ஒளி 8

 

வெகு நேரம் யோசனையில் ஆழ்ந்த ஓவியன் தனது அறையை விட்டு வெளியே வந்தான்.

அவன் வெளியே வந்த போது நித்திலாவின் முகம் பேயறைந்ததை போல இருந்தது.

“நிலாமா… என்ன ஆச்சு? ஏன் இங்க உட்கார்ந்திட்டிருக்கீங்க?” என்று‌ பதறி போய் கேட்டான்.

 அவனது குரலை நினைத்து அவனுக்கே வியப்பாக இருந்தது.

“ஒண்ணும் இல்ல ஓவியன்” என்று தழுதழுப்பான குரலில் சொன்னவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

“நித்திலா என்னாச்சு? ஏன்‌ அழற?” என்று அவன் அதிர்ச்சியாய் பார்க்க அவளோ ஓவியனின் தோளில் சாய்ந்து கண்ணீர் விட்டு கதறி அழுதாள்.

“என்னாச்சுடா? ஏன் இப்படி அழற?” என்று பதைபதைப்பாய் கேட்டான்.

அவளோ அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அழுதுக் கொண்டே இருந்தாள்.

என்ன சொல்வதென்று தெரியாமல் ஓவியன் அவள் முதுகை வருடியபடி ஆறுதல் படுத்தினான். சிறிது சிறிதாக அவள் கண்களில் கண்ணீர் நின்றது.

“என்னமா? யாராவது ஏதாவது சொன்னாங்களா?” என்று அவன் திரும்பவும் விசாரிக்கவும் உடனே அவளது கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது.

இவளிடம் அமைதியாய் சொன்னால் வேலை ஆகாது என்று நினைத்தவன்

 “நித்திலா இப்போ அழறதை நிறுத்த போறியா? இல்லையா?” என்று அதட்டலாக கேட்கவும் அவள் அழுகை பட்டென்று நின்றது.

நித்திலா கண்கள் கலங்க அவனை பார்க்க அந்த பார்வை அவனை ஏதோ செய்ய ஓவியன் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

“ஒண்ணும் இல்லடா. நீ எதை நினைச்சும் கவலைப்படாத” என்று சொல்ல அவள் விரக்தியாய் புன்னகைத்தாள்.

“நான் இருக்கறப்ப நீ ஏன் கவலைப்படற நிலா?” என்று மென்மையாய் கேட்டான்.

“எனக்கு அப்பானு ஒரு கேரக்டர் இருக்காரே” என்றவள் சொல்ல ஓவியன் அவளை கூர்மையாய் நோக்கினான்.

“அவரு என்ன சொன்னாரு?” என்று கேட்கும் போது அவனது உள்ளம் படபடவென அடித்து கொண்டது.

“அவரு உங்களுக்கும், எனக்கும் நடுவுல அன்னைக்கு ஏதாவது நடந்ததானு கேட்கறாரு” என்று கண்ணீருடன் சொல்ல “வாட்?” என்று நெருப்பை தொட்டவன் போல அவளிடமிருந்து விலகினான்.

அவளுக்கு அந்த விலகல் மிகப்பெரும் காயத்தை கொடுத்தது.

 சொல்லொண்ணா துயரோடு அவனை பார்த்தாள்.

அந்த பார்வையை தாங்கிக் கொள்ள முடியாதவன் அவளை எதில் இருந்தோ காப்பது போல அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

“சாரிடா…‌சாரிடா” என்று அவளிடம் விடாமல் மன்னிப்பு கேட்டவன் “நான் அங்க வரலேனா உன்னை இப்படி கேட்ருக்க மாட்டாங்கல்ல?” என்று கேட்டான்.

“ஓவியன் என்னாச்சு உங்களுக்கு? அவரு பொண்ணு மேலயே அவருக்கு நம்பிக்கை இல்ல? நீங்க என்ன இப்படி பேசறீங்க?” என்று நித்திலா தான் அவனை தேற்ற வேண்டியதாகி விட்டது.

“ஆனா… அவரு” என்றவனுக்கு வார்த்தை வராமல் தடுமாறியது.

