மேகலா, கதிருடன் ஷாப்பிங் முடிந்து நேத்ரா வீட்டுக்குள் செல்ல
“எங்கடி போய்ட்டு வர?” என அமுதா கோபமாகக் கேட்க நேத்ரா அவளை விசித்திரமாகப் பார்த்தாள்.
“என்னடி அப்படி பார்க்கற?”
“உன்கிட்ட சொல்லிட்டு தான போனேன்? இப்போ இப்படி கேட்டா?” என அவள் பதிலுக்குக் கத்த
“சந்திரன் வீட்லருந்து போன் பண்ணாங்க” எனச் சொல்ல நேத்ரா அவளை அதிர்ச்சியுடன் பார்த்தவள் பின் சுதாரித்து,
“என்னவாம்?” எனக் கேட்க
“நம்ம ஏதோ ஆள் வச்சு அந்த ஆள அடிச்சோம்னு சொல்றாங்க. என்னடி நடக்குது நமக்குத் தெரியாம? அந்த ஆள் போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்றேன்னு சொல்றானு சொல்றாங்க” என ஆத்திரத்தில் கத்த
“ஓ…” எனப் பல்லை கடித்தவள் “நான் அந்த ஆள அடிச்சாங்கனு தெரிஞ்சதிலிருந்து எவ்ளோ சந்தோஷமா இருக்கேன். ஏம்மா ஏதாவது பேசி கடுப்ப கிளப்புற?” என நேத்ரா கடுப்பாகச் சொல்ல அமுதா அவளை விசித்திரமாகப் பார்த்தாள்.
“என்ன பார்க்கற?”
“யார் அடிச்சதுனு தெரியுமா உனக்கு?”
“தெரியுமே”
“யாரு?”
“என்னோட டி.எல் கதிர் நிலவன்” எனச் சொல்ல அமுதா அதிர்ச்சியானாள்.
“என்னடி சொல்ற? உன் டி.எல்க்கு எப்படிடி அந்த ஆள தெரியும்? அந்த ஆள் போட்டோ ஏதாவது காமிச்சியா? நம்ம ஃபேமிலி மேட்டர்லாம் அந்த ஆளுக்கு எப்படித் தெரியும்?” என்ற அமுதாவின் கேள்வியில் இப்போது நேத்ரா அதிர்ச்சியானாள்.
‘அம்மா கேக்குறது கரெக்ட் தான? இதை எப்படி யோசிக்க மறந்தேன்? இன்னைக்குக் கூடக் கதிரும், சந்திரனும் தெரிஞ்ச மாதிரி பேசினாங்களே? நேத்ரா நீ கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா?’ என அவள் தன்னையே திட்ட…
“என்னடி கேட்டுட்டே இருக்கேன். நீ பாட்டுக்குப் பதில் சொல்லாம இருக்க” என அமுதா கடுப்பாக
“ம்மா அவரு என் டி.எல்மா. ரொம்ப நல்லவருமா. நான் ஒரு முறை பேசிட்டு இருந்தப்ப கொஞ்சம் சொன்னேன்மா. அதனால ஏதாவது அடிச்சிருப்பாங்களானு தெரியல” என்று அவள் விளக்கம் சொல்ல
“என்ன உனக்காக அடிக்கிறாங்களா? எனக்கு என்னவோ இது நல்லதா படல” என யோசித்தவள்
“நாளைக்கு அவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு வா” எனச் சொல்ல நேத்ரா சந்தோஷமாகி
“தேங்க்ஸ் மா” எனக் கட்டி கொள்ள அமுதா யோசனையுடன் இருந்தவள்
“எதுக்கும் நீ கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு. யாரையும் நம்ப முடியல” எனச் சொல்ல நேத்ரா யோசிக்க ஆரம்பித்தாள்.
சாப்பிட்டு விட்டு சிறிது நேரத்தில் அவள் படுக்கக் கதிரிமிடருந்து மெஸேஜ் வந்தது.
“பேபி ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல தானே?” என அவன் கேட்க நேத்ரா இப்போது பதில் சொல்லலாமா, வேண்டாமா என்ற மனநிலையில் யோசிக்க அவனோ
“பேபி என்னாச்சு?”
“வொய் நோ ரிப்ளை?”
