அர்ப்பணம் 15

தங்கப்புஷ்பத்தின் வீட்டிலிருந்து கிளம்பித் தங்களது ஊருக்கு வந்தடையும் வரைக்கும் வீரபத்திரனோ, அவனுடன் வந்திருந்த யாவரும், எதுவுமே பேசவில்லை எனலாம்! 

ஆனால் அவர்களது மனதிற்குள் தாங்கள் அனைவரும் தாங்களே வலியச் சென்றுத் தேவையில்லாமல் அவமானத்தை தேடிக் கொண்டோமோ? என்றக் கோபமும், ஆதங்கமும், எரிச்சலும் மிகுந்து கிடந்தது! 

வீரபத்திரனின் முகத்தைப் பார்க்கவே சித்தனுக்கும், சிலம்பனுக்கும் மிகவும் வருத்தமாக இருந்தது. 

அதைப் பார்வைப் பரிமாற்றங்களின் மூலமாகத் தாங்கள் இருவரும் தங்களுக்குள் வெளிப்படுத்திக் கொண்டனர். 

சிறிது தூரப் பயணத்திற்குப் பின்னர் தங்களது வீட்டை அடைந்தவர்களின் முகங்களைக் கண்டு விட்டதுமே அவர்கள் சென்றக் காரியம் எதிர்மறையானதாக முடிந்து விட்டிருப்பதை நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது முனீஸ்வரியாலும், அவரது மகள் ஈஸ்வரியாலும்! 

தன்னுடைய மனதிற்குள்ளேயே மகிழ்ச்சியில் குத்தாட்டம் போடத் தொடங்கி விட்டிருந்தார் முனீஸ்வரி. 

அவரது மகளுக்கோ தனது அண்ணன் ஆசையாக கிளம்பிப் போன விஷயம் எதிர்மறையாக நடந்து விட்டதை மிகவும் வருத்தம் உண்டானது. 

அனைவருக்கும் தண்ணீர் கொடுத்து அமைதிப்படுத்தி விட்டு, ஒரு ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டாள் ஈஸ்வரி. 

அதே நேரத்தில்,”நீங்க எல்லாரும் போனக் காரியம் என்னாச்சுங்க? ஏன் அமைதியாக உட்கார்ந்து இருக்கீய? அதுவும் இல்லாமல் நீங்க கொண்டுப் போனப் பொருட்களை எல்லாத்தையும் அப்படியே திருப்பிக் கொண்டு வந்திருக்கீயளே! என்ன சேதி?”என்று தன் சந்தோஷத்தை மறைத்துக் கொண்டு ஒன்றும் புரியாதவரைப் போல் தன்னுடைய கணவரிடம் வினவினார் முனீஸ்வரி. 

அதில், இவ்வளவு நேரமாகத், தான் அடக்கி வைத்திருந்த கோபத்தை எல்லாம் வெளிப்படுத்தும் வகையில்,”க்கும்! நாங்கப் போனக் காரியம் எல்லாம் நாசமாகப் போச்சு! அங்கே எல்லாரும் எங்களை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு அசிங்கப்படுத்தி அனுப்பிட்டாவ! எங்களால் அங்கே இருந்த யாரோட மூஞ்சியிலேயும் முழிக்க முடியலை!”என்றவரோ,

தனது மகனின் பேச்சைக் கேட்டு அவனுக்குப் பிடித்தப் பெண்ணை அவனுக்குத் திருமணத்திற்குப் பரிசம் போட்டு முடிக்கச் சென்ற இடத்தில் தங்கள் அனைவருக்கும் நேர்ந்த அவமானத்தை அவரிடம் முழுமையாக விவரித்து முடித்திருந்தார் தர்மராஜ். 

அதைக் கேட்டதுமே தனக்குள் எழுந்த சந்தோஷக் கூச்சலை அடக்கிக் கொண்டு,

“என்னங்க சொல்றீய? அதெப்படி அவங்க உங்களையும், நம்ம மயனையும் இப்படி அசிங்கப்படுத்தி அனுப்பலாம்? நீங்களும் நம்ம ஊரில் பெரியத் தலைக்கட்டுத் தானே? அப்பறம் ஏன் உங்க ரெண்டு பேரையும் இப்படி பேசி அனுப்பி வச்சாங்களாம்?”என அவரிடம் ஆற்றாமையுடன் கேட்டிருந்தார் முனீஸ்வரி. 

அவரது அந்த வார்த்தைகள் தர்மராஜின் கோபத்தில் இன்னும் பெட்ரோலை ஊற்றியதைப் போலாகி விடவும், 

தனது விழிகளை உயர்த்தி மகனை எரித்து விடுவதைப் போல் பார்த்தார். 

