அத்தியாயம் 24
ஏறக்குறைய ஆறேழு மாதங்கள் சென்ற நிலையில் நேத்ரா தனது அலுவலகத்தில் தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.
அப்போது அந்தப் பக்கம் வந்த கதிர் அவள் அருகில் வந்தவன் “பேபி” எனக் கூப்பிட அவளோ சிலையாக அமர்ந்திருந்தாள்.
அவனது குரல் நேத்ராவை எட்டவில்லை.
திரும்பவும் “பேபி” என்று கூப்பிட்டவன் அவள் கண் முன் கை அசைக்க அவள் திடுக்கிட்டு போய் விழித்தாள்.
“என்ன பேபி ட்ரீம்ல இருக்கற?”
“ஏன்டா நீ வேற? நானே கோர்ட்ட நினைச்சி பயந்திட்டு இருக்கேன்” எனப் பயத்துடன் கூற அவன் யோசனையானான்.
அவள் ஒரு வாரமாக ஏதோ சிந்தனையில் இருந்ததை அவன் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.
எனினும் அவன் வழக்கை பற்றி யோசிக்கவில்லை.
“என் கூட வா” என்றவன் ஃபுட் கோர்ட்க்கு அவளை அழைத்துச் சென்றவன் அவளை உட்கார வைத்து அவளுக்கும் சேர்த்து ஆர்டர் செய்து விட்டு அவளிடம் பேசினான்.
“ஏன்டா தேவையில்லாம யோசிக்கிற?”
“இல்லடா. எல்லாம் பயமுறுத்தறாங்க. கோர்ட்ல வக்கீல் மிரட்டுவாங்களா? கரெக்டா பதில் சொல்லணும்னு சொல்றாங்களே?” என்று அவள் கண்களில் பயத்துடன் கேட்க அவள் கையைத் தட்டி கொடுத்தவன்,
“அவங்க உங்க வீட்டுக்கு வந்தப்ப எவ்ளோ தைரியமா பேசின? நான் அதைக் கேட்டு எவ்ளோ சந்தோஷப்பட்டேன் தெரியுமா? அப்படி இருக்கறப்ப ஏன் பயப்படற?”
“இல்லடா. அது அம்மா இருக்காங்கனு தைரியத்தில இருந்தேன். கோர்ட்ட நினைச்சா பயமா இருக்கு” என்று உலர்ந்த குரலில் கூறியவள் அவன் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள்.
அவள் கைகள் சில்லிட்டிருப்பதை உணர்ந்தவன் அவளை ஆறுதலாக வருடி கொடுத்தான்.
“பேபி கூல்டா. நான் இருக்கறப்ப நீ பயப்படலாமா? நான் தான் உன் கூட எப்பவும் இருக்கேன்ல. அப்பறம் ஏன்டா இவ்ளோ பயம்?” எனச் சொல்ல அதில் கொஞ்சம் முகம் தெளிந்தவள்
“என் கூடயே இருப்ப தான?” என ஏக்கமாகக் கேட்க
“கண்டிப்பாடா” என அவன் உறுதியளிக்க அவன் மார்பில் சாய்ந்தபடி அவன் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.
அவனும் அவளை உணர்ந்தவன் போல் தன்னுள் இறுக்கி கொண்டான்.
பிறகு சிறிது நேரத்தில் சுதாரித்தவள் “சாரி” என்க
“அதானே நீ திருந்திட்டினா இந்த ஜனநாயகம் என்னாகுறது?” என அவளை வார
“அதில்லடா…”
“நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம் மேடம். வாங்க” எனச் சொல்ல
“ஆமாடா. அப்புறம் ஏன்டா இப்படி பேச சொன்னோம்னு நீயே ஃபீல் பண்ணுவ?” என அவள் வேடிக்கையாகக் கூற
“அதை அப்போ பார்த்துக்கலாம் பேபி” என்றவன்
“என்னைக்குக் கோர்ட்க்கு போகணும்டா?”
“டியூஸ்டே போகணும்”
“சரிடா. நீ பயப்படாத. நான் உன்கூட வரேன்” என்றவனை விழி விரிய பார்த்தாள்.
