அன்று ஓவியனோடு பேசிக் கொண்டிருந்தவளுக்கு அவன் தன்னிடம் ஏதோ மறைக்கிறான் என்று தோன்றியது. கேட்டாலும் பதில் இல்லாமல் போகவும் தனது அண்ணனிடம் சொன்னாள்.
“கண்ணா ஓவியன் சரியே இல்ல” என்று நித்திலா யோசனையாக கூறினாள்.
“ஆமா குட்டிமா. அவன் அப்பப்போ இப்போ எல்லாம் ஒரே ரேன்ஜா தான் இருக்கான்” என்று கண்ணன் கூறினான்.
“கண்ணா தேவையில்லாம அவரை பேசாத” என்று கூறினாள்.
“பார்ரா… அந்த ஏஐ வீடியோ வந்தாலும் வந்தது. ரெண்டு பேரும் ட்ரீம்லயே மிதக்கறீங்க?” என்று கூறினான்.
“நீ என்னை தப்பா நினைக்குறியா கண்ணா?” என்று கலங்கிய குரலில் கேட்டாள்.
“ஹேய்… குட்டிமா… நான் உன்னை கலாட்டா பண்ணேன். ஆனா அந்த பக்கி கேட்கறப்ப எல்லாம் லவ்வா? நானானு கேட்குதே” என்று அவன் தன்னை மீறி புலம்பினான்.
“கண்ணா என்ன சொல்ற நீ?” என்றவள் அதிர்ச்சியாக கேட்டாள்.
“அவன் கண்ல உனக்கான காதல் தெரியுது. பட் ஆனா அவன் உணரல. தனியா இருந்ததுல அப்படியே இருந்துட்டான்” என்றவன் குரலில் யோசனையாய் பார்த்தாள்.
“என்னடா இவன் ஃபிரண்டுக்கு இவ்ளோ சப்போர்ட் பண்ணி பேசறான். நீ எல்லாம் ஒரு அண்ணணாடானு கேட்கறியா?” என்றவனை திகைப்பாய் பார்த்தாள்.
“அவன் கஷ்டம் மட்டும் தான் பட்டுட்டு இருக்கான் குட்டிமா. இப்போ கொஞ்ச நாளா தான் அவன் ஏதோ சிரிக்கிறான்” என்று பெருமூச்சுடன் சொன்னான்.
“அதெல்லாம் ஒண்ணும் கவலைப்படாத. நான் பார்த்துக்கிறேன்” என்று சொன்னவளை ஆதுரமாக தலையை தடவி கொடுத்தவன் “நீங்க ரெண்டு பேரும் நல்லாருக்கணும் குட்டிமா” என்று கூறினான்.
“நீ இருக்கறப்ப எனக்கு என்ன கவலை அண்ணா? அய்யோ… டேய் டாபிக் ஏதோ பேச வந்து எங்கயோ போகுது. அவரு ஏதோ ப்ராப்ளம்ல சிக்கிட்டு இருக்காரு. நான் கேட்டப்ப மழுப்பிட்டாரு. நீ என்னனு பாருடா” என்று கூறினாள்.
“நீ கவலைப்படாத குட்டிமா. நான் பார்த்துக்குறேன்” என்றவன் ஓவியனை பார்க்கச் சென்றான்.
“வா மச்சி” என்றவனை ஆச்சரியமாய் பார்த்தான்.
“என்னடா பார்வை? உன் கடைக்கு நான் வராமயா இருக்கேன். சொல்ல போனா உன் கடைய இத்தனை நாள்ல நான் தான் கன்ட்ரோல் பண்ணிட்டு இருந்தேன்” என்றவனை கூர்மையாய் பார்த்தான்.
“மச்சி என் மேல இன்னும் கோபமா இருக்கியா?” என்று தயங்கியபடி கேட்டான்.
“ஆமா. நீ என் தங்கச்சி கூட நீ டூயட் பாடுவ. நான் அமைதியா இருப்பேனா?” என்று கோபத்தை வரவைத்த குரலில் கூறினான்.
“கண்ணா”
“ஆமாடா. நான் உன் மேல செம கடுப்புல இருக்கேன்” என்றவனை எப்படி சமாதானம் செய்வதென தடுமாறினான்.
