17.. ராட்சசனின் காதல் பாவை..
போன பகுதியில் : அதைக் கேட்டவனுக்கு இவ்வளவு நேரம் அவள் மீது மட்டும்தான் கோபம் இருந்தது. இப்பொழுது சுனிலின் மீதும் கோபம் வர, சுனிலின் கன்னத்தைப் பார்த்து ஓர் அறை விட்டான். அவ்வளவுதான்! கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அப்படியே நின்றுவிட்டான் சுனில்.
இனி..
“நைட் வைத்த பைல் காலையில எப்படி காணாம போகும்? அவளோட கேபினைக் காமிக்கும்போது அவ மட்டும்தான் இருந்தா” என்று சொன்னான் விதுரன்.
“அவருதான் சொல்றாரு இல்ல, அந்த பைல் அங்க இல்லைன்னு. மறுபடியும் நீங்க என்னைக் குறை சொல்றீங்க?” என்று கோபமாகக் கேட்டாள் ஸ்ரீ.
“உன்னை யாரும் குறை சொல்லல. நீயே அடிச்சு சொல்றியே!” என்று சொன்னான் விதுரன்.
“நான் இவ்வளவு சொல்லியும் நீங்க புரிஞ்சுக்கல. தேவையில்லாம என் மேல வீண் பழி போடுறீங்க” என்று சொன்னாள் ஸ்ரீனா.
“எனக்கு அந்த அவசியம் கிடையாது” என்று சொன்னான் விதுரன்.
“அப்போ நான்தான் அதை எடுத்தேன்னு நினைச்சீங்கன்னா, இப்பவே என்னை வேலையை விட்டு அனுப்பிடுங்க” என்று சொன்னாள் ஸ்ரீனா.
அதைக் கேட்டவன் மிகவும் சத்தமாகச் சிரித்தான். அவனுடைய சிரிப்பைப் பார்த்து அங்கிருந்த இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஏன், இருவருக்கும் சற்று பயம்கூட எடுக்கத்தான் செய்தது. அதிலும் ஸ்ரீனாவுக்கு, இப்படிச் சொன்னதற்கு என்ன செய்யப் போகிறானோ என்று உள்ளுக்குள் பயம் இருந்தாலும், தன் மீது வீண் பழியைச் சுமத்துகிறான் என்று நினைத்தவள், அதை மறைத்துக் கொண்டு அவனை முறைத்துப் பார்த்தபடி நின்றிருந்தாள்.
“என்ன சொன்ன? உன்னை நான் வேலையை விட்டு அனுப்பணுமா? உன்னைச் சும்மா விட்டு வச்சிருக்கேன்னு நினைச்சியா? இனிதான் இந்த விதுரன் யாருன்னு பார்க்கப் போற. சோஷியல் மீடியா ஃபுல்லா நீ என்னை அடிச்சதுதான் ரன் ஆகிட்டே இருந்தது. அதனால எனக்கு எவ்வளவு அசிங்கம்! ஒரு பொண்ணு கையால அடி வாங்கினேன்னு சொல்லி எத்தனை பேர் என்னைக் கேவலமா பார்த்திருப்பானுங்க. அதற்கான தண்டனையை நீ அனுபவிக்கணும் இல்லையா? அது எதையும் அனுபவிக்காம இவ்வளவு சீக்கிரத்துல என் கிட்ட இருந்து தப்பிச்சிடலாம்னு மட்டும் தப்புக் கணக்கு போடாத” என்று சொன்னான் விதுரன்.
“நான் அன்னைக்கே சொல்லிட்டேன், நான் பண்ணது தப்புதான். அதுக்கு எத்தனை பேர் முன்னாடி மன்னிப்பு கேட்கச் சொன்னாலும் நான் கேட்க ரெடி. ஆனா, நீங்க இப்போ போட்டிருக்கிற பழி ரொம்பப் பெருசு. நான் இதைக் கண்டிப்பா பண்ணல, பண்ணல, பண்ணல!” என்று அந்த அறையே அதிரும் அளவுக்குக் கத்தினாள் ஸ்ரீனா.