“என்ன பேபி அப்படி பார்க்கற?”
“நானே உன்கிட்ட கேட்கணும்னு நினைச்சேன் கதிர்”
“ஐ எம் அட் யுவர் சர்வீஸ் ஆல் டைம் மேடம்” என அவன் இடை வரை குனிந்து சொல்ல
“ஃப்ராடு. வேலைய முடிக்கறதுக்குள்ள என்ன திட்டு திட்டற? இப்போ அட் யுவர் சர்வீஸாம். உன்ன…” என அவள் அடிக்க ஆரம்பிக்க அங்கிருந்து ஓட ஆரம்பித்தான்.
“பேபி மீ பாவம். விட்டுடுடா” எனச் சொல்ல அவள் அவனைப் பொருட்படுத்தாமல் அடிக்க ஆரம்பிக்க நேத்ராவின் அருகாமை அவனை என்னவோ செய்தது.
திடுமென அவன் இடை மேல் கை வைத்தவன் அவளைப் பருகி விடுபவன் போலப் பார்க்க அதில் நேத்ரா விதிர்வித்தாள்.
அவன் தன்னை மறந்து அவளை நெருங்க அவள் பயத்துடன் கதிரை பார்க்க அதைக் கவனித்தவன் அவளை நெருங்கி முடிக்கற்றையை மென்மையாக ஒதுக்கி விட அவள் நிம்மதியாகப் புன்னகைத்தாள்.
“ஓகே பேபி. வொர்க் பாரு. ஈவ்னிங் போறப்ப பேசலாம். டேக் கேர்” எனச் சொல்ல அவள் தலையாட்டினாள்.
அங்கிருந்து அகன்றவன் யோசனையோடே தனது கேபினை அடைந்தான்.
‘பேபி நீ என்ன எப்போ புரிஞ்சுக்கப் போற?’ என்று நினைத்தவனுக்கு அன்று அவர்கள் அர்ஜூனை பார்த்த தருணம் ஞாபகம் வந்தது.
அன்று எல்லாவற்றையும் அர்ஜூனிடம் சொல்லி முடித்ததும் நேத்ரா அலைப்புறுதலுடன் இருப்பதைக் கவனித்தவன் அமுதா அருகில் இருந்ததால் அவனால் நேத்ராவை சமாதானப்படுத்த முடியவில்லை.
தனது வீட்டில் படுத்தவனுக்கோ நேத்ராவின் முகம் ஞாபகம் வந்து அவனை நிம்மதியாகத் தூங்க விடவில்லை.
சிறிது நேரம் என்ன செய்வதென்று யோசித்தவன் நேத்ராவை பார்க்க அவளது வீட்டிற்குக் கிளம்பினான்.
அவர்கள் ஃபிளாட்டில் மூன்றாவது மாடியில் குடியிருக்கச் சரசரவென்று தண்ணீர் பைப்பை பிடித்த ஏறியவன் அவளது படுக்கையறையைக் கவனித்தான்.
அங்கு நேத்ராவும், அமுதாவும் தூங்கி கொண்டிருந்தார்கள்.
நேத்ரா தூக்கம் வராமல் புரண்டு படுத்தவள் ஜன்னலை பார்க்க அங்கே ஏதோ ஓர் உருவம் அசைந்தது போல் இருக்க அவள் ‘வீல்’ எனக் கத்தினாள்.
அவள் கத்தலை கேட்டு திடுக்கிட்ட அமுதா “என்னாச்சு நேத்ரா? ஏன் கத்தற?” எனப் பதட்டமாகக் கேட்க
“ஜன்னல் கிட்ட யாரோ இருந்த மாதிரி இருந்ததுமா” எனச் சொல்ல அங்கே சென்று கவனித்த அமுதா…
“யாரும் இல்லடி. தேவையில்லாம பயப்படாத. தூங்கு” என நேத்ராவை தட்டி கொடுக்க அவளும் கண் மூடி தூங்க முயற்சி செய்தாள்.