“டேய் அதையே எவ்ளோ நாள் பிடிச்சுட்டு தொங்குவடா? எனக்கும் அந்த வீடியோக்கும் சம்பந்தம் இல்லடா” என்றவன் உணர்ச்சியற்ற குரலில் கூறினான்.
“டேய் நான் அந்த மாதிரி தப்பு பண்ற ஆளு இல்ல. என்னை நம்புடா. அது ஓர் ஏஐ வீடியோ. என்ன அதுல வந்த ரியாக்ஷன்ஸ் நான் சொல்ல நினைச்சது அந்த வீடியோ சொல்லிடுச்சு” என்றவனை அதிசயமாக பார்த்தான்.
“அட ஃபைனலி பல்ப் எரிஞ்சிருச்சு போலயே” என்று சிரிப்புடன் கேட்டான்.
“அப்போ உனக்கு என் மேல கோபம் இல்லையா?” என்று கேட்டான்.
“இப்பவும் உன் மேல கோபமா தான் இருக்கேன்” என்று சொன்னவனை பார்த்தவனுக்கு அன்று நடந்தது ஞாபகம் வந்தது.
அவனை கண்களில் வலியுடன் பார்த்தான்.
“அப்போ இன்னைக்கு வரைக்கும் நீ என் மேல கோபமா தான் இருக்க?” என்றவன் கேட்க அவன் ஆமாம் என்று தலையாட்டினான்.
“சாரிடா. நீங்க சொன்னது எல்லாம் கரெக்ட் தான். நான் அநாதைங்கற ஃபேக்டர், உங்கப்பா அடிச்சது எல்லாம் அப்படியே தானே இருக்கு” என்று வலியுடன் கூறினான்.
“அப்புறமா ஃபீல் பண்ணலாம். ஃபர்ஸ்ட் வா வெளிய போவோம்” என்று சொல்ல ஓவியன் தயங்கினான்.
இவ்வளவு நாள் எல்லாம் முடிந்தது என்று ஓவியன் நினைத்திருக்க கண்ணனின் பேச்சு அவனை திரும்பவும் தனி
உலகத்திற்கு தள்ளியது.
தன்னை மறந்து இருந்தவன் பின் சுதாரித்து மென் புன்னகையுடன் “என்ன சாப்பிடற?” என்று உபசரித்தான்.
“ஆமா. பெருசா இவரு என்னை உபசரிக்க போறாரு. ஃபர்ஸ்ட் வா பக்கி. ஹோட்டல் போய் எவ்ளோ நாள் ஆச்சு?” என்று கூப்பிட்டான்.
“கண்ணா வேலை இருக்குது”
“அப்போ எனக்கு வேலை இல்லைனு சொல்றியா… அட வாடான்னா…” என்றவன் அவனை பிடித்து இழுக்காத குறையாக அவனை கூட்டிச் சென்றான்.
அவனது செய்கையில் அவன் கையை பிடித்தவன் “ஒரு நிமிஷம் இருடா” என்றான். பின் மகேந்திரனை அழைத்து ஒரு சில குறிப்புகளை சொல்லிவிட்டு அவனுடன் கிளம்பினான்.
அவர்கள் காரில் போய் கொண்டிருக்கும் போது ஓவியனுக்கு அவனது அலைப்பேசியில் அழைப்பு வந்தது.
“சொல்லு சதீஷ்”
“…….”
“சரிடா.பரவாயில்ல. நான் வேற இடத்துல டிரை பண்றேன்”
“…….”
“இட்ஸ் ஓகே டா. ஐ வில் மேனேஜ்”
“……”
“ஓகேடா. நான் திரும்ப கூப்பிடுறேன்” என்றவன் போனை கட் செய்ய கண்ணன் அவனை கேள்வியாய் பார்த்தான்.
“ஒன்னும் இல்லடா”
“ஒன்னும் இல்லாம அவன் எதுக்கு உன்னை கூப்பிடணும்?”
“அது…” என்று தயங்கியவன் மேற்கொண்டு சொல்ல முடியாமல் அமைதியாய் இருந்தான்.
