அன்பின் குடில்
காலையில் எப்போதும் போல ஐந்து மணிக்கு கண்விழித்தவள் தனது வேலைகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு வெளியே வந்தாள்.
“ம்மா… காஃபி” என்று கேட்டாள்.
“அம்மா போட்டுட்டு இருக்கேன்ல” என்றவர் “நேத்து நான் கொடுத்த போட்டோ பார்த்தியா? பிடிச்சிருக்கா?” என்று கேட்டார்.
“ம்மா… பர்ஸ்ட் காஃபி குடுமா” என்று எரிச்சலானவள்
“இப்போ என் மேரேஜுக்கு என்ன அவசரம்?” என்று கேட்டாள்.
அவளது பாட்டி அகிலவேணி வந்தார்.
“குட்டிமா மாப்ள போட்டோ பிடிச்சிதா?” என்று கேட்டவரை சலிப்பாக பார்த்தாள்.
“ஏன் பாட்டி காலைலயே என்னை கடுப்பேத்துற?” என்று கோபமாக கேட்டாள்.
“ஏன்டா செல்லம் ஏன் இவ்ளோ கோபப்படற?” என்று அவளது தலையை தடவியபடி வாஞ்சையாக கேட்டவரின் மடியினில் படுத்துக் கொண்டாள்.
“நான் இன்னும் கொஞ்ச நாள் உங்களோடவே இருக்கேனே பாட்டி” என்று ஏக்கத்துடன் சொல்லியவளை கண்டு அவரது உள்ளம் உருகியது.
“விஷால் நம்ம பையன் தானே… ரத்னம் அங்கிள் வீடு தூரமாவா இருக்கு? இங்கிருந்து ரொம்ப பக்கம் தானே?”
“ம்ம்” என்று பதில் சொல்லியவளை பார்த்த அண்ணாமலை அவளது காலை எடுத்து தனது மடியில் போட்டுக் கொண்டார்.
தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் தன்னை மறந்து கண் மூடியவளை “ஏய்…எழுந்திரிடி” என்ற குரல் எழுப்பியது.
“பொறாமை பிடிச்ச பிசாசே… நான் படுத்தா பொறுக்காதே… காலைலயே வம்பிழுக்காத அண்ணனா பொறுப்பா நடந்துக்கோ” என்று சொல்லியவளை பார்த்து கிண்டலாக சிரித்தான் கண்ணன்.
“டிசைட் பண்ணிட்டியா? பையனை பிடிச்சிருக்கா?” என்றவனை கொலைவெறியுடன் பார்த்தாள்.
“டேய் ஏன்டா காலங்காத்தால கொலைவெறி ஆக்கறீங்க? மம்மி… காஃபி…” என்று கத்தினாள்.
“இருடி வரேன்” என்றவர் முதலில் காபியை மகனுக்கு கொடுக்க அவரை முறைத்தாள்.
“மகனுக்கு தான் முன்னாடி கொடுப்பியாமா?” என்று சிலுப்பியவள் தானும் காஃபியை எடுத்து உறிஞ்சினாள்.
“ஆமா. அந்த மூஞ்சிய தான் டெய்லி பார்க்கறேனே… போட்டோ வேற கொடுப்பியாடா நீ?”
“மேடம் என்ன நினைக்கறீங்கனு தெரிய வேண்டாம்?” என்று கண்ணடித்தான்.
“எல்லாம் ஓகே டா. ஆனா கொஞ்ச நாள் கழிச்சி கல்யாணம் பண்ணிக்கிறேனே… என் பட்டுல… என் தங்கம்ல… ப்ளீஸ்டா” என்று கொஞ்சியவளை உள்ளம் உருக பார்த்தவன்
“அண்ணா நான் இருக்கறப்ப நீ ஏன்டா கவலைப்படுற?” என்றவன் தங்கையை தோளில் சாய்த்தான்.
அவர்களது பாசப் பிணைப்பை பார்த்தவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.
“என்னடா என்ன சொல்றா உன் தங்கச்சி?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார் தர்மராஜ்.
“உங்க மகளுக்கு இங்கேயே இருக்கணுமாம்? என்னனு கேளுங்க” என்றவனை யோசனையுடன் பார்த்தார்.
“ஏன் குட்டிமா?” என்று கேட்டவரை பார்த்தவள் “நத்திங் பா. நீங்க ப்ரொசீட் பண்ணுங்க. உங்க எல்லாரையும் மிஸ் பண்ணுவேன்” என்ற போது அவளது குரல் உள்ளே சென்றது.
