தலையில் கட்டு போட்டவாறு தன் முன் வந்த சமீரைக் கண்டு பதறிய ஜியா கண்களில் நீர் தளும்ப,
“எனக்கு ஹெல்ப் பண்ண போய்த் தானே உனக்கு இந்த நிலைமை? சுஜித் தானே இப்படிப் பண்ணினான். எல்லாம் என்னாலதான். அவங்களால எனக்கு நிம்மதி இல்லை, என்னால யாருக்கும் நிம்மதி இல்லை.” என்று ஜியா ஆதங்கப்பட,
ஏற்கனவே கோபத்தில் இருந்தவன் அவள் முன்பு மிகவும் சிரமப்பட்டு, கனன்று வந்த தன் கோபத்தை அடக்கிக்கொண்டு, “ஜியா ப்ளீஸ் அழாத… அப்படி எல்லாம் ஏதும் இல்லை, இது சின்ன ஆக்சிடென்ட் அவ்வளவுதான். இதைப் பத்தி இப்போ பேச வேண்டாம்.” என்று தன்மையாகக் கூற, அவன் கூறிய எதையும் தன் காதில் வாங்காதவள்,
“எப்படிப் பேசாம இருக்க? இன்னும் எவ்வளவு தான் சமீர்… என்னால முடியலை… சுஜித் எங்க? நான் அவனைப் பார்க்கணும், அவனுக்கு என்கிட்ட என்னதான் வேணும்னு கேட்க போறேன். என்கிட்ட மிச்சம் இருக்கிறது இந்த உயிர் தான், அதையும் குடுக்குறேன்.” என்று வழக்கம் போல தன்னையே குற்றம் சாட்டிக்கொள்ள,
“உனக்கென்ன பைத்தியமா? எதுக்கெடுத்தாலும் உயிரை விடுறேன்னு சொல்ற. என்ன சொன்னாலும் ஏன் புரிஞ்சிக்க மாட்டிக்கிற? உனக்காகத் தான் நான் இவ்வளவும் பண்றேன், சுஜித்த பார்த்தா மட்டும்…” என்று தன் பற்களைக் கடித்தவாறு ஆக்ரஷத்தோடு தன்னை மறந்து கர்ஜித்தவனைக் கண்டு சற்று அதிர்ந்தவள், ஒருவித பயத்துடன் அவனைப் பார்க்க,
மிரட்சியுடன் தன்னை வெறித்துப் பார்த்த ஜியாவைப் பார்த்த பிறகு தான், தான் அவளிடம் அதிகப்படியான கோபத்தைக் காட்டிவிட்டோம் என்பது சமீருக்கு புரிய, முதலில் தன்னை ஆசுவாசப்படுத்தியவன் நீண்ட பெருமூச்சுடன் ஜியாவை நோக்கி,
“சுத்தி சுத்தி அதே இடத்துக்கு வராத. செத்துட்டா எல்லாம் முடிஞ்சிறாது. அவங்களால உனக்கு எந்தப் பிரச்சனையும் வராம நான் பார்த்துக்கறேன். ஒருதடவை என்னால உனக்குக் கஷ்டம் வந்ததெல்லாம் போதும்.
இனிமே வரவிடமாட்டேன்… சுஜித், ஜீவா, வருண் இவங்களோட நிழல் கூட உன்னை நெருங்காம நான் பார்த்துக்கறேன். நீ உனக்குக் கிடைச்சுருக்கிற லைஃப்ல எப்படி சந்தோஷமா இருக்கிறதுன்னு மட்டும் யோசி.