ஆனால் யாரையும் தலையை உயர்த்திப் பார்க்கும் நிலையில் வீரபத்திரன் இல்லை எனலாம்!

ஏனென்றால் தனக்கு அவமானம் நேர்ந்தது கூட அவனுக்கு வருத்தமாக இல்லை! 

அவளுக்குத் தன்னுடைய அத்தை மகனுடன் திருமணம் நடப்பது பிடிக்கவில்லை என்னும் போது அதையாவது மறுத்துப் பேசி இருக்கலாமே? 

அதை ஏன் அவள் செய்யவில்லை? தனக்குத் தெரிந்தே அந்தப் படுகுழியில் விழுவதற்குத் தயாராகி விட்டு இருக்கிறாளே? இதை தான் வீரபத்திரனால் தாங்கிக் கொள்ளவும், ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை என்று கூறலாம்! 

அப்போது,“என்னப்பா வீரா இப்படி ஆயிடுச்சே? நான் உனக்கு நல்லப் பொண்ணாகப் பார்த்துக் கல்யாணம் செஞ்சி வைக்கிறேன்! நீ ஒன்னும் கவலைப்படாதே! இதை நினைச்சு வருத்தப்பட்டு, இடிஞ்சுப் போயிடாதே என்ன?”என அவனுக்கு ஆறுதல் கூறுவதைப் போல் அவனது வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சும் விதமாகப் பேசினார் முனீஸ்வரி. 

“அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீங்க உங்க வேலையைப் போய்ப் பாருங்க!”என்று அவரிடம் அழுத்தமாக கூறி விட்டு, 

“நான் போய் உடுப்பை மாத்துறேன்! நீங்க எல்லாரும் உடுப்பை மாத்திக்கிட்டு வாங்க! சாப்பிடுவோம்!”என்று மற்றவர்களுக்கு அறிவுறுத்தி விட்டுத் தன்னுடைய அறைக்குள் நுழைந்து கொண்டான் வீரபத்திரன். 

அவனது அந்த விட்டேற்றியானப் பேச்சைக் கேட்டுக் கோபம் தலைக்கு ஏறிப் போய் விடவும்,

“இந்தா! இப்படி விட்டேத்தியாகப் பேசிட்டுப் போறியான் பாரு! இதனால் தான் இவனை எல்லாரும் அவமானப்படுத்துறாக! இதை எப்போ தான் இவேம் புரிஞ்சிக்கப் போறியானோ தெரியலை! யாருக்குமே மரியாதைக் கொடுக்காமல் எப்படித் தான் இந்த மாதிரி இவனால் நடந்துக்க முடியுதோ?”என்று மகனைக் கரித்துக் கொட்டலானார் தர்மராஜ். 

“அவேன் தன்னோட வாழ்க்கையில் எதுக்குமே ஆசைப்பட்டது கிடையாதேப்பா? இப்போ முதல் முறையாக அந்தப் பொண்ணைக் கல்யாணம் செஞ்சிக்க ஆசைப்பட்டான்! அது நடக்கலைன்னு அவனே ரொம்பவும் மனசு உடைஞ்சுப் போயிருக்கான்! அதைப் புரிஞ்சிக்காமல் நீங்களும் அவனை இப்படி மனசை நோகடிக்கிறா மாதிரிப் பேசினால் என்ன அர்த்தம் ஐயா?”என்று அவரிடம் தனது நண்பனுக்காக நியாயத்தைக் கேட்டான் சிலம்பன். 

“ஓஹோ! உன் நண்பனுக்காக எங்கிட்ட நியாயம் பேசுறியோ? இதையெல்லாம் எங்கிட்ட வச்சுக்கிட்டா உன்னை வேலையில் இருந்து தூக்கிடுவேன் பார்த்துக்கோ! நீயெல்லாம் எனக்குச் சமதையாகப் பேச வந்துட்ட! ஒழுங்காக வேலையைப் பார்த்தோமா, கூலியை வாங்கினோமான்னு இருக்கனும்! புரிஞ்சிதா?”என அவனைக் கடுமையாக எச்சரிக்க, 

அதைக் கேட்டுக் கொண்டே அங்கு வந்து சேர்ந்து, 

“அவேன் ஒன்னும் இந்த வீட்டு வேலையாள் கிடையாது! என் நண்பன்! அவனை இப்படி நீங்கப் பேசுறது இதுவே கடைசி தடவையாக இருக்கட்டும்! அதை நீங்க முதல்லப் புரிஞ்சு நடந்துக்கிட்டால் சரித்தேன்!”எனத் தன்னுடைய தந்தைக்கு அழுத்தமாகத் தெரிவித்து விட்டிருந்தான் வீரபத்திரன். 

