருந்தாலே போதும் என்று எண்ணியவளுக்கோ, 

இவனே தன்னை எப்படியெல்லாம் வதைக்கலாம் என்று காத்திருந்து வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் தன்னை ஒரு வழியாக்கிக் கொண்டிருக்கிறானே! 

இவனிடமே தனக்கான கருணை, இரக்கம் எல்லாவற்றையும் எதிர்பார்ப்பது தன்னுடைய முட்டாள்தனம் என்பதை உணர்ந்து கொண்டுத், 

தனது கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு, அவனை வெற்றுப் பார்வையுடன் நோக்கினாள் தங்கப்புஷ்பம். 

ஆனால் அதையும் தவறாகப் புரிந்து கொண்டு,

“என்னடி இன்னும் உன்னோட திமிரும், கொழுப்பும் அடங்கலைப் போலவே? இவ்வளவு திமிராகப் பார்க்கிறியே என்னை?”என அவளிடம் உறுமினான் ராஜன். 

“அப்படியெல்லாம் இல்லை! நான் ஒன்னும் உங்களை முறைச்சுப் பார்க்கலை! சாதாரணமாகத் தான் பார்த்தேன் மாமா”என்று அவனுக்கு நலிந்த குரலில் பதிலளித்தாள் தங்கப்புஷ்பம். 

“ஓஹோ! அது தான் உனக்கும் நல்லது! நீ இதுக்கப்புறம் எங்கிட்ட முன்னாடி எல்லாம் பேசுவியே? அந்த மாதிரிப் பேசினால் வாயை உடைச்சுடுவேன்! சரியா? இன்னும் கொஞ்ச மாசத்துல நான் உன்னோட புருஷனாக ஆகிடுவேன்! அதுக்கப்புறம் உன்னோட ஒட்டுமொத்தப் பிடியும் என் கையில் இருக்கும்! அதை ஞாபகம் வச்சுக்கோ!”என அவளுக்குக் கடுமையாக எச்சரிக்கை விடுக்கவும், 

அதன் காரணமாகத் தன்னுடைய உடல் முழுவதும் பயத்தில் நடுநடுங்கிப் போய் விடவும், 

“சரிங்க மாமா”எனக் கூறி, வேகவேகமாகத் தனக்குப் பரிமாறப்பட்ட உணவை உண்பதில் கவனத்தைச் செலுத்தினாள் தங்கப்புஷ்பம். 

அதை வக்கிரத்துடன் பார்த்து விட்டுத் தானும் தனது உணவை உண்ணத் தொடங்கி விட்டான் ராஜன்.

அதே வேளையில்,”சாப்பாடு அவ்வளவாக வாய்க்குச் சுவைக்கலைண்ணே! ஆளுங்களை வச்சு சமைக்கச் சொன்னீயளாக்கும்?”என்று தன்னுடைய தமையனிடம் கேட்டிருந்தார் சற்குணம்.

“ஆமாம்மா. என்னால் எல்லாருக்கும் சமைக்க முடியலை! அதான்!”என்று தன் கணவனுக்குப் பதிலாகத், தானே முன் வந்து அவருக்குப் பதிலைத் தெரிவித்தார் வள்ளி. 

“ஓஹ்! அதனால் தான் சாப்பாட்டோட ருசிக் குறைவாக இருக்குப் போலவே அண்ணி!”என்று குறை கூறிக் கொண்டே தான் உணவருந்தினார். 

அதைக் கேட்டு,”இவளுக்கு என்னவாம் இப்போ? சும்மா, சும்மா ஏதாவது ஒரு குறையைச் சொல்லிட்டே இருக்காளே? இந்தச் சாப்பாட்டுக்கு என்னக் குறையாம்? ரொம்பத்தேன் பண்றாள்”எனத் தங்களுக்குள் பொருமிக் கொண்டார்கள் மற்ற அனைவரும். 