“அடடா… என் குட்டி தங்கச்சிக்கு அதான் வருத்தமா?” என்றவன்
“நான் உனக்கு வேணா சீஸ் பால்ஸீம், சில்லி பரோட்டாவும் வாங்கி தரட்டுமா?” என்றவன் கேட்க “டேய் எருமை இப்பவே நம்ம கிளம்பலாமா?” என்று கண்களை விரித்து அவள் கேட்டாள்.
“பேபிமா நம்ம ஆபீஸ் போக வேணாமா?”
“அட ஆமா இல்ல” என்று தலையில் தட்டிக் கொண்டவள் அலுவலகம் சம்பந்தமாக சில விஷயங்கள் பேசினாள்.
அனைத்தையும் பேசி முடித்ததும் ஞாபகம் வந்தவனாக விஷாலை பற்றி கேட்டான்.
“விஷால் இன்னைக்கு உன்னை மீட் பண்றேன்னு சொல்லி இருக்கிறான். அவனுக்கு என்ன பதில் சொல்ல போற?” என்று கேட்டான்.
“எனக்கு ஓகே தான். நீங்க பக்கத்தில இருக்கீங்க தானே? அதுவே போதும்” என்று சொன்னாள்.
“நாங்க உன்னை பார்த்துப்போம் குட்டிமா. நீ ஒண்ணும் ஃபீல் பண்ணாதடா” என்று வாஞ்சையாக தடவி கொடுத்தான்.
அவனை பார்த்து புன்னகைத்தவள் சட்டென்று கண்களில் மூண்ட ஆத்திரத்துடன் “கண்ணா ஓவியன் பண்றது கொஞ்சம் கூட சரியில்ல. அவன் நேத்து நம்ம அப்பா சட்டைய பிடிச்சிட்டான். அவன் ஃபிரண்ட்ஷிப் ஃபர்ஸ்ட் கட் பண்ணு நீ” என்று சொல்ல கண்ணன் அதிர்ந்தான்.
“என்ன சொல்ற நீ?”
“உண்மைய தான் சொல்றேன். என்ன நடந்ததுனு தெரியல. ஆனா நான் உள்ளே போனப்ப அப்பா சர்ட்டை பிடிச்சிட்டு நின்னான். எனக்கு ஒரு நிமிஷம் எவ்ளோ பயமா போச்சு தெரியுமா? இப்படிப்பட்ட ஃபிரண்ட்ஷிப் உனக்கு தேவையா?” என்று ரௌத்திரத்துடன் கேட்டாள்.
“ஆனா… நித்திலா அவன் இத்தனை நாள்ல இந்த மாதிரி இல்லையே” என்று உள்ளே போன குரலில் கூறினான்.
“டேய் நீ உன் ஃபிரண்டுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வந்த. அவ்ளோ தான். ஆமா. சொல்லிட்டேன்” என்றவள் மிரட்ட அவனோ நடந்ததை நம்ப முடியாமல் அதிர்ந்து நின்றான்.
“அதே மாதிரி ஓவியனோட டிரான்ஸேக்ஷன் லாஸ்ட் ஒரு மாசமா ஒழுங்கா இல்ல. டெலிவரி லேட் பண்றாங்க, இல்லனா வர்ற டைல்ஸ் பிரேக்கிங் டைல்ஸா வருது. லாஸ்ட் ட்ரான்ஸேக்ஷன் அவங்க லேட் பண்ணதுல நம்ம சொன்ன டேட்டுக்கு நம்ம முடிச்சு கொடுக்க வேண்டிய ஹவுஸ் முடிச்சு கொடுக்க முடியலடா. இப்படி ஆயிரத்தெட்டு பிரச்சனை அவன் வெச்சிட்டு நம்ம அப்பா கிட்ட அவன் மிஸ்பிஹேவ் பண்றான். ஒழுங்கா எல்லா டிரான்ஸேக்ஷனையும் க்ளோஸ் பண்ணு சொல்லிட்டேன்” என்றவளை சிந்தனையோடு பார்த்தான்.
“என்னடா இன்னும் யோசனை உனக்கு?”
“இல்லைமா. நான் இதுக்கு ஒரு முடிவு கட்டறேன்” என்றவன் சொல்ல அவளோ முடித்தே ஆக வேண்டும் என பார்வை பார்த்தாள்.
“நான் தான் பார்த்துக்கறேனு சொல்றேன்ல அப்புறம் இன்னும் என்ன குட்டிமா முறைச்சிட்டு நிக்கற. கிளம்புடா” என்றவன் கிளம்பும்போது நித்திலாவின் செல்லுக்கு கால் வந்தது.
“ஹே ப்ரீத்தி குட்டி எங்கடா இருக்கீங்க?” என்று விசாரிக்க ஆரம்பித்தாள்.
அவள் பேசுவதை பார்த்தவன் திரும்ப வந்து அவர்களை நலம் விசாரித்து விட்டுச் சென்றான்.