“விடுங்க ஓவியன். எதுனாலும் நான் சமாளிச்சிக்கறேன்” என்று நித்திலா சொன்னாள்.

“இல்ல நித்திலா. இதுல என்ன பிரச்சனை ஆனாலும் நான் உங்க கூட இருப்பேன்” என்று உறுதியாக சொல்லியவன் அங்கிருந்து அகன்றான்.

பின் சிறிது தூரம் சென்றவன் என்ன நினைத்தானோ அவளது நெற்றியில் அழுந்த முத்தமிட்டுச் சென்றான்.

அவனது செய்கையில் நித்திலா அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

அறைக்கு வந்தவனுக்கு தூக்கம் தொலைதூரம் சென்றது.

அடுத்து என்ன செய்வதென புரியாமல் திணறினான்.

சிறிது நேரம் கழித்து நித்திலா கையில் சாப்பாட்டுடன் வந்தாள்.

“நித்திலா” என்றவன் கேள்வியாக பார்த்தான்.

“சாப்பிடுங்க ஓவியன். நீங்க மதியமே ஒழுங்கா சாப்பிடல” என்றவள் ஊட்டி விட வர “நானே சாப்பிட்டுக்கறேனே” என்றவன் சொல்ல அவளுக்கு ஒரு மாதிரி ஆகியது.

அவளை பார்த்தவன் ‘ஓ… மை காட்’ என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான்.

 ‘சொதப்பிட்டேனோ’ என்று தன்னை தானே திட்டியவன் “நிலா பேபி. எங்க போறீங்க. இங்க வந்ததுல இருந்து யாராவது ஊட்டி விட்டுட்டே இருக்கீங்கடா. அப்புறம் எனக்கு எப்படி உடம்பு நல்லாகும்? அதான் சொன்னேன்” என்று சொல்லவும் அவள் முகம் பூவாய் மலர்ந்தது‌.

“இதிலென்ன இருக்கு ஓவியன்? நீங்க இங்க இருக்க வரையும் எதையும் நீங்க யோசிக்க கூடாது. ஓகே” என்றவள் இயல்பாக “நான் கூட நீங்க அப்பா சொன்னதுக்கு தான் என்னை அவாய்ட் பண்றீங்களோனு பயந்துட்டேன் ஓவியன்” என்று சொன்னாள்.

அதை கேட்டவனுக்கு அடுத்து எப்படி பதிலளிக்க வேண்டும் என்றே மறந்து போனது.

‘ஏன்டி இப்படி என் உயிரை கொல்லற?’ என்று பெருமூச்சு விட்டவன் தன்‌ எண்ணம் போன போக்கை பார்த்து அதிர்ந்து நின்றான்.

“ஏன் ஓவியன் ஃப்ரீசாகி நிக்கறீங்க?” என்றவள் அடுத்து கேட்க அதில் தனது நெஞ்சில் கை வைத்தவன்

 “தூக்கம் வருதுடா. குட் நைட்” என்றவன் படுத்துக் கொள்ள இவளுக்கு ஓவியனின் செய்கை வித்தியாசமாக இருந்தது.

“ஓவியன் டேப்ளட் போடல” என்றவள் சொல்ல கண்‌ முழித்தவன் அவள் கொடுத்த மாத்திரைகளை விழுங்கி விட்டு படுத்துக் கொண்டான்.

அடுத்த நாள் இவன் ஏதோ யோசனையில் ஆழ்ந்ததை கவனித்த கண்ணன் “ஏதாவது ப்ராப்ளமாடா ஓவியா?‌‌ ஏன் என்னத்தையோ யோசிச்சிட்டு இருக்க?”

“ஏதாவது ப்ராப்ளம் வந்துடுமோனு தான் பயமா இருக்கு” என்று அவன் தவிப்போடு சொன்னான்.

“ஓவியா… என்னடா பேசற?” என்று கண்ணன் அதிர்ச்சி ஆனான்.

“தெரியலடா. என்னவோ மனசே சரியில்ல” என்றவன் சோபாவில் சாய்ந்து அமைதியாக கண்களை மூடினான்.