இதற்கிடையில் நேத்ரா கத்துவதைப் பார்த்து திடுக்கிட்ட கதிர் அமுதா ஜன்னல் அருகே வருவதைப் பார்த்ததும் சுவர் பக்கம் ஒளிந்து கொண்டான்.
‘ராட்சசி… இப்படியா கத்துவா?’ என மனதுள் திட்டியவன் இருளில் சென்று ஒளிந்து கொண்டான்.
பின்னர்ச் சிறிது நேரம் கழித்து நேத்ராவுக்குப் போன் செய்ய அவளோ அருகில் அமுதா படுத்திருப்பதால் போனை கட் செய்ய அவன் கடுப்பானான்.
பிறகு யோசித்தவன் “அட்டெண்ட் தி கால்” என அனுப்ப அவளும் சரி என்று மெஸேஜ் செய்யக் கதிர் போன் செய்தான்.
அமுதாவுக்குப் பயந்து நேத்ரா போனை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள்.
“என்னடா இந்நேரத்தில போன் பண்றே? எதுவும் பிரச்சனையா?” என அவள் பதறிப் போய்க் கேட்க அவனோ உருகினான்.
‘நம்ம இவளை பத்தி யோசிச்சிட்டு வந்தா இவ நம்மள பத்தி யோசிக்கிறாளே. பேபி யூ ஆர் ஸோ ஸ்வீட்’ என வியந்தவன்
“பேபி நீ பால்கனிக்கு வா” எனச் சொல்ல அவளோ
“என்னடா சொல்ற?” என அதிர்ச்சி அடைந்தவள் பால்கனிக்கு செல்ல கதிர் அங்கே நின்று கொண்டிருந்தவன் இவளை பார்த்ததும் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றான்.
அவளோ இருந்த குழப்பத்தில் கோபமாகத் திட்டினாள்.
“டேய் ஏன்டா இந்நேரத்துக்கு வந்திருக்க? யாராவது பார்த்தா என்னாகறது?” எனப் பதட்டப்பட
“கூல் பேபி. சரி. நீ தூங்கலையா? நான் வந்தப்ப கரெக்டா கத்தின” என்றவன் “ராட்சசி. ஒரு நிமிஷம் ஈரக்குலையே நடுங்கிடுச்சு” எனத் திட்டினான்.
“அவ்ளோ பயம் இருக்கறப்ப ஏன்டா வந்த?” என அதற்கும் திட்டினாள்.
“எல்லாம் உன்னை பார்க்க தான்டி” என்றவன் கூற யோசனையுடன் பார்த்தாள்.
“ஈவ்னிங்ல இருந்தே உன் முகம் சரியில்ல. ஆன்ட்டி பக்கத்தில இருந்ததால ஒண்ணும் பேச முடியல. படுத்தாலும் தூக்கம் வரல. அதான்டா உன்னை பார்க்கலாம்னு வந்தேன்” என அவன் கூற நேத்ரா கண் கலங்க அவனைப் பார்த்தாள்.
“ஹேய் பேபி இப்போ ஏன் அழற?” எனப் பதறியவன்
“இங்க வா” என்று அவளை மென்மையாகக் கூப்பிட்டவன் தன் மடியில் படுக்க வைக்க அவளோ உணர்ச்சிகள் மேலிட தன்னை மீறி அழுதாள்.
“பேபி அழக்கூடாது” என்று அவளை அணைத்து ஆறுதல் படுத்தியவன்
“தூங்குடா” என்று தட்டி கொடுக்க அவ்வளவு நேரம் இருந்த அலைப்புறுதல் மறைந்து தாய்மடி தேடும் சேய் போல நிம்மதி ஆக உறங்கினாள்.
கதிர் நேத்ராவை தூங்க வைத்தவன் அவளைப் பார்த்தபடியே யோசனையில் ஆழ்ந்தான்.
எவ்வளவு நேரம் தூங்கினாளோ திடுக்கிட்டுக் கண் விழித்த நேத்ரா தான் கதிரின் மடியில் படுத்திருப்பது புரியாமல் திணறினாள்.
கதிரோ சுவரில் சாய்ந்து தூங்கி கொண்டிருந்தவன் இவளது சத்தம் கேட்டுக் கண் விழித்தான்.