அவளை எந்தச் சலனமும் இல்லாமல் பார்த்தவன்,
“சரி, ஓகே. நீ சொல்றதுக்கே வரேன். நீ அந்த பைலை யார்கிட்டயும் கொடுக்கல, ஓகே. பட் உன் கிட்ட இருந்துதான் அந்த பைல் மிஸ் ஆகியிருக்கு. அப்போ அதோட பொறுப்பு உன்னோடது. இன்னும் ஒன் வீக்ல அந்த காண்ட்ராக்ட் எனக்குக் கிடைச்சே ஆகணும். நீ என்ன பண்ணுவியோ, ஏது பண்ணுவியோ எனக்குத் தெரியாது. அந்த காண்ட்ராக்ட் எனக்கு வேணும். அது மட்டும் எனக்குக் கிடைக்கலன்னா, உங்க ரெண்டு பேரோட நிலைமை என்னன்னு நீங்களே யோசிச்சுப் பார்த்துக்கோங்க. இப்போ ரெண்டு பேரும் அவுட்!” என்று சொல்லியவன், அவர்கள் இருவரும் வெளியே சென்றவுடன் எதையோ பற்றி யோசிக்கத் தொடங்கினான் விதுரன்.
அவன் வெளியே செல்லச் சொன்னதில் இருவரும் வேகமாக வெளியே வந்துவிட்டார்கள். ஆனால், சுனிலுக்குத்தான் இப்போது விதுரன் சொன்னது சாத்தியமில்லாத ஒன்று என்று தோன்றியது. ஆனால் ஸ்ரீனாவுக்கோ, ஒரு சாதாரண கொட்டேஷன்தானே, அதற்கு இரண்டு மணி நேரம் போதும் அல்லவா என்று மனதில் தோன்றியது.
வெளியே வந்த சுனில், பேய் அறைந்தது போல் நின்று கொண்டிருந்தான். அதைப் பார்த்த ஸ்ரீனா,
“அண்ணா, இவர் எப்பவுமே இப்படித்தானா? ஏழைங்கன்னா பணத்துக்காக எது வேணாலும் பண்ணிடுவாங்கன்னு நினைப்பா? ஒரு டெண்டர் கொட்டேஷன் போடுறதுக்கு என்ன ரெண்டு மணி நேரம் ஆகுமா? அதுக்குப் போய் இவ்வளவு கேவலமா பேசுறாரு. எனக்கு வர கோபத்துக்கு…” என்று சொன்னாள் ஸ்ரீனா.
“இல்ல ஸ்ரீ, இது ரெண்டு மணி நேரம் ஒர்க் கிடையாது. இது கிட்டத்தட்ட ரெண்டு மாசத்துக்கான வேலை. இது அந்த அளவுக்கு முக்கியமான டெண்டர்” என்று சொன்னான் சுனில்.
அதைக் கேட்ட அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தும் இவனிடம் கேட்கப் பல கேள்விகள் இருந்ததால், அதைக் கேட்கத் தொடங்கினாள்.
“சரி, ஓகே அண்ணா. அது ரொம்ப முக்கியமானதாகவே இருக்கட்டும். அவர் எதுக்கு உங்களை கை நீட்டி அடிக்கணும்? அதுவும் இல்லாம, ஒரு பொண்ணுன்னு கூடப் பார்க்காம இவ்வளவு மோசமா நடந்துக்குறாரு. இதுக்கெல்லாம் யாரு அவருக்கு உரிமை கொடுத்தது?” என்று கேட்டாள் ஸ்ரீ.
இவள் சொல்லியதைக் கேட்டவன் ஒரு நிமிடம் பதறிப்போய்,
“ஸ்ரீ, அமைதியா பேசு. சத்தம் போடாதே” என்று சொன்னான் சுனில்.
“எதுக்கு நான் அமைதியா பேசணும்? நான் எதுவும் தப்பா சொல்லலையே” என்று சொன்னாள் ஸ்ரீனா.
“முதல்ல இங்க நின்னு பேச வேண்டாம். வா” என்று சொல்லியவன், அவளை அழைத்துக்கொண்டு அவனுடைய கேபினுக்குச் சென்றான்.