“டேய் ஒண்ணும் வொர்ரி பண்ணிக்காத. நான் ஆஃபிஸ் போய்ட்டு வந்தடுறேன்” என்றவன் சொல்ல சரி என்று தலையாட்டினான்.

அவன் கண் மூடி இருந்த வேளையில் “சரி பூரணி. நான் கூட்டிட்டு வரேன். நீ பார்த்துக்கோ” என்ற குரலில் அவன் பட்டென்று கண்களை திறந்தான்.

அவனது உள்ளுணர்வு ஏதோ தப்பாக நடக்க போவதை சொல்லியது.

நித்திலா லேப்டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருந்தாள். அவள் அருகில் சென்றவர் “குட்டிமா… வேலை இருக்காடா?” என்று கேட்டார்.

“சின்ன வொர்க் தான். என்னனு சொல்லுங்க” என்று கேட்டாள்.

“இல்லமா. அப்பாவுக்கு கொஞ்சம் தல சுத்தலா இருக்க மாதிரி இருக்கு. ஹாஸ்பிடல் போயிட்டு வரலாம். வர்றியா டா?”

“ப்பா… என்னாச்சு? டேப்லெட்ஸ்ல கரெக்ட்டா போடுறீங்க தானே?” என்று கேட்டாள்.

“நான் போட்டுட்டு தான் இருக்கேன்மா. ஆனாலும் உடம்பு எப்படியோ இருக்கு” என்று சொன்னார்.

“சரிப்பா. நான் வரேன். ஃபைவ் மினிட்ஸ்” என்றவள் கிளம்பி வந்தாள்.

“ஓவியன் அப்பாக்கு முடியலையாம். நான் போய்ட்டு வந்தடுறேன்” என்று சொல்ல அவன் கண்கள் இவளிடம் ஏதோ பேசியது.

“ஓவியன்”

“எதுவும் யோசிக்காம போங்க நித்திலா. நான் வந்துடுவேன் உங்ககிட்ட” என்று சொல்ல அவள் ஒன்றும் புரியாமல் நின்றாள்.

“என்னடா? ஒண்ணும் இல்ல. போய்ட்டு வாடா” என்று அவளின் கன்னம் தட்டியவன் அங்கிருந்து மெல்லமாக மாடிக்குச் சென்றான்.

மாடிக்கு போனதும் அவசரமாக கண்ணனிற்கு போன் செய்தான். அவனது நேரமோ என்னமோ கண்ணன் ஐந்தாறு ரிங் சென்றும் எடுக்கவில்லை.

‘பிக் அப் கண்ணா’ என்று விடாது அழைத்தவனை அவன் வெகுவாக சோதித்தான்.

அவன் கால் மணி நேரம் சென்ற‌ பிறகே போனை எடுக்க “ஏன்டா எருமை மாடு எவ்ளோ நேரம் உனக்கு கூப்பிடறது? அறிவில்ல. போன் எடுக்காம என்ன பண்ற?” என்று கோபமாய் கத்தினான்.

“ஓவியன் இங்க ஒரு பிராப்ளம் டா. அதான் போன் எடுக்க முடியல. என்னாச்சு?” என்று கேட்டான்.

“இப்ப நீ இங்க வந்தாகணும். இல்லனா என்ன ஆனாலும் பரவாயி ல்லனு நான் டூவிலர் எடுத்துட்டு போயிடுவேன்” என்று இறுகிய குரலில் சொன்னவனிடம் “ஹேய்… அப்படி ஒண்ணும் பண்ணிடாத. நான் அங்க வரேன்” என்றவன் அவசரம் அவசரமாக அங்கிருப்பவர்களுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்து விட்டு வீட்டுக்கு கிளம்பினான்.

“ஓவியா என்னாச்சு? ஏன்டா நான் வர்றதுக்குள்ள அவ்ளோ அவசரம் உனக்கு?” என்றவன் சொல்ல தான் சந்தேகிப்பதை அவன் கூறினான்.

“என்னடா சொல்ற?” என்றவன் அதிர்ச்சியில் வண்டியை நிறுத்தினான்.