“எதுவும் தேவையில்லாம யோசிக்காத” என அவன் பதற அதற்கு மேல் மனம் கேட்காமல் பதில் அனுப்பினாள்.
“ஒண்ணும் ப்ராப்ளம் இல்லடா. சந்திரன் வீட்ல இருந்து போன் பண்ணிருக்காங்க. அந்தப் பன்னாட உன் மேல கம்ப்ளைண்ட் கொடுக்கப் போறானாம்” என அனுப்ப அதற்கு அவனிடமிருந்து சிரிப்பு ஸ்மைலி பதிலாக வந்தது.
“யார்? அவன் என் மேல கம்ப்ளைண்ட் கொடுக்கப் போறானாமா? நல்ல ஜோக்” என்று அனுப்பியவன் திரும்பவும் சிரிப்பு ஸ்மைலி போட நேத்ராவுக்குத் தான் கடுப்பானது.
“டேய் நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்? நீ எதுக்குக் கெக்கே பிக்கேனு சிரிக்கற?” என அனுப்பியவள்
“அம்மா நாளைக்கு உன்னை வீட்டுக்கு வர சொன்னாங்கடா” என்றவள் சொல்ல
“வாவ் சூப்பர்” என்றவன்
“நான் சன்டே வரட்டுமா? உனக்கே தெரியுமே. இந்த வாரம் வொர்க் கொஞ்சம் அதிகம் டா” எனச் சொல்ல
“ஓகே. நான் அம்மாட்ட சொல்லிடறேன். குட் நைட்” என மெஸேஜ் செய்ய அவன் வழக்கம் போலத் தனது சிரிப்பு ஸ்மைலியுடன் அனுப்ப அதைப் பார்த்ததும் அவளையறியமால் நேத்ராவின் மனம் அமைதியடையச் சிரித்துக் கொண்டே தூங்க ஆரம்பித்தாள்.
காலை வரையும் அமைதியாக இருந்தவள் திரும்பவும் கதிரை பற்றிச் சிந்திக்க ஆரம்பிக்க அவனிடம் இருந்து ஓடி ஒளிய ஆரம்பித்தாள்.
ஆனால் அமுதா கேட்ட கேள்வியும், அவள் எழுப்பி விட்ட சந்தேகமும் அவளை உறுத்த ஆரம்பிக்க இரண்டுக்கும் இடையில் அவள் திணறினாள்.
கதிர் அவளைக் கவனித்தாலும் வேலைப்பளுவினால் அவளிடம் சரியாகப் பேச முடியாதவன் அவள் எப்படியும் தன்னுடன் காரில் வரும் நாளன்று பேசி கொள்ளலாம் என அமைதியாக இருந்து விட்டான்.
நேத்ராவுக்குத் தான் அவனது அமைதியில் ஏதோ போலானது.
இவள் அதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்க அவன் தனக்குள் சிரித்தபடி தனது வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
இதற்கிடையில் அவளுடைய டீம் மேட் கார்த்திக்,
“நேத்ரா நம்ம கேட்க்கு என்னாச்சு?” எனக் கேட்க அவளோ அவன் சரியாகப் பேசாததில் கடுப்பாக இருந்தவள்…
“அது ரேட்ட தேடி ஓடி போய்டுச்சு”
“எங்க போனாலும் அந்தக் கேட் இங்க தான வரும்” என அவள் வாயை பிடுங்க
“நீ அமைதியா இல்லேனா உனக்கு உதை தான் விழும்” என்று சொல்ல
“ஹேய் கேட்… இங்க பாரு உன் டார்லிங் கடுப்பா இருக்காங்க” என அங்கு வந்த கதிரிடம் போட்டு கொடுக்க…
“டேய் உன் வேலைய மட்டும் பாருடா. அவரே பிஸியா இருக்காரு. அவர எதுக்கு டிஸ்டர்ப் பண்ற?” எனக் கார்த்திக்கிடம் கத்தியவள் கதிரிடம்,
“சார் நீங்க வொர்க்க பாருங்க. உங்களை டிஸ்டர்ப் பண்ணல” எனக் கடுப்பாகச் சொல்ல கதிர் சிரித்தபடியே அங்கிருந்து செல்ல அவள் பல்லை கடித்தாள்.