அவனுடைய கேபினுக்கு அவளை வேகமாக அழைத்து வந்தவன், உள்ளே நுழைந்தவுடன் கதவைச் சாற்றிவிட்டு நின்றான். அவனை ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீனா.
ஒருசில நிமிடங்களுக்குப் பிறகு அவளிடம் பேசத் தொடங்கினான்.
“நீ அவர் கிட்ட எதிர்த்துப் பேசாத” என்று சொன்னான் சுனில்.
“எதுக்குப் பேசக் கூடாதுன்னு சொல்றீங்க? அப்படி நம்ம தன்மானத்தை விட்டுட்டு வேலை செய்யணும்னு அவசியம் கிடையாது. அதுவும் இல்லாம, என்னை மிரட்டி இந்த வேலையில வச்சிருக்காரு. அப்படி இருக்கும்போது எனக்குக் கோபம் வரத்தானே செய்யும்? அதுவும் இல்லாம, அவரு உங்களைப் போட்டு அடிக்கிறாரு. நீங்க என்னன்னா ஒரு வார்த்தைகூட கேட்காம அமைதியா இருக்கீங்க” என்று கேட்டாள் ஸ்ரீனா.
“நீ இன்னும் அவரைப் பத்தித் தெரிஞ்சுக்கல. இப்பதானே வந்திருக்க? போகப் போக அவரைப் பத்தி உனக்குத் தெரியும். ஆனா, அதுக்கு முன்னாடியே நான் உனக்கு ஒரு அட்வைஸ் சொல்றேன். அவர் கிட்ட உன்னோட குரலை உயர்த்திப் பேசாத” என்று சொன்னான் சுனில்.
அவன் சொல்லுவதை முழுசாகக்கூடக் கேட்காமல், அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே நடுவில் பேசத் தொடங்கினாள்.
“நீங்க அவர் கிட்ட ரொம்ப நாளா வேலை செஞ்சிருக்கலாம். அதுக்குன்னு இப்படி அவருக்கு சப்போர்ட் பண்ணிப் பேசாதீங்க. அவர் பண்றது எல்லாமே தப்பு. அது உங்களுக்குப் புரியுதா இல்லையா?” என்று கோபமாகக் கேட்டாள் ஸ்ரீனா.
“இங்க பாரு ஸ்ரீ, நான் சொல்றது உனக்குக் கோபம் வருதுன்னு எனக்குத் தெரியும். நீ அவரோட குணத்தை முழுசா பார்க்கல. அதை பார்க்கும்போது, நான் ஏன் அமைதியா இருக்கேன்னு உனக்கே புரிய வரும். இப்போ நமக்கு அது தேவையில்லை. இதைப் பத்தி இப்போதைக்கு பேச வேண்டாம். இன்னும் ஒன் வீக்தான் இருக்கு. அதுக்குள்ள எப்படியாவது மறுபடியும் டெண்டர் கொட்டேஷன் ரெடி பண்ணியாகணும்” என்று சொன்னான் சுனில்.
இவன் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே விதுரனின் குரல் அவனுடைய கேபினை எட்டியது.
“சுனில்!”
அதில் பதறியவன், அடுத்த நொடியே அவனுடைய கேபினில் இருந்து வேகவேகமாக விதுரனின் கேபினை நோக்கி ஓடினான்.
விதுரன் அழைத்த இரண்டு நிமிடங்களுக்குள் அவன் முன்பு சுனில் நின்றிருந்தான். அதைப் பார்த்த விதுரன், இவ்வளவு நேரம் எதையோ யோசித்துக் கொண்டிருந்தவன்,
“உனக்கு நல்லா ஞாபகம் இருக்கா? நீ காலையில செக் பண்ணும்போது அந்த பைல் இல்லையா?” என்று அழுத்தமாகக் கேட்டான் விதுரன்.
“எஸ் பாஸ். கன்ஃபார்மா அந்த பைல் இல்லை. நான்தான் ஒவ்வொரு பைலா எடுத்து எப்படி செக் பண்ணணும்னு சொல்லிக் கொடுத்தேன். கிட்டத்தட்ட எல்லா பைலையும் முடிக்கிறதுக்கு 4 டு 5 ஹவர்ஸ் ஆயிடுச்சு. அதுவரைக்கும் நான் ஸ்ரீனா கூடத்தான் இருந்தேன்” என்று சொன்னான் சுனில்.