“ஆமாடா. கொஞ்சம் சீக்கிரம் வா” என்று கோபத்தை அடக்கிய குரலில் கூறினான்.

கண்ணன் வந்ததும் அவனுடன் ஓவியனும் கிளம்பினான்.

“டேய் உங்கப்பனுக்கு என்னடா ஆச்சு? எப்ப இருந்துடா இந்த மனுசன் இவ்ளோ கேவலமா மாறினாரு. உங்கப்பனை பார்க்க பார்க்க எனக்கு கொலை பண்ணிடணும்னு வெறியா வருதுடா” என்று சொன்னான்.

“ஓவியா ரிலாக்ஸ் ஆகுடா முதல்ல. ஆனா ஏன்டா உனக்கு அப்பா மேல சந்தேகம் வந்தது?” என கேட்டான்.

“நேத்து நைட்…” என்று ஆரம்பித்தவன் நித்திலாவிடம் பேசியதை சொல்ல அவன் அதிர்ச்சியில் உறைந்தான்.

“டேய்… என்னடா?” என்றவனுக்கு அதிர்ச்சியில் வண்டியை கூட ஓட்ட முடியவில்லை.

“அவங்க எந்த ஹாஸ்பிடல் சொன்னாங்கனு தெரியுமா?” என்று கேட்டான்‌.

“நித்திலா மெசேஜ் பண்ணாங்க” என்றவன் மருத்துவமனையின் பெயரை சொல்ல “அவங்க எங்க ஃபேமிலி டாக்டர் தான்” என்றவன் வேகமாக காரை ஓட்டினான்.

போகும் போது மருத்துவருக்கு கால் செய்தவன் தாங்கள் வரும் வரையும் நித்திலாவிடம் பேச மட்டும் செய்யுங்கள்‌. வேறு எதுவும் செய்ய வேண்டாம் என சொல்ல அவர் சரி என்று தலையாட்டினார்.

இவர்கள் மருத்துவமனையில் நுழையும் போது அங்கே அன்னபூரணி உட்கார்ந்திருக்க அவருக்கு பக்கத்தில் நித்திலாவும், தர்மராஜும் அமர்ந்திருந்தார்கள்.

“ப்பா… இங்க என்ன பண்றீங்க?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான்.

 உடன் ஓவியன் வரவும் தர்மராஜ் அவனை ஆக்ரோஷமாக பார்த்தார்.

“எனக்கு தல சுத்தலா இருக்குனு வந்தேன் கண்ணா” என்றவரை கேள்வியாக பார்த்தான்.

“ஏன் கண்ணா?”

“இல்ல. அதுக்கெதுக்கு கைனகாலஜிஸ்ட் கிட்ட பார்க்க உட்கார்ந்திட்டு இருக்கீங்க?” என்று கேட்டான்.

“இல்லடா. இங்க வந்தா அன்னபூரணியும் வயித்து வலினு வந்தாங்க. சரி. என்னனு விசாரிச்சிட்டு போகலாம்னு வந்தோம்” என்றவர் சொல்ல கண்ணனின் கேள்வியும், அவரின் விளக்கமும் நித்திலாவுக்கு ஏதோ புரிவது போல இருந்தது.

மருத்துவமனைக்கு கிளம்பும்போது ஓவியனின்‌ பார்வையில் ஏன் என்றே புரியாத பயம் வந்தது.

இங்கு மருத்துவமனை வந்த பிறகு அன்னபூரணியை பார்தததும் ஏதோ சரியில்லையோ என்று தோன்றியது.

அவள் கேள்வியாக தர்மராஜை பார்க்க அவரோ அவளை பார்க்க முடியாமல் தலை குனிந்துக் கொண்டார்.

அந்த செய்கையில் அதற்கு கிடைத்த விடையில் உடல் முழுவதும் நடுங்க கண்களில் கண்ணீர் ஆறாக பெருக அவள் ஓவியனை நிமிர்ந்து நோக்கினாள்.

அவளை பரிதவிப்புடன் பார்த்தவன் ஓரெட்டில் அவளிடம் சென்று அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!