ஓரிரு நாட்கள் இவ்வாறு செல்ல கதிர் அன்று இரவு நேத்ராவுக்குப் போன் செய்தான்.
“ஹலோ”
“மேடம் என்ன பண்றீங்க?”
“நான் என்னவோ பண்ணிட்டு போறேன் சார். உங்களுக்கென்ன?”
“ஐயோ… என்ன ஆச்சு பேபி? இவ்வளவு அனல் அடிக்குது?”
“நீ தான் வொர்க் முடிஞ்சு வந்தா கூட என்னனு கேட்க மாட்டேங்கற? அவ்ளோ பிஸி”
“யாரு பேபி நானா? நீ தான் போன் பண்ணா கூட எடுக்கலடி”
“நான் எங்கடா எடுக்காம விட்டேன்?”
“ஓ… அப்படியா?” என்றவன் “அப்படினா மூணு நாளா கண்ணாமூச்சி விளையாடுனது யாராம்?” எனக் கதிர் கேட்க அவள் பதில் சொல்ல முடியாமல் திணறினாள்.
“அது… கதிர்”
“அன்னைக்கும் இப்படி தான் பண்ற? இன்னைக்கும் இப்படி தான் பண்ற. என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசில?” என அவன் காட்டமாகக் கேட்க
“கதிர்…”
“நான் அன்னைக்கே எதுனாலும் ஓப்பனா பேசணும்னு சொல்லி இருக்கேன்ல”
“ஆமா”
“ஆனா அதை நீ ஃபாலோ பண்றியா?”
“திரும்பவும் சொல்றேன் கேட்டுக்கோ. இதுக்கு மேல எதையாவது மனசுல வச்சு ஹைட் அன் சீக் விளையாடினா நான் உன் கண்ணுல இருந்து ஹைட் ஆகிடுவேன்”
“கதிர் என்ன இப்படி சொல்றீங்க?” என்று அவள் பதற
“உனக்கு மட்டும் தான் பண்ண தெரியுமா? நான் இப்படி பேசாம இருந்தா உன்னால தாங்க முடியாது நேத்ரா”
“ப்ளீஸ் கதிர். ஏற்கனவே ரொம்ப நொந்துருக்கேன். நீங்களும் உங்க பங்குக்கு எதுவும் பேசாதீங்க”
“அப்போ என்ன பிரச்சனைனு சொல்லுடி”
உண்மையில் அவனுக்கு நேத்ராவை திட்ட மனமில்லை தான். ஆனால் ஒவ்வொரு முறையும் அவள் இப்படியே செய்து கொண்டிருந்தால் எப்படி அவள் கூட்டிலிருந்து வெளியே வருவது என யோசித்தவன் அவளைத் திட்டினான்.
அவள் அழுவதும் அவனுக்குக் கஷ்டமாகத் தான் இருந்தது. ஆனால் இப்படியே இருந்தால் அவளால் வெளியே வர முடியாது என நினைத்தவன் அவளிடம் கடுமையாக நடந்து கொண்டான்.
“கதிர்”
“ம்ம்… சொல்லு”
“ஏன் அந்த ஆள அடிச்ச? உனக்கெப்படி அந்த ஆள தெரியும்?” எனக் கேட்க
“எப்படி பக்கி இவ்ளோ சீக்கிரம் கேட்டுட்ட?” என அவன் சிரிக்க
“டேய் சொல்லுடா. அம்மா நேத்துக் கேட்டப்புறம் தான் எனக்கு ஸ்ட்ரைக் ஆச்சு” எனச் சொல்ல
“நல்லா ஸ்ட்ரைக் ஆச்சு போ உனக்கு” என்று அவன் விழுந்து விழுந்து சிரித்தான்.
“டேய் பதில் சொல்லுடா” என அவள் பல்லை கடிக்க
“அதுவா… எனக்கு மேஜிக் தெரியும் பேபி” என்க
“என்னது?” என அவள் முழிக்க
“பேபி ஏன் இப்படி முழிக்கற?”
“டேய் போன்ல தான பேசறே? அப்புறம் எப்படிடா கரெக்டா சொல்ற?”
“அது அப்படி தான் பேபி”
“கேட்டதுக்குப் பதில் சொல்லு”
“அதெப்படி சொல்வேன்? இப்பவே சொன்னா சுவாரஸ்யம் போய்டாதா?” என்று ஜகா வாங்கினான்.