இனிமே நீ எக்காரணத்துக்கொண்டு, சுஜித்தையோ ஜீவாவையோ இல்லை வருணையோ, என் பெர்மிஷன் இல்லாம சந்திக்கவே கூடாது.” என்று கண்டிப்புடன் கூற,
“ஒரு நண்பனா, ஒரு ஆம்பளையா நீ ரொம்ப ஈஸியா சந்தோஷமா எல்லாத்தையும் மறந்துட்டு வாழுன்னு சொல்லிட்ட. ஒரு பொண்ணா, ஒரு டாக்டரா நான் எவ்வளவு குற்ற உணர்ச்சியில தவிச்சுட்டு இருக்கேன்னு உன்னால…” என்பதற்குள் மீண்டும் வெகுண்டழுந்த சமீர்,
“ஜியா!” என்று முழங்கவும், ஆஷிக் அங்கே வரவும் சரியாக இருந்தது.
அவனை அங்கு எதிர்பார்க்காத சமீரும் ஜியாவும் கண்களில் ஒருவித கலக்கத்தோடு பார்க்க, அதை உணர்ந்த ஆஷிக் சூழ்நிலையை மாற்றும் பொருட்டு,
“ஏய் ஜியா, இங்கதான் இருக்கியா? பாரு தாஹிராவும் ஆயிஷாவும் உன்னைத் தான் தேடிட்டு இருந்தாங்க, போ.” என்று அவளை அனுப்பி வைத்தான்.
அவள் சென்றதும் கோபமாய் இருந்த சமீரைப் பார்த்து ஆஷிக், “தலையில அடிபட்ருக்கு, என்னாச்சு?” என்று கேட்க, ‘நல்லவேளை வேற எதுவும் கேக்கல.’ என்று மனதிற்குள் நிம்மதி அடைந்தவன்,
“அது ஒன்னும் இல்லை, ட்ரைவ் பண்ணும் பொழுது சின்ன ஆக்சிடென்ட். சின்னக் காயம் தான்…” என்று புன்னகையோடு சமாளித்தவன், ஆஷிக்கிடம் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து செல்ல முனைந்த நேரம் அவனைத் தடுத்த ஆஷிக்,
“சமீர், நீங்க ஜியாவுக்கு ஒரு நல்ல ஃப்ரண்ட். ஜியாக்கும் எனக்கும் எவ்வளவோ உதவி பண்ணிருக்கீங்க. அதுக்கு நான் எப்பவும் கடன் பட்ருக்கேன். ஆனா இன்னைக்கு நீங்க ஜியாகிட்ட நடந்துகிட்ட விதம் எனக்குச் சுத்தமா புடிக்கலை. என் ஜியாகிட்ட யாரும் இப்படி ஹார்ஷா பேசுறது எனக்குச் சுத்தமா புடிக்காது.
ஸோ இனிமே ஜியாகிட்ட இப்படி வாய்ஸ் ரேஸ் பண்ணி என்னைக்கும் பேசாதீங்க. பொதுவா எனக்குக் கோபம் அவ்வளவு சீக்கிரம் வராது, ஆனா ஜியான்னு வரும்போது மட்டும் என்னன்னு தெரியலை… நான் என் கண்ட்ரோல்லயே இருக்கிறது இல்லை.” இவ்வாறு ஆஷிக் தன் இதழோரம் தளும்பிய புன்னகை மாறாமல், தன்மையான குரலில் கண்டிப்போடு கூடிய உறுதியோடு கூறி முடித்து, சமீரிடம் பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்க,
“கண்டிப்பா ஆஷிக், இனிமே கவனமா இருக்கேன்.” என்று தன் தலையை அசைத்தவாறே கூறிய சமீர், ஏதோ ஒரு யோசனையில் தன்னையும் அறியாமல் தன் புருவத்தைச் சுளிக்க, நெற்றியும் சேர்ந்து சுருங்கியதால் அடிபட்ட இடத்தில் சுளீரென்று வலியெடுக்க,
“ஆ…” என்று லேசாகக் கத்தியவாறு தன்னிலைக்கு வந்தவனிடம் ஆஷிக்,
“என்னாச்சு, ஆர் யு ஓகே?” என்று வினவ,
“அதெல்லாம் ஒன்னும் இல்லை, ஐயம் ஓகே!” என்று தன் அக்மார்க் புன்னகையோடு கூறிய சமீர், ஆஷிக்கிடம் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றான்.