அகிலவேணி அண்ணாமலை தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவர் தர்மராஜ் சீதா தம்பதியினர்.
கண்ணனும், தர்மராஜும் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியை பார்க்க நித்திலா அவர்கள் கட்டி கொடுக்கும் வீடுகளுக்கு இன்டீரியர் செய்து கொடுப்பாள்.
இளையவர் விமல்ராஜ் ரியல் எஸ்டேட் துறையில் இருந்தார். அவரது மனைவி புவனா. அவர்களுக்கு ஒரு பெண். பெயர் பிரீத்தி. அவள் 12 ஆம் வகுப்பு முடித்து விட்டாள்.
இப்போது அவளுடைய விடுமுறைக்கு அவர்கள் ஆஸ்திரேலியா சென்றுள்ளனர்.
வீட்டுக்கு தேவையான பொருட்களை ஓவியன் போன்று இருப்பவர்களிடம் வாங்கி அவர்கள் வேலை செய்வார்கள்.
அவர்களது பெயர் பெற்ற பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி. அவர்களுக்கே டைல்ஸ் சம்பந்தமான தொழிலும் உண்டு. ஓவியனுக்கு உதவும் நோக்கில் அண்ணாமலை ஆரம்பித்து வைத்தது இப்போது அவன் நடந்துக் கொண்ட முறையில் அவளுக்கு அவ்வளவு ஆத்திரத்தை கிளப்பியது.
தாங்கள் இவ்வளவு செய்தும் அவனுக்கு நன்றி இல்லையே என்று அவன் நடந்துக் கொண்ட முறை அவளுக்கு ஆத்திரத்தை கிளப்ப ஏனோ நடந்ததை இன்னும் கூட அவளால் ஜீரணிக்க முடியவில்லை.
உள்ளுக்குள் ஏதோ ஒன்று ஓடிக் கொண்டிருக்க ‘ஓவியா இருடா உன்னை ஓட ஓட விரட்டறேன்’ என்றவள் மனதினில் கறுவிக் கொண்டாள்.
******
“ஹலோ சினேகன் இன்னைக்கு எங்க இருப்படா?” என்று ஓவியன் கேட்டான்.
“என்ன ஓவியன் திடீர்னு?”
“ஏம்பா நான் உங்கள பார்க்க வரக்கூடாதா என்ன?” அவன் சாதாரணமாக கேட்டாலும் அவன் கேட்ட தொனி அவனுக்குள் எச்சரிக்கை மணி அடித்தது.
“வாங்க ஓவியன்” என்றவன் போனை கட் செய்து விட்டு அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் ஆழ்ந்தான்.
சினேகனின் அலுவலகத்திற்கு வந்த ஓவியனை அவன் வரவேற்றான்.
“அப்புறம் பிஸினஸ் எப்படி போகுது சினேகன்?” என்று பேச்சை ஆரம்பித்தான்.
“ஒண்ணும் பிராப்ளம் இல்லடா. பட் இன்னும் கொஞ்சம் பிக் அப் ஆகணும்” என்று சொன்னான்.
“சரிடா. ஆனா அதுக்கு ஏன் என் பிஸினஸை நீ காலி பண்ணி நினைக்கிற?” என்று இறுகிய குரலில் கேட்டான்.
“ஓவியா”
“லுக். உன்னோட ஸ்டேட்டர்ஜி வேற. என்னோட பிளானிங் வேற. நீ தேவையில்லாம என் விஷயத்துல மூக்கை நுழைக்காத”
“இல்ல ஓவியன்”
“நீ உன் ஆள உள்ள விட்டு குளறுபடி பண்ணது எனக்கு தெரியும். நீ என்ன மனசுல நினைச்சிட்டு இருக்க?” என்றவனை அதிர்ச்சியாக பார்த்தான்.
“லாஸ்ட் ஒன் மன்ந்தா எனக்கு எவ்ளோ டார்ச்சர் கொடுத்திருக்க? ஆனா நான் உனக்கு இத்தனை நாளா ஹெல்ப் பண்ண தானே டா டிரை பண்ணேன். பரவாயில்ல டா. எவனும் எனக்கு வேணாம். ஏதோ நான் உன்கிட்ட இவ்ளோ நாள் பழகின தோஷத்துக்காக தான் வந்து பேசறேன்” என்று நிதானமான குரலில் கூறியவன்
“நெக்ஸ்ட் டைம் இப்படி நடந்ததுனு தெரிஞ்சது… உன் தொழிலை முடிச்சிட்டு தான் நான் உன்கிட்ட வருவேன். ஞாபகம் வச்சுக்கோ” என்றவனின் மிரட்டலான குரலில் திகைத்து நின்றான்.