“டேய்…”
“இப்போதைக்குத் தேவையில்லாம யோசிக்காத. நாளைக்கு நான் பிக்கப் பண்ணிக்கறேன்” எனச் சொல்ல…
“போடா. நான் வர மாட்டேன்”
“நீ வருவ பேபி” என்று சிரிப்புடன் அவன் கட் செய்ய இவள் தான் என்ன செய்வது எனப் புரியாமல் குழம்பினாள்.
அடுத்த நாள் அவள் அலுவலகத்துக்குக் கிளம்பி கொண்டிருக்கும் போது அவனிடம் இருந்து போன் வந்தது.
அவள் தொலைபேசியை எடுக்காமல் இருக்க அவன் தொடர்ந்து கூப்பிட்டுக் கொண்டே இருந்தான்.
அதில் கடுப்பானவள் போனை எடுத்தவுடன் அவனிடம் கத்தினாள்.
“என்ன எரும? நான் தான் வரமாட்டேனு சொன்னேன்ல? ஏன்டா கூப்டுட்டே இருக்க?”
“ஹலோ அது நேத்து. இது இன்னைக்கு” என்று அவன் வடிவேல் மாடுலேசனில் சொல்ல
“டேய்”
“ஆமா பேபி. நான் பக்கத்தில வந்திட்டேன். நீ வந்துரு” என்றவன் கட் செய்ய வேறு வழி இல்லாமல் கிளம்பினாள்.
அவள் வந்ததும் கதவை திறந்து விட்டவன்,
“எப்படி நான் உன்னை வரவெச்சேன் பார்த்தியா?” எனப் புருவம் உயர்த்த
“கதிர் நீ ரொம்ப ஓவரா போற. கரெக்டா நடந்துக்கோ” என்றவளை அவன் உற்று நோக்கினான்.
“என்ன பேபி? என்ன மிஸ்டேக் பண்ணேன்?”
“நீ எதுக்கு அந்த ஆள அடிச்ச? உனக்கென்ன என் மேல அவ்வளவு அக்கற?”
“ஏன் பேபி அன்னைக்குச் சந்திரன் அந்தப் பொறுக்கி கிட்ட என்ன ஃபிரண்டா கூட நினைச்சு ஒரு வார்த்தை கேட்கலேனு எவ்ளோ ஃபீல் பண்ண?”
“அப்படி நீ ஃபீல் பண்ண கூடாதுன்னு தான் அடிச்சேன். இதிலென்ன தப்பு இருக்கு. ஒரு வேளை உங்க ஊர்ல நல்லது செஞ்சா ஆகாதா?” என அவன் நக்கலாகக் கேட்க அவனிடம் பேசிய சந்தர்ப்பங்கள் நினைவு வந்து அவளுக்குக் கண்கள் கலங்கியது.
அதை அவனுக்குக் காட்டாமல் மறைத்தவள்
“ஏன் இப்படி பண்றேடா? உனக்கு ஏதாவது ஆச்சுனா என்ன ஆகறது?” என அவள் கலங்கிய குரலில் கேட்க
“ஏன் பேபி என்ன காமெடி பீஸ்னே முடிவு பண்ணிட்டியா? எதா இருந்தாலும் நம்ம வக்கீல் ஃபிரண்ட் இருக்கான் பேபி. அவன் பார்த்துப்பான். ஆனா நம்மள மீறி என்ன நடக்கப் போகுது. எதா இருந்தாலும் நான் பார்த்துக்கிறேன். ஓகேவா?” என்றவன் ஒரு நிமிடம் யோசித்து
“பேபி டிவோர்ஸ்க்குப் பதில் ரிப்ளை போடற தானே? ஏதாவது லாயர பார்த்தியா?” எனக் கேட்க அவள் இல்லையென்று தலையாட்டினாள்.
“ஓகே. நம்ம பிரண்ட் இருக்கான். அவனை போய்ப் பார்க்கலாம்” எனச் சொல்ல
“அம்மாவை கேட்கணும்” என அவள் அவசரமாகச் சொல்ல
“ஓகே ஓகே. அம்மாவையும் கூட்டிட்டுப் போகலாம்” எனச் சிரிப்புடன் சொல்ல
“அதெப்டி அவ்ளோ கான்ஃபிடன்ஸா சொல்ற?”