ரோஜா இதழ்களால் ஆன வேலைப்பாடு, ஆங்காங்கே காற்றின் அசைவிற்கேற்ப அசைந்தாடியபடி எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தி என்று, என்றுமில்லாமால் மிகவும் ரம்மியமாகக் காட்சியளித்த தன் அறையை ரசனையோடு ஆஷிக் பார்த்துக் கொண்டிருக்க,
‘பூக்களே சற்று ஒய்வெடுங்கள், அவள் வந்து விட்டாள்…’ என்பது போல நாணி கண் புதைய, கைகளைப் பிசைந்து கொண்டு உள்ளே வந்த ஜியா அவனை விட்டு ஓரடி தள்ளி நின்றாள்.
தன் காதல் மனைவியைக் கண்ட ஆஷிக்கோ, “பூக்களே சற்று ஒய்வெடுங்கள் அவள் வந்து விட்டாள்…” என்று பாடியவாறே, மெல்ல நெருங்கி வர அவனது ஒவ்வொரு அடி நெருக்கமும் அவளுக்குள் போர்க்களத்தையே உண்டாக்கியது.
முகமெல்லாம் வியர்த்துக் கொட்ட, குனிந்த தலை நிமிராமல் பதற்றம் குறையாமல் அப்படியே நின்றவளின், மென்கரத்தைப் பற்றி மெல்ல வருடியவன், மெதுவாய் தன்னவளின் கரம் பற்றி மெத்தை மீது அமர வைத்தான்.
தன்னவளின் கரத்தைப் பற்றியவாறே அவள் முன்பு மண்டியிட, அவனது இந்தச் செய்கையில் சற்று வியந்தவள் நிமிர்ந்து தன்னவனின் முகத்தைப் பார்க்க, ஜியாவின் மருண்ட பார்வையில் வாய்விட்டு சற்றுச் சத்தமாகத் தன் தோள்கள் குலுங்க ஆஷிக் சிரித்துவிட,
தன் கணவனின் சிரிப்பிற்குக் காரணம் புரியாமல் ஜியா அவனையே கேள்வியாய் பார்க்க, தனது சிரிப்பை அடக்கிக்கொண்டவன், கோவைப் பழம் போலச் சிவந்திருந்த தன்னவளின் இரு கன்னங்களையும் மென்மையாய் கிள்ளி, மூக்கோடு மூக்கு உரசியவாறு தன்னவளின் பிறை நுதலோடு தன் நெற்றியை மிதமாய் முட்டியவன், பனித்துளிபோல வடிந்த வியர்வைத் துளிகளைத் தன் நெற்றியில் தாங்கியவாறு,
“அடியே என் செல்ல பொண்டாட்டி, ஏன்டி இப்படிப் பயந்து போயிட்ட? இந்த மாதிரி நேரத்துல பொண்ணுங்க பயப்படுவாங்கன்னு கேள்வி பட்ருக்கேன். அது அரேன்ஞ் மேரேஜ்னா ஓகே. முன்னபின்ன சரியா பழகிருக்க மாட்டாங்க. என்கிட்ட என்னடி உனக்குப் பயம்? உன் ஹார்ட் துடிக்கிறது இங்க வரை கேட்குது. இன்னைக்கு ஏற்கனவே தலை வலிக்குதுனு சொன்ன, இவ்வளவு நேரம் நின்னே டயர்ட் ஆகிருப்ப. உன் டயர்ட் மொத்தமும் உன் முகத்துலையே தெரியுது. இதைக் கூடப் புரிஞ்சிக்காதவனா உன் ஆஷிக்?” என்றவன் மேலும் தொடர்ந்து,
“என்னால உன் வலியை நல்லாவே புரிஞ்சிக்க முடியுது ஜியா. உன் கண்ணு முன்னாடி உன்னை நம்புன ரெண்டு உயிரு சாகும் போது, ஒரு டாக்டரா உன்னால அவங்களைக் காப்பாத்த முடியாம போகும் பொழுது எப்படி இருக்கும்னு என்னால புரிஞ்சிக்க முடியுதுடா. ஆனா என்ன பண்ண முடியும்? இதுல உன் தப்பு எதுவும் இல்லையே. விதி முடிஞ்சிருச்சு, கஷ்டம் தான் ஆனா நீ இதை விட்டுச் சீக்கிரம் வெளிய வரணும். அதுதான் எனக்கு வேணும்.