என்ன தான், தனது அண்ணன் தங்களது தந்தையை எதிர்த்துப் பேசினாலும் கூடச் சிலம்பனுக்காக அவன் ஏற்றுப் பேசியதைக் கேட்டு மனம் நிம்மதியுற்றாள் ஈஸ்வரி. 

ஏனெனில் அவளும், சிலம்பனும் தாங்கள் இருவரும் ஒருவரையொருவர் மிகவும் ஆழமாக மனதார விரும்பிக் கொண்டு இருக்கிறார்கள் எனலாம்! 

அப்படி இருக்கும் போது தனது தந்தை அவனைத் தாழ்த்திப் பேசியதை ஈஸ்வரியால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை! 

ஆனால் அவரை எதிர்த்துப் பேசும் துணிவும் அவளுக்கு இல்லை! 

ஆகவே, தனது தமையன் சிலம்பனுக்காகப் பேசியது அவளது மனதிற்கு இதத்தை அளித்து விடவே, 

அதனால் ஏற்பட்ட நிம்மதியால் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, 

“இப்படியே ஆளாளுக்கு வாய்ச் சண்டைப் போட்டுட்டு இருந்தால் எப்படி ப்பா? இன்னும் நீங்க யாரும் சாப்பிடவே இல்லை! எல்லாருக்கும் பசிக்கும் தானே? உங்களுக்குச் சாப்பாடு எடுத்து வைக்கச் சொல்றேன். முதல்லச் சாப்பிட்டுட்டு அதுக்கப்புறம் இதில் மேற்கொண்டு என்ன முடிவை எடுக்கலாம்ன்னுப் பேசலாமே?”எனத் தனது தந்தை மற்றும் அண்ணனிடம் தன்மையாக கேட்டுக் கொண்டாள் ஈஸ்வரி. 

அதில் அவளைக் கடுங் கோபத்துடன் முறைத்துப் பார்த்தாலும் கூட, 

“ஆமாங்க! நான் சாப்பாட்டு மேசையில் எல்லாத்தையும் தயார்படுத்திட்டுச் சொல்றேன்! எல்லாரும் சாப்பிடுங்க”என்று தானும் அனைவருக்கும் அறிவுறுத்தினார் முனீஸ்வரி. 

அதற்கு,”அட ஆமாம்! எங்களுக்குப் பசிக்குதுத்தா! நாங்களும் போய் எங்களைச் சுத்தப்படுத்திக்கிட்டு வந்துட்றோம்”என்று ஒவ்வொருவராக கூடத்தில் இருந்து களைந்து சென்று விட்டனர் அங்கிருந்த உறவினர்கள் அனைவரும். 

சிலம்பனும், சித்தனும் கூடத் தங்களைச் சுத்தம் செய்து கொண்டுத் தங்கள் நண்பனிடம் சென்று அவனுக்கு ஆதரவாக உட்கார்ந்து பேசலானார்கள்.

அதே சமயத்தில் அனைவருக்கும் உணவைப் பாத்திரங்களில் எடுத்துக் கொண்டு வருமாறு வேலையாட்களுக்கு உத்தரவிட்டு விட்டு என்னென்ன உணவுகள் தற்போது இருக்கிறது என்பதையெல்லாம் சரிபார்க்கும் வேலையை மேற்கொள்வதற்காகச் அடுக்களைக்குள் நுழைந்து விட்டாள் ஈஸ்வரி. 

உடனே தன்னுடைய கணவரைத் தொடர்ந்து தானும் தங்களது அறைக்குள் புகுந்து,

“ஏங்க அப்பாவும், மயனும் இப்படி சண்டைக் கோழியாகச் சிலிர்த்துட்டு இருக்கீய? இதைப் பார்க்கிறதுக்கு நல்லாவா இருக்கு? அதே மாதிரி நம்ம உறவுக்காரவுக முன்னாடி சண்டைப் போட்டால் அவுக நம்மளைப் பத்தி என்ன நெனைப்பாக?”என்று அவரைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினார் முனீஸ்வரி. 

“க்கும்! இனிமேலும் நம்மளைப் பத்தி நெனைக்கிறதுக்கு என்ன இருக்கும்மா? அங்கே வெளியூரில் போயே எல்லார் கிட்டேயும் அசிங்கப்பட்டுட்டு வந்தாச்சே? அவுக எல்லாரும் எங்களை எப்படி நாக்கைப் புடுங்கிக்கிறா மாதிரிக் கேட்டாக தெரியுமா?”என அவரிடம் தனது மனக்குமுறலைக் கொட்டித் தீர்த்தார் தர்மராஜ். 