அதற்குப் பிறகானச் சடங்குகள் அனைத்தும் கண்ணை மூடிக், கண்ணைத் திறப்பதற்குள் நடந்தேறி முடிந்து விட்டிருந்தது! 

அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைத்து உறவினர்களும் அங்கிருந்து விடைபெற்றுச் சென்றிருக்க, 

ராஜனும், அவனது பெற்றோரும் கூடக் கிளம்பத் தயாராகி விட்டிருந்தனர். 

“சரிங்க அண்ணே! அண்ணி! அந்த வீரபத்திரன் இங்கே பிரச்சினைப் பண்ண வந்தாலும் கூட அதையும் சமாளிச்சு இந்தப் பரிசம் போட்ற நிகழ்ச்சியை நல்லபடியாக நடத்தி முடிச்சாச்சு! இப்போ தான் எங்களுக்கு மனசுக்கு நிம்மதியாக இருக்கு! உங்களுக்கும் அதே மாதிரித் தான் இருக்கும்னு நம்புறேன்”என்றவரோ, 

தங்கப்புஷ்பத்தின் பெற்றோரை ஆராய்ச்சியாக நோக்கவும், 

அதை உணர்ந்து கொண்டு,”ம்ஹ்ம். ஆமாம்மா. அதுவும் சரி தான்”என்றிருந்தார்கள் அவர்கள் இருவரும். 

அவர்களுக்குமே அந்த வீரபத்திரனும், அவனது வீட்டு ஆட்களும் இங்கே வந்து ஒரு களேபரத்தையே நடத்தி முடித்து விட்டுச் சென்று இருந்ததால் இந்தத் திருமணம் முடியும் வரைக்கும் அவன் இதில் ஏதாவது பிரச்சினைகளை உருவாக்கி விடுவானோ! என்று அவர்களுக்குப் பயம் உண்டாகி விடவே, 

அதனாலேயே அவர்களுக்கு இந்தத் திருமணம் விரைவாக நடந்து முடிய வேண்டும் என்ற அழுத்தம் உருவாகி விட்டிருந்தது. 

“இந்தக் கல்யாணத்தைச் சீக்கிரமே நடத்தி முடிக்கனும்! அப்போ தான் எங்களுக்கு நிம்மதியாக இருக்கும்!”என்றார்கள் காளிமுத்துவும், வள்ளியும். 

அதைக் கேட்டதும் தாங்கள் மூவரும் தங்கள் ஒருவரையொருவர் பார்த்து விஷமப் புன்னகை உதிர்த்துக் கொண்டனர் வளையாபதி, சற்குணம் மற்றும் ராஜன். 

ஆனால் இவர்கள் மூவரின் அமைதி தங்களுக்குக் கிலியை உண்டாக்கியதால், 

“நீங்க ஏன் அமைதியாக இருக்கீய? உங்களுக்கு இந்தக் கல்யாணத்தை தள்ளிப் போட்ற எண்ணம் இருக்கா என்ன?”எனக் கலவரத்துடன் வினவினர் தங்கப்புஷ்பத்தின் பெற்றோர். 

உடனே,”அச்சோ! எங்களுக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லைண்ணே, அண்ணி! எங்க மருமவளை எங்க வீட்டுக்கு எவ்வளவு சீக்கிரமாக  கூட்டிட்டுப் போகலாம்னு தான் நாங்க யோசிக்கிறோம்! அதனால் கல்யாண ஏற்பாடுகளைக் கூடிய சீக்கிரமாகவே ஆரம்பிச்சிடலாம்! சரி தானே?”என்றிருந்தார் சற்குணம். 

அதற்கு,”ரொம்பவும் சரி தான்ம்மா”என அவருக்குப் பதிலளித்தனர் அவ்விருவரும். 

அதற்குப் பிறகு அவர்களிடமும், தங்கப்புஷ்பத்திடமும் விடைபெற்றுக் கொண்டுத் தங்களது வீட்டிற்குப் புறப்பட்டார்கள் ராஜனும், அவனது பெற்றோரும்.

  • தொடரும்
❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!