“என்ன பார்க்கற? தூங்குடா” எனக் கனிவாகக் கூற அவளோ சட்டென்று மணியைப் பார்க்க நேரமோ நான்கை காட்ட
‘ஐயோ… இவ்ளோ நேரம் இவன் மடிலயே தூங்கிட்டமா’ என்று திடுக்கிட அவள் மனமோ அவன் மடியில் படுத்து தூங்க ஏங்கியது.
அவளையே கவனித்துக் கொண்டிருந்தவன், “என்னடா?” எனக் கேட்க அவனை இறுக அணைத்தவள் பின் விடுவித்து…
“நீ கிளம்புடா. யாராவது பார்த்துற போறாங்க” என்றவள் என்ன நினைத்தாளோ அவன் கன்னத்தில் முத்தமிட அவனோ புன்னகையில் விழி விரித்தான்.
“பேபி…” எனச் சந்தோஷ கூச்சலிட்டவன் அவளை நெருங்க…
“டேய் நீ ஃபர்ஸ்ட் கிளம்பு. போய்ட்டு மெஸேஜ் பண்ணு” என அவனைக் கிளப்ப
‘அடிப்பாவி. சும்மா இருந்தவன சொரிஞ்சி விட்டுட்டு இப்போ போங்கறாளே’ என உள்ளுக்குள் புலம்பியவன்
“பாய் பேபி” என்று சில அடிகள் எடுத்து வைத்தவன் பின் திரும்பி வந்து அவள் எதிர்பாராத நேரத்தில் முத்தமிட அவள் விதிர்வித்துப் போய் அவனைப் பார்க்க அவன் அவளது கன்னத்தைத் தட்டிவிட்டுச் சென்றான்.
நேத்ரா கதிரை முத்தமிடுவாள் என்று சற்றும் எதிர்பாராதவன் அதைப் பற்றிய யோசனையில் சற்று நேரம் வானத்தில் மிதந்தவனுக்கோ ஒன்று புலனானது.
அவள் கொடுத்தது அப்பாவுக்கு மகள் கொடுப்பது போன்ற முத்தம். அந்த எண்ணத்தில் அவன் முகம் புன்னகையைத் தத்தெடுக்க அவளை என்றும் இப்படியே கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற சங்கல்பம் எடுத்துக் கொண்டான்.
நேத்ராவிற்குத் தான் ஏன் அப்படிச் செய்தோம் என்று ஒன்று புரியாமல் தவித்தாள்.
அவன் எப்போது அவளைக் காப்பாற்றினானோ அப்போதில் இருந்து அவள் மனம் அவனைத் தேடியது.
எதற்கெடுத்தாலும் அவன் பின்னால் அவள் மனம் ஓடியது.
சந்தோஷமோ, துக்கமோ முதலில் அவனிடம் பகிர்ந்து கொள்ள மனம் துடித்தது.
ஏனென்று யோசித்தவளுக்கு அவனது புன்னகை முகம், சிந்தனைகள் ஞாபகம் வர தன்னையறியாமலே அவளும் புன்னகைத்தாள்.
அதைத் தவிர அவளுக்கு வேறெதுவும் யோசிக்கத் தோன்றவில்லை.
ஆனால் இன்றைக்குத் தன்னையறியாமலே தான் அவனை முத்தமிட்டதற்கான காரணம் புரியாமல் அதிர்ச்சி அடைந்தவள் அதைப் பற்றி மேலும் யோசிக்கப் பயந்தாள்.
அன்றிலிருந்து அவன் மடியில் படுத்துக் கொள்வது, அவன் கையைப் பிடித்துக் கொள்வது என அடிக்கடி நடக்கும். அவனும் அவளைப் புரிந்தது போலத் தேற்ற அவள் நிம்மதியானாள்.
அவளோ பெஸ்டி என்று நினைக்க அவனோ அவளைத் தனது உயிராக நினைத்தான்.
கதிரின் மனதில் இருப்பதை அறிந்தால் நேத்ராவின் மனநிலை எப்படி இருக்குமோ?