“டேய் இப்ப நீ சொல்ல போறியா இல்லையா?” என்றபடி கண்ணன் காரை நிறுத்தினான்.
“டைல்ஸ் கொஞ்சம் எடுக்கணும். ஒரு பெரிய ஆர்டரா ஒன்னு கிடைச்சிருக்கு. ரெண்டு மூணு இடங்கள்ல பணம் கேட்டு இருந்தேன். ஆனா அவங்க கொடுக்கல. அதான் சதீஷ் கிட்ட கேட்டேன்” என்றவனை கோபமாய் முறைத்தான்.
“ஏன்டா என் ஞாபகம் உனக்கு எப்பவுமே வராதா?”
“இல்லடா. ரெண்டு மூணு ப்ராப்ளம் இருக்கு. நீ ஏற்கனவே நிறைய ஹெல்ப் எனக்கு செஞ்சிட்டு இருக்கடா. இதையும் கேட்டு உன்னை கஷ்டப்படுத்த சொல்றியா?” என்று கேட்டவனை முறைத்தான்.
“டேய், என்னை டென்ஷன் படுத்தாதடா. உனக்கு எவ்வளவு பணம் வேணும்?”
“இல்லடா. நான் வெளிய பார்த்துக்குறேன்”
“நான் தான் தரேன்னு சொல்றேன் இல்ல. அப்புறம் நீ ஏன்டா இவ்வளவு யோசிக்கிற?”
“பரவாயில்லடா. ஏற்கனவே நீயும் உன் பேமிலியும் உதவி செஞ்ச வரைக்கும் போதும். அதுக்கே என்ன பண்றதுனு தெரியாம முழிச்சுட்டு இருக்கேன். இதுல பணமும் வாங்க சொல்றியா?” என்று தர்மசங்கடமான குரலில் கேட்டான்.
“உனக்கு எவ்வளவு பணம் வேணும்னு கேட்டேன்?” என்று கோபமான குரலில் கேட்டவனை எப்படி தவிர்ப்பது என்று தெரியாமல் திணறினான்.
“டேய் உனக்கு நான் சொன்னா புரியாது” என்றவன் நித்திலாவிற்கு போனை போட்டான்.
“குட்டிமா”
“சொல்லு எரும?”
“இங்க ஒரு எரும நான் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்குது. நீயே என்னனு கேளு குட்டிமா” என்றபடி போனை ஓவியனிடம் கொடுத்தான்.
“சொல்லு நித்திமா” என்றவன் கனிவான குரல் கேட்டான்.
“நான் தான் அண்ணாவை அனுப்பி வைச்சேன். என்கிட்ட தான் ஃப்ரீயா பேச மாட்டேங்கிறீங்கனு அவனை அனுப்பினேன். அவன்கிட்டயும் என்ன ப்ராப்ளம்னு சொல்ல மாட்டீங்களா?” என்று கோபத்துடன் கேட்டாள்.
“அது அப்படி இல்லடா. கொஞ்சம் ஃபினான்ஷியலி பிரச்சனை. அவ்வளவுதான்” என்று முடிக்க பார்த்தான்.
“ஆனா உங்க குரல் பார்த்தா அப்படி தெரியலையே. பெரிய பிரச்சனையா இருக்கும் போலவே” என்றவள் சொன்னதும் அதிர்ச்சியில் அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை.
“அது… நிலா” என்று உணர்ச்சி வசப்பட்டவன் மேற்கொண்டு வார்த்தைகள் வராமல் அலைப்பேசி அழைப்பை கட் செய்தான். அவனுக்கு அழுகை வரும் போல் இருந்தது. இப்படி எல்லாம் அவனை யாரும் கவனித்து கேட்டதே இல்லை.
அவன் தன்னை சமன்படுத்த முயற்சி செய்வதை பார்த்த கண்ணன் அவனை இறுக அணைத்திருந்தான்.
“என்னடா மச்சி ஆச்சு உனக்கு? நாங்க இருக்கோம்டா உனக்கு” என்று அவனைத் திட்டினான். அதற்குள் நித்திலா இரண்டு மூன்று முறை கால் செய்து விட்டாள்.