அதைக் கேட்டதுமே தனக்குள் உற்சாகம் பொங்கி வழிந்ததைக் காட்டிக் கொள்ளாமல்,”அப்படியா ங்க? ரொம்ப வார்த்தையை விட்டுட்டாவளே? ப்ச்! எல்லாரும் வலியப் போய் அசிங்கப்பட்டுட்டு வர்றா மாதிரி ஆயிடுச்சேங்க!”எனப் பரிதாபத்துடன் கூறியவரிடம், 

“இனிமேல் அந்த ஊருக்குப் போய் நான் எப்படி எம்முகத்தைக் காட்ட முடியும் முனீசு?”என்று வேதனையாக உரைத்தார் அவரது கணவர். 

“சரி விடுங்க. நடந்தது நடந்து போச்சு! இனிமேல் இதைப் பத்தியே பேசிட்டு இருந்தா ஆச்சா? நீங்க உங்க உடுப்பை மாத்திட்டு வாங்க”என்று அவருக்கு அறிவுரை வழங்கி விட்டு அறையிலிருந்து வெளியேறித் தானும் சமையலறைக்குள் பிரவேசித்தார் முனீஸ்வரி. 

அங்கு அனைத்து உணவுப் பாத்திரங்களும் தயாராக இருப்பதைக் கண்டுத் திருப்தியுற்றுக் கொண்டிருந்த தனது மகளிடம், 

“என்னப் பார்த்துட்டு இருக்கிற? எல்லாம் தயாராக இருக்கா?”என்று வினவவும், 

அவரது அந்தக் கர்ஜிக்கும் குரலைக் கேட்டு நடுங்கிப் போய், 

“ஆங்! எல்லாம் தயாராக இருக்கும்மா”எனப் பதிலளித்தாள் ஈஸ்வரி. 

“இதையெல்லாம் நல்லா வக்கனையாக மேற்பார்வைப் பாரு! மத்த விஷயங்களில் கோட்டை விட்ரு! உன்னைப் பெத்ததுக்கு ஏதாவது பிரயோஜனம் இருக்குதா? உன்னை நல்லா, வசதியாக வாழ வைக்கிறதுக்காக நான் தான் போராட வேண்டியதாக இருக்கு! நீ அதையெல்லாம் வேடிக்கை மட்டும் பார்த்துக்கிட்டு, எனக்கு என்னன்னுக் கெட!”என்று அவளைத் திட்டி முடித்து விட்டு,

“நீங்க எல்லாரும் என்ன என்னோட வாயைப் பார்த்துட்டு நிற்கிறீய? சாப்பாட்டுப் பாத்திரங்களை எல்லாம் கொண்டுப் போய் மேசையில் வைங்க!”என்று அங்கேயிருந்த வேலையாட்களுக்குக் கட்டளையிட்டார் முனீஸ்வரி. 

உடனே அதற்குக் கட்டுப்பட்டு அவர் ஏவிய வேலையைச் செய்யலானார்கள் அந்தப் பணியாளர்கள்.

இங்கு,”நாங்க ரெண்டுப் பேரும் வீட்டுக்குக் கிளம்புறோம்டா”எனத் தங்கள் நண்பனிடம் விடைபெற்றுக் கொள்ளும் வகையில் கூறினர் சிலம்பனும், சித்தனும். 

“என்னடா உடனே கிளம்புறீய? எங்கப்பா பேசினதை நினைச்சு உங்களுக்குக் கஷ்டமாக இருக்கும்ன்னு எனக்கு நல்லாவே புரியுது! ஆனால் நான் என்னடா பண்ணேன்? என் கூட உட்கார்ந்து சாப்பிட்றதுல உங்களுக்குப் பிடிக்கலையா என்ன?”என்று அவர்களிடம் கசந்தக் குரலில் கேட்டிருந்தான் வீரபத்திரன். 

அதில் பதறிப் போய்,”டேய்! நாங்க எப்படா அப்படி சொன்னோம்? சரி. வா சாப்பிடலாம்”என அவனது வேண்டுகோளுக்கு இணங்கி விட்டார்கள் அவ்விருவரும்.

உடனே தாங்கள் மூவரும் உணவருந்தச் செல்ல, 

அவர்களுடன் சேர்ந்து உறவினர்கள் மற்றும் தர்மராஜ், முனீஸ்வரி, ஈஸ்வரியும் உணவுண்டு முடித்து விட்டிருந்தனர்.

அதற்குப் பிறகுச் சில நிமிடங்கள் கழிந்ததுமே உறவினர்களும், சிலம்பன் மற்றும் சித்தனும் தத்தமது இல்லங்களுக்குப் புறப்பட்டு விட,

அவர்கள் அனைவரும் சென்றதும் தானும் தன்னுடைய அறையில் முடங்கிக் கொண்டான் வீரபத்திரன்.

  • தொடரும்
❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!