ஓவியனுக்கு கால் செய்த நித்திலா அவனது குரலில் இருந்த ஏக்கத்தில் பதறியடித்து அவன் வீட்டுக்கு வந்தாள்.
வந்தவள் அவன் கேட்ட கேள்வியில் சிலையாய் நின்றாள்.
“நான் உன்னை ஹக் பண்ணிக்கட்டுமா நிலா? எனக்கு ரொம்ப பயமா இருக்கு நிலா” என்று முகம் கசங்க கேட்டான்.
“ஓவியன் என்ன பேச்சு இது? நான் இருக்கிறப்ப நீங்க எதுக்கு பயப்படுறீங்க?” என்றபடி அவனது கையை பிடித்தாள்.
அவள் கையை பிடித்ததும் ஓவியன் நித்திலாவின் எலும்புகள் நொறுங்கும் அளவுக்கு அவளை இறுக அணைத்திருந்தான்.
“நிலா… ப்ளீஸ் என்னை விட்டு போயிடாத நிலா. நீ இல்லாம என்னால ஒரு செகண்ட் கூட இருக்க முடியாது” என்று அவன் தன்னை மறந்து பிதற்றிக் கொண்டிருந்தான்.
“எனக்கு என் அம்மா மடில படுக்கணும் போல இருக்கு நிலா. எனக்கு அப்பா வேணும் நிலா. ப்ளீஸ் நிலா… அவரை வந்து பார்க்க சொல்லு நிலா. நான் அவரு சொல்றதெல்லாம் செய்றேன் நிலா. ப்ளீஸ் நிலா” என்று பத்து வயது சிறுவன் போல ஓவியன் தன்னை மறந்த நிலையில் புலம்பிக் கொண்டிருந்தான்.
அவனது கண்களில் இருந்து வந்த கண்ணீர், எதற்கோ பயந்து நடுங்குவது போல அவன் அமர்ந்திருந்த தோற்றம், பயத்தில் வெளுத்த அவன் முகம் என்று அவனைப் பார்க்க பார்க்க அவளுக்கும் கண்ணீர் வரும் போல இருந்தது.
ஆனால் தான் இப்போது உடைந்து விட்டால் அவனை யார் தேற்றுவது? என்று தன்னை சமாளித்துக் கொண்டவள் அவனிடம் மெல்ல மெல்ல பேச்சு கொடுத்தாள்.
ஆனால் கேட்ட விஷயமோ அவளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தான் கேட்ட விஷயங்களை நம்ப முடியாமல் தவித்தவள் உடனடியாக அண்ணாமலைக்கும் கண்ணனுக்கும் அழைத்தாள். அவர்கள் இருவரும் ஓவியன் வீட்டுக்கு வந்தனர்.
“என்னம்மா? என்ன ஆச்சு? ஏன் இவன் இப்படி இருக்கிறான்?” என்று அவர் பதட்டமான குரலில் கேட்டார்.
அவள் சொன்னதை கேட்டவர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றார்கள்.
சொன்னவளுக்கு அழுகை அருவி போல் கொட்ட கண்ணன் அவளை அணைத்து தேற்றினான்.
“விடு குட்டிமா. ஃபீல் பண்ணாத. ஓவியன் நம்ம ஃபேமிலில ஒருத்தன்டா. நீ ஒண்ணும் ஒர்ரி பண்ணிக்காத. நம்ம இனி அவனை நல்லா பாத்துக்கலாம்” என்று ஆறுதல் கூறினான்.
நித்திலா அவனை தூங்க வைக்க எவ்வளவு போராடியும் அவனால் தூங்க முடியவில்லை.
சிறிது நேரம் பொறுத்தவள் அவனுக்கு தூக்க மாத்திரையை பாலில் கலந்து கொடுத்தாள்.
அப்போதும் அலைப்புறுதலுடன் அவன் புரண்டு புரண்டு படுக்க அவள் தட்டி கொடுத்ததும் அவளது கையை பிடித்தபடி அமைதியாக உறங்கினான்.
அடுத்த நாள் காலையில் கண் விழித்தவன் கண்ணனையும், நித்திலாவையும் கண்டு திகைத்தான்.
“டேய் நீங்க ரெண்டு பேரும் எப்படி?” என்று தயங்கிய குரலில் கேட்டான்.
“இல்லடா. நீங்க வந்ததே தெரியல” என்றவனுக்கு நித்திலா வந்தது வரையும் ஞாபகம் இருந்தது. அதற்கு பிறகு தான் இருந்த அதீத அழுத்தத்தில் ஏதேனும் தப்பாக நடந்து விட்டதோ என்று பயந்தான்.