இதுக்கு முன்னாடி ஓகே, இனிமே உன் கஷ்டத்தை ஷேர் பண்ணிக்க நான் இருக்கேன். கண்டிப்பா நான் உன்னை இதுல இருந்து வெளியில கொண்டு வருவேன். உன்னோட கடந்த காலம் எவ்வளவு கசப்பா இருந்தாலும் சரி, என்னுடைய அன்பாலையே அந்தக் கசப்பெல்லாத்தையும் உன்னை மறக்கவைப்பேன்.” என்று காதலாய் அவன் கூறியதும்,
ஜியாவின் மனதிற்குள் சொல்ல முடியாத அழுத்தம் ஒன்று ஆக்கிரமித்தது. அந்த அழுத்தம் ஊசியைப் போல அவளது உள்ளத்தை நறுக்கென்று குத்த, குற்ற உணர்வில் தவித்தாள். இப்படிப்பட்ட கணவனிடம் தன்னைப் பற்றின உண்மையை மறைக்கின்றோமே என்று அவளது உள்ளம் ஊமையாய் கதறியது.
தன்னையே கண்கலங்க பார்த்துக் கொண்டிருந்த தன் மனைவியின் நுதலில் காதலாய் தன் இதழைப் பதித்து, “ஐ லவ் யு!” என்றவன், தன்னவளை இறுக்கி அணைத்தவாறு நித்திரைக்குச் சென்றான்.
ஜியாவுக்கோ துக்கம் வந்து அவளது நெஞ்சைப் பிழிந்தெடுக்க, மெல்ல தன் மீதிருந்த தன்னவனின் கரத்தை நீக்கியவள், மெதுவாய் அவனது சிகையைக் கோதியவாறே, “உனக்கு என்னை பத்தின உண்மை எதுவுமே தெரியாது ஆஷிக். உண்மை தெரிஞ்ச அப்புறமும் நீ என்கிட்ட இதே அன்போட இருப்பியான்னு எனக்குச் சந்தேகமா இருக்கு. ஒருவேளை நீ என்னை வெறுத்துட்டா, என்னால அதைச் சத்தியமா தாங்க முடியாது.” என்று தன் உதட்டைக் கடித்தவாறு தன் கண்ணீரை அடக்கியவள், தன் விழிகளை அழுந்த மூடிக்கொண்டாள்.
“ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு சோதனை? எவ்வளவு கனவோடு லண்டல எம்.எஸ் முடிச்சேன். சித்தி சொன்ன மாதிரி லண்டன்லயே இருந்திருக்கலாம். என் நாட்டுக்கு சேவை செய்யணும்னு தானே பெங்களூர் வந்தேன். ஏன் அதுவே எனக்கு நரகமா மாறிச்சு.?” என்று அவள் கூறும் பொழுதே, அவளது இதயம் வெடித்துக் கண்கள் இரண்டும் நீராகி, துக்கம் தொண்டையை அடைக்க, வலியை அடக்க முடியாதவளாய் படுக்கையை விட்டு எழுந்தவள், பால்கனியில் இருக்கும் நாற்காலியில் தன் கால்களைக் குறுக்கியவாறு, வானத்தையே வெறித்துப் பார்த்து கொண்டிருந்தவளை, அவளது கடந்த கால நினைவுகள் பேய் அலையைப் போலத் தாக்க, விழிகளில் கண்ணீர் கசிந்தது.