“டேய் பக்கி என்ன ஆச்சு? கால் பண்ணா அட்டென்ட் பண்ண மாட்டீங்களா?” என்று திட்டினாள்.
“ஏய் கொஞ்சம் அமைதியா இருடி. உன் பிரண்டு பணம் வாங்க மாட்டேங்கிறான். அவனுக்கு என் பிரண்டா பணம் வாங்க பிடிக்கவில்லை. சோ நீயே உன் பிரண்டு கிட்ட சொல்லு” என்றபடி கடுப்புடன் அலைப்பேசியை ஓவியனிடம் கொடுத்தான்.
“நான் இருக்கேன் ஓவியன் உங்களுக்கு. எதையும் யோசிக்காம பணம் வாங்கிக்கோங்க. புரியுதா ஓவியன்?” என்று மென்மையாக கூறினாள்.
“இல்லடா. உன் அப்பா ஏற்கனவே கோபமா இருக்காங்க. இது தெரிஞ்சா இன்னும் கேவலம் ஆகிடும்” என்று கூறினான்.
“அதை நாங்க ஃபேஸ் பண்ணிக்கிறோம் ஓவியன். என் ஓவியன் எதுக்கும் கலங்க கூடாது” என்றவள் சொல்ல அந்த வார்த்தையில் பனிச்சாரல் தன் மேல் சிந்தியது போல சிலிர்த்து போனான்.
“சரிடா. நான் கட் பண்றேன்” என்றவனின் மனம் அவள் சொல்லிய வார்த்தையிலேயே கட்டுண்டு நின்றது.
கண்ணன் அவனுடன் பேசி அவனது பிரச்சனைகளை கேட்டுக் கொண்டவன் அவன் மனதை ரிலாக்ஸ் செய்த பிறகே ஓவியனை அவனது கடையில் விட்டு விட்டுச் சென்றான்.
“டேய் நாளைக்கு ஆஃபிஸ் வர” என்று கண்டிப்புடன் கூறவும் ஓவியன் புன்னகையுடன் தலையாட்டினான்.
“தேங்க்ஸ்டா மச்சான்” என்று ஓவியன் சிரிப்புடன் சொல்ல “டேய் எதுனாலும் ஒரு போன் அடி. உடனே உன் முன்னாடி நிப்பேன்” என்று சொன்னவனை நெகிழ்வாக பார்த்தான்.
வீட்டுக்குச் சென்ற கண்ணன் தாத்தாவிடம் சில விஷயங்களை பேசிவிட்டு தூங்கச் சென்றான்.
அடுத்த நாள் அலுவலகத்தில் ஓவியனுக்காக கண்ணன் காத்துக் கொண்டிருந்தான்.
அவன் ஓவியனுக்கு பணம் கொடுக்கும் போது அங்கே தர்மராஜும், ரத்னமும் வந்தனர்.
“கண்ணா என்ன பண்ணிட்டு இருக்க?”
“ஏன் பா… பார்த்தா தெரியலையா?”
“இவன்கிட்ட எதுக்குடா சூட்கேஸ் கொடுக்கற?”
“ஏன் என் பிரண்டுக்கு கொடுத்தா என்ன?”
“ஊர், பேர் தெரியாதவன் கிட்ட போய் பணம் கொடுக்கற? இவன் எங்கேயாவது தூக்கிட்டு ஓடிப் போயிட்டா என்ன பண்ணுவ?”
“ப்பா… வார்த்தைய அளந்து பேசுங்க”
“என்னடா அளந்து பேசுறாங்க? அப்பா யார்னு தெரியாத அநாதை… நம்ம எவ்ளோ கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம்? இவன்கிட்ட பணத்தை தொலைக்க சொல்றியா? ஃபர்ஸ்ட் பணத்தை அவன்கிட்ட இருந்து வாங்குடா”
“ப்பா… வயசுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோங்க”
“டேய் உனக்கு சொன்னா புரியாது” என்றவர் அவனிடம் பிடுங்க வர ஓவியன் அவருக்கு வேலை வைக்காமல் தனது கையிலிருந்த பெட்டியை அவனிடம் கொடுத்தான்.