“நித்திலா”
“நான் எப்பவும் உங்க கூட இருப்பேன் ஓவியன். ஓகேவா?” என்று மென்மையாக சொன்னாள்.
அதற்கு அவன் கசப்பாய் புன்னகைத்துக் கொண்டான்.
“ஏன் ஓவியன் சிரிக்கறீங்க?”
“ஒண்ணும் இல்ல நித்திலா” என்றவனுக்கு பேச வார்த்தைகள் வரவில்லை.
ரத்னம் குடும்பத்தினர் ஏதேனும் சதி செய்து விடுவார்களோ என்று அவன் மனம் அடித்துக் கொண்டது. ஆனாலும் வாய் விட்டு கேட்க முடியாமல் தவித்தான்.
“ஏன்டா… ஃபீவரிஷா இருக்கா?” என்று கண்ணன் வெளிறி போன அவன் முகத்தை பார்த்து கேட்டான்.
இல்லை என்று தலையாட்டியவன் “நீங்க ரெண்டு பேரும் என்னை இனி கான்டாக்ட் பண்ணாதீங்கடா. நான் உங்ககிட்ட இருந்து விலகி இருக்கலாம்னு இருக்கேன்” என்று தட்டு தடுமாறிய குரலில் சொன்னான்.
“நீ ஏன்டா எங்கள விட்டு விலகி இருக்கணும்? என்னடா உளர்ற?” என்று கண்ணன் சத்தம் போட்டான்.
“அது…” என்று பேச ஆரம்பித்தவன் பேச முடியாமல் அமைதியானான்.
“எதுவும் வொர்ரி பண்ணிக்காதீங்க ஓவியன். எவனும் ஏதும் நம்மள ஒண்ணும் பண்ண முடியாது” என்று நித்திலா தேற்ற அவன் அமைதியானான்.
“ஃபர்ஸ்ட் ரெஃப்ரஷ் ஆகுங்க. போங்க” என்று அவனை எழுப்பி விட்டவள் அவன் வேலைகளை முடித்துக் கொண்டு வந்ததும் அவனுக்கு காபி கொடுத்தாள்.
நித்திலாவின் கையில் அவனுடைய வீட்டில் காஃபி பருகிய போது அவன் அடைந்த மன நிம்மதிக்கு அளவே இல்லை. அப்போது அவனுக்கு போன் வந்தது.
“சொல்லுடா மகே”
“நம்ம குடோன் தீப்பிடிச்சு எரிஞ்சு போச்சு சார். நான் உங்களுக்கு நேத்து நைட் இருந்து ட்ரை பண்றேன். நீங்க பிக் பண்ணல” என்று சொல்லவும் அதிர்ச்சியில் உறைந்தான்.
“ஓகே. நான் வரேன்”
என்றவன் “கண்ணா நீ நித்திலாவை போய் வீட்ல விட்டுடு. நான் கிளம்பறேன்” என்று அவசரமாக சொன்னான்.
“இருடா. நானும் வரேன்” என்றவன் கிளம்ப ஓவியனுக்கு இன்னொரு போன் வந்தது.
“ஹலோ”
“என்ன வாய்ஸே சரியில்ல மிஸ்டர். ஓவியன்? நியூஸ் தெரிஞ்சிரிச்சு போலயே”
“சொல்லுங்க மிஸ்டர். தர்மராஜ்” என்றவன் சொல்லவும் அருகில் இருந்த கண்ணன் ஓவியனது போனை வாங்கி ஸ்பீக்கரில் போட்டான்.
“உன் குடோன் தீப்பிடிச்சு எரிஞ்சுதாமே? நீ மட்டும் என் மகளை விட்டு விலகி போகல… இந்த மாதிரி இனி அடிக்கடி கேட்க வேண்டி இருக்கும்” என்று மிரட்டலோடு சொல்ல கேட்டுக் கொண்டு இருந்த ஓவியன் தளர்ந்து போய் ஷோபாவில் அமர்ந்தான்.
நேற்றைய அன்னபூரணியின் மிரட்டல் ஞாபகம் வர ‘ஏன் என்னை நிம்மதியா வாழ விடமாட்டேங்கறீங்க’ என்று மனதிற்குள் அரற்றியவன் உடைந்து போனான்.