தூங்கிக்கொண்டிருக்கும் பொழுதே ஜியா தன் அருகில் இல்லாததை உணர்ந்தவன், உறக்கம் கலைந்து தன் இமைகளை மெல்ல பிரித்தவாறே, தன் அறையைச் சுற்றி பார்த்தவனுக்கு அங்கு ஜியா இல்லாததை உணர்ந்தான்.
“அதுக்குள்ள முழிச்சுட்டாளா? எந்திரிச்சதும் ஒரு ஹக் பண்ணலாம்னு நினைச்சேன்.” என்று முகத்தைச் சுருக்கியவாறு அவளது தலையணை எடுத்து அணைத்தவன்,
தன்னைச் சுற்றி கமழ்ந்து கொண்டிருந்த தன்னவளின் சுகந்தத்தை, தனக்குள் ஆசை தீர சவாசித்தான். ஏனென்று காரணம் அறியாமல் அவனது இதழுக்குள் புன்னகை வந்து ஒட்டிக்கொள்ள, தன் சிகையைக் கோதியவாறே குளியலறைக்குச் சென்று குளித்து முடித்தவன், தன் ஈரத்தலையை உலுக்கியவாறே வெளியில் வர அப்பொழுது,
“ஆஷிக்! ஆஷிக்!” என்று முனங்கும் சத்தம் கேட்டு, “ஜியாவோட சத்தம் மாதிரி இருக்கு.” என்றவாறு பால்கனிக்கு வந்தவன், சுள்ளென்று அடிக்கும் சூரிய கதிருக்காக முகத்தை நாற்காலியின் ஒரு முனையில் புதைத்து, அதே நாற்காலியில் கால்களைக் குறுக்கியவாறு, “ஆஷிக்… ஆ… ஷிக்…” என்று முனங்கியவாறு எதோ களைந்து எறியப்பட்ட செடி போல, துவண்டு படுத்திருந்தவளைப் பார்த்து ஆஷிக் மிகவும் கவலையுற்றான். கேசம் கலந்திருக்க, வெண்ணிற வதனமோ சிவந்துபோய்க் கண்ணீர் துளிகள் காய்ந்து, தான் வந்து சென்றதை சுட்டிக்காட்ட அவனுக்குள் வலித்தது.
‘ராத்திரி முழுக்க அழுதுட்டே இருந்தியாமா? உன்னைக் கவனிக்காம நான் மட்டும் நிம்மதியா தூங்கிட்டு இருந்திருக்கேன். சாரிடா…’ என்று தன் விழிகளை அழுந்த மூடியவாறு, தனக்குள்ளே அவளது தூக்கம் கலையாமல் கூறினான்.
“நீ எதுக்கும் கவலைப்படாத, நான் எல்லாத்தையும் சரி பண்ணுவேன். நீ வேணும்னா பாரு, நான் உனக்குக் கொடுக்கப் போற அன்புல நீ உன் பழசு எல்லாத்தையும் மறந்திருவ.” என்று உறுதி அளித்தவன், ஜியாவின் உறக்கம் கலையாமல் மெல்ல அவளைத் தன் கரங்களில் ஏந்தி கட்டிலில் படுக்க வைத்து, அவளது உச்சியில் முத்தமிட்டு, சத்தமின்றித் தன் அறையை விட்டு வெளியே சென்றான்.
“வந்துட்டியாடா? ஜியாவையும் வர சொல்லு, பிரேக் ஃபாஸ்ட் ரெடியா இருக்கு.” என்ற தன் தாயிடம்,
“ம்மா, அவளுக்குக் கொஞ்சம் தலை வலி.”
“அப்படியா! என்னாச்சு, நான் போய்ப் பார்க்குறேன்.” என்று பதறிய தாயிடம், “ஒன்னும் இல்லைமா, ரெஸ்ட் எடுத்தா சரியாகிரும். கொஞ்ச நேரம் தூங்கட்டும், அவளே வருவா. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு, போயிட்டு வந்திடுறேன்.” என்றவன் தன் தாயிடம் விடைபெற்றுக்கொண்டு சென்றான்.
***