“அது அப்படித் தான். ரெடியா இரு. அம்மாவோட போகலாம்” என உறுதியாக அவள் வியந்து போய்ப் பார்த்தாள்.
“மேடம் இப்படி பாக்காதீங்க. நான் கார் ஓட்ட முடியாது”
“டேய்”
“ஏன்டி கண்ணை சாசர் மாதிரி விரிக்கிறேன் பேர்வழினு கண்ணை உருட்டி பயமுறுத்தற?” என அவன் ஓட்ட
“டேய் உனக்கு அடிபத்தல. இந்தா நாலு அடி வாங்கிக்கோ” என அவள் திடீரென்று அடிக்க அவன் கைகளில் கார் தடுமாறியது.
“ஏய் நேத்ரா என்ன பண்ற?” என்றவன் முன் சென்ற காரில் இடிப்பது போல் கார் செல்ல அதில் சுதாரித்தவன் சடன் பிரேக் போட நேத்ரா பயந்து போய் அவன் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.
“உனக்குக் கொஞ்சம் கூட அறிவில்ல நேத்ரா” என அவன் திட்ட அவள் முகம் பார்த்தவன் அவள் பயந்து போய் இருப்பது தெரிய
“ஒண்ணும் இல்லடா. கூல்” என அவளைத் தேற்ற
“சாரி கதிர். நான் இப்படி ஆகும்னு யோசிக்கல”
“இது ரோடு பேபி. கவனமா இருக்கணும் தானே?” என அவன் கேட்க அவள் ஆம் எனத் தலையாட்டினாள்.
“சாரி”
“ஆரம்பிச்சிட்டியா? ஓகே” என்றவன்
“இந்த சன்டே உங்க வீட்டுக்கு வரேன்” எனச் சொல்ல
“வாவ். வாடா. நானும் வெயிட் பண்ணிட்டு இருப்பேன்” என்று அவள் சந்தோஷமாகச் சிரிக்க அவனும் புன்னகைத்தான்.
அதற்கடுத்த நாட்கள் வழக்கம் போல் செல்ல அந்த ஞாயிறும் வந்தது.
கதிர் தனது டிரேட் மார்க் சிரிப்புடன் வர நேத்ரா அவனை அமுதாவுக்கு அறிமுகப்படுத்தினாள்.
“ம்மா இவரு தான் நான் சொன்ன கதிர் நிலவன்”
“வணக்கம் ஆன்ட்டி” எனக் கதிர் கை கூப்ப பதிலுக்கு அமுதாவும் வணக்கம் வைத்தாள்.
“உட்காருங்க தம்பி. வந்தறேன்” எனத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தவள் அவனைப் பற்றி விசாரித்தாள்.
“எந்த ஊர் தம்பி நீங்க?”
“பொள்ளாச்சி ஆன்ட்டி”
“பொள்ளாச்சியேவா?”
“ஆமா ஆன்ட்டி. அப்பா, அம்மா என்ன பண்றாங்க?”
“பிஸினஸ் ஆன்ட்டி. நான் தனியா வந்து ஒர்க் பண்ணனும்னு இங்க இருக்கேன்”
“நீங்க ஒரே பையனா?”
“தம்பி இருக்கான் ஆன்ட்டி”
“சரி. நீங்க நேத்ரா கிட்ட கரெக்டா நடந்துகிட்டா நீங்க எப்போவும் போலப் பேசலாம். இல்லேனா?” எனச் சொல்ல நேத்ரா அதிர்ச்சியாய் அமுதாவை பார்க்க கதிரும் அதிர்ச்சியானவன்
“ஏன் ஆன்ட்டி?” எனக் கேட்க
“ஆமா தம்பி. நேத்ரா சொல்லிருப்பாளே. நாங்க இப்போ இருக்கற நிலைமைல ஜென்ட்ஸ் யாரையும் நம்பற மாதிரி இல்ல. உங்களையும் சேர்த்து தான் சொல்றேன். தப்பா எடுத்துக்காதீங்க தம்பி” எனச் சொல்ல கதிரோ இப்போது தனது டிரேட் மார்க் சிரிப்பை உதிர்த்தான்.