“இல்லடா. சாரிடா. நான் பொறாமைல பண்ணிட்டேன். மன்னிச்சிடு” என்று கலங்கிய குரலில் சொன்னவனை ரௌத்திரத்துடன் பார்த்தவன் அங்கிருந்து கிளம்பி விட்டான்.
அவன் காரில் வரும்பொழுது அவனுக்கு கண்ணனிடம் இருந்து கால் வந்தது.
“ஓவியன் நான் உன்னை மீட் பண்ணனும்”
“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கே”
“இங்க பாரு. என்ன வேலையா இருந்தாலும் நான் உன்னை பார்க்கணும்” என்று கோபமான குரலில் சொன்னான்.
“சரிடா” என்றவன் எதற்காக அவன் கூப்பிட்டான் என்ற யோசனையில் அந்த இடத்திற்குச் சென்றான்.
அவன் உள்ளே வரும்போது கண்ணன் அங்கு அமர்ந்திருக்க அவனை பார்த்தபடி அவனருகில் அமர்ந்தான்.
“சொல்லு மச்சி. எதுக்கு கூப்பிட்ட. இன்னைக்கு சைட்டுக்கு டைல்ஸ் அனுப்பனும். அவங்க சீக்கிரமா அனுப்ப சொன்னாங்க” என்று சொன்னவனை கண்ணன் கோபமாக முறைத்துக் கொண்டிருந்தான்.
“ஏன்டா உனக்கு இவ்ளோ கோபம்?” என்று ஓவியன் கேட்டான்.
“நேத்து ஆபிஸ்ல என்ன நடந்தது?”
“அண்ணாமலை சார் வர சொன்னாங்க. பார்க்கலாம்னு போனேன். பட் அவரை பார்க்க முடியல”
“பார்க்க முடியலையா? இல்ல பார்க்காம வந்துட்டியா?” என்று கோபமான குரலில் கேட்டான்.
“கண்ணா” என்றவன் தயங்கினான்.
“எதுக்குடா என் அப்பா சட்டைய பிடிச்ச? அவரோட வயசு என்ன? உன்னோட வயசு என்ன? வயசுக்குண்டான மரியாதை தர வேணாம்” என்று ஆக்ரோஷமாக கேட்டான்.
“அதே தான் நானும் கேட்கிறேன். உங்கப்பா வயசுக்கு தகுந்த பேச்சு பேச மாட்டாரா?” என்று இவனும் குரலை உயர்த்தினான்.
“டேய் யாரை பார்த்து என்ன கேள்வி கேட்கற?”
“ஓ… அப்படியா” என்றவன் நேற்று நடந்ததை சொன்னான்.
அவன் சொல்லியதை கேட்டவனுக்கோ கோபத்தில் உடல் நடுங்கியது.
“என்ன தைரியம்டா உனக்கு? ராஸ்கல். அவரு என்ன உன்னை மாதிரி கேட்க யாரும் இல்லாதவருனு நினைச்சியா?” என்றவன் ஓவியனின் சட்டையை பிடிக்க அவன் வார்த்தையை விட்ட அதிர்ச்சியில் ஓவியன் அவனை நிலைக்குத்திய பார்வை பார்த்தான்.
அந்தப் பார்வை கண்ணனை என்னவோ செய்தது. ஓவியனுக்கு அந்த நிமிடத்தில் பேச்சு வரவில்லை. அவன் கண்கள் சொல்லொண்ணா துயரத்தை காட்டியது. அதில் தளர்ந்து போய் சேரில் அமர்ந்தவனுக்கு சிறிது நேரம் என்ன பேசுவதென்று விளங்கவில்லை.
ஓவியனுக்கு அதிர்ச்சியில் உடலெல்லாம் நடுங்க அவன் தன்னை சமன்படுத்த முயற்சி செய்கையில் அவனை பார்த்துக் கொண்டிருந்த கண்ணனுக்கு அப்போது தான் தான் சொன்னது ஞாபகம் வர அவனாலும் பேச முடியவில்லை.
தனது தொண்டையை செருமியவன் “டேய்.. அது” என்று ஆரம்பிக்க அதற்குள் தன்னை சுதாரித்தவன் “போதும்டா. இதோட எல்லாத்தையும் முடிச்சிக்கலாம்” என்று ஓவியன் கூறினான்.
“ஓவியா”
“ப்ளீஸ். எதுவும் பேசிடாத” என்றவன் தலையை தாங்கி அமர அவனை எப்படி சமாதானப்படுத்துவது என தெரியாமல் கண்ணன் அங்கிருந்து கிளம்பி விட்டான்.
ஏதேதோ எண்ணங்கள் ஓட வெகு நேரம் சிலை போல அமர்ந்திருந்தான் ஓவியன்.