இவன் சொல்லியதைக் கேட்டவனுக்கு ஏதோ சரியில்லை என்று மட்டும் புரிந்தது.
“எல்லா சிசிடிவி ஃபுட்டேஜையும் செக் பண்ணியா?” என்று கேட்டான் விதுரன்.
“இல்ல பாஸ், நான் இன்னும் எதுவும் செக் பண்ணல” என்று சொன்னான் சுனில்.
“ஏய், ஸ்டுப்பிட்! ஃபர்ஸ்ட் அதைப் பாரு” என்று கத்தினான் விதுரன்.
அடுத்த நொடியே சுனில் டேட்டாபேஸ் இருக்கும் இடத்திற்குச் சென்றான். பி.ஆர். டீமிடம் தகவல் தெரிவித்தவன், அதற்கான வேலைகளைத் தொடங்கச் சொன்னான். அவர்களும் உடனே வேலையைத் தொடங்கினார்கள். ஒரு புறம் அவர்களும் தேட, இவனும் சிசிடிவி ஆபரேட்டிங் ரூமில் செக் செய்யத் தொடங்கினான்.
அதே நேரம் இங்கு விதுரன் மிகுந்த யோசனையில் அமர்ந்திருந்தான்.
“இவ எடுக்கலைன்னா, அதை யார் எடுத்திருப்பா?” என்று தீவிரமாக யோசித்துக் கொண்டே இருந்தான்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கடந்திருக்க, சுனில் வேகவேகமாக விதுரனின் கேபினுக்குள் நுழைந்தான்.
“பாஸ், அது யாருன்னு தெரிஞ்சிடுச்சு” என்று சொன்னான் சுனில்.
அதைக் கேட்டவனின் பார்வை மட்டும், ‘சொல்’ என்பது போல் இருந்தது.
அதை உணர்ந்த சுனில், யார் என்று சொன்னான். அதைக் கேட்டவனின் கோபம் எல்லையைக் கடந்தது. சுனிலை ஒரு பார்வை பார்த்தான் விதுரன்.
அவனுடைய பார்வையின் அர்த்தத்தை உணர்ந்து கொண்டவன், அவன் சொல்லியதை முடித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். அவனை மீண்டும் விதுரனின் குரல் தடுத்தது.
“கூட அவளும் இருக்கணும்” என்று சொன்னான் விதுரன்.
இவன் சொன்னதற்கு என்ன மறுப்பும் சொல்ல முடியாதவன்,
“ஓகே பாஸ்” என்று சொல்லி அங்கிருந்து வெளியே வந்தான்.
தனது ஆட்களுக்குக் கால் செய்தவன்,
“இன்னும் கொஞ்ச நேரத்துல ஒருத்தனோட டீடெயில்ஸ் உங்களுக்கு வரும். அவனை டார்க் பேலஸுக்கு கொண்டு போயிடுங்க” என்று சொன்னான் சுனில்.
எதிர்முனையில் அதைக் கேட்டவன், ஏன், எதற்கு என்று கூட ஒரு வார்த்தை கேட்காமல்,
“ஓகே சார்” என்று மட்டும் சொல்லிப் போனைத் துண்டித்தான்.
போனை கட் செய்தவனுக்கு அடுத்த நிமிடமே சுனிலிடமிருந்து மெசேஜ் வந்தது. அதைப் பார்த்தவன், நொடியும் தாமதிக்காமல் அவன் எங்கு இருக்கிறான் என்று விசாரித்து, அவனைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
அவன் பிடிபட்ட நொடியே சுனிலுக்கு மெசேஜ் வந்துவிட, அதை விதுரனிடம் தெரியப்படுத்தினான். அதைக் கேட்டவன், அவனைத் திரும்பி ஒரு பார்வை மட்டும்தான் பார்த்தான்.
இனி என்ன நடக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…
காதல் பாவை தொடரும்…