அவரது பிள்ளைகள் இருவரும் ஓவியனிடம் பேசியதை கேட்டு அதிர்ச்சியில் சமைந்து நின்றார்கள். தர்மராஜிடம் இப்படியொரு செய்கையை எதிர்பார்க்கவில்லை.
முதலில் தன்னை சுதாரித்த ஓவியன் தொண்டையை செருமிக் கொண்டு “நான் போய்ட்டு வரேன். நீ நித்திலாவை வீட்டுக்கு கூட்டிட்டு போ” என்றவன் அதற்கு மேல் நிற்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டான்.
குடோனை பார்க்க வந்த ஓவியனுக்கு மனம் முழுவதும் பாரமாக இருந்தது.
டைல்ஸ்க்கு இன்ஸ்ஷ்யூரன்ஸ் இருந்தாலும் அந்த இடம் மின் கசிவில் சிதிலமாகி இருந்தது. அதை ஒரு வலியுடன் அவன் பார்த்திருந்தான்.
மகேந்திரனோடு பார்வையிட்டவன் என்னென்ன சேதாரங்கள் என்று பார்த்து அதற்கான தீர்வு தேடும் வரை அவன் முற்றும் முழுதாக ஓய்ந்து போனான்.
களைத்து போய் வீட்டிற்கு வந்தவன் வீட்டு கதவை திறக்க அங்கே நித்திலா நின்றிருந்தாள். அந்த நேரத்தில் நித்திலாவை அங்கே பார்த்தவுடன் ஓவியனின் மனது அவ்வளவு ஆசுவாசமடைந்தது. அதை சொல்ல வார்த்தைகள் இல்லை.
“நிலா…நீ வீட்டுக்கு போகலையா?”
“போலாம். ஃபர்ஸ்ட் நீங்க சாப்பிடுங்க” என்று அவனுக்கு சாப்பிட கொடுத்தாள்.
“நீ சாப்பிட்டியா?”
“இல்ல”
“ஹேய்…இவ்ளோ நேரம் சாப்பிடாம என்ன பண்ற நீ?” என்று அவளை கடிந்தவன் அவளுக்கு ஊட்டி விட்டான்.
“ஏன் உன் ஃபேஸ் டல்லா இருக்கு நிலாமா?” என்று அவளுடைய கூந்தலை ஒதுக்கியபடி அவளிடம் கேட்டான்.
“அப்பா நெக்ஸ்ட் மந்த் மேரேஜ் வெச்சுக்கலாம்னு சொல்லிட்டாங்க” என்றவள் சொன்னதும் அவனுக்கு ஒன்றும் ஓடவில்லை.
தன்னை அமைதியாக காட்டிக் கொள்ள அவன் மிகவும் போராட வேண்டி இருந்தது. மனதுக்குள் இருக்கும் போராட்டத்தை வெளியே அவளுக்கு காட்டாமல் மறைத்தவன் “கங்கிராட்ஸ் நிலா” என்று அவளை வாழ்த்தினான்.
“நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்… நீங்க வாழ்த்து சொல்லிட்டு இருக்கீங்க?” என்று கடுப்பாக கேட்டாள்.
“சந்தோஷமான விஷயம் சொல்லி இருக்க? உன்னை விஷ் பண்ண வேண்டாமா?”
“ராஸ்கல்… நான் கல்யாணம் பண்றது உனக்கு அவ்ளோ சந்தோஷமா?” என்று கோபமாக கேட்டாள்.
“ஆமா. என் ஒய்ஃப் நீ தானே. அப்போ நான் எவ்ளோ சந்தோஷமா இருக்கணும்?” என்றவன் கண்ணடித்தான்.
“உன்னை யாராவது மேரேஜ் பண்ண விட்ருவேனா? பாருடா எங்க ரொமான்ஸைனு நான் அந்த வீடியோவை காட்ட மாட்டேன்?” என்று அவன் சிரிப்புடன் சொல்ல “போங்க ஓவியன்” என்றவள் அவன் நெஞ்சினில் சாய்ந்துக் கொண்டாள்.
இது போதும். இனி தான் எதையும் சமாளிக்க முடியும் என்று அவன் தன்னை தேற்றி கொண்டான்.
முதலில் அவள் சொன்ன விஷயம் அவனால் ஜீரணிக்க முடியவில்லை என்றாலும் அவளை யாருக்கும் ஓவியனால் விட்டு தர முடியாது.
என்ன நடந்தாலும் அவள் தனக்கு தான் என்று அவன் உறுதியாக இருக்கிறான்.