“வரேன் கண்ணா” என அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவன் அங்கிருந்து வெளியே வர அண்ணாமலையும், நித்திலாவும் அறையின் உள்ளே வந்தார்கள்.
“என்ன ஓவியா? எங்க போற? நான் வரேன்னு சொன்னேன்ல உன்கிட்ட” என்று கண்டிப்பான குரலில் கேட்டார்.
“அது… தாத்தா நான் அப்புறம் வரேன்”
“பணம் எடுத்துட்டு போகாம போறீங்க ஓவியன்”
“இல்ல நித்திலா. நான் வேற இடத்துல பணம் அரேன்ஜ் பண்ணிக்கறேன்”
“ப்பா… இவனுக்கு எதுக்கு பணம்ப்பா? இவன் சுருட்டிட்டு ஓடுறதுக்கா?”
“தர்மா”
“அவன்கிட்ட பணம் கொடு”
“இவனுக்கு நான் கொடுக்க முடியாது. யார் பணத்தை யாருக்கு கொடுக்கறது?” என்று தர்மராஜ் கர்ஜித்தார்.
“ப்பா… நான் தான் கண்ணா கிட்ட சொல்லி கொடுக்க சொல்லி சொன்னேன்” என்று நித்திலா சொன்னாள்.
“நித்திலா சமீபமாக நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்ல. அமைதியா இரு நித்திலா” என கோபமாக திட்டினார்.
“எப்படிப்பா அமைதியா இருக்க சொல்றீங்க? என்னை கேட்க கூடாத கேள்வி எல்லாம் கேட்டீங்க? எனக்கு வெர்ஜினிட்டி செக் பண்ண டிரை பண்ணீங்க. இதோ அங்கிளோட ஒய்ஃபோட சேர்ந்து ஏஐ வீடியோ கிரியேட் பண்ணி சந்தி சிரிக்க வைப்பீங்க. நான் எப்படிப்பா அமைதியா போவேன்.
அவர் இல்லைனா நீங்க என்னை உயிரோட பார்த்திருக்கவே முடியாது. அவன் என்னை ஏதாவது பண்ணி இருந்தா என்ன பண்ணி இருப்பீங்க? அந்த நன்றிக்கடன் உங்களுக்கு இருக்கா? அன்னைக்கு அவ்ளோ தூரம் சொல்றேன். மாட்ட அடிக்கிற மாதிரி அடிக்கறீங்க. அங்கிள் உங்க ஒய்ஃபை வார்ன் பண்ணி வைங்க. தேவையில்லாம என் விஷயத்துல தலையிட வேணாம்னு. அதே போல உங்களுக்கும் சேர்த்து தான் வார்ன் பண்றேன்” என்றவளை அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
இத்தனை நாள் இது குறித்து அமைதியாக இருந்தவள் இன்று மனதில் இருப்பதை கொட்ட அவளை மெல்லமாக நெருங்கிய ஓவியன் அவள் கைகளை இறுக பிடித்துக் கொண்டான்.
அவளது வார்த்தையில் “நித்திலா” என கண்ணனும், அண்ணாமலையும் அதிர்ந்து கத்தினர்.
“இதுக்கு மேல அமைதியா இருந்தா உங்களுக்கு நல்லது. உங்க பொண்ண காப்பாத்தி கொடுத்ததுக்கு நீங்க இப்படி தான் மரியாதை பண்ணுவீங்களா? எப்போ இருந்து பா நீங்க இப்படி மாறினீங்க? நீங்க இப்படி செய்வீங்கன்னு கொஞ்சம் கூட நினைக்கலப்பா” என்று அத்தனை ஆக்ரோஷமாக கத்தினாள்.
“நித்திலா”
“இவருக்கு எதுவும் வேணாம்னா எனக்கும் எதுவும் வேணாம்ப்பா”
“நித்திலா”
“யாரை நீங்க ஒதுக்குறீங்களோ அவரு தான் இனி எனக்கு எல்லாமே” என்ற அவளின் கூற்றில் அனைவரும் சிலையாய் நின்றனர்.