“மார்னிங் ரத்னம் ஃபேமிலி வீட்டுக்கு வந்திருந்தாங்க” என்றவள் அங்கு நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.
காலையில் கண்ணனுடன் வீட்டுக்கு போனவளுக்கு அங்கு இருந்தவர்களை பார்த்ததும் அப்படி ஒரு ஆத்திரம் வந்தது.
தர்மராஜ் அவளைப் பார்த்ததும் அவளிடம் பேச வந்தார்.
“குட்டிமா எங்க போன?” என்று அவளிடம் விசாரித்தார்.
“ஓவியன் வீட்டுக்கு”
அவளது பதிலில் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றார்கள்.
“நைட் அவன் வீட்ல தான் இருந்தியா?” என்று கோபமான குரலில் கேட்டார்.
“ஆமா. அதுக்கென்ன?” என்று எள்ளலான குரலில் கேட்டாள்.
“அண்ணா என்ன உங்க பொண்ணு இப்படி பேசறா?” என்று பூரணி முகத்தை சுழித்தார்.
“இரு தங்கச்சி. நான் என்னன்னு கேட்கிறேன்” என்றவர் அவளிடம் விசாரிக்க ஆரம்பித்தார்.
ஆனால் அவளோ “ப்பா… இவங்க எதுக்கு இங்க வந்திருக்காங்க? உங்களுக்கு அங்க போய் ஸ்டே பண்றதுல என்ன ப்ராப்ளம்? நீங்க அப்படி தானே கதை கட்டி விட்டீங்க. இப்போ என்ன புதுசா விசாரிப்பு?” என்றவளை கோபமாய் பார்த்தார் தர்மராஜ்.
“ஓவியனுக்கு பணம் இருந்தா போதுமாம். வேற யாரும் தேவையில்லையாம். அவன் உனக்கு வேண்டாம் குட்டிமா. நாங்க உனக்கு அடுத்த மாசம் மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணிருக்கோம் குட்டிமா” என்றவர் அவர்கள் ஓவியனின் வீட்டில் எடுத்த காணொளியை காட்டினார்.
அதைப் பார்த்த போது ஓவியனின் மனது எவ்வளவு காயப்பட்டிருக்கும் என்று அவளுக்கு புரிந்தது. அவன் ஏன் அவ்வளவு பயந்தான் என்பதும் புரிந்தது.
“ஓகே. அதுக்கென்ன இப்போ?” என்றவள் திரும்ப கேட்டாள். அவளது கேள்வியில் அவர்கள் தான் திகைத்து நின்றார்கள்.
“என்னம்மா… அவனுக்கு பணம் தான் முக்கியம்னு சொல்றேன். நீ அசால்ட்டா சொல்ற?” என்று தர்மராஜ் கேட்டார்.
“உங்களுக்கு கூட உங்க வன்மம் தான் முக்கியம் இல்லபா?” என்றவள் கேட்க அதில் அவளை புரியாமல் பார்த்தார் தர்மராஜ்.
“எப்போ இருந்துப்பா இவ்ளோ கெட்டவனா மாறினீங்க? ஓவியனோட குடோனுக்கு தீய வச்சு நீங்க என்ன சாதிக்க போறீங்க? இப்படிப்பட்டவரை என் அப்பானு சொல்லிக்க எனக்கு வெட்கமா இருக்குது. இனிமே நான் உங்க பொண்ணு இல்ல. நான் விஷாலை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். நான் ஓவியனை விரும்பறேன். அவரு பணம் கேட்டாரோ கேட்கலையோ அது உங்க பிரச்சனை. இனி நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன். குட் பை” என்றவள் கிளம்பவும் அவளுடன் கண்ணனும் கிளம்பினான்.
“இனிமேல் உங்களுக்கு புள்ள இல்லனு நினைச்சுக்கோங்க” என்று இருவரும் வீட்டில் இருந்து வந்து விட்டார்கள்.
அவள் சொன்னதை கேட்டவன் அதிர்ச்சியாய் அவளை பார்த்தான்.
“நிலா ஏன்டா உனக்கு அவசரம்?” என்றவன் அவளை கை வளைவில் வைத்தபடி கேட்டான்.
“நம்ம எப்போ மேரேஜ் பண்ணிக்கலாம் ஓவியன்?” அவளது கேள்வியில் ஊட்ட உயர்ந்த கை அப்படியே நின்றது. தன் காதில் கேட்டதை நம்ப முடியாமல் திணறினான் ஓவியன்